இந்தியர்கள் அமெரிக்காவைத் தமது கனவு வாழ்விடமாகத் தேர்ந்தெடுக்க காரணங்களாக நான் கருதுவது,
1. சுதந்திரமான வேலைச் சூழல். அதாவது அறிவுச்சூழலில் சுதந்திரமாக கருத்துக்களை, புதிய எண்ணங்களை வெளிப்படுத்தும் சூழல்.
2. இந்திய ரூபாய்க்கு நிகரான அமெரிக்க டாலரின் மதிப்பு.
3. இலகுவான, சிக்கலில்லாத வாழ்க்கை முறை. அரசிடம் சேவைகளைப்பெற அதிகாரிகளுக்கு சிறப்பு கவனம் அளிக்க வேண்டியதில்லை.
4. சிறந்த சுற்றுச்சூழல், கட்டமைப்பு, வாழ்க்கை வசதி.
5. குழந்தைகளுக்கு தரமான அரசு பள்ளிக் கல்வி இலவசமாகக் கிடைப்பது.
ஆரம்பத்தில் தமிழகத்திலிருந்து அமெரிக்கா வரும் ஒருவர் ஓரிரண்டு ஆண்டுகள் மட்டும் தங்கியிருந்து வேலை செய்து செல்வமீட்டி தமிழகத்திற்கு திரும்பிவிடவே எண்ணியிருப்பார். நானறிந்த பல நண்பர்கள் இதுபோல் தமது எண்ணத்தை எண்ணிடம் வெளிப்படுத்தியிருக்கின்றனர். ஏன் நான் கூட அப்படி எண்ணித்தான் அமெரிக்க வாழ்க்கையை ஆரம்பித்தேன். நாளடைவில் வாழ்க்கைமுறை இன்னும் சில காலம் இருக்கலாம் என்பதில் ஆரம்பித்து, குழந்தைகள் கல்வி மற்றும் பல திறன்களை வளர்த்துக்கொள்ளும் வாய்ப்பு, இந்தியாவில் மாறிவரும் பொருளாதார, வாழ்க்கைச் சூழல் என்று பல காரணங்களால் அல்லது அமெரிக்க வாழ்வைத் தொடர்வதற்காக உருவாக்கப்பட்ட காரணக்களால் அமெரிக்க வாழ்க்கை சிறுகதையிலிருந்து பெரும் நாவலாக உருவெடுக்கிறது.
இந்தியர்கள் இங்கு வேலை செய்யும் போது குறைந்தது 25% சதவீதம் வருமான வரியும், 6.2% சமூகப்பாதுகாப்பு வரி, 1.2% மருத்துவ காப்பு வரி செலுத்துகிறார்கள். இதில் சமூகப்பாதுகாப்பு மற்றும் மருத்துவ காப்பு வரி வேலையில்லாத காலத்திலும், முதுமைக்காலத்திலும் தகுதியுடையவர்களுக்கு அரசு வழங்கும் ஊதிய நிதியில் சேர்க்கப்படும். இவை குறுகிய காலம் தங்கியிருந்து திரும்பிச் செல்லும் இந்தியர்களுக்கு எந்தப் பயனையும் அளிப்பதில்லை. அதேபோல் விசா காலத்தில் வேலையில்லாமல் அமெரிக்காவில் தங்கியிருப்பது, சட்ட விரோதம். ஆகவே வேலையில்லாத நிலையில் நாட்டைவிட்டே வெளியேற வேண்டிய நிலையில் அரசு சலுகைகள் எதுவும் இவர்களுக்கு கிடையாது. மேலே குறிப்பிட்ட வரிகள் போக மருத்துவக்காப்பீடு அமெரிக்காவில் கட்டாயம். மாதம் ஒன்றுக்கு ஒரு நபருக்கு 100 டாலருக்கு குறையாமல் மருத்துவ காப்பீட்டுக் கட்டணம் செலுத்தினால்தான் மருத்துவச் சேவையை எளிதில் பெற முடியும்.
குறுகிய கால விசாவில் வரும் உயர் தொழில் நுட்ப வல்லுனர்களுக்கு நாட்டில் இருக்கும் தேவையைக் கருத்தில் கொண்டு அரசு நிரந்தர தங்கும் உரிமை (Permenant Residency) அதன்பின் 5 ஆண்டுகளுக்குப் பின் குடிமகனாகும் உரிமையை வழங்குகிறது. பெரும்பான்மையான இந்தியர்கள் இந்த இலக்கை நோக்கியே செல்கிறார்கள். அதற்கு அவர்கள் 5 முதல் 20 ஆண்டுகள் விசாவில்(நிரந்தர தங்கும் தகுதிபெற விண்ணப்பித்த பின், அந்த விண்ணப்பத்தின் மீது ஒரு முடிவு கிடைக்கும் வரை விசா நீட்டிப்பு கிடைக்கும்) தொடர்ந்து நிலையில்லாமல் இருக்க வேண்டும்.
இந்த காலகட்டத்தில் இந்தியர்கள் வாகனங்கள், வீடு மற்றும் ஏனைய முதலீடுகளைச் செய்கின்றனர். இந்த முதலீடு மற்றும் இவர்கள் கட்டும் வரி, உள்ளூர் வரவு செலவுகள் மூலம் செலுத்தும் வரி என்பவை பொருளாதரத்தில் ஒரு கனிசமான பங்கு வகிக்கிறது. குறிப்பாக வீடுகளுக்கான சந்தை இந்தியர்களால்தான் வளர்ச்சியடைகிறது. உள்ளூர் வரிகள் மூலம் அரசுப்பணிகள், கட்டமைப்புகள் வளர்ச்சியடைகிறது. இந்த நிலையில் அதிபர் இந்தியர்களுக்கான விசாக்களை கட்டுப்படுத்தி உள்ளூர்க்காரர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்த நினைக்கிறார். இது நியாயமான எண்ணம் என்றாலும் தொழில் நுட்ப வல்லுனர்கள் கிடைக்காத காரணத்தினால்தான் தேவையை வெளி நாட்டிலிருந்து வல்லுனர்களை வரவழைத்து பூர்த்தி செய்ய வேழ்ண்டிய சூழல் உள்ளது என்பதை கணக்கில் கொள்ளாதது ஏமாற்றமளிக்கிறது.
அதேபோல் சில இடங்களில் உள்ளூர்க்காரர்களுக்கு கொடுக்க வேண்டிய அதிக ஊதியத்திற்கு பதிலாக வெளி நாட்டிலிருந்து வருவிக்கப்படுவருக்கு குறைந்த ஊதியம் கொடுத்து பணியிடத்தை நிறப்பும் சூழலும் நிலவுகிறது. ஆனால் இது எண்ணிக்கையில் மிகக் குறைவு. இதைத் தடுக்க வெளி நாட்டிலிருந்து வருபவர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை மிக அதிகமாக நிர்ணயிக்கும் திட்டமும் விவாதிக்கப்படுகிறது. இதன் மூலம் அதிக ஊதியம் கொடுத்து வெளிநாட்டினரை வேலைக்கு அமர்த்துவதற்கு பதில், உள்நாட்டினருக்கு ஓரள ஊதியம் கொடுத்து வேலைக்கு நிறுவனங்கள் அமர்த்தும் என்ற கணிப்பின் அடிப்படையில் இந்த திட்டம் முன் வைக்கப்படுகிறது. ஆனால் நிறுவனங்கள் ஊழியர்களுக்கு ஊதியத்தை அதிகமாக அளிப்பது, அவர்களின் இலாபத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். அதைத் தவிற்க அவர்கள் விற்பனை செய்யும் பொருட்களின் விலையை அதிகரிக்க வேண்டும். அப்படி அதிகரிக்கும் போது, அது எல்லா வாடிக்கையாளர்களையும் பாதிக்கும். இது சராசரியாக ஒவ்வொரு நபருக்குமான மாதாந்திர வாழ்க்கைச் செலவை அதிகரிக்கும். அதன் விளைவாக கடன் தேவை அதிகரிக்கும். கடன் அதிகமாகும் போது முதலீடு குறையும். முதலீடு குறைவது பங்குச் சந்தையில் வாங்கும் சக்தியைக் குறைக்கும். இது பங்குகளின் விலையை வீழ்ச்சியடையச் செய்யும். பங்குகளின் வீழ்ச்சி நிறுவனங்களின் மதிப்பை குறைக்கும். நிறுவனங்களின் மதிப்பு குறையும்போது, அந்த மதிப்பின் மீது கொடுக்கப்படும் கடனின் அளவு குறையும். கடன் அளவு குறையும்போது நிறுவனங்கள் வளர்ச்சி நடவடிக்கை தடைபடும். இது பொருளாதார வீழ்ச்சிக்கு வழிவகுக்கும். ஆக நிறுவனங்களைப் பாதிக்கும் எந்த நடவடிக்கையும் பொருளாதாரத்தை வீழ்ச்சியடையச் செய்யும். இதைத் தவிற்க நிறுவனங்கள் மேலும் அதிகமாக தங்கள் வேலைகளை இந்தியா போன்ற (Offshore) கடல்கடந்த இடத்தில் குறைந்த செலவில் செய்ய முற்படும்.
ஆக, இந்தியர்களுக்கு அமெரிக்காவின் தேவையைவிட, அமெரிக்காவிற்கு இந்தியர்களின் தேவை அதிகம். இது நிரந்தரம் இல்லையென்றாலும், குறுகிய காலத்திற்கு இதுதான் நிலை. அதிபர் எடுக்கும் முடிவு கணிக்க முடியாமல் இருப்பதால், எதுவும் நடக்கலாம். ஆனால் தவறான முடிவுகளின் பின் ஏற்படும் விளைவுகளை தாங்கிக் கொள்ள நிறுவனங்கள் தயாராக இல்லை. இவர்கள் தொடர்ந்து அரசுடனும், அதிபருடனும் பேச்சுவார்த்தை நடத்தி சூழலை விளக்கிக் கொண்டுள்ளனர். தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற அதிபர் புதிதாக இந்தியாவிலிருந்து வருபவர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கலாம். ஆனால் அது மீண்டும் இந்தியாவிற்கு கடல்கடந்த வேலைவாய்ப்பை அதிகரிக்கும். அதிபர் வணிகம் மற்றும் நிறுவனங்களுக்கு சாதகமாகவே செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எதுவும் நடக்கலாம் என்று இருக்கின்ற சூழலில் இந்தியர்கள் புதிய கனவுகளுக்கு கொஞ்சகாலம் இடைவெளி விடுவதுதான் இப்போதைக்கு புத்திசாலித்தனமான முடிவு.
வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கம் புதிய அரசின் குடிவரவு சட்டத் திருத்தம் பற்றிய கலந்தாய்வுக்கு வழக்குறைஞர் கவிதா ராமசாமியுடன் ஏற்பாடு செய்துள்ளது. சட்ட விளக்கம் தேவைப்படுவோர் கலந்துகொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.
No comments:
Post a Comment