சமீபத்திய நெருங்கிய உறவின் மறைவு வருத்தங்களைத் தாண்டி சில நிதர்சனம்க்களை நினைவுபடுத்திச் செல்கிறது. அன்றாட வாழ்வில் நிகழும் சின்ன சின்ன தோல்விகளுக்கும், ஏமாற்றம்க்களுக்கும் "என்னடா வாழ்க்கையிது.. இந்த வாழ்க்கை வாழறதுக்கு செத்து தொலைக்கலாம்" என்று சில நேரங்களில் எண்ணிக்கொள்வோம். ஆனால் உண்மையிலேயே நாம் நம் சாவிற்க்கு தயார் படுத்திக்கொண்டோமா?.... என்று கேட்டீர்களானால், கொஞ்சம் அன்பும் கொஞ்சம் பொருப்பும் கூடுவதை உணர்வீர்கள். என்னடா இவன் சாவு கீவுன்னுட்டு இருக்கான்னு சஞ்சலம் அடைந்தீர்களானால் நீங்கள் உங்களை மீழாய்வு செய்யவேண்டிய தருணம் இதுவே.
வேறொருமுறை நடு இரவில் ஒரு தொலைபேசி அழைப்பு. பின்னிறவுகளில் தொலைபேசி அழைப்புகள் அச்சம் தரக்கூடியவை. அயலில் வசிக்கும் ஒவ்வொருவரும் அதுபோன்ற ஒரு சூழல் வாய்க்கக்கூடாது என்பதே அவர்களின் இரவுக்கனவாக இருக்கும். காரணம் அவ்வாறு வரும் எதிர்பாராத அழைப்புகள் துக்க நிகழ்வுகளைத் தாங்கி வருவதாக இருக்கும். எனக்கு வந்த அழைப்பு அப்பாவிற்க்கு மீண்டும் உடல் நலக் குறைவேற்ப் பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் உறவுக்கார மருத்துவர் என்னை வந்து பார்த்துச் செல்லுமாறு வலியுறுத்தியது சற்று கலக்கமாக இருந்தது. முன்பொரு முறை ஒரு விபத்தில் பின் தலையில் அடிபட்டு பக்கவாதத்தில் பாதிக்கப்பட்டு பின் தேர்ந்து வந்திருந்த நிலையில் இந்த செய்தி பெரும் பாரத்தை மனதில் ஏற்றி வைத்துவிட்டது. மூன்று மணிநேர இடைவெளியில் விமான டிக்கெட் புக் செய்து இரண்டு குழந்தைகளையும் மனைவியையும் இழுத்துக்கொண்டு வந்து சேருவது இன்றைக்கு நினைத்தாலும் மீண்டும் வரக்கூடாத நிலையாகவே மனம் நினைக்கிறது. அந்த நிமிடங்களை அவ்வளவு எளிதாக எழுத்தில் எழுதிவிட முடியாது. பயணம் செய்யும் 22 மணி நேரமும் அங்கு என்ன நடந்ததோ என்ற தவிப்பும், எப்படியும் அவர் மீண்டு வந்து விடவேண்டும் என்ற வேண்டுதலைத் தவிர வேறெதுவும் மனதில் இல்லை. பயணத்தில் சற்று அயர்ந்தாலும் அவர் அழைப்பது போலவே தோன்றி விருட்டென்று எழுந்து நிகழ்காலத் துக்கத்தில் மனம் இருப்புக் கொண்டுவிடும். ஐந்து வயது குழந்தைகளுக்கு சுற்றி என்ன நடக்கிறதே என்று தெரியாத பயணம். விளக்கிச்சொல்ல முடியாத நிலையில் மனம். அவர் இருக்கும் தைரியமே நான் பறந்து திரிவதற்க்கு காரணம். அவர் படுக்கையிலிருந்த ஆறு மாதம் அவரின் அருமை உணர்த்திவிட்டது. முன்னெப்போதும் தொலைபேசி அழைப்புகளில் பெரிதாக எதுவும் அந்த முனையிலிருந்து பேச்சு வராது. சில நேரங்களின் அதை செஞ்சிங்களா இதை செஞ்சிங்களா என்ற என் மேட்டிமைக்கு "சரி சரி " என்ற பதிலுடன் அம்மாவிடம் போனைக்கொடுத்து நகர்ந்து விடுவார். இப்போது காரண காரியங்களேது மில்லாமல் அவரின் கால்களை பற்றிக்கொண்டு அழுது தீர்க்கவேண்டுமென்ற எண்ணம் அவ்வப்போது மேலிடும்.
கோவை விமான நிலையத்திலிருந்து நேராக மருத்துவமனைக்கு சென்றாகி விட்டது. மூச்சு திணரலுக்குப்பின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவசர சிகிச்சைப்பிரிவு - நோயாளிகளை விட நோயாளிகளின் உறவுகளுக்கு சிகிச்சையளிக்குமிடம். அவசர சிகிச்சி கூடத்திற்க்கு அருகில் உறவினர்கள் காத்திருக்கு மிடம். உறவினர்கள் அங்கு மட்டுமல்ல, அவசர சிகிச்சைப்பிரிவிற்க்கு செல்லும் வழியெங்கும் கவலையுடன் அமர்ந்திருப்பர். உங்களுக்கு எப்போதெல்லாம் வாழ்க்கை வெறுத்துவிட்டதாகவோ அல்லது ஏமாற்றப்பட்டதாகவோ தோன்றினால் ஒரு மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவின் காத்திருப்பறையில் இரண்டு மணி நேரம் இருந்து பாருங்கள். வெளியே வரும்போது உங்கள் துரோகியையும் எதிரியையும் கட்டியணைக்கும் மனப்பக்குவத்திற்க்கு வந்து விடுவீர்கள்.
நான் அமர்ந்திருந்த இருக்கைக்கு அருகில் ஒரு நடுத்தர வயது பெண்மணி மிகவும் கவலையுடன் ஏதோ ஒரு பக்திப்பாடலை புத்தகத்தில் ஊன்றி படித்துக்கொண்டே இருந்தார். அருகில் எட்டு வயது சிறுமி, அறையிலுள்ள மற்றவர்களை ஒவ்வொருவராக பார்த்துக்கொண்டே அவர்களைப் பற்றிய உருகவம் ஒன்றை உருவாக்கிக் கொண்டிருந்திருந்தாள். பள்ளிசெல்லும் நாட்களில் மருத்துவமனையில் அதுவும் கவலை மரத்தடியில் எல்லையில்லா காத்திருப்பில்....இடையில் அவ்வப்போது உறவினர்களை அழைத்து நோயாளியை பார்க்க அனுமதிப்பார்கள். என்னையும் அழைத்து அனுமதித்தார்கள். மருத்துவர்களை விட செவிலியர் அதிகமிருக்கும் பிரிவு. கண் விழிக்கவில்லையென்றாலும் முன்னைவிட இப்போது நிலமை ஓரளவு தேரியிருப்பதாக மருத்துவர் கூறிவிட்டு வளர் மருத்துவக்குழுவிற்க்கு சில அறிவுறுத்தல்களுக்குப் பிறகு நகர்ந்து விட்டார். ஒரு சிலரைத்தவிர ஏனைய நோயாளிகள் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தனர். பதின்ம வயதுக்காரன் ஒருவனின் தலை முழுக்க கட்டுடன் படுத்துக்கிடந்தான். அவனருகில் இன்னொருவர், தலையருகில் இளம் மனைவி, "மாமா.... மாமா... கண்ணைத்திறந்து பாரு மாமா...மாமா..." என்று உறக்க அவரை எழுப்பி அழைத்துக்கொண்டு போய் விடுவதான முடிவுடன் உலுக்கிக்கொண்டிருந்தார். ஒரு வாகன விபத்தில் அடிபட்டு கோமாவில் இருப்பவரை, மருத்துவர்கள் உறவினரின் குரல் அவர் மூளையை எட்டி நினைவு திரும்ப ஏற்ப்படுத்திக்கொடுத்திருக்கும் வாய்ப்பது.
தந்தை ஓரளவு தேரிவிட்டார் என்ற நம்பிக்கை மனதளவில் ஒரு பிடிப்பை கொடுத்தாலும் ஏனையோரின் கவலைகள் இன்னும் ஆழமாக அழுத்திக்கொண்டிருந்தது. அந்த சகோதரியின் கணவனை எழுப்பிவிட வேண்டுமென்று தோன்றியது. அவர் அதே நிலையில் கடந்த ஆறேழு நாட்களாக அவசர சிகிச்சைப் பிரிவிலேயே இருப்பது அவரை விட அவர் உறவுகளின் நிலை கவலைக்குறியது என்பது ஓரிறு நாட்களில் தெரிந்து விட்டது.
வெளியே வந்ததும் என் அருகில் புத்தகம் படித்துக்கொண்டிருந்த அந்த சகோதரிக்கு அழைப்பு. அந்த அறையில் ஒரு சிலர் அழைப்புகளை பதட்டத்துடன் எதிர்நோக்கும் காரணம் அதற்க்கு முன் வந்த சில அழைப்புகள், நோயாளி மருத்துவர்களை கைவிட்டுவிட்ட செய்தி கேட்பதற்க்கானதாய் இருந்திருக்கும்.
அந்த சிறு பெண்ணின் முகம் பார்வையிலேயே என்னை ஏதோ ஒரு உறவாக மாற்றிக்கொண்டிருந்தபடியால் என்னருகில் அமர்த்தி அவளை சமாதானப்படுத்திக் கொண்டிருந்தேன். பேச்சின்போது சிகிச்சை பெற்றுக்கொண்டிருப்பது அவளின் அண்ணன் என்றும் இரு சக்கர வாகன விபத்தொன்றில் அடி பட்டு இங்கு அனுமதித்திருப்பதும் தெரிந்தது. அவளுக்கு அந்த அண்ணனின் தேவை என்ன என்பது எனக்கும் தெரிந்திருந்தது. அம்மாவிடமும் அப்பாவிடமும் கிடைக்காததை அண்ணனிடம் பெற்றுக்கொள்ளும் தங்கைகள், சகோதரிகளுக்காக எதையும் கொடுத்துவிடும் அண்ணன்கள் சூழ்ந்த உலகமன்றோ நானிருந்தது. ஏழெட்டு வயது இடைவெளியில் பிறந்த உடன் பிறப்புகள் நண்பர்களாகவே வளர்வது அதிர்ஸ்டத்தின் வாய்ப்பு.
பள்ளிக்கு கொண்டு விடுவதாயிடுக்கட்டும், தோழிகளை மிரட்டுவதாயிருக்கட்டும் "இரு இரு எங்கண்ணங்கிட்ட சொல்லித்தர்றேன்" என்ற மிரட்டலாக இருக்கட்டும், அண்ணன் அண்ணனே. அம்மாவிற்க்கோ, புருசனின் வருமானத்தில் எப்படியாவது பையனை படிக்க வைத்துவிட்டால் அவன் தங்கையை பார்த்துக்கொள்வான் என்ற கனவு. என்ன குறும்பு செய்தாலும் பதின் வயது பையன்களின் அம்மாக்களுக்கு எப்போதுமே மகன் மேலுள்ள நம்பிக்கை, அவனை யாரிடமும் விட்டுக்கொடுக்க மாட்டாள். அண்டை வீட்டாரிடமும், கல்யாணங்காட்சியிலும் உறவினரிடம் எப்போதும் மகன் புராணமாகத்தானிருக்கும். அதைக் கேட்டு கேட்டுப் பழகிவிட்ட தங்கைக்கும் அண்ணன் எப்போதுமே ஒரு ஹீரோதான் என்று எண்ணவைத்து விடும். பொதுவாக மகனைப்பற்றி பெருமை பேசிக்கொள்ளாத ஒருவர் தந்தைதான். தனக்குப்பிறகு குடும்பத்தை தூக்கிச்செல்லும் கடமை கொண்டவன் இப்படி பொறுப்பற்று இருப்பது, அவர் தூக்கி வரும் அந்த சுமையை வாங்கிக்கொள்ள தயார்படுத்திக்கொள்ளாதது என்று நூறு கவலைகளில் பிரதான கவலையாய் மகன் இருப்பது காரணமாக இருக்கலாம். தான் சைக்கிளில் போனாலும் மனைவியின் வற்ப்புறுத்தலால் மகனுக்கு பைக் வாங்கிக்கொடுத்துவிட்டு சாலையெங்கும் அவனைத்தொடரும் அவரின் அக்கறை யாருக்கும் தெரியாது.
எல்லோருடைய நம்பிக்கையையும் தூக்கிக்கொண்டு வந்து இப்படி அவசர சிகிச்சைப்பிரிவில் படுத்துக்கொண்டிருப்பது நமக்கே கவலையாக இருக்கிறது. சாலை விபத்தில் தலையில் அடிபட்டு சேர்க்கப்பட்டவனுக்கு ஒரு அறுவை சிகிச்சை செய்து பிறகு ஓரளவு நினைவு திரும்பி சாதாரன அறையில் இருந்த போது அவனுக்குப்பிடித்த மாம்பழ குளிர்பானத்தக் கொடுத்திருக்கிறார்கள். அது அவனுக்கு சுரத்தை ஏற்ப்படுத்தி பின் ஏதேதோ ஆகி மீண்டும் அவசர சிகிச்சைப்பிரிவில். முந்தைய அறுவை சிகிச்சை முடிந்து சில நாட்களே ஆன நிலையில் இன்னொரு அறுவை சிகிச்சை செய்ய முடியாத நிலையில் மருத்துவர்கள் போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
யார் யாரிடமோ கேட்டு, உள்ள உடமையெல்லாம் விற்று பணத்தைக்கொண்டு வந்து கட்டிக்கொண்டே இருக்கின்றனர் நோயாளிகளின் உறவுகள். பணத்தை கட்டினால்தான் அடுத்த கட்ட சிகிச்சையளிக்கும் மருத்துவமனைகள் அறச்சீற்றத்தை தூண்டினாலும் அங்கிருப்பவர்கள் அதைப் பொருட்படுத்துவதில்லை. எப்படியாவது உறவுகளை நலமுடன் வீட்டிற்க்கு அழைத்துச்சென்றுவிட வேண்டுமென்பதே குறி.
ஒரு புறம் உறவினர்களின் கவலை தோய்ந்த முகம் இன்னொரு புறம் வழிபாட்டு ஏற்ப்பாடுகள். எப்போதும் பரபரப்பாய் திரியும் மருத்துவர்கள், செவிலியர்கள். மறு புறம் புதிய பிறப்புகள், நோய் தீர்ந்து வெளிச்சென்று மறு பார்வைக்காக வந்திருக்கும் நம்பிக்கை நிறைந்த முன்னாள் நோயாளிகள். ஒரு மருத்துவமனை மனிதனின் எல்லா நோயையும் தீர்த்துவிடும் என்றாலும் யாரும் தங்கியிருக்க விரும்பாத இடம்.
அடுத்த நாள் காலை ஏழு மணிக்கெல்லாம் அந்த அறை மீண்டும் அன்றைய நாளை எதிர்கொள்ள தயாரிக்கொண்டிருந்தது. மனிதர்களை விடவும், புத்தகங்களைவிடவும் அந்த அறையின் சுவர்கள் ஆயிரமாயிரம் கதைகளை வைத்திருக்கும். கவலைகளை மட்டுமே சுமந்து நிற்க்கும் சுவர்கள் அவை. எப்படி இத்தனை கவலைகளை தாங்கிக்கொண்டு நிற்க்கிறதோ... வழக்கம்போலவே காலைப் பார்வைக்காக உறவுகள் அழைக்கப்பட்டுக் கொண்டிருந்தனர். தந்தை இன்று நேற்றைவிட முன்னேறியிருப்பதாகவும் மூச்சு, இதயத்துடிப்பு சீராக இருப்பதாகவும் சொன்னார்கள். கண்களை விழித்துப் பார்க்கிறார், ஆனால் நான் பேசுவதை கேட்க முடிகிறதா அல்லது கேட்டாலும் அதற்க்கு எதிர்வினையாற்ற முடியாத நிலையில் இருக்கிறாரா என்ற கேள்வியில் நம்பிக்கை யளிக்கும் அம்மா கொடுத்த திருநீரை நெற்றியில் வைத்துவிட்டு மீண்டும் அயர்கையில் வெளியே வந்து காத்திருந்தேன்.
நேற்றை விட இன்று அந்தப்பையனின் குடும்பம் சற்று அதிகமான கவலையுடன் உலவிக்கொண்டிருந்தனர். அவனின் தாயர் உரக்கமாகவும் நடுக்கத்துடனும் சஷ்டிகவசம் படித்துக்கொண்டிருந்தார். எனக்கு ஏதோ ஒரு காரணத்தால் மனதில் கவலை கூடி அழுத்த ஆரம்பித்தது. நானும் இயற்க்கையை வேண்டிக்கொள்ள ஆரம்பித்தேன். எப்படியும் அந்த தங்கையின் அண்ணன் மீண்டு வந்துவிடவேண்டுமென்று. அந்த கவலைகளை உள்வாங்கிக்கொள்ளவோ வெளிப்படுத்திக்கொள்ளவோ தெரியாதவளாய் மற்றவரை பார்த்துக்கொண்டிருந்தாள். சிறிது நேரத்திக்கிப்பிறகு அவர்களுக்கு அழைப்பு. அந்தப்பையனின் தந்தை அவசரமாக சென்றுவிட்டு திரும்பி காத்திருப்பு அறைக்கு வராமல் மற்ற உறவுகளை நோக்கி நெஞ்சில் அடித்தவாரே வெளியில் ஓடினார். அருகில் காத்திருந்த அந்தப்பையனின் அம்மா பதட்டத்துடன் எதையோ புரிந்து கொண்டவராக தரையில் விழுந்து மூச்சிறைக்க கத்தி அழத்தொடங்கினார். வயிற்றிலிருந்து தலைக்கு ஒரு பெரும் பாறை சென்று மூளையை அழுத்தியது. ஆண்டவா.... இருக்கக்கூடாது... என்றவாறு கண்ணில் வந்த கண்ணீரை துடைத்துக்கொண்டே வெளியேறி விட்டேன். அதற்க்குள் உறவினர்களின் துக்கம் அந்த பகுதியை அதிர வைத்துக்கொண்டிருந்தது. மருத்துவர்கள் கைவிட்ட நிலையில் அவனது மரணம் அந்த உறவுகளுக்கு தெரிவிக்கப்பட்ட தருணமது.
கடவுள் என்ற ஒருவன் இருந்தால் அவனிடம் எதையும் கொடுத்தாவது அந்தப் பையனை திரும்ப கொண்டுவந்துவிட வேண்டுமென்று தோன்றியது. எது உண்மை எது பொய் என்று தெரியாமலும் இது ஒரு கனவாக இருக்க வேண்டுமென்ற எண்ணம் தோன்றிக்கொண்டே இருந்தது.
உடல் நலத்துடன் நாம் இருக்கும்போது நடந்துகொண்ட அந்த நிமிடங்கள் கண்முன்னே வந்து சென்றது. சிறு வார்த்தைகளுக்குக்கூட சினம்கொண்டு கோபத்தில் வார்த்தையால் சக மனிதரைக் கொன்ற நிமிடங்கள். சில ஆயிரங்களுக்காக எப்போதும் கூடவே திரிந்த நண்பர்களை எதிரியாக்கி எறிந்த நிமிடங்கள். வாய்க்கால் தகராறில் பேச்சில்லாத பங்காளிகள். ஒன்றிரண்டு சில்லரைக்காக சபிக்கப்பட்ட நடத்துனர்கள். எப்போதும் நமக்காக வாழும் துணையை ஒன்றுமில்லாத ஈகோ காரணங்களுக்காக அழவைத்த நிமிடங்கள். ஓடி ஓடி சேர்த்த செல்வங்கள், அதற்க்காக அறுக்கப்பட்ட உறவுகள், மறுக்கப்பட்ட உரிமைகள், கொடுக்கப்பட்ட விலை... நிலையில்லாத உலகில் சரிசெய்யவே முடியாத பாதிப்பை ஏற்ப்படுத்திவிட்டு சென்று விடுகிறோம்...வெறும் அற்ப்ப காரணங்களுக்காக...
அந்த பெரும் பேரலைக்குப்பின் சில நாட்களுக்குப்பின் தந்தை நலமாக வீடு திரும்பி விட்டார். சிகிச்சையில் குணமானது அவர் மட்டுமல்ல.. நானும் தான். சக மனிதர்களை ஒரு சக மனிதனாகவே பார்க்கவும் அவர்களின் செயல்களை அவர்களின் சூழ்நிலைகளுடன் புரிந்துகொள்ளும் பக்குவம் பெற்றுக்கொண்டேன். எதையோ நோக்கி நீங்கள் உங்கள் முழு சக்தியை பயன்படுத்தி முயற்ச்சி செய்து, வாழ்வின் முக்கியமான சின்ன சின்ன உணர்ச்சிகளையும் தருணங்களையும், கடந்து வரும் ஒவ்வொரு உயிரையும் உதாசினப்படுத்திக்ப்கொள்ளும் மனம் ஒரு நாள் நோக்கம் நிறைவேறினாலும் இழந்தது அந்த மீட்டெடுக்க முடியாத தருணங்களும், உணர்ச்சிகளும் மனிதர்களும் என்பதை தெரிந்துகொள்ளும்போது இறப்பு அவ்வளவு எளிதல்ல என்பதும் புரிந்திருக்கும்.
One of the best blogs, since I had similar experiences that to in Coimbatore , I could get the complete feel
ReplyDeleteநல்ல பதிவு . படிக்கும்போது மனம் கலங்கியது . உண்மையை சரியாக எழுதியுள்ளிர்கள் . வாழ்த்துக்கள் .
ReplyDelete