Sunday, June 7, 2020

கொரோனா என்னும் பித்த மருந்து

உடம்பில் வலுவும் மனதில் திமிரும் இருக்கையில் சக மனிதர்களை மனிதர்களாக மதிப்பதில்லை. அலுவலகத்தில் கூட வேலை செய்பவன் போட்டிக்காரன். எதிர்வீட்டுக்காரன் பொறாமைக்காரன். உதவிகேட்டால் கடங்காரன், கொடுத்த காசு திரும்பி வரவில்லையென்றால் ஏமாற்றுக்காரன், இப்படி எல்லோருக்கும் நல்ல பெயர் கொடுத்து நாமும் நல்ல பெயர் வாங்கி வைந்திருக்கிறோம். நாளைக்கு தன்  தலையெழுத்தை மாற்றப்போகும் அரசியல் எது என்று தெரியாமல்  தங்களுடைய அரசியலுக்கு ஏற்ற ஆட்களைத் தலைவராக எடுத்து வைத்து சொற்போர் செய்கிறோம். பிரித்தாளுவது அரசியல் என்ற நிலை போய், அரசியலே ஆட்களைப் பிரிப்பது என்றாகிவிட்டது.
இப்படி ஓடி ஓடி ஓடி.. ஒரு முடிவில்லாமல் ஓடிக்கொண்டிருக்கையில்..

எங்கோ சீனாவில் வைரஸ் காச்சல் வேகமாக பரவி ஆட்களைக் கொள்கிறது என்ற செய்தி வருகிறது. எப்பவுமில்லாதது போல் என்ன புது வைரஸ்? எதாவது மருந்து கம்பெனிக்காரன் பரப்பி விட்டுருப்பான் என்ற எதார்த்த புரிதலைத்தாண்டி "வைரஸ் - ஆபத்தானது" என்று அச்சுறுத்துமளவு ஆட்பலி எண்ணிக்கை ஏறி நிற்கிறது. அமெரிக்காவிடம் அடங்கிப்போக அமெரிக்கா செய்த சதிவேலையோ என்று செர்லாக் கோம்ஸ் போல் துப்புத் துலக்குகிறது அப்பாவி மனது.

எதுக்கு ஏறுது எதுக்கு எறங்குது என்று ஒரு நெப்பு நிதானமில்லாமல் குடிகாரன் போல ஏறி இறங்கிய பங்குச் சந்தைக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு. போயிங் கொண்டுபோனதை டெஸ்லா கொண்டுவந்துரும்னு நம்பிக்கொண்டிருந்த காலத்தில் விக்ஸ் தடவி ஆறுதல் கொடுக்கிறது சந்தை.
வைரஸ் பரவினால் ஆட்கள் பலியாவது உறுதி. அதனால் வேலைக்குப் போவது குறையும். ஆலைகள் உற்பத்தி செய்ய முடியாது. உற்பத்தி செய்த பொருட்களை வாங்க ஆட்கள் இருக்க மாட்டார்கள் என்ற நிலையில், வைரஸ் காய்ச்சலுக்கு வட்டி குறைத்து நிலவேம்பு கசாயம் கொடுக்கப் பார்க்கிறார் டிரம்ப். இது சப்ளை பிராப்ளம் இல்லை, டிமாண்ட் பிராப்ளம் இதுக்கு எதுக்கு வட்டியைக் குறச்சு கைக்காச வீணாக்குகிறாய் என்று கேட்கத் தோணுகிறது. இதையும் வாங்கி ஏப்பம் விட்டுவிட்டு மீண்டும் பசியெடுத்துக் காத்திருக்கிறது பங்குச் சந்தை.

இன்று 8 பில்லியன் டாலர் கொராணா எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா செலவிட முடிவெடுத்த செய்தியறிந்தவுடன் துள்ளிக் குதித்து விளையாடிவிட்டான் குட்டிசுவர்த் தெருக்காரன்.
ஊரில் யார் இறந்தாலும் தான் உயிருடன் இருக்க வேண்டும் என்று ஒரு கூட்டம். ஒன்று தேவைப்படுபவன் 10 ஹாண்ட் சனிட்டைசர்களை கடையிலிருந்து அள்ளிச் செல்கிறான். அத்தியாவசியத் தேவைக்குக் கூட இல்லாமல் சுத்தமாக வளித்து வைத்திருக்கிறார்கள் எல்லா பலபொருள் கடைகளிலும். வைரவஸ் கூட நல்ல வியாபரம்தான் இங்கே..

சளியும் காய்ச்சலும் இருந்தால் கொரோன அறிகுறியாம்.. சளி வந்துவிட்டது.. காய்ச்சல்தான் இன்னும் வரவில்லை... எதற்கும் இஞ்சிக்கசாயமும், நிலவேம்பு கசாயமும் தயாரக வைத்திருக்கிறேன். எந்த வைரஸ் வந்தாலும் தமிழனின் கண்டுபிடிப்பான நிலவேம்புக் கசாயம் முறியடித்துவிடும் என்ற உண்மை தெரிந்தபின் எதற்குக் கவலை..?

"சாகும் நாள் தெரிந்துவிட்டால், வாழும் நாளெல்லாம் நரகம்" என்று சூப்பர் ஸ்டாருக்கு வைரமுத்து எழுதிய வசனம் எவ்வளவு மொக்கையானது என்று இப்போதுதான் தெரிகிறது.
சாகப்போகிறவன், சந்தோசமாகவே இருக்கிறான். அவன் மனிதர்களை கூடுதலாக நேசிக்கத் தொடங்குகிறான். இருக்கப்போகும் ஒவ்வொரு விநாடியையும் வாழ நினைக்கிறான். வாழும் வரை இருப்பவர் நினைவில் தன் நல்ல பிம்பத்தை பதியவைக்க நினைக்கிறான். அவனிடம் இழப்பதற்கு எதுவுமில்லாத மன நிலையில், இந்த உலகில் இருப்பதெல்லாம் அவனுடையதாகிவிடுகிறது. அங்கு போட்டிகளில்லை, பொறாமையில்லை..


அன்பும் பேரின்பமும் மட்டுமே நிறைந்திருக்கிறது...

No comments:

Post a Comment