Sunday, June 21, 2015

ஊர் - 1

வழக்கமாக ஊர் நடப்புகளைப்பற்றி திண்ணையில் விவாதிப்பது போலவே இந்த முறை "ஊர்ப்பெருமை" பற்றி விவாதிக்கிறோம். இந்த விவாதப்பொருளைத் தந்த இந்த வார நீயா நானாவிற்க்கு நன்றி.
ஊர் - என்றாலே நமது சொந்த ஊர்தான் என்று பொருள்கொள்ளுமளவிற்க்கு நாம் ஊர்புரத்தான்கள். இந்த ஒரு வார்த்தை நமக்குள்ளே கொண்டு வந்து சேர்க்கும் நினைவுகள் ஆயிரம் ஆயிரம். பிறந்து வளர்ந்த சொந்த ஊரைப்பிடிக்காதவர் இங்கு யார் உள்ளார்?. படிப்பு முடித்தும் சொந்த ஊரில் குடும்பம் நடத்தும் நண்பர்கள் அதிர்ஸ்ட சாலிகள். அவர்களுக்கு ஊர் எதையோ ஒன்றை கொடுத்தோ அல்லது பறித்தோ தன்னகத்தே வைத்துக்கொண்டு அவர்களை வெளியில் விடாமல் பிடித்துக்கொண்டிருக்கிறது. பிழைப்பிற்க்காக சென்னை வந்து, பின் ஹைதராபாத், பின் நியூயார்க், ஆர்கன்சா, சிக்காகோ என்று சுற்றிக்கொண்டே இருக்கும் என்னைப்போன்ற பரதேசிகளுக்கு ஊர் மீது இந்த விசயத்தில் கொஞ்சம் கோபம்தாம். என் சகாக்கள் சிலருக்கு வாழ்வையும் வளத்தையும் கொடுத்து இருக்க வைத்துக்கொண்ட ஊர் என்னை பிடியின்றி விட்டுவிட்டதே என்னும்போது கொஞ்சம் வருத்தம்தான். இருந்தாலும் விடுவதாய் இல்லை.. அம்மாவைபோல அடித்தாலும், திட்டினாலும் அணைத்துக்கொள்ள அவளைத்தவிர வேறு யார் இருக்கிறார் எங்களுக்கு? வேறு ஊர் எங்களுக்கு ஏது? எங்குபோனாலும் தினம் ஒருமுறையாவது ஊர் வந்துபோய்விடும். சிகாகோவில் புளியமரம் இல்லை, சந்தைக்கடை இல்லை. ஏன் பேருந்து நிலையம் கூட இல்லை. சொல்லப்போனால் டவுன் பஸ் கூட இல்லை.
இன்றைக்கு இருக்கும் ஊர், நம்மப்போலவே வளர்ந்து பேண்ட், முழுக்கை சர்ட் போட்டு நாகரிமடந்து கடுவிட்டது, அடுக்குமாடி கட்டிடங்களும் சாலை நிறைய வாகனங்களையும் கொண்டு. எப்படி நாம் ஒன்னாம் வகுப்பு ரெண்டாம் வகுப்பு கருப்பு வெள்ளை போட்டோ பார்த்து பரவசமடைகிறோமோ அதுபோல ஊரின் கருப்பு வெள்ளை பிம்பமும் பரவசத்தை ஏற்ப்படுத்தும்.
எங்கள் வீதியெல்லாம் அப்போது காங்கிரிட் சாலைகளில்லை. ஏன் சாக்கடை கூட இல்லை. சிறிய வாய்க்கல் போல வீதியின் ஓரத்தில் வெட்டியிருப்பார்கள். அன்றைய வீதி எப்படி எங்களையெல்லாம் வைத்துக்கொண்டு விசாலமானாதாய் இருந்ததென்று தெரியவில்லை. எப்படி காற்று வெப்பத்தால் விரிவடைந்தும், குளிரால் சுருங்கியும் போய்விடுகிறதோ அதுபோல வீதிகள் காலத்தால் சுருங்கிவிடுகிறதோ?. இன்று காரைக்கொண்டு நிறுத்தினால் வீதியில் யாரும் போய்வர முடியாது. எங்கள் வீதிக்கு கார் பிடிக்கவில்லை என்று புரிந்துகொண்டேன். ஆம் கார் நம்முடைதில்லை.. அது நமக்கானதும் இல்லை.. நம்மை தெரிந்த வீதிக்கு தெரியாதா அது... இப்பொதெல்லாம் வீதியில் செல்வதானால் காரை தூர நிறுத்திவிட்டு கால்நடையாக.. இல்லை இல்லை..எனக்கும் வீதிக்கும் உள்ள உறவை தொட்டுக்கொள்ளாமல் எப்படி தொடர்வது... இன்னும் அந்த டியூப் லைட் போஸ்ட் இருக்கிறது.. சிறுவனாய் இருந்த போது அதுதான் எங்கள் மைதானத்திற்க்கு ஒளிவெள்ளம் பாய்ச்சும் விளக்கு.... பரிச்சைக்கு கூட்டாக படிக்கக்கூட அந்த விளக்குதான்.. நல்ல விளக்கு.. புத்தருக்கு போதி மரமென்றால் எங்களுக்கு அந்த மின் விளக்கு... அறிஞர் அண்ணா தெரு விளக்கடியில் படித்துதான் அறிஞரானார் என்று அப்பா சொல்லும்போதெல்லாம், தெருவிளக்கு எப்படியும் என்னையும் அறிஞனாக்கிவிடும் என்று நம்பிக்கொண்டேன்...
எல்லோர் வீடும் வீதியில் ஓட்டு வீடுதான்.. யார் சொன்னார்களோ தெரியவில்லை ஓட்டுவீடு ஏழ்மையின் அடையாளம் என்று.. படித்து முடித்து வேலைக்குபோனதும் எல்லா பையன்களும் கை வைத்தது ஓட்டு வீட்டின்மேல்தான். இப்போது எங்கள் வீதியில் ஓட்டுவீடுகள் இல்லையென்றே சொல்லலாம்.. ஆனால் எல்லோருமே இன்னும் ஏழைகள்தான்..இல்லையென்றால் நிறைவாக வீட்டில் நிம்மதியாக வாழ்ந்துகொண்டிருக்க வேண்டுமல்லவா?.. எங்காவது ஒரு இடத்தில் பொருளைத்தேடி அலைந்து கொண்டே இருக்கிறார்கள், ஒரு பிச்சைக்காரனைப் போல..
சந்தைக்கடை... தமிழ்நாட்டிலேயே இரண்டாவது பெரிய சந்தை எங்க ஊர் சந்தை.. ஒரு விளம்பரம் தான்..பெரிய சந்தையென்றால்.. பெர்ர்ர்ர்ர்ரிய சந்தைதான்..இன்றைக்கு புரூக் பீல்டு மால், சிட்டி சென்றல், பீனிக்ஸ் மால்னு கடைகடையா ஏறி இறங்கி காய்கறி வாங்குபவனுக்கு தெரியும், சைக்கிளில் சென்று அம்மாவுடன் சந்தை செலவு செய்வது எவ்வளவு சந்தோசமானது என்று. சந்தையில் கிடைக்காத பொருளே இல்லை... தக்காளி, பீர்க்கங்காய், உருளைக்கிழங்கு எல்லாமே பிரெஸ்ஸாக கிடைக்கும். எதற்க்குமே கெட்டுப்போகமல் இருக்க குளிரூட்டிகள் இல்லை. கடைகளுக்கு கூரை சாக்குத்துணிகளே. சில பணக்கார அதிபர்கள் தார்பாலின் கூரையமைத்திருப்பார்கள். எல்லாக்கடைக்காரர்களுக்கும் நிரந்தர வாடிக்கையாளர்கள் இருப்பார்கள். புது வாடிக்கையாளர்களை அவ்வப்போது அழைத்துக்கொண்டே இருப்பார்கள். நாலாணாவிற்க்கும், எட்டணாவிற்க்கும் சில நேரங்களில் பெரிய பேரம் நடக்கும். கருவேப்பிலை கொத்தமல்லி தழைகள் எப்பொதும் இலவசமே. ஆங்காங்கே மாட்டு வண்டிகளில் அரிசி மூட்டைகளை ஏற்றி இறக்கிக் கொண்டிருப்பார்கள், மல்யுத்த வீரனைப்போல உடல்வாகு கொண்ட அண்ணன்கள். என்னதான் முக்கினாலும் நூறுகிலோ மூட்டையை நம்மால் இரண்டு அடிகூட நகர்த்த முடியாது. ஆனால் மணியண்ணன் சாதரணமாக இரண்டு மூன்று மூட்டைகளை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி இறக்கி ஏற்றி விடுவார். அவர்கள் இப்போதெல்லாம் என்ன செய்து கொண்டிருப்பார்கள்?...அந்த சந்தைக்கு நான்கு அல்லது ஐந்து வாயில்கள்... சந்தைக்கு இரண்டு மூன்று நாட்களுக்கு முன்னரே ஆடு மாடுகளை வெளியூரிலிருந்து ஓட்டி வருவார்கள். எங்கள் வீதி அந்த மூன்று நாட்களும் போக்கு வரத்து அதிகம் பார்க்கும். வீதியெங்கும் மாட்டுச்சாணமும் ஆட்டு புலுக்கையும் நிறம்பியிருக்கும்..சந்தைக்கு போகும் பிரதான பாதைகளில் ஒன்றல்லவா அது...
பெரிய சாலைகள் இரண்டின் புறங்களிரண்டிலும் புளியமர அணி வகுப்பு எப்போதும் இருக்கும்.. இன்னும் கூட சில அப்படியே தான் நிற்க்கின்றன..புளியமரங்கள் இல்லையென்றால் எங்கள் ஊரிற்க்கு வேறேதாவது பெயர் வந்திருக்கும்... நல்லவேளை அப்படியேதும் நடக்கவில்லை...பவானிசாகர் சாலையில் அப்போதெல்லம் இரண்டோ மூன்று பஸ்கள்தான் செல்லும்.. ஒன்று செந்தில் என்பது நியாபகம் இருக்கிறது.. அது பண்ணாரிவரை சென்று வரும். அந்த சாலையில்தான் எஸ் ஆர் டி தியேட்டர் இருக்கிறது. ரஜினி படங்களை வெளியிடுவதில் எஸ் ஆர் டி கவுண்டர் கில்லாடி. எப்படியும் அடித்து பிடித்து படத்தை முதல் ரிலீஸ் செய்து விடுவார். ரஜினி படங்களுக்கு டிக்கட் விற்ப்பது முதல் டிக்கட் கிழிப்பது வரை எல்லாமே ரசிகர் மன்றம் உரிமையுடன் எடுத்துச் செய்யும்... ஆண்கள் பெண்கள் என்று பிரித்து வைக்கப்பட்ட டிக்கெட் கவுன்டர்கள். ரூ 1.50 பெஞ்சு முதல் 4.50 சேர் வரை ஒரு கவுன்டரிலும் ரூ5.50 மேல் வரிசை சீட் மற்றும் ரூ 7.00 பால்கனி சோபா ஒரு கவுன்டரிலும் இருக்கும். இன்றைக்கு இருக்கும் அவ்வளவு பெரிய பொருளாதார பாகுபாடெல்லாம் கிடையாது(:-)). இன்றுகூட "உள்ளம் உருகுதைய்யா..உன்னடி காண்கையிலே.." என்ற முருகன் பாடல் ஒவ்வொரு காட்சிக்குப்பின்னும் ஒலிக்கும்.. வீட்டில் அம்மாவுக்கு கடிகாரம் அந்த பாட்டொலிதான்.. என்ன காரணத்தாலோ இப்போதெல்லாம் சத்தம் குறைவாகவே இருக்கிறது.
ஊர் கதை பெரிதென்பதால் நாளையும் தொடருவோம். 

No comments:

Post a Comment