ஒரு காலத்தில் அரிசி சோறு, இட்டிலியெல்லாம் பண்டிகைக்காலங்களில் மட்டுமே உண்டவர்கள் நமக்கு முன் உள்ள தலை முறையினர். எல்லோராலும் அரிசி வாங்கிப் பொங்க முடியாத வறுமை இருந்த காலமது.
ராகி, கம்பு, சோளம்தான் மூன்று வேளை உணவு. கேஸ் அடுப்பு, பிரிட்ஜ் இல்லாத அந்தக் காலத்தில் விறகடுப்பும், உணவைப் பதப்படுத்த தண்ணீர் மட்டும் கிடைத்த காலம் அது. விறகிற்கு அருகிலுள்ள காட்டில் கிடைக்கும் மரக்குச்சிகளைச் சேகரித்து அடுப்பெரித்த காலமும் உண்டு. ஏன் அடுப்பில் கூட பல வகையுண்டு. கல் அடுப்பு, மண் அடுப்பு, மண்ணெண்னை அடுப்பு, இரும்பு அடுப்பு என்று. மரமறுக்கும் கடையில் மரத்தூள் வாங்கி வந்து அதை நிறப்பி எரிக்கும் அடுப்பும் உண்டு. மண்ணெண்ணை அடுப்பு அப்போதைய காலத்தில் பொருளாதார வலிமை மிகுந்தவர்களுக்குக் கிடைத்த வரம். பிறகு ரேசன் கடைகளில் மண்ணெண்ணை மலிவு விலைக்குக் வழங்கப்பட்டபின் பரவலாக மண்ணெண்ணை அடுப்பு புழங்கப்பட்டது. அந்த கால கட்டத்திலும் மண்ணெண்ணை அடுப்பில் தீப்பற்றி எரிந்த மருமகள்கள் செய்திகளும் உண்டு.
மூன்று வேளையும் அடுப்பெரித்து உணவைச் சூடாக உண்பது மேல்தட்டு மக்களின் பொருளாதார பலத்தைக் காட்டும். பெரும்பாலன வீடுகளில் ஒரு வேளை பொங்கி இரண்டு நாட்கள் வைத்து உண்ணும் வழக்கம் அதிகம். முதல் நாள் எஞ்சியது இரண்டாம் நாள் தண்ணீரில் ஊறவைத்து பழைய சோறாகக் கிடைக்கும்.
இட்டிலி மாவைச் செய்ய அதற்கான தனியான அரிசி உண்டு. ரேசனில் வழங்கப்படும் அரிசி இட்டிலி மாவிற்கு மிக உகந்ததாக இருக்கும். அதனாலேயே அது ஓட்டல் கடைகளுக்கு கள்ளத்தனமாக விற்கபடுவதுண்டு. இட்டிலி உண்பதற்கு ஒரு வகையான சுவையான உணவென்றாலும் அதைத் தயாரிக்கச் செய்யும் வேலைகள் இல்லத்தரசிகளை உற்சாகமிழக்கச் செய்யும். இன்று போல் அந்தக் காலத்தில் மின்னாட்டுக்கல் இல்லை. கையில் ஆட்டுக்கல்லைச் சுற்றித் தான் மாவாட்ட வேண்டும். அரிசி, உளுந்து, வெந்தையம் என்று தனித்தனியாக ஆட்டுக்கல்லில் ஆட்டி எடுத்து பாத்திரத்தில் எடுத்து வைக்க மூன்று மணி நேரத்திற்கு மேலாகிவிடும். ஞாயிறு தூர்தர்சனில் தமிழ்ப்படம் போடுவதற்கு முன் மாவாட்டிவிட வேண்டுமென்பது அம்மக்களின், அக்காள் தங்கைகளின் நோக்கமாக இருக்கும்.
அப்படி ஆட்டியெடுத்த மாவை உடனே இட்டிலி ஊற்ற பயன்படுத்த முடியாது. அது புளித்துப் பொங்கிய பின்பே இட்டிலி ஊற்றத்தகுதியானதாகிறது. அதே மாவைக்கொண்டு தோசை ஊற்றலாம். ஆனால் தோசை ஊற்ற அனைவரும் உண்டு முடிக்கும் வரை அடுப்பின் அருகில் இருந்து தோசை சூடாக எடுத்துக் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். இட்டிலை அப்படியில்லை.. இட்டிலி பாத்திரத்தில் பத்து பதினைந்து இட்டிலிகளை ஊற்றி வைத்து விட்டு வேறு வேலைகளைச் செய்யலாம். பிறகு இட்டிலிகள் வெந்தபின் இட்டிலியை அடுப்பில் இருந்து எடுத்தால் போதும்.
அதுவும் தோசையை மெலிதாக ஊற்றுவது என்பது அதிக தோசைகளைச் சுடவேண்டிய தேவையை ஏற்படுத்துகிறது. இது இல்லத்தரசிகளுக்கு அதிக வேலைப் பலுவைத் தரும். அதனால் இரண்டு மெலிதான தோசைகளைச் சமைக்கு ஒரு பருமணான தோசையைச் சுட்டு வேலையை முடிக்கப் பார்ப்பார்கள். பெரும்பாலான நடுத்தர வர்க குடும்பங்களில் சமையலைத் தீர்மானிப்பது பெண்கள்தான். என்னதான் ஆண்கள் சாதித் திமிரை வெளியில் காட்டிக் கொண்டிருந்தாலும் வீட்டில் பெண்ணே சமையலை கையாள்வது. அவர்களை தினமும் தோசை வேண்டும் அதுவும் மெலிதான தோசை வேண்டும் என்றெல்லாம் எந்த ஆணும் கட்டாயப்படுத்த முடியாது. அப்படிக் கட்டாயப்படுத்தினால் பிறகு உண்ண உணவே கிடைக்காமல் போக வாய்ப்புள்ளது. அதனால்தான் உப்புமாவை விமர்சித்து நகைச்சுவை வளர்ந்து வந்தது. அது ஆண்களின் ஆற்றமையின் வெளிப்பாடு.
ஆனால் உயர்தட்டு மக்களிடையே இதே நிலைதானா என்றால்..இல்லை. ஒன்று சமையல் காரர் மூலம் சமையல் நடக்கும். அப்படியில்லாமல் தினமும் மெலிதான தோசை சுடப்படுகிறதென்றால் அங்கொரு பெண் அடிமையாக இருக்கிறாள் என்று பொருள்.
மற்றபடி சாதிக்குத் தகுந்தாற்போல் தோசை பருமன் மாறும் என்பது பகுத்தறிவில்லாத கூற்று. வர்க பேதத்தை சாதி பேதமாக மாற்றியது திராவிட அரசியலின் தந்திரோபாயம். ஆனால் அதை அவர்கள் தோசைக்கூற்றில் நிறுவ முயன்று கருகிய தோசையாக நிற்கிறார்கள்.