Monday, February 20, 2017

கரை சேருமா கலிபோர்னியா...

உலகத்தின் மென்பொருள் சந்தையில் கலிபோர்னியாவின் பெயர் என்றும் நிலைத்திருக்கும். மைக்ரோ சாப்ட் முதல் ஆப்பிள் வரை இங்கு ஏதாவதொரு கராஜில் தான் அதன் பிரசவம் நடந்திருக்கும். அமெரிக்காவில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப சந்தைக்கு சாதகமான சூழல் நிலவும் கலிபோர்னியாவுக்கு ஒரு சாபம் வந்தது. இதற்கு முன் பல முறை வறட்சியை சந்தித்திருந்தாலும், சமீபத்தில்  2012ல் இருந்து மிகுந்த வறட்சியை  சந்தித்து வருகிறது. அமெரிக்கர்களுக்கு வறட்சி என்பது புதிது. காரணம் சராசரி தண்ணீர் பயண்பாடு அமெரிக்காவில் அதிகம். அது குழியல் அறையில், சமையல் அறையில், புல்வெளி, நீச்சல் குளம் என்று பல்வேறு வகைகளில் பல ஆயிரம் லிட்டர் தண்ணீரை சர்வ சாதாரணமாக செலவழித்து வாழும் வாழ்க்கை முறைக்கு பழக்கப்பட்டது. 

ஆனால் படிப்படியாக அந்த நிலை மாறி குடிநீருக்கே பஞ்சம் ஏற்படும் சூழல் ஒரு சில மாகாணங்களில் நிலவுகிறது. அதில் குறிப்பிடத்தக்கது கலிபோர்னியா. அமெரிக்காவின் மேற்கில் பசிபிக் கடலை ஒட்டியிருக்கும் கலிபோர்னியா நில அமைப்பில் பள்ளத்தாக்குகளையும் அருகில் பாலைவனத்தையும் கொண்டிருக்கிறது. கலிபோர்னியாவின் இப்போதைய வறட்சிக்கு முக்கிய கரணமாகச் சொல்லப்படுவது மூன்று காரணங்கள். அவை உலக வெப்ப மயமாதல், எல் நினோ, கலிபோர்னியாவை ஒட்டிய கடலில் நிலவும் வெப்ப மண்டலம்.

உலக வெப்பமயமாதலை பலர் இன்னும் கற்பனையே என்று எண்ணியும் வாதிட்டும் வரும் நிலையில், அது உண்மை, அதை நாங்கள் அனுபவித்து வருகிறோம் என்று கலிபோர்னிய ஆளுநரும், அமெரிக்க அதிபர் ஒபாமாவும் உலகத்திற்குச் சொன்னார்கள். பூமியின் ஆதாரமான நிலக்கரி, பெட்ரோல் போன்ற எரிபொருட்களை தொடர்ந்து எரித்து வளிமண்டலத்தை வெப்ப காற்றும், புகையுமாக நிரப்பி வைத்ததும், பிளாஸ்டிக் போன்ற எளிதில் மக்காத பொருட்களின் உபயோகமும் புவி வெப்பமயமாதலுக்கு முக்கியக் காரணமாகச் சொல்லப்படுகிறது.

அடுத்து எல் நினோ. பூமியில் தற்போது நிகழும் பெரும்பான்மையான இயற்கைச் சீற்றங்களுக்கும், சீரற்ற வானிலைக்கும் இதை காரணமாகச் சொல்கின்றனர். புவியின் சுழற்சியால் வளிமண்டலத்தில் பயணிக்கும் சூடான காற்று புவியீர்ப்பு விசை மற்றும் சூடான காற்று குளிர்ந்தவுடன் கீழ்நோக்கி வரும்போது அது கடலில் நிகழ்த்தும் மாற்றம் என பல இயற்கை மாற்றங்களை எல் நினோ என்கிறார்கள். இந்த நிகழ்வு கணிக்க முடியாத அளவில் நிகழ்வதால் இதனால் ஏற்படும் இயற்கைச் சீற்றத்தையும் கணிக்க முடியாமல் போகிறது.

அடுத்து கலிபோர்னியாவை ஒட்டியுள்ள பசிபிக் கடல் பகுதியில் நிலவும் வெப்ப மண்டலம். இந்த வெப்ப மண்டலத்தில் உருவாகும் வெப்பக் காற்று கலிபோர்னியாவில் ஈரப்பதைத்தைக் குறைத்து வறட்சியை உண்டாக்குகிறது. பொதுவாக மற்ற மாகணங்களில் பனிப் பொழிவு நிகழும்போது பனி மெதுவாகக் கரைந்து அதன் மூலம் நிலத்தடி நீராக மாற அதிக வாய்ப்புள்ளது. ஆனால் கலிபோர்னியாவைப் பொறுத்தவரை அங்கு நிகழும் வெப்ப மண்டலம் காரணமாக பனிப்பொழிவு நிகழாமல் பனி உருகி மழையாகப் பெய்கிறது. இது நிலத்தை நீண்டகாலத்திற்கு குளிர்ச்சியாக வைக்காமல் விரைவில் ஆவியாக வறண்டு விடுகிறது. வறட்சியான காலங்களில் மக்கள் தண்ணீர் பயன்பாட்டிற்காக ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து நீரை எடுத்துப் பயன்படுத்தினர். இதன் விளைவாக நிலத்துக்கடியில் இருக்கும் நீர் காலி செய்யப்பட்டது. நிலத்தின் மேலடுக்கைத் தாங்கி நின்ற நிறைகொண்ட தண்ணீர், காலியான வெற்றிடத்தால் நிலத்தின் அடுக்கு கீழே போக ஆரம்பித்தது. இந்த நிகழ்வு மேடான பகுதிகளை சற்று தாழ்த்தியும், தாழ்வான பகுதிகளை மேழும் தாழ்த்தியும் வைத்தது. நீண்ட நாட்கள் வறட்சியால் வாடியதால் நீர்த்தேக்கங்களை அரசு பராமரிக்க வில்லை. அதனால் பலவீனமடைந்த நீர் வெளியேற்றும் அவசரகால கண்மாய்களும் அணைகளின் பலமும் பாதிக்கப்பட்டது. தற்போது பெய்துவதும் மழையினால் ஒருவில் என்ற நகரிலுள்ள அணை முழுக்கொள்ளளவை எட்டும் நிலைக்கு வந்துகொண்டிருக்கிறது. நீர்வரத்து அதிகமாகி வருவதால் அணையிலிருந்து நீரும் அதிக அளவில் வெளியேற்றப்படுகிறது. இந்த சமயத்தில் கவனிக்காமல் விட்ட அவசரகால நீரை வெளியேற்றும் கண்மாயில் உடைப்பு ஏற்பட்டு அணையின் உறுதித்தண்மையை கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது.

அணையைச் சுற்றியுள்ள பகுதிகளிலும், ஆற்றின் கீழ்ப்பகுதியில் வசிப்பவர்களையும் அவசரகால நடவடிக்கையாக வெளியேறச் சொல்லியுள்ளனர். அணையை பெரும் பாறாங்கற்களைக் கொண்டு பலப்படுத்தி வரும் அதே நிலையில் மேலும் அதிக மழையை எதிர் நோக்கியுள்ளது கலிபோர்னியா. ஒரு காலத்தில் மழையில்லாமல் வறட்சியால் வாடிய மாகாணம் இப்போது மழை வந்தும் அதை சேமிக்க முடியாமல் போராடிக்கொண்டிருக்கிறது.

இயற்கை மனிதனுக்கு கட்டுப்பட்டது என்று மனிதர்கள் இறுமாப்பு கொள்ளும் நேரங்களிலெல்லாம் இயற்கை இதுபோல் ஒரு நமட்டுச் சிரிப்புடன் தன் பலத்தை காண்பித்துக் கொண்டிருக்கிறது. கலிப்போர்னியா கரைசேருமா என்று காத்திருந்தான் பார்க்க வேண்டும்.

2 comments:

  1. இந்த நிலை இப்போது மாறிவிட்டது. கடந்த ஒரு மாதமாக பேய் மழை கலிபோர்னியா முழுவதும் பரவலாக!

    ReplyDelete