Wednesday, June 24, 2015

ஆணொரு பாகி

சாலையைக் கடக்கும்போது அந்த பெரிய விளம்பரப்பலகையில் துணிக்கடை விளம்பரப் பெண் இளநீலச் சேலையில் சிரிப்பதை பார்க்காமல் கடந்து செல்வது அவ்வளவு எளிதல்ல. அவள் எப்போதுமே நான் பார்க்கும்வரை என்னையே பார்ப்பது போலும், அவளை கடக்கும் வரை என்னையே பார்ப்பதும்போல் தோன்றும். வீட்டிலிருந்து வெளியே போகும்போது பாத்து போயிட்டு வாங்கன்னுதான் சொல்லியனுப்புவாள் என் மனைவி. அவள் சொல்வதை எப்படித்தட்ட முடியும். அந்த இளநீலச் சீலைக்காரியை பார்க்காமல் எப்படி போய்வர முடியும்?

ஆண்கள் பொதுவாகவே இரக்கம் இல்லாதவர்கள். அந்த விளம்பரப்பலகையில் அந்த பெண்ணை வெய்யிலிலும் மழையிலும் விட்டுவிட்டு சென்றுவிட்டார்கள். ஆண்கள் எப்போதுமே பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக காட்டிக்கொள்வார்கள். ஆனால் அந்த முக்கியத்துவத்தில் தனக்கான பகுதியை முதலில் எடுத்துக்கொள்வர். மாதொரு பாகன் - பெண்ணும் ஆணும் சரி சமம் என்று மக்கள் புரிந்துகொள்ள சிவபெருமான் அப்படி உருவெடுத்தார் என்று ஆண்கள் மட்டுமே சொல்ல கேட்டிருக்கிறேன். அது ஏன் "மாதொருபாகன்"? "ஆணொருபாகி" என்றல்லவோ இருக்கவேண்டும். 

"எங்கம்மா நல்லா சமைப்பாங்க"," என் மனைவி சமையல் நல்லா இருக்கும்" னு பெருமை பேசுவதெல்லாமே பெண்ணை புகழுவதல்ல. இதுவும் ஒருவகையில் அவர்களை சமையலில் கெட்டிக்காரர்கள் அதனால் அதையே தொடர்ந்து செய்யுங்கள் என்று சொல்லாமல் சொல்லி வைப்பது. இங்கே ஆண் பெண் சமத்துவம் பேசும் எந்த ஆணும் சமைப்பதில்லை. தெரியாது என்பது காரணமல்ல. தெரிந்து கொள்ளத்தேவையில்லை என்பதே எண்ணம். மனைவி திருமணம் ஆகும்போது சமையல் தெரியாமல் இருந்தால், அவளுக்கு தெவையான அளவு கால அவகாசம் கொடுத்து இண்டர்னெட்டிலோ வார இதழ்களிலிலோ வரும் சமையல் குறிப்புகளைக்கொடுத்து சமைக்க கற்றுக்கொள்ள வாய்ப்புகள் ஏற்ப்படுத்தி கொடுக்கப்படும். ஆனால் தவறுதலாக கணவன் சமையல் கற்றுக்கொள்வதைப்பற்றி எந்த சிறு பேச்சும் இருக்காது. மனைவி வேலைக்குப் போய்க்கொண்டிருந்தாலும் சமையலும் அவள் பொறுப்புதான்.

குழந்தையை பெற்றெடுப்பதிலிருந்து வளர்த்தெடுக்கும் ஒவ்வொரு நாளும் எண்ணிலடங்கா வேலைகள். அவைகள் எதுவுமே சமூகத்தின் கண்களில் ஒரு வேலையாய் தெரிவதில்லை. எல்லாம் "தாயின்" கடமை. ஆண் ஒரு குடும்பத்திற்க்கு அதிகமாகச்செய்யும் கடமை பொருளீட்டுவது. ஒரு பெண் இன்றைய கால கட்டத்தில் ஆணுக்கு சமமாக தனது கல்வியால் பொருளீட்ட முடியும். ஆனால் ஒரு பெண் செய்யும் வீட்டு வேலைகளை ஆண் செய்ய முடியாது. அதுவும் இந்தியச் சூழலில் படித்த ஆண்களே பெண்களுக்கான வேலைகள் என்று ஒதுக்கி அவற்றை செய்வதில்லை. இது வேலை என்பதன் பொருட்டு சொல்லவில்லை. ஒரு சக மனித உயிர் என்ற வகையில் தன்னுடைய பங்கு கடமையை செய்வதில் அவ்வளவு ஆர்ப்பாட்டம். நிச்சையம் இந்தச் சூழல் வருங்காலத்தில் மாறும். அதற்க்கொரு உதரணமாக என்னுடன் பணிசெய்த ஒரு அமெரிக்கப்பெண் மணியின் வாழ்க்கையை உதரணமாக எடுத்துக்கொள்ளலாம்.

இங்கு எல்லா கடமைகளும் சமமாகவே பிரித்துக்கொள்ளப்படுகிறது. வீட்டு வேலைகளிலிருந்து பொருளீட்டுவது வரை. எங்குமே ஒரு ஆண் பெண்ணிடம் தன் அதிகாரத்தை செழுத்த முடியாது. ஒரு நேரம் கணவன் சமைத்தால் இன்னொரு நேரம் மனைவி சமைப்பது. இருவருக்குமே சமைக்க மனமில்லையென்றால் துரித உணவை (சீரியல், பர்கர்) உண்டுகொண்டு இருவருமே வேலைக்கு சென்று வருவர். வீட்டுக்கடனில் இருவருக்கும் பங்கு. இருவரும் தனக்கான பங்கை மாதத்தவனையில் செழுத்தி விடுகின்றனர். ஒரு பெண் தாராளமாக தன் சக நண்பர்களுடன் ஆணைப்போலவே மது அருந்தலாம். நாம் நினைப்பது போல அளவுக்கு அதிமாக குடித்துவிட்டு ரோட்டில் ஆடுவதில்லை. அங்கேயும் நாகரீகத்தை அவர்களிடம் கற்றுக்கொள்ளவேண்டும். எந்த நிலையிலும் அவர்கள் தங்களின் மீதான மரியாதையை குறைக்கும் சூழ் நிலைக்கு வாய்ப்பளிப்பதில்லை. குழந்தைகளை பள்ளிக்கு கொண்டுபோய் விடுவதாகட்டும், தன் பெற்றோர்களுக்கு உதவுவதாகட்டும் கணவன் மனைவிக்கிடையே தங்களுடைய பங்கை தன் துணையுடன் பகிர்ந்து செய்து முடித்துக்கொள்கிறார்கள். ஒரு வேளை கணவன் மனைவியாக தொடர்ந்து மனதொத்து போய் வாழ முடியாத சூழலில் பிரிந்து போக ஆலோசனையைப் பெறுகிறார்கள். இருவரும் சம்மதித்து பிரியும் சூழலில் தங்கள் சொத்துக்கள் மற்றும் கடன்களை பிரித்துக்கொள்கின்றனர். பெரும்பாலும் பெண் குழந்தைகளை வளர்த்தெடுக்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறால். பிரிந்த பின்னும் குழந்தைகளை சந்திப்பதற்கு பழகுவதற்க்கு மற்றும் பராமரிப்பு செலவை சட்டம் வகுத்துள்ள முறையில் ஏற்றுக்கொள்கிறார்கள். ஒரு பெண் தன் கணவனால் ஆபத்து என்று கருதும் பட்சத்தில் நீதமன்றம் மூலம் விலக்கியிருக்கும் ஆணை பெற்றுக்கொள்ள முடியும். இதன் மூலம் அந்த ஆண் இந்த பெண் இருக்கும் சுற்றளவற்கு 50 அடி சுற்றளவிற்க்குள் பிரவேசிக்க கூடாது, மீறும்போது அது கிரிமினல் குற்றமாக கருதப்பட்டு தண்டனை அளிக்கப்படும். 

என்னுடன் பணியாற்றிய பெண்மணி ஏறக்குறைய மேற்ச்சொன்னவற்றில் எல்லாவற்றையுமே கடந்து வந்து விட்டார். அவரது பிரிந்த கணவர் வேறொரு பெண்மணியுடன் வாழ்கிறார். பள்ளி விடுமுறை நாட்களில் தன் இரு குழந்தைகளை அழைத்துக்கொண்டு சுற்றுலா சென்று வந்ததைச்சொன்னபோது நம் இயக்குனர் விக்ரமனை விட விசால மனம் கொண்ட பெண்மணி என்பது புரிந்து கொண்டேன். குழந்தைகள் தன் தந்தையும் சுற்றுலாவிற்க்கு வர விருப்பம் தெரிவித்ததால் அவரும் அவர் முன்னால் கணவருடன் பேசி சுற்றுலாவிற்க்கு வருகிறார். ஆனால் அவருடைய தற்போதைய மனைவியுடன்!... தன் பிள்ளைகளின் வாழ்க்கையை கருதி இந்தப்பெண்மணி இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. எல்லா சுமைகளையும் தன்னகத்தே தாங்கிக்கொண்டு வாழ்க்கையை இயல்பாய் எடுத்துச்செல்கிறார். எந்த ஒரு கணத்திலும் கண்ணீர் விடுமளவர்க்கு அவர் வருந்தியதை வெளிக்காட்டியதில்லை. அவர்கள் ஆணை விட தனக்கிருக்கும் மன வலிமையைக்கொண்டு வாழ்ந்து காட்டுகிறார்கள். 

என்னதான் மேலை நாட்டு கலாச்சாரத்தை பழித்தாலும், உண்மையில் நம் கலாச்சாரம் பெண்களின் நிலமையை படு மோசமாக வைத்திருக்கிறது. கற்ப்பு என்ற ஒரு வார்த்தையை வைத்து பெண்ணை அடிமையாக வைத்துக்கொள்கிறது. எந்தச் சூழலிலும் நம் கலாச்சாரம் சிறந்தது என்று வெளியில் போய் சொல்லிக்கொள்ள முடியாது. எப்படி தனக்கு அடிமையாய் இருக்க சாதிய அடுக்கை ஆதிக்க சக்திகள் சமுதாயத்தில் உருவாக்கியதோ அதே முறையில் வீட்டிற்க்குள் பெண்ணை அடிமையாக வைத்திருக்க சடங்குகள், வரைமுறைகள் சமூக சிந்தனைகளை வளர்தெடுத்திருக்கிறது நமது கலாச்சாரம்.

பூவுலகின் முதல் மனித உயிர் பெண்ணே, அவள் ஒரு ஆணின் துணையின்றி தன் வாரிசைப் பெற்றெடுத்திருக்க முடியும் என்று ஆய்வுகள் சொல்கின்றன. ஆண்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் பெண்கள் தங்களுக்கான சுயமரியாதையை, சுதந்திரத்தை நோக்கி பயணிக்க ஆரம்பித்து விட்டார்கள். கால தாமதம் ஆனாலும் அதை யாராலும் தடுக்க முடியாது.

ஆண்களைப் பொறுத்த அளவில் உளவியல் ரீதியாக அவர்கள் பண்பாட்டு/ கலாச்சார மாற்றத்திற்க்கு தயார் படுத்திக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் அந்த மாற்றம் பிற்க்காலத்தில் வலிமையுடன் புகுத்தப்படும்போது ஏற்ப்படும் பாதிப்பை தாங்கிக்கொள்ள முடியாத சூழல் உருவாகலாம்.

பெண் நடமாடும் உயிருள்ள சக மனிதராய் இருந்தாலும் அவளை விளம்பரப் பலகையில் இருக்கும் பாவையைப்போலவே வைத்திருக்க எண்ணும் சமுதாயம் அதை நீண்டகாலம் தொடர முடியாது. 

No comments:

Post a Comment