Saturday, June 27, 2015

ஹெல்மெட் போடுவதற்க்கு ஏன் இவ்வளவு எதிர்வினை?

சாலையில் பயணிப்பது என்றுமே 100% பாதுகாப்புடன் இருக்காது. நீங்கள் வண்டியை பாதுகாப்பாக ஓட்டினாலும் சாலையில் பயன்படுத்தும் மற்றவர்களை அப்படியே இருப்பார்களென்று சொல்லி விட முடியாது. ஆபத்து உங்கள் வாகனத்தின் டையரிலிருந்து எதிரே வரும் வாகனத்தின் ஒளிவிளக்கு வரை எங்கும் பரவிக்கிடக்கிறது. ஹெல்மெட் அணிவது ஓரளவேனும் உங்களை ஒரு ஆபத்திலிருந்து காப்பற்றலாம்.

பெரும்பாலும் தலையில் அடிபடுவதால் நிகழும் பாதிப்பு அடிபட்டவரைவிட அவரது குடும்பத்தோரை அதிகம் பாதிக்கும். எப்படி? ஒரு கணவன், மனைவி இரண்டு பள்ளி செல்லும் குழந்தைகள். மனைவி வீட்டை கவனித்துக்கொண்டு இருக்கிறார், கணவர் வேலைக்கு சென்று வரும்போது எங்கிருந்தோ ஒரு நாய் குறுக்கே வந்ததில் தடுமாறி கீழே விழுகிறார். அவர் ஹெல்மெட் அணியாத நம்மைபோன்ற பொது சனத்தில் ஒருவர். கீழே விழுந்ததில் தலையில் லேசான அடி. அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் உதவி செய்ய எழுந்து வண்டியை ஓட்டிக்கொண்டு வீடு வந்து சேர்ந்து விட்டார். 

இரண்டு மணி நேரம் கழித்தும் வாந்தியெடுத்து தலை சுற்றி விழுகிறார். பயந்து போன மனைவி தட்டி எழுப்பி பார்த்து ஒன்றும் நடக்காத நிலையில் அக்கம்பத்துக்காரர்கள் உதவியுடன் மருத்துவ மனையில் அனுமதிக்கப்படுகிறார். மனைவிக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. குழந்தைகளை பள்ளியிலிருந்து கூப்பிட்டு வரவேண்டும், கணவரின் நிலை என்ன என்றே தெரியாத குழப்பம். மருத்துவர் பரிசோதித்து விட்டு ஸ்கேன் செய்ய பரிந்துறைக்கிறார். மருத்துவமனையில் ஸ்கேனிங் மற்றும் இதர சிகிச்சைக்கு இரண்டாயிரம் கட்சச்சொல்கிறார்கள். அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்கள் உதவியுடன் பணம் கட்டி ஸ்கேன் செய்கிறார்கள். 

ஸ்கேன் செய்து பார்த்ததில் தலையில் அடிபட்டு மூளைக்கு ரத்தம் எடுத்துச்செல்லும் ரத்த நாளத்தில் ரத்தம் கட்டி சிறிய அடைப்பொன்று ஏற்ப்பட்டிருக்கிறது. அதன் விழைவால் அவருக்கு பக்கவாதம் ஏற்ப்பட்டு பேச்சும் கைகால் செயல் இழந்து இருக்கிறது. உடனடியாக கட்டியை கரைக்க ஊசி ஒன்று பொட வேண்டும். அதற்க்கு இரண்டு லட்ச ரூபாய் செலவாகும் என்று சொல்கிறார்கள். 

மனைவிக்கு ஒன்றுமே புரியவில்லை. இப்போது அவருக்கும் மாரடைப்பு வந்துவிடும் போல இருந்தது. வெளியுலகை அதிகம் பார்க்காத அவரால் தனியாக இந்த மன அழுத்தத்தையும் பணத்தை புரட்டவேண்டுமென்ற அழுத்தமும் நிலைகுழையச்செய்து விட்டது. அந்த ஊசி போட்ட பின்பும் உடனே குணமாகிவிடும் என்று சொல்லமுடியாது. சரியாகத பட்சத்தில் ஒரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். அதற்க்கு மூன்று லல்சத்திற்க்கு மேல் செலவாகும். மருத்துவ சிகிச்சை முடிந்து வீடு திரும்ப ஒன்றிலிருந்து இரண்டு மாதம் வரை எடுத்துக்கொள்ளும். அதுவரை அவர் மனைவி குழந்தைகளுடன் மருத்துவமனியிலேயே இருக்கவேண்டும். சிகிச்சையெல்லாம் முடிந்து குணமடந்தாலும் அவரால் உடனே எழுந்து நடக்க, பேச முடியாது. அவருக்கு சாப்படு ஊட்டுவதிலிருந்து, கக்கா போனால் சுத்தம் செய்துவிடுவதுவரை அடுத்த ஆறு மாதம் அவரது மனைவி கஸ்டப்படவேண்டும். தலையில் அடிபட்டதனால் அவருக்கு பழைய நினைவுகள் மறுந்துவிட்டது. பல நெருங்கிய சொந்தங்களை அடையாளம் தெரியவில்லை. அவர் கடன் வாங்கியிருந்தார் என்று வீட்டில் வந்து பலபேர் நச்ச ஆரம்பித்து விட்டனர். எவ்வளவு வாங்கினார் எவ்வளவு கொடுத்தார் என்பதற்க்கு எந்த அத்தாட்சியும் கிடையாது, அவருக்கும் நினைவில்லை.

இந்த பிரச்சினையையெல்லாம் தாண்டி அவர் பழைய நிலைக்கு வர எப்படியும் இரண்டு வருடமாகி விடும். அதுவரை அவர் குடும்பம் பட்ட துன்பம் யாருக்கும் தெரியாது. சில நேரங்களில் அடிபட்டவர் கோமாவில் ஆறு மாதம் ஒருவருடம் என்று படுத்த படுக்கையிலேயே இருப்பர். எழுந்து வருவாரா வரமாட்டாரா என்று மனைவியும் குழந்தைகளும் ஏங்கி ஏங்கி தங்கள் வாழ்க்கையை நினைத்து வருந்திக்கொண்டே இருப்பர். நிற்க்க....மேற்ச்சொன்ன எதுவும் கற்ப்பனையல்ல.

இப்போது, ஒரு ஆயிரம் ரூபாய் ஹெல்மெட் போட்டுக்கொண்டு உங்கள் குடும்பத்தை காப்பாற்ற உங்களுக்கு என்ன தடை இருந்து விட முடியும்?

உங்கள் ஹெல்மெட் உடைந்திருந்தாலோ அடிபட்டிருந்தாலோ, தயவு செய்து புதிய தரமான ஒன்றை வங்கிக்கொள்ளுங்கள்.

Thursday, June 25, 2015

பெரிய வயிறு

அது ஒரு நடுத்தர ஊரின் சன நடமாட்டம் அதிகமிருக்கும் பேருந்து நிலையம். அந்த ஊர் பெரும் நகரமான கோவையை இணைக்கும் நெடுஞ்சாலையில் இருப்பதால் பத்து நிமிடத்திற்க்குள் இரண்டு மூன்று பேருந்துகள் கடந்து விடும். கோவிந்த ராஜன் அந்த பேருந்து நிலையத்தில் ஒரு டீக்கடை வைத்துள்ளார். டீக்கடையின் கூடவே லாட்டரிச்சீட்டும் மொத்தமாக விற்று வந்தார். மொத்தமாக என்றால்...அவர் கடையில் நாலைந்து பேர் சீட்டுகளை மொத்தமாக வாங்கி கமிசனுக்கு விற்று கமிசனைப் பெற்றுக்கொள்வார்கள்.. வழக்கம் போலவே கோவிந்தராஜன் கடைமுன் ஓரமாக ஒதுங்கி நின்று கெஞ்சலாக முதலாளியின் பார்வைக்காக காத்திருந்தான் கோடி. ஆயிரம் முறைக்கு குறையாத சலவைக்கு போன அடையாளம் தாங்கி நின்ற துளைகள் கோர்த்த ரின் சோப்பு முண்டா பனியன், அவன் ரின் சோப்புக்கு காசு வாங்காத விளம்பர தூதுவன் என்பதை சொன்னது.

"இன்னைக்கு ஐநூறு சீட்டுக்கு கொறைஞ்சுது நாளைக்கு நீ கடைப்பக்கம் வராத"ன்னு மிரட்டி முன்னால் நின்றிருந்த காசிக்கு ஒரு சீட்டு கட்டை கொடுத்தார் கோவிந்தராஜன். அவன் தனக்கே பரிசு விழுந்தது போல் மகிழ்சியில் கடவுள் தன் இருகரங்களால் அள்ளிக்கொடுத்த ஒரு கரத்தினால் அதை வாங்கிக்கொண்டு அவசரமாக எங்கோ சென்றான்.

அடுத்தது தலையை படிய வாரி நெற்றி முழுதும் திருநீரு பட்டை அணிந்து வெள்ளை அரைக்கை சட்டையும் காவி வேட்டியும் அணிந்து நின்ற சாமிக்கண்ணுவிடம் சிறிதும் பெரிதுமாக சில கட்டு சீட்டுக்களை எதுவுமே பேசாமல் கொடுத்தார் கோவிந்தராஜன். அதை தன் கை இடுக்கில் வைத்திருந்த மஞ்சள் நிற கைப்பைக்குள் சீட்டுகள் வகை தொகை வாரியாக அடுக்கி வைத்துக்கொண்டே நகர்ந்தார் ஏதோ பாடலை மெல்ல பாடிக்கொண்டே. அது எங்கேயோ கேட்ட பக்தி பாடல் போல இருந்தது.

கடைசியாக அவர்கண்ணில் பட்டான் "கோடி". அவனை தனது ஓரக்கண்ணால் மேலிருந்து கீழாக பார்த்து "நேத்து வாங்குன சீட்டுக்கட்டுக்கு பணமெங்கே?" என கேட்டார் கோவிந்தராஜன். தன் இடுப்பைச்சுற்றி கட்டியிருந்த பச்சை நிற பெரிய கச்சையின் பட்டனை திறந்து எதையோ எடுத்தான். நன்றாக பாலித்தீன் பைக்குள் மடக்கி வைத்திருந்த ஒரு ரூபாய் தாள்களும் ஐந்து ரூபாய் தாள்களும் சேர்ந்த பணச்சுருளை எடுத்து கொடுத்தான் கோவிந்தராஜனிடம். "ராத்திரி போகும்போதே கணக்கு செட்டில் பண்ணிட்டி போகவேண்டியது தானெ?" என்றார் கோவிந்த ராஜன். "சீட்டு கொஞ்சம் மீஞ்சி போயிட்டுதுங்க. அதை சினிமா கொட்டகையில் ரெண்டாவதாட்டத்தில முடிச்சுட்டு வர நேரமாகிருச்சுங்க" என்றான் குரலை தாழ்த்தி மரியாதையுடன்.

"கமிசனுக்கு காசு வாங்கிக்கிறயா, இல்ல சீட்டா வாங்கிக்கிறயா?" என்றார் கோவிந்தராஜன்.

"சீட்டா குடுத்துருங்க சாமி.. இன்னைக்கி வித்து காச வாங்கிகிறேன்" என்றான் கோடி.

கோடி.. அவன் முதலில் லாட்டரி சீட்டு விற்க ஆரம்பித்த போது அவன் பெயர் சின்னக்குமார். ஏதோ காரணத்தால் அவன் கோடி ரூபாய் சீட்டுகளைத்தான் விற்க முடிவெடுத்து வேறு சீட்டுகளை விற்பதை நிறுத்தி விட்டான். தான் விற்ற சீட்டில் கோடி ரூபாய் விழுந்தால் தனக்கு அதிகம் கமிசன் கிடைக்கும் என்றோ அல்லது விற்க்காது தன்னிடம் தங்கிய சீட்டில் பரிசு விழுந்தால் தான் கோடீஸ்வரன் ஆகிவிடலாம் என்ற எண்ணமோ கூட காரணமாய் இருக்கலாம். இன்றுவரை அவன் பெயரில் தான் கோடியை வென்றிருக்கிறான்.

சீட்டுக்கட்டுகளை வாங்கிக் கொண்டு ஓரமாக வைத்திருந்த அதிர்ஸ்ட லட்சுமி நாளிதலை எடுத்துக்கொண்டு அவனும் அன்றைய நாளைத் தொடங்கினான். அதிர்ஸ்ட லட்சுமி நாளிதழ் - லாட்டரிச்சீட்டுகளின் குழுக்கல் முடிவுகளைத் தாங்கி வரும் தினசரி. தனக்கென்று சில ரெகுலர் கஸ்டமர்கள் வைத்திருக்கிறான். ஒன்றிரண்டு பேருக்கு அவன் விற்ற சீட்டில் 1000 ரூபாய் 5000 ரூபாய் என பரிசுகள் விழுந்திருக்கின்றன. சிலருக்கு ஆறுதல் பரிசாக 500 ரூபாய் வரை விழுந்திருக்கிறது. அதனால் அவனிடம் சீட்டு வாங்குவது தங்களுக்கு அதிர்ஸ்டம் என நம்புபவர்களை நம்பித்தான் அவன் வாழ்க்கை ஓடுகிறது.

இந்த முறை சீட்டுக்களின் எண் வரிசையை தான் தேர்ந்தெடுத்து வாங்கியிருப்பதாகவும் நிச்சயம் இந்த முறை பரிசு விழும் என அடித்து சொல்லிக்கொண்டிருந்தான் தன் வாடிக்கையாளரிடம். ஒவ்வொரு முறையும் அவன் இப்படித்தான் சொல்லுகிறான் என்பதை நையாண்டி செய்து விட்டு தனக்கு இரண்டு சீட்டுகளை எண்கள் சரி பார்த்து வாங்கிக் கொண்டார் அவர். அடுத்த வாரம் தீபாவளி ஸ்பெசல் குலுக்கள் இரண்டு கோடிக்கான சீட்டுகள் வரப்போகிறதாகவும் அடுத்தவாரம் வந்து பார்ப்பதாகவும் சொல்லிவிட்டு அடுத்த வாடிக்கையாளரை தேடிச்சென்றான்.

"மருத மலை மா முனியே" என முருகன் பாட்டை பாகவதர்போல பாடிக்கொண்டே தன்னுடைய வாடிக்கையாளரிடம் தன் சீட்டுக்களை விற்றுக் கொண்டிருந்தார் சாமிகண்ணு. அவருடைய தோற்றம் வாடிக்கையாளர்களை அவர் கையில் சீட்டு வாங்கிக் கொண்டால் அதிர்ஸ்டம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சீட்டுக்களை வாங்கச் செய்தது.

காசி, கோவிலுக்கு முன் உட்கார்ந்து கொண்டு "மகா லட்சுமி 50 லட்சம்- நாளை குழுக்கல், மகா லட்சுமி 50 லட்சம்" என வரும் பக்தர்களை பார்த்து சொல்லிக்கொண்டிருந்தான். உறுப்புகள் இருந்தும் பிச்சை கேட்கும் மனிதர்கள் நடுவில் ஒரு கையை இழந்தும் பிச்சை எடுக்காமல் லாட்டரி சீட்டு விற்றுக் கொண்டிருந்த காசியின் நம்பிக்கையய் பார்த்தும் அவன் மீது பரிதாபம் கொண்டும் சீட்டுக்களை வாங்கிச் சென்றனர் பக்த கோடிகள்.

லாட்டரி சீட்டு - ஒரு ரூபாயில் ஒரு சாமனியன் வாங்கிக் கொள்ளும் கனவுப்பத்திரம். பரிசு விழுவதைப்பற்றி யாரும் அதிகம் அக்கரைகொண்டு அதை வாங்குவதில்லை. குழுக்கல் முடிவு வரும்வரை அந்த லாட்டரிச்சீட்டு தரும் நம்பிக்கையில் அந்த வாரத்தை ஓட்டி விடுவர்.

கோவிலின் முன் பூஜைப்பொருட்கள் விற்க்கும் கனகத்திற்க்கும் அந்த கனவு காணும் பழக்கம் இருந்தது. பள்ளிக்கூடம் முடிந்து எப்போதும் மாலை நேரங்களில் துணையாக நான்காவது படிக்கும் மகள் சுந்தரி ஒத்தாசைக்காக அம்மாவுடன் சேர்ந்து பூசைப்பொருள் விற்க்க வந்துவிடுவாள். பூசைப்பொருள் வாங்க வரும் வாடிக்கையாளர் வாங்கும் பூசைப்பொருளுக்கு கொசுறாக செருப்பை கடையோரம் விட்டு விட்டு பாதுகாக்கும் பொறுப்பை கடைக்காரரிடம் விட்டுவிடுவர். சுந்தரி அவ்வப்போது சின்னப்பெண்கள் விட்டு விட்டு செல்லும் அழகான செருப்புகளை போட்டு அழகு பார்த்துக்கொள்வாள். அம்மாவிடம் சில நேரங்களில் அவளுக்கு பிடித்த செருப்பை காட்டி அது போலவே தனக்கும் வேண்டுமென்று கேட்டு வைத்துக்கொள்வாள். பூசைப்பொருள் வருமானம் கடன்காரர்களின் வட்டிக்கு போய்விடும். கூலி வேலைக்கு போய்வரும் மாரிச்சாமியின் வருமானம் மளிகைச்செலவிற்க்கு போனது போக ஏதுமில்லாத மிச்சத்தில் பிள்ளைக்கு புது செருப்பு, பண்டிகைக்கு துணியெல்லாம் வெரும் கனவுதான்.

கனகம் ஒரு லட்ச ரூபாய் வாரமொருமறை குழுக்கல் - மகாலட்சுமி சீட்டு ஒன்று வாங்கிவிடுவாள் தவராமல். இந்த வாரமும் அதுபோலவே ஒரு சீட்டை வாங்கிக்கொண்டு வீடு சேர்ந்தாள். வழக்கம்போலவே உறங்கும் முன் வீட்டிலுள்ளவர்கள் ஒரு லட்ச ரூபாய்க்கான செலவுத்திட்டங்களை போட ஆரம்பித்திருந்தனர்.

சுந்தரி ஆசையாய் கேட்கும் சைக்கிள், பட்டுத்துணி, கலர் பென்சில் எல்லாவற்றிற்க்கும் அந்த ஒரு ரூபாய் லாட்டரிச்சீட்டுதான் பதில் சொல்லும். கனகத்தொற்க்கு ஒரு டிவி, ஒரு பட்டுப்புடவை என்பது ஆகப்பெரிய ஆவல். மாரிச்சாமிக்கு ஒரு சைக்கிள வாங்கிவிடனும். அவருக்கு லட்ச ரூபாய்க்குள் தனது சைக்கிள் செலவை அடக்கிவிட வேண்டும்(!) என்பதான பொருளாதார மதிப்பீடு. இந்த ஒட்டுக்குடித்தன வீட்டிலிருந்து தனியா ஒரு வீடுகட்டி போயிரனும்னு கனகம் சொல்ல, ஆமாம் தனியா ஒரு வீடு நமக்குன்னு இருந்தா நல்லாதான் இருக்கும். சைக்கிளை வீட்டுக்குள்ளேயே நிறுத்தி வைத்துக்கொள்ளலாம் என்றவாரு தன் கவலையை தீர்த்துக்கொள்ள விரும்பினார் மாரிச்சாமி. அவர்கள் ஆசைகளை வளர்த்துக்கொள்ள வளர்த்துக்கொள்ள இரவும் தன்னை சுறுக்கிக்கொண்டது.

அடுத்த நாள் காலையில் கோவிந்த ராஜன் கடையில் பரபரப்பாக பேசிக்கொண்டார்கள். கோவிந்த ராஜன் கடையில் விற்ற மகாலட்சுமி சீட்டு ஒன்றிற்க்கு முதல் பரிசு ஒரு லட்ச ரூபாய் விழுந்தது பேப்பரை பார்த்து தெரிந்து கொண்டனர். சாமிக்கண்ணு வாங்கிவிற்ற சீட்டுக்களில் ஏதும் அந்த எண் வரிசையில் இல்லை. கோவிந்த ராஜன் தன் நோட்டுப்புத்தகத்தை பார்த்து அது காசி விற்ற சீட்டில் ஒன்றுதான் என்று சொன்னார். காசிக்கு எல்லையில்லா மகிழ்ச்சி. தன்னிடம் மீதி இருந்த சீட்டுக்களில் தேடின்னான். பரிசு விழுந்த சீட்டின் எண் வரிசைதான். ஆனால் அந்த எண் சீட்டு காசியிடமில்லை. காசி தான் வழக்காம விற்க்கும் வாடிக்கையாளர்களை பார்க்க ஓடினான். ஒவ்வொருவராய்த் தேடி கடைசையில் அது கனகம் வாங்கியிருந்த சீட்டு என்று தெரிந்தது. கனகத்திற்க்கு செய்தியை கேள்விப்பட்டதும் தலைகால் புரியவில்லை. தான் தினமும் வனங்கும் அந்த மாரியம்மன் தனக்கு கருணைகாட்டிவிட்டதாக சொல்லிக்கொண்டால். காசியிடம் சீட்டைக்கொடுத்து பரிசை வாங்கிக் கொடுக்குமாறு கேட்டுக்கொண்டால். காசியும் வாங்கிக்கொண்டு தன்னையும் கொஞ்சம் கவனிக்குமாறு பின் தலையை சொறிந்து கேட்டுக்கொண்டு முதலாளியை பார்க்கச் சென்றான். 

கோவிந்தராஜன் அதற்க்குள் கடையை காகிதப்பூக்களால் அலங்கரித்து விளம்பரம் செய்து கொண்டிருந்தார். காசி சீட்டைக்கொண்டு வந்து கொடுத்து அது கனகத்தின் சீட்டு, அவளுக்கு பரிசை வாங்கித்தருமாறுன்கேட்டுக்கொண்டான்.

"சரி சரி.. சீட்டை நாளைக்கே கோயம்புத்தூர் ஏஜன்சில குடுத்து பணத்தை வாங்கி கொடுத்து விடலாம்" என்றி சொன்னவாறே ஏஜன்சீக்கு போன் போட்டார்.

கனத்தின் வீட்டில் ஒரே கூட்டம். அக்கம் பக்கதிலுள்ளோரெல்லாம் விசாரிக்க வந்துவிட்டனர். தான் ஒரு முறை கொஞ்சம் கடன்கேட்ட போது ஏளனம் பேசிய அண்டைவீட்டு அம்சத்தின் காதில் விழும்படியே பேசிக்கொண்டாள்.

ரெண்டு காசு கைல வச்சிருந்தும் அவசறத்துக்கு கொடுக்காதவுகள பார்த்த அந்த மாரியாத்த தன்னை கவனித்து விட்டதாகவும், இனி அவசரத்திற்க்கு காசு வேண்டியவர்களுக்கு தான் இருப்பதாகவும், கொஞ்சூண்டு வட்டி கொடுத்தால் போதும் என்றவாறு தன்னையும் கவுண்டச்சியாக அறிவித்துக்கொண்டாள்.

சுந்தரிக்கு சைக்கிள், பட்டுப்பாவடை கிடைத்துவிடும் என்ற களிப்பு. மாரிச்சாமிக்கு இந்த செய்தி எட்டுமுன்பே அவர் பக்கத்து ஊருக்கு மம்மட்டியுடன் டவுண்பஸ் ஏறி விட்டார்.

தான் பரிசு வாங்கி செய்தி டிவி வரும் என்று அக்கம்பக்கத்தில் சொன்னதால் அருகில் உள்ள வீட்டில் சேரில் அமர்ந்து செய்திக்காக காத்திருந்தால். எப்போதும் சன்னலில் நின்று கம்பிகளுக்கு இடையில் டிவி பார்த்தவளுக்கு டி வியை விட உயரமான இடத்தில் உட்கார்ந்து காபியும் மிச்சருமாக டிவி பார்ப்பது ஆனந்தத்தை தந்தது. 

பூமி உருண்டை சுற்றிவந்து செய்தி வாசிக்கும் பெண்மணி திரையில் தோன்ற அவரின் சேலை கண்ணைப்பரித்தது. அங்கிருந்த அக்கம்பத்துக்காரர்கள் இனி கனகத்தை பார்ப்பது அவ்வளவு எளிதல்ல, டி வி யில் தோன்றும் பெண்ணைபோலவே இனி எப்போதும் புதிய ஆடைகளை கனகம் போட்டுக்கொள்வாள் என்றவாறு கிண்டலடித்துக்கொண்டிருந்தார்.

"தலைப்புச் செய்திகள்: தமிழக ஆளுனருக்கு உள்ள அதிகாரத்தின் கீழ் தமிழத்தில் இன்று முதல் லாட்டரிச்சீட்டுகள் தடை செய்யப்படுகிறது. ஏழை எளிய மக்களிடம் ஆசைகாட்டி ஏமாற்றும் நோக்கில் லாட்டரி வியாபாரம் நடை பெறுவதால் அதைத்தடுக்க முதல்வர் எடுத்த முயற்ச்சியால் லாட்டரிச்சீட்டுகள் தடை செய்யப்படுவதாக முதல்வர் அலுவலக செய்திக்குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது" என்றவாறு செய்தி வாசித்துக்கொண்டிருந்தார் அந்தப்பெண்மணி.

Wednesday, June 24, 2015

ஆணொரு பாகி

சாலையைக் கடக்கும்போது அந்த பெரிய விளம்பரப்பலகையில் துணிக்கடை விளம்பரப் பெண் இளநீலச் சேலையில் சிரிப்பதை பார்க்காமல் கடந்து செல்வது அவ்வளவு எளிதல்ல. அவள் எப்போதுமே நான் பார்க்கும்வரை என்னையே பார்ப்பது போலும், அவளை கடக்கும் வரை என்னையே பார்ப்பதும்போல் தோன்றும். வீட்டிலிருந்து வெளியே போகும்போது பாத்து போயிட்டு வாங்கன்னுதான் சொல்லியனுப்புவாள் என் மனைவி. அவள் சொல்வதை எப்படித்தட்ட முடியும். அந்த இளநீலச் சீலைக்காரியை பார்க்காமல் எப்படி போய்வர முடியும்?

ஆண்கள் பொதுவாகவே இரக்கம் இல்லாதவர்கள். அந்த விளம்பரப்பலகையில் அந்த பெண்ணை வெய்யிலிலும் மழையிலும் விட்டுவிட்டு சென்றுவிட்டார்கள். ஆண்கள் எப்போதுமே பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக காட்டிக்கொள்வார்கள். ஆனால் அந்த முக்கியத்துவத்தில் தனக்கான பகுதியை முதலில் எடுத்துக்கொள்வர். மாதொரு பாகன் - பெண்ணும் ஆணும் சரி சமம் என்று மக்கள் புரிந்துகொள்ள சிவபெருமான் அப்படி உருவெடுத்தார் என்று ஆண்கள் மட்டுமே சொல்ல கேட்டிருக்கிறேன். அது ஏன் "மாதொருபாகன்"? "ஆணொருபாகி" என்றல்லவோ இருக்கவேண்டும். 

"எங்கம்மா நல்லா சமைப்பாங்க"," என் மனைவி சமையல் நல்லா இருக்கும்" னு பெருமை பேசுவதெல்லாமே பெண்ணை புகழுவதல்ல. இதுவும் ஒருவகையில் அவர்களை சமையலில் கெட்டிக்காரர்கள் அதனால் அதையே தொடர்ந்து செய்யுங்கள் என்று சொல்லாமல் சொல்லி வைப்பது. இங்கே ஆண் பெண் சமத்துவம் பேசும் எந்த ஆணும் சமைப்பதில்லை. தெரியாது என்பது காரணமல்ல. தெரிந்து கொள்ளத்தேவையில்லை என்பதே எண்ணம். மனைவி திருமணம் ஆகும்போது சமையல் தெரியாமல் இருந்தால், அவளுக்கு தெவையான அளவு கால அவகாசம் கொடுத்து இண்டர்னெட்டிலோ வார இதழ்களிலிலோ வரும் சமையல் குறிப்புகளைக்கொடுத்து சமைக்க கற்றுக்கொள்ள வாய்ப்புகள் ஏற்ப்படுத்தி கொடுக்கப்படும். ஆனால் தவறுதலாக கணவன் சமையல் கற்றுக்கொள்வதைப்பற்றி எந்த சிறு பேச்சும் இருக்காது. மனைவி வேலைக்குப் போய்க்கொண்டிருந்தாலும் சமையலும் அவள் பொறுப்புதான்.

குழந்தையை பெற்றெடுப்பதிலிருந்து வளர்த்தெடுக்கும் ஒவ்வொரு நாளும் எண்ணிலடங்கா வேலைகள். அவைகள் எதுவுமே சமூகத்தின் கண்களில் ஒரு வேலையாய் தெரிவதில்லை. எல்லாம் "தாயின்" கடமை. ஆண் ஒரு குடும்பத்திற்க்கு அதிகமாகச்செய்யும் கடமை பொருளீட்டுவது. ஒரு பெண் இன்றைய கால கட்டத்தில் ஆணுக்கு சமமாக தனது கல்வியால் பொருளீட்ட முடியும். ஆனால் ஒரு பெண் செய்யும் வீட்டு வேலைகளை ஆண் செய்ய முடியாது. அதுவும் இந்தியச் சூழலில் படித்த ஆண்களே பெண்களுக்கான வேலைகள் என்று ஒதுக்கி அவற்றை செய்வதில்லை. இது வேலை என்பதன் பொருட்டு சொல்லவில்லை. ஒரு சக மனித உயிர் என்ற வகையில் தன்னுடைய பங்கு கடமையை செய்வதில் அவ்வளவு ஆர்ப்பாட்டம். நிச்சையம் இந்தச் சூழல் வருங்காலத்தில் மாறும். அதற்க்கொரு உதரணமாக என்னுடன் பணிசெய்த ஒரு அமெரிக்கப்பெண் மணியின் வாழ்க்கையை உதரணமாக எடுத்துக்கொள்ளலாம்.

இங்கு எல்லா கடமைகளும் சமமாகவே பிரித்துக்கொள்ளப்படுகிறது. வீட்டு வேலைகளிலிருந்து பொருளீட்டுவது வரை. எங்குமே ஒரு ஆண் பெண்ணிடம் தன் அதிகாரத்தை செழுத்த முடியாது. ஒரு நேரம் கணவன் சமைத்தால் இன்னொரு நேரம் மனைவி சமைப்பது. இருவருக்குமே சமைக்க மனமில்லையென்றால் துரித உணவை (சீரியல், பர்கர்) உண்டுகொண்டு இருவருமே வேலைக்கு சென்று வருவர். வீட்டுக்கடனில் இருவருக்கும் பங்கு. இருவரும் தனக்கான பங்கை மாதத்தவனையில் செழுத்தி விடுகின்றனர். ஒரு பெண் தாராளமாக தன் சக நண்பர்களுடன் ஆணைப்போலவே மது அருந்தலாம். நாம் நினைப்பது போல அளவுக்கு அதிமாக குடித்துவிட்டு ரோட்டில் ஆடுவதில்லை. அங்கேயும் நாகரீகத்தை அவர்களிடம் கற்றுக்கொள்ளவேண்டும். எந்த நிலையிலும் அவர்கள் தங்களின் மீதான மரியாதையை குறைக்கும் சூழ் நிலைக்கு வாய்ப்பளிப்பதில்லை. குழந்தைகளை பள்ளிக்கு கொண்டுபோய் விடுவதாகட்டும், தன் பெற்றோர்களுக்கு உதவுவதாகட்டும் கணவன் மனைவிக்கிடையே தங்களுடைய பங்கை தன் துணையுடன் பகிர்ந்து செய்து முடித்துக்கொள்கிறார்கள். ஒரு வேளை கணவன் மனைவியாக தொடர்ந்து மனதொத்து போய் வாழ முடியாத சூழலில் பிரிந்து போக ஆலோசனையைப் பெறுகிறார்கள். இருவரும் சம்மதித்து பிரியும் சூழலில் தங்கள் சொத்துக்கள் மற்றும் கடன்களை பிரித்துக்கொள்கின்றனர். பெரும்பாலும் பெண் குழந்தைகளை வளர்த்தெடுக்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறால். பிரிந்த பின்னும் குழந்தைகளை சந்திப்பதற்கு பழகுவதற்க்கு மற்றும் பராமரிப்பு செலவை சட்டம் வகுத்துள்ள முறையில் ஏற்றுக்கொள்கிறார்கள். ஒரு பெண் தன் கணவனால் ஆபத்து என்று கருதும் பட்சத்தில் நீதமன்றம் மூலம் விலக்கியிருக்கும் ஆணை பெற்றுக்கொள்ள முடியும். இதன் மூலம் அந்த ஆண் இந்த பெண் இருக்கும் சுற்றளவற்கு 50 அடி சுற்றளவிற்க்குள் பிரவேசிக்க கூடாது, மீறும்போது அது கிரிமினல் குற்றமாக கருதப்பட்டு தண்டனை அளிக்கப்படும். 

என்னுடன் பணியாற்றிய பெண்மணி ஏறக்குறைய மேற்ச்சொன்னவற்றில் எல்லாவற்றையுமே கடந்து வந்து விட்டார். அவரது பிரிந்த கணவர் வேறொரு பெண்மணியுடன் வாழ்கிறார். பள்ளி விடுமுறை நாட்களில் தன் இரு குழந்தைகளை அழைத்துக்கொண்டு சுற்றுலா சென்று வந்ததைச்சொன்னபோது நம் இயக்குனர் விக்ரமனை விட விசால மனம் கொண்ட பெண்மணி என்பது புரிந்து கொண்டேன். குழந்தைகள் தன் தந்தையும் சுற்றுலாவிற்க்கு வர விருப்பம் தெரிவித்ததால் அவரும் அவர் முன்னால் கணவருடன் பேசி சுற்றுலாவிற்க்கு வருகிறார். ஆனால் அவருடைய தற்போதைய மனைவியுடன்!... தன் பிள்ளைகளின் வாழ்க்கையை கருதி இந்தப்பெண்மணி இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. எல்லா சுமைகளையும் தன்னகத்தே தாங்கிக்கொண்டு வாழ்க்கையை இயல்பாய் எடுத்துச்செல்கிறார். எந்த ஒரு கணத்திலும் கண்ணீர் விடுமளவர்க்கு அவர் வருந்தியதை வெளிக்காட்டியதில்லை. அவர்கள் ஆணை விட தனக்கிருக்கும் மன வலிமையைக்கொண்டு வாழ்ந்து காட்டுகிறார்கள். 

என்னதான் மேலை நாட்டு கலாச்சாரத்தை பழித்தாலும், உண்மையில் நம் கலாச்சாரம் பெண்களின் நிலமையை படு மோசமாக வைத்திருக்கிறது. கற்ப்பு என்ற ஒரு வார்த்தையை வைத்து பெண்ணை அடிமையாக வைத்துக்கொள்கிறது. எந்தச் சூழலிலும் நம் கலாச்சாரம் சிறந்தது என்று வெளியில் போய் சொல்லிக்கொள்ள முடியாது. எப்படி தனக்கு அடிமையாய் இருக்க சாதிய அடுக்கை ஆதிக்க சக்திகள் சமுதாயத்தில் உருவாக்கியதோ அதே முறையில் வீட்டிற்க்குள் பெண்ணை அடிமையாக வைத்திருக்க சடங்குகள், வரைமுறைகள் சமூக சிந்தனைகளை வளர்தெடுத்திருக்கிறது நமது கலாச்சாரம்.

பூவுலகின் முதல் மனித உயிர் பெண்ணே, அவள் ஒரு ஆணின் துணையின்றி தன் வாரிசைப் பெற்றெடுத்திருக்க முடியும் என்று ஆய்வுகள் சொல்கின்றன. ஆண்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் பெண்கள் தங்களுக்கான சுயமரியாதையை, சுதந்திரத்தை நோக்கி பயணிக்க ஆரம்பித்து விட்டார்கள். கால தாமதம் ஆனாலும் அதை யாராலும் தடுக்க முடியாது.

ஆண்களைப் பொறுத்த அளவில் உளவியல் ரீதியாக அவர்கள் பண்பாட்டு/ கலாச்சார மாற்றத்திற்க்கு தயார் படுத்திக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் அந்த மாற்றம் பிற்க்காலத்தில் வலிமையுடன் புகுத்தப்படும்போது ஏற்ப்படும் பாதிப்பை தாங்கிக்கொள்ள முடியாத சூழல் உருவாகலாம்.

பெண் நடமாடும் உயிருள்ள சக மனிதராய் இருந்தாலும் அவளை விளம்பரப் பலகையில் இருக்கும் பாவையைப்போலவே வைத்திருக்க எண்ணும் சமுதாயம் அதை நீண்டகாலம் தொடர முடியாது. 

Tuesday, June 23, 2015

ஓதி மலை

கடவுள் நம்பிக்கையில் மாறுபட்ட கருத்து இருந்தாலும் மற்றவர் நம்பிக்கையின்பால் நமக்குள்ள புரிதல்களாலும், ஏனையோருக்கும் பயன்படும் என்ற நோக்கில் "ஓதி மலை" பற்றிய சிறு குறிப்பு.

புன்செய் புளியம்பட்டியிலிருந்து சிறுமுகை -மேட்டுப்பாளையம் செல்லும் வழி அல்லது பவானிசாகரில் இருந்து சிறுமுகை செல்லும் வழியில் இரும்பறையை அடுத்து இந்த மலை உள்ளது. இது மிகப்பழமையான பாடல்பெற்ற முருகன் கோவிலாகும். இங்கு அமைந்த முருகன் கோவில் வரலாறு கீழ்க்கண்டவாறு சொல்லப்படுகிறது. படைத்தலை தொழிலாகக்கொண்ட பிரம்மனிடம் முருகன் சோதிப்பதற்க்காக பிரணவமந்திரத்தையும் அதன் பொருளையும் கேட்டுள்ளார். பிரம்மன் பரிட்சைக்கு படித்தபோது மனப்பாடம் செய்ததை வேலை செய்யும்போது மறந்து தொலைத்துவிட்டதால் அவரால் பதில் சொல்ல முடியவில்லை. இப்படி சரியாக பார்முலா தெரியாமல் நீ படைத்து கிழித்தது போதும் என்று சொல்லி பிரம்மாவை ஒரு இரும்பு அறையில் சிறைவைத்துவிட்டு தானே படைப்புத்தொழிலை செய்ய ஆரம்பித்தார். முருகனுடைய உற்ப்பத்தியில் எந்த குறைவுமில்லாமல் உயிர்கள் நீண்ட நாள் வாழ்ந்தன. அதனால் எடை தாங்க முடியாத பூமி புராஜக்ட் மேனஜரான சிவபெருமானிடம் போய் முறையிடுகிறாள். இப்படி டிபக்ட் இல்லாமல் சர்வர் ஓடினால் உலகம் தாங்காது என்று. உடனே சிவ பெருமான் முருகனிடம் சென்று ஒரு மீட்டிங் போட்டு ஆர்க்கிடெக்ட் வேலையை பிரம்மாவே செய்யட்டும், உனக்கு வேறு புராஜக்டில் அசைன்மெண்ட் கொடுக்கிறேன் என்று சொல்லி ஒரு வழியாக பிரம்மாவிற்க்கு பழையபடி புரடக்சன் லைன் ஓட்ட அசைக்ன் மெண்ட் வாங்கி கொடுத்துவிட்டார். மீட்டிங்கின் போது முருகன் பிரம்மாவிற்க்கு பிரணவ மந்திரமே மறந்து விட்டதாகவும் இவரை நம்பி படைப்பை கொடுத்தால் உலகம் அழிந்து விடும் என்று அவர் விளக்கத்தைச் சொல்லும்போது, "உனக்கு விளக்கம் தெரியுமா?" என்று சிவ பெருமான் கேட்க, முருகப்பெருமான் சிவனின் தோள்மீது அமர்ந்து விளக்கத்தை சொல்கிறார். சுவாமி மலையில் சொன்ன விளக்கத்திற்க்கு கூடுதலான விளக்கங்களையும் சந்தேகங்களையும் இங்கு தீர்த்து வைக்கிறார். அவர் சொல்வது ஒரு ஆசிரியர் மாணவனுக்கு பாடம் சொல்வது போல் இருந்ததால் "ஓதி"  னார் என்றும், அவர் ஓதிய இடம் "ஓதி மலை" என்றும் பெயர் பெற்றது. பிறகு இங்கு போகர் பழனிக்கு வழி தெரியாமல் முருகனுக்காக சிலை வடித்து தவம் புரிந்ததாகவும் சொல்லப்படுகிறது. போகரின் குகையையும் இங்கு காணலாம். இங்கு இருக்கும் முருகனுக்கு ஐந்து தலைகள், எட்டு கரங்கள். பிரம்மாவைப் போலவே ஐந்து தலைகள் கொண்டு படைப்பைச் செய்ததனால் இங்கு ஐந்து தலைகளுடன் காட்சியளிக்கிறார் ஆறுமுகப்பெருமான்.

நம்பிக்களுக்கு அப்பால் இது ஒரு மிகச்சிறந்த இயற்கை எழில் கொஞ்சும் மலை. இன்று பல்வேறு உடல் நலப் பிரச்சினையுள்ளவர்கள் மாதம் ஒரு முறை மலையேறி வந்தால் பெரும்பாலான பிரச்சினைகள் தீர்ந்துவிடும். எப்படி? இந்த மலையின் படிக்கட்டுகள் பாதி வரை ஓரளவு எளிதில் ஏறும் வகையிலும் மீதி படிக்கட்டுகள் சற்று செங்குத்தாகவும் இருக்கும். மாதமொருமுறை அதிகாலையில் இந்த மலையை ஏறி இறங்கும்போது தூய காற்றை சுவாசித்து முச்சுக்குழல் விரிவடைந்து நல்ல ரத்த ஓட்டமும், உடல் வியர்த்து வேண்டாத கொழுப்புகள் கரைந்து உடலுக்கு ஒரு மிகச்சிறந்த பயிற்ச்சியை கொடுக்கும். அடிக்கடி மலையேறி இறங்குபவர்கள் உடலின் கொழுப்பு, இதய துடிப்பு மற்றும் ரத்த ஓட்டத்தையும் சீறாக வைத்துக்கொள்ள முடியும். உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் தாராளமாக மாதமொருமுறை மலையேறி இறங்கலாம். சஷ்டி நாட்களில் அதிகாலை கோவில் திறந்து பூஜையும் நடைபெரும். ஆதலால் சஷ்டி நாட்களை தேர்வு செய்துகொள்ளலாம். இளையவர்கள், இன்னும் திறன் மிகுந்தவர்கள் கொஞ்சம் எடையை தூக்கி ஏற முடியும் என நினைப்பவர்கள், கோவில் திருப்பணிக்காக மணல் மற்றும் சிமெண்ட் சிறு மூட்டைகளாக எடுத்துச்செல்லும் அளவில் கட்டி அடிவாரத்தில் வைத்திருக்கிறார்கள். உடல் பயிற்ச்சிக்கக அவற்றையும் மேலே கொண்டு சேர்க்கலாம். 

கோவிலுக்கு போகின்றவர்கள் தயவு செய்து தனி வாகனங்களில் போக வேண்டாம். இன்னும் இந்த மலை இயற்க்கை சூழலுடன் இருக்கிறது. பேருந்தோ அல்லது சைக்கிள்களிலோ சென்று  வாகனப்புகையை தவிற்த்து சூழலை காக்க வேண்டுகிறோம்.

Sunday, June 21, 2015

ஊர் - 2

ஊரைப்பற்றி பேசுவது கள்ளைக்குடிப்பதுபோல் பருகப்பருக இன்பம்..

இன்றைக்கு பிள்ளைகள் பிளேஸ்டசனிலும் எக்ஸ் பாக்ஸிலும் விளையாடுவது ஏனோ அவ்வளவு உற்சாகமானதாய்த் தெரியவில்லை. சில நேரங்களில் ஏன் ஊர் கிரிக்கெட் மைதானங்களைக் கொண்டு இந்த கேம்களை செய்ய மாட்டேனென்கிறார்கள் என்று தோன்றும். எத்தனை மைதானக்கள்?... எங்கள் பகுதி பையன்களுக்கு மேல்காடு, கீழ்காடு கிரி வீட்டுக்கு பக்கதிலிருக்கும் காடு அப்புறம் பள்ளிக்கூட கிரவுண்டு....சனிக்கிழமை ஞாயிற்றுக்கிழமைகளில் காலையில் ஆறு மணிக்கெல்லாம் கிரிக்கெட் மேச் ஆரம்பித்து விடும். பள்ளிக்கூட நாட்களில் வேறு பகுதி பையன்களின் டீமுடன் மேச் பிக்ஸ்(இது அந்த மேச் பிக்ஸிங் இல்லை) செய்யப்படும். நமக்கு சேத்தி இரண்டு மூன்று வட்டங்களில் இருப்பதால் எப்பொதும் ஏதாவதொரு மைதானத்தில் ஏதாவதொரு டீமிற்க்கு பவுளிங் போட்டுக்கொண்டிருப்பேன். எங்கள் பூர்வாங்க டீம் பெயர்போனது. முதலில் பேட்டிங் செய்து முடித்துவிட்டால் பீல்டிங் செய்து கொண்டிருக்குபோது ஒவ்வொருவராக நழுவி அவரவர் வீட்டிற்க்கு போய்விடுவர். பீல்டிங் பொசிசனைக்கூட அவனவன் வீட்டருகில் பார்த்து செலக்ட் செய்து கொள்வார்கள். இது போன்ற பிரச்சினைகளைத் தவிற்க எங்கள் கேப்டன் சமயோகிதமாக யோசித்தி எல்லருக்கும் பந்து வீச வாய்ப்பேற்ப்படுத்தி விடுவார். இல்லையென்றால் கேப்டன்களுக்குள் நடக்கும் சொற்ப்போரில் பாயும் ஆயுதங்கள் பேரழிவை உண்டாக்குபவையாக இருக்கும். எப்படி ஸ்கோரிலும், அம்பயரிங்கிலும் கேப்மாரித்தனம் செய்தாலும் சில வேளைகளிள் அணி தோல்வியைத் தழுவிவிடும். அது போன்ற சமையங்களில் பக்கத்தில் ஆடு மேய்த்துக்கொண்டிருப்பவனை டீம் கேப்டனாக்கி  எதிரணியின் ஸ்கோர் நோட்டில் "தோல்வி பெற்ற கேப்டன்" என்னும்மிடத்தில் கையெழுத்திட வைத்துவிடுவோம். இதற்க்காகவே எதிர் அணியினர் பல்வேறு நிபந்தனைகளுக்குப் பின்னரே மேட்ச் விளையாட சம்மதிப்பர்.

மேல்காடு... இன்னொரு பெரும் கிரிக்கெட் மைதானாம். இங்கு பல கார்க் பால் டோர்னமெண்ட்கள் நடக்கும். இப்போது அந்த இடம் வீட்டு மனைகளாக பிரிக்கப்பட்டு மைதானம் இருந்த சுவடே இல்லாமல் இருக்கிறது. அந்த மைதானத்தின் ஓரத்தில் கிணற்றடியில் இருக்கும் பிள்ளையார் கோவில்தான் பெவிலியன். அங்குதான் ஸ்கோர் மற்றும் கமெண்டரி செய்யப்படும். எவ்வளவு பெரிய மைதானாம்...இப்போது காலியிடத்தை பார்க்க முடியாத குடியிருப்புகள். ஊர் வளர்ந்தால் பையன்கள் தங்கள் உலகத்தை சுருக்கிக்கொள்ள வேண்டுமா.. இந்த தலைமுறை பையன்கள் எங்கே கிரிக்கெட் விளையாடுவார்கள்?...

தொழில்வளர்ச்சி - மிகப்பெரிய தொழிற்ச்சாலைகளை நம்பியெல்லாம் ஊர்ப்பொருளாதாரம் இல்லை. வேண்டுமானால் சுற்றியிருக்கும் நூற்ப்பாலைகளை தொழிற்ச்சாலைகளுக்கு ஒப்பிடலாம். வி ஆர் டி  - ஓரளவு பெரிய நூற்ப்பாலைதான். தோராயமாக இரண்டாயிரம் குடும்பங்கள் அந்த நூற்ப்பாலையை நம்பி பிழைப்பை ஓட்டிக்கொண்டிருந்தன. ஊரின் இன்னொரு கடிகாரம் இந்த மில்லின் சங்கொலி. ஒவ்வொரு சிப்ட் முடியும்போதும் தவறாமல் சங்கொலிக்கும். அந்த சங்கொலி ஊர் முழுதும் கேட்கும். இப்போதெல்லாம் அந்த சங்கொலி ஒலிப்பதில்லை. மில் முதலாளிகளுக்கு நட்டம் ஏற்ப்பட்டுவிட்டதால் மில்லை மூடிவிட்டு வேறு தொழிலுக்குப்போய் விட்டனர். தொழிலாளர்களுக்கு வேறு வேலை தெரியாமல் அங்கொன்றுமாய் இங்கொன்றுமாய் இருந்த சின்ன சின்ன மில்களுக்கு போய்விட்டனர். சிலர் இடம்பெயர்ந்து ஊரைவிட்டே போய்விட்டனர்.

அடுத்து சொல்லக்கூடிய அளவுக்கு பொருளாதாரத்தை கொடுத்தது கைத்தறி, சந்தை வியாபரம் மற்றும் விவசாயம். என்ன காரணத்தாலோ பல குடும்பங்களுக்கு மூன்று வேலை சோறு போட்டுக்கொண்டிருந்த சர்வோதையபவன் நலிவடந்து பல கதர் நெசவாளர்கள் ஊரைவிட்டு வெளியேறி விட்டனர். இப்போதெல்லாம் யார் கதர் வேட்டி கட்டுகின்றனர். மேலும் விசைத்தறின்வந்த பிறக மனித உழைப்பிற்க்கு ஏது மறியாதை. வாரம் கூடி குடும்பத்தில் நான்கு பேர் உழைத்து பத்து பதினைந்து வேட்டி நெய்து அறுபது எழுபது என்று கூலி வாங்கிவந்து பிழைப்பை ஓட்டிக்கொண்டிருந்தனர். பொருளாதார தாரளமயம் பருத்தி மற்றும் பாலியெஸ்டர் இறக்குமதியினால் உள்நாட்டு பருத்தி மற்றும் கதர் ஆடைகள் வேண்டாப்பொருளாகிவிட்டது. மேலும் அரசியல் வாதிகள் மில் காட்டன் துணிகளுக்கு மாறிவிட்டதாலும், கதர் உடுத்திய காங்கிரஸ்காரர்கள் மறைந்து விட்ட காரணத்தாலும் அந்த குடும்பங்கள் திருப்பூர் பனியன் கம்பெனிகளுக்கு கூலித்தொழிலாளியாக மாறி தினந்தோறும் திருப்பூர் பஸ் ஏற ஆரம்பித்தார்கள்.

இன்னொரு கைத்தறி கோரா பட்டு நெசவு. இன்றளவும் ஓரளவு குடும்பங்களுக்கு சோறுபோடும் தொழில். இந்த தறியில் நெய்யும் சேலைகளும் அதன் பட்டு பின்னல்களை எளிதில் விசைத்தறிகளில் நெய்ய முடியாததும், பெண்கள் இன்னும் சேலைகளை விரும்புவதும் இந்தத்தொழில் அழியாமல் இருப்பதற்க்கொரு காரணம். ஆனாலும் கடை நிலைத் தொழிலாளர்கள் வாழ்வில் அப்படியொன்றும் பெரிதான பொருளாதார முன்னேற்றம் அடைந்துவிடவில்லையென்றே சொல்லலாம்.

வேட்டியை நம்பி வாழ்ந்தவர்களை விட சேலையை நம்பி வாழ்ந்தவர்கள் பிழைத்துக்கொண்டது நாம் இன்னும் பெண்கள் சார்ந்த சமூகம் என்றும் பெண்களை நம்புவோர் கைவிடப்படார் என்ற உணமையை புரிந்துகொள்ளவும் உதவும் என்றே புரிந்து கொள்ளலாம்..

(விவசாயம் மற்றும் கல்வி பற்றி அடுத்த பதிவில்..) 





ஊர் - 1

வழக்கமாக ஊர் நடப்புகளைப்பற்றி திண்ணையில் விவாதிப்பது போலவே இந்த முறை "ஊர்ப்பெருமை" பற்றி விவாதிக்கிறோம். இந்த விவாதப்பொருளைத் தந்த இந்த வார நீயா நானாவிற்க்கு நன்றி.
ஊர் - என்றாலே நமது சொந்த ஊர்தான் என்று பொருள்கொள்ளுமளவிற்க்கு நாம் ஊர்புரத்தான்கள். இந்த ஒரு வார்த்தை நமக்குள்ளே கொண்டு வந்து சேர்க்கும் நினைவுகள் ஆயிரம் ஆயிரம். பிறந்து வளர்ந்த சொந்த ஊரைப்பிடிக்காதவர் இங்கு யார் உள்ளார்?. படிப்பு முடித்தும் சொந்த ஊரில் குடும்பம் நடத்தும் நண்பர்கள் அதிர்ஸ்ட சாலிகள். அவர்களுக்கு ஊர் எதையோ ஒன்றை கொடுத்தோ அல்லது பறித்தோ தன்னகத்தே வைத்துக்கொண்டு அவர்களை வெளியில் விடாமல் பிடித்துக்கொண்டிருக்கிறது. பிழைப்பிற்க்காக சென்னை வந்து, பின் ஹைதராபாத், பின் நியூயார்க், ஆர்கன்சா, சிக்காகோ என்று சுற்றிக்கொண்டே இருக்கும் என்னைப்போன்ற பரதேசிகளுக்கு ஊர் மீது இந்த விசயத்தில் கொஞ்சம் கோபம்தாம். என் சகாக்கள் சிலருக்கு வாழ்வையும் வளத்தையும் கொடுத்து இருக்க வைத்துக்கொண்ட ஊர் என்னை பிடியின்றி விட்டுவிட்டதே என்னும்போது கொஞ்சம் வருத்தம்தான். இருந்தாலும் விடுவதாய் இல்லை.. அம்மாவைபோல அடித்தாலும், திட்டினாலும் அணைத்துக்கொள்ள அவளைத்தவிர வேறு யார் இருக்கிறார் எங்களுக்கு? வேறு ஊர் எங்களுக்கு ஏது? எங்குபோனாலும் தினம் ஒருமுறையாவது ஊர் வந்துபோய்விடும். சிகாகோவில் புளியமரம் இல்லை, சந்தைக்கடை இல்லை. ஏன் பேருந்து நிலையம் கூட இல்லை. சொல்லப்போனால் டவுன் பஸ் கூட இல்லை.
இன்றைக்கு இருக்கும் ஊர், நம்மப்போலவே வளர்ந்து பேண்ட், முழுக்கை சர்ட் போட்டு நாகரிமடந்து கடுவிட்டது, அடுக்குமாடி கட்டிடங்களும் சாலை நிறைய வாகனங்களையும் கொண்டு. எப்படி நாம் ஒன்னாம் வகுப்பு ரெண்டாம் வகுப்பு கருப்பு வெள்ளை போட்டோ பார்த்து பரவசமடைகிறோமோ அதுபோல ஊரின் கருப்பு வெள்ளை பிம்பமும் பரவசத்தை ஏற்ப்படுத்தும்.
எங்கள் வீதியெல்லாம் அப்போது காங்கிரிட் சாலைகளில்லை. ஏன் சாக்கடை கூட இல்லை. சிறிய வாய்க்கல் போல வீதியின் ஓரத்தில் வெட்டியிருப்பார்கள். அன்றைய வீதி எப்படி எங்களையெல்லாம் வைத்துக்கொண்டு விசாலமானாதாய் இருந்ததென்று தெரியவில்லை. எப்படி காற்று வெப்பத்தால் விரிவடைந்தும், குளிரால் சுருங்கியும் போய்விடுகிறதோ அதுபோல வீதிகள் காலத்தால் சுருங்கிவிடுகிறதோ?. இன்று காரைக்கொண்டு நிறுத்தினால் வீதியில் யாரும் போய்வர முடியாது. எங்கள் வீதிக்கு கார் பிடிக்கவில்லை என்று புரிந்துகொண்டேன். ஆம் கார் நம்முடைதில்லை.. அது நமக்கானதும் இல்லை.. நம்மை தெரிந்த வீதிக்கு தெரியாதா அது... இப்பொதெல்லாம் வீதியில் செல்வதானால் காரை தூர நிறுத்திவிட்டு கால்நடையாக.. இல்லை இல்லை..எனக்கும் வீதிக்கும் உள்ள உறவை தொட்டுக்கொள்ளாமல் எப்படி தொடர்வது... இன்னும் அந்த டியூப் லைட் போஸ்ட் இருக்கிறது.. சிறுவனாய் இருந்த போது அதுதான் எங்கள் மைதானத்திற்க்கு ஒளிவெள்ளம் பாய்ச்சும் விளக்கு.... பரிச்சைக்கு கூட்டாக படிக்கக்கூட அந்த விளக்குதான்.. நல்ல விளக்கு.. புத்தருக்கு போதி மரமென்றால் எங்களுக்கு அந்த மின் விளக்கு... அறிஞர் அண்ணா தெரு விளக்கடியில் படித்துதான் அறிஞரானார் என்று அப்பா சொல்லும்போதெல்லாம், தெருவிளக்கு எப்படியும் என்னையும் அறிஞனாக்கிவிடும் என்று நம்பிக்கொண்டேன்...
எல்லோர் வீடும் வீதியில் ஓட்டு வீடுதான்.. யார் சொன்னார்களோ தெரியவில்லை ஓட்டுவீடு ஏழ்மையின் அடையாளம் என்று.. படித்து முடித்து வேலைக்குபோனதும் எல்லா பையன்களும் கை வைத்தது ஓட்டு வீட்டின்மேல்தான். இப்போது எங்கள் வீதியில் ஓட்டுவீடுகள் இல்லையென்றே சொல்லலாம்.. ஆனால் எல்லோருமே இன்னும் ஏழைகள்தான்..இல்லையென்றால் நிறைவாக வீட்டில் நிம்மதியாக வாழ்ந்துகொண்டிருக்க வேண்டுமல்லவா?.. எங்காவது ஒரு இடத்தில் பொருளைத்தேடி அலைந்து கொண்டே இருக்கிறார்கள், ஒரு பிச்சைக்காரனைப் போல..
சந்தைக்கடை... தமிழ்நாட்டிலேயே இரண்டாவது பெரிய சந்தை எங்க ஊர் சந்தை.. ஒரு விளம்பரம் தான்..பெரிய சந்தையென்றால்.. பெர்ர்ர்ர்ர்ரிய சந்தைதான்..இன்றைக்கு புரூக் பீல்டு மால், சிட்டி சென்றல், பீனிக்ஸ் மால்னு கடைகடையா ஏறி இறங்கி காய்கறி வாங்குபவனுக்கு தெரியும், சைக்கிளில் சென்று அம்மாவுடன் சந்தை செலவு செய்வது எவ்வளவு சந்தோசமானது என்று. சந்தையில் கிடைக்காத பொருளே இல்லை... தக்காளி, பீர்க்கங்காய், உருளைக்கிழங்கு எல்லாமே பிரெஸ்ஸாக கிடைக்கும். எதற்க்குமே கெட்டுப்போகமல் இருக்க குளிரூட்டிகள் இல்லை. கடைகளுக்கு கூரை சாக்குத்துணிகளே. சில பணக்கார அதிபர்கள் தார்பாலின் கூரையமைத்திருப்பார்கள். எல்லாக்கடைக்காரர்களுக்கும் நிரந்தர வாடிக்கையாளர்கள் இருப்பார்கள். புது வாடிக்கையாளர்களை அவ்வப்போது அழைத்துக்கொண்டே இருப்பார்கள். நாலாணாவிற்க்கும், எட்டணாவிற்க்கும் சில நேரங்களில் பெரிய பேரம் நடக்கும். கருவேப்பிலை கொத்தமல்லி தழைகள் எப்பொதும் இலவசமே. ஆங்காங்கே மாட்டு வண்டிகளில் அரிசி மூட்டைகளை ஏற்றி இறக்கிக் கொண்டிருப்பார்கள், மல்யுத்த வீரனைப்போல உடல்வாகு கொண்ட அண்ணன்கள். என்னதான் முக்கினாலும் நூறுகிலோ மூட்டையை நம்மால் இரண்டு அடிகூட நகர்த்த முடியாது. ஆனால் மணியண்ணன் சாதரணமாக இரண்டு மூன்று மூட்டைகளை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி இறக்கி ஏற்றி விடுவார். அவர்கள் இப்போதெல்லாம் என்ன செய்து கொண்டிருப்பார்கள்?...அந்த சந்தைக்கு நான்கு அல்லது ஐந்து வாயில்கள்... சந்தைக்கு இரண்டு மூன்று நாட்களுக்கு முன்னரே ஆடு மாடுகளை வெளியூரிலிருந்து ஓட்டி வருவார்கள். எங்கள் வீதி அந்த மூன்று நாட்களும் போக்கு வரத்து அதிகம் பார்க்கும். வீதியெங்கும் மாட்டுச்சாணமும் ஆட்டு புலுக்கையும் நிறம்பியிருக்கும்..சந்தைக்கு போகும் பிரதான பாதைகளில் ஒன்றல்லவா அது...
பெரிய சாலைகள் இரண்டின் புறங்களிரண்டிலும் புளியமர அணி வகுப்பு எப்போதும் இருக்கும்.. இன்னும் கூட சில அப்படியே தான் நிற்க்கின்றன..புளியமரங்கள் இல்லையென்றால் எங்கள் ஊரிற்க்கு வேறேதாவது பெயர் வந்திருக்கும்... நல்லவேளை அப்படியேதும் நடக்கவில்லை...பவானிசாகர் சாலையில் அப்போதெல்லம் இரண்டோ மூன்று பஸ்கள்தான் செல்லும்.. ஒன்று செந்தில் என்பது நியாபகம் இருக்கிறது.. அது பண்ணாரிவரை சென்று வரும். அந்த சாலையில்தான் எஸ் ஆர் டி தியேட்டர் இருக்கிறது. ரஜினி படங்களை வெளியிடுவதில் எஸ் ஆர் டி கவுண்டர் கில்லாடி. எப்படியும் அடித்து பிடித்து படத்தை முதல் ரிலீஸ் செய்து விடுவார். ரஜினி படங்களுக்கு டிக்கட் விற்ப்பது முதல் டிக்கட் கிழிப்பது வரை எல்லாமே ரசிகர் மன்றம் உரிமையுடன் எடுத்துச் செய்யும்... ஆண்கள் பெண்கள் என்று பிரித்து வைக்கப்பட்ட டிக்கெட் கவுன்டர்கள். ரூ 1.50 பெஞ்சு முதல் 4.50 சேர் வரை ஒரு கவுன்டரிலும் ரூ5.50 மேல் வரிசை சீட் மற்றும் ரூ 7.00 பால்கனி சோபா ஒரு கவுன்டரிலும் இருக்கும். இன்றைக்கு இருக்கும் அவ்வளவு பெரிய பொருளாதார பாகுபாடெல்லாம் கிடையாது(:-)). இன்றுகூட "உள்ளம் உருகுதைய்யா..உன்னடி காண்கையிலே.." என்ற முருகன் பாடல் ஒவ்வொரு காட்சிக்குப்பின்னும் ஒலிக்கும்.. வீட்டில் அம்மாவுக்கு கடிகாரம் அந்த பாட்டொலிதான்.. என்ன காரணத்தாலோ இப்போதெல்லாம் சத்தம் குறைவாகவே இருக்கிறது.
ஊர் கதை பெரிதென்பதால் நாளையும் தொடருவோம். 

Wednesday, June 17, 2015

எழுத்தும் வாசகனும்

இரண்டு வரிக்கு மேல் எழுதினால் பெரும்பாலான முகநூல் பயன்பாட்டளர்கள் திரையை இழுத்துவிட்டு நகர்கின்ற இந்த காலத்தில் பக்கம் பக்கமாக கட்டுரைகளையும் கதைகளையும் எழுதி பத்திரிக்கைகளுக்கு எழுதி, தமது படைப்பு பிரசுரமாகுமா என்ற எதிர்பார்ப்புடன் வார இதழ்களை காத்திருந்து தேடும் முந்தைய தலைமுறை எழுத்தாளர்களை நினைக்கும்போது, ஒரு பத்து வருடங்களில் எழுத்தும் அதன் வாசிப்பும் கற்ப்பனை செய்ய முடியாத வளர்ச்சி அடைந்திருப்பது வியப்பளிக்கிறது.

ஒரு பிரபல எழுத்தாளர் மற்றும் பதிப்பாளர் இன்றை தலைமுறையின் வாசிப்புப் பழக்கத்தைப்பற்றி கவலையுடன் இப்படிச்சொல்கிறார், "புத்தக வெளியீட்டின் போது புத்தகங்களை தாங்கி புகைப்படம் எடுத்தது போய், மின் நூல் வெளியிடுவதற்க்கு செல்லிடப்பேசித் திரையை காண்பித்து புகைப்படம் எடுத்துக்கொள்கிறோம்" என்று. உண்மையில் நமக்கே அது நூல் வெளியீடா அல்லது புதிய செல்லிடபேசியா வெளியீடா என்ற ஐயம் ஏற்ப்படுகிறது. திரைப்பட இசை வெளியீட்டின்போது கூட இசைத்தட்டு வடிவில் அட்டையை வைத்து புகைப்படம் எடுத்து வெளியிடுகையில் மின் புத்தகங்களுக்கு அவ்வாறான ஒரு குறியீடு தேவைப்படுகிறதோ? என்று எண்ணத் தோன்றுகிறது.


எனக்குத்தெரிந்த பிரபல எழுத்தாளர்கள் பெரும்பாலோனோர் தமிழ்ச்சூழலில் புத்தகங்கள் விற்ப்பதில்லை, இங்கே வாசிப்பார்வன் குறைவு, வாசகனின் ரசனை பாமரத்தனமாக இருக்கிறது என்பது மாதிரியான புலம்பல்களை பதிவு செய்துகொண்டிருக்கிறார்கள். என்னைப் பொருத்தவரை அது போன்ற எழுத்தாளர்கள் மரபு எழுத்தாளர்கள் என்பேன். அவர்கள் தற்கால ஊடக வளர்ச்சியை புரிந்து கொள்ளாமலும் வாசகனை தெரிந்துகொள்ளாமல் காலத்தின் மாற்றத்தை ஏற்றுக்கொள்ளாமலும் கரையில் நின்று புலம்பிக்கொண்டிருகிறார்கள். எழுத்தாளனுக்கு எழுதுவதே கடமை. வாசகனுக்கு தனக்கு என்ன தேவை என்பதை அவன் எளிதில் தேடிக்கொள்ளும் கருவிகள் எண்ணற்றவை இருக்கின்றன. அவனைப்பொருத்த அளவில் ஒரே நேரத்தில் நான்கைந்து புத்தகங்களை செல்லிடபேசியில் படித்து விட்டு போய்கொண்டே இருப்பான். புத்தகங்களை யாரும் இப்போது தூக்கிக்கொண்டு அலைவதில்லை.

ஒரு அரை மணிநேர பயணத்திலோ, அலுவலக வேலைக்கிடையிலோ கணினியிலோ அல்லது செல்லிடப்பேசியிலோ தனக்கு விருப்பமானதை படித்துக்கொள்வது இன்றைய வாசிப்பு. எழுத்தாளர்களும் பதிப்பகத்தாரும் கவனம் கொள்ள வேண்டியது இவர்களைத்தான். ஒரு வாசகன் எப்படி தன் விருப்பமான எழுத்தாளனை தேடிக்கொள்கிறானோ அதே போல் ஒரு எழுத்தாளனும் தன் வாசகனை தேடிக்கொள்ள வேண்டும். இன்றைய கால கட்டத்தில் இலக்கிய கூட்டம், வாசக வட்டம் போன்றவை அதிகமாக பொது சனத்தின் மத்தியில் நடைபெருவதில்லை. எப்படி ஒரு மல்டி லெவல் மார்க்கெட்டிங் கூட்டம் நடைபெறுகிறதோ அப்படி ஒரு குழுவிற்க்குள் விவாதித்து இலக்கியக்கடமை முடித்து விடுகிறார்கள் மரபு வாசகர்கள். இலக்கியவாதி, எழுத்தாளன், கவிஞன் என்று சொன்னால் MLM காரனை பார்த்ததுபோல் தெரித்து ஓடி விடுகிறான் பொதுசனம். இந்த இலக்கியவாதிகள் தங்களை சமூகத்தின் அறியாமையை நீக்கவந்த கடவுளின் தூதனாக எண்ணிக்கொண்டு ரோட்டில் போகிற வருகிறவனையெல்லாம் பாவமண்ணிப்புத் தரும் சுவிசேசப் பார்வை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் பயன்படுத்தும் வார்த்தைகள், கருப்பொருட்கள் சாதாரண வாசகனுக்கு பிடிபடுவதில்லை.

வாசகனின் கவனத்தை ஈர்க்க தெருவில் இறங்கி பட்டாப்பட்டியுடன் சண்டைபோடும் நிகழ்வுகளும் அவ்வப்போது நடந்துகொண்டுதான் இருக்கிறது. ஒரு புத்தகம் வெளியிட்டுவிட்டு எழுத்தாளன் என்று பட்டம் சூட்டிக்கொண்டு தரையைப் பார்க்காமல் நடக்கும் ஜீவன்கள் தமிழ்ச்சூழலில் சாதரணம். இந்த சோ கால்டு மரபு எழுத்தாளர்களை புறந்தள்ளிவிட்டு பொதுசனத்தைப் புரிந்துகொண்டு அவனுக்கும் நல்ல ரசனையிருக்கிறது என்பதை ஒத்துக்கொண்டு அவனையும் நல்ல ரசிகனாக பாவித்து எழுதிய வலைப்பூ எழுத்தார்கள் இந்த தலைமுறை எழுத்தாளர்கள். ஒரு பதிவில் நிகழ்கால நடப்புக்களை அத்தனை சுவாரஸ்யமாக நகைச்சுவையுடன் எழுதி கணிப்பொறி பயன்பாட்டாளர்களை தன்பக்கம் ஈர்த்தவர்கள் இவர்கள். வலைப்பூக்கள் ஒரு வாசகனை எழுத்தாளனாக்கும் வல்லமை கொண்டவை. சக எழுத்தாளனைக்கூட எழுத்தாளனாக ஒத்துக்கொள்ளாத மரபு எழுத்தாளர்களைப் பார்த்த இன்றைய தலைமுறை, புதிய வாசகனையும் எழுத்தாளனையும் எப்போதும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது. இங்கு சக எழுத்தாளனையும், வாசகனையும் தூக்கிவிட்டுச் செல்லும் மனப்போக்கு பெருகிக் கிடக்கிறது. எழுதிய வலைப்பூவை வாசகனின் கருத்துக்கள் மேலும் மணக்கச்செய்யும். அந்த கருத்துக்களே அடுத்த பூவிற்க்கு வித்தாக அமையும்.

முகநூல் மற்றும் டிவிட்டர் போன்ற சமூக ஊடகங்கள் அடுத்த தலைமுறை வாசகனையும் எழுத்தாளனையும் உருவாக்கிக் கொண்டிருக்கிறது. நாற்பது எழுத்துக்களில் இரண்டு லட்சம் வாசகனை அடைய வேண்டுமானால் அந்த எழுத்து வாசகனை எப்படி உள்வாங்கியிருக்கவேண்டும் என்று சொல்லத்தேவையில்லை. ஒரு காலத்தில் பக்கம் பக்கமாக எழுதி பத்திரிக்கைகளுக்கு அனுப்பி காத்திருந்த எழுத்தாளர்கள் இன்று சமூக ஊடகங்களில் பதியப்படும் பதிவுகளையும், கீச்சுகளையும் பத்திரிக்கைகள் எடுத்து பிரசுரிப்பதைப் பார்த்து விக்கி நிற்கிறான் .

எழுத்துலகின் பரிணாம வளர்ச்சியை புரிந்து கொள்ளாமல் வாசகனை குறைசொல்லி நிற்க்கும் பழைய எழுத்தாளர்களைப் பார்த்து வெகுசன வாசகனும் இன்றைய தலைமுறை கருத்துருவாக்கும் கலைஞனும் தனக்குள் சிரித்துக்கொள்கிறான்.

காகிதங்களில் பக்கம் பக்கமாக அச்சிட்டு வெளியிடுவதுதான் எழுத்தாளனை அடையாளப்படுத்தும் என்பது புலவர்களையும் ஏட்டுச்சுவடிகளையும் இன்றைய தலைமுறைக்கு நினைவு படுத்தும். ஆனால் எழுத்தும் வாசகனும் எபோதும் எழுத்தாளனை தொடர்வதில்லை. வாசகனை புரிந்து கொள்ளாத எழுத்தாளனை கடந்து எழுத்தும் வாசகனும் வளர்ந்துகொண்டே செல்வார்கள்.

Monday, June 15, 2015

பணிவு....துணிவு

நமது பள்ளிப்பாடம் முதல் வீட்டில் சொல்லித்தரும் பாடம் வரை பெரியோர்க்கு பணிந்து நட. "அவையடக்கம் கொள்" என்ற பண்புகள் ஊட்டப்படுகிறது. இந்த பண்புகள் இன்றைய கால கட்டத்தில் எந்த அளவிற்க்கு புரிந்து கொள்ளப்பட்டுள்ளது இதன் தாக்கம் இன்றைய தலைமுறையினரின் வாழ்க்கையில் எந்த அளவு உள்ளது என்பது பற்றியே இந்த கட்டுரை.

சமீத்தில் பண்முகத்தன்மை(Diversity) பற்றிய ஒரு பயிற்ச்சியில் கலந்துகொண்டிருந்தேன். இன்றைய உலக மயமாக்களில் ஒரு உலக நிறுவனம் தனக்கான வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்கள் பல்வேறு நாடுகளிலிருந்து பல்வேறு பண்பாட்டு பின் புலத்திலிருந்து வந்திருக்கும் சூழலில் ஏனையோரை எப்படி புரிந்து கொள்வது, அவர்களுடனான உரையாடலை எப்படி எடுத்துச்செல்வது, எந்த மாதிரியான பாவனைகள் மற்றும் சொல்லாடல்கள் ஏனையோருக்கு முகச்சுளிப்பைத் தரும், அவற்றை எப்படி தவிற்பது என்பது பற்றிய ஒரு பயிற்சி.

அந்த பயிற்ச்சியில் ஒரு நாட்டினரை அவர்களின் கலாச்சர இயல்புகளை பொறுத்து எப்படி அணுகுவது என்று வரும்போது பொதுவாக இந்தியர்கள் குழுக்கூட்டத்தில் தாமாக முன் வந்து கருத்துக்களை சொல்ல மாட்டார்கள் (Reserved). அவர்களுடனான கூட்டங்களில் அவர்களுக்கென பிரத்தியக கவனம் மற்றும் பங்கெடுத்துக் கொள்ளும் வாய்ப்புடன் கூட்டத்தை நடத்தவேண்டுமென்பது போன்ற துணுக்குகளுடன் போகிறது. ஐரோப்பியர்கள் எப்போதும் தங்கள் கலாச்சாரத்தை உயர்வாக நினைப்பவர்கள், கருத்துக்களை தயக்கமின்றி முன் வைப்பர், அவர்களுடனான உரையாடலில் தனிப்பட்ட விசாரிப்புகள் பெரிய தாக்கத்தை ஏற்ப்படுத்தாது. அமெரிக்கர்கள் தனிப்பட்ட விசாரிப்புகளை விரும்புவர், வேலை தவிர்த்து வெளியுலக நடப்புகளை பேச ஆர்வம் கொண்டிருப்பர். சீனர்களை பொருத்தவரை சுறு சுறுப்பானவர்கள், பேச்சுக்களை தானாக முன் வந்து தொடரமாட்டார்கள் என்பது போன்ற புரிதல்களைச் சொல்லிக்கொடுக்கிறது.

என்னுடைய அனுபவத்தைப் பொறுத்தவரை தமிழர்கள் பன்னாட்டு கலாச்சாரத்தை எதிர்கொள்ள இன்னும் தயாரகவே இல்லை என்றே தோன்றுகிறது. வெறும் பிசா பர்கர் சாப்பிடுவது மட்டுமே மேலை நாட்டு கலாச்சாரம் என்று நினைப்பதற்கு மேல் சில மென்பண்புகள் நம்மிடம் வளர்த்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. அதில் ஒன்று, நான் மேற்ச்சொன்ன பணிவின் தாக்கம். சில நேரங்களில் இந்த பணிவு தேவையற்றது என்றே தோன்றுகிறது. குளக்கல்வி மற்றும் வெள்ளைய அடிமைத்தனத்தின் தொடர்ச்சியாகவே இதை நான் பார்க்கிறேன். 

பள்ளியில் வகுப்பில் பேசுவது தடை செய்யப்படுகிறது. நான் படித்த காலத்தில் பேசுபவர்கள் பெயர் கரும்பலகையில் எழுதி ஆசிரியரிடம் காட்டிக்கொடுக்க கங்காணிகள் வைக்கப்பட்டனர். சில நேரங்களில் சத்தமாக பேசினால் அது தண்டணைக்குறிய குற்றமாக பார்க்கப்படும். வீட்டிலோ ஆசிரியரிடமோ கேள்விக்கோ, பேச்சுக்கோ உடனே உரக்க பதில் கூறினால் குற்றமாக பார்க்கப்படும். "கூட கூட பேசாதே" என்பது எங்கள் ஊர் பேச்சு வழக்கு. பெண்களுக்கு இன்னும் கட்டுப்பாடுகள் அதிகம். 

அதே போல் பள்ளிகளில் ஆசிரியர் வகுப்பில் நுழைந்தவுடன் எழுந்து நின்று மரியாதை கொடுப்பது. ஒருமுறை புதிதாக வேலைக்கெடுக்கப்பட்ட கல்லூரிமுடித்த மாணவர் என்னைப்பார்த்ததும் எழுந்து நின்றது எனக்கு அதிர்ச்சியாகவும், உண்மையில் ஒரு நிமிடம் பயமாகவும் இருந்தது.  

அதுபோலவே மதிப்பிற்க்குறியவர்களை "சார்" என்று அழைப்பது. இந்த சார் என்கிற மரியாதை வெள்ளைக்காரர்களின் "சர்" பட்டத்திலிருந்து தோன்றியது. இன்றைய படித்த தலைமுறையிடமும் இந்த எதிர்பார்ப்பு இருப்பது வருத்தம் கலந்த ஆச்சர்யம். இன்னும் அரசு அலுவலகங்களில் "சார்" என்ற வார்த்தையை உபயோகிக்காமல் உள்ளே சென்று வெளியே வர முடியாது. இப்போது எங்களைப் பொறுத்தவரை "சார்" என்று அழைத்தால் அதன் பொருள் "யோ...சொன்னா புரியாதா" என்பது.

இன்றை தலைமுறைக்கு இது போன்ற மிகுபணிவு தேவையில்லை. நிச்சையம் பன்னாட்டு பண்பாட்டில் இருக்கும் துறைகளில் இது வளர்ச்சியின் வேகத்தை குறைக்கும் காரணியாகவே நான் பார்க்கிறேன். ஒவ்வொரு மாணவனும் பள்ளி படிப்பை முடித்து நான்கு ஆண்டுகள் பொறியியல் முடித்து வெளியே வருகிறான். அவன் அந்த படிப்பின் மீதும் தன் மீதும் முதலில் மரியாதைகொள்ளத் தெரிய வேண்டும். தன் திறமையின் மீதும் உழைப்பின் மீதும் நம்பிக்கையுள்ளவர்கள் சக பணியாளரிடம் தாழ்ந்து போகவேண்டியதில்லை, அது அவரின் மேலாளராக இருந்தாலும். இதன் பொருள் மேலாளரை மதிக்க வேண்டியதில்லை என்பதல்ல. அவரை ஒரு அரசர் போல் பாவித்து கூஜா தூக்க வேண்டியதில்லை என்பதே. அவரை வயதில் மூத்த அனுபவம் மிக்க சக பணியாளராய் பார்த்தாலே போதும். அது போல சக பணியாளர்களின் கல்வி மற்றும் சாதியை வைத்து தங்களை குறைத்து மதிப்பிட்டுக்கொள்ள வேண்டியதில்லை. உங்களுடன் சமமான நிலையில் இருக்கும்போது இருவரும் சமமே. உழைப்பு மற்றும் தனித்தன்மையே வித்தயாசப் படுத்தும் காரணி.

நான் பணி செய்த நிறுவனமொன்றில் மேலாளர் உயர் சாதி வகுப்புக்காரர். குழுத்தலைவன் அவர் இனத்தைச் சேர்ந்தவன். இன்னொரு குழுத்தலைவன் IIT ல் படித்து வந்தவன். அரசுப்பள்ளியில் படித்து வாழ்கை கடலின் அலையில் கரைசேர்ந்த எனக்கு அவர்கள் ஆரம்பத்தில் வழிபாட்டு உரியவர்களாகவே தோன்றினார்கள். காலப்போக்கில் எனது அந்த உருவகம் போய்யென புரிந்து கொண்டேன். நமது கற்றலின் மூலம் செயல்படுத்தும் சின்ன சின்ன முன்னெடுப்புகளைக் கூட அவர்கள் ஒரு மிகப்பெரும் திட்டமிடலுடனும் ஆர்ப்பாட்டத்தினுடனும் செய்யும் போது அதன் தாக்கத்தையும் அதன் பின்னுள்ள சூட்சமத்தையும் புரிந்து கொள்ள முடிந்தது.

முன் கூறிய பணிவின் தாக்கம் நம்மை நம் கருத்துக்களை முன்வைக்கும் ஆர்வத்தை அல்லது முயற்ச்சிக்கு ஒரு முட்டுக்கட்டை போடுகிறது. மேலாளர் பேசும்போது குறுக்கே பேசக்கூடது என்றவிதி. ஆனால் ஏனையோரிடம் அதுபோன்ற ஒரு தாக்கத்தை துளிகூட பார்க்க முடியவில்லை. தன்னுடைய கருத்தை தெரிவிக்கும் நேரத்தில் தெளிவாகவும் உரக்கமாகவும் தெரிவித்து வியப்பேற்படுத்தினார்கள். இன்றைய கால கட்டத்தில் கூட சமூக ஊடகங்களில் சில முந்தைய தலை முறையினர் "சார்" பட்டங்களை எதிர் பார்த்தே இருப்பது விந்தையான உணமை.

ஆகவே ஒரு மனிதருக்கும் அவர் கொண்டுள்ள பண்பிற்க்கும் உரிய மரியாதை கொடுத்து அதே சமையத்தில் அவர்களின் கருத்துக்களுக்கு நியாயமான எதிர் கருத்துக்கள் உள்ள போது வெளிப்படையாகவும் நயமாகவும் உரக்கவும் வெளிப்படுத்த தவறக்கூடாது. உங்களுக்கு சிறந்த திறமை இருந்தும் அதை வெளிப்படுத்த வில்லையென்றால் அந்த திறமைக்கு பயனேதுமில்லை. 

கருத்துக்களை சுதந்திரமாகவும் வெளிப்படையாகவும் தெரிவிக்கும் சூழலை நமது சமூகம் கொடுக்க சிறிது நாளாகும். ஆனால் அதை தயார்படுத்த வேண்டியது நம் கடமை. 

பேசுங்கள்.. எழுதுங்கள்.. உங்கள் கருத்து மற்றவருக்கு போய்ச்சேர உரக்க பேசுங்கள்.. அழுத்தமாக எழுதுங்கள்..


Friday, June 12, 2015

அவசர சிகிச்சை

சமீபத்திய நெருங்கிய உறவின் மறைவு வருத்தங்களைத் தாண்டி சில நிதர்சனம்க்களை நினைவுபடுத்திச் செல்கிறது. அன்றாட வாழ்வில் நிகழும் சின்ன சின்ன தோல்விகளுக்கும், ஏமாற்றம்க்களுக்கும் "என்னடா வாழ்க்கையிது.. இந்த வாழ்க்கை வாழறதுக்கு செத்து தொலைக்கலாம்" என்று சில நேரங்களில் எண்ணிக்கொள்வோம். ஆனால் உண்மையிலேயே நாம் நம் சாவிற்க்கு தயார் படுத்திக்கொண்டோமா?.... என்று கேட்டீர்களானால், கொஞ்சம் அன்பும் கொஞ்சம் பொருப்பும் கூடுவதை உணர்வீர்கள். என்னடா இவன் சாவு கீவுன்னுட்டு இருக்கான்னு சஞ்சலம் அடைந்தீர்களானால் நீங்கள் உங்களை மீழாய்வு செய்யவேண்டிய தருணம் இதுவே.

வேறொருமுறை நடு இரவில் ஒரு தொலைபேசி அழைப்பு. பின்னிறவுகளில் தொலைபேசி அழைப்புகள் அச்சம் தரக்கூடியவை. அயலில் வசிக்கும் ஒவ்வொருவரும் அதுபோன்ற ஒரு சூழல் வாய்க்கக்கூடாது என்பதே அவர்களின் இரவுக்கனவாக இருக்கும். காரணம் அவ்வாறு வரும் எதிர்பாராத  அழைப்புகள் துக்க நிகழ்வுகளைத் தாங்கி வருவதாக இருக்கும். எனக்கு வந்த அழைப்பு அப்பாவிற்க்கு மீண்டும் உடல் நலக் குறைவேற்ப் பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் உறவுக்கார மருத்துவர் என்னை வந்து பார்த்துச் செல்லுமாறு வலியுறுத்தியது சற்று கலக்கமாக இருந்தது. முன்பொரு முறை ஒரு விபத்தில் பின் தலையில் அடிபட்டு பக்கவாதத்தில் பாதிக்கப்பட்டு பின் தேர்ந்து வந்திருந்த நிலையில் இந்த செய்தி பெரும் பாரத்தை மனதில் ஏற்றி வைத்துவிட்டது. மூன்று மணிநேர இடைவெளியில் விமான டிக்கெட் புக் செய்து இரண்டு குழந்தைகளையும் மனைவியையும் இழுத்துக்கொண்டு வந்து சேருவது இன்றைக்கு நினைத்தாலும் மீண்டும் வரக்கூடாத நிலையாகவே மனம் நினைக்கிறது. அந்த நிமிடங்களை அவ்வளவு எளிதாக எழுத்தில் எழுதிவிட முடியாது. பயணம் செய்யும் 22 மணி நேரமும் அங்கு என்ன நடந்ததோ என்ற தவிப்பும், எப்படியும் அவர் மீண்டு வந்து விடவேண்டும் என்ற வேண்டுதலைத் தவிர வேறெதுவும் மனதில் இல்லை. பயணத்தில் சற்று அயர்ந்தாலும் அவர் அழைப்பது போலவே தோன்றி விருட்டென்று எழுந்து நிகழ்காலத் துக்கத்தில் மனம் இருப்புக் கொண்டுவிடும். ஐந்து வயது குழந்தைகளுக்கு சுற்றி என்ன நடக்கிறதே என்று தெரியாத பயணம். விளக்கிச்சொல்ல முடியாத நிலையில் மனம். அவர் இருக்கும் தைரியமே நான் பறந்து திரிவதற்க்கு காரணம். அவர் படுக்கையிலிருந்த ஆறு மாதம் அவரின் அருமை உணர்த்திவிட்டது. முன்னெப்போதும் தொலைபேசி அழைப்புகளில் பெரிதாக எதுவும் அந்த முனையிலிருந்து பேச்சு வராது. சில நேரங்களின் அதை செஞ்சிங்களா இதை செஞ்சிங்களா என்ற என் மேட்டிமைக்கு  "சரி சரி " என்ற பதிலுடன் அம்மாவிடம் போனைக்கொடுத்து நகர்ந்து விடுவார். இப்போது காரண காரியங்களேது மில்லாமல் அவரின் கால்களை பற்றிக்கொண்டு அழுது தீர்க்கவேண்டுமென்ற எண்ணம் அவ்வப்போது மேலிடும். 

கோவை விமான நிலையத்திலிருந்து நேராக மருத்துவமனைக்கு சென்றாகி விட்டது. மூச்சு திணரலுக்குப்பின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவசர சிகிச்சைப்பிரிவு - நோயாளிகளை விட நோயாளிகளின் உறவுகளுக்கு சிகிச்சையளிக்குமிடம். அவசர சிகிச்சி கூடத்திற்க்கு அருகில் உறவினர்கள் காத்திருக்கு மிடம். உறவினர்கள் அங்கு மட்டுமல்ல, அவசர சிகிச்சைப்பிரிவிற்க்கு செல்லும் வழியெங்கும் கவலையுடன் அமர்ந்திருப்பர். உங்களுக்கு எப்போதெல்லாம் வாழ்க்கை வெறுத்துவிட்டதாகவோ அல்லது ஏமாற்றப்பட்டதாகவோ தோன்றினால் ஒரு மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவின் காத்திருப்பறையில் இரண்டு மணி நேரம் இருந்து பாருங்கள். வெளியே வரும்போது உங்கள் துரோகியையும் எதிரியையும் கட்டியணைக்கும் மனப்பக்குவத்திற்க்கு வந்து விடுவீர்கள்.

நான் அமர்ந்திருந்த இருக்கைக்கு அருகில் ஒரு நடுத்தர வயது பெண்மணி மிகவும் கவலையுடன் ஏதோ ஒரு பக்திப்பாடலை புத்தகத்தில் ஊன்றி படித்துக்கொண்டே இருந்தார். அருகில் எட்டு வயது சிறுமி,  அறையிலுள்ள மற்றவர்களை ஒவ்வொருவராக பார்த்துக்கொண்டே அவர்களைப் பற்றிய உருகவம் ஒன்றை உருவாக்கிக் கொண்டிருந்திருந்தாள். பள்ளிசெல்லும் நாட்களில் மருத்துவமனையில் அதுவும் கவலை மரத்தடியில் எல்லையில்லா காத்திருப்பில்....இடையில் அவ்வப்போது உறவினர்களை அழைத்து நோயாளியை பார்க்க அனுமதிப்பார்கள். என்னையும் அழைத்து அனுமதித்தார்கள். மருத்துவர்களை விட செவிலியர் அதிகமிருக்கும் பிரிவு. கண் விழிக்கவில்லையென்றாலும் முன்னைவிட இப்போது நிலமை ஓரளவு தேரியிருப்பதாக மருத்துவர் கூறிவிட்டு வளர் மருத்துவக்குழுவிற்க்கு சில அறிவுறுத்தல்களுக்குப் பிறகு நகர்ந்து விட்டார். ஒரு சிலரைத்தவிர ஏனைய நோயாளிகள் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தனர். பதின்ம வயதுக்காரன் ஒருவனின் தலை முழுக்க கட்டுடன் படுத்துக்கிடந்தான். அவனருகில் இன்னொருவர், தலையருகில் இளம் மனைவி, "மாமா.... மாமா... கண்ணைத்திறந்து  பாரு மாமா...மாமா..." என்று உறக்க அவரை எழுப்பி அழைத்துக்கொண்டு போய் விடுவதான முடிவுடன் உலுக்கிக்கொண்டிருந்தார். ஒரு வாகன விபத்தில் அடிபட்டு கோமாவில் இருப்பவரை, மருத்துவர்கள் உறவினரின் குரல் அவர் மூளையை எட்டி நினைவு திரும்ப ஏற்ப்படுத்திக்கொடுத்திருக்கும் வாய்ப்பது.

தந்தை ஓரளவு தேரிவிட்டார் என்ற நம்பிக்கை மனதளவில் ஒரு பிடிப்பை கொடுத்தாலும் ஏனையோரின் கவலைகள் இன்னும் ஆழமாக அழுத்திக்கொண்டிருந்தது. அந்த சகோதரியின் கணவனை எழுப்பிவிட வேண்டுமென்று தோன்றியது. அவர் அதே நிலையில் கடந்த ஆறேழு நாட்களாக அவசர சிகிச்சைப் பிரிவிலேயே இருப்பது அவரை விட அவர் உறவுகளின் நிலை கவலைக்குறியது என்பது ஓரிறு நாட்களில் தெரிந்து விட்டது.

வெளியே வந்ததும் என் அருகில் புத்தகம் படித்துக்கொண்டிருந்த அந்த சகோதரிக்கு அழைப்பு. அந்த அறையில் ஒரு சிலர் அழைப்புகளை பதட்டத்துடன் எதிர்நோக்கும் காரணம் அதற்க்கு முன் வந்த சில அழைப்புகள், நோயாளி மருத்துவர்களை கைவிட்டுவிட்ட செய்தி கேட்பதற்க்கானதாய் இருந்திருக்கும்.

அந்த சிறு பெண்ணின் முகம் பார்வையிலேயே என்னை ஏதோ ஒரு உறவாக மாற்றிக்கொண்டிருந்தபடியால் என்னருகில் அமர்த்தி அவளை சமாதானப்படுத்திக் கொண்டிருந்தேன். பேச்சின்போது சிகிச்சை பெற்றுக்கொண்டிருப்பது அவளின் அண்ணன் என்றும் இரு சக்கர வாகன விபத்தொன்றில் அடி பட்டு இங்கு அனுமதித்திருப்பதும் தெரிந்தது. அவளுக்கு அந்த அண்ணனின் தேவை என்ன என்பது எனக்கும் தெரிந்திருந்தது. அம்மாவிடமும் அப்பாவிடமும் கிடைக்காததை அண்ணனிடம் பெற்றுக்கொள்ளும் தங்கைகள், சகோதரிகளுக்காக எதையும் கொடுத்துவிடும் அண்ணன்கள் சூழ்ந்த உலகமன்றோ நானிருந்தது. ஏழெட்டு வயது இடைவெளியில் பிறந்த உடன் பிறப்புகள் நண்பர்களாகவே வளர்வது அதிர்ஸ்டத்தின் வாய்ப்பு. 

பள்ளிக்கு கொண்டு விடுவதாயிடுக்கட்டும், தோழிகளை மிரட்டுவதாயிருக்கட்டும் "இரு இரு எங்கண்ணங்கிட்ட சொல்லித்தர்றேன்" என்ற மிரட்டலாக இருக்கட்டும், அண்ணன் அண்ணனே. அம்மாவிற்க்கோ, புருசனின் வருமானத்தில் எப்படியாவது பையனை படிக்க வைத்துவிட்டால் அவன் தங்கையை பார்த்துக்கொள்வான் என்ற கனவு. என்ன குறும்பு செய்தாலும் பதின் வயது பையன்களின் அம்மாக்களுக்கு எப்போதுமே மகன் மேலுள்ள நம்பிக்கை, அவனை யாரிடமும் விட்டுக்கொடுக்க மாட்டாள். அண்டை வீட்டாரிடமும், கல்யாணங்காட்சியிலும் உறவினரிடம் எப்போதும் மகன் புராணமாகத்தானிருக்கும். அதைக் கேட்டு கேட்டுப் பழகிவிட்ட தங்கைக்கும் அண்ணன் எப்போதுமே ஒரு ஹீரோதான் என்று எண்ணவைத்து விடும். பொதுவாக மகனைப்பற்றி பெருமை பேசிக்கொள்ளாத ஒருவர் தந்தைதான். தனக்குப்பிறகு குடும்பத்தை தூக்கிச்செல்லும் கடமை கொண்டவன் இப்படி பொறுப்பற்று இருப்பது, அவர் தூக்கி வரும் அந்த சுமையை வாங்கிக்கொள்ள தயார்படுத்திக்கொள்ளாதது என்று நூறு கவலைகளில் பிரதான கவலையாய் மகன் இருப்பது காரணமாக இருக்கலாம். தான் சைக்கிளில் போனாலும் மனைவியின் வற்ப்புறுத்தலால் மகனுக்கு பைக் வாங்கிக்கொடுத்துவிட்டு சாலையெங்கும் அவனைத்தொடரும் அவரின் அக்கறை யாருக்கும் தெரியாது.

எல்லோருடைய நம்பிக்கையையும் தூக்கிக்கொண்டு வந்து இப்படி அவசர சிகிச்சைப்பிரிவில் படுத்துக்கொண்டிருப்பது நமக்கே கவலையாக இருக்கிறது. சாலை விபத்தில் தலையில் அடிபட்டு சேர்க்கப்பட்டவனுக்கு ஒரு அறுவை சிகிச்சை செய்து பிறகு ஓரளவு நினைவு திரும்பி சாதாரன அறையில் இருந்த போது அவனுக்குப்பிடித்த மாம்பழ குளிர்பானத்தக் கொடுத்திருக்கிறார்கள். அது அவனுக்கு சுரத்தை ஏற்ப்படுத்தி பின் ஏதேதோ ஆகி மீண்டும் அவசர சிகிச்சைப்பிரிவில். முந்தைய அறுவை சிகிச்சை முடிந்து சில நாட்களே ஆன நிலையில் இன்னொரு அறுவை சிகிச்சை செய்ய முடியாத நிலையில் மருத்துவர்கள் போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

யார் யாரிடமோ கேட்டு, உள்ள உடமையெல்லாம் விற்று பணத்தைக்கொண்டு வந்து கட்டிக்கொண்டே இருக்கின்றனர் நோயாளிகளின் உறவுகள். பணத்தை கட்டினால்தான் அடுத்த கட்ட சிகிச்சையளிக்கும் மருத்துவமனைகள் அறச்சீற்றத்தை தூண்டினாலும் அங்கிருப்பவர்கள் அதைப் பொருட்படுத்துவதில்லை. எப்படியாவது உறவுகளை நலமுடன் வீட்டிற்க்கு அழைத்துச்சென்றுவிட வேண்டுமென்பதே குறி.

ஒரு புறம் உறவினர்களின் கவலை தோய்ந்த முகம் இன்னொரு புறம் வழிபாட்டு ஏற்ப்பாடுகள். எப்போதும் பரபரப்பாய் திரியும் மருத்துவர்கள், செவிலியர்கள். மறு புறம் புதிய பிறப்புகள், நோய் தீர்ந்து வெளிச்சென்று மறு பார்வைக்காக வந்திருக்கும் நம்பிக்கை நிறைந்த முன்னாள் நோயாளிகள். ஒரு மருத்துவமனை மனிதனின் எல்லா நோயையும் தீர்த்துவிடும் என்றாலும் யாரும் தங்கியிருக்க விரும்பாத இடம்.

அடுத்த நாள் காலை ஏழு மணிக்கெல்லாம் அந்த அறை மீண்டும் அன்றைய நாளை எதிர்கொள்ள தயாரிக்கொண்டிருந்தது. மனிதர்களை விடவும், புத்தகங்களைவிடவும் அந்த அறையின் சுவர்கள் ஆயிரமாயிரம் கதைகளை வைத்திருக்கும். கவலைகளை மட்டுமே சுமந்து நிற்க்கும் சுவர்கள் அவை. எப்படி இத்தனை கவலைகளை தாங்கிக்கொண்டு நிற்க்கிறதோ... வழக்கம்போலவே காலைப் பார்வைக்காக உறவுகள் அழைக்கப்பட்டுக் கொண்டிருந்தனர். தந்தை இன்று நேற்றைவிட முன்னேறியிருப்பதாகவும் மூச்சு, இதயத்துடிப்பு சீராக இருப்பதாகவும் சொன்னார்கள். கண்களை விழித்துப் பார்க்கிறார், ஆனால் நான் பேசுவதை கேட்க முடிகிறதா அல்லது கேட்டாலும் அதற்க்கு எதிர்வினையாற்ற முடியாத நிலையில் இருக்கிறாரா என்ற கேள்வியில் நம்பிக்கை யளிக்கும் அம்மா கொடுத்த திருநீரை நெற்றியில் வைத்துவிட்டு மீண்டும் அயர்கையில் வெளியே வந்து காத்திருந்தேன். 

நேற்றை விட இன்று அந்தப்பையனின் குடும்பம் சற்று அதிகமான கவலையுடன் உலவிக்கொண்டிருந்தனர். அவனின் தாயர் உரக்கமாகவும் நடுக்கத்துடனும் சஷ்டிகவசம் படித்துக்கொண்டிருந்தார். எனக்கு ஏதோ ஒரு காரணத்தால் மனதில் கவலை கூடி அழுத்த ஆரம்பித்தது. நானும் இயற்க்கையை வேண்டிக்கொள்ள ஆரம்பித்தேன். எப்படியும் அந்த தங்கையின் அண்ணன் மீண்டு வந்துவிடவேண்டுமென்று. அந்த கவலைகளை உள்வாங்கிக்கொள்ளவோ வெளிப்படுத்திக்கொள்ளவோ தெரியாதவளாய் மற்றவரை பார்த்துக்கொண்டிருந்தாள். சிறிது நேரத்திக்கிப்பிறகு அவர்களுக்கு அழைப்பு. அந்தப்பையனின் தந்தை அவசரமாக சென்றுவிட்டு திரும்பி காத்திருப்பு அறைக்கு வராமல் மற்ற உறவுகளை நோக்கி நெஞ்சில் அடித்தவாரே வெளியில் ஓடினார். அருகில் காத்திருந்த அந்தப்பையனின் அம்மா பதட்டத்துடன் எதையோ புரிந்து கொண்டவராக தரையில் விழுந்து மூச்சிறைக்க கத்தி அழத்தொடங்கினார். வயிற்றிலிருந்து தலைக்கு ஒரு பெரும் பாறை சென்று மூளையை அழுத்தியது. ஆண்டவா.... இருக்கக்கூடாது... என்றவாறு கண்ணில் வந்த கண்ணீரை துடைத்துக்கொண்டே வெளியேறி விட்டேன். அதற்க்குள் உறவினர்களின் துக்கம் அந்த பகுதியை அதிர வைத்துக்கொண்டிருந்தது. மருத்துவர்கள் கைவிட்ட நிலையில் அவனது மரணம் அந்த உறவுகளுக்கு தெரிவிக்கப்பட்ட தருணமது.

கடவுள் என்ற ஒருவன் இருந்தால் அவனிடம் எதையும் கொடுத்தாவது அந்தப் பையனை திரும்ப கொண்டுவந்துவிட வேண்டுமென்று தோன்றியது. எது உண்மை எது பொய் என்று தெரியாமலும் இது ஒரு கனவாக இருக்க வேண்டுமென்ற எண்ணம் தோன்றிக்கொண்டே இருந்தது.

உடல் நலத்துடன் நாம் இருக்கும்போது நடந்துகொண்ட அந்த நிமிடங்கள் கண்முன்னே வந்து சென்றது. சிறு வார்த்தைகளுக்குக்கூட சினம்கொண்டு கோபத்தில் வார்த்தையால் சக மனிதரைக் கொன்ற நிமிடங்கள். சில ஆயிரங்களுக்காக எப்போதும் கூடவே திரிந்த நண்பர்களை எதிரியாக்கி எறிந்த நிமிடங்கள். வாய்க்கால் தகராறில் பேச்சில்லாத பங்காளிகள். ஒன்றிரண்டு சில்லரைக்காக சபிக்கப்பட்ட நடத்துனர்கள். எப்போதும் நமக்காக வாழும் துணையை ஒன்றுமில்லாத ஈகோ காரணங்களுக்காக அழவைத்த நிமிடங்கள். ஓடி ஓடி சேர்த்த செல்வங்கள், அதற்க்காக அறுக்கப்பட்ட உறவுகள், மறுக்கப்பட்ட உரிமைகள், கொடுக்கப்பட்ட விலை... நிலையில்லாத உலகில் சரிசெய்யவே முடியாத பாதிப்பை ஏற்ப்படுத்திவிட்டு சென்று விடுகிறோம்...வெறும் அற்ப்ப காரணங்களுக்காக...

அந்த பெரும் பேரலைக்குப்பின் சில நாட்களுக்குப்பின் தந்தை நலமாக வீடு திரும்பி விட்டார். சிகிச்சையில் குணமானது அவர் மட்டுமல்ல.. நானும் தான். சக மனிதர்களை ஒரு சக மனிதனாகவே பார்க்கவும் அவர்களின் செயல்களை அவர்களின் சூழ்நிலைகளுடன் புரிந்துகொள்ளும் பக்குவம் பெற்றுக்கொண்டேன். எதையோ நோக்கி நீங்கள் உங்கள் முழு சக்தியை பயன்படுத்தி முயற்ச்சி செய்து, வாழ்வின் முக்கியமான சின்ன சின்ன உணர்ச்சிகளையும் தருணங்களையும், கடந்து வரும் ஒவ்வொரு உயிரையும் உதாசினப்படுத்திக்ப்கொள்ளும் மனம் ஒரு நாள் நோக்கம் நிறைவேறினாலும் இழந்தது அந்த மீட்டெடுக்க முடியாத தருணங்களும், உணர்ச்சிகளும் மனிதர்களும் என்பதை தெரிந்துகொள்ளும்போது இறப்பு அவ்வளவு எளிதல்ல என்பதும் புரிந்திருக்கும்.