எண்பதுகளின் அந்திமக் காலமது. பள்ளிக்குச் செல்லும் வழிகளெல்லாம் நெசாவாளிகள் வீதிகளில் கதர் வேட்டிக்கு பாவு தோய்ந்து கொண்டிருப்பார்கள். பக்கத்து வீட்டுக்காரர், எதிர் வீட்டுக்காரர், இரண்டு வீதி தள்ளியிருப்பவர் என்று ஒருவருக்கொருவர் உதவி செய்து கூட்டாகச் சேர்ந்து, பாவு தோய்ந்து கொண்டிருப்பர். ஒருவர் வீட்டு பாவிற்கு மற்றவர்கள் வந்து உதவுவது போல் மற்றவர் வீட்டு பாவிற்கு ஏனையோர் சேர்ந்து வேலை செய்வர். அது ஒரு அற்புதமான கூட்டுறவு. ஊரில் பாவடித் தெரு என்றும் பாவடித் திடல் என்றும் இடங்கள் உண்டு. அது இப்போது 'பழைய பாவடி' என்றாகிப்போனது. ஊன்றிய பாவடிக் கற்கள் பெயர்க்கப்பட்டுவிட்டது. கூட்டுறவு செய்த கூட்டம் பிழைப்பிற்காக இடம் பெயர்ந்து விட்டது.
"சர்வோதையா" - கூட்டுறவு சங்கம் மூலம் கதர் வேட்டி, கைக்குட்டை நெய்தல் அப்போது எங்கள் ஊரின் பிராதானத் தொழில்.
வேட்டிக்கு ஒன்பது ரூபாய் கூலி, வாரம் 8
முதல் 10 வேட்டி நெய்வதற்கு இரவு பகல்
வித்தியாசமில்லாமல் தறியில் நாடா பாய்ந்து கொண்டிருக்கும். குடும்பத்தில் தந்தை
தறியிலும், தாய் அடுப்பிலும், இராட்டையிலும் தங்கள் குடும்பத்திற்க்காக தேய்ந்து கொண்டிருப்பர்.
குண்டு பல்பு வெளிச்சமும், தறிநாடாச் சத்தமும் படித்த பாடங்களை
இன்னும் ஒலி, ஒளியுடன் பசுமையாக நினைவில் நிறுத்தி
வைத்திருக்கிறது.
வாரம்
முழுதும் நெய்த வேட்டிகளை கட்டித் தலையில் வைத்து சனிக்கிழமை தோறும் அப்பனும்,
அம்மையும் சர்வோதயாவில் சேர்த்தால், கூலி ரூபாய் 100
முதல் 120 வரை கிடைக்கும். அதில் 10ஐ தொழிலாளர் வைப்பு நிதி என்று ஏதோ ஒன்றில் பிடித்தம் செய்து
கொள்வார்கள். பின்னாளில் தறியை விட்ட பொழுது அதை இரண்டாயிரமாகவோ, மூன்றாயிரமாகவோ ரொக்கமாக திருப்பிக் கொடுத்தார்கள் என்று நினைவு.
மகாத்மா
காந்தியின் சிந்தனையில் உருவான 'சுயராஜ்ய' சிந்தனை
வடிவமே 'சர்வோதையா'. மக்கள்
அனைவருக்கும் (பொருளாதார) பலமேற்படுத்தும் சோசலிச சிந்தனை அது. அந்நிய பொருட்களைத்
தவிர்த்து கிராமங்கள் தோறும் உற்பத்தியைப் பரவலாக்கி, அந்த
உற்பத்திப் பொருட்களை மீண்டும் மக்களிடம் சேர்ப்பதே "சுயராஜ்",
"சுதேசி" அல்லது "தற்சார்பு"
பொருளாதாரம் அல்லது "சர்வோதையா".
அன்றைய
காலகட்டத்தில், அதாவது 1958ல்
வினோபா அவர்களின் தூண்டுதலினால் தமிழகத்தில் முதன் முதலில் திருப்பூரைத் தலைமியிடமாகக்
கொண்டு சர்வோதைய சங்கம் உருவாக்கப்பட்டது. அதன் கிளைகள் தமிழகமெங்கும்
பரவலாக்கப்பட்டு, கதர் ஆடைகள், தோல்
பொருட்கள், அலங்கார கைவினைப் பொருட்கள், மர வேலையில் உருவான மேசைகள், நாற்காலிகள்,
அடுக்கறைகள், படுக்கை விரிப்புகள், தலையணை, மெத்தை, சங்கு
மாலைகள், சந்தன மாலைகள், சிகைக்காய்
பொடி, வேம்பு சோப்புகள், தேங்காய்
எண்ணை, தேங்காய் நார் கயிறுகள் என்று பல்வேறு உள்ளூர்
உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்தன. பின்னாளில் வீட்டு உபயோக இரும்பு சாதனங்களான இரும்பு அடுக்கு அறைகள், மேசை, நார்க்காலி என்று விரிந்து சர்வோதையா
பொருட்கள் வீடுகளை அலங்கரித்தது.
பாலியெஸ்டர்,
ரெயான் போன்ற செயற்கை (இதை சிலர் அறிவியல் முன்னேற்றம் என்பார்கள்)
இழைகள் வராத காலத்தில் கதராடைகளே மக்களின் பிராதான ஆடை. காங்கிரஸ்காரர்கள் கதராடை
அணிவதை கவுரவமாகக் கருதினார்கள். தமிழத்தில் உருவாக்கப்படும் பொருட்கள்
இந்தியதேசமெங்கும் விற்கப்பட்டது. பொருளாதாரத் தாராளமயமில்லாத, இயந்திர உற்பத்தி இல்லாத காலத்தில் ஒவ்வொரு கிராமத்தையும்
பொருளாதாரத் தன்னிறைவை அடைய வைத்தது சுயராஜ் (அ) தற்சார்பு (அ) சுதேசி (அ) சர்வோதையா
பொருளாதாரம். இன்று நம் அரசியல் வாதிகள் தங்கள் சாதனைகளாகப் பேசிக்கொள்ளும் மகளிர்
சுய உதவிக் குழுக்களெல்லாம் காந்தியின் சர்வோதயாவின் வடிவங்களே
பின்னார்
90 களில் இந்திய சந்தை உலகத்திற்கு திறந்து
விடப்பட்டதும், பருத்தி நூற்பாலை நுட்பங்கள், இயந்திரங்கள், பாலியெஸ்டர், ரெயான்
இழைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. தமிழகத்தைப் பொறுத்தவரை கோவை பருத்தி நூற்பாலைகளின்
மையமாக மாறியது. ஒரு கட்டத்தில் தென்னிந்தியாவின் மேன்ச்சஸ்டர் என்றும்
அழைக்கப்பட்டது. பருத்தி நூற்பாலைகளுக்குத் தேவையான இயந்திரங்கள், இயந்திர உதிரிப்பாகங்கள் கோவையிலேயே தயாரிக்கப்பட்டன. Laxmi
Machine Works (LMW) லட்சுமி மில் குழுமம், Textool,
Premier Instruments and Controls(Pricol), Premier Polytronics, Shanti Gears என்று கோவை இயந்திரமயத்தை உள்வாங்கிக் கொண்டது. வடக்கில் அம்பானியின்
Reliance Industries இன் பாலியெஸ்டர் நூல் உற்பத்தி செய்தது, கதராடைகளுக்கு
மாற்றாக பாலியெஸ்டர் ஆடைகள் சந்தையை ஆக்கிரமிக்கத் தொடங்கியது.
நுகர்வு
சார்ந்த பொருளாதார தாராளமயமாக வந்த அந்த பாதிப்பு நெசவையே தொழிலாகக் கொண்டிருந்த பக்கத்து வீட்டுக்காரர், தன் பெண் பிள்ளைகளின் வாழ்கைக்காக தறிகளுடன் வீட்டை விற்று, திருப்பூர்
பின்னலாடை நிறுவனத்தில் கூலி வேலைக்காக இடம்பெயரச் செய்துவிட்டது.
இன்று
கோவை ஆட்டோமபைல் மற்றும் பருத்தி நூற்பாலை இயந்திரங்களின் உற்பத்தி மையமாக மாறக்
காரணம்,
மரபு சாரா அறிவியல் சிந்தனை மற்றும் கடும் உழைப்பாளிகளே. அன்றைய தொழிலாளிகள்
இன்றைய முதலாளிகளாக வளரும் ஒரு வியப்புமிகு விதி கொண்டது கோவை. இன்று Bosch,
Roots என்ற பண்ணாட்டு நிறுவனங்கள் கால்பதித்து வளர
இங்குள்ள தொழில் நுட்பம் சார்ந்த பண்பாடே காரணம்.
உலகமயமாக்கல்
ஒரு புறம் புதிய பொருட்களையும், மிகு நுகர்ச்சியைக் கொண்டுவந்தாலும்
இன்னொரு புறம் அது உற்பத்தியைத் தனியார் முதலாளிகள் வசப்படுத்தியது. பெரும்பாலான
மக்கள் தனித்தன்மை வாய்ந்த தொழில் நுட்பங்களை கைவிட்டு இயந்திரத்தை கையாளும்
பொதுத் தொழிலாளர்களாக மாற்றப்பட்டுவிட்டார்கள். தனிமனிதர் ஒருவரின் தேவையை உலக
சந்தையே நிர்மானிக்கும் நிலை வந்தது. அமெரிக்கர்களின் வேலை வாய்ப்பின்மை பெரிதானால்
சென்னையிலும், கோவையிலும் வேலை வாய்ப்பு பறிபோகும்
நிலமை உருவானது. ஆஸ்திரேலியா சுரங்கம் தோண்டுவதை நிறுத்தினால் கோவையில்
உருக்காலைகள் மற்றும் இயந்திரப்பாக உற்பத்தி நிறுவனத் தொழிலாளர் வேலையிழக்கும்
நிலை வந்துவிட்டது. இது தவறில்லை என்றாலும், சீனா
போன்ற அதிதீவிர வளர்ச்சி மோகம் கொண்ட நாடுகளுடன் போட்டி போட்டு நம் வளங்களை
அழித்து. நாளையே கடன்காரர்களாகவும், பைத்தியகாரர்களகவும்
நாம் நிற்க வேண்டியதில்லை.
அன்று
நெசவை மட்டுமே தொழிலாகக் கொண்டு ஐந்து பெண் பிள்ளைகளை வளர்த்து, திருமணம்
முடித்து நல் வாழ்கையமைத்து கொடுத்த என் தாத்தா, இறுதிகாலத்தில் கடனேதுமில்லாமல் ஊரில்
மதிப்புடன் உலகை விட்டுச் சென்றார். இன்று ஐம்பதாயிரம் சம்பளம் வாங்கும் ஐடி
ஊழியரின் வாழ்கை ஒன்றிரண்டு பிள்ளைகளை வளர்த்தெடுப்பதற்குள் வீட்டுக்கடன், கல்விக்கடன், தொழில் கடன், கல்யாணக்
கடன் என்று கடன்களை சேர்த்துவிட்டு மரணிக்கும் போது உலகம் விரும்பாத
சரிதமாகிவிடுகிறது.
ஒரு
புறம் உள்நாட்டு உற்பத்தியை விற்க உலக சந்தையை பயன்படுத்திக் கொள்வதும் இன்னொரு
புறம் உள்ளூர் சந்தையை பலப் படுத்திக் கொண்டு உணவு மற்றும் இதர அடைப்படைத்
தேவைகளில் சுயராஜ்ஜியத்தை அடைந்து கொள்ள முயற்சிப்பதே இன்றைய தேவை.
காந்திய
சிந்தனையுடன் கூட்டுறவு சங்கங்களை வலுப்படுத்தி, உற்பத்தி,
சந்தை மற்றும் நுகர்வை இணைக்க வேண்டும். விவசாயத்தைத் தனியார் தொழிற்
சாலைகளுக்கு இணையாகக் கருதாமல், கிராமத் தற்சார்பு உற்பத்தி சங்கங்களாக
மாற்ற வேண்டும். உணவுத் தேவை துள்ளியமாக கணிக்கப்பட்டு மண் வகைகளுக்கேற்ப உணவு
உற்பத்தியை முறைப் படுத்த வேண்டும். உற்பத்தியை முறைப்படுத்தி விட்டால்
விவசாயிக்கு தன் உற்பத்திப் பொருளுக்கு நல்ல விலையும், நுகர்வோருக்குச்
சீரான விலையில் உணவுப் பொருட்களை விநியோகிக்கவும் முடியும். அதற்கு பல்நோக்கு
திட்டம் ஒன்றின் மூலம் நீர் ஆதாரத்தை வலுப்படுத்தும் திட்டங்கள், அரசியல் தலையீடற்ற, ஊழல் இல்லா விவசாய, விற்பனை சங்கங்கள் உருவாக்கப்பட வேண்டும். பண்ணைகள் சமுதாயமயமாக்கப்
படவேண்டும். இதன்மூலம் ஊரக வேலை வாய்ப்பைப் பெருக்கிட முடியும். இது ஒரு வகையில்
கிராமங்களிலிருந்து நகரத்த்திற்குக் குடி பெயர்தலையும், நகரங்கள்
வீங்கிப் பெருத்து வெடிப்பதையும் தவிர்க்க முடியும். தொழில்கள் மாநில முழுமைக்கும்
பரவலாக்கப் படவேண்டும். இது பயணம் முதல், உரைவிடச் செலவு,
சூழல் பாதுகாப்பு போன்ற பல்வேறு வகைகளில் நல்ல தாக்கத்தை
ஏற்படுத்தும்.
வளங்களும்,
அது சார்ந்த நலன்களும் மக்களுக்குக் கிடைக்கும் வகையில் சிந்திக்கும்
தலைவர்கள்தான் இன்று நமக்குத் தேவை. வளர்ச்சி, மாற்றம்
என்ற பெயரில் மக்களின் வளங்களைச் சுரண்டி தனியாருக்கு விற்று, அதை இலாபக்
கணக்கில் காட்டும் வித்தகர்கள் தேவை இந்த நாட்டுக்குத் தேவையில்லை.
சீமான் முன் வைக்கும் தற்சார்பு விவசாயக் கொள்கை காந்தியின் சர்வோதையாவை கண் முன் நிறுத்துகிறது.