Wednesday, June 17, 2015

எழுத்தும் வாசகனும்

இரண்டு வரிக்கு மேல் எழுதினால் பெரும்பாலான முகநூல் பயன்பாட்டளர்கள் திரையை இழுத்துவிட்டு நகர்கின்ற இந்த காலத்தில் பக்கம் பக்கமாக கட்டுரைகளையும் கதைகளையும் எழுதி பத்திரிக்கைகளுக்கு எழுதி, தமது படைப்பு பிரசுரமாகுமா என்ற எதிர்பார்ப்புடன் வார இதழ்களை காத்திருந்து தேடும் முந்தைய தலைமுறை எழுத்தாளர்களை நினைக்கும்போது, ஒரு பத்து வருடங்களில் எழுத்தும் அதன் வாசிப்பும் கற்ப்பனை செய்ய முடியாத வளர்ச்சி அடைந்திருப்பது வியப்பளிக்கிறது.

ஒரு பிரபல எழுத்தாளர் மற்றும் பதிப்பாளர் இன்றை தலைமுறையின் வாசிப்புப் பழக்கத்தைப்பற்றி கவலையுடன் இப்படிச்சொல்கிறார், "புத்தக வெளியீட்டின் போது புத்தகங்களை தாங்கி புகைப்படம் எடுத்தது போய், மின் நூல் வெளியிடுவதற்க்கு செல்லிடப்பேசித் திரையை காண்பித்து புகைப்படம் எடுத்துக்கொள்கிறோம்" என்று. உண்மையில் நமக்கே அது நூல் வெளியீடா அல்லது புதிய செல்லிடபேசியா வெளியீடா என்ற ஐயம் ஏற்ப்படுகிறது. திரைப்பட இசை வெளியீட்டின்போது கூட இசைத்தட்டு வடிவில் அட்டையை வைத்து புகைப்படம் எடுத்து வெளியிடுகையில் மின் புத்தகங்களுக்கு அவ்வாறான ஒரு குறியீடு தேவைப்படுகிறதோ? என்று எண்ணத் தோன்றுகிறது.


எனக்குத்தெரிந்த பிரபல எழுத்தாளர்கள் பெரும்பாலோனோர் தமிழ்ச்சூழலில் புத்தகங்கள் விற்ப்பதில்லை, இங்கே வாசிப்பார்வன் குறைவு, வாசகனின் ரசனை பாமரத்தனமாக இருக்கிறது என்பது மாதிரியான புலம்பல்களை பதிவு செய்துகொண்டிருக்கிறார்கள். என்னைப் பொருத்தவரை அது போன்ற எழுத்தாளர்கள் மரபு எழுத்தாளர்கள் என்பேன். அவர்கள் தற்கால ஊடக வளர்ச்சியை புரிந்து கொள்ளாமலும் வாசகனை தெரிந்துகொள்ளாமல் காலத்தின் மாற்றத்தை ஏற்றுக்கொள்ளாமலும் கரையில் நின்று புலம்பிக்கொண்டிருகிறார்கள். எழுத்தாளனுக்கு எழுதுவதே கடமை. வாசகனுக்கு தனக்கு என்ன தேவை என்பதை அவன் எளிதில் தேடிக்கொள்ளும் கருவிகள் எண்ணற்றவை இருக்கின்றன. அவனைப்பொருத்த அளவில் ஒரே நேரத்தில் நான்கைந்து புத்தகங்களை செல்லிடபேசியில் படித்து விட்டு போய்கொண்டே இருப்பான். புத்தகங்களை யாரும் இப்போது தூக்கிக்கொண்டு அலைவதில்லை.

ஒரு அரை மணிநேர பயணத்திலோ, அலுவலக வேலைக்கிடையிலோ கணினியிலோ அல்லது செல்லிடப்பேசியிலோ தனக்கு விருப்பமானதை படித்துக்கொள்வது இன்றைய வாசிப்பு. எழுத்தாளர்களும் பதிப்பகத்தாரும் கவனம் கொள்ள வேண்டியது இவர்களைத்தான். ஒரு வாசகன் எப்படி தன் விருப்பமான எழுத்தாளனை தேடிக்கொள்கிறானோ அதே போல் ஒரு எழுத்தாளனும் தன் வாசகனை தேடிக்கொள்ள வேண்டும். இன்றைய கால கட்டத்தில் இலக்கிய கூட்டம், வாசக வட்டம் போன்றவை அதிகமாக பொது சனத்தின் மத்தியில் நடைபெருவதில்லை. எப்படி ஒரு மல்டி லெவல் மார்க்கெட்டிங் கூட்டம் நடைபெறுகிறதோ அப்படி ஒரு குழுவிற்க்குள் விவாதித்து இலக்கியக்கடமை முடித்து விடுகிறார்கள் மரபு வாசகர்கள். இலக்கியவாதி, எழுத்தாளன், கவிஞன் என்று சொன்னால் MLM காரனை பார்த்ததுபோல் தெரித்து ஓடி விடுகிறான் பொதுசனம். இந்த இலக்கியவாதிகள் தங்களை சமூகத்தின் அறியாமையை நீக்கவந்த கடவுளின் தூதனாக எண்ணிக்கொண்டு ரோட்டில் போகிற வருகிறவனையெல்லாம் பாவமண்ணிப்புத் தரும் சுவிசேசப் பார்வை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் பயன்படுத்தும் வார்த்தைகள், கருப்பொருட்கள் சாதாரண வாசகனுக்கு பிடிபடுவதில்லை.

வாசகனின் கவனத்தை ஈர்க்க தெருவில் இறங்கி பட்டாப்பட்டியுடன் சண்டைபோடும் நிகழ்வுகளும் அவ்வப்போது நடந்துகொண்டுதான் இருக்கிறது. ஒரு புத்தகம் வெளியிட்டுவிட்டு எழுத்தாளன் என்று பட்டம் சூட்டிக்கொண்டு தரையைப் பார்க்காமல் நடக்கும் ஜீவன்கள் தமிழ்ச்சூழலில் சாதரணம். இந்த சோ கால்டு மரபு எழுத்தாளர்களை புறந்தள்ளிவிட்டு பொதுசனத்தைப் புரிந்துகொண்டு அவனுக்கும் நல்ல ரசனையிருக்கிறது என்பதை ஒத்துக்கொண்டு அவனையும் நல்ல ரசிகனாக பாவித்து எழுதிய வலைப்பூ எழுத்தார்கள் இந்த தலைமுறை எழுத்தாளர்கள். ஒரு பதிவில் நிகழ்கால நடப்புக்களை அத்தனை சுவாரஸ்யமாக நகைச்சுவையுடன் எழுதி கணிப்பொறி பயன்பாட்டாளர்களை தன்பக்கம் ஈர்த்தவர்கள் இவர்கள். வலைப்பூக்கள் ஒரு வாசகனை எழுத்தாளனாக்கும் வல்லமை கொண்டவை. சக எழுத்தாளனைக்கூட எழுத்தாளனாக ஒத்துக்கொள்ளாத மரபு எழுத்தாளர்களைப் பார்த்த இன்றைய தலைமுறை, புதிய வாசகனையும் எழுத்தாளனையும் எப்போதும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது. இங்கு சக எழுத்தாளனையும், வாசகனையும் தூக்கிவிட்டுச் செல்லும் மனப்போக்கு பெருகிக் கிடக்கிறது. எழுதிய வலைப்பூவை வாசகனின் கருத்துக்கள் மேலும் மணக்கச்செய்யும். அந்த கருத்துக்களே அடுத்த பூவிற்க்கு வித்தாக அமையும்.

முகநூல் மற்றும் டிவிட்டர் போன்ற சமூக ஊடகங்கள் அடுத்த தலைமுறை வாசகனையும் எழுத்தாளனையும் உருவாக்கிக் கொண்டிருக்கிறது. நாற்பது எழுத்துக்களில் இரண்டு லட்சம் வாசகனை அடைய வேண்டுமானால் அந்த எழுத்து வாசகனை எப்படி உள்வாங்கியிருக்கவேண்டும் என்று சொல்லத்தேவையில்லை. ஒரு காலத்தில் பக்கம் பக்கமாக எழுதி பத்திரிக்கைகளுக்கு அனுப்பி காத்திருந்த எழுத்தாளர்கள் இன்று சமூக ஊடகங்களில் பதியப்படும் பதிவுகளையும், கீச்சுகளையும் பத்திரிக்கைகள் எடுத்து பிரசுரிப்பதைப் பார்த்து விக்கி நிற்கிறான் .

எழுத்துலகின் பரிணாம வளர்ச்சியை புரிந்து கொள்ளாமல் வாசகனை குறைசொல்லி நிற்க்கும் பழைய எழுத்தாளர்களைப் பார்த்து வெகுசன வாசகனும் இன்றைய தலைமுறை கருத்துருவாக்கும் கலைஞனும் தனக்குள் சிரித்துக்கொள்கிறான்.

காகிதங்களில் பக்கம் பக்கமாக அச்சிட்டு வெளியிடுவதுதான் எழுத்தாளனை அடையாளப்படுத்தும் என்பது புலவர்களையும் ஏட்டுச்சுவடிகளையும் இன்றைய தலைமுறைக்கு நினைவு படுத்தும். ஆனால் எழுத்தும் வாசகனும் எபோதும் எழுத்தாளனை தொடர்வதில்லை. வாசகனை புரிந்து கொள்ளாத எழுத்தாளனை கடந்து எழுத்தும் வாசகனும் வளர்ந்துகொண்டே செல்வார்கள்.

1 comment: