Wednesday, September 7, 2016

திருமணம் - திரும்பிப் பார்க்கிறேன்.

துணையிருந்த சிறுமிகள்
தாயாகிவிட்டனர்
ஆசீர்வதித்த பெரியவர்கள்
பரலோகமடைந்து விட்டனர்
முடி நிறைந்த தலை
முடி துறந்து நிற்கிறது
அடிதொழுத மனைவி
முடியாட்சி செய்யும்
நினைவு-நிகழ்வு இணைகாட்சி
திருமணக் காணொளிப்பதிவு காண்கையில்.

களிநயம் - விமர்சனம்

நெடுநாட்களுக்குப் பிறகு நண்பர் ஒருவரின் உதவியில் ஊரில் வாங்கி வைத்திருந்த தமிழ்ப் புத்தப் பொதிகள் கிடைத்தது. நல்ல புத்தகங்களை நண்பர்களின் பரிந்துரைகள், மதிப்புரைகள், ஆசிரியரின் எண்ணம், எழுத்துக்களைக் கொண்டும், எனது தனிப்பட்ட ஆர்வம் காரணமாகவும் அவ்வப்போது குறித்து வைத்துக் கொண்டு, பிறகு மொத்தமாக இணையத்தில் ஊர் முகவரிக்கு வாங்கிவிடுவது வழக்கம். பிறகு நானோ அல்லது நண்பர்களோ ஊருக்குச் சென்று வரும்போது புத்தகங்களை அமெரிக்கா கொண்டுவருவேன். அந்த வகையில் இந்த முறை பல புத்தங்கள் கிடைக்கப்பெற்றது. அதில் கவிஞர் மகுடேஸ்வரனின் களிநயமும் ஒன்று.

நான்கு நாட்கள் தொடர்ந்து படித்ததில், தொலைவு பிரித்த நண்பனை மீண்டும் கொண்டுவந்து சேர்த்தது. படித்து முடித்ததும், புத்தகத்தையும் நண்பனையும் பிரிய நேரும் துயரம் அப்பிக்கொண்டது. ஒரு சக மனிதனுடன் தற்கால நிகழ்வுகள், ஆலோசனைகள், சமூக மதிப்பீடுகள், அறிவுப் பரிமாற்றம் என்று பலவற்றை இந்தப் புத்தகம் கொண்டிருக்கிறது.

கல்லூரி நாட்களில் மின்ணணுவியல் பாடத்தின் போது வகுப்பே ஆசிரியர் சொல்வதை உள்வாங்கிக் கொள்வது போலும், எனக்குமட்டும் புரியாதது போலும் தோன்றும். சில நேரங்களில் வாய்விட்டு சந்தேகங்களைக் கேட்டும் புரிந்து கொள்ள முடியாமலிருக்கும். காரணம், மின்ணணுவியலில் எதையும் இயந்திரவியல் போன்று கண்கூட, தொட்டுணர்ந்தோ பார்த்து புரிந்து கொள்ள முடியாது. மின்ணிணைப்புகள், ரெஸிஸ்டர், இண்டெக்ரேடட் சர்க்யூட் எல்லாமே அவரவர் கற்பனைக்கு எட்டியவண்ணமே புரிதல் இருக்கும். ஒரு சர்க்யூட்டை விளக்கினால், ஏற்கனவே கொண்டுள்ள புரிதல்/அனுமானத்தில்தான் அதைப் புரிந்து கொள்ள முடியும். சில பல நேரங்களில் புரிபடமால் இரண்டு மூன்று தடவை சந்தேகம் கேட்க நேரிடும்.

வகுப்பே அமைதியாய் உள்வாங்கிக் கொண்டிருக்கும் போது, நான் மட்டும் கேட்டு எனக்கு மட்டும் புரியாமல் போன ஒரு நிலை வருத்தமளிக்கும். வகுப்பு முடிந்ததும் பக்கத்திலிருப்பன், முன் வரிசையில் அமர்ந்திருப்பன் என்று எவனிடமும் சந்தேகம் கேட்டாலும் அவர்களுக்கும் தெரியாது. பிறகுதான் புரிந்தாது, எல்லோருமே ஒரு "சோசியல் ஸ்டேடஸுக்காக" பிடித்து வைத்துள்ள பிள்ளையார் போன்று பாடம் கேட்டது.

அதைப்போல ஒவ்வொரு நாளும் நாம் எதிர்கொள்ளும் சிக்கல்கள், நிகழ்வுகளில் நமக்கான புரிதல் ஒட்டு மொத்த சமூகத்தின் புரிதலில் இருந்து நேர்மாறாக இருக்கும். அதைச் சொல்வதால் தனித்து விடப்படுவோமோ என்ற அச்சத்தில் பெரும்பாலும் நாம் நம் கருத்துக்களை வெளியே சொல்வதில்லை. அந்த நேரத்தில் நம்மைப் போலவே அந்த பிரச்சினைகளை, நிகழ்வுகளை புரிந்து கொண்டவர், நம் சிந்தனை வடிவிலேயே ந்தம்ன்முடன் உரையாடி நம்மை அடுத்த நிலைக்குக் கொண்டு சேர்ப்பது எப்படி ஒரு இணக்கத்தைத் தருமோ, அதே உணர்வு களிநயம் படித்த பின் ஏற்பட்டது.

தன்னை ஒரு சமூகத்தின் உயர் நிலையின் எனவோ, கல்வி, கேள்வியில் ஏனையோரை விட தான் உயர்ந்தவர் என்று பக்கத்தின் ஏதாவது ஒரு மூலையில் தன்னுயர்வை வைக்காமல் எழுததாத நவீன எழுத்தாளர்களிலிருந்து வாசகனின் மனதோடு நெருக்கமாக, தனக்குள் ஒருவனாக புத்தகமெங்கும் உரையாடியிருக்கிறார்.

வாகனங்களை பராமரிப்பது முதல் ஒரு நிறுவனத்தை நடத்த வேண்டிய அடிப்படைப் பண்புகள் வரை தன் அனுபவத்தை பகிர்ந்திருக்கிறார். கடைசியில் 13 திருக்குறள்களுக்கு சமகாலத்திலிருந்து உவமைகளைக் கூறி பொருள் விளக்கமளித்திருக்கிறார்.

தன்னுடைய புத்தகத்தை காசு கொடுத்து வாங்கும் வாசகன் ஒரு போதும் ஏமாந்துவிட்டோமே என்றெண்ணாத வகையில் புத்தகத்தில் பொருளடக்கம் செய்திருப்பதில், அவர்தம் திருப்பூர் தொழில் நேர்த்தி தெரிகிறது.

நல்லதொரு புத்தகம், நட்பினை உணர்த்தும் புத்தகம். 

Friday, September 2, 2016

ரிலையன்ஸ் ஜியோவுக்கு முன்...

இருபத்தி ஓராம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், VOIP எனப்படும் வாய்ஸ் ஓவர் இண்டெர் நெட் புரொட்டொக்கால் என்னும் தொழில் நுட்பம், இண்டெர் நெட் மூலம், அதாவது ஒரு கணினியிலிருந்து இன்னொரு கணினி தொடர்பு கொள்ளும் முறையில் (இண்டெர் நெட் பாக்கெட் எனப்படும் சிறு அளவிலான தகவல் கத்தையை அனுப்புனர், பெறுநர், இடைமறிக்கமுடியாதபடி இறுக்கிக்கட்டப்பட்ட முறை, கட்டை அவிழ்க்கும் சாவி என) குரல் அழைப்புகளை அனுப்புவது. முன்பு பிஎ ஸ் என் ல் தொலைபேசி இணைப்புக்காக, PSTN என்ற பொதுப்பயப்பாட்டுக்கான இணைப்பை ஏற்படுத்தும் டெலிபோன் நெட்வொர்க் மூலம், இண்டெர்நெட் சேவையைப் பெற, அனலாக் எனப்படும் வாய்ஸ் நெட்வொர்க்கில் டிஜிட்டல்(பைனரி/பாக்கட்) தகவலை அனுப்பும் முறை மூலம் இண்டெர்நெட்டைப் பயன்படுத்தினோமல்லவா, அதன் நேர் எதிர் முறை இது. அதாவது இண்டர்நெட் இணைப்பினுல் ஒரு டிஜிட்டல் ஓடை ஏற்படுத்தி, அதில் குரலை அனுப்பும் நுட்பம். ஆரம்பத்தில் வெளிநாடுகளிக்கான தொலைபேசி இணைப்பை வழங்கும் சேவையில், கட்டணம் மிச்சப்படுத்த பயன்படுத்தப்பட்டது. கட்டண மிச்சம், நிறுவனத்திற்கே, வாடிக்கையாளர்களுக்கு அல்ல, அதாவது வாடிக்கையாளர்கள் ஐஎஸ்டி கட்டணத்தைத்தான் கட்டினார்கள். பிறகு யாகூ மெஸ்ஸஞர் மூலம் கணினி வழி தொலைப்பேசி இலவசமாக வழங்கப்பட்டது. இதன்மூலம் நிலையான தொலைபேசி இல்லாமல் உலாவிக்கொண்டே உரையாடும் முறைக்கு வழிவகுத்தது.
இந்தியாவில் சில இணைய சேவை வழங்கும் நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளருக்கு இந்த VOIPஐ வழங்கியது. அதன் ஆரம்பகாலங்களில் அந்த இணையவழி குரல் உரையாடல் ஏற்படுத்தும் நுட்பத்துடன் இணைந்து, கட்டண அளவீடு செய்யும் மென்பொருளை அந்தகாலகட்டத்தில் வேலை செய்த நிறுவனத்தில், ஐஐடி மெட்றாஸ் வளாகத்தில் செய்த அனுபவம் இந்தத் தொழில்நுட்பத்தை உள்வாங்கிக் கொள்ள எனக்கு உதவியது.
பிற்காலத்தில் 2G, 3G, 4G என அடுத்தடுத்த தலைமுறைச் செல்லிடப்பேசி நுட்பங்கள் வளர்ந்தபின், அதே நுட்பத்தை அடிப்படையாகக்கொண்டு இப்போது ரிலையன்ஸ் ஜியோ இணைய நுட்ப்த்தைப் பயன்படுத்தி, அலைபேசி அழைப்புகளை ஏற்படுத்தும் நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தத் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி வளர்ந்த நாடுகள் ஏற்கனவே கட்டடற்ற தொலைபேசி அழைப்புகளை வழங்கிவருகின்றன. இணைய இணைப்புகளுக்கு மட்டுமே கட்டணம் செலுத்தும் வகை செய்துள்ளார்கள். ஏற்கனவே சில அதிபுத்திசாலி நிறுவனங்கள் உங்கள் தொலைபேசி அழைப்புகளுக்கு இந்த நுட்பத்தைப் பயன்படுத்தி, கட்டணக்கொள்ளையில் ஈடுபட்டுள்ளன. இந்த நுட்பத்தில் மிக முக்கியமானது தகவல்களை கத்தையாக்கும் நுட்பம். அதாவது Data Compression Technique. இது குறைந்த அளவு மென்ணெண்களைப்(Data)வைப் பயன்படுத்தி அதிக அளவிலான தகவல்களை பரிமாறிக்கொள்ளும் முறை.
ஆகவே.. ரிலையன்ஸ் ஜியோ - சந்தையைத் தனக்குச் சாதகமாப் பயன்படுத்திக் கொள்ளும் நுட்பமேயன்றி, அலைக்கற்றை வழங்கிய அம்பானிகளையும், வழியேற்படுத்தும் வழியில் நின்ற ராஜக்களையும் கும்பிடவேண்டியதில்லை.

இதயம் வென்றான்

இமயம் வென்றான் என்றார்,
இதுவரை அவர் பாதை இங்கிருப்பவர்
எவர் கண்டார்..
கடிதொழில் செய்து கருகிச்
சேர்த்ததெல்லாம் கள்ளும்,
மானம் விற்ற காணற் கலையுமாகவல்லவோ
கரைக்கின்றார்...
வானளந்த புகழ் கொண்ட வரலாற்று
நாயகர்களை ஏடுகளில் மட்டும் கொண்டு
மோடியென்றும், மோகனென்றும்
அவர்பாதத்தில் தலையணைக்க
தவம் கிடக்கிறார்...
சூதும் வாதும் செய்வதை சுட்டாலும்
ஏற்றுக்கொள்ளாத அறம் தள்ளி,
அரசியல் சூதானம் தெளிந்தவர் என்று
புகழெடுத்து-
இங்கத்தவர் நாடாள
வாய்த்த பேரை அங்கத்தவர் ஆயினும்
அவர் அரசியல் சங்கறுத்து
தன்னை நிறுத்துக் கொண்ட
தலைகொண்ட உடலன்றோ இன்நிலம்...
அரிதினும் அரிதாய் அமைந்த
தென்னவர் ஏறும் அரியாசனத்தை
மன்னவர் போற்றும் மாண்பெய்தும்
செயல்விடுத்து,
கள்ளர் மாண்டுகொள்ளும் வன்னம்
குடிஉடை மடியினில் மறைத்து
இனியொரு மாமாங்கம் பழி வாழ
வழிசெய்தார் ஆங்கோர் அடிமைக்கு அடிமை..
பொன்னைத் தின்றார், போதவில்லையென்று
இணைகொடி தோண்டி மண்ணைத்தின்றார்,
மட்டுறார் மாவணிகன் வாய்ச்சோற்றையும் தின்னக்கேட்க,
வாழ்ந்து சேர்த்த சிறப்பை
தாழ்ந்து கெடுக்க முனையார்- அவர்
எரியும் நெருப்பணைக்கத் தாங்கும்
கங்கணைத்தார்..
அறம் போற்ற வாழும் வாழ்வு துறந்தார்
தம்மினம் மாண்பு துறந்து சாக வழிசெய்தார்..
வாழிய அவர் புகழ் இவ்வையம் வாழும் வரை..
இமயம் வேண்டாம் - மக்கள்
இதயம் வெல்லும்
"இதயம் வென்றான்" அல்லவோ
எமக்கின்று வேண்டும்?!..