Tuesday, January 20, 2015

இதுவும் கடந்து போகும்


இந்த மனித மனம், ஒரு அற்புத சக்தி வாய்ந்தது. அது தனக்கு என்ன தேவையோ அதை சாதித்துக்கொள்கிறது. அதற்கு நல்லது கெட்டது எல்லாம் அதைப்பழக்கியவர் பழக்கத்தில் கற்றுக்கொள்கிறது. அது எப்போது வேண்டுமானாலும் ஒரு தவரை சரியென்று புரிந்து கொள்ளவும், தவறை சரி என்று புரிந்து கொள்ள முடியும். அதற்க்கு தேவை ஒன்றே ஒன்றுதான் - தனக்கு விருப்பமானது - அது எதுவானாலும்.


ஒரு நீண்ட நெடும் உல்லாசப் பயணம் பாதியிலேயே முடியப்போகிறதோ என்று இன்றைய இளையவர்கள் மத்தியில் ஒரு கலக்கம் கலந்த மன நிலை நிலவுகிறது. 90ளில் கல்விபயின்ற பெரும்பாலான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை பற்றிய அவ்வளவு பெரிய கவலை இருக்க வில்லை. கல்லூரி படிப்பு முடித்தவுடன் சென்னையிலோ, பெங்களூரிலோ ஏதாவது ஒரு கணிணி படிப்பை படித்து வேலை வாங்கிவிடலாம். எப்போதும் வேலை தேடும் நண்பர்களுக்கு அடைக்கலம் தரும் வேலையுள்ள நண்பர்கள் இருந்து கொண்டிருந்தார்கள். பொறியியல் பட்டம் அல்லது கணினி பயண்பாட்டில் நிபுணதுவம் படித்திருந்தால் எப்படியும் போராடி ஒரு வேலையை வாங்கிவிடலாம்.

நிற்க்க.. எழுபதுகளிலும் எண்பதுகளிலும் பட்டப்படிப்பு படித்த மாணவர்கள் என்ன ஆனார்கள்? அவர்களெல்லாம் வரப்போகும் ஒரு மாபெரும் சுனாமி அலையைப்பற்றி அறியாமல் கிடைத்த கிளர்க் வேலையிலும், எலக்ரிக் சூப்பர்வைசர் வெலையிலும், மார்க்கெட்டிங் மற்றும் ஆசிரியர், சுய தொழில் என்று ஏதாவது ஒன்றில் ஐக்கியமாகியிருந்தார்கள். அது ஒரு பழைய தலைமுறையாக பார்க்கப்பட்டது.

ஏழாயிரம் மாதச்சம்பளம் வாங்கியவர் நல்ல வேலையில் உள்ளார், அவருக்கு பெண் கொடுக்க மணமகள் வீட்டார் தயக்கமின்றி முன்வருவர். அந்த கால கட்டத்தில் எங்கள் ஊரின் அருகிலுள்ள சிறுமுகை விஸ்கோஸில் வேலை கிடைப்பதென்பது அரசு வேலையை விட அதிக மதிப்பானது. அதற்காகவே டிப்லமோ எலக்ரிகல், மெக்கனிக்கல், டெக்ஸ்டைல் என்று கடன் வாங்கிப்படித்தவர்கள் பல பேர். அங்கு வேலை கிடைக்க எம் எல் ஏ, எம் பி சிபாரிசெல்லாம் தேவைப்பட்டது. வேலைகிடைத்தவர் நண்பர்களாலும், உற்றார் உறவினரால் ஒரு சாதனையாளர் போல் பார்க்கவும் மதிக்கவும் பட்டார். அவருடை சம்பளம் மாதம் ஏழாயிரத்து ஐநூறு, ஆண்டுக்கொருமுறை போனஸ் பதினைந்தாயிரம். அந்த சாதனையாளர் அதிக பட்சம் தன் சாதனையை மற்றவர் பார்த்தவுடன் தெரிந்துகொள்ள ஒரு TVS-Suzuki two stroke பைக் வாங்கி ஊருக்குள் ஓட்டுவார். ஒரு சிலர் பருத்தி மில்லில் பர்மணெண்ட் வேலைக்காக மெனக்கெட்டனர். டிப்ளமோ படித்துவிட்டு மாதம் நாலாயிரத்திற்க்கு பத்து ஆண்டுகளுக்கு மேல் சூப்பர்வைசர்களாக வேலை செய்து வேலை நிரந்தரம் ஆனவர்கள் உண்டு. 

மேற்ச்சொன்ன மிகப்பெரும் ஆலைகள் இன்று இல்லை. அதனால் அதை நம்பி வேலைக்கு சேர்ந்த நண்பர்கள் கெட்டுப்போகவில்லை. வேறு ஆலைகளிலும் வேறு துறைகளிலும் பரிமளிக்கிறார்கள். காரணம் - தன்னுடைய சூழ்நிலைக்கொப்ப தன்னை மாற்றி அமைத்துக்கொள்ளும் மனது. எதுவெல்லாம் நிரந்தரமானது என்று அன்று நம்பினார்களோ அதுவெல்லாம் நிரந்தரம் இல்லை என்று ஆனபோது அதையும் நம்பினார்கள், அவர்களின் நிரந்தரத்திற்கான தேவை வேரொன்றை நிரந்தரம் என நம்பிக்கொண்டு முன்னேறுகிறார்கள்.

1956ல் J பாபா அவர்களின் தூண்டுதலால் J R D Tata வால் நிறுவப்பட்ட Tata Institute for Fundamental Research (TCIF) நிறுவனம் சுயமாக ஒரு வெற்று குழாய்களை கொண்ட கணினியை வடிவமைத்தது.  பின் 1963ல் அமெரிக்காவின் Control Data Corporation(CDC) நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட CDC-3600-160A என்ற டிரான்சிஸ்டரால் வடிவமைக்கப்பட்ட கணினியை 15 லட்சம் அமெரிக்க டாலார்களுக்கு அமெரிக்க நிதி உதவியுடன் வாங்கியது TCIF. இது முற்றிலும் இயற்பியல் மற்றும் அணு ஆராய்ச்சிக்கு பயன்படும் நோக்கில் வாங்கப்பட்டது. இதனிடையே ரஸ்யாவின் கணினியையும் இறக்குமதி செய்து உபயோகித்தும் பார்த்தனர்.

எழுபத்தி நான்கில் இந்தியா நடத்திய முதல் அணு சோதனையால் எந்தவித உயர் தொழில்நுட்பத்தையும் இந்தியாவுக்கு தர அமெரிக்கா தடை விதித்தது. இது இந்திய கணினி வரலாற்றில் ஒரு தேக்க நிலையை உருவாக்கியது. பின்னர் வந்த மொராஜி தேசாய் அரசால் 1978ல் பொதுப்பயன்பாட்டுக் கணினி கொள்கையை வெளியிட்டு, தனியார் நிறுவனங்கள் உள்நாட்டிலேயே இறக்குமதி செய்யப்பட்ட பாகங்களிக்கொண்டு கணினி செய்ய வழிவகுத்தது. அன்றய IBM உலகில் வழக்கொழிந்த கம்ப்யூட்டர்களை இந்தியாவில் விற்றுக்கொண்டிருந்தது. அரசின் சீர்திருத்தங்களால் இந்திய கூட்டாளியில்லாமல் தொழில் செய்யமுடியாது என்ற நிலையில் நாட்டைவிட்டு 1978ல் வெளியேறியது.

பின் 1991ல் ராஜீவ் காந்தி பிரதமர் ஆன காலத்தில் திவாலாகும் இந்தியாவுக்கு உலக வங்கி உதவியது. கைமாறாக தாராளமயத்தை பெற்றுக்கொண்டது. கணினித்துறையில் மிகப்பெரும் வளர்ச்சியேற்ப்பட்டது. பல்வேறு சீர்திருத்தங்கள் கொண்டுவந்து வெளினாடுகளில் இருந்து கணினி பாகங்களை இறக்குமதி செய்ய சட்டத்திருத்தங்கள் கொண்டுவந்தார். அது வரை உள்ளூர் தொழில் நுட்பத்திலேயே கணினி தொழில் நுட்பத்தை உருவாக்க முயன்றார்கள். பெரிய அளிவில் வெற்றி பெறவில்லையென்றாலும் அந்த முயற்ச்சிகள் மூலம் கற்றுக் கொண்ட பாடங்கள் ECIL(Electronics Corporation of India) மற்றும் BEL போன்ற இன்ன பிற தற்ச்சார்பு மின்னணு ஆலைகள் உருவாக்கப்பட்டன. ECIL தொழிச்சாலையில் செய்யப்பட்ட கம்ப்யூட்டர் சிப்கள் புழக்கத்தில் இருந்த காலம் அது. 

பிறகு கணினி மென்பொருள் இறக்குமதி மற்றும் கணினி மென்பொருள் உற்ப்பத்தி, ஏற்றுமதி என விரிந்து இன்று மிகப்பெரும் மென்பொருள் ஏற்றுமதி நாடாக இந்தியா இருக்கிறது. கணினித்துறையில் நிபுனத்துவத்திற்க்கு காரணம் பிரிட்டிஸ்காரர்கள் இந்தியாவை ஆண்டதால் இந்தியர்கள் எளிதாக ஆங்கிலத்தில் உரையாடி வாடிக்கையாளர்களை பெற்றுக்கொண்டார்கள் என்று சொல்பவர்களும் உண்டு. அது ஒரளவு உண்மை என்றாலும், பிரிட்டிஸ்காரர்கள் ஆண்ட எந்த நாடுமே இந்தியா போன்ற வளர்ச்சியை பெறவில்லை. 

இங்குள்ள இளைஞர்களுக்கு சாதிக்க வேண்டும் என்ற தூண்டலும் சமூக/குடும்ப கடமைகளுக்கு முக்கியத்துவமளித்து கடினமான கணிதம் மற்றும் கணினி கூறுகளை கற்று தங்களுக்கான இடத்தை பிடித்துக்கொண்டனர்.

2000க்கு பிறகு கணினித்துறையின் வளர்ச்சியை கணித்து ஆந்திராவும், தமிழகமும் அதிக பொறியியல் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கியது. முன்பு Electronics, Electrical பொறியியல் படித்தவர்கள் கணிப்பொறி பயிற்ச்சிக்குப்பிறகு மெயின்பிரேம்,  கோபோல் போன்ற கணினி நுட்பங்களை கற்று, வளர்ந்து வந்த TCS, Infosys, CMC, Wipro நிறுவனங்களில் வேலைகளில் அமர்ந்தனர். 2000 ல் உண்டான Y2K மற்றும் டாட்காம் வாய்ப்புகளை இந்த நிறுவனங்கள் அதிக அளவில் பயன்படுத்தி வணிக வாய்ப்புகளை வெளிநாடுகளில் பெற்று உள்ளூர் பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பை அளித்தனர். பிறகு ஏற்பட்ட உலக பொருளாதார மந்த நிலை மற்றும் அமெரிக்க இரட்டை கோபுர தகர்ப்பு மூலம் பாதிக்கப்பட்ட அமெரிக்கப்பொருளாதார வீழ்ச்சியின் விளைவாக இந்த நிறுவனங்கள் வணிக வாய்ப்பை இழந்தன. அவை ஆட்குறைப்பு செய்து தங்களுக்கு ஏற்ப்படும் நட்டத்தை தவிர்த்துக்கொண்டனர். அதே சமயம் இன்னொருபுறம் கால் செண்டர் எனப்படும் வாடிக்கையாளர் சேவை மையங்கள் என்ற வணிக முறை வேகமாக வளர்ந்து வந்தது. பொருளாதார சரிவில் இருந்த வெளிநாட்டு நிறுவனங்கள் ஆட்குறைப்பிலும், நிறுவனப்பணிகளை வெளிநாடுகளில் இருந்து குறைந்த கூலிக்கு செய்துகொடுக்கும் out sourcing என்ற வணிக வாய்ப்பை பயன்படுத்தி வளர்ச்சி அடைந்தன.

வளர்ந்து வரும் தொழில் நுட்பம், உலக பொருளாதாரம், அரசியல் என்ற பல்வேறு காரணிகளை கடந்து நிற்க்கும் இன்றை கணினித்துறை தற்ப்போது செய்யும் ஆட்குறைப்பு, எதிர்காலத்தில் நிகழப்போகும் பெரும் மாற்றங்களையும் புதிய வாய்ப்புகளையும் நோக்கி நகரும் போது ஒன்றுமில்லாமல் போகும். அதே சமையம் வேலை பாதுகாப்பில்லாத துறையாக இருக்கும் இன்றய நிலை மாறி, தொழிலாளர் நலன்கள் காக்கப்படும் சட்டங்களும் சூழ்நிலைகளும் உருவாக ஒரு திருப்பு முனையாக மாற இந்த நிகழ்வுகள் உதவும்.

கற்றுக்கொள்ளும் ஆர்வமும் தன்னம்பிக்கையும் கொண்ட இளைஞர்களை முன்னேறுவதிலிருந்து தடுக்க யாராலும் முடியாது. மிகப்பெரும் வாய்ப்புகளோடு காத்திருக்கும் எதிர்காலத்தில் இன்றய இளைஞர்கள் பயணிக்கும்போது, இதுவும் கடந்து போகும்.



Thursday, January 15, 2015

வாழ்வோம் வாழவைப்போம்

பள்ளி பருவத்தில் நண்பர்கள் பெரும்பாலும் விவசாயப் பின்புலத்திலிருந்த்துதான் வந்திருந்தார்கள். சிலர் நிலங்களை வைத்திருந்தார்கள், சிலர் கூலி வேலை செய்யும் குடும்பங்களிருந்து வந்திருந்த்தார்கள். ஆனால் அனைவரும் அன்பை பகிர்ந்து கொள்வதில் ஏற்றத்தாழ்வேதுமில்லை. தோட்டத்திலிருந்த்து கொய்யா, நெல்லி என்று ஏதாவது ஒன்றை நம்முடன் பகிர்ந்து கொள்ள அவர்களிடம் எப்போதும் ஏதோ இருந்து கொண்டே இருந்தது. அவர்களுடைய விளைபொருட்களை விற்க்க பெரு நகரங்கலில்லாவிட்டாலும் கிராமங்களைச்சுற்றியுள்ள ஒரு இருந்துகொண்டுதானிருந்த்தது.

நீண்ட நெடிய கடல் பயணம் போல் புயற்காற்று, ராட்சத அலைகள் தாண்டி எங்கெங்கோ கரையொதிங்கி திரும்பிப் பர்க்கையில் ஏறத்தாள நம் நண்பர்கள் அனைவரும் குடியானவன் என்ற பட்டத்தை துறந்திருக்கின்றனர். எல்லோருக்கும் தெரிந்த உலக மயமாக்கல் அள்ளிக்கொடுத்த நம் நண்பர்களை கோவையிலும், திருப்பூரிலும், சென்னையிலும், நியுயார்கிலும் கையேந்த வைத்துவிட்டது. படித்தவரும் படிக்காதவரும் இந்த உலச்சந்தையில் வேறல்ல. எல்லோருமே கூலிக்காரர்கள்தான். சிலர் கழுத்துப்பட்டையுடன், பலர் கழுத்தை நெறிக்கும் கடன் சுமையுடன். அவியல் பொறியியல் படித்து பலர் வெளிநாட்டில் நல்ல சம்பளத்துடனும், பலர் அந்த வாய்ப்புக்காக பெங்களூரிலும் சென்னையிலும் இராப்பகலாக வேலைசெய்து கொண்டிருக்கின்றனர். 

இன்னோருபக்கம் எப்படியாவது தன்னையும் தனது பிள்ளைகளையும் இந்த சமுதாயம் கைவிட்டுவிடும் என்ற பயத்தில் தோட்டங்காட்டை விற்று, பைன் பூச்சரிலும், ஈமூ கோழியிலும் முதலீடு செய்து, நாளைக்கு நாலுகாசு சேத்தி சனங்களோட சனங்களா இருக்கனும்னு ஆசைப்பட்டு உள்ளதையும் தொலைத்து கடங்காரனாகவும், திருடனைப்போலவும் ஒளிந்துகொண்டு வாழும் நிலலைக்கு நம் சொந்தங்கள் தள்ளப்பட்டுவிட்டார்கள்.



மறுபுறம் பிணத்திற்க்கு காத்திருக்கும் கழுகுகள் போல, ஊருக்குள் உலவிவரும் பெருந்தனக்காரர்கள் - நலிந்த விவசாயியிடம் ஆசைகாட்டி நிலத்தை வாங்கி பிளாட் போட்டு விற்று பசியாறிக்கொண்டிருக்கிறார்கள். மிகுந்த சிரமத்திற்க்கிடையே கொஞ்சம் நிலம் வாங்கி இயற்க்கை விவசாயம் செய்ய முயற்ச்சித்துக் கொண்டிருப்பவரிடம், தரகர் மூலம் வாங்கிய விலையை விட இருமடங்கு கொடுப்பதற்க்கு ஆள் இருப்பதாகவும், விற்று விட்டால் லாபம் என்றும் ஆசைகாட்டிக்கொண்டிருக்கிறார்கள். நிலம் விவசாயத்திற்க்கு வாங்கியது, அது விற்ப்பனைக்கல்ல என்றாலும் விடுவதில்லை. அவர்களால் கொடுக்க முடியாத தொகையை விலையாய்  சொல்லும்போதுதான் நம் பக்கம் வருவதில்லை. ஆனால் இந்த ஆசை வார்த்தைகள் நிச்சயம் குடியானவனை வீழ்த்திவிடும். 



எந்த விவசாய பின்புலமும் இல்லாமல் அய்யா நம்மாழ்வாரயும், பாலேக்கரையும் பசுமை விகடனில் படித்து இயற்க்கை விவசாயம் பற்றிய ஆர்வம் மிகுதியாகி. கடல் கடந்து சீமயில் கோடி கோடியாய் சம்பாதித்தாலும் அதிலில்லா இன்பம் சேற்று மண்ணில் கால் வைக்கும்போது இருக்கும் என்றும் நம்பும் இந்தத் தலைமுறையினர் அதிகம். சரி, ஏறக்குறைய எல்லோராலும் கைவிடப்பட்டு விட்ட இந்த விவசாயத்தை எப்படி மீட்டெடுத்து மீண்டும் நம் நண்பர்களை முதலாலிகளாகவும் தன்னிறைவடந்தவர்களாகவும் மாற்றலாம் என்ற எண்ணம் எப்போதுமே இருந்து கொண்டிருக்கிறது. இதைப்பற்றிய சில யோசனைகள்...

முதலில் விவசாயம் தொழில் முறைப்படுத்தப்படவேண்டும் என்பதில் நமக்கு அதிக தேவை உள்ளது. எப்படி மருத்துவம் சேவையிலிருந்து தொழில் முறைப்படுத்தப்பட்டதோ அந்த அளவில் இல்லாமல் விவசாயியை பாதிக்காத வகையில். 

எப்படி?

பொதுவாக விவசாயத்தில் உற்பத்தி செலவை கணக்கிடும்போது, பல காரணிகள் கணக்கிலெடுத்துக்கொள்ளப்படுவதில்லை.

மண் வளப்படுத்துதல், வரட்சிக்கால சேமிப்பு நிதி, தண்ணீர் மற்றும் மறைமுகச் செலவுகள் பெரும்பான்மையான நேரங்களில் கணக்கிடப்படுவதில்லை. விற்ப்பனை விலை என்பது இவற்றையெல்லாம் சேர்த்தே கணக்கிடப்பட வேண்ட்டும். அப்படியென்றால் விவசாய விளை பொருட்களின் விலை அதிகமாகுமே, எப்படி பொருட்களை விற்றுசேர்த்து காசாக்குவது?

சந்தயை புரிந்து கொள்வது உற்ப்பத்தியை லாபகரமாக்குவதற்க்கு மிகவும் உபயோகமாக இருக்கும். 

1.விவசாயப் பொருட்கள் தற்க்காலத்தில் இடைத்தரகர்கள் மூலம் வியாபாரியை சென்றடைந்து பின் அவர்கள் மூலம் மக்களுக்கு சென்றடைகிறது.
2. அரசின் கொள்முதல் நிலையங்கள் மூலம் விவசாயி மற்றும் தரகர்களிடமிருந்து உணவுப்பொருட்கள் பெறப்பட்டு மக்களுக்கு நேரடியாக சென்றடைகிறது.
3. விவசாயிகள் நேரடியாக(?) உழவர் சந்தையில் பொருட்களை மக்களிடம் கொண்டு செல்கிறார்கள்.

ஒவ்வொரு வழியிலும் சில நன்மைகளும் பல சிரமங்களும் இருக்கிறது. மேல் சொன்ன அனைத்து முறைகளிலும் விவசாயிக்கு பெரிய லாபத்தை கொடுக்க வில்லை என்பது தான் வரலறு. 

விவசாயிகளின் நண்பர்களான தரகர்களையும் வியாபரிகளையும் தவிர்க்காமல் விவசாயிகள் லாபம் அடைந்து, தொடர்ந்து விவசாயம் செய்து செழிப்பது இன்றியமையாததாகும். இந்த இலக்கை அடைய ஒவ்வொருவரின் பங்களிப்பும் மற்றும் கடமைகள் ஆராய்வுக்குட்பட்டு சீரமைக்கப்பட வேண்டும்.

இது ஒரு ஒருங்கினைந்த அமைப்பு ரீதியான மாற்றம் மற்றும் முன்னெடுப்புகள் மூலமாக நிறைவேற்றுவது தான் பயனைத்தறும். இங்கு நாம் ஏற்க்கனவே உள்ள அரசு மற்றும் அதன் அமைப்புகளை கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. அதற்க்கான மாற்றம் மிகப்பெரிய அரசியல் மற்றும் கொள்கை மாற்றங்கள் மூலமே சாத்தியம். அவை நீண்ட தொடர் முயச்சிக்குப்பின் நிகழக்கூடியவை. நிச்சயம் அந்த முயற்ச்சி தொடர்ந்து செய்யப்பட வேண்டும். ஆனால் அது நமக்கு உடனடி விழைவை தரப்போவதில்லை.

கூட்டுறவு சங்கங்கள் நிச்சயம் விவசாயிகளுக்கு கடந்த காலங்களிலும் தற்ப்போதும் பல்வேறு உதவிகள் செய்துவருகிறது. அந்த அமைப்பை எவ்வாறு நமது முயற்ச்சிக்கு பயன்படுத்திக்கொள்வதென்பது தனியாக ஆராயப்படவேண்டும்.

முதலில் தற்போதய விவசாய சிக்கலுக்கு முக்கிய காரணமாக சொல்லப்படுவது விலை நிர்ணய உரிமை. அது ஏன் விவசாயிகள் கயில் வரக்கூடாது என்பதற்க்கான அழுத்தமான காரணங்கள் தெரியவில்லை. சிறிய விவசாயிகளாக அரசு மற்றும் வியாபாரிகள் முன் பலமிழந்து நிற்க்கும் போது நிச்சயம் இது எதிர் பார்க்கப்படவேண்டிய ஒன்றே. இதை தவிற்க்க விவசாய உற்பத்தியாளர்களான விவசாயிகளுக்கு ஒரு அமைப்பு தேவைப்படுகிறது. அரசியல் சாராத அந்த அமைப்பு ஒரு சங்கிலிதொடர் வழங்களுகான கட்டமைப்புகளுடன் தரகர்களையும் மொத்த வியாபரிகளையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். இதுமுற்றிலும் விவசாயிகளையும் அவர்களின் பங்காளிகளான தரகர்களையும் மொத்த வியாபரிகளையும் உள்ளடக்கிய ஒரு சமுதாய நிறுவனமாக இருக்க வேண்டும். எப்படி பால் மற்றும் சிமெண்டு கம்பெனிகள் சந்த்தை நிலவரத்திற்க்கேற்ப்ப விலையய் நிர்னயித்துகொள்கிறதோ அது போல இந்த அமைப்பிற்க்கும் சுதந்திர அதிகாரம் படைத்திருக்க வேண்டும்.

இது மிகப்பெரிய முயற்ச்சிதான். ஆனால் சரியான திட்டமிடலுடன் அனைவரின் பங்களிப்புடன் இது சாத்தியமே. முதலில் ஒரு சிறிய மாதிரியுடன் செயல்படுத்தி இந்த முயற்ச்சியின் நடமுறைச்சிக்கல்களை தெரிந்து கொண்டு அதற்க்கான தீர்வுகளுடன் விரிவு படுத்தப்படவேண்டும்.
இந்த முயற்ச்சியில் நிச்சயம் பலருக்கு வேலைவாய்ப்பை உருவாக்க முடியும். பொறியியல் முதல் வணிகம் படித்தவர் வரை அனைவரையும் உள்ளிழுத்துக்கொள்ள முடியும்.

உற்ப்பத்தி, விற்ப்பனையோடு நிறுத்திக்கொள்ளாமல் மதிப்பு கூட்டுதல் மற்றும் ஏற்றுமதி வாய்புகளும் வளர்ச்சிக்கு ஏற்ப்ப பயன்படுத்திக்கொள்ள வேண்டும். 



சிறிய உதாரணம்

சிறுதானியம் மற்றும் பாரம்பரிய உணவுப்பயிர்களை உற்ப்பத்தி செய்வதுடன் அவற்றின் மூலம் செய்யப்படும் பாரம்பரிய உணவு வகைகளை பாரம்பரிய வழிமுறைகளில் செய்து அவற்றிற்க்கான சிறப்பு உணவகங்கள் மூலம் மக்களுக்கு எடுத்துச்செல்ல வேண்டும்.



காய்கறிகளை நுகர்வோர் வீட்டிற்க்கே சென்று நேரடி விற்ப்பனை செய்யாலாம். அதற்க்கு சந்தா போன்ற எளிமையான முறைகளை பயன் படுத்திக்கொள்ளலாம். மாதம் குறிப்பிட்ட தொகைக்கு தினமும் குறிப்பிட்ட காய்கறிகளில் குறிப்பிட்ட அளவு வினியொகிக்கலாம்.

ஒரு நகரத்தின் அருகாமையிலுள்ள கிராமங்கள் இதை எளிதாக செய்திட முடியும். 

முற்றிலும் இயற்க்கை சார்ந்த விவசாய உற்ப்பத்திமுறை மற்றும் உள்ளூர் விவசாயிகளின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் காரணிகளை முதன்மை நோக்கமாகக்கொண்டு இந்த இயக்கத்தை கட்டியெழுப்ப வேண்டும்.

சவால்கள்

நடமுறைச்சிக்கல்கள் எப்போதுமே ஒரு மாற்றத்தை கொண்டுவரும்போது கூடவே வரும் என்பது நிதர்சனம்.

முதலீடு மிகவும் பெரிய சவலாக இருக்கும். ஆனால் அதை கூட்டு பங்களிப்புடன் செய்து முடிக்க முடியும். 

அடுத்ததாக விவசாயிகளின் இயற்க்கை சார்ந்த அறிவை மேம்படுத்த அறிவியல் மற்றும் பாரம்பரிய முறைகளுடன் கூடிய ஒரு தகவல் பரிமாற்ற ஒழுங்கை ஏற்ப்படுத்தவேண்டும். அமைப்பின் அங்கத்தவருக்கு நவீன தொலை தொடர்பு கருவிகள் வழங்குவதுடன் இதை சாத்தியப்படுத்திக்கொள்ள முடியும். வானக ஒன்றுகூடல் போன்ற மாதாந்திர ஒன்றுகூடலுடன் இதை மேலும் வலுப்படுத்திக்கொள்ளவேண்டும்.

இயற்க்கை வேளான் விளைபொருட்களை ஆய்வு செய்து அவற்றிற்க்கு சான்றிதழ் வழங்குவதோடல்லாமல் அதற்க்கான சந்தையை தயார்படுத்த வேண்டும். இயற்க்கை வேளான்பொருட்கள் நிச்சயம் வேதி விளைபொருட்களைவிட சத்தும் தரமும் அதிகம் என்பதால் விலை சற்று அதிகமாக இருந்தாலும் மக்கள் விரும்பி வாங்குகிறார்கள். இயற்க்கை விலைபொருள் என்ற போலி முகவரியில் சந்தையில் வேதி விளைபொருட்கள் வருவதை தடுத்துக்கொள்ளவேண்டும்.

அமைப்பு ரீதியான, அரசியல் ரீதியான தலையீடுகள் கூட்டுறவு சங்கங்களை போலவோ அல்லது சர்வோதயா போன்ற ஒரு சமூக கட்டமைப்பை எளிதில் உடைத்துவிடக்கூடும். நாம் கட்டமைக்கும் இந்த அமைப்பின் சட்ட திட்டங்கள் அவைகளை கருத்தில்கொண்டு உருவாக்கப்படவேண்டும்.

இயற்க்கையின் மேல் நம்பிக்கையும் திட சங்கல்ப்பமும் கொண்டால் நிச்சயம் வெற்றிகொண்டு விவசாயமும் மருத்துவம், பொறியியல் போன்ற அல்லது அவைகளைவிட அதிக மதிப்பு மிக்க தொழில் என்பதை உலகம் உணர்ந்து கொள்ளச்செய்யலாம்.

ஏற்கப்படாத நட்பு

முகநூலில் நீண்ட நாளாய்
என் நட்பு அழைப்பை
கிடப்பில் வைத்துவிட்டான்
நெடுநாள் நண்பன்
என் மேல் அவனுக்கென்ன
அவ்வளவு கோபம் - அவன் முகநூலில்
இன்னும் கணக்கு வைத்திருப்பதால்
என்ன பயன்?
விசாரித்ததில் இன்னொரு நண்பன்
சொன்னான் - அவன் இந்த உலகில்
அவனுடைய கணக்கை முடித்து
மூன்று மாதமாகிவிட்டத்தென்று..
முகநூல் கணக்கு மட்டும் போதுமா
இந்த உலகில் (நட்பில்) இருப்பதை
உறுதிப்படுத்திக்கொள்ள?...
இனிமேல் அவன் என் நட்பின் 
அழைப்பை எப்போதுமே
ஏற்க்கப்போவதில்லை என்று தெரிந்தபோது
என் (மனதில்) நிலையில்
வெட்கமும் துயரமுமே எஞ்சியிருந்தது..

Wednesday, January 14, 2015

மக்கள் பள்ளி

ஒவ்வொரு குழந்தையும் அவரவர் இயல்பில் ஒரு பேராசானே. இருபது வருட கல்வியையும் அனுபவதையும் ஒரு கேள்வியில் ஒன்றுமில்லாமல் செய்து விடுகிறார்கள் இந்தக் குழந்தைகள். அவர்கள் தெளிந்த நன்னீர்போல அறிவுடனும் திறனுடனும் பிறக்கிறார்கள். நம்முடைய கல்விமுறையும் வாழ்க்கை முறையும் அவர்களை ஏதொ ஒரு வடிவத்திற்க்கு மாற்றுகிறது. அவர்களை அவர்களின் முழுத்திறனுடனும் அறிவுடனும் சிந்திக்க விடாமல் நாம் நமக்குத்தெரிந்த அல்லது நாம் சிறந்தது என்று நினைக்கும் ஏதோ ஒன்றை கல்வி என்ற பெயரில் திணிக்கின்றோம். அவ்வாறல்லாமல், அவர்களின் சிந்திக்கும் திறனுக்கும் அறிவின் தேவைக்கும் உணவளிப்பதே நமது தலையாய கடமையாக இருக்கமுடியும் என்று நம்புகிறேன். 

இந்திய- தமிழக கல்வி முறை குழந்த்தைகளை நடத்துகின்ற முறையில், ஒரு சிந்திக்கும் திறனற்ற குழந்தைகளை உருவாக்க முனைகிறது. நீங்கள் கற்றுக்கொடுக்கும் கல்வி முதலில் குழந்தைகளை ஒரு நல்ல மனிதனாகவும் குடிமகனாகவும் உருவாக்க வேண்டும். ஒழுக்கமில்லாத பொறியாளரும், நேர்மையில்லாத மருத்துவரும் இந்த சமுதாயத்திற்க்கு எதை கொடுக்கப்போகிறார்கள். பணம் கொடுத்து வாங்கும் கல்வி நல்ல மனிதரை உருவாக்குவதில்லை. சமூக ஏற்றத்தாழ்வை சரி செய்துகொள்ள கல்வி ஒரு வழியாக இருந்த காலம் போய் இப்போது கல்வியே சமூக ஏற்றத்தாழ்வை உருவாக்கும் காரணியாக உள்ளது. எல்லோருமே பொறியாளர்களாக மாறி வரும் இந்த கல்விச்சூழலில் யார் கலையையும் இலக்கியத்தையும் வரலாறையும் விவசாயத்தையும் இன்ன பிற தொழில்களையும் செய்யப்போகின்றனர். இன்றைய ஒரு பொறியியல் பயின்றவரால் ஒரு கொய்யா மரத்தைகூட ஒழுங்காக வளர்க்கத்தெரியாது. அவருக்கு தெரிந்ததெல்லாம் புத்தகத்தில் இருப்பதை மனப்படம் செய்து காகிதத்தில் எழுதுவது.

இந்த மாதிரி இயந்திரங்கள் தயாரிக்கும் கருவிகள்போல இளைஞர்கள் சமுதாயத்திற்க்கு உற்ப்பத்தி செய்யப்படுவதால் நீண்ட காலத்தில் யாருக்கும் பயனில்லை. 

அந்த வகையில் நான் வசித்துவரும் சிகாகோ பகுதியில் உள்ள நேப்பர் பாளையம்(நேப்பர்வில்) பள்ளிகளில் உள்ள பாட முறைகளைப்பற்றி கூறி அதில் நமக்கு என்னென்ன முறைகள் பயனுள்ளவையாக இருக்கிறதோ அவற்றை எடுத்துக்கொள்வோம். 

பொதுவாக வட அமெரிக்காவில் கல்விமுறை சீறாக அனைத்து பள்ளிகளிலும் ஒரே மாதிரியான பாடத்திட்டங்கள் குழந்தைகளின் வயதிற்க்கேற்ப்ப நீண்ட ஆராய்ச்சிக்குப்பின் வடிவமைக்கப்படுகின்றன. முக்க்கியமாக அனைத்துப்பள்ளிகளும்(அல்லது பெரும்பாலான) அரசு பள்ளிகளே. இங்கு யாரும் தனியார் பள்ளிகளை தேரிச்செல்லும் தேவையோ வாய்ப்போ இல்லை. பெரும்பாலும் பள்ளிகள் மாநில மற்றும் உராட்சி, பேரூராட்சி, நகராட்சிகளால் நிர்வகிப்படுகிறது. இங்குள்ள உள்ளூர் நிர்வாகங்கள் வீட்டு வரி, வாகன வரி, எரி பொருள் வரி மற்றும் சிகரட், மது பானம் போன்றவற்றில் நேரடி வரி விதிப்பை மேற்க்கொண்டு உள்ளூர் திட்டங்களை செயல்படுத்துகின்றன. பள்ளிகளை பொருத்தவரை மாநில நிதி ஆதாரம் பொதுவான பள்ளிச்செலவுகளான ஆசிரியர்களுக்கான சம்பளம், கணினி பாடங்கள் மற்றும் நிர்வாகச்செலவுகளுக்கு பெரும் பங்களிப்பு செய்கின்றன. மற்ற செலவுகளான விளையாட்டு, கூடுதல் திறன் வளர் திட்டங்கள் ( மேலதிக ஆங்கில புலமை, கணித அறிவு மேம்பாடு), நீச்சல், கால் பந்து மற்றும் இன்ன பிற விளையாட்டுகளும் அதற்க்கு தேவையான அரங்கங்களும் திடல்களும் உள்ளூர் நிர்வாகத்தால் முன்னெடுக்கப்படுகின்றன. எங்கள் பகுதி பள்ளி வட்டம் வட அமெரிக்காவில் முதன்மையானது. இங்கிருந்து மேல் நிலைபள்ளிப்படிப்பை முடிப்பவர்கள் நாட்டின் மிகச்சிறந்த பல்கலைகழகங்களில் அரசு ஊக்கத்தொகையுடன் படிக்க வாய்ப்பு பெருகின்றனர். காரணம் இந்த பள்ளிகளில் செயல்படுத்தப்படும் மிகு திறன் வளர்ப்பு கல்வித்திட்டம். அதனாலேயே இந்த பகுதியில் வாழும் செலவு மற்ற இடங்களை காட்டிலும் சற்று அதிகம், காரணம் முன் சொன்ன உள்ளூர் வரிகள்.

கல்வித்தரத்தை உயர்த்துவதில் இங்குள்ள பெற்றோர் ஆசிரியர் சங்கங்கள். அனைத்துப்பெற்றோர்களும் சங்கத்தில் உறுப்பினறாக இருக்க வலியுறுத்தப்படுகிறார்கள். கல்விக்கூடத்தின் முக்கிய முடிவுகள் பெற்றோர் சங்கங்களே எடுக்கின்றன. மாநில அரசின் நிதி ஒதுக்கீடுக்கு அதிகமாக தேவைப்படும் நிதியை "நிதி சேர் நிகழ்வுகள்" (Fund raising events) மூலம் உருவாக்கிக்கொள்கிறார்கள். இந்த நிகழ்வுகள் விளையாட்டு போட்டிகளில் தொடங்கி, மரத்தான் மற்றும் கலை நிகழ்ச்சிகள் மூலம் நிறைவேற்றப்படுகின்றன. ஒரு எடுத்துக்காட்டுக்காக, ஆங்கிலப் புலமைக்காக நடத்தப்படும் வகுப்புகளுக்கு தேவையான அதிகப்படியான ஆசிரியர்க்கு சம்பளம், அந்த பாடத்திட்டத்தை செயல் படுத்த உதவும் மென்பொருள்கள் மற்றும் மாணவர்கள் கணினி செயலி மூலம் வீட்டுப்பாடங்கள் செய்வதற்க்கு தேவையான இணையதள கட்டணசேவைக்கான கட்டணம் மற்றும் வகுப்பில் பயண்படுத்தப்படும் பாட புத்தகங்கள் மற்றும் இன்ன பிற பொருட்களுக்கு ஆகும் செலவை இந்த நிதியைக்கொண்டு ஈடுகட்டுகின்றனர். இதற்க்காக பெற்றோரிடம் தனியாக கட்டயமானன்கட்டணங்கள் ஏதும் வசூலிக்கப்படுவதில்லை. விருப்பமுள்ளவர்கள் பெற்றோர் ஆசிரியர் சங்கத்திற்க்கு நன்கொடை தந்து ரசீது பெற்றுக்கொள்ளலாம்.

இங்கு அதிக பட்சமாக 1 ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு படிக்கும் மாணவருக்கு கட்டணமாக 100 டாலர் முதல் 300 டாலர் வரை ஆண்டுக்கொருமுறை வசூலிக்கப்படுகிறது. இது பள்ளிக்கு குழந்தைகளை கூட்டிவந்து கொண்டுவிட ஆகும் பேருந்து கட்டணத்தையும் சேர்த்து.

வியப்பாக இருக்கிறதா?. ஆம்.. ஏகதிபத்தியம்.. முதலாளித்துவம் என்று நாம் என்னவெல்லாம் சொன்னாலும் இந்த மாதிரியான விசயங்களில் அவர்கள் கம்யூனிஸ்டுகளாகவே இருக்கிறார்கள். ஆனால் நாம் சோசலிசத்தையும் முதலாலித்துவத்தையும் குழப்பி அரசியல்வாதிகளுக்கும் பெருந்தனக்காரர்களுக்கு நம் வாழ்நாளின் பெரும்பகுதியின் உழைப்பைக்கொண்டு சேர்த்தன்செல்வத்தை கொடுத்து அந்த உழைப்புக்காக நாம் செலவிட்ட நேரமெல்லாம் நாம் அவர்களுக்கு மறைமுகமாக அடிமையாய் இருக்றோம். ஆம்.. அடிமையாக. கையில் விலங்குடன் கடும் வேலையை குறைந்த கூலியுடன் செய்பவர் மட்டும் அடிமையல்ல. நல்ல கூலியுடன் எந்த விலங்குகளும் இல்லாமலெட்டுமணினேர உழைப்பைக்கொண்டு ஈட்டும் பணத்தை நீங்கள் விரும்பாவிட்டலும் உங்களிடமிருந்து கல்விக்கட்டணமாக பறித்துக்கொண்டாலும் அது நீங்கள் அவர்களுக்கு அடிமையாய் உழைத்துக்கொண்டிருக்கிறீர்கள் என்றே அர்த்தம். இன்னும் ஒரு படி மேலே போய், உன் குழந்தைகளுக்கு நல்ல கல்வி வேண்டுமானால் நீங்காள் இத்தனை லட்சம் கொண்டுவந்து கட்டணமாக கட்டவேண்டும். அதற்க்காக நீங்கள் எவ்வளவு நேரம் உழைகிறீர்கள் எவ்வளவு ஈட்டுகிறீர்கள் என்றெல்லாம் கவலையில்லை என்று உங்களையும் உங்கள் உழைப்பையும் சுரண்டி அடிமையாக மாற்றிக்கொண்டுவிடுகிறார்.

சரி.. இந்த நம் நாட்டில் இருக்கும் தனியார் கல்விமுறையிலும் கட்டணக்கொள்ளையிலிருந்து நாம் விடுபட முடியாதா என்று கேட்கிறீர்கள். நிச்சயம் முடியும். அதற்க்கு நாம் முன்னெப்போதும் இல்லாத அதிக பொருப்புகளை ஏற்க்க தயாராகவேண்டும். நமது அரசு ஏற்க்கனவே பல நல்ல திட்டங்களுடன் பள்ளி கட்டடங்கள் வகுப்பறைகள் நமது வரிப்பணத்தில் கட்டிகொடுத்துள்ளது. ஒரு அரசாங்கம் அதன் தகுதிக்கு என்ன செய்யமுடியுமோ அதை செய்து கொண்டுதான் இருக்கிறது.

நாம் இப்போது இருக்கும் பெற்றோர் சங்கங்களை வலுப்படுத்தவேண்டும். அதற்க்கான சட்டங்கள் இன்னும் சிறப்பானதாகவே உள்ளது. நமது பங்களிப்புதான் சுத்தமாக இல்லாமல் இருக்கிறது. அதனால் நாமாக முன்வத்து பெற்றோர் ஆசிரியர் சங்கத்தை வலுப்படுத்தி கல்விற்றத்தை உயர்த்திக்கொள்ளவேண்டும்.

நீங்கள் தனியார் பள்ளிக்கு கொண்டு கொடுக்கும் லட்சங்களால் அந்த பள்ளி முதலாளிக்கு மட்டுமே பயன். அதற்க்கு பதிலாக ஒரு சில ஆயிரங்களையோ சில நூறுகளையோ பெற்றோர் ஆசிரியர் சங்கத்துக்கு நன்கொடையாக கொடுத்து நீங்களே பல கல்வித்திட்டங்களை நிபுனரின் ஆலோனையுடன் உங்கள் குழந்தை படிக்கும் பள்ளியில் செயல் படுத்தலாம். பள்ளி முதல்கர் மற்றும் கல்வி அலுவலருடன் கலந்தாலோசித்து தேவையான உபகரணங்கள், மேலதிக பாடத்திட்டங்கள் சுகாதாரத்தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளலாம். எல்லோரும் இங்கு வளம் படைத்தவரில்லை. இருப்பவர் தன்னிடம் இருப்பதை இல்லாதவரிடம் பகிர்ந்து கொள்வதுதான் இதன் சிறப்பு. ஒரு பெரு முதலாளியை வாழவைப்பதை விட நாலு ஏழைக்குழந்தைகளுக்கு கல்வியைக்கொடுப்பது நமது கடமையாகக் கொள்ளலாம்.

அடுத்தது ஆசிரியர் திறன் மேம்பாடு. எப்படியெடுத்துகொண்டாலும் தனியார் பள்ளி ஆசிரியர்களைவிட அரசு பள்ளி ஆசிரியர்கள் கல்வியிலும் திறனலும் முன்னனியிலேயே இருக்கின்றனர். ஆனால் அவர்களின்
திறனை பயன்படுத்திக்கொள்வதில்தான் சிக்கல உள்ளது. அரசின் கல்வித்திட்டத்துடனுனேயே அவர்களின் திறன் சார்ந்து கற்ப்பித்தலின்  உன்னதம் உயர்த்த அவர்களுக்கு பயிற்ச்சி மற்றும் சிறந்த சாதனங்கள் வழங்கி ஊக்கப்படுத்துதல்ஓரளவு பயன்படும். மாண்டிசாரி கல்விமுறை போன்ற உலகின் சிறந்த கல்விமுறைகளின் மகத்துவம் மற்றும்
அவை மாணவர்களிடம் ஏற்ப்படுத்தும் தாக்கம் ஆகியற்றை அவர்களிடம் கொண்டு சேர்க்கவேண்டும். இவை எல்லாவற்றையும் விட அவர்களை அவர்களின் பங்களிப்பையும், சேவையையும் கவுரவிக்கவேண்டும், ஊதியம், பதவி உயர்வைவிட அரசு ஆசிரியர்கள் அதிகம் எதிர்பார்ப்பது அவர்களின்
அளப்பரிய சேவையை மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ளுதலிலும், அதற்க்கான அங்கீ்காரத்தையுமே.

அடுத்து கல்விமுறையில் சில சில மாற்றங்கள். மதிப்பெண்களுக்கு மனப்பாடத்திற்க்கும் முக்கியத்துவம் கொடுக்கும் போக்கை மாற்றி மாணவர்கள் அவர்களி்ன் அறிவை சமுதாயத்தின் பல்வேறு சூழலி்ல்
எவ்வாறு பயன்படுத்துவது என்பது போன்றது. இங்கு நாம் இஞ்சினீயரையோ டாக்டரையோ உருவாக்குவதற்க்குப்பதில், சிந்திக்கும் திறன் மி்குந்த நல்ல மனிதர்களை, குடிமகனை உருவாக்குவது முதன்மை நோக்கமானது.

நமது இப்போதைய கல்வி முறையில் கற்ப்பவர்கள் எத்தனைபேர் கல்லூரி படிப்பை முடித்ததும் சொந்தமாக தொழில் தொடங்கவும், ஒரு மக்கள் பயன்பாட்டு கண்டுபிடிப்பை செய்கிறார்கள்  என்று சிந்திதீர்களனால் நமது ஏட்டுக்கல்வி செல்லவேண்டிய தூரம் தெரியும். இங்கு கல்வியை விட அந்த கல்வியை அடைடும் முறைதான் வியப்பானது. ஒரு தந்தை தன் மகனோ மகளோ மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ நல்ல சம்பளத்துடன் வேலைகிடைக்க வேண்டுமென்று விரும்புகிறார். அதனை எப்படி பெற்றுத்தருவது என்று சிந்திக்கையில் சமூகம் அவருக்கு பல எஞ்சினீர்களையும் டாக்டர்களையும்
எடுத்துக்காட்டுகிறது. அதற்க்காக தன் மகனை எஞ்சினரீங் படிக்க நல்ல கல்லூரி, அதற்க்கான அதிக கட்டணத்தை கடனாகவோ அல்லது தன்னுடைய சேமிப்பிலிருந்தோ எடுத்து கட்டுகிறார். அவர் நினைத்தது போல் மகன் கல்லூரிப்படிப்பை முடித்து நல்ல வேலை கிடைத்ததும் அவர் கடமை முடிந்தது என்று நினைத்து விடுகிறார்.

ஆனால் பிரச்சினை அப்பொழுதுதான்  தொடங்குகிறது. அவர் உருவாக்கிய இஞ்சினியர் இயந்திரம் வேலை செய்து மாதச்சம்பளம் ஈட்டுகிறது, குடும்பம் நடத்துகிறது. மகிழ்ச்சியாக இருக்கிறதா என்று கேட்டீர்களானால், பதில் தெரியாது. கடவுள் மனிதனை ஈட்டுவதற்க்கும், உண்ணுவதற்க்கும், உறங்குவதற்க்கும் மட்டும் படைக்கவில்லை. இயற்க்கையை அறிந்துகொண்டு அதனூடேயே தன் வாழ்க்கையை அமைத்துக்கொண்டு அடுத்த பரினாம நிலையை அடைந்து தன் சந்ததியை திழைக்க வைக்கவேண்டும் என்று விரும்புகிறான். வரலாற்றை புரட்டினீர்களானால், அடிமைகள் எந்தப்பக்கத்திலும் எழுதப்பட்டிருக்கமாட்டார்கள். மாறாக மாற்றத்தையும், சாதனைகள் நிகழ்த்தியவர்கள் மட்டுமே குறிப்பிடப்பட்டிருப்பார்கள். அவர்கள்
உலகி்ன் ஒரு பகுதியில் மட்டு்ம் இருப்பதாக நாம் தான் நினைத்துக்கொண்டு, மற்ற அனைவரையும் சேவகர்களாக உருவாக்கிவிடுகிறோம்.

உங்கள் பிள்ளைகள் சாதனையாளர்களாக வேண்டுமா அல்லது சாதனையாளர்களுக்கு சேவகர்களாகவேண்டுமா என்று தீர்மானிப்பது
உங்கள் கையில் தான் உள்ளது.

Sunday, January 4, 2015

என்ன மாதிரியான டிசைன்?

பத்தாயிரம் மாணவர்களில் 100 அல்லது இருநூறு பேரை பல கட்ட தேர்வுகளுக்குப்பின் கேம்பஸ் மற்றும் ஆப் கேம்பஸ் மூலம் தேர்ந்தெடுக்கிறார்கள். தேர்ந்தெடுத்தவரெல்லாம் திறமைசாளிகள் என்று நிர்வாகம் நம்புகிறது. கேம்பஸ் தேர்வுக்கு முதல் தகுதி  - சீராக உயர்ந்து செல்லும் மதிப்பெண். அதாவது முதல் தேர்வில் பெற்ற மதிப்பெண்ணைவிட அடுத்த தேர்வில் மதிப்பெண் அதிகம் பெற்றிருக்கவேண்டும். இது அந்த மாணவரின் எதிர்கால திறன் வளர்ச்சிக்கான ஒரு காரணமாக நிறுவனங்கள் பார்க்கின்றன.

இந்த முப்பதாயிரம் பேருக்கு நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்த பின் திறமை குறந்து விட்டது எனில், அது அந்த நிறுவனத்தின் குறையாகத்தான் தெரிகிறது. நியாப்படி பார்த்தால் இது நிறுவனத்தின் குறைதான். 

இத்தனைக்கும் இன்றைய ரூபாய் மதிப்பு சரிவினால் அதிகம் லாபம் அடைந்தவை இந்த நிறுவனங்கள்தான். எந்தவித அதிக விற்ப்பனையில்லாமல் வெறும் கரன்சி கன்வர்சன் மூலமே 10 முதல் 15 சதவீத லாபத்தை இந்த காலாண்டில் பெற்றுவிட்டார்கள்.
அதே போல இந்த ஆட்குறைப்பு வழக்கமான ஒன்று என்று சொல்லும் நிறுவனம், முன்பு இதுபோல் நடந்தபோது இவ்வளவு எதிர்ப்பு கிளம்பியதாக எங்காவது சுட்டிக்காட்டியதாக தெரியவில்லை.

அரசங்கத்திடம் இத்தனைபேருக்கு வேலைவாய்ப்பை வழங்குகிறோம் என்று வாக்குறுதிகூறி வரி, மின் கட்டணம், ஏற்றுமதி சலுகை இன்னும் எத்தனையோ பெற்று பின் தவறான வியாபார உத்திகளால் பாதிக்கப்படும்போது முதலில் கை வைக்கப்படுவது ஊழியரின் மேல்தான். காரணம் இங்கு ஊழியர்கள்தான் சந்தைப்பொருள்(commodity).

பிரச்சினை ஒரே நேரத்தில் இத்தனை பேரை வெளியேற்றும்போது சந்தை அவர்களை ஏற்றுகொள்ளும் அளவு வளரவில்லை என்றால் இந்த முப்பதாயிரம்பேரையும் அவர்களின் குடும்பத்தையும் ஒரு நிறுவனத்தை நம்பி இவ்வளவுகாலம் வாழ்ந்த அந்த மனிதர்களுக்கு துரோகம் இழைத்துவிட்டதாகவே அர்த்தம். இதன் விழைவுகள் எதிர்மறையாக இருக்கும் பட்சத்தில் இது ஒட்டுமொத்த சமூகத்தையும் பாதிக்கக் கூடும்.

02-01-2015 TCS Layoff எதிர்வினை

திவாளி

அம்மா செய்யும் கை முறுக்கு
அப்பா ஆசையாய் 
வாங்கி வரும் புத்தாடை

தாத்தா பாட்டி தரும் 
நோம்பி காசு
அக்காவை சீண்டும் 
கம்பி மத்தாப்பு

பட்டுதாவணியில் பவனிவரும் 
(எங்க ஊரு) தேவதைகள்
அவர்கள் தரிசனம் தேடி 

என்னையும் சுமந்து சைக்கிள் 
மிதிக்கும் நண்பன்

இவை எல்லாம் 
இருக்கும் பேரரசு
இல்லாமல் இருக்கும் சிற்றரசன் 
கொண்டாடும் திவாளி!
ஹேப்பி திவாளி! ஹேப்பி திவாளி!


12-10-2013

உணவு அரசியல்

ஊரிலிருந்து அம்மா கொடுத்தனுப்பிய மிளகாய் பொடியின் காரம் கடையில் வாங்கிய மிளகாய் பொடியை பலமடங்கு மிஞ்சியது.. மிளகாயும் கூட நாட்டு மிளகாய் போல காரமில்லை... இன்றய அறிவியல்(?) கண்டுபிடிப்பை பயன்படுத்தி விதை நறுவனங்கள் கண்டுபிடித்த புதிய ரகங்கள் அதிக அளவில் பயன்படுத்தினால் தான் நமது தேவையயை பூர்த்தி செய்கின்றன(அதிக காரம் = அதிக மிளகாய்). நாட்டுரக விதைகளை அழித்து விட்டு நிவீன ரக விதைகளை விற்க்கும் வியாபர தந்திரம் நமக்கு ஏனோ இன்னும் புரியவில்லை.... ஆயுதங்களை வைத்து போர் அரசியல் செய்தது சென்ற யுகம்.. உணவை வைத்து போர் செய்வது இன்றய அரசியல்...(இந்தியாவில் விதை விற்க்கும் நிறுவனங்களின் பின்னணி தெரிந்தால்.. இந்த அரசியலும் புரியும்).

ஆட்கொல்லி

ஆட்கொள்ள முடியாத 
கால நீட்சியில் 
நான் கரைந்துபோகும் முன்

ஆட்கொல்லி 
அதை சொல்லிவிட
வேண்டுமென நங்கை 
வரும் வீதி வலம் வந்தேன்

நாட்கள் கொன்றதல்லாமல் 
வேல் விழியில் 
வீரச்சாவெதுவும் நான் 
கொண்டதில்லை ....

அதிசயமாக இன்று 
ஆற்றுவெள்ளம் நிறுத்தி 
ஆகாயம் முழுதும் 
நனைத்த அந்தி மழையாய் 
ஒரு புன்னகை செய்தாள்..
.
.
.
.
.
.
.
அப்பா... அப்பா.. நீச்சல் 

குளம் போகலாம் எந்திரிங்க... 
என மகள்..
மீண்டும் நனையபோகிறேன்..



-23-06-2013

நினைவே சுகந்தம்

கோள்களை பற்றி நிமலன் தெரிந்து கொண்டிருக்கையில் ஆதவன் உதயம் பற்றிய விளக்கத்தை நேரில் தெரிந்து கொள்ள இரவில் சன்னலோரம் அமர்ந்துகொண்டு, தான் ஆதவன் வரும் வரை விழித்திருப்பேன் என்று அமர்ந்து கொண்டான். அது அவன் மரபு என்று தெரிந்து தொந்தரவு செய்யாமல் விட்டு விட்டேன். அப்படியே உறங்கிப்போனான். காலை அவனை எழுப்பி ஆதவன் எழுவதை காண்பித்தபடியே புலரும் பொழுதை அனுபவித்து கொண்டிருந்தேன்... புலரும் பொழுது... புலரும் பொழுது.... 98களில் ஆரம்பகால மின்னணுவியல் பொறியாளனாக கோவைக்கு தினமும் புள்ளி-புள்ளி (Point-Point)ல் காலையில் பயணம் செல்லும் காலங்கள் மனதை நிறைத்தது... 
கோவை வானொலியின் புலரும் பொழுது, இரயில்களின் போக்குவரத்து விவரம் வாசிப்பு, வேளாண் செய்திகள், வேலை வாய்ப்புகள் என வானொலி யின் நிகழ்சிகள் இன்றும் காதில் ஒலித்த வண்ணம் உள்ளது..ராம் நகரில் உள்ள அலுவலகத்துக்கு(?) சென்று வருகையில் நண்பர்கள் என்னை ஒரு கிராமத்தான்(அவர்கள் கொயம்புதுர்க்கரர்களாம் ) என்று வகைபடுத்தி ஆரம்பகலங்களில் பழகிய விதம் இன்னும் சுவாரசியமானது.
பசூர் குளம் நிரம்பியிருக்கிறதா என்று வாரமொருமுறை விசாரிக்கும் நண்பரின் ஆவல் அவர் மாமனாரின் தோட்டம் குளத்தையொட்டி இருப்பதுவும் அதை கடந்து தினமும் நான் வருவதும்தானயிருந்திருக்க வேண்டும்.
அப்சரா திரையரங்கு மற்றும் லச்சுமி வணிக வளாகம், இளசுகளின் காலச்செலவு மையங்ககளாக திகழ்ந்தன. KMK, RKM, சிவரஞ்சனி, 70, 5, 7 பேருந்துகள் மட்டுமல்ல அவை நினைவு தாங்கிகள் கூடத்தான்.
பின் மருதமலை அடிவாரத்தில் மையங்கோண்டபிறகு திருவள்ளுவர் நகரும், வடவள்ளியும் உரைவிடங்களாயின. பின்னாளில் அங்குதான் வாழ்க்கையை களிக்க வேண்டும் என்ற கனவு காலச்சக்கரத்தாலும், நேருடமை (Real Estate) வளர்ச்சியாலும் அது இன்னும் கனவாகவே இருக்கிறது.. நினைவுகளை திரும்பிப்பார்க்கையில் தொலைந்து போன நட்புகளை முகநூலும், உட்சங்கிளியும் (LinkedIn) கண்டுபிடித்து கொடுத்துவிட்டது. அந்த நாட்களை மட்டும் காலம் எடுத்து கொண்டுவிட்டது..
கரங்கோர்ப்பு (scrum) கூட்ட நினைவூட்டி சிணுங்க, பனிக்கட்டிகளை வெட்டியெடுத்து வண்டியை வெளியே எடுத்தாகவேண்டும்.. கோயம்புத்தூரிலிருந்து சிகாகோவிற்கு ஒரு நிமிடத்தில் வந்துவிட்டேன் மனதை மட்டும் அங்கேயே விட்டுவிட்டு…

09-01-2014

நான் ஏன் ஆம் ஆத்மியை ஆதரிக்கிறேன்

உங்கள் குழந்தைகள் எந்த மாதிரி சமூகதில் வாழவேண்டும் என்பதை நீங்கள் தான் தீர்மானிக்கிறீர்கள். ஆரோகியமான, நேர்மையான, ஆக்கபூர்வ சிந்தனை கொண்ட சமூகதில் வாழ நீங்கள் தான் அந்த சமுகதிற்க்கான மாற்றத்தை கொண்டு வர வேண்டும். பிறசவதிலுதுந்து, பள்ளியில் சேர்க்கையிலிருந்து தொடங்குகிறது இந்த சமூகதின் அவலம். நம்மை போலவே நமது குழந்தைகளும் இந்த ஊழல் சமுதாயத்தில் சிக்கி தவிக்காமல் தவிர்த்திட நாம் மாற்றத்தை நிச்சயம் கொண்டு வரவேண்டும். சரி எப்படி ஆரம்பிப்பது...எங்கு ஆரம்பிப்பது.. இந்த கேள்விகள் எழுந்தால் நிச்சயம் நாம் அடுத்த கட்டத்திற்கு தயாராகி விட்டோம்.
இந்த தேசத்திலுள்ள எல்லா மக்களையும் பாதிக்கும் ஒரு பிரச்சினை எதுவாக இருக்கும் என்று தேடினால் அது மோசமான நிர்வாகத்தால் வந்த ஊழல் தான். உங்களுக்கு பழகிய சின்னம் தெரிந்த வேட்பாளர் என்பதெல்லாம் தாண்டி உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை கணக்கில் கொண்டு மாற்றத்தை வரவேற்க தயாராகுங்கள்.
நேர்மையில்லாத வளர்ச்சி, மனிதாபிமானமில்லா அரசை நமது தேர்வாக வைத்தால் மாற்றம் வருவதற்கான காலம் சற்று தள்ளிபோகுமே தவிற, அதை யாராலும் தடுத்து விட முடியாது..நமது பிள்ளைகளுக்கு கிடைக்க வேண்டும் என்ற ஆசை நமது பெற பிள்ளைகளுக்கு கிடைக்கும்.. ஏனென்றால் மாற்றம் ஒன்றே மாறாதது..நீங்கள் விரும்பாவிட்டாலும்..

Friday, January 2, 2015

எங்கள் பென்னிகுக் - பெருந்தகை பு ஆ சாமிநாதன்

ஒரு சமூகத்தின் வளர்ச்சியை அதில் அங்கமாக இருக்கின்ற மக்களின் கல்வி, பொருளாதாரம் மற்றும் பண்பாட்டு வளர்ச்சியைக் கொண்டு அளவிடலாம். இதில் ஒவ்வொரு காரணியும் மற்றொன்றை சார்ந்திருக்கிறது. எங்கெல்லாம் கல்வியில்லையோ அங்கு பொருளாதாரமும் பண்பாடும் குலைந்து விடும். இங்கு கல்வி என்பது நல் ஒழுக்கத்தை கற்றுத்தரும் கல்வியை குறிக்கிறது. அதேபோல ஒரு சமூகம் பொருளாதரமில்லால் வருமையிலிருக்கும்போது கல்வி மற்றும் பண்பாட்டு வளர்ச்சி குறைந்து விடுகிறது. அது நாளடைவில் எதிர்மறை விழைவுகளைக்கொடுக்கிறது. எங்கெல்லாம் வறுமை தலைவிரித்தாடுகிறதோ அங்கெல்லாம் ஒழுக்கச்சீர்கேடு தலை தூக்குகிறது. பெரும்பாலான கொலை கொள்ளைகளுக்கு முக்கிய காரணம் சமூக ஏற்றத்தாழ்வும், வருமையும் தான். இல்லாமல் வாழமுடியாதவன் இருப்பவரிடம் பறித்து வாழ முயற்சிக்கிறான். அது போலவே ஒவ்வொரு ஒழுங்கீனத்தின் பிறப்பும் அந்த சமூகத்தின் முக்கிய காரணியான கல்வி, பொருளாதாரத்தை அடிப்படையாகக்கொண்டது.

நாம்   இப்போது நன்றியோடு நினைவுகூறும் பென்னிகுக்கிற்க்கு நம் சமூகத்தின்மீது கொண்ட அக்கறையின்பால்  உருவானதே முல்லைப்பெரியாறு அணை. பஞ்சத்தால் இடம்பெயர்ந்துகொண்டும், உயிரை இழந்து கொண்டும்   இருந்த மதுரை, தேனி மக்களின் வாழ்க்கை செழிக்க பென்னிகுக் கண்ட கனவே முல்லைப்பெரியாறு.

ஏறத்தாள  இதுபோன்ற   ஒரு நிலையில் தான் ஈரோடு, சத்தியமங்கலம் மற்றும் பவானி பாசனப்பகுதிகள்  இருந்தது. ஆங்கிலேயர்களின் திட்டப்படி 1948-1955 காலவாக்கில் கட்டிமுடிக்கப்பட்ட தமிழகத்தின் இரண்டாவது பெரிய அணைதான் பவானிசாகர் அணை. மேற்க்கு தொடச்சிமைலையில் பெய்யும் மழையும் ஊற்றுகளும் சேர்ந்து ஆறாக மாறி மேட்டுப்பாளையம், சிறுமுகை வழியாக சத்தியமங்கலம் வழியாக கோபி அத்தாணி, ஈரோடு என்று கால்பட்ட இடமெல்லாம் பசுமையாக்கிச்செல்லும் பவானி நதி தேக்கி வைகப்படும் இடம் ஆங்கிலேயர்களால் பவானிசாகர்(சாகர் - ஹிந்தியில் கடல்) என்று பெயரிடப்பட்டுள்ளது.

மேற்க்குதொடற்ச்சி மலையின் இன்னொரு பகுதியிலிருந்து பெருக்கெடுத்துவரும் மாயாறும் இந்த அணையில் கலந்து தேங்குகிறது. ஆற்றின் தண்ணீர் ஆளவு நிமிடத்தில் உயர்ந்தும் குறைந்தும் மாயம் காட்டுவதால் இந்த ஆறு மாயாறு என்றபொருளில் அழைக்கப்படுதாகக்கூறப்படுகிறது.

இந்த கட்டுரையை படிக்கும் உங்களுகொரு கேள்வி எழலாம். 

இந்தியா சுதந்திரம் அடைந்தது 1947, அதற்க்குப்பின் கட்டப்பட்ட அணை, எப்படி ஆங்கிலேயர்கலால் திட்டமிடப்பட்டது என்று. வரலாறு சற்று புதிரானது. ஒரு அணையைகட்ட ஏழு ஆண்டுகள்(1948-1955) வெறும் கட்டுமானத்திற்க்கே தெவைப்படும் கால அளவு. அதற்க்கு முன் நில அளவை, நிலம் கையகப்படுத்துதல் மற்றும் நிதி திட்டமிடல் என்பது குறைந்தது ஒரு பத்துவருடங்களுக்கு முன்னர் தொடங்கப்பட்டிருக்கவேண்டும். மேலும் 1951-ல் தான் பாரளுமன்ற நடவடிக்கைகள் துவங்கின. ஆக இந்த அணை முற்றிலும் ஆங்கிலேய ஆட்சியர்களாலும், பொறியியல் வல்லுநர்களாலும் திட்டமிடப்பட்டு கட்டுமானபணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

சுற்றியுள்ள ஊர்களிலிருந்து பலர் அந்த காலகட்டத்தில் பஞ்சத்தின் காரணமாக ஒரு நாள் வேலைக்கு ஒரு படி சோளம் கூலியாகப்பெற்றுக்கொண்டு கட்டுமானப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இடையில் ஒரு முறை காலரா போன்ற ஏதொ ஒரு நோய்த்தொற்று ஏற்ப்பட்டதால் பலர் திருப்பி வந்துவிட்டதாக வாய்வழி செய்தியும் கிடைக்கிறது.

சிறுமுகை, சத்தியமங்கலம், கோபி, பவானி மற்றும் ஈரோடை சுற்றியுள்ள பகுதிகளில் பாசனவசதி பவானியாற்றை நம்பியேயுள்ளது, அவை நஞ்சை நிலங்களாக திகழ்கிறது. ஆனால் பவானிசாகருக்கு தெற்க்கே 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பனையம்பள்ளி, புளியம்மட்டி பகுதிகளில் வரட்சி தாண்டவமாடியது. காரணம் அங்கு பவானி நதியின்மீது பட்டு வரும் காற்றுகூட படமுடியாதபடி மேட்டு நிலமாக இருந்தது. அங்கிருக்கும் மக்களுக்கு குடி நீர் பிரச்சினை வெகு காலம் தொடர்ந்திருக்கிறது. புளியம்பட்டி இன்னும் புஞ்சை புளியம்பட்டியாகவே இருக்கிறது. ஒரு சில தனவந்தர்கள் வீட்டில் ஆழ்குழாய் கிணறு இருக்கும். பெரும்பாலன வீடுகளில் குடிப்பதற்க்கு தண்ணீர் அருகிலுள்ள குட்டைகள் மற்றும் ஊர்க்கிணறுகளிலிருந்துதான் கிடைத்துக்கொண்டிருந்தது. 

புளியம்பட்டி என்ற கிராமம்- ஊராட்சி வாரச்சந்தை என்ற ஒன்றை தன் பொருளாதாரமாக கொண்டிருந்தது. இந்த சந்தை தமிழகத்தின் இரண்டாவது பெரிய சந்தையாக (பொள்ளாச்சிக்கு அடுத்து)  இன்னும் திகழ்கிறது. இந்த சந்தையின் வியாபாரிகளாக பலர் இந்த ஊரில் தொழில் செய்துகொண்டிருக்கிரார்கள். சுதந்திரப்போராட்டம், சுதேசி போன்ற இயக்கங்களிலும் செயல்பாட்டிலும் இந்த ஊர்மக்கள் அதிகம் பங்கெடுத்திருக்கிறார்கள். விடுதலை போராட்ட நாயகன் திருப்பூர் குமரனின் உறவு முறைகள் பலர் இந்த ஊரில் வாழ்ந்திருக்கிறார்கள். இந்திய தேசிய காங்கிரஸ் ஆதரவளர்கள் இந்த மண்ணில் இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அதன் விழைவால் பலர் நெசவை தொழிலாகவும் காதிபவன் போன்ற சுதேசி தொழில்கூட்டமைப்பில் பங்கெடுத்து நாடு முழுதிற்க்கும் கதராடை அனுப்பிவைத்திருக்கிறார்கள்.

பின்னர் திராவிட இயக்கத்தின் எழுச்சிகாரணமாக இளைய தலைமுறயினர் பெரியாரையும் அண்ணாவையும், கலைஞரையும் பின் தொடர்ந்து காங்கிரஸ் எதிர்ப்பு, பகுத்தறிவு பாசறைகளில் பங்கேற்றனர். பல வீடுகளில் தாத்தாக்கள் காங்கிரஸ்காரர்களாகவும், மகன் மற்றும் பேரப்பிள்ளைகள் திமுக காரர்களாகவும் இருக்கிறார்கள். திராவிட அரசியலை அன்றய காலகட்டத்தில் இந்தப்பகுதியில் வளர்த்தவர்களில் முக்கியமானவரும் முதன்மையானவரும் இருந்தவர் பு.ஆ. சாமிநாதன் அவர்கள். பேராசிரியர் அன்பழகன் மற்றும் கலைஞரின் நம்பிக்கைகுறிய தலைவராக விளங்கியவர். கலைஞரால் இன்றும் நினைவுகூறப்படும் தன்மானப்பெருந்தகை PAS என அழைக்கப்படும் பு ஆ சாமிநாதன் அவர்கள்.





PAS அவர்கள் திமுக சார்பில் (1967-1971)-ல் ஒருமுறையும் (1971-1977)-ல் ஒரு முறையும் கோபி பாராளுமன்ற தொகுதி வேட்பாளரக தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த சமையத்தில் தன்னுடைய சொந்த கிராமத்தின் முதல் பிரச்சினையான குடிநீர்ப்பிரசைனையை தீர்ப்பதற்க்காக பேராசிரியர் மூலம் சட்டமன்றத்தில் ஒரு கோரிக்கையை அன்றய முதல்வர் கலைஞரின் முன் வைக்கச்செய்தார். அது பவானிசாகர் அணையிலிருந்து புஞ்சை புளியம்பட்டிக்கும் அதனைச்சார்ந்த கிராமங்களுக்கும் குழாய்மூலம் தண்ணீரைக்கொண்டுவந்து மேல் நிலை நீர்த்தொட்டியில் தேக்கிவைத்து பின் ஊர்மக்களுக்கு வினியோகம் செய்யும் திட்டமது. அந்த திட்டம் பல கட்ட கள ஆய்வுகளுக்குப்பின் எற்றுக்கொள்ளப்பட்டு நிதி ஒதுக்கி செயல்படுத்தப்பட்டது. அந்த மிகமுக்கிய திட்டத்தினால்தான் வாழ்வதற்க்குகந்த ஊராக இல்லாமல் இருந்த புஞ்சை நிலம் வேறு மாநிலங்களிலிலிருந்தும், ஊர்களிலிருந்தும் மக்கள் பலர் வந்து தொழில் மற்றும் வர்த்தகம் செய்து வளரக்கூடிய இடமாக மாறியது. அதன் பின் மக்கள் தொகை பெருக்கத்தால் குடிநீர் தேவை மீண்டும் அதிகரிக்க இரண்டாவது குடி நீர்த்திட்டம் அமல்படுத்தப்பட்டது.

இன்று எவ்வளவோ தொழில் வளர்ச்சி, கல்வி அறிவு பெற்று வளர்ந்துவிட்டாலும் புளியம்பட்டியையும் அதன் சுற்றுப்புறத்தைச்சேர்ந்த ஒவ்வொருவரும், முக்கியமாக இளம் தலை முறையினரும் தெரிந்து கொள்ளவேண்டியது மாமனிதர் பு ஆ சாமிநாதன் அவர்கள் முன்னெடுத்த குடிநீர் திட்டம் இந்த ஊரின் இன்றைய வளர்ச்சியில் பெரும்பங்கு கொண்டது என்ற வரலாறுதான். அரசியல் மாட்சரியங்கள் கடந்து சிறந்த மனிதரான அவரை புஞ்சை புளியம்பட்டியின் பென்னிகுயிக் என்று அழைப்பது சாலப்பொருந்தும்.