Sunday, January 4, 2015

நினைவே சுகந்தம்

கோள்களை பற்றி நிமலன் தெரிந்து கொண்டிருக்கையில் ஆதவன் உதயம் பற்றிய விளக்கத்தை நேரில் தெரிந்து கொள்ள இரவில் சன்னலோரம் அமர்ந்துகொண்டு, தான் ஆதவன் வரும் வரை விழித்திருப்பேன் என்று அமர்ந்து கொண்டான். அது அவன் மரபு என்று தெரிந்து தொந்தரவு செய்யாமல் விட்டு விட்டேன். அப்படியே உறங்கிப்போனான். காலை அவனை எழுப்பி ஆதவன் எழுவதை காண்பித்தபடியே புலரும் பொழுதை அனுபவித்து கொண்டிருந்தேன்... புலரும் பொழுது... புலரும் பொழுது.... 98களில் ஆரம்பகால மின்னணுவியல் பொறியாளனாக கோவைக்கு தினமும் புள்ளி-புள்ளி (Point-Point)ல் காலையில் பயணம் செல்லும் காலங்கள் மனதை நிறைத்தது... 
கோவை வானொலியின் புலரும் பொழுது, இரயில்களின் போக்குவரத்து விவரம் வாசிப்பு, வேளாண் செய்திகள், வேலை வாய்ப்புகள் என வானொலி யின் நிகழ்சிகள் இன்றும் காதில் ஒலித்த வண்ணம் உள்ளது..ராம் நகரில் உள்ள அலுவலகத்துக்கு(?) சென்று வருகையில் நண்பர்கள் என்னை ஒரு கிராமத்தான்(அவர்கள் கொயம்புதுர்க்கரர்களாம் ) என்று வகைபடுத்தி ஆரம்பகலங்களில் பழகிய விதம் இன்னும் சுவாரசியமானது.
பசூர் குளம் நிரம்பியிருக்கிறதா என்று வாரமொருமுறை விசாரிக்கும் நண்பரின் ஆவல் அவர் மாமனாரின் தோட்டம் குளத்தையொட்டி இருப்பதுவும் அதை கடந்து தினமும் நான் வருவதும்தானயிருந்திருக்க வேண்டும்.
அப்சரா திரையரங்கு மற்றும் லச்சுமி வணிக வளாகம், இளசுகளின் காலச்செலவு மையங்ககளாக திகழ்ந்தன. KMK, RKM, சிவரஞ்சனி, 70, 5, 7 பேருந்துகள் மட்டுமல்ல அவை நினைவு தாங்கிகள் கூடத்தான்.
பின் மருதமலை அடிவாரத்தில் மையங்கோண்டபிறகு திருவள்ளுவர் நகரும், வடவள்ளியும் உரைவிடங்களாயின. பின்னாளில் அங்குதான் வாழ்க்கையை களிக்க வேண்டும் என்ற கனவு காலச்சக்கரத்தாலும், நேருடமை (Real Estate) வளர்ச்சியாலும் அது இன்னும் கனவாகவே இருக்கிறது.. நினைவுகளை திரும்பிப்பார்க்கையில் தொலைந்து போன நட்புகளை முகநூலும், உட்சங்கிளியும் (LinkedIn) கண்டுபிடித்து கொடுத்துவிட்டது. அந்த நாட்களை மட்டும் காலம் எடுத்து கொண்டுவிட்டது..
கரங்கோர்ப்பு (scrum) கூட்ட நினைவூட்டி சிணுங்க, பனிக்கட்டிகளை வெட்டியெடுத்து வண்டியை வெளியே எடுத்தாகவேண்டும்.. கோயம்புத்தூரிலிருந்து சிகாகோவிற்கு ஒரு நிமிடத்தில் வந்துவிட்டேன் மனதை மட்டும் அங்கேயே விட்டுவிட்டு…

09-01-2014

No comments:

Post a Comment