Tuesday, February 28, 2017

புத்தகப் பரிசு

கடந்தவாரம் என்னைப் பின் தொடருபவர்களுள் சிலருக்கு இரா. முருகவேள் அவர்களின் முகிலினி புதினம் அன்பளிபப்பாக தருவதாகச் சொல்லியிருந்தேன். என்னுடன் நட்பில் இருந்தமைக்கும், உரையாடல் மற்றும் கருத்துக்களை பகிர்ந்து அவர்கள் நேரத்தை செலவிட்டமைக்கும் நன்றியாக இந்தப் புத்தகங்களைப் பரிசளிக்க எண்ணினேன். மற்றவர்க்கு அளிக்கும்போது இருமடங்காகப் பெருகும் மகிழ்ச்சியைத் தரவல்லது புத்தகமும், அறிவும். அந்த வகையில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்.

சிறு ஆலோசனை. ஏன் இதை முடிந்த அனைவரும் செய்யக்கூடாது? ஒரு புத்தகத்தை உங்கள் நண்பருக்கு பரிசளிக்கக் கூடாது. புத்தகம் பெற்ற நண்பரும் தன் நண்பர் ஒருவருக்கு ஒரு புத்தகத்தை பரிசளிக்கலாம்.

அதேபோல் புத்தக விற்பனை நிலையங்கள், பதிப்பகங்கள் புத்தகங்களைப் பரிசளிக்க தங்கள் இணையப்பக்கங்களில் சில மாற்றங்களைச் செய்யலாம்,

உதாரணமாக

1. புத்தகத்தைத் தேர்வு செய்து, பரிசளி என்ற தேர்வை வழங்கலாம்.
2. பிறகு புத்தகத்தை பெறும் நபரின் முகவரியை உள்ளீடு பெற்றுக்கொள்ளலாம்.
3. பரிசளிப்பவர் விரும்பும் வாசகத்தை புத்தகத்தில் இடம்பெறச்செய்யலாம், உதாரமாக வாழ்த்துகள்
4. பெறுபவர் பரிசாக விரும்பும் புத்தகம் பெற்றுகொள்ள பரிசுக்கூப்பன்கள் இணையத்தில் அனுப்ப வசதி

கவனத்திற்கு:

Vediyappan M Munusamy
Badri Seshadri
Kannan Sundaram
Panuval BookStore
udumalai.com
பூவுலகு
Abdul Hameed Sheik Mohamed
யாவரும்.காம்

#giftabook

Monday, February 27, 2017

எங்கும் தமிழ் எதிலும் தமிழ்

இன்று வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கக் கூட்டமைப்பின் சார்பில் மாதாந்திர தமிழ் இலக்கிய தொலையுரையாடலில் திரு Aazhi Senthilnathan சிறப்பு அழைப்பளராகக் கலந்து கொண்டு தமிழ் மொழியுரிமை முக்கியத்துவம் குறித்தும், அயலில் வாழும் தமிழர்கள் இணைந்து எப்படி தமிழகத்தில் தமிழ்க் கல்வி  மற்றும் மத்திய அரசின் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் மாநில மொழிகளுக்கு முன்னுரிமை அல்லது சமவுரிமை பெற்றுக்கொள்ளலாம் என்ற ஆலோசனையும் கருத்துக்களும் விவாதிக்கப்பட்டது. அதில் முக்கியமாக தமிழகத்தில் நாம் பயன்படுத்தும் சேவைகளை (அரசு மற்றும் தனியார்) சேவைகளைத் தமிழில் தரக்கோரி அழுத்தம் கொடுப்பது.

ஏற்கனவே PLE மற்றும் CLEARல் இணைந்து இதுபோன்ற செயல்பாடுகளில் ஈடுபட்டிருந்தாலும், சில நாட்களுக்கு முன் இந்தியப்பயணம் மேற்கொண்டிருந்த போது ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் ஏற்பட்ட அனுபவத்தை நினைவுகூறுவது பொருத்தமாக இருக்கும்.

சென்னையிலிருந்து கோவை சென்ற விமானத்தில் அறிவிப்புகள் மற்றும் சேவைகள் போஜ்புரி, இந்தி,மராத்தி மற்றும் உருதுவில் வழங்கப்படும் என்று அறிவித்தார்கள். அருகில் ஒரு தமிழ்க் குடும்பம், சிறு குழந்தையுடன் பயணித்தைக் கவனித்தேன். பெரும்பாலான பணிகள் தமிழர்கள்தான். ஆனால் விமான நிறுவனத்தின் இந்த அறிவிப்பு மகிழ்ச்சியைக் கொடுக்கவில்லையென்றாலும் 1 மணி நேரத்தில் என்னவாகிவிடும் என்று அமைதியாக இருந்தேன். ஆனால் கூடவே பயணம் செய்த தமிழ்க் குடும்பத்தினரின் குழந்தைக்கு பசியேற்பட்டிருக்கும் போல், அழுது கொண்டே இருந்தது. பெற்றோர்களுக்கும் தமிழைத் தவிர வேறு மொழியில் உரையாட பழக்கமில்லை போலும். பிறகு ஒரு வழியாக ஒரு பழச்சாற்றை வாங்கிக் கொடுத்து அமைதிப்படுத்தினார்கள். தமிழில் சேவை வழங்கியிருந்தால் இன்னும் கூட தேவையான உணவை வாங்கியிருக்கக் கூடும். 

அதைவிட முக்கியம் அவசர கால பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த விளக்கங்கள் அனைத்தும் இந்தி மற்றும் ஆங்கிலத்தில். எத்தனைபேர் அவசர காலத்தில் இந்த அறிவுப்புகளைப் புரிந்து நடந்திருப்பார்கள்?

இதை நாம் கேட்காமல் எளிதாகக் கடந்துவிடலாம் அல்லது ஏன் இந்தி கற்றுக் கொள்ள வேண்டியதுதானே என்று பண்ணையார்த்தனமாக கேட்கலாம். அவர்களுக்கு என் பதில், இந்தியைவிட தமிழ் எங்கு, எதில் குறைந்தது? எனக்கான சேவையைப் பெற ஏன் நான் இன்னொரு மொழியை கட்டாயமாகத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்? 

அப்படி இந்தியை கட்டாயமாக்குவது ஐய்யரின் வாயில் ஆட்டுக்கறியைத் திணிப்பதற்கு ஒப்பானது. 

மேலே குறிப்பிட்ட சம்பவம் குறித்து விமான நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு கடிதமொன்று எழுதியிருந்தேன். அந்த கடிதத்திற்கு பதிலளித்த அவர்கள், தவறுக்கு வருத்தம் தெரிவித்ததுடன் தவறை சரி செய்ய ஆவன செய்வதாகக் கூறியிருந்தனர்.



நீங்கள் வேண்டினால் மட்டுமே உங்கள் உரிமை உங்களுக்கு. அப்படித்தான் இங்கு ஆட்சியாளர்கள் நம்மை வைத்திருக்கிறார்கள்.

Friday, February 24, 2017

அமெரிக்க வாழ் இந்தியர்கள் கவனத்திற்கு...

நேற்று கான்சஸின் ஓலெத் நகரத்தின் பார் ஒன்றில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் சிரீனிவாசு மற்றும் அலோக் என்ற இரு இந்தியர் உட்பட மூன்று பேரை ஆடம் என்ற அமெரிக்கர் பார் ஒன்றில் சுட்டுவிட்டு ஓடித் தப்பியுள்ளார். பின் 6 மணி நேரத்திற்குப் பிறகு சம்பவம் நடந்த இடத்திலிருந்து 70 மைல் தொலைவில் வேறொரு பாரில் ஆடம் பிடிபட்டுள்ளார். அவர்மீது கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெறுகிறது. விசாரணையில் மத்திய புலனாய்வு அமைப்பும் களமிறங்கியுள்ளது.

சமீபத்தில் சிரீனிவாசு உயிரிழந்ததாக செய்திகள் தெரிவிக்கிறது. அலோக் மற்றும் இன்னொரு அமெரிக்கர் காயங்களுடன் உயிர் தப்பியதாகத் தெரிகிறது. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுசுமா சுவராசு தனது இரங்கலைத் தெரிவித்தது தான் சிரீனிவாசுவின் குடும்பத்தினருடன் பேசி ஆறுதல் தெரிவித்துள்ளதாக தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

இந்தியர் இருவரும் கார்மின் என்ற ஜிபிஎஸ் தொழில் நுட்ப நிறுவனத்தில் பொறியாளர்களாக வேலை பார்த்து வந்துள்ளனர். சம்பவத்தன்று பாரில் விளையாட்டு போட்டியை தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருந்த போது சலசலப்பேற்பட்டு வாக்குவாதம் நடந்திருக்கிறது. இதில் ஆடம் தம்மைவிட நீங்கள் எந்தவகையில் உயர்ந்தவர் என்று கேட்டும் தமது நாட்டைவிட்டு வெளியேறுமாறு சிரீனிவாசிடம் கத்தியதாகச் சொல்லப்படுகிறது. ஆடம் மெரைனில் பணியாற்றியவர் என்ற தகவலும் வெளிவந்துள்ளது. அதிபர் டிரம்ப் பதவியேற்றபின் வெளிநாட்டவர் மீதான வெறுப்பு அதிகரித்து வருவதுடன் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

பொதுவாக அமெரிக்க வாழ் இந்தியர்கள் இங்குள்ள அமெரிக்கர்களைவிட உயர்ந்த வாழ்க்கை வாழ்வதாக அமெரிக்கர்கள் கருதுகிறார்கள். அதற்கு அவர்களின் வேலை வாய்ப்பு, ஊதியம், வெளியே தெரியுமாறு பயன்படுத்தும் வாகனம், வீடு, நகைகள் போன்றவை காரணமாக இருக்கிறது. அலுவலகங்களில் கூட இந்தியர்களின் முன்னேற்றம், பதவி, ஊதியம் குறித்து அமெரிக்கர்களுக்கு பொறாமையுண்டு. பதவி உயர்வு போன்ற தருணங்களில் அமெரிக்கர்களுக்கு இந்தியர் மேல் பொறாமை ஏற்படுவதைப் பார்ப்பது சாதாரணம்.

இந்த இக்கட்டான காலத்தில் இந்தியர்களோ வேறு வெளி நாட்டவரோ தமது உயிரையும் உடமையையும் பாதுகாத்துக்கொள்ள சில வழிமுறைகளைத் தெரிந்து கொள்வது அவசியம்.

1. தற்போதைய காலகட்டம், அமெரிக்காவில் வெளிநாட்டவருக்கு சாதகமான சூழ்நிலை இல்லை என்பதை உணர்க. 

2. மக்கள் அதிகம் கூடுமிடங்கள், பார், பப் போன்ற கேளிக்கை விடுதிகளில் மது அருந்திய பின் மனிதர்கள் தங்கள் கட்டுப்பாட்டை இழப்பது இயல்பு. அந்த இடங்களில் வாக்குவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். முடிந்தால் சிலகாலம் அந்த இடங்களைத் தவிர்க்கவும்.

3. பொது இடங்களில் அரசியல் பேசுவதைத் தவிர்க்கவும்.

4. வம்புச் சண்டைக்கு யாரேனும் வந்தால், சண்டையில் பின்வாங்கிச் செல்லுங்கள். ஒருபோதும் சண்டையில் ஈடுபடாதீர்கள்.

5. பையிலோ சட்டையிலோ நிறைய பணம், கடனட்டைகளை வைத்துக் கொள்ள வேண்டாம். ஒன்றிரண்டு போதுமானது. 

6. சுத்தமாகப் பணமில்லாமல் வெளியில் செல்ல வேண்டாம். ஒன்று, இரண்டு, ஐந்து, பத்து டாலர்கள் வைத்துக் கொள்ளவும். சில நேரங்களில் துப்பாக்கியைக் காட்டி காசு கேட்பவர்களுக்கு  கையிலிருப்பதைக் கொடுத்துவிட்டு தப்பித்துக் கொள்ள வசதியாக இருக்கும். கையில் காசே இல்லையென்னும் போது உங்களிடம் காசு கேட்டு மிரட்டுபவர் ஏமாற்றத்திற்குள்ளாகி எதுவும் செய்யலாம். இது போன்ற சம்பவங்கள் நடந்துள்ளது.

7. ஆடம்பரச் செலவுகளைத் தவிர்த்துக்கொள்ளுங்கள். அதிக நகைகளுடன் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும்.

8. ஆடம்பரக் கார்களை பொருளாதார வித்தியாசம் அதிகம் உள்ள பகுதிகளில் பயன்படுத்துவதைத் தவிற்கவும்.

9. முடிந்த அளவு சமூகத்துடன் இணக்கமான உறவை வளர்த்துக் கொள்ளுங்கள். இந்திய சமூகத்துடன் உறவை வழுப்படுத்துங்கள். மாநில சங்கத்தில் பங்கேற்று தகவல்களைப் பரிமாறிக்கொள்ளுங்கள்.

10. குழந்தைகளுக்கும் பள்ளியில் சண்டை சச்சரவுகளைத் தவிர்க்க பழக்குங்கள்.

11. அமெரிக்கர்களிடம் போட்டியோ, சண்டையோ ஏற்படும் சூழலில், குறிப்பாக சூழல் நமக்கு சாதகமில்லாதபோது, தோல்வியை ஏற்றுக் கொண்டு அமைதியாக வெளியேறிவிடுங்கள்.

12. சமூக ஊடகங்கள், பொது வெளிகளில் இனவெறுப்பு தொடர்பான உரையாடல்களத் தவிர்த்துக்கொள்ளுங்கள்.

13. சேமிப்புகளியும், கைக் காசைப் போட்டுச் செய்யும் பெரும் முதலீடுகளையும் சிலகாலம் தவிர்க்கவும்.

இது நாம் வாழ வந்த நாடு. இங்கு நம்மைவிட இங்கேயே வாழ்பவர்களுக்கு அதிக முன்னுரிமை உண்டு. அவர்களின் வாழ்க்கை நம்மால் பாதிக்கப்படும் என்று அவர்கள் நினைக்கும்போது இயல்பாக வெறுப்பு எழுவது சாதாரணம். மனிதனும் ஒரு சமூக விலங்குதான். தனக்கு பாதுகாப்பில்லாமல் அச்ச உணர்வை அடையும்போது பாதுகாப்பையும், தன்னிருப்பையும் உறுதி செய்துகொள்ள Wildஆக நடந்து கொள்வது எதிர்பார்க்கக் கூடியதுதான்.

இப்போதைய நிலமையில் பாதுகாப்பிற்கு மட்டும் முன்னுரிமை கொடுத்து இணக்கமாக வாழ வேண்டிய அவசியம் வெளிநாட்டிலிருந்து வந்து வசிப்பவர்களுக்கு எப்போதையும் விட இப்போது தேவை அதிகமாக உள்ளது.

இனவெறியர்களை எதிர்கொள்ள சிக ஆலோசனைகள்

Monday, February 20, 2017

கரை சேருமா கலிபோர்னியா...

உலகத்தின் மென்பொருள் சந்தையில் கலிபோர்னியாவின் பெயர் என்றும் நிலைத்திருக்கும். மைக்ரோ சாப்ட் முதல் ஆப்பிள் வரை இங்கு ஏதாவதொரு கராஜில் தான் அதன் பிரசவம் நடந்திருக்கும். அமெரிக்காவில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப சந்தைக்கு சாதகமான சூழல் நிலவும் கலிபோர்னியாவுக்கு ஒரு சாபம் வந்தது. இதற்கு முன் பல முறை வறட்சியை சந்தித்திருந்தாலும், சமீபத்தில்  2012ல் இருந்து மிகுந்த வறட்சியை  சந்தித்து வருகிறது. அமெரிக்கர்களுக்கு வறட்சி என்பது புதிது. காரணம் சராசரி தண்ணீர் பயண்பாடு அமெரிக்காவில் அதிகம். அது குழியல் அறையில், சமையல் அறையில், புல்வெளி, நீச்சல் குளம் என்று பல்வேறு வகைகளில் பல ஆயிரம் லிட்டர் தண்ணீரை சர்வ சாதாரணமாக செலவழித்து வாழும் வாழ்க்கை முறைக்கு பழக்கப்பட்டது. 

ஆனால் படிப்படியாக அந்த நிலை மாறி குடிநீருக்கே பஞ்சம் ஏற்படும் சூழல் ஒரு சில மாகாணங்களில் நிலவுகிறது. அதில் குறிப்பிடத்தக்கது கலிபோர்னியா. அமெரிக்காவின் மேற்கில் பசிபிக் கடலை ஒட்டியிருக்கும் கலிபோர்னியா நில அமைப்பில் பள்ளத்தாக்குகளையும் அருகில் பாலைவனத்தையும் கொண்டிருக்கிறது. கலிபோர்னியாவின் இப்போதைய வறட்சிக்கு முக்கிய கரணமாகச் சொல்லப்படுவது மூன்று காரணங்கள். அவை உலக வெப்ப மயமாதல், எல் நினோ, கலிபோர்னியாவை ஒட்டிய கடலில் நிலவும் வெப்ப மண்டலம்.

உலக வெப்பமயமாதலை பலர் இன்னும் கற்பனையே என்று எண்ணியும் வாதிட்டும் வரும் நிலையில், அது உண்மை, அதை நாங்கள் அனுபவித்து வருகிறோம் என்று கலிபோர்னிய ஆளுநரும், அமெரிக்க அதிபர் ஒபாமாவும் உலகத்திற்குச் சொன்னார்கள். பூமியின் ஆதாரமான நிலக்கரி, பெட்ரோல் போன்ற எரிபொருட்களை தொடர்ந்து எரித்து வளிமண்டலத்தை வெப்ப காற்றும், புகையுமாக நிரப்பி வைத்ததும், பிளாஸ்டிக் போன்ற எளிதில் மக்காத பொருட்களின் உபயோகமும் புவி வெப்பமயமாதலுக்கு முக்கியக் காரணமாகச் சொல்லப்படுகிறது.

அடுத்து எல் நினோ. பூமியில் தற்போது நிகழும் பெரும்பான்மையான இயற்கைச் சீற்றங்களுக்கும், சீரற்ற வானிலைக்கும் இதை காரணமாகச் சொல்கின்றனர். புவியின் சுழற்சியால் வளிமண்டலத்தில் பயணிக்கும் சூடான காற்று புவியீர்ப்பு விசை மற்றும் சூடான காற்று குளிர்ந்தவுடன் கீழ்நோக்கி வரும்போது அது கடலில் நிகழ்த்தும் மாற்றம் என பல இயற்கை மாற்றங்களை எல் நினோ என்கிறார்கள். இந்த நிகழ்வு கணிக்க முடியாத அளவில் நிகழ்வதால் இதனால் ஏற்படும் இயற்கைச் சீற்றத்தையும் கணிக்க முடியாமல் போகிறது.

அடுத்து கலிபோர்னியாவை ஒட்டியுள்ள பசிபிக் கடல் பகுதியில் நிலவும் வெப்ப மண்டலம். இந்த வெப்ப மண்டலத்தில் உருவாகும் வெப்பக் காற்று கலிபோர்னியாவில் ஈரப்பதைத்தைக் குறைத்து வறட்சியை உண்டாக்குகிறது. பொதுவாக மற்ற மாகணங்களில் பனிப் பொழிவு நிகழும்போது பனி மெதுவாகக் கரைந்து அதன் மூலம் நிலத்தடி நீராக மாற அதிக வாய்ப்புள்ளது. ஆனால் கலிபோர்னியாவைப் பொறுத்தவரை அங்கு நிகழும் வெப்ப மண்டலம் காரணமாக பனிப்பொழிவு நிகழாமல் பனி உருகி மழையாகப் பெய்கிறது. இது நிலத்தை நீண்டகாலத்திற்கு குளிர்ச்சியாக வைக்காமல் விரைவில் ஆவியாக வறண்டு விடுகிறது. வறட்சியான காலங்களில் மக்கள் தண்ணீர் பயன்பாட்டிற்காக ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து நீரை எடுத்துப் பயன்படுத்தினர். இதன் விளைவாக நிலத்துக்கடியில் இருக்கும் நீர் காலி செய்யப்பட்டது. நிலத்தின் மேலடுக்கைத் தாங்கி நின்ற நிறைகொண்ட தண்ணீர், காலியான வெற்றிடத்தால் நிலத்தின் அடுக்கு கீழே போக ஆரம்பித்தது. இந்த நிகழ்வு மேடான பகுதிகளை சற்று தாழ்த்தியும், தாழ்வான பகுதிகளை மேழும் தாழ்த்தியும் வைத்தது. நீண்ட நாட்கள் வறட்சியால் வாடியதால் நீர்த்தேக்கங்களை அரசு பராமரிக்க வில்லை. அதனால் பலவீனமடைந்த நீர் வெளியேற்றும் அவசரகால கண்மாய்களும் அணைகளின் பலமும் பாதிக்கப்பட்டது. தற்போது பெய்துவதும் மழையினால் ஒருவில் என்ற நகரிலுள்ள அணை முழுக்கொள்ளளவை எட்டும் நிலைக்கு வந்துகொண்டிருக்கிறது. நீர்வரத்து அதிகமாகி வருவதால் அணையிலிருந்து நீரும் அதிக அளவில் வெளியேற்றப்படுகிறது. இந்த சமயத்தில் கவனிக்காமல் விட்ட அவசரகால நீரை வெளியேற்றும் கண்மாயில் உடைப்பு ஏற்பட்டு அணையின் உறுதித்தண்மையை கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது.

அணையைச் சுற்றியுள்ள பகுதிகளிலும், ஆற்றின் கீழ்ப்பகுதியில் வசிப்பவர்களையும் அவசரகால நடவடிக்கையாக வெளியேறச் சொல்லியுள்ளனர். அணையை பெரும் பாறாங்கற்களைக் கொண்டு பலப்படுத்தி வரும் அதே நிலையில் மேலும் அதிக மழையை எதிர் நோக்கியுள்ளது கலிபோர்னியா. ஒரு காலத்தில் மழையில்லாமல் வறட்சியால் வாடிய மாகாணம் இப்போது மழை வந்தும் அதை சேமிக்க முடியாமல் போராடிக்கொண்டிருக்கிறது.

இயற்கை மனிதனுக்கு கட்டுப்பட்டது என்று மனிதர்கள் இறுமாப்பு கொள்ளும் நேரங்களிலெல்லாம் இயற்கை இதுபோல் ஒரு நமட்டுச் சிரிப்புடன் தன் பலத்தை காண்பித்துக் கொண்டிருக்கிறது. கலிப்போர்னியா கரைசேருமா என்று காத்திருந்தான் பார்க்க வேண்டும்.

Wednesday, February 15, 2017

நன்றியுள்ள நாய்...

அந்த நாய் தெருவோரம் ஆதரவில்லாமல் அநாதையாக இருந்தது. அதனால் சக நாய்களுடன் சண்டையிட்டு தன் உணவைத் தக்கவைத்துக் கொள்ள முடியவில்லை. அது தன் பலவீனத்தால் பல நேரங்களில் பட்டினி கிடந்தது. ஒரு நாள் அந்த வழியே வந்த இறக்க மனம் படைத்த பெண்மணி அதை அரவணைத்துக் கொண்டாள். அந்த நாய்க்கு அன்றிலிருந்து சுக வாழ்வுதான். அந்த வீட்டு வேலைக்காரிக்கு அந்த நாய்க்கு மூன்று வேளையும் தவறாமல் உணவளிக்கவும் பராமரிக்கவும் ஆணை வழங்கினாள் அந்தப் பெண்மணி. அந்த நாயும் ஆரோக்கியத்துடன் வளர்ந்து வந்தது. 

ஒரு நாள் அந்தப் பெண்மணிக்கு உடல் நிலை சரியில்லாமல் படுக்கையில் படுத்தால். அந்த நேரங்களில் வேலைக்காரி அந்த நாய்க்கு உணவளிக்கும்போது தன்னை ஒரு எஜமானியாகவே கற்பணை செய்து கொண்டு ஒய்யாரமாக உணவளித்தும், தன் பேச்சைக் கேட்காதபோது அவ்வப்போது அந்த நாயை மிரட்டியும், சாட்டையால் அடித்தும் அடக்கி வந்தாள். அந்த நாய்க்கோ தன் எஜமானியின் நிலையால் வருத்தமும், வேலைக்காரியின் கொடுமையாலும் நாளுக்கு நாள் கவலையடைந்து வந்தது. அவள் போடும் உணவைக்கிஉட உண்ணாமல் பசியோடு சிலன்நாட்கள் இருந்தது. அப்போதெல்லாம் அது தன் எஜமானியின் பெரும் அன்பையும், அவர் அளித்த ஆதரவையும் நன்றியோடு நினைத்துப் பார்த்துக் கொள்ளும். தன் பேச்சைக் கேட்காத நாயின் மீது வேலைக்காரிக்கு நாளுக்கு நாள் கோபம் அதிகரித்துக் கொண்டே சென்றது.

இந்த நிலையில் ஒரு நாள் எஜமானி நோயினால் மரணமடைந்தாள். அந்த நாய் மிகவும் கவலையடைந்த தொடர்ந்து அழுது கொண்டே இருந்தது. அது அந்த எஜமானியின் இறுதி ஊர்வலத்தில் யாராலும் கண்டுகொள்ளப்படாமல் இறுதியில் கண்ணீருடன் பின் தொடர்ந்தது. இறுதி ம்ரியாதை முடிந்து அனைவரும் திரும்பிய பிறகும் அந்த நாய் அந்த எஜமானியின் கல்லறை அருகிலேயே அழுது கொண்டு படுத்துவிட்டது. அந்த எஜமானியின் மறைவு பெரும் இழப்பையும், தனக்கு ஆதராவக இருந்த ஒரே உறவையும் இழந்தும் தவிர்தது.

வீட்டு வேலைக்காரி தான் இனிமேல் இந்த வீட்டு எஜமானியாகிவிடலாம் என்ற எண்ணத்துடன் வீட்டில் புதிய வேலைக்காரர்களை அமர்த்திக் கொண்டால். அவள் தன் எஜமானியைப் போலவே உடை, ஆபரணங்களை அணிந்து கொண்டாள். தனது எஜமானித் தனத்தை சோதிக்க அந்த நாயைத் தேடினாள். அது அந்த வீட்டிற்கு வந்து சேரவில்லை. அது அவளை எஜமானியாக ஏறதுக்கொள்ளவில்லை என்று குறிப்பால் உணர்த்தியதோ என்னமோ. கடைசி வரை அந்த நாய் தன் எஜமானிக்கு மரியாதை செத்யும் விதமாக அது அனத வேலைக்காரியை ஏற்றுக்கொள்ளவே இல்லை.

அது சிலநாள் அந்த சுடுகாட்டிலியே எஜமானியின் கல்லரையைச் சுற்றிச் சுற்றி வந்து பின் ஒரு நாள் இறந்து போனது. அதன் நன்றியையும் எஜமானி விசுவாசத்தையும் பார்த்த வெட்டியான் அதற்கு சகல மரியாதைகளும் செய்து எஜமானியின் காலடியிலேயே புதைத்தான். அந்த நாயும் அதன் நன்றியும் அதன் எஜமானியின் புகழைச் சொல்லி காலம் கடந்தும் நினைவு கூறப்பட்டது.

Monday, February 13, 2017

தொடரும் உரையாடல்

விழித்திருக்கும்போது மனது எதையாவது அரைத்துக்கொண்டே இருக்கிறது. அது எப்போதும் ஒரு தன்னுரையாடலை மெளனமாக நடத்திக்கொண்டே இருக்கிறது. ஒன்றைக் குறித்து உரையாடல் நிகழ்த்தும்போது குறுக்கிடும் காட்சியோ, ஒலியோ இன்னொரு பொருளைக் குறித்து மனம் உரையாடத் தொடங்குகிறது. அது ஒரு போதும் ஒரு நிலையில் ஒன்றைமட்டுமே நினைத்து நின்றதில்லை. அதை அப்படி இருக்க நிற்கவைத்தலைத்தான் தியானம் என்கிறார்களோ என்னமோ... ஆனால் அப்படி ஒரு நிலையை மனது அடையும் என்று எனக்கு நம்பிக்கையில்லை. தியானத்தில் கூட, "ஓ தியானம் இப்படித்தானிருக்குமா?", "ஏன் தியானம் எண்ணவோட்டத்திற்கு திரை போடுகிறது?" என்று எதையாவது கேட்டுக்கொண்டே ஒரு பதிலையும் தந்து கொள்ளும். அதன் கேள்விகளும், பதில்களும் நிறைவு பெறாதவையாகவே இருக்கிறது.

மனிதனுக்கு வாய்ப்புள்ள போதெல்லாம் யாராவதுடன் உரையாடிக்கொண்டே இருக்க விரும்புகிறான். யாருமில்லாதபோது அருகிலிருக்கும் செடி, நாய், காற்று, ஆகாயம் என்று எதாவது ஒன்றுடன் எதையோ பேசிக்கொண்டே இருக்கிறான். யாருமில்லாத தனிச்சிறையில், பாலைவனத்தில், கடலில் என்று எங்கு போனாலும் அவனுக்குள் தன்னுரையாடல் செய்துகொண்டிருக்க எதுவோ ஒன்று இருக்கிறது. அருகிலிருக்கும் நபரின் மொழி தெரியாவிட்டாலும், சைகையின் மூலமாகவேணும் ஒன்றைப்பற்றி பேச முயற்சிக்கிறான். பேசாத அல்லது பேச விரும்பாத, சலிப்பை பதிலாகக் கொடுக்கும் மனிதர்களிடம் கூட நமக்கு தொடர்ந்து உரையாட அல்லது அவர் பொருட்டு ஒரு தன்னுரையாடல் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கிறது.

அருகிலிருப்பவனுடன் வாயால் பேசியது போதாமல், தொலைவிலிருப்பவனுடன் உரையாட கடிதம், தந்தி. தொலைபேசி என்று ஏதாவது ஒன்று உரையாட இருந்து கொண்டே இருக்கத்தான் செய்கிறது. ஒரு காலத்தில் இன்லேண்ட் லெட்டரில் மூன்று பக்கத்திற்குள் அத்தனை அன்பையும், விசாரிப்பையும், கதைகளையும் அடைக்கி எழுதியும், அவ்வப்போது அந்தக் கடிதத்தின் ஓரங்களில் வார்த்தைகள் ததும்பி வழிய உரையாட ஏதோவொன்று இருந்து கொண்டேதான் இருந்திருக்கிறது. கடிதத்திற்கு பதில் வருவதும், அதற்கு ஆகும் காலத்தில் அதைப்பற்றி மனம் உரையாடிக்கொண்டே இருக்கிறது. பதில் கடிதம் கையில் கிடைத்ததும் அது ஒரு புதிய உரையாடலை உருவாக்குகிறது. முடிவில்லாமல் மனம் எதையாவது பேசிக்கொண்டே இருக்கிறது.

மின்னஞ்சல் காத்திருக்கும் காலத்தைக் குறைத்தாலும், அந்த குறைந்த நேரத்தில் நமக்கு உரையாட ஏதாவதொன்று இருந்துகொண்டே இருக்கிறது. எழுதுவதற்கு ஒன்றுமில்லையென்றாலும் தொடரஞ்சல் ஒன்று ஓடிக்கொண்டே இருக்கிறது. செல்லிடப்பேசிகள் வந்தபின், எழுத்து குறைந்து பேச்சு அதிகமாகிவிட்டது. பேச்சுக்களுடன் நண்பர்களும் அதிமாகிவிடுகின்றனர். சில நேரங்களில் அது பகைத்துக் கொண்டோரின் எண்ணிக்கையாகக்கூட அமைந்து விடுகிறது.

இப்போது முகநூல். எதைத்தான் இங்கு பேசவில்லை. கணக்குத் தொடங்கியதிலிருந்து தினமும் மனதில் என்ன இருக்கிறது என்று கையைப் பிடுங்குகிறது அது. தெரிந்தவர், தெரியாதவர் என்று எல்லோரிடமும் உரையாட விருப்பம் கொள்கிறது மனம். சமூகம் எப்போதும் எதையோ மென்று கொண்டே இருக்கிறது. அரசியல், கதை, கிசு கிசு, வசை, இசை, சினிமா என்று ஏதையாவது ஒன்றை மென்று கொண்டே இருக்கிறது. அரசியல், சினிமாவைப்போல் அதிகம் பேசப்பட்டவையல்ல கதைகள், இலக்கியங்கள், அனுபவங்கள். கதையையும், இசையையும், கவிதையையும், இலக்கியத்தையும் பேசுபவர்கள் அதிகம் இல்லை. ஆனால் அவற்றைப் பேசுகிறவர்கள் எண்ணங்கள் எல்லாம் ஒரே போல இருக்கிறது. அவர்கள் அவற்றை உள்ளூர ரசிப்பதைப்போல வெளியில் பேசுவதில்லை. அவர்களின் உரையாடல்கள் கதைகளில் வரும் கதாப்பாத்திரங்களுடன் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் நிஜ உலக மனிதருடனுனான உரையாடலை பயத்துடனேயே நடத்துகின்றனர். கதைகளின் காதாப்பாத்திரங்கள் போல் இவர்கள் மனதில் உள்ளதை அப்படியே சொல்லிவிடுவதில்லை. இவர்களுக்குள் நேரத்திற்கு ஒரு கதாப்பாத்திரம் வெளிப்படுகிறது. எந்தக் கதாபாத்திரத்துடன் எப்படிப் பேசவேண்டும் என்று நாம் யோசிப்பதிலேயே உரையாடல் குறித்த எண்ணம் முற்றுப்பெற்று விடுகிறது.

கவிதைகள் பற்றி பேசுபவனிடம் காதலும் கற்பனையும் அளவுக்கு அதிகமாக இருக்கிறது. அவன் எல்லா நேரங்களிலிலும் கவிதை வடித்துக்கொண்டே இருக்கிறான். அவன் கவிதைகள் வாசிக்கப்படாதவையாக இருப்பதாலோ என்னவோ, பார்ப்பவரிடமெல்லாம் வாசித்துக் காட்டி பெருமிதம் கொள்கிறான். அவனிடம் பேசுவதைவிடவும் கவிதையைப்பாடி அவனைச் சுற்றியிருப்பவர்கள் சற்று தள்ளியிருக்கக் காரணமாகிவிடுகிறான். உரையாடல் நின்று விடுகிறது. அவன் கற்பனைக் காதலியுடன் கவிதையால் உரையாடிக்கொண்டே இருக்கிறான்.

உரையாடலை எப்போது தொடங்குகிறோம்? பிறந்ததுமா? கருவிலேயேயா? தந்தையும், தாயும் கருவினுள் இருக்கும்போதே பிள்ளையுடன் உரையாடத்தொடங்கி விடுகிறார்கள். குழந்தை பேசும் பதில்களை தாய் உணர்கிறாள். பிறந்ததும் குழந்தை வண்ணங்களுடனும், உருவங்களுடனும் தனது உரையாடலைப் பார்வையில் தொடங்குகிறது. பிறகு மோட்டுவளை முதல் தொட்டிலில் தொங்கும் கிளி பொம்மைவரை அவற்றுடன் உரையாடுகிறது. அந்த உரையாடல் அவர்கள் மட்டுமே புரிந்துகொள்ளக்கூடிய மொழியில் நடக்கிறது. அதில் வார்த்தைகளில்லை. ஒலியின் ஏற்ற இறக்கங்கள், புன்னகை, கண்சிமிட்டல் என தொடர்கிறது அந்த உரையாடல்.

வாய் பேச முடியாதவர்களும், கண் பார்க்க முடியாதவர்களும், காது கேளாதவர்களும் உரையாடுகிறார்கள். அவர்கள் அடுத்தவரிடம் உரையாடுவதைவிட தங்களுக்குள் அதிகம் உரையாடுகிறார்கள்.அந்த உரையாடல் வடிவங்கள், மொழி வெவ்வேறாக இருக்கிறது. மனிதன் இறக்கும் வரை ஏன் இறக்கும்போது எதையோ பேசிக்கொண்டே இறக்கிறான். அவன் கண்களும், உதடுகளும் எதையோ சொல்லிக்கொண்டே இருக்கிறது.

உரையாடல் மனிதன் இறந்தபின்னும் தொடர்கிறது. அவனைப்பற்றியோ அவன் உரையாட மறந்தவை, மறுத்தவை பற்றியோ உரையாடல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. உரையாடல் முற்றுப்பெறுவதில்லை. 



Thursday, February 9, 2017

நீங்களும் உதவலாமே..

இன்றுகாலை குழந்தைகளை பள்ளிக்கு பஸ் ஏற்றச்செல்லும்போது காரில் உள்ளூர் வானொலியின் ஒரு நிகழ்ச்சியை இந்தியாவின் ஒரு முக்கியமான சமூக சிக்கலுக்கு விடிவு காண பயன்படுத்தினார்கள். அதாவது, மும்பையிலுள்ள Red Light District எனப்படும் சிவப்பு விளக்குப் பகுதியில் வசிக்கும் குழந்தைகளை மீட்டு அவர்களுக்கு நல்ல சூழலில் இருப்பிடமும், உணவு, கல்வி வசதியையும் ஏற்படுத்தும் முயற்சி அது. Sex Workers எனப்படும் அந்தப் பகுதியில் வசிக்கும் பெண்கள் தங்கள் குழந்தைகளை விபசாரம் நடக்கும் அறையிலேயே கட்டிலுக்கு அடியிலோ அல்லது ஒரு மூலையிலோ இருக்க வைத்துவிட்டு பணியில் ஈடுபடுகின்றனர். இடப்பற்றாக்குறை காரணமாக நிகழும் இந்தக் கொடுமையினால் குழந்தைகள் மனதளவில் பாதிக்கப்படுவதுடன், அவர்களுக்கும் இந்த அசிங்கங்கள் பழக்கப்படுத்தப்படுகிறது. சில நேரங்களில் குடித்துவிட்டு வரும் ஆண்களால் தொல்லைகளை அனுபவிக்க நேருகிறது.

இவற்றிலிருந்து அந்தக் குழந்தைகளை மீட்டு நல்ல சமூகச் சூழலிலும், கல்வி, உணவு மற்றும் தேவையான சமூகக் கல்வியையும் வழங்குகிறது, India Partners(indiapartners.org) என்ற அமைப்பு. மேற்ச்சொன்ன வானொலி நிகழ்ச்சியில் ஒவ்வொரு பாடலை ஒலித்த பிறகும் இந்த சேவைக்கு உதவ நன்கொடை அளித்துவிட்டு அழைப்பவரைப் பாராட்டிப் பேசுகிறார்கள். நல்ல முயற்சி... இந்தியாவின் பொருளாதாரத் தலை நகரம், பண்பாட்டின் காப்பாளர்கள் அதிகம் வசிக்கும் பகுதி என்றெல்லாம் சொல்லப்படும் இந்தியாவில் இதற்காக எடுக்கப்பட்ட முயற்சிகள் வெகு குறைவாக இருக்குமென்றே நினைக்கிறேன்.

இப்போதாவது அந்தக்குழந்தைகளுக்கு மற்ற குழந்தைகள் போல வாழும் வாழ்கைச் சூழல் உருவாகிறதே என்பதை நினைத்து மகிழலாம். உங்களால் இயன்றதைக் கொடுத்து உதவுங்கள்...


Wednesday, February 8, 2017

சசியா பன்னீரா? ஒலிப்பதிவு





சசியா பன்னீரா? ஒலிப்பதிவு

மந்திராலோசனை..

இன்பாக்சில் வந்து கருத்து கேட்டவர்களுக்காக..

பன்னீர் முதல்வராக வரவேண்டும், மாஃபியாவிடம் இன்னும் நான்காண்டு தமிழகம் சிக்கி அல்லல் படக்கூடாதென்றால்,

பன்னீர் மக்களிடம் சில உறுதி மொழிகளைக் கொடுத்த நேரடியாக ஆதரவு கேட்க வேண்டும்,

1. காவிரிப் பிரச்சினை, முல்லைப்பெரியாறு, மேகேதாது மற்றும் இதர தமிழக ஆற்று நீர் உரிமையை மீட்டெடுத்தல்.

2. தமிழ் மொழியை பின்னுக்குத் தள்ளும் எந்த நடவடிக்கைக்கும் பலமான எதிர்ப்பு காட்டுவது, நடவடிக்கை எடுப்பது

3. கீழடி அகழாய்வை தொடர்ந்து தமிழகத்தில் நிரந்தர பண்பாட்டுச்சின்னமாக அதை அறிவித்து பேணிப்பாதுகாத்து, ஆய்வு முடிவுகளை வெளியிடவது.

4. NEET, GST போன்றவற்றில் தமிழகத்தின் உரிமை காக்கப்படவேண்டும்.

5. மணல் கொள்ளையை நிரந்தரமாக தடுக்க சட்டமும், அதை நடைமுறைப்படுத்தும் வழிகளும் ஏற்படுத்தப்பட வேண்டும்.

6. மாஃபியா கும்பல் கொள்ளையடித்த சொத்துக்களை அரசுடமையாக்குவது.

7. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக்களை அறக்கட்டளை மூலம் பராமரித்து அவர் காலத்திற்கும்  பெயர் சொல்லுவது போல் ஏழைகளுக்கும், அனாதைகளுக்கும், முதியவர்களுக்கும், மருத்து வடதிக்கு வழியில்லாதவர்களுக்கும் உதவ வழி செய்திட வேண்டும்.

இவற்றையெல்லாம் நிறைவேற்ற உறுதி(அம்மாவின் மீது ஆணையிட்டு) வழங்கினால்,

தாங்கள் ஓட்டுபோட்டு தேர்ந்தெடுத்த சட்ட மண்ர உறுப்பினர்களின் வீடுகள், அலுவலகங்களை மக்கள் அமைதியான, காந்திய வழியில் முற்றுகையிட்டு, அவர்களை பன்னீருக்கு ஆதரவளிக்க நிர்பந்திக்கலாம்.

இதைக் கட்சி சார்பில்லாமல் நடத்திடவும், ரவுடிகள், சமூக விரோதிகள் குழப்பத்தை ஏற்படுத்தாத வண்ணம் ராஜினாமாவை வாபஸ் பெற்று முதல்வர் பதவியில் அமர்ந்து காவல்துறையை வழி நடத்தலாம்.

திமுக ஏற்கனவே சொன்னதுபோல் பன்னீர் முதல்வராக அமர, தனது வாக்கைக் காப்பாற்ற, அமைதியாக வெளியிலிருந்து வேடிக்கை பார்க்கலாம்.

பணபலத்துடன் MLA க்களை அமுக்கி வைத்திருக்கும் மாஃபியா கும்பலிடமிருந்து தமிழகத்தையும், MLAக்களையும் மீட்க இதுதான் ஒரே வழி.

மக்கள் ஆதரவைப் பார்த்து MLAக்களும் தங்கள் மனதை மாற்றிக்கொண்டு 41/2 ஆண்டு பிழைக்க பன்னீரை ஆதரித்தே ஆக வேண்டும்.

Tuesday, February 7, 2017

டிராகு காலம் 3

இந்தியர்கள் அமெரிக்காவைத் தமது கனவு வாழ்விடமாகத் தேர்ந்தெடுக்க காரணங்களாக நான் கருதுவது,

1. சுதந்திரமான வேலைச் சூழல். அதாவது அறிவுச்சூழலில் சுதந்திரமாக கருத்துக்களை, புதிய எண்ணங்களை வெளிப்படுத்தும் சூழல்.
2. இந்திய ரூபாய்க்கு நிகரான அமெரிக்க டாலரின் மதிப்பு.
3. இலகுவான, சிக்கலில்லாத வாழ்க்கை முறை. அரசிடம் சேவைகளைப்பெற அதிகாரிகளுக்கு சிறப்பு கவனம் அளிக்க வேண்டியதில்லை.
4. சிறந்த சுற்றுச்சூழல், கட்டமைப்பு, வாழ்க்கை வசதி.
5. குழந்தைகளுக்கு தரமான அரசு பள்ளிக் கல்வி இலவசமாகக் கிடைப்பது.

ஆரம்பத்தில் தமிழகத்திலிருந்து அமெரிக்கா வரும் ஒருவர் ஓரிரண்டு ஆண்டுகள் மட்டும் தங்கியிருந்து வேலை செய்து செல்வமீட்டி தமிழகத்திற்கு திரும்பிவிடவே எண்ணியிருப்பார். நானறிந்த பல நண்பர்கள் இதுபோல் தமது எண்ணத்தை எண்ணிடம் வெளிப்படுத்தியிருக்கின்றனர். ஏன் நான் கூட அப்படி எண்ணித்தான் அமெரிக்க வாழ்க்கையை ஆரம்பித்தேன். நாளடைவில் வாழ்க்கைமுறை இன்னும் சில காலம் இருக்கலாம் என்பதில் ஆரம்பித்து, குழந்தைகள் கல்வி மற்றும் பல திறன்களை வளர்த்துக்கொள்ளும் வாய்ப்பு, இந்தியாவில் மாறிவரும் பொருளாதார, வாழ்க்கைச் சூழல் என்று பல காரணங்களால் அல்லது அமெரிக்க வாழ்வைத் தொடர்வதற்காக உருவாக்கப்பட்ட காரணக்களால் அமெரிக்க வாழ்க்கை சிறுகதையிலிருந்து பெரும் நாவலாக உருவெடுக்கிறது.

இந்தியர்கள் இங்கு வேலை செய்யும் போது குறைந்தது 25% சதவீதம் வருமான வரியும், 6.2% சமூகப்பாதுகாப்பு வரி, 1.2% மருத்துவ காப்பு வரி செலுத்துகிறார்கள். இதில் சமூகப்பாதுகாப்பு மற்றும் மருத்துவ காப்பு வரி வேலையில்லாத காலத்திலும், முதுமைக்காலத்திலும் தகுதியுடையவர்களுக்கு அரசு வழங்கும் ஊதிய நிதியில் சேர்க்கப்படும். இவை குறுகிய காலம் தங்கியிருந்து திரும்பிச் செல்லும் இந்தியர்களுக்கு எந்தப் பயனையும் அளிப்பதில்லை. அதேபோல் விசா காலத்தில் வேலையில்லாமல் அமெரிக்காவில் தங்கியிருப்பது, சட்ட விரோதம். ஆகவே வேலையில்லாத நிலையில் நாட்டைவிட்டே வெளியேற வேண்டிய நிலையில் அரசு சலுகைகள் எதுவும் இவர்களுக்கு கிடையாது. மேலே குறிப்பிட்ட வரிகள் போக மருத்துவக்காப்பீடு அமெரிக்காவில் கட்டாயம். மாதம் ஒன்றுக்கு ஒரு நபருக்கு 100 டாலருக்கு குறையாமல் மருத்துவ காப்பீட்டுக் கட்டணம் செலுத்தினால்தான் மருத்துவச் சேவையை எளிதில் பெற முடியும்.

குறுகிய கால விசாவில் வரும் உயர் தொழில் நுட்ப வல்லுனர்களுக்கு நாட்டில் இருக்கும் தேவையைக் கருத்தில் கொண்டு அரசு நிரந்தர தங்கும் உரிமை (Permenant Residency) அதன்பின் 5 ஆண்டுகளுக்குப் பின் குடிமகனாகும் உரிமையை வழங்குகிறது. பெரும்பான்மையான இந்தியர்கள் இந்த இலக்கை நோக்கியே செல்கிறார்கள். அதற்கு அவர்கள் 5 முதல் 20 ஆண்டுகள் விசாவில்(நிரந்தர தங்கும் தகுதிபெற விண்ணப்பித்த பின், அந்த விண்ணப்பத்தின் மீது ஒரு முடிவு கிடைக்கும் வரை விசா நீட்டிப்பு கிடைக்கும்) தொடர்ந்து நிலையில்லாமல் இருக்க வேண்டும்.

இந்த காலகட்டத்தில் இந்தியர்கள் வாகனங்கள், வீடு மற்றும் ஏனைய முதலீடுகளைச் செய்கின்றனர். இந்த முதலீடு மற்றும் இவர்கள் கட்டும் வரி, உள்ளூர் வரவு செலவுகள் மூலம் செலுத்தும் வரி என்பவை பொருளாதரத்தில் ஒரு கனிசமான பங்கு வகிக்கிறது. குறிப்பாக வீடுகளுக்கான சந்தை இந்தியர்களால்தான் வளர்ச்சியடைகிறது. உள்ளூர் வரிகள் மூலம் அரசுப்பணிகள், கட்டமைப்புகள் வளர்ச்சியடைகிறது. இந்த நிலையில் அதிபர் இந்தியர்களுக்கான விசாக்களை கட்டுப்படுத்தி உள்ளூர்க்காரர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்த நினைக்கிறார். இது நியாயமான எண்ணம் என்றாலும் தொழில் நுட்ப வல்லுனர்கள் கிடைக்காத காரணத்தினால்தான் தேவையை வெளி நாட்டிலிருந்து வல்லுனர்களை வரவழைத்து பூர்த்தி செய்ய வேழ்ண்டிய சூழல் உள்ளது என்பதை கணக்கில் கொள்ளாதது ஏமாற்றமளிக்கிறது. 

அதேபோல் சில இடங்களில் உள்ளூர்க்காரர்களுக்கு கொடுக்க வேண்டிய அதிக ஊதியத்திற்கு பதிலாக வெளி நாட்டிலிருந்து வருவிக்கப்படுவருக்கு குறைந்த ஊதியம் கொடுத்து பணியிடத்தை நிறப்பும் சூழலும் நிலவுகிறது. ஆனால் இது எண்ணிக்கையில் மிகக் குறைவு. இதைத் தடுக்க வெளி நாட்டிலிருந்து வருபவர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை மிக அதிகமாக நிர்ணயிக்கும் திட்டமும் விவாதிக்கப்படுகிறது. இதன் மூலம் அதிக ஊதியம் கொடுத்து வெளிநாட்டினரை வேலைக்கு அமர்த்துவதற்கு பதில், உள்நாட்டினருக்கு ஓரள ஊதியம் கொடுத்து வேலைக்கு நிறுவனங்கள் அமர்த்தும் என்ற கணிப்பின் அடிப்படையில் இந்த திட்டம் முன் வைக்கப்படுகிறது. ஆனால் நிறுவனங்கள் ஊழியர்களுக்கு ஊதியத்தை அதிகமாக அளிப்பது, அவர்களின் இலாபத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். அதைத் தவிற்க அவர்கள் விற்பனை செய்யும் பொருட்களின் விலையை அதிகரிக்க வேண்டும். அப்படி அதிகரிக்கும் போது, அது எல்லா வாடிக்கையாளர்களையும் பாதிக்கும். இது சராசரியாக ஒவ்வொரு நபருக்குமான மாதாந்திர வாழ்க்கைச் செலவை அதிகரிக்கும். அதன் விளைவாக கடன் தேவை அதிகரிக்கும். கடன் அதிகமாகும் போது முதலீடு குறையும். முதலீடு குறைவது பங்குச் சந்தையில் வாங்கும் சக்தியைக் குறைக்கும். இது பங்குகளின் விலையை வீழ்ச்சியடையச் செய்யும். பங்குகளின் வீழ்ச்சி நிறுவனங்களின் மதிப்பை குறைக்கும். நிறுவனங்களின் மதிப்பு குறையும்போது, அந்த மதிப்பின் மீது கொடுக்கப்படும் கடனின் அளவு குறையும். கடன் அளவு குறையும்போது நிறுவனங்கள் வளர்ச்சி நடவடிக்கை தடைபடும். இது பொருளாதார வீழ்ச்சிக்கு வழிவகுக்கும். ஆக நிறுவனங்களைப் பாதிக்கும் எந்த நடவடிக்கையும் பொருளாதாரத்தை வீழ்ச்சியடையச் செய்யும். இதைத் தவிற்க நிறுவனங்கள் மேலும் அதிகமாக தங்கள் வேலைகளை இந்தியா போன்ற (Offshore) கடல்கடந்த இடத்தில் குறைந்த செலவில் செய்ய முற்படும்.

ஆக, இந்தியர்களுக்கு அமெரிக்காவின் தேவையைவிட, அமெரிக்காவிற்கு இந்தியர்களின் தேவை அதிகம். இது நிரந்தரம் இல்லையென்றாலும், குறுகிய காலத்திற்கு இதுதான் நிலை. அதிபர் எடுக்கும் முடிவு கணிக்க முடியாமல் இருப்பதால், எதுவும் நடக்கலாம். ஆனால் தவறான முடிவுகளின் பின் ஏற்படும் விளைவுகளை தாங்கிக் கொள்ள நிறுவனங்கள் தயாராக இல்லை. இவர்கள் தொடர்ந்து அரசுடனும், அதிபருடனும் பேச்சுவார்த்தை நடத்தி சூழலை விளக்கிக் கொண்டுள்ளனர். தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற அதிபர் புதிதாக இந்தியாவிலிருந்து வருபவர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கலாம். ஆனால் அது மீண்டும் இந்தியாவிற்கு கடல்கடந்த வேலைவாய்ப்பை அதிகரிக்கும். அதிபர் வணிகம் மற்றும் நிறுவனங்களுக்கு சாதகமாகவே செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எதுவும் நடக்கலாம் என்று இருக்கின்ற சூழலில் இந்தியர்கள் புதிய கனவுகளுக்கு கொஞ்சகாலம் இடைவெளி விடுவதுதான் இப்போதைக்கு புத்திசாலித்தனமான முடிவு.

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கம் புதிய அரசின் குடிவரவு சட்டத் திருத்தம் பற்றிய கலந்தாய்வுக்கு வழக்குறைஞர் கவிதா ராமசாமியுடன் ஏற்பாடு செய்துள்ளது. சட்ட விளக்கம் தேவைப்படுவோர் கலந்துகொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.



Sunday, February 5, 2017

டிராகு காலம் 2

அதிபர் டிரம்பின் குறித்த ஏழு நாட்டினர் அமெரிக்காவினுள் வருவதற்கான தடையை ஒரு உச்ச நீதிமன்ற நிறுத்திவைத்துள்ள நிலையில், இரண்டும் மாகாணங்கள் டிரம்பின் உத்தரவு, அரசியலமைப்பிற்கு எதிரானது என்று வழக்குத் தொடுத்துள்ளன. இந்த நிலையில் வெளிநாட்டவர் அமெரிக்காவில் வேலை செய்ய அனுமதிக்கும் H1B விசாவின் அதிகப்படியான பயணளர்களான இந்தியர்களுக்கு அச்சமும் குழப்பமும் நிறைந்த நாட்களாக இருக்கிறது.

பொதுவாக அமெரிக்காவிற்குள் வெளிநாட்டவர் வர அனுமதிக்கப்படும் விசாக்கள், சுற்றுலா, வணிகம், உயர் கல்வி மற்றும் வேலை என்ற பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகிறது. இதுவல்லாமல் அகதிகளுக்கான அனுமதி தனி. பொருளாதார தாராளமயத்திற்குப் பின் அமெரிக்காவில் ஏற்பட்ட கணினித்துறை வளர்ச்சி இந்தியர்களுக்குப் பெரும் வரமானது. ராஜீவ் காந்தி மற்றும் நரசிம்ம ராவ் காலத்தில் கணினித்துறையில் இந்தியா தன்னை தகுதிப்படுத்திக்கொள்ள பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. அதன் தொடர்ச்சியாக ஆந்திரம் மர்றும் தமிழ்நாடு கணினிசார்ந்த படிப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து பல்கலைக்கழகங்களில் பாடத்திட்டங்களைக் கொண்டுவந்தது. அமெரிக்காவில் கணினி வல்லுனுர்களின் தேவை அதிகரிக்க அதிகரிக்க இந்தியாவில் ஆந்திராவும், தமிழகமும் கணினி வல்லுனர்களை உருவாக்கிக்கொண்டே இருந்தது. அதன் தொடர்ச்சியாக Offshore எனப்படும், அமெரிக்க வேலைகளை இந்தியாவிலிருந்து செய்யக்கூடிய முறையில் பல நிறுவங்கள் இந்தியாவில் அலுவலகங்களைத் தொடங்கி தொழிலைப் பெருக்கின. இது அமெரிக்க கணினித்துறைக்கு மிகவும் சாதகமாகவும், வணிகங்களுக்கு செலவைக் குறைத்து கணினி செயலிகளை உருவாக்கும் வாய்ப்பாகவும் அமைந்தது.

இந்தியாவில் இரண்டு, மூன்று ஆண்டுகள் பணிபுரிந்தவர்கள் அனுபவத்தின் அடிப்படையில் அமெரிக்காவிற்கு அழைத்துவரப்பட்டு வேலையில் அமர்த்தப்பட்டனர். இதற்கு Onsiteல் வேலை வாய்ப்பும், வாடிக்கையாளர் விருப்பமும் முக்கியம். அப்படி அழைத்து வர H1B விசாக்கள் தேவைப்பட்டது. ஆரம்பத்தில் அனைத்து நாடுகளுக்கும் பொதுவாக இருந்த இந்த விசா எண்ணிக்கை, இந்தியா, சீனா போன்ற நாடுகள் மக்கள் தொகை காரணமாக அதிகம் எடுத்துக்கொண்டதால், பல்லின(Diversity) மக்கள் வருகையை ஆதரித்து சில நாடுகளுக்கு மட்டும் விசா எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட்டது. இதில் இந்தியர்களிக்கான கட்டுப்பாடு அமெரிக்காவில் பெரிய தக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும் இந்தியாவிலிருந்து வேலைக்கு வரும் நபர்களுக்கு வாய்ப்புகளுக்கு முட்டிமோதல் ஏற்பட்டது. சில நிறுவனங்கள் இந்த இக்கட்டை சமாளிக்க L1 எனப்படும் நிறுவனங்களின் கிளைகளுக்கு இடையில் ஆட்களை நகர்த்தும் விசா அனுமதியை பயன்படுத்திக்கொண்டன. இதன்படி ஒரு நிறுவனத்தின் இந்தியக்கிளையில் இருந்து அமெரிக்கக் கிளைக்கு ஆட்களைக் கொண்டுவந்து தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ளப்பட்டது. இது கணினி நிறுவனம் அல்லாத துறைக்காக உருவாக்கப்பட்டது, ஆனால் கணினி நிறுவனங்களால் அதிகம் பயண்படுத்திக் கொள்ளப்பட்டது.

ஒரு கட்டத்தில் கணினித்துறையில் 50 சதவீதமானவர்கள் இந்தியர்கள் என்ற நிலையும், அதில் 50 சதவீதம் ஆந்திரக்காரர்களும், 20 சதவீதம் தமிழர்களும் மீதி ஏனையோரும் என்ற நிலை உருவானது. அமெரிக்காவில் கடந்த பல பத்தாண்டுகளில் உயர்கல்வி முடிக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்ததும், கணினித்துறையில் உள்ள சிக்கலான வேலையும், அதிக கணித அறிவும் தேவைப்பட்டதும் உள்நாட்டினருக்குப் பாதகமாக அமைந்தது. ஆனால் கடந்த பத்தாண்டுகளில் இந்த நிலையை மாற்ற அமெரிக்க அரசியல் தலைவர்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து ஓரளவு வெற்றியும் கண்டனர். ஆனால் இன்றைய நிலையில் அமெரிக்காவின் கணினித்துறை வல்லுனர்களின் தேவையை உள்நாட்டினரை மட்டுமே கொண்டு பூர்த்தி செய்து விட முடியாத நிலையே இருக்கிறது.

வேலைக்காக வழங்கப்படும் விசாக்களுக்கு கால வரையறை உண்டு. H1B விசாவில் ஒருவர் அதிகபட்சம் 6 ஆண்டுகள் அமெரிக்காவில் பணி செய்து கொண்டு இருக்கலாம். L1 விசாவில் 5 ஆண்டுகள் இருக்கலாம். இந்த விசாக்கள் High Skill labor உயர் நுட்ப அறிவுப் பணியாளர் என்ற அடிப்படையில் வழங்கப்பட்டது. இதற்கு கல்வி மற்றும் அனுபவம் மிகவும் முக்கியமாகக் கருதப்பட்டது.

அடுத்து "இந்தியர்களின் கனவு முற்றுப்பெற்றதா."...


Thursday, February 2, 2017

டிராகு காலம் 1

அதிபர் டிரம்ப் பதவியேற்ற நாளிலிருந்து குடியேறிகளுக்கு அதிர்ச்சியைக் கொடுக்கிறார். தேர்தலின்போது தான் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுகிறார் என்று ஒரு சாரர் சொல்லலாம். ஆனால் அவர் சொல்லாதவற்றையும் செய்கிறார், அது பலரை பல்வேறு விதமாக பாதிக்கிறது. குறிப்பாக எழு இஸ்லாமிய நாடுகளைக் (ஈராக், ஈரான், சிரியா, ஏமன், சோமாலியா, லிபியா மற்றும் சூடான்) குறிப்பிட்டு அங்கிருந்து வரும் எவரையும் நாட்டிற்குள் அனுமதிப்பதில்லை என்ற ஆணை. இது Green Card எனப்படும் நிரந்தர குடியிருக்கும் உரிமைகொண்டவரையும் சிக்கலுக்குள்ளாக்கியிருக்கிறது. ஏற்கனவே பல்வேறு படிகளைக் கடந்து, பாதுகாப்பு பகுப்பாய்வுகளை நடத்தித்தான் Green Card வழங்கப்படுகிறது. அதன் பின்னும் பாதுகாப்புக் காரணங்களுக்குகாக குறிப்பிட்ட ஏழு நாட்டிலிருந்து வரும் Green Card வைத்திருப்பவரையும் விமான நிலையங்களில் தடுத்து திரும்ப அனுப்ப முயற்சி செய்தது கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிபரின் ஆணையில் தெளிவில்லாமல் குறிப்பிட்ட ஏழு நாட்டிலிருந்து வரும் அனைவரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்ற விதிதான் இதற்குக் காரணம். குறிப்பிட்ட ஏழு நாடுகளில் அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைகளுக்கு உதவி புரிந்த அந்நாட்டவருக்கு, அமெரிக்கா Green Card வழங்கி அவர்களை அமெரிக்காவில் பாதுகாப்பாக வாழ வழி செய்துவந்தது. அதிபரின் இந்த ஆணையால் பாதுகாப்பு தொடர்பான உறவுகளிலும், அமெரிக்காவின் எதிர்கால இராணுவ, உளவு நடவடிக்கைகளின் போது இனி வேறு நாட்டவர்களின் உதவி பெறமுடியாமல், அமெரிக்காவின் நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாக்கப்படும் என்று விவரம் அறிந்த முன்னாள் அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

அதிபரின் நோக்கம், அகதிகள், பயணிகள் போர்வையில் தீவிரவாதிகள் நாட்டுக்குள் நுழைவதைத் தடுப்பது என்றாலும், அவரின் ஆணை அதன் நோக்கத்தைத் தாண்டி எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தத் தொடங்கியது. உதாரணமாக பல பயணிகள் தங்கள் குடும்பங்கள் அமெரிக்காவில் இருக்கையில் தாங்கள் மட்டும் தங்கள் நாடுகளுக்குச் சென்று திரும்புகையில், தடுத்து வெளியனுப்பப்படும் சூழல் உருவானது. பல பெரு நிறுவனங்களில் வேலை செய்பவர்களும் இதுபோல் பாதிக்கப்பட்டனர். அதனால் இவர்களுக்கு ஆதரவாக விமான நிலையங்களில் அவர்கள் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் டெமகிராட்(ஒபாமா) கட்சிக்காரர்கள் என பல்வேறு நபர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்

அதே வேளையில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக நியூயார்க்கில் உள்ள உச்ச நீதிபதியிடம் ஒரு மனு அளிக்கப்பட்டு, அதிபரின் ஆணையில் சில விலக்குகளை அளித்து நீதிபதி தீர்ப்பளித்தார். இதனடிப்படையில் Green Card வைத்திருப்பவர்களுக்கு தடையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது. இந்த உத்தரவு தற்காலிகமாக இந்தச் சிக்கலுக்கு ஒரு தீர்வைத் தந்தது. தடுத்து நிறுத்தப்பட்டவர்கள் நாட்டிற்குள் அனுமதிக்கப்பட்டார்கள். அவர்களின் உறவுகளுடன் சேர்ந்த மகிழ்ச்சியான தருணங்கள் செய்தித் தாழ்களின் பக்கங்களை நிறப்பியது

இப்போது இந்த சிக்கல் நீதிமன்றத்தில் இருப்பதால் அதிபர் தனது ஆணையை நீதிமன்றத்தில் வென்றெடுக்கவேண்டிய நெருக்கடிக்குத் தள்ளப்பட்டுள்ளார். இது அவர் ஆரம்பகட்ட நடவடிக்கைகளிலேயே பின்னடைவைச் சந்தித்ததாக அரசியல் விமர்சகர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்

முன்னாள் அதிபர் ஒபாமாவின் ஆட்சிக்காலத்தில் நியமிக்கப்பட்ட அரசின் தலைமை சட்ட ஆலோசகர் சேலி யேட்ஸ், தமது வழக்குறைஞர்கள் அதிபர் டிரம்பின் ஆணையை ஆதரித்து நீதிமன்றத்தில் வழக்காடப் போவதில்லையென்றும், நீதியின் பக்கம் நின்று வழக்காடப்போவதாகவும் அறிவித்தார். இதனால் எரிச்சலடைந்த அதிபர் டிரம்ப், தலைமை வழக்கறிஞரை பணியிலிருந்து நீக்கி நாட்டிற்கு மேலும் ஒரு அதிர்ச்சியைத் தந்தார்.

அடுத்து இந்தியர்களின் நிலை...

Wednesday, February 1, 2017

நமக்கு எதுக்கு வம்பு?

இவரின் எழுத்துக்களை தொடர்ந்து படிப்பதும், அவ்வப்போது நட்பு ரீதியான முகநூல் உரையாடல்களில் இவர் எனக்கு நெஞ்சுக்கு நெருக்கம். சில பிரச்சினைகளில் நாம் கருத்துச் சொல்லத் தயங்கி நிற்கின்ற வேளையில், போர்க்களத்தில் முன்னே சென்று எதிரிகளைத்தாக்கி வழியேற்படுத்தும் வீரன் போல், நமக்கொரு இலகுவான சூழலை ஏற்படுத்தி விடுவார். பிரபல பத்திரிக்கையில் இருந்தும் தன் அரசியல் சார்பான கருத்துக்களைத் தெரிவிப்பதில் சமரசம் செய்து கொண்டதில்லை. ஒரு காலத்தில் சவுக்கின் துணிச்சலான அரசியல் நகர்வுகளுக்கு சமூக ஆதரவிற்கு நியாயப்பாடு கற்பித்தவர்களில் முக்கியமான ஒருவர் இவர். இவரின் கருத்துக்களுக்கு திமுகவினரிடம் எப்போதுமே புகைச்சல் இருக்கும். அதனாலேயே பலரிடம் எனக்கு இவரை ஆதரிப்பதால் கருத்துமோதல் நடந்ததுண்டு. இப்படி இவரைப்பற்றி நான் சொல்லி நீங்கள் தெரிய வேண்டிய சாதாரண மனிதரில்லை. இருந்தும் என் பார்வையில் இவரைப்பற்றி எழுதி இவரின் எழுத்துக்களை என் குறுகிய நட்பு வட்டத்தில் அறிமுகம் செய்வதை பெருமையாக உணர்கிறேன். அவர்தான் கார்டூனிஸ்டு பாலா என்கிற Bala G. 

இவரின் "நமக்கு எதுக்கு வம்பு" என்கிற புத்தகம், இவர் சந்தித்த மனிதர்கள், நிகழ்வுகள், அரசியல் விமர்சனங்கள் என்ற அனைத்தையும் உள்ளடக்கி ஒரு புத்தகமாகத் தந்திருக்கிறார்கள் யாவரும்.காம் நண்பர்கள். புத்தகத்தை படித்த பின்பு, "அட.. நாம நினைச்சதை, சொல்லத் தயங்குவதை பொளீரென்று போட்டுடைத்திருக்கிறாரே" என்று எண்ணத்தோன்றும். புத்தகம் வெளிவந்து ஓராண்டானாலும், மீண்டும் படிக்கும்போது, கடந்த காலத்தை திரும்பிப் பார்க்க உதவும் ஒரு கண்ணாடியாகவே உணருவீர்கள். 

உங்களிடம் இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம் பாலா..