Tuesday, March 12, 2019

பொல்லா ஆட்சி


சட்டதின் ஆட்சியில் தவறு செய்ய மக்கள் பயப்படவேண்டும். அறத்திற்கு எதிரான செயல்களைச் செய்ய மக்கள் வெட்கப்படவேண்டும்.
ஆனால் அதிகாரமும், பணமும் இணைந்தால் இந்தியத் திருநாட்டில் எந்தத் தவறையும் செய்துவிட்டு தப்பித்துக்கொள்ளலாம். ஒரு காலத்தில் குடிப்பது தவறு என்பதால் மறைந்து குடித்தனர். ஆனால் இன்று குடிப்பது சமூகத்தில் இயல்பான செயலாக மாறிப்போனது.
திருட்டு, கொலை, கற்பழிப்பு, கொள்ளை எல்லாவற்றையும் எந்தக் குற்றவுணர்வின்றிச் செய்துவிட முடிகிறது இன்றைய இளைஞர்களால். பாதிக்கப்பட்டவர் நம்மில் ஒருவராக இல்லாதபோது அனைத்தையும் ஒரு செய்தியாகக் கடந்துவிடுகிறோம்.
அறத்தின் அளவுகோள் மாறிப்போனது. எத்தனை காசைக்கேட்டாலும் கொடுத்துத் தனியார் பள்ளிகளில் பிள்ளைகளுக்கு எந்தக் கேள்வியுமில்லாமல் இடம் வாங்கிப் படிக்க வைக்கிறார்கள். என்ன படிக்கிறார்கள் என்ற கவலை யாருக்குமில்லை. மனித வாழ்க்கையின் அடிப்படை அறத்தைக் கற்றுக்கொடுக்கும் கல்வி மறைந்துவிட்டது. இண்டர் நேசனல் ஸ்கூல் என்று உலகத்தில் இல்லாததைக் கற்றுக் கொடுக்கிரார்கள். கல்வியின் நோக்கமே மிகுந்த பொருளீட்டும் வாழ்க்கையைப் பெறுவதாக மாறிவிட்டது. அறமற்ற வாழ்கை வாழ எவருக்கும் குற்றவுணர்ச்சியில்லை.
காசுக்காகப் பொய் சொல்வது, திருடுவது, பலமில்லாதவர்களின் மீது வன்முறையைப் பயன்படுத்துவது, அதிகாரத்தை வைத்து காரியம் சாதிப்பது, பணமிருந்தால் எதையும் செய்யலாம் என்ற மனவலியைப் பெறுவது என அடிப்படையே தவறாக வந்து நிற்கிறது.
சட்டத்தைக் காக்கும் காவல் துறையும் அதை இயக்கும் அரசும் மக்களைத் தவறு செய்ய அனுமதிக்கிறது. மக்கள் செய்யும் தவறுகளே அவர்களுக்கு மூலதனம். தாங்கள் செய்யும் தவறுகளை மக்கள் கேள்விகேட்கும் தார்மீக உரிமையை அழிக்க எளிதான வழி.
வெகுதூரம் பயணித்துவிட்ட அறமற்ற வாழ்க்கையைத் திருத்துவதெல்லாம் அவ்வளவு எளிதில்லை. நடந்த கொடுமைகளை தேர்தல் நேரத்தில் கையிலெடுத்து எதிர்கட்சிகள் ஆதாயம் தேடுகின்றன. எதிர்க்கட்சிக்கும் ஆளுங்கட்சிக்கும் பெயரளிவில்தான் வேறுபாடு. அவர்கள் கையில் அதிகாரமிருந்தபோதும் இந்தக் கொடுமைகள் நடந்ததற்கு நாளிதழ் செய்திகள் சான்று.
வெளியே வந்தது ஒரு பொள்ளாச்சி, பொல்லா ஆட்சியில் வெளியே வராத பொள்ளாச்சிகள் எத்தனையோ?
குற்றம் எப்படி நடந்தது என்பதை மட்டுமே காவல்துறை விசாரிக்கும்.
குற்றம் ஏன் நடந்தது, அதற்கான காரணிகளை எப்படி சரி செய்வது, எதிர்காலத்தில் குற்றங்கள் நடக்காமல் எப்படித் தடுப்பது என்பதை அரசு செய்யவேண்டும். அதற்கு விசாரணைகளைத் தாண்டிய சமூக உளவியல் ஆய்வு நடத்தப்படவேண்டும். அதனடிப்படையில் சட்டங்களும் திட்டங்களும் உருவாக்கப்படவேண்டும்.
என்கவுண்டரில் போட்டால் எல்லாம் சரியாகிவிம் என்றால் ஆளுக்கொரு துப்பாக்கி வைத்துக் கொள்ள வேண்டியதுதான். ஆனால் அதுவா ஆரோக்கியமான சனநாயகம்?

Sex Offenders - பாலியல் குற்றம் புரிந்தவர்களுக்கென தனியான ஒரு பதிவேடு அமெரிக்காவில் உண்டு. ஒரு முறை குற்றமிழைத்தாலும் அவர்கள் வாழ்க்கையே முடிந்தது. வேலைக்கான பின்புல ஆய்வில் இவை வெளிப்படும். இவர்களுக்கு நிறுவனங்கள் வேலை கொடுக்கத் தயங்கும். இவர்கள் பற்றிய பதிவேடு பொதுமக்கள் எவராலும் எப்போதும் பார்வையிடமுடியும்.
இன்னும் கொஞ்சம் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தினால், அவர்கள் ஒரு குறிப்பிட்ட தூரத்தில் வந்தால் நமது செல்லிடப்பேசிகள் நமக்கு எச்சரிக்கை கொடுக்கும்படி செய்ய முடியும். அவர்கள் இருக்கும் இடத்தை வரைபடத்தில் பார்த்து அவர்களைத் தவிர்த்துவிடலாம்.
இதை இந்தியாவில் செய்ய நீதிமன்றத் தீர்ப்புகளையும், காவல் நிலையத்தில் பதியப்பட்ட புகார்கள் மற்றும் தனி நபர் புகார்களின் அடிப்படையில் தனியான அமைப்பு நடத்தும் வலைத்தளமாகவே செய்யலாம்.

கடைசியாக பொள்ளாச்சி புகழ் பெற்றது 1965ல் நடை பெற்ற மொழிப்போராட்டத்தில். இந்தித் திணிப்பிற்கு எதிராக நடந்த போராட்டத்தில் பிப் 12 அன்று ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
அதன் பின் திராவிடக் கட்சிகள் தமிழகத்தை ஆண்டு வருகின்றனர். சரியாக 54 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது தேசியக் கட்சிகள் தமிழகத்தில் காலூன்ற வாய்ப்புத் தேடிக் கொண்டிருக்கும் சூழலில் பெண்களைச் சீரழிக்கும் போக்கு வளர்ந்து நிற்கிறது.
இது பெரியார் பிறந்த மண். இது திராவிடக் கட்சிகள் ஆட்சி செய்த மண்.
அதிகாரத் திமிரில், ஊழல் செய்து சேர்த்த செல்வத்தில் குற்றங்களை கூச்சமில்லாமல் செய்வது அரசியல்வாதிகள் மற்றும் அவர்களுக்கு சாமரம் வீசும் அரசு அதிகாரிகள்.
இவைதான் 54 ஆண்டுகால சாதனைகள்..

சந்தோசின் தமிழ்ப் பாடங்கள் - 1

வார இறுதியில் நடக்கும் தமிழ்ப் பள்ளிக்குச் செல்வது சந்தோசிற்கு அவ்வளவு உவப்பானதாக இல்லை. வாரத்தின் ஒவ்வொரு நாளும் பள்ளியில் நடத்தப்படும் பாடங்களைப் படிப்பதும், வீட்டுப்பாடங்களைச் செய்வதும் சுமையாக இருப்பது போதாதென்று பெற்றோர்கள் ஆசைக்காக இப்போது தமிழ்ப்பள்ளியில் பாடம் கற்பது இன்னும் சுமையை அதிகமாக்கியதாக உணர்ந்தான். சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில்தான் நண்பர்களுடன் கூடைப்பந்து விளையாடுவது, போர்ட் நைட் கேம் விளையாடுவது என்று கொண்டாட்டமாக இருக்கும். இப்போது ஞாயிற்றுக் கிழமையில் ஒரு பாதி தமிழ்ப் பள்ளியால் வீணாகி விடுகிறது.

ஞாயிற்றுக் கிழமை பாடம் கற்பதை விட கொடுமை இந்த உலகத்தில் இல்லை என்பதுபோல் சலித்துக் கொண்டான் அவன். எதற்காக தமிழ் படிக்க வேண்டும். பள்ளியில் கற்பது போதாதா? பக்கத்து வீட்டு ராகேசோ, ஆரியனோ தமிழோ, குஜராத்தியோ படிப்பதில்லையே.. நான் மட்டும் ஏன்..? என்றெல்லாம் கேள்விகேட்டு தமிழ்ப் பள்ளிக்கு வருவதற்கெதிரான காரணங்களை மனதிற்குள் சேர்த்துக்கொண்டே போனான்...

தன்னைப்போலவே தமிழ்ப்பள்ளியின் வகுப்பில் இருக்கும் மற்ற மாணவர்களும் உணர்வதுபோல் தெரிந்தது அவனுக்கு. ஒரு சில பெண் பிள்ளைகள் மட்டும் வெகு ஆர்வமாக பாடம் படித்தனர். ஆசிரியர் சொல்வதை அப்படியே கற்றுக்கொள்கிறார்கள். அவர்களுக்கு ஏன் தமிழ் கற்க வேண்டும் என்ற கேள்வியே எழவில்லையா? எப்படி இப்படி வரட்சியாக வகுப்பில் இருக்க முடிகிறது? என்ற கேள்வி உள்ளுக்குள் எழுந்தாலும் அவனால் அவற்றை வெளிக்காட்ட முடியவில்லை.

அ, ஆ என்று தொடங்கி இப்போது க், ங், ச் என்று போக்கொண்டிருக்கிறது. அவ்வப்போது ஓரிரு பாடல்கள், ஓரிரு கதைகள் என்று பாடம் போய்க்கொண்டிருக்கிறது. இப்போதுதான் நிலை 1. அடுத்த ஆண்டு நிலை 2, அதற்கடுத்த ஆண்டு நிலை 3 என்று 8 நிலைகள் முடிக்க வேண்டும். முடித்த பின்? முடித்தால் என்ன கிடைக்கும்? ஏன் முடிக்க வேண்டும்? என்று ஒவ்வொரு முறையும் தனக்குள் கேள்வி கேட்டுக் கொண்டான்.

இன்று நடந்த வகுப்பில் தமிழ்ப் பாடம் நடந்து கொண்டிருக்கும்போது நடுவில் தூங்கிவிட்டான் சந்தோசு. ஆசிரியர் அவனை எழுப்பி முகம் கழுவி வரச்சொன்னார். சலிப்புடன் சென்று முகம் கழுவி வந்தான். ப், ம், வ் என்று பாடம் நகர்ந்து கொண்டிருந்தது. பொறுமை இழந்தவன் எழுது நின்றான். ஆசிரியர் அவனை வியப்புடன் பார்த்தார். இப்பொழுதுதான் கழிவரைக்குப் போய்வந்தான், மறுபடியும் போக வேண்டுமா? என்பது போல் பார்த்தார்.

ஆனால் அவன் ஒரு கேள்வியைக் கேட்டு ஆசிரியரை அதிர்ச்சிக்குள்ளாக்கினான். "ஏதற்குத் தமிழ் படிக்க வேண்டும்?" என்று கேட்டுவிட்டு அமர்ந்தான். ஆசிரியருக்கு தொண்டை வரண்டுவிட்டது. அருகிலிருந்த தண்ணீர் பாட்டிலில் இருந்து தண்ணீரக் குடித்துக் கொண்டு பதில் சொன்னார்.

தமிழ் நமது தாய்மொழி. அது 2000 வருடத்திற்கு முன் உருவான பழமையான மொழி. அதை நாம் படிப்பது அவசியம் என்று பதில் சொன்னார். ஆனால் சந்தோசிற்கு அது திருப்தி அளிக்கவில்லை. அவர் சொன்ன பதில் தமிழ் மொழியைப் படிக்கத் தேவையான காரணமாகத் தெரியவில்லை.

புரிந்து கொண்ட ஆசிரியர் சிறிது அமைதிக்குப் பின் பாட புத்தகத்தை மூடி வைத்துவிட்டு அருகில் வந்து நின்று பேசினார். நியூட்டன் யார் என்று தெரியுமா என்று கேட்டார். தெரியும்.. இயற்பியல் ஆய்வாளர் என்றான் சந்தோசு. நல்லது. அவர் என்ன ஆராய்ச்சி செய்தார்? பொருட்களின் அடிப்படை இயக்கம் பற்றிய கோட்பாட்டை உருவாக்கியவர் என்றான்.

சரி.. அவர் எப்போது பிறந்தார் என்று தெரியுமா? என்றார். தெரியாது என்றான். 16ம் நூற்றாண்டில் பிறந்தவர் அவர் என்று ஆசிரியர் பதிலளித்தார். புவியில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் உயிராற்றலைக் கொடுப்பது சூரியன். சூரியன் இல்லையென்றால் பூமி வெறும் பனிக்கோளமாக இருக்கும். சூரியனி ஒளி மற்றும் வெப்பம் மற்றும் கதிராற்றலால்தான் புவியிலுள்ள தாவரங்கள், மற்ற உயிரினங்கள் தங்கள் வாழத் தேவையான ஆற்றலைப் பெறுகிறது.

இதை நியூட்டனுக்கு முன் 1600 ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் தெரிந்து வைத்திருந்தார்கள். தமிழ் இலக்கியங்கள் 2000 வருடங்கள் பழமையானவை. அதில் ஒன்றான திருக்குறளில் இந்த சூரிய ஆற்றல் பற்றி திருவள்ளுவர் எழுதியிருக்கிறார். அந்தக் குறள்

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

எழுத்துக்களுக்கெல்லாம் மூலம் அகரம் அதுபோல உலகின் உயிர்களுக்கு மூலம் ஆதவன் என்கிற சூரியன் என்பதுதான் அதன் பொருள் என்று விளக்கமளித்தார்.

சந்தோசிற்கு சந்தோசம் பொங்கியது. தான் தமிழ் படிப்பது என்பது வீணானது இல்லை என்பதை உணர்ந்து கொண்டான். மேலும் தமிழாசிரியர் சொன்னார் "தமிழ் இலக்கியங்கள் ஒரு புதையல். நீங்கள் படிக்கும் தமிழ் மொழியானது அந்தப் புதையல் இருக்கும் இடத்தைக் காட்டும் வரைபடம்" என்று இன்னொரு தகவலைச் சொன்னார். அவனுக்கு டோராவின் நினைவு வந்தது.

அவன் தமிழ் கற்பதில் பெருமிதம் கொள்ளத் தொடங்கினான். அந்த பெருமிதம் பெரும் மகிழ்ச்சியாக அவனது முகத்தில் தெரிந்தது. தொடர்ந்து தமிழ்ப் பாடத்தைக் கூர்மையாகக் கவனித்து கேள்விகள் கேட்டுப் படிக்க ஆரம்ப்பித்தான் சந்தோசு.

Monday, March 11, 2019

தாய்மொழி நாள்

பால் கலாநிதி என்ற இந்திய வம்சாவளி நரம்பியில் அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் ஆய்வாளர் “மூச்சு வெறும் காற்றாகும்போது” என்னும் நூலில் மரணத்துடனான தனது அனுபவத்தை எழுதியிருக்கிறார். புற்றால் பின்நாளில் மரணித்துப் போகும் அவர் தன் அனுபவத்தை நூலாக வெளியிட்டிருக்கிறார்.
அதில் ஒரு அனுபவத்தைச் சொல்லும்போது, மனித மூளையில் மொழியைப் புரிந்துகொள்ளவும், மொழியின் வழி உரையாடவும் என இரு பகுதிகள் இருக்கிறது. அந்தப் பகுதியில் மூளையில் புற்றுக் கட்டி உருவான ஒருவர் நாம் பேசுபவற்றை புரிந்துகொள்வதும், பதிலை வெறும் எண்களில் “4523” சொல்லும் நிகழ்வொன்றைப் பதிவிட்டிருக்கிறார்.
மொழி என்பது வெறும் தொடர்புகொள்ளும் கருவியல்ல. அது மனிதனின் பரிணாம வளர்ச்சியில் அவனின் சிந்தனையை, ஆற்றலை தீர்மானிக்கும் ஒரு முக்கியக் காரணியாக இருக்கிறது. தாய் மொழியில் சிந்திப்பவர்கள் திறன் இயல்பாகவே கூடுதலாக இருக்கிறது என்று ஆய்வுகள் கூறுகிறது.ஆங்கிலம், ஸ்பானிஸ், மாண்டரின் என எல்லா மொழிகளையும் கற்கலாம். ஆனால் தாய்மொழியைக் கற்றுக்கொண்டு அதன் வழி சிந்திப்பதும், விளங்கிக் கொள்வதும் இயல்பாக கூடுதல் ஆற்றலை ஒருவருக்குத் தரும்.இவ்வாறான நிலையில் ஆங்கிலம் உயர்ந்தது, இந்தி சொறுபோடும், சமசுக்கிருதம் மோட்சம் தரும் என்று தமிழை அரசு அதிகாரத்தின் வழி ஒரு பிரிவினர் அழிக்க முயல்வதை புரிந்து கொள்ளவேண்டும். மொழியை அழிப்பதன் மூலம் ஒருவரது அடையாளத்தை, சிந்திக்கும் ஆற்றலை அழித்துவிட முடியும் என்று அவர்கள் நம்புகிறார்கள். அதற்கு நம்முடனே இருக்கும் சில கோமாளிகளும் துணை நிற்கிறார்கள்.தமிழ் மொழி ஒரு அறிவியல் மொழி. அதன் ஒலி, சொல்லமைப்புகள் தற்செயலானதல்ல. வலி மிகுந்த ஒலியை ஏற்படுத்தும் சொற்கள் உணர்ச்சியை அப்படியே வெளிப்படுத்துவை. மூளை தான் சொல்ல வருவதை வாய் அப்படியே வெளிப்படுத்துகிறது. பூசி மெழுகிச் சொல்லும் தேவை தமிழில் இல்லை. தமிழில் ஒரு சொல்லில் வெளிப்படுத்தும் உணர்வை வேறு மொழிகளில் சொல்ல ஒன்றுக்கும் மேற்பட்ட சொற்களைப் பயன்படுத்த வேண்டும். இது பண்பட்ட மொழிக்கே உள்ள சிறப்பு. தமிழுக்கு யாரும் செம்மொழி அங்கீகாரம் கொடுக்கும் முன்னும் அது செம்மொழியாகவே இருந்தது.

“தமிழுக்கும் அமுதென்று பேர்
அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
உயிருக்கு நேர்!” என பாரதிதாசன் பாடியது மிகுந்த பொருள் கொண்டது.
உலகத்தினருக்கு தாய்மொழி தின வாழ்த்துகள்
தமிழருக்கு உலகத் தாய்மொழி தின வாழ்த்துகள்..

Monday, February 18, 2019

புல்வாமா குண்டு வெடிப்பு

இந்திய ராணுவத்தின் ரிசர்வ் படையினர் விடுமுறை முடிந்து ஜம்முவில் உள்ள படை முகாமுக்குச் செல்லும் வாகனத்தொடரணி மீது நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டு வெடிப்புத் தாக்குதலில் 45 வீரர்கள் உயிரழந்த செய்தி வேதனையளிக்கிறது. இராணுவத்தில் சேர்வது என்பது நாட்டுப்பற்றைத் தாண்டிய தனிப்பட்ட குடும்பத்தின் சுமையைக் குறைக்கத் தன்னை அற்பணித்துக்கொள்ளும் தியாகச் செயல் என்பதுதான் உண்மை.

இந்தியா போன்ற மக்கள் தொகை கொண்ட வறுமையும் மனித வளமும் மிகுதுள்ள நாட்டில் காலாட்படைக்கு எப்போதும் ஆட்கள் சேர்ந்து கொண்டே இருப்பார்கள். ஆனால் அவர்களின் இழப்பிற்குப் பிறகு அவரை இழந்த குடும்பத்திற்குக் கிடைக்கும் இழப்பீடும் அவ்வளவு பெரிதாக இருக்காது. அவர்கள் தியாகத்தை ஒன்றிரண்டு நாட்களுக்கு முகநூலில் எழுதிவிட்டு பிறகு வேறு ஏதோ பிரச்சினையைப் பிடித்துக் கொண்டு காலந்தள்ளும் இந்தச் சமூகம்.

இந்தக்குண்டு வெடிப்பிற்கு மற்றவர்கள் போல் கருப்பு வெள்ளையாக என்னால் ஒரு தெளிவான முடிவில் எழுத முடியவில்லை. இந்தக் குண்டு வெடிப்பு குறித்த சில ஹைப்போதீசை முன் வைத்து வேண்டுமானல் எழுதலாம்.

எந்த ஒரு தாக்குதலுக்குப் பின்னும் ஒரு அரசியல் அல்லது படை இலக்கு இருக்கும். அது எதிரிக்குப் பொருளாதாரச் சுமையை ஏற்படுத்துவது, நிலங்களை கைப்பற்றுவது, உலகில் எதிரியின் வலிமையைக் கேள்விக்குள்ளாக்குவது, உள்நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்துவது போன்ற ஏதாவது ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட இலக்குகளாக இருக்கலாம். அந்த அடிப்படையில் சில ஹைப்போதீசிஸ்

ஹைப்போதீசிஸ் 1: பாகிஸ்தான் புத்திசாலி, இந்தியா அப்பாவி

பாக்கிஸ்தானின் இலக்கு காசுமீரம் தாண்டி ஜம்முவுக்குள்ளும் தங்களால் தாக்குதல் நடத்த முடியும். மோடி அரசு சொன்னதுபோல் தாங்கள் பயந்து தாக்குதலை நடத்தாமலிருக்கவில்லை என்று ஒரு சேதியைச் சொல்கிறார்கள்.

இந்தியாவின் தற்போதைய ஆட்சியின் மீது மக்கள் வெறுப்படைந்துள்ளது கடந்த தேர்தல்கள் உணர்த்துகிறது. இந்த நிலையில் இந்திய மக்களைத் தண்டிக்க ஒரே வழி இந்த ஆட்சியாளர்களை மீண்டும் ஆட்சியில் அமர்த்துவதே.

ஹைப்போதீஸ் 2: பாகிஸ்தான் முட்டாள், இந்தியா புத்திசாலி

இது போன்ற தாக்குதல்கள் உள்ளூரில் கட்சி, மத நம்பிக்கை தாண்டி மக்களை ஒன்றிணைத்துவிடும். அந்த ஒற்றுமையை தனக்குத் துறுப்புச் சீட்டாக வைத்து தற்போதைய இந்திய அரசு, அதுவும் இந்துத்துவத்தை முன்னிறுத்தும், இந்தியப் பிரிவினையை எதிர்க்கும் அரசு ஒரு பெரும் தாக்குதலை அல்லது பாகிஸ்தானை மேலும் உலக அரங்கில் தனிமைப்படுத்தும் முயற்சியை மேற்கொள்ளும் என்ற கணிப்பு இல்லாமல், தானாகவே மக்களின் செல்வாக்கை இழக்கும் ஆளும் அரசு வரும் தேர்தலில் ஆட்சியை இழக்கும் முன் அவசரப்பட்டு தாக்குதலை நடத்திவிட்டது. மேலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியில்லாமல் கவர்னரின் ஆட்சி நடக்கும் போது இரணுவத்திற்கு முழு அதிகாரத்தையும் கொடுத்து இந்திய அரசும், இந்துத்துவர்களும் காசுமீரில் ஒரு போர்க்களத்தை உருவாக்கி இசுலாமியர்கள் வேட்டையாடப்படலாம் என்ற அடிப்படை அறிவு இல்லாமல் ஒரு தாக்குதலைத் திட்டமிட்டு நடத்திவிட்டது பாகிஸ்தான். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி ஆளும்கட்சி சிறிய அளவிளான போரை நடத்தி அதில் தன் இலக்கை அடைந்துவிட்டதாக நிறுவி மக்களிடம் மீண்டும் ஆட்சியமைக்க ஆதரவு கேட்டு தேர்தலைச் சந்திக்க வழி ஏற்படுத்துவது. மீண்டும் ஆட்சிக்கு வந்து தொடர்ந்து சண்டைபோட்டுக் கொண்டிருப்பது.

ஹைபோதீசிஸ் 3: பாகிஸ்தான் அப்பாவி, இந்தியா புத்திசாலி

பாகிஸ்தான் குண்டுவெடிப்பை நிகழ்த்தவில்லை, அதற்கு அப்படி ஒரு தேவை இப்போது இல்லை. இந்தியாவின் தற்போதைய ஆட்சி தானாக தேர்தலில் தோல்வியடைந்து விலகும் வரை படை நடவடிக்கைகளை நிறுத்தி வைத்திருந்தது.

இந்த மூன்று ஹைப்போதீசிஸ் இல்லாமல் வேறெதுவும் இருக்கலாம். ஆனால் அவற்றிற்கான அரசியல் முக்கியத்தும் இன்றைய சூழல் இருக்கிறதா என்ற கேள்வி எழுப்பி அதை ஆராயலாம்.
இந்தியாவைக் கட்டுக்குள் வைக்க சீனாவிற்கு பாகிஸ்தான் தான் தற்போதை துருப்புச்சீட்டு. அது ஒரு போதும் பாகிஸ்தான் வீழ்வதை விரும்பாது. இரஸ்யா இந்தியாவிற்கு நேரடியாக ஆதரவைத் தெரிவித்தாலும் சீனாவின் பின்ணணியில் நடக்கும் பாகிஸ்தான்- இந்தியா போரில் இரஸ்யா இந்தியாவின் பக்கம் நிற்குமா என்பது விடைகிடைக்காத கேள்வி. ஏனென்றால் மத்திய ஆசியாவில் நடைபெறும் போர், எண்ணைச் சந்தையின் சரிவு என ஏற்கனவே அதன் பொருளாதரம் அவ்வளவு சிறப்பாக இல்லை. இப்போது இந்தியாவின் பக்கம் நின்று அது எந்த இலாபத்தை அடையப்போகிறது என்ற கேள்விக்கான விடையிலேயே அதன் ஆதரவு அமையும்.
அமெரிக்கா வெளி நாடுகளில் இராணுவ நடவடிக்கைள் செய்வதைக் குறைத்து தன் செலவுகளைக் குறைத்து வருகிறது. அதற்கு சீனா என்ற கடங்காரன் பொருளாதார வீழ்ச்சி அடைவது விரும்பத்தக்க விளைவு. ஆனால் அதற்கு இந்தியா அமெரிக்காவை பாகிஸ்தானைப் போல தனது மண்ணில் செயல்பட அனுமதிக்காது. மேலும் இந்தியா அமெரிக்காவை முழுமையாக எப்போதும் நம்பியதில்லை, அதற்கான சூழல் இன்னும் ஏற்பட்டதகாத் தெரியவில்லை.
உலக நாடுகளின் முழுமையான ஆதரவில்லாமல் சீன ஆதரவு பாகிஸ்தானுடனான முழுமையான போருக்கு இந்தியாவின் பொருளாதாரம் தாயாராக இருக்கிறதா என்பதும் ஆராயப்படவேண்டும்.
ஆக இந்த குண்டுவிடிப்பில் உயிரிழந்த 45 உயிர்களுக்கு அஞ்சலி செலுத்தி அவர்கள் குடும்பத்திற்கு நம்மால் ஆன உதவியைச் செய்து அமைதியாக இருப்பதே இப்போதைக்கு நமக்கும் நாட்டிற்கும் நல்லது.

Tuesday, February 12, 2019

ரைட்டு விடு...

நம்ம ஊரில் நம்மை ரோசக்காரன் என்றால் பெருமை கொள்வோம்..

மானஸ்தன் என்றால் இன்னும் அதிக பெருமை கொள்வோம்..

ஆனால் இந்த மானம், ரோசம் என்றால் என்ன? இதன் வரைறைதான் என்ன? மானம், ரோசமெல்லாம் எல்லோர்க்கும் ஒன்றேதானா?

அப்படி மான ரோசத்தோடு வாழ்ந்து சாதித்தவர்கள் ஒரு பத்துப் பெயரைச் சொல்லுங்கள்?

அதற்காக மானம், ரோசமில்லாமல் வாழவேண்டுமென்று சொல்லவில்லை... சும்மா எதற்கெடுத்தாலும் உணர்ச்சிவசப்பட்டு பார்க்க முடியாத மான ரோசத்திற்காக முடிவெடுத்து வீணாய்ப்போனவர்களை நிறயப் பார்த்திருக்கிறேன். பல தற்கொலைகள், கொலைகள் இந்த "மான ரோசத்திற்காக" நடந்திருக்கிறது.

சமீபத்தில் கூட ஒரு வாடகைக் கார் ஓட்டுனர், காவலர்களின் சகிக்க முடியாத வசையை (அதுவும் ஒரு பெண் முன்னே) கேட்டு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்..

இன்னும் கிராமப்புறத்தில் இப்படி உணர்ச்சிவசப் படுபவர்கள் ஏராளம்...

எங்கள் தாத்தா கூட தங்கள் ஊரில் பாவு தோய்ந்தபோது அங்கு சிந்தியிருந்த கஞ்சி மீது கால் வைத்து வழுக்கி விழுந்துவிட்டாராம். அதைச் சுற்றியிருந்தவர்கள் பார்த்து சிரித்து விட்டார்களாம்..
அவ்வளவுதான்.. வந்தது ரோசம்.. பொண்டாட்டி பிள்ளைகளைக் கூட்டிக்கொண்டு புளியம்பட்டி வந்துவிட்டாராம்.. அவருக்குப் பெயர் வயக்காட்டுக்காரார்... அந்த வயக்காடு எங்கிருக்கிறது, யாரிடம் இப்போது இருக்கிறது என்றெல்லாம் தெரியாது..

முதலிலிருந்து வாழ்க்கையைத் தொடங்கியிருக்கிறார்..

நானும் கூட மேலாளர் திட்டியதற்கெல்லாம் ரோசப்பட்டு வேலையை விட்டு வந்திருக்கிறேன்.. (ஆனால் அதனால் பெருமைப் படும் அளவில்தான் இருக்கிறேன்). அன்றைய காலத்தில் அது குடும்பத்திற்குச் சுமையை ஏற்படுத்தியிருந்தது என்பது மறுக்க முடியாது..

எல்லோருமே நம்மைப்போலத்தான் ரோசக்காரர்களா? மானஸ்த்தர்களா? .. வெற்றி பெற்றவர்களை உதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள்.. அவர்கள் மற்றவர்கள் வசவால் ஒருபோதும் தங்களை மானமிழந்தவர்களாகக் கருதிக்கொண்டு முடிவுகளெடுப்பதில்லை..

இன்னும் சொல்லப்போனால் நிறுவனங்களில் பெரிய பொறுப்புகளில் இருப்பவர்கள் அதற்கு ஏற்ப மான ரோசத்தை இழந்துதான் அந்த உயரத்தை அடைந்திருப்பார்கள்.. குறிப்பாக விற்பனைப் பிரிவில் இருப்பவர்கள்..

ஆக.. சும்மா மானம் போய்விட்டது, மரியாதை போய்விட்டது என்று உணர்ச்சிவசப்பட்டு முடிவுகளெடுத்து வீணாய்ப் போவதைவிட அந்தக் கோபத்தை, உணர்ச்சியை நம் மானத்தை வாங்கியவரின் மானம் போகும் படியாக வாழ்ந்து காட்ட வேண்டும்..

எப்படி?

கடுங்கோபம் வந்தால் ஒரு ஆணை எப்படித் திட்டுவார்கள்.. அவன் தாயைப் பழித்தால் அவனுக்குக் கோபம் வரும் என்பதால் அதைச் செய்வார்கள்..

அமேசான் நிறுவனத்தின் நிறுவனர் ஜெப் பிசோ அந்த (க்கெட்ட?)வார்த்தைக்கு பொருத்தமான ஆள்.. அவரும் அதைக் கேட்டு கடந்து வந்திருப்பார்தான்..

ஆனால் இன்று வெற்றி பெற்று பெரும் பணக்காரராக நம் முன் வந்து உரையாடும் போது சொல்கிறார்..

"எனது தாய் உயர் நிலைப்பள்ளியிலேயே என்னைக் கருத்தரித்தாள். எனது தந்தை, அதாவது உண்மையான தந்தை மைக், ஒரு கியூப வந்தேறி, என் உயிரியல் தந்தையல்ல. (கவனியுங்கள் தன் பிறப்பிற்குக் காரணமானவரை உண்மையான தந்தை என்று சொல்லவில்லை). என் பெற்றோர்கள் எனக்குக் கிடைத்த வரம்" என்கிறார்.

கோபப்படுவதும், ரோசம் கொள்வதும், மயிர் நீத்தால் மாண்டு விடும் மான் போல் வாழ வேண்டும் என்று சொல்வதை அப்படியே ஏற்றுக்கொண்டு மிகையுணர்ச்சி கொள்ள வேண்டியதில்லை. சில நேரங்களில் வடிவேல் போல் இருந்துவிட்டு கடந்து சென்றுவிட வேண்டும்.

ஆக இனி "மானங்கெட்டவனே என்று திட்டினால்"..

"ரைட்டு விடு" என்று கடந்துவிட்டால் நல்லது.. இல்லை.. கவரிமான் போல் மாண்டுவிடுவேன் என்று உணர்ச்சிவசப்பட்டால்

"பீ கேர்புல்"..

"யாருக்கு?"

"எனக்கு"..

Sunday, February 3, 2019

சார்லட் பொங்கல் திருவிழா - 2019

நேற்று பிப் 2 அன்று ராபின்சன் உயர்நிலைப் பள்ளியில் சார்லட் தமிழ்ச் சங்கம் ஏற்பாடு செய்திருந்த பொங்கல் திருவிழா சிறப்பாக நிகழ்ந்து முடிந்தது. கடுங்குளிர் கடந்து இந்த விழாவில் தமிழர் உறவுகளை சந்தித்து மகிழவும், குழந்தைகள் முதல் பெரியவர் வரை நிகழ்த்திய கலை நிகழ்ச்சிகள் பொங்கல் விழாவின் பெருவிருந்தாக அமைந்தது. ஏறக்குறைய 70 கலை நிகழ்ச்சிகள் நடந்தது. ஒவ்வொரு நிகழ்விலும் குழந்தைகள் பெரியவர் என அனைவரும் தங்கள் கலைத்திறனை வெளிப்படுத்தினர். இதற்கான தயாரிப்புகள் இரண்டு மூன்று மாதத்திற்கு முன்பிருந்தே தொடங்கியிருக்க வேண்டும் என்பது நிகழ்ச்சியை கண்டுகளித்தவர்கள் உணர்வார்கள்.

கலை நிகழ்ச்சிகள் கலையரங்கில் நடக்க, ஒரு சிறு சந்தையையும் தமிழ்ச்சங்கள் அரங்க வாயிலில் அமைத்திருந்தது. அதில் பாரம்பரிய உடைகள், கலைநயம்படைத்த ஆபரண அங்காடி, தமிழ் இலக்கிய வரலாற்று நூலங்காடி மற்றும் பல அங்காடிகள் நிறைந்து விழாவிற்கு வருவோரை ஈர்த்து எளிதில் கிடைக்காத பண்டங்களை பெற்றுக்கொள்ள வழிவகை செய்திருந்தனர்.

நிகழ்வில் நூலங்காடி அமைக்கும் வாய்ப்பைத் தமிழ்ச்சங்கம் ஏற்பாடு செய்திருந்தது மகிழ்ச்சி. அதனினும் மகிழ்ச்சி அந்த அங்காடியை நடத்தும் பொறுப்பை நம்மிடம் ஒப்படைத்தது. அங்காடியில் நூல்களை வாங்க வருபர், பார்க்கும் நூல்கள், நூல்களைப் பற்றிய அவர்கள் பார்வை, அதனைத் தொடர்ந்த உரையாடல் நம் எண்ணவோட்டத்திற்குள் இருக்கும் நண்பர்களை அடையாளம் காண உதவியது. நமக்குப் பிடித்த ஒரு எழுத்தாளரை வாசிக்கும் இன்னொரு வாசகரைச் சந்திப்பது எவ்வளவு மகிழ்வுக்குறிய நிகழ்வு என்பது, தேனைச் சுவைத்தவருக்கே அதன் ருசி தெரியும் என்பதுபோல் அனுபவித்தவருக்கே அந்த மனமகிகழ்ச்சி தெரியும். இலாப நோக்கில்லாமல் புத்தகம் மற்றும் அதைக் கொண்டுவர ஆன பொதியனுப்பும் கட்டணத்தைக் கொண்டே புத்தகங்களின் விலை நிர்ணயிக்கப்பட்டது இலக்கிய வாசிப்பை நம் மக்களிடம் கொண்டு சேர்ப்பது என்று தமிழ் வளர்ச்சியில் சங்கம், சங்ககால தமிழ்ச்சங்கம் போல் செயல்படுவதை உணர்த்துகிறது.

குறிப்பாக தமிழர் அமைப்பின் மூலம் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ளும் நோக்குடன் வேலை வாய்ப்பு, முதலீடு, கல்வி தொடர்பான வாய்ப்புகளை பகிர்ந்து தம்மை வளர்த்துக்கொள்ள "பாலம்" என்ற அமைப்பின் மூலம் ஏற்பாடு செய்திருந்தார்கள். இதன் மூலம் சார்லட் வாழ் தமிழர்கள் இணைந்து தகவல்களைப் பரிமாறிக்கொள்வது, வாய்ப்புகளைப் பகிர்ந்து கொள்வது என்ற முன்னெடுப்பு தொடங்கியுள்ளது. நிகழ்வில் வாய்ப்பைத் தவற விட்டவர்கள் தங்கள் தகவல்களை இங்கு பதிந்து கொள்ளலாம். (https://goo.gl/forms/AG5aUqYjcRWZNPL53)

விழாவிற்கு வருகை தந்தவர்களின் மனதை மகிழ்வித்த கலை நிகழ்ச்சிகளுக்கு ஈடாக அவர்கள் நா சுவைக்க விருந்தை சித்தாரா உணவகம் வழங்கியிருந்தது. பரிமாறப்பட்ட சைவம் மற்றும் அசைவ உணவுகளின் சுவையை புசித்தவர் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியால் அறிய முடிந்தது.


இந்த ஆண்டு பொங்கல் விழாவில் மொழிப்போர் தியாகிகள் 80 ஆண்டு நினைவு கூறப்பட்டு அவர்களுக்கு மரியாதை செய்யப்பட்டது. வெறும் கலை நிகழ்ச்சிகளுடன் பொங்கல் விழா நிறைவுறாமால் மொழிப்போர் தியாகிகளுக்கு மரியாதை செய்தது தமிழர் தம் மொழி, இனத்திற்கு தியாகம் புரிந்தவர்களை என்றும் மறவாமல் தம் நன்றியைக் கொண்டிருக்கின்றனன் என்பதைக் காட்டுகிறது.

நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த தமிழ்ச்சங்கம் மற்றும் தன்னார்வளர்களுக்குப் பாராட்டுகள்.