நீண்ட ஆலோசனைக்குப் பின் இருவரும் சேர்ந்து ஒரு முடிவு செய்தோம். ஆறுமாத காலத்திற்க்குள் நல்ல கம்பெனியில் நிறந்தர வேலையுடன் முரட்டு சிங்கத்தி்டம் மீண்டும் பெண்கேட்கவேண்ட்டும்- எனவும், அவர் மறுத்தால் அவரை மறுத்து திருமணம் செய்துகொள்ளலா என்ற கொள்கை முடிவு எடுக்கப்பட்டது. அன்றிலிருந்து ஜாப் ஸ்றீட், நாக்ரி எல்லாம் அலற ப்ரொபைல் அப்லோட் செய்து வேலை வேட்டை தொடங்கினேன். பேங்களூர், மும்பை எல்லாம் தாண்டி எனக்கு தகுந்த வேலை கணபதி டெக்ஸ்டூலில் கிடைத்தது. டிசைன் அண்டு அசெம்லியில் அஸிஸ்டெண்ட் மேனேஜராக பதவி. மாதம் இருபத்தி நாலயிரம் கையில் கிடைக்கும்.
ஒருவழியாக வாழ்க்கையின் குறிக்கோளை அடைந்துவிட்ட பெருமிதத்துடன் முரட்டு சிங்கத்திடம் மீண்டும் பெண்கேட்பு படலம். இந்த முறையும் அமெரிக்க மாப்பிள்ளையுடன் கம்பேர் செய்து ரிஜக்ட் செய்து விட்டார். எனக்கு ஏதாவது காளை அடக்கும் போட்டி கீட்டி வைத்து முடிவு செய்து கொள்ளலாமா என்றுகூட கேட்க தோன்றியது. ஆனால் மேலதிகமாக பேச அனுமதியில்லாமல் லாக் அவுட் செய்யப்பட்டேன்.
பின்னொரு நாளில் எனது பெற்றோர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் எங்கள் இருமணம் இணைந்தது. முரட்டு சிங்கம் விசயம் தெரிந்து போலீஸ், கீலீஸ் என்ற எல்லா வகையிலும் முயன்று கடைசியில் சிங்கத்திடம் தோற்று ஆட்டத்தை விட்டு வெளியேறி விட்டார். எல்லா சவால்களையும் வென்று விட்ட மமதையில் இருந்த எனக்கு விக்ரமாதித்தன் போல் இன்னொரு சவால் விட்டது சிங்கம். எப்படியாகினும் எங்களுக்கான சொந்த்தவீடு இன்னும் ஒரு ஐந்து ஆண்டில் கட்டி அதில் எங்களுக்கு பிறக்கப்போகும் குழந்தையை வளர்த்தெடுக்க வேண்டுமென்ற கட்டளை வைக்கப்பட்டது.
மேனேஜராக, ஏழாயிரம் சம்பள உயர்வுடன். ஒருவழியாக பேங்கில் லோ லோ வென்று அலைந்து லோன் வாங்கி காளப்பட்டியில் ஒரு அப்பார்ட்மெண்ட் புக் செய்தாகிவிட்டது. பத்து மாதங்களில் சொன்னபடியே கட்டிமுடித்து ஒப்படைத்து விட்டார்கள். வீட்டை கட்டிப்பார், கல்யாணம் பண்ணிப்பார் என்று சொல்லுவார்கள். அதன் பின் சொன்ன "தலையை வாரிப்பார்" என்ற வரியை வேண்டுமென்றே மறைத்து விட்டது சமூகம்.
அப்படி இப்படி என்று எப்படியோ இரண்டு வருடம் ஓடிவிட்டது. அவ்வபோது பெற்றோர், உற்றாரின் வற்ப்புறுத்தலின் பேரில் எல்லா குழந்தை வரம் தரும் கோவிலுக்கும் சென்று வந்தாகிவிட்டது. இந்த உலகத்திற்க்கு தெரியாமல் நாங்கள் இருவரும் வளர்த்த குழந்தைக்கு இன்று வயது நான்கு. அது எப்போதும் எங்களுடன் விளையாடிக்கொண்டும், கொஞ்சிக்கொண்டும் இருப்பது மற்றவர் கண்களுக்கு புலப்படுவதில்லை. அந்த குழந்தை கவிதையாக, கற்ப்பனையாக எங்களை விட்டு எப்போதும் பிரிந்ததில்லை.
எங்களுக்கும் கடவுள் மேல் கொண்ட நம்பிக்கை கூடிக்கொண்டே வந்தது. எப்படியாவது அப்படி ஒருவர் இருந்தால் பார்த்துவிட வேண்டுமென்று. எல்லா நம்பிக்கைகளும் நடைமுறையில் உண்மையாக இருக்கவேண்டிய அவசியமில்லை என்ற உண்மையை அந்த நம்பிக்கை புரிய வைத்தது. அந்த நம்பிக்கை அதிக நாள் நீடிக்கவில்லை.
சுவாதி அம்மாவகவும் நான் அப்பாவாகவும் அங்கீரிக்கப்பட எங்களுக்கு ஒரு குழந்தையை அந்த கடவுள் கடைசியில் கொடுத்து விட்டான். ஆம், இன்று அதை பூங்கோதை மகப்பேறு மருத்துவரும் உறுதி செய்துவிட்டார். ஆனந்தமும் பூரிப்பும் இனி எங்களை விட்டு பிரியாது. சொன்னால் நம்ப மாட்டீர்கள், அலுவலக நண்பர்கள், அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்களுக்கெல்லாம் சர்க்கரை மாத்திரை சாப்பிடுமளவுக்கு இனிப்பு கொடுத்தாகிவிட்டது.
மாதமொருமுறை செக்கப் செய்துகொள்ளுமாறு பணித்தார் பூங்கோதை. எங்களுக்கு ஒவ்வொருமுறையும் அல்ரா சானிக் செய்து குழந்தையின் வளர்ச்சியையும், அசைவுகளையும் பார்ப்பது மிகவும் ஆச்சர்யமாகவும் அலாதியாகவும் இருந்தது. ஒவ்வொரு நாளையும் காலண்டரில் அழித்து குழந்தையை நாங்கள் கையில் ஏந்தும் நாளை கொண்டாட காத்திருந்தோம்.
இந்த சமயத்தில் சிங்கக்கூட்டத்திற்க்கு செய்தி சென்று அவர்களும் வரப்போக சுவாதி சொல்லமுடியாத அளவுக்கு மகிழ்சியை கொண்டாடினாள். சொந்தங்கள் யாவும் குழந்தை வளர்ப்பையும், கர்ப்பினி கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு மற்றும் உணவுப்பழக்கங்களை சொல்லிக்கொடுத்தார்கள். ஏழுமாதத்தில் வளைகாப்பும் இன்னபிற சடங்குகளும் இனிதே நடந்து முடிந்தது. சுவாதியையும் குழந்தையையும் பிறிந்து என்னால் இருக்க முடியாது என்ற காரணத்தால் பிரசவத்தை எங்கள் வீட்டிலேயே கவனித்துக்கொள்கிறோம் என்று ஒருவழியாக சிங்கக்கூட்டத்திடமிருந்து அந்த உரிமையை பறித்துக்கொண்டேன்.
அன்று வலி்யை உணர்வதை சுவாதி சொன்னதும் மருத்துவமனைக்கு கொண்டு சேர்து வி்ட்டோம். மருத்துவர், இன்னும் ஓரிரு நாட்களில் குழந்தை பிறந்துவிடும் என்று சோதனைகள் முடிந்த பின் கூறினார். மருத்துவ மனையி்ல் ரூம் கொடுக்கப்பட்டு நானும் அம்மாவும் சுவாதியுடன் அங்கேயே தங்கி்க்கொண்டோம். அடுத்த நாள் வெள்ளிக்கிழமை காலை நான்கு மணிக்கு மீண்டு்ம் வயிற்றுவலி வர, மருத்துவர் வந்து பார்த்துவிட்டு ஆப்பரசேன் தியேட்டருக்கு அழைத்து செல்ல ஏற்ப்பாடுகள் செய்ய நர்சிடம் பணித்தார். இன்னும் கொஞ்ச நேரத்தில் குழந்தை பிறந்துவிடும் என்று சொல்லிச்சென்றார். அம்மா இதை கேட்டதும், குளித்துவிட்டு அருகிலுள்ள துர்கை அம்மன் கோவிலுக்கு சென்று வந்து விடுவதாக கூறி்ச் சென்றார். எனக்கு லேசன நடுக்கமும் பதட்டமும் பற்றிக்கொண்டது. தலைப்பிறசவம் மறு ஜென்மம் என்று சொல்வதன் அர்த்தம் அப்போதுதான் புரிந்தது. ஆப்பரேசன் தியேட்டருக்குள் கொண்டு செல்லப்பட்டபின் ஒவ்வொரு வினாடியையும் கடலில் புயலை கடக்கும் ஒரு கட்டுமரம் போலவே இருந்தது.
அம்மாவும் வந்து சேர்ந்துவிட்டார் துர்க்கையம்மன் கோவில் பிரசாதத்துடன். உள்ளே சென்ற நர்சிடம் அந்த திருநீரை கொடுத்து சுவாதியின் நெற்றியில் வைக்க கேட்டுக்கொண்டு, கந்தர் சஷ்டி படிக்க தொடங்கவிட்டார்.
எனக்கு குழந்தையை பார்க்கப்போகும் பரவசமும், பிரசவம்பற்றிய கவலையும் மாறி மாறி துளைத்துக்கொண்டிருந்தது. இந்த நேரத்தில் சொந்தங்கள் வந்து சேர்ந்திருந்தனர். டாக்டர் சிறிது நேரத்தில் வெளியேவந்து எனக்கொரு தேவதை பிறந்திருக்கிறாள் என்றும் தாயும் மகளும் நலமாயிருப்பதாகவும் மகிழ்சியை பரிசளித்துவிட்டு இனிப்பை எல்லோருக்கும் கொடுக்கச்சொல்லிவிட்டு சென்றார். நன்றியில் என் கண்ணீர் அவர் கரங்களை நனைத்தது.
குழந்தையை அம்மாதான் முதலில் தூக்கி உச்சி முகர்ந்தார். சுவாதி லேசான மயக்கத்தில் இருந்து என்னையே பார்த்துக்கொண்டிருந்தால். அவளின் கைகளை பிடித்து என்னைக் கரை சேர்த்த கடவுளுக்கு நன்றி சொல்லிக்கொண்டேன்.
நான்கு நாட்களில் வீட்டுக்கு அழைத்துச்செல்ல பணிக்கப்பட்டோம். குழந்தை வீட்டுக்கு வந்ததில் இருந்து எங்களுக்கு எப்போதும் ஒரு விழாவுக்கு தயாராகும் வீடுபோலவே இருந்த்தது.ஒரு நீண்ட கோடைக்குப்பின் வந்த வசந்தத்தில் பூத்த குறிஞ்சிப்பூ போலவே காவியா எங்களுக்கு இருந்தாள். காவியாவின் ஒவ்வொரு அசைவுகளும் எங்களுக்கு ஓராயிரம் கவிதை சொன்னது. அவள் வந்த பிறகு எங்களுக்கு எப்போதும் இல்லாத அளவுக்கு நேரப்பஞ்சம் ஏற்ப்பட்டது. அவளின் முதல் புன்னகை, முதல் சொல், முதல் தவழ்தல், முதல் நடை என்ற ஒவ்வொன்றையும் அதற்க்காகவே வாங்கிய கேம்கார்டரில் சேமித்துக்கொண்டோம்.
காவியா நடைபயிலும்போது கைகளுக்கு தட்டுப்படும் பொருட்கள் அதன் உருவத்தை மாற்றிக்கொண்டுவிடும். பூச்சாடிகள் கலைடாஸ்கோப்புக்குள் இருக்கும் கண்ணாடிகளைப்போல் வீட்டிலுள்ள வண்ணங்களை தரையெங்கும் பிரதிபலிக்கும். இட்டிலிக்கு அரைத்த மாவு அவள் கைபட்டாள், சுவரில் அழகிய பறவைகளாகவும், மேகத்துகளாகவும், பனிக்கரடிகளாகவும் மாறிக்கொள்ளும்.
என்னால் அந்த ஒவ்வொரு நோடியையும் கடக்க முடியாமல் தவித்தேன். தொண்டையில் வலியும் தாகமும் எடுத்து தண்ணீரை தேடினேன். டாக்டரே டம்லரில் தண்ணீரைக்கொடுத்து, "நதிங் டு வொர்ரி Mr. கதிரேஸ். ஆரம்ப நிலையிலுள்ள இந்த மாதிரியான பல கேஸ்கள் லேசர் தெரப்பி மூலம் பூரண குணமடைந்துள்ளது. நான் டாக்டர் அசோகன் அவர்களிடம் பேசிவிட்டேன். இரண்டு மூன்று வாரத்திற்க்குள் ப்ரொசீஜர் செய்துவிடலாம் என்று கூறியுள்ளார், கவலைப்படவேண்டியதில்லை" என்று கூறினார். என்னால் அவர் சொன்ன எதையுமே கிரகித்துக்கொள்ள முடியவில்லை.
"இன்னொருதடவை எதுக்கும் ஸ்கேன் ஏதும் எடுத்து பாத்து கன்பார்ம் பண்ணிக்கலாம்ங்களா?...பிள்ளை நல்லாத்தான் இருக்கு, அவளுக்கு எதுவும் பிரச்சினை இருக்காது மேடம்... " என்று நம்பிக்கையில்லாமல் வார்த்தை தடுமாறி கேட்டேன்.
அவர் என் வேதனை புரிந்தவராக, "நீங்கள் கவலை அடையுமளவுக்கு இதுவொன்றும் உயிரை பறிக்கின்ற பிரச்சினை இல்லை. எவ்வளவு சீக்கிரம் சிகிச்சை அளிக்கிறோமோ அவ்வளவு நல்லது. குழந்தையின் வளர்ச்சிக்கு பிற்க்காலத்தில் ஏதும் பாதிப்பு வராமல் இருக்க இந்த சிகிச்சையை விரைவில் செய்வது அவசியம்" என்றார்.
அவர் பேசுவது எதுவுமே என் காதில் விழவில்லை. எனக்கு கோபமெல்லாம் அந்த மருதமலை முருகன் மேல்தான். எவ்வளவு இரக்கமற்றவனாக இருந்தால் இந்த மழலைக்கு இப்படி ஒரு தண்டனையை கொடுத்திருப்பான். அந்த துர்க்கையம்மனுமா ஏமாற்றிவிட்டாள்?.
என்னதான் டாக்டர் சமாதானப்படுத்தினாலும் டீயுமர் என்பது ஆபத்தானது என்பது என்பதை என்னால் உதாசினப்படுத்த முடியவில்லை.
அம்மாவுக்கும் சுவாதிக்கும் இதை எப்படி சொல்வது?. அவர்கள் நொடிந்து போய் விடுவார்கள். இல்லை,..
அவர்களுக்கு இதை சொல்ல வேண்டாம். டாக்டரிடம், நான் என் குடும்பத்தார மெல்ல புரிய வைத்துக்கொள்கிறேன், நீங்கள் அவர்களிடம் எதுவும் சொல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொண்டேன். "ஆப்பரேசனுக்கான ஏற்ப்பாடுகளைச் செய்யுங்கள். தேவையானால் உங்களுக்கு தெரிந்த நல்ல டாக்டரை கூட்டிவாருங்கள். எங்களுக்கு காவியாதான் உலகம். அவளில்லாத ஒரு நிமிடத்தைக்கூட என்னால் நினைத்துப்பார்க்க முடியவில்லை" என தழுதழுத்தவாறே சொன்னேன்
ஒருவாறு என்னை சமாதானப்படுத்திக்கொண்டு டாக்டரிடம் பேசி முடித்துவிட்டு வெளியே வந்தேன். "எப்படி இந்த விசயத்தை அவர்களுக்கு தெரியாமல் சமாளிப்பது?" என்பதிலேயே என்னுடைய கவனம் இருந்தது. "எல்லாவற்றையும் அந்த அயோக்கியப்பயன் முருகனே பார்த்துக்கொள்ளட்டும். அவனைத்தவிர எனக்கு வேறு யாரயும் தெரியாது".
என்னால் வேறு எதிலும் கவனம் செலுத்த முடியாமல் வண்டியை யாருமற்ற ஒரு இடத்தில் நிறுத்தி அழுகையை அடக்கமுடியாமல் உடைந்து கொண்டிருந்தேன்." எதற்க்காக இதெல்லாம்? கடவுள் என்பவன் இவ்வளவு கொடியவனா? யாருக்கும் எந்த பாவமும் நினைக்காத எங்களுக்கு இவ்வளவு பெரிய தண்டனையா?"
வெய்யில் உறைக்க, மணிக்கட்டை பார்த்தேன், 1.23 PM. மெதுவாக கிளம்பி அலுவலகம் வந்து சேர்ந்தேன். வந்ததும் அஸிஸ்டென் வந்து, "உங்களுக்கு வீட்டிலிருந்து இரண்டு முறை போன் வந்தது" என்று சொன்னான். எப்படி சுவாதியிடம் டாக்டர் சொன்னதை மறைக்கப் போகிறேன்? என்றவாரே வீட்டிற்க்கு போன் செய்தேன்.
எதிர் பார்த்தது போலவே சுவாதி ஹாஸ்ப்பிட்டலில் என்ன சொன்னார்கள் என்று முதல் கேள்வி கேட்டாள். ஒருவழியாக சுதாரித்து, "நாம் நினைத்த மாதிரியே டாக்டரின் தம்பி மகனுக்கு MS படிக்க சில தகவல்களை என் நண்பர்களிடம் விசாரித்து தரும்படி கேட்டார். அப்படியே காவியாவுக்கு அவர்கள் பள்ளியில் அட்மிசனுக்கும் சொல்லி வைத்து விட்டேன். நிச்சயம் உதவி செய்வதாக கூறினார்" என்று சொன்னதும் சற்று அமைதியாகி, "எங்க போனிங்க, ரெண்டு தடைவை கால் பண்ணினேன். நீங்க இன்னும் வரலைன்னாங்க?" என்ற சாதாரண கேள்விக்கு எனக்கு பதிலேதும் சொல்ல தோன்றவில்லை.
"டாக்டரை பார்த்துட்டு வெளியே வரும்போது, பழைய பிரண்டு ஒருத்தனை வழியில் பார்து பேசிட்டு வர டைம் ஆயிருச்சு" என்று சமாளித்து விட்டு போனை வைத்தேன்.
எந்த விசயத்திலும் மனது செல்லாமல், இந்த நாள் ஏன் ஒரு கனவாக இருக்ககூடாது என்று சிறிது நேரம் கண்ணை மூடி பிறகு விழித்துப்பார்ப்பேன். கலைய மறுக்கிறது - இந்த கொடுங்கனவு. வீட்டிற்க்கே போக பிடிக்க வில்லை.. இருந்தாலும் முன்னெப்போதையும் விடவும் காவியாவுடன் அதிக நேரம் இருக்க தோன்றியது.
வீட்டிற்க்கு வந்து சேர்ந்த போது பக்கத்து வீட்டில் கிருஸ்துமசுக்காக லைட்டிங் செய்திருந்தார்கள். அதில் கிருஸ்துமஸ் தாதா குதிரை வண்டியில் வருவது போல அலங்கரித்திருந்தார்கள்.
சுவாதிக்கும் காவியாவிற்க்கும் அது ரொம்ப பிடித்துப்போக எங்கள் வீட்டிலும் லைட்டிங் மற்றும் கிருஸ்த்துமஸ் செடி வைக்க வேண்டுமென்றும் முடிவு செய்யப்பட்டது.
கவலைகளை கனவாக்கி மறக்க எனக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்து. கிருஸ்துமஸ் கதையை காவியாவுடன் அன்றிறவு பகிர்ந்து கொண்டோம். "ஏசுபிறந்த அந்த நாள் உலக மக்கள் அமைதியையும் சகிப்புத்தன்மையையும் பரிசாக பெற்ற நாள். நாம் நமக்கு என்ன வேண்டும் என்று ஒரு காகிதச்சீட்டில் எழுதி கிருஸ்துமஸ் செடியில் வைத்து விட்டால், கிருஸ்துமஸ் தாத்தாவகிய சாண்டா அதை பரிசாக கிருஸ்துமஸ் நாளன்று கொடுப்பார்..." என்றவாரு கதை சொல்லிக்கொண்டிருந்தே. கதையை கேட்டுக்கொண்டே மடிமீது தூங்கிவிட்டாள்.
காவியாவின் டியூமர் பற்றிய நினைவு அவ்வப்போது வந்து என்னை சிதைத்து கொண்டிருந்தது. அவ்வளவு பெரிய பாரத்தை என்னல் தொடர்ந்து தாங்கிக்கொள்ள முடியுமா என்ற கேள்வியில், என் மன வலிமை மீது எனக்கே சந்தேகத்தை ஏற்ப்படுத்திக்கொண்டிருந்தது. சுவாதியும் பிள்ளையைப்பற்றிய பெருங்கனவுடன் பல நிகழ்வுகளை எதிர்கொண்ட்டிருந்தாள். குழைந்தைக்கு குலதெய்வ கோயிலில் மொட்டையடிப்பதும், அங்கு சொந்தங்கள் சூழ துலாபாரம் கொடுப்பதும் என்று சொல்லிக்கொண்டே சென்றாள்.
எப்போது தூங்கினேன் என்றே தெரியவில்லை. காலையில் அம்மா காபிகொண்டு வந்து எழுப்பும்போதுதான் தூக்கம் களைந்தது, மணி 8ஐ கடந்திருந்தது. காவியாயும், சுவாதியும் வழக்கம்போல நேரமே எழுந்து செடிக்கு தண்ணீர் ஊற்றுவதும், நாய்க்குட்டிக்கு சோறுகொடுப்பதும் என்று அன்றைய காலையை கொண்டாடிக்கொண்டிருந்தார்கள்.
கிருஸ்துமஸ் செடியில் புதிதாக இரண்டு பூ பூத்திருப்பது போல் இருந்தது. பக்கத்தில் சென்று பார்த்தபோது, இரண்டு காகித சுருள்களும் அதில் சாண்டாவுக்கு சுவாதியும், காவியாவும் எழுதிய பரிசு விருப்பம் இருந்தது. ஒன்றில் "எப்போதும் சிரிக்கும் கதிரேசன்", இன்னோன்றில் "பெரிய பாப்பா பொம்மை" என்று எழுதி இருந்தது. என்னால் அந்த கணத்தில் கண்ணில் பெருக்கிட்ட நீரை தடுக்கமுடியவில்லை.
சாண்டா அவர்கள் கேட்பதை நிச்சயம் கொடுத்து விடுவார். நான் எழுதாமல் கேட்கும் என் காவியாவை எனக்கே திருப்பித்தரும் சாண்டாவை நான் தேடிக்கொண்டிருக்கிறேன்......