Wednesday, December 31, 2014

சாண்டாவின் பரிசு - சிறுகதை

காவியா எங்களுக்கு ஆறுவருட தவத்திற்க்குப்பின் பிறந்த குழந்தை. அவள் பிறந்த பின்பே எங்கள் வாழ்க்கை உயிரோட்டமாகியது. முப்பத்தி இரண்டு வயதில் நான் படித்த மெக்கானிக்கல் இஞ்சினியர் படிப்பிற்க்கு தகுந்த சம்பளத்தில் டெக்ஸ்டூலில் வேலைகிடைத்த பிறகு, எனக்காகவே பல துயரங்களை சுமந்து கேள்விகளுக்கெல்லாம் கேள்விகளையே பதிலாக தந்து தான் வாங்கிவந்த வரத்திற்க்கு பலனாக என்னை மணந்துகொண்ட சுவாதி (எ) சுபலட்சுமி.

CIT ல் BE படித்து முடித்து ஒண்டிபுதூரில் ஒரு சின்ன  கம்பெனியில் புரொடக்சன் இஞ்சினியர் - அஸிஸ்டெண்டாக வேலைக்கு சேர்ந்த புதிதில் 1A வில் பயணிக்கும்போது சிங்காநல்லூர் பேருந்து நிருத்தத்தில் தினமும் நான் தேடும் செவ்வந்திப்பூ அவள். கிருஷ்ணம்மாவில் செகண்ட் இயர் BBA படித்துக்கொண்டிருந்தாள். அவளையே கண்கொட்டாமல் ரசிதுக்கொண்டிருக்கும் நான் - எப்போழுதும் என்னைபார்க்காதவள் போலவே வேறொருபக்கம் திரும்பிக்கொண்டிருந்த்த அவள், அன்று என்னை பார்த்தபோது என்னால் அதை நம்ப முடியவில்லை. தினமும் நான் வணங்கும் அந்த மருதமலை முருகன் என்னைக்கைவிடவில்லை என்றும், முருகனுக்கு வேண்டிக்கொண்ட பட்டுத்துணி வாங்க நேரம் வந்துவிட்டது என்று நினைத்துக்கொண்டேன்.

காதல் துளிர்க்க காரணம் ஏதும் தேவையில்லை, அங்கு எந்த பட்டாம்பூச்சி விளைவுகளும் இல்லை, வெறும் பட்டாம்பூச்சிதான். சொன்னால் நம்பமாட்டீர்கள், அந்த நேரத்தில் என்னிடம் யாரவது வந்து இந்த கொங்கு நாட்டை கேட்டிருந்தாலும், எடுத்துக்கொள் என்று கொடுத்திருப்பேன். நெடுநாளைய தவத்திற்க்கு கிடைத்த வரத்தை மறுப்பவர் யாரும் உளரோ? அடுத்த நாள், ஜனவரி 17, 2001, பொன்னை விட்டு புதனை தெரிந்து, சொல்லிவிட்டேன் விருப்பத்தை. 

அதற்க்கடுத்த மூன்றுநாள் நான் வேலைக்கு செல்லவில்லை, விடுப்பு. அதுவும் மெடிக்கல் விடுப்பு. அவள் ஆற்றிய எதிர்வினையை எதிர்கொள்ளமுடியாமல் 104 டிகிரி காய்ச்சலில் விழுந்தேன். 

நெடுநாள் நான் பேருந்தில் எப்போதும் அமரும் சன்னலோர இருக்கையை தவிர்த்து பயணம் செய்தேன். சிங்காநல்லூர் என்று நடத்துனர் சொல்லும்போது, "அது நல்ல சிங்கம், இனி ஒன்றும் செய்யாது" என நானே எனக்கு தைரியமூட்டிக்கொண்டு, நிலற்க்குடையில் தேடுவேன். நிலற்க்குடை எனக்கு நிலற்க்குகையாகவே தெரிந்தது.

நெடுநாள் இந்த காட்டுவாழ்க்கைக்கு ஒரு முற்றுப்புள்ளிவைத்தான் வீரராகவன். என் சிப்டில் புதிதாக சேர்ந்த ஸ்பெக்ட்ரோ டெக்னீசியன், திறமையானவன், குறிப்பாக சிங்காநல்லூர்காரன். அவனுடைய சகோதரியின் தயவால் என் வரலாறு சிங்கத்திற்க்கு சொல்லப்பட்டு ஒருவழியாக சிங்கத்தை மீண்டும் சந்திக்கமுடிந்தது. பலதேசங்கள் வென்ற ராசராசனின் வாரிசான எனக்கு இந்த சிங்கத்தை வெல்லவதென்ன அவ்வளவு கடினமா என்ன? ......

ஒருவாறு பட்டாம்பூச்சி நெஞ்சுக்குள்ளே வட்டமிட்டு, மரத்தையெல்லாம் சுற்றி டூயட் பாடி கல்யாணம் என்னும் கிளைமேக்ஸ் வந்தது. அப்போதுதான் சிங்கத்தின் தந்தையும் ஒரு முரட்டு சிங்கமென்றும் அவர் என் அப்பரண்டீஸ் வேலையெல்லாம் நம்பி அவர் பெண்ணை கொடுக்க விருப்பமில்லை யென்றும், ஒரு நல்ல அமெரிக்க சாப்ட்வேர் இஞ்சினியர் வரன் வந்திருப்பதாகவும் அதற்க்கு என்னை இடைஞ்சலாக இல்லாமல் விலகியிருக்க கோரி நாலு நல்ல எருமை மாடுகளை வைத்து புரியவைத்தார்.

நீண்ட ஆலோசனைக்குப் பின் இருவரும் சேர்ந்து ஒரு முடிவு செய்தோம். ஆறுமாத காலத்திற்க்குள் நல்ல கம்பெனியில் நிறந்தர  வேலையுடன் முரட்டு சிங்கத்தி்டம் மீண்டும் பெண்கேட்கவேண்ட்டும்- எனவும், அவர் மறுத்தால் அவரை மறுத்து திருமணம் செய்துகொள்ளலா என்ற கொள்கை முடிவு எடுக்கப்பட்டது. அன்றிலிருந்து ஜாப் ஸ்றீட், நாக்ரி எல்லாம் அலற ப்ரொபைல்    அப்லோட் செய்து வேலை வேட்டை தொடங்கினேன். பேங்களூர், மும்பை எல்லாம் தாண்டி எனக்கு தகுந்த வேலை கணபதி டெக்ஸ்டூலில் கிடைத்தது. டிசைன்  அண்டு  அசெம்லியில்  அஸிஸ்டெண்ட் மேனேஜராக பதவி. மாதம்     இருபத்தி நாலயிரம் கையில் கிடைக்கும்.

ஒருவழியாக வாழ்க்கையின் குறிக்கோளை அடைந்துவிட்ட பெருமிதத்துடன் முரட்டு சிங்கத்திடம் மீண்டும் பெண்கேட்பு படலம். இந்த முறையும்  அமெரிக்க மாப்பிள்ளையுடன் கம்பேர் செய்து ரிஜக்ட் செய்து விட்டார். எனக்கு ஏதாவது காளை அடக்கும் போட்டி கீட்டி வைத்து முடிவு செய்து கொள்ளலாமா என்றுகூட  கேட்க தோன்றியது. ஆனால் மேலதிகமாக பேச அனுமதியில்லாமல்  லாக்  அவுட் செய்யப்பட்டேன்.

பின்னொரு நாளில்  எனது பெற்றோர் மற்றும் நண்பர்கள்  முன்னிலையில் எங்கள் இருமணம் இணைந்தது. முரட்டு சிங்கம் விசயம் தெரிந்து போலீஸ், கீலீஸ் என்ற எல்லா வகையிலும் முயன்று கடைசியில் சிங்கத்திடம் தோற்று ஆட்டத்தை விட்டு வெளியேறி விட்டார். எல்லா சவால்களையும் வென்று விட்ட மமதையில் இருந்த எனக்கு விக்ரமாதித்தன் போல் இன்னொரு சவால் விட்டது சிங்கம். எப்படியாகினும் எங்களுக்கான சொந்த்தவீடு இன்னும் ஒரு ஐந்து ஆண்டில் கட்டி அதில் எங்களுக்கு பிறக்கப்போகும் குழந்தையை வளர்த்தெடுக்க வேண்டுமென்ற கட்டளை வைக்கப்பட்டது.

எனக்குத்தெரிந்த ஒரே திறமை, சொன்ன வேலையை தலைமேல் கொண்டு செய்து முடிப்பது, அலுவலகத்திலும். இரவு பகலாக இப்படி உழைத்த எனக்கு இரண்டு ஆண்டுகளில் பிரமோசன் கிடைத்தது, என்னுடைய வேலை கம்பெனிக்கானது என்றது போய், கம்பெனியின் வளர்ச்சிக்கானது என்றானதிலிருந்து வேலை நேரமும் எனக்கானதாக இருந்ததில்லை.

மேனேஜராக, ஏழாயிரம் சம்பள உயர்வுடன். ஒருவழியாக பேங்கில் லோ லோ வென்று அலைந்து லோன் வாங்கி காளப்பட்டியில் ஒரு அப்பார்ட்மெண்ட் புக் செய்தாகிவிட்டது. பத்து மாதங்களில் சொன்னபடியே கட்டிமுடித்து ஒப்படைத்து விட்டார்கள். வீட்டை கட்டிப்பார், கல்யாணம் பண்ணிப்பார் என்று சொல்லுவார்கள். அதன் பின் சொன்ன "தலையை வாரிப்பார்" என்ற வரியை வேண்டுமென்றே மறைத்து விட்டது சமூகம்.

அப்படி இப்படி என்று எப்படியோ இரண்டு வருடம் ஓடிவிட்டது. அவ்வபோது பெற்றோர், உற்றாரின் வற்ப்புறுத்தலின் பேரில் எல்லா குழந்தை வரம் தரும் கோவிலுக்கும் சென்று வந்தாகிவிட்டது. இந்த உலகத்திற்க்கு தெரியாமல் நாங்கள் இருவரும் வளர்த்த குழந்தைக்கு இன்று வயது நான்கு. அது எப்போதும் எங்களுடன் விளையாடிக்கொண்டும், கொஞ்சிக்கொண்டும் இருப்பது மற்றவர் கண்களுக்கு புலப்படுவதில்லை. அந்த குழந்தை கவிதையாக, கற்ப்பனையாக எங்களை விட்டு எப்போதும் பிரிந்ததில்லை.

எங்களுக்கும் கடவுள் மேல் கொண்ட நம்பிக்கை கூடிக்கொண்டே வந்தது. எப்படியாவது அப்படி ஒருவர் இருந்தால் பார்த்துவிட வேண்டுமென்று. எல்லா நம்பிக்கைகளும் நடைமுறையில் உண்மையாக இருக்கவேண்டிய அவசியமில்லை என்ற உண்மையை அந்த நம்பிக்கை புரிய வைத்தது. அந்த நம்பிக்கை அதிக நாள் நீடிக்கவில்லை.

சுவாதி அம்மாவகவும் நான் அப்பாவாகவும் அங்கீரிக்கப்பட எங்களுக்கு ஒரு குழந்தையை அந்த கடவுள் கடைசியில் கொடுத்து விட்டான். ஆம், இன்று அதை பூங்கோதை மகப்பேறு மருத்துவரும் உறுதி செய்துவிட்டார். ஆனந்தமும் பூரிப்பும் இனி எங்களை விட்டு பிரியாது. சொன்னால் நம்ப மாட்டீர்கள், அலுவலக நண்பர்கள், அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்களுக்கெல்லாம் சர்க்கரை மாத்திரை சாப்பிடுமளவுக்கு இனிப்பு கொடுத்தாகிவிட்டது.

மாதமொருமுறை செக்கப் செய்துகொள்ளுமாறு பணித்தார் பூங்கோதை. எங்களுக்கு ஒவ்வொருமுறையும் அல்ரா சானிக் செய்து குழந்தையின் வளர்ச்சியையும், அசைவுகளையும் பார்ப்பது மிகவும் ஆச்சர்யமாகவும் அலாதியாகவும் இருந்தது. ஒவ்வொரு நாளையும் காலண்டரில் அழித்து குழந்தையை நாங்கள் கையில் ஏந்தும் நாளை கொண்டாட காத்திருந்தோம்.

இந்த சமயத்தில் சிங்கக்கூட்டத்திற்க்கு செய்தி சென்று அவர்களும் வரப்போக சுவாதி சொல்லமுடியாத அளவுக்கு மகிழ்சியை கொண்டாடினாள். சொந்தங்கள் யாவும் குழந்தை வளர்ப்பையும், கர்ப்பினி கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு மற்றும் உணவுப்பழக்கங்களை சொல்லிக்கொடுத்தார்கள். ஏழுமாதத்தில் வளைகாப்பும் இன்னபிற சடங்குகளும் இனிதே நடந்து முடிந்தது. சுவாதியையும் குழந்தையையும் பிறிந்து என்னால் இருக்க முடியாது என்ற காரணத்தால் பிரசவத்தை எங்கள் வீட்டிலேயே கவனித்துக்கொள்கிறோம் என்று ஒருவழியாக சிங்கக்கூட்டத்திடமிருந்து அந்த உரிமையை பறித்துக்கொண்டேன்.

அன்று வலி்யை உணர்வதை சுவாதி சொன்னதும் மருத்துவமனைக்கு கொண்டு சேர்து வி்ட்டோம். மருத்துவர், இன்னும் ஓரிரு நாட்களில் குழந்தை பிறந்துவிடும்  என்று சோதனைகள் முடிந்த பின் கூறினார். மருத்துவ மனையி்ல் ரூம் கொடுக்கப்பட்டு நானும்  அம்மாவும் சுவாதியுடன் அங்கேயே தங்கி்க்கொண்டோம். அடுத்த நாள் வெள்ளிக்கிழமை காலை நான்கு மணிக்கு மீண்டு்ம் வயிற்றுவலி வர, மருத்துவர் வந்து பார்த்துவிட்டு ஆப்பரசேன் தியேட்டருக்கு அழைத்து செல்ல ஏற்ப்பாடுகள் செய்ய நர்சிடம் பணித்தார். இன்னும் கொஞ்ச நேரத்தில் குழந்தை பிறந்துவிடும் என்று சொல்லிச்சென்றார். அம்மா இதை கேட்டதும், குளித்துவிட்டு அருகிலுள்ள துர்கை அம்மன் கோவிலுக்கு சென்று வந்து விடுவதாக கூறி்ச் சென்றார். எனக்கு லேசன நடுக்கமும் பதட்டமும் பற்றிக்கொண்டது. தலைப்பிறசவம் மறு ஜென்மம் என்று சொல்வதன் அர்த்தம் அப்போதுதான் புரிந்தது. ஆப்பரேசன் தியேட்டருக்குள் கொண்டு செல்லப்பட்டபின் ஒவ்வொரு வினாடியையும் கடலில் புயலை கடக்கும் ஒரு கட்டுமரம் போலவே இருந்தது.

அம்மாவும் வந்து சேர்ந்துவிட்டார் துர்க்கையம்மன் கோவில் பிரசாதத்துடன். உள்ளே சென்ற நர்சிடம் அந்த திருநீரை கொடுத்து சுவாதியின் நெற்றியில் வைக்க கேட்டுக்கொண்டு, கந்தர் சஷ்டி படிக்க தொடங்கவிட்டார்.

எனக்கு குழந்தையை பார்க்கப்போகும் பரவசமும், பிரசவம்பற்றிய கவலையும் மாறி மாறி துளைத்துக்கொண்டிருந்தது. இந்த நேரத்தில் சொந்தங்கள் வந்து சேர்ந்திருந்தனர். டாக்டர் சிறிது நேரத்தில் வெளியேவந்து எனக்கொரு தேவதை பிறந்திருக்கிறாள் என்றும் தாயும் மகளும் நலமாயிருப்பதாகவும் மகிழ்சியை பரிசளித்துவிட்டு இனிப்பை எல்லோருக்கும் கொடுக்கச்சொல்லிவிட்டு சென்றார். நன்றியில் என் கண்ணீர் அவர் கரங்களை நனைத்தது.

குழந்தையை அம்மாதான் முதலில் தூக்கி உச்சி முகர்ந்தார். சுவாதி லேசான மயக்கத்தில் இருந்து என்னையே பார்த்துக்கொண்டிருந்தால். அவளின் கைகளை பிடித்து என்னைக் கரை சேர்த்த கடவுளுக்கு நன்றி சொல்லிக்கொண்டேன்.

நான்கு நாட்களில் வீட்டுக்கு அழைத்துச்செல்ல பணிக்கப்பட்டோம். குழந்தை வீட்டுக்கு வந்ததில் இருந்து எங்களுக்கு எப்போதும் ஒரு விழாவுக்கு தயாராகும் வீடுபோலவே இருந்த்தது.ஒரு நீண்ட கோடைக்குப்பின் வந்த வசந்தத்தில் பூத்த குறிஞ்சிப்பூ போலவே காவியா எங்களுக்கு இருந்தாள். காவியாவின் ஒவ்வொரு அசைவுகளும் எங்களுக்கு ஓராயிரம் கவிதை சொன்னது. அவள் வந்த பிறகு எங்களுக்கு எப்போதும் இல்லாத அளவுக்கு நேரப்பஞ்சம் ஏற்ப்பட்டது. அவளின் முதல் புன்னகை, முதல் சொல், முதல் தவழ்தல், முதல் நடை என்ற ஒவ்வொன்றையும் அதற்க்காகவே வாங்கிய கேம்கார்டரில் சேமித்துக்கொண்டோம். 

சுவாதிக்கு, வித விதமான ஆடைகள், பல வண்ணங்களில் வளையல்கள், அலங்காரப்பொருட்கள் தேர்வு செய்வதுவும் கொண்டாடமான தருணங்கள். அம்மாவுக்கோ பேத்தியை மடியில் வைத்து கொஞ்சுவதும், வெள்ளிச் சங்கில் பால் கொடுப்பதும், தாலாட்டுப்பாடுவதும், அவள் சிந்தும் உதட்டோரப் புன்னகைக்காகச்சொல்லும் கேளிக்கை கதைகளும், அவற்றில் என்னைக்கருவாக்கி கொள்வதிலும் அவளிடம் நீண்ட நாள் தேங்கியிருந்த தாயின் அன்பினை கொட்டிக்கொண்டிருந்தாள். பல நேரங்களில் குழந்தை அம்மாவை விட்டு பிரிய மனமில்லாமல் அவள் மடியினிலே தூங்கிய தருணங்கள் சுவதிக்கு கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கக் கூடும். அவளும் அம்மவிடம் தாலாட்டையும் ஸ்பரிசத்தையும் கற்றுக்கொண்டிருந்தாள்.

குழந்தைக்கு தாயின் மீதான பாசம் இயற்க்கையானது, அதை அடைய தாயானவள் எதையும் தேடிச்செல்லவேண்டியதில்லை என்பதை காவியாவும் அவ்வப்போது புரியவைத்துக்கொண்டிருந்தாள். புதிதாக வீட்டிற்க்கு வரும் நண்பர்கள் அம்மாவை சுவாதியின் தாயென்றே நினைத்துக்கொள்வார்கள்.

காவியா நடைபயிலும்போது கைகளுக்கு தட்டுப்படும் பொருட்கள் அதன் உருவத்தை மாற்றிக்கொண்டுவிடும். பூச்சாடிகள் கலைடாஸ்கோப்புக்குள் இருக்கும் கண்ணாடிகளைப்போல் வீட்டிலுள்ள வண்ணங்களை தரையெங்கும் பிரதிபலிக்கும். இட்டிலிக்கு அரைத்த மாவு அவள் கைபட்டாள், சுவரில் அழகிய பறவைகளாகவும், மேகத்துகளாகவும், பனிக்கரடிகளாகவும் மாறிக்கொள்ளும்.

காலம் கரைந்ததே எங்களுக்கு தெரியாதவண்ணம் ஆயிரம் ஆயிரம் காவியங்கள் படைத்துக்கொண்டிருந்தால் காவியா. சுவாதிக்கும் அம்மாவுக்கும் வயது குறந்து கொண்டே வந்தது. அவர்கள் ஊஞ்சல், கண்ணாம்பூச்சி விளையாட கத்துக்கொண்டிருந்தார்கள். சில வேலைகளில் காவியா அம்மாவகவும் சுவாதியும், அம்மாவும் அவள் பிள்ளைகளாகவும் மாறிக்கொண்டிருந்தார்கள்.

சில நேரங்களில் அலுவலகத்துக்கு இந்தமாதிரி போன் வரும் - 

ஹலோ.. Mr. கதிரேசன். நான் மிஸ் காவியா பேசரேன், இந்த ச்சுவாவும், ஆத்தாவும் குறும்பு செய்யுது..அடி குடு... என்று கொஞ்சிக் கொஞ்சி பேசி போன் கட் செய்யப்படும். 

சில நேரங்களில் வீட்டில் நடக்கும் பஞ்சாயத்திற்க்கு என்னை நாட்டாமையாக்கி எப்படியும் அவர்களுடைய குறுகிய கால ஆசைகளை தீர்த்துக்கொள்வார்கள். 

அன்று வழக்கம்போலவே கம்பெனியிலிருந்து வீடு திரும்ப கிளம்பிக்கொண்டிருந்தேன். வீட்டிலிருந்து இந்த முறை சுவாதி. வழக்கம்போல அவர்களின் விளையாட்டில் என்னை விளையாடுகிறார்கள் என்றுதான் என்னிக்கொண்டிருந்தேன். காவியா சைக்கிள் ஓட்டி விளையாடிக்கொண்டிருக்கும்போது தவறி விழுந்து விட்டதாகவும் லேசாக நெற்றியில் சின்ன காயம் ஏற்ப்பட்டுவிட்டதாகவும் சொன்னாள் சுவாதி. "பிள்ளையை கவினிக்காமல் வீட்டில் இரண்டுபேரும் என்ன செய்துகொண்டிருந்தீர்கள்?" - கோபத்திலும் பதட்டத்திலும் என்னை விட்டு வெளியேறும் வார்த்தைகள் கனமானதாக இருந்திருக்கவேண்டும். பேசிக்கொண்டிருக்கும்போதே போன் கட் செய்ப்பட்டது.

அவசரமாக நானும் கிளம்பிச்சென்றேன். வீட்டிற்க்கு சென்றபோது யாரும் வீட்டிலில்லை. பக்கத்து வீட்டு மனோகரின் மனைவி, குழந்தையை பூங்கோதை ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிச்சென்றுள்ளதாகவும் என்னை அங்கு வரச்சொல்லி சுவாதி சொல்லிவிட்டுன்சென்றதாகவும் சொன்னார்.

நான் திட்டியதால் பயந்து எதற்க்கும் ஒரு முறை டாக்டரிடம் காண்பித்துக்கொள்ளலாம் என கூட்டிச்சென்றிருப்பார்கள். இருந்தும் மனதில் ஏதோ ஒரு கருக்கல் படிந்த்தது. மருத்துவமணைக்கு சென்று பார்த்தபோது காவியா சிரித்துகொண்டு என்னை கட்டிப்பிடித்துகொண்டாள். அம்மாவும், சுவாதியும் சிறிது கலக்கமடைந்திருந்தார்கள்.

"டாக்டர் என்ன சொன்னார்?" என்று பதட்டத்துடன் சுவாதியிடம் கேட்டேன்

சின்னக்காயம்தான் என்று சொன்னதாகவும், பயப்படுவதற்க்கு ஒன்றுமில்லை எனவும் கூறியதாகம் சொன்னார்கள். என்னை நாளை வந்து பார்க்கச்சொன்னதாகவும் சொன்னார்கள்.

டாக்டரின் தம்பி மகன் இஞ்சினீர்ங் முடித்திருப்பதாகவும் அவருக்கு அமெரிக்காவில் MS படிக்க முயற்ச்சியெடுத்து வருவதாகவும் சுவாதி காவியாவிற்க்கு தடுப்பூசி போட போக வரும்போது கேள்விப்பட்டதாகவும் சொல்லியிருந்தால். என்னுடன் படித்த நண்பர்கள் சிலர் அமெரிக்காவில் பணிபுரிந்துகொண்டிருந்தனர். அவர்களிடம் MS படிக்க யுனிவர்சிட்டி மற்றும் ஸ்காலர்சிப் சம்பந்தமாக அவர்களிடம் விசாரித்துச்சொல்லும்படி கேட்டிருந்தார். அதன் விவரங்களை தெரிந்து கொள்ள வரச்சொல்லியிருப்பார் என்று தோன்றியது.

அன்று இரவு சுவாதிக்கும் காவியாவிற்க்கும் லேசான காய்ச்சல். அம்மா எப்போதும்போல கந்தர் சஷ்டி படித்து காவியாவிற்க்கும் சுவாதிக்கும் திருநீறு வைத்துவிட்டார். காவியாவின் கொலுசு சத்தமில்லாமல், வீட்டில் ஒரு வெறுமை படர்ந்ததை யாரலும் சகித்துகொள்ள முடியவில்லை. 

காலையில் வழக்கம்போல அம்மாவும் சுவாதியும் நேரத்தில் எழுந்திருந்தனர். அம்மா இன்று சனிக்கைழமை என்பதால் காலையிலேயே பெருமாள் தரிசனம் முடித்துவிட்டு பிரசாதம் கொண்டுவந்திருந்தார். காவியாவும் எழுந்து வந்து பாட்டியிடம் அடைக்கலம் ஆகியிருந்தாள். டிரையங்குலர் சீரிஸில் இன்று இந்தியாவுக்கும் ஶ்ரீலங்காவுக்குமான ஒன்டே மாட்ச் பார்க்க தயாராகிக்கொண்டிருந்தது பக்கத்துவீட்டு ரிடைர்ட் லெச்சரர் மற்றும் கூட்டாளிகள்.

சற்று மேகமூட்டத்துடன் வானம் இருந்ததால் ஏனோ கம்பெனிக்கு போகவேண்டும் என்று தோன்றவேயில்லை. சுவாதிதான் வந்து "இன்னும் கிளம்பாமல் என்ன செஞ்சிட்டு இருக்கிறீங்க?" என்று கேட்க, கிளம்பாமல் இருந்தால் கொண்டுபோய் விட்டுவிடுவாளோ என்று கூட தோன்றியது. இன்று எனக்குக் கூட முக்கியமான டிசைன் ரிவீவ் இருக்கிற ஞாபகம் வந்தது. கிளம்பி வழக்கம்போல காவியாவின் விருப்பமான "ஸ்விங்கிங் பேபி" ஒரு சுற்று சுற்றிவிட்டு வெளியே வந்து வண்டியை எடுக்கப்போனேன்.

மறக்காமல் டாக்டரை பார்துவிட்டு செல்லுமாறு சுவாதி ஞாபகப்படுத்தினாள். காவியா எப்பொழுதும் போல் சுருசுருப்புடன்  அவள் பாட்டியுடன் செடிகளுக்கு தண்ணீர்விட்டுக்கொண்டிருந்தாள். வரும் ஏப்ரலில் அவளுக்கு பிரீ கேஜி அட்மிசன் வாங்க வேண்டும் என்று நாங்கள் பேசிக்கொண்டது நினைவுக்கு வந்தது. டாக்டர் பூங்கோதையின் தந்தை ஒரு டிரஸ்ட் ஆரம்பித்து ஒரு CBSE பள்ளி நடத்தி வருகிறார். எங்கள் ஏரியாவில் அந்தப்பள்ளி நல்ல பெயருடன் அதிக பீசுடன் வளர்ந்து வந்தது. இன்று டாக்டரை  சந்திக்கும்போது டொனேசன் கினேசன் இல்லாமல் ஒரு சீட்டு வாங்கிக் கொடுக்குமாறு கேட்கலாம் என்ற எண்ணம் தோன்றியது. அட்மிசனுக்கு இன்னும் நாட்கள் இருக்கிறது, அதுவுமில்லாமல் இது சரியான சந்தர்ப்பமா?, அவர் ஏன் எனக்கு சிபாரிசு செய்ய வேண்டும்?.. அவரின் தம்பி பற்றி பேசத்தான் வரச்சொல்லியிருக்கிறார். நாம் அவருக்கு ஒரு உதவி செய்யும் போது, நமக்கான ஒரு உதவியை கேட்பதில் தவறில்லை என்று எனக்கு நானே பதில் தேடிக்கொண்டேன்.

கம்பெனியிலிருந்து வரும்போது சுவாதிக்கு  ஸ்வீட்டும், கணபதி மார்கெட்டில் மல்லிகைப்பூவும் வாங்கிவரவேண்டும். இன்னும்கூட ஏதாவது அவளுக்கு பரிசு கொடுத்து நேற்று திட்டிய திட்டிறிக்கு சமாதானப்படுத்தவேண்டும்.

அடுத்தமாதம் சுவாதிக்கு பிறந்த நாள் - அனைவருக்கும் புதுத்துணி வாங்கவேண்டும். அதனுடேயே சுவாதிக்கும் ஒரு நெக்லஸ் வாங்கி கொடுத்துவிடவேண்டியதுதான் என்றவாரே எண்ணிக்கொண்டு ஹாஸ்பிடல் வந்து சேர்ந்தேன். சிறிது நேரத்தில் டாக்டர் அழைப்பதாக ரிசப்சனில் நர்ஸ் சொன்னார். டாக்டர் அறைக்குள் சென்றேன். அவர் என்னை பார்த்து உணர்ச்சியில்லாத சிரிப்புடன் பேச ஆரம்பித்தார். நான் நேத்தே உங்களுக்கு சொல்லலாம்னு இருந்தேன், சுவாதியும் அம்மாவும் ஏற்க்கனவே பதட்டத்தில் இருந்ததால் அவர்களுக்கு நான் சொல்லும் செய்தியால் மேலும் நிம்மதி குறைய வேண்டாம் என்றும், இன்று  ஸ்பெசலிஸ்ட் ஒப்பீனியன் வந்ததும் கன்பர்ம் பண்ணிவிட்டு சொல்லலாம் என்றுதான் உங்களை வரச்சொல்லியிருந்தேன். உங்கள் குழந்தைக்குக்கு தலையில் அடிபட்டு கொண்டுவந்ததாலும், அவள் லேசான மயக்கத்தில் இருந்ததாலும் முதலுதவிக்குப்பின் MRI செய்து பார்த்ததில் அவளுடைய இடது மூலையில் ஒரு டீயுமர் வளர்வது தெரிந்துள்ளது. இது மிகவும் ஆரம்ப நிலைதான், AMCH ல் உள்ள லேசர் தெரபி மூலம் குணமடைய வைத்துவிடலாம் என்று கூறினார்.

என்னால் அந்த ஒவ்வொரு நோடியையும் கடக்க முடியாமல் தவித்தேன். தொண்டையில் வலியும் தாகமும் எடுத்து தண்ணீரை தேடினேன். டாக்டரே டம்லரில் தண்ணீரைக்கொடுத்து, "நதிங் டு வொர்ரி Mr. கதிரேஸ். ஆரம்ப நிலையிலுள்ள இந்த மாதிரியான பல கேஸ்கள் லேசர் தெரப்பி மூலம் பூரண குணமடைந்துள்ளது. நான் டாக்டர் அசோகன் அவர்களிடம் பேசிவிட்டேன். இரண்டு மூன்று வாரத்திற்க்குள் ப்ரொசீஜர் செய்துவிடலாம் என்று கூறியுள்ளார், கவலைப்படவேண்டியதில்லை" என்று கூறினார். என்னால் அவர் சொன்ன எதையுமே கிரகித்துக்கொள்ள முடியவில்லை.

"இன்னொருதடவை எதுக்கும் ஸ்கேன் ஏதும் எடுத்து பாத்து கன்பார்ம் பண்ணிக்கலாம்ங்களா?...பிள்ளை நல்லாத்தான் இருக்கு, அவளுக்கு எதுவும் பிரச்சினை இருக்காது மேடம்... " என்று நம்பிக்கையில்லாமல் வார்த்தை தடுமாறி கேட்டேன்.

அவர் என் வேதனை புரிந்தவராக, "நீங்கள் கவலை அடையுமளவுக்கு இதுவொன்றும் உயிரை பறிக்கின்ற பிரச்சினை இல்லை. எவ்வளவு சீக்கிரம் சிகிச்சை அளிக்கிறோமோ அவ்வளவு நல்லது. குழந்தையின் வளர்ச்சிக்கு பிற்க்காலத்தில் ஏதும் பாதிப்பு வராமல் இருக்க இந்த சிகிச்சையை விரைவில் செய்வது அவசியம்" என்றார்.

அவர் பேசுவது எதுவுமே என் காதில் விழவில்லை. எனக்கு கோபமெல்லாம் அந்த மருதமலை முருகன் மேல்தான். எவ்வளவு இரக்கமற்றவனாக இருந்தால் இந்த மழலைக்கு இப்படி ஒரு தண்டனையை கொடுத்திருப்பான். அந்த துர்க்கையம்மனுமா ஏமாற்றிவிட்டாள்?.

என்னதான் டாக்டர் சமாதானப்படுத்தினாலும் டீயுமர் என்பது ஆபத்தானது என்பது என்பதை என்னால் உதாசினப்படுத்த முடியவில்லை.

அம்மாவுக்கும் சுவாதிக்கும் இதை எப்படி சொல்வது?. அவர்கள் நொடிந்து போய் விடுவார்கள். இல்லை,..

அவர்களுக்கு இதை சொல்ல வேண்டாம். டாக்டரிடம், நான் என் குடும்பத்தார மெல்ல புரிய வைத்துக்கொள்கிறேன், நீங்கள் அவர்களிடம் எதுவும் சொல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொண்டேன். "ஆப்பரேசனுக்கான ஏற்ப்பாடுகளைச் செய்யுங்கள். தேவையானால் உங்களுக்கு தெரிந்த நல்ல டாக்டரை கூட்டிவாருங்கள். எங்களுக்கு காவியாதான் உலகம். அவளில்லாத ஒரு நிமிடத்தைக்கூட என்னால் நினைத்துப்பார்க்க முடியவில்லை" என தழுதழுத்தவாறே சொன்னேன்

ஒருவாறு என்னை சமாதானப்படுத்திக்கொண்டு டாக்டரிடம் பேசி முடித்துவிட்டு வெளியே வந்தேன். "எப்படி இந்த விசயத்தை அவர்களுக்கு தெரியாமல் சமாளிப்பது?" என்பதிலேயே என்னுடைய கவனம் இருந்தது. "எல்லாவற்றையும் அந்த அயோக்கியப்பயன் முருகனே பார்த்துக்கொள்ளட்டும். அவனைத்தவிர எனக்கு வேறு யாரயும் தெரியாது".

என்னால் வேறு எதிலும் கவனம் செலுத்த முடியாமல் வண்டியை யாருமற்ற ஒரு இடத்தில் நிறுத்தி அழுகையை அடக்கமுடியாமல் உடைந்து கொண்டிருந்தேன்." எதற்க்காக இதெல்லாம்? கடவுள் என்பவன் இவ்வளவு கொடியவனா? யாருக்கும் எந்த பாவமும் நினைக்காத எங்களுக்கு இவ்வளவு பெரிய தண்டனையா?"

வெய்யில் உறைக்க, மணிக்கட்டை பார்த்தேன், 1.23 PM. மெதுவாக கிளம்பி அலுவலகம் வந்து சேர்ந்தேன். வந்ததும் அஸிஸ்டென் வந்து, "உங்களுக்கு வீட்டிலிருந்து இரண்டு முறை போன் வந்தது" என்று சொன்னான். எப்படி சுவாதியிடம் டாக்டர் சொன்னதை மறைக்கப் போகிறேன்? என்றவாரே வீட்டிற்க்கு போன் செய்தேன்.

எதிர் பார்த்தது போலவே சுவாதி ஹாஸ்ப்பிட்டலில் என்ன சொன்னார்கள் என்று முதல் கேள்வி கேட்டாள். ஒருவழியாக சுதாரித்து, "நாம் நினைத்த மாதிரியே டாக்டரின் தம்பி மகனுக்கு MS படிக்க சில தகவல்களை என் நண்பர்களிடம் விசாரித்து தரும்படி கேட்டார். அப்படியே காவியாவுக்கு அவர்கள் பள்ளியில் அட்மிசனுக்கும் சொல்லி வைத்து விட்டேன். நிச்சயம் உதவி செய்வதாக கூறினார்" என்று சொன்னதும் சற்று அமைதியாகி, "எங்க போனிங்க, ரெண்டு தடைவை கால் பண்ணினேன். நீங்க இன்னும் வரலைன்னாங்க?"  என்ற சாதாரண கேள்விக்கு எனக்கு பதிலேதும் சொல்ல தோன்றவில்லை.

"டாக்டரை பார்த்துட்டு வெளியே வரும்போது, பழைய பிரண்டு ஒருத்தனை வழியில் பார்து பேசிட்டு வர டைம் ஆயிருச்சு" என்று சமாளித்து விட்டு போனை வைத்தேன்.

எந்த விசயத்திலும் மனது செல்லாமல், இந்த நாள் ஏன் ஒரு கனவாக இருக்ககூடாது என்று சிறிது நேரம் கண்ணை மூடி பிறகு விழித்துப்பார்ப்பேன். கலைய மறுக்கிறது - இந்த கொடுங்கனவு. வீட்டிற்க்கே போக பிடிக்க வில்லை.. இருந்தாலும் முன்னெப்போதையும் விடவும் காவியாவுடன் அதிக நேரம் இருக்க தோன்றியது.

வீட்டிற்க்கு வந்து சேர்ந்த போது பக்கத்து வீட்டில் கிருஸ்துமசுக்காக லைட்டிங் செய்திருந்தார்கள். அதில் கிருஸ்துமஸ் தாதா குதிரை வண்டியில் வருவது போல அலங்கரித்திருந்தார்கள்.

சுவாதிக்கும் காவியாவிற்க்கும் அது ரொம்ப பிடித்துப்போக எங்கள் வீட்டிலும் லைட்டிங் மற்றும் கிருஸ்த்துமஸ் செடி வைக்க வேண்டுமென்றும் முடிவு செய்யப்பட்டது.

கவலைகளை கனவாக்கி மறக்க எனக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்து. கிருஸ்துமஸ் கதையை காவியாவுடன் அன்றிறவு பகிர்ந்து கொண்டோம். "ஏசுபிறந்த அந்த நாள் உலக மக்கள் அமைதியையும் சகிப்புத்தன்மையையும் பரிசாக பெற்ற நாள். நாம் நமக்கு என்ன வேண்டும் என்று ஒரு காகிதச்சீட்டில் எழுதி கிருஸ்துமஸ் செடியில் வைத்து விட்டால், கிருஸ்துமஸ் தாத்தாவகிய சாண்டா அதை பரிசாக கிருஸ்துமஸ் நாளன்று கொடுப்பார்..." என்றவாரு கதை சொல்லிக்கொண்டிருந்தே. கதையை கேட்டுக்கொண்டே மடிமீது தூங்கிவிட்டாள்.

காவியாவின் டியூமர் பற்றிய நினைவு அவ்வப்போது வந்து என்னை சிதைத்து கொண்டிருந்தது. அவ்வளவு பெரிய பாரத்தை என்னல் தொடர்ந்து தாங்கிக்கொள்ள முடியுமா என்ற கேள்வியில்,  என் மன வலிமை மீது எனக்கே சந்தேகத்தை ஏற்ப்படுத்திக்கொண்டிருந்தது. சுவாதியும் பிள்ளையைப்பற்றிய பெருங்கனவுடன் பல நிகழ்வுகளை எதிர்கொண்ட்டிருந்தாள். குழைந்தைக்கு குலதெய்வ கோயிலில் மொட்டையடிப்பதும், அங்கு சொந்தங்கள் சூழ துலாபாரம் கொடுப்பதும் என்று சொல்லிக்கொண்டே சென்றாள்.

எப்போது தூங்கினேன் என்றே தெரியவில்லை. காலையில் அம்மா காபிகொண்டு வந்து எழுப்பும்போதுதான் தூக்கம் களைந்தது, மணி 8ஐ கடந்திருந்தது. காவியாயும், சுவாதியும் வழக்கம்போல நேரமே எழுந்து செடிக்கு தண்ணீர் ஊற்றுவதும், நாய்க்குட்டிக்கு சோறுகொடுப்பதும் என்று அன்றைய காலையை கொண்டாடிக்கொண்டிருந்தார்கள்.

கிருஸ்துமஸ் செடியில் புதிதாக இரண்டு பூ பூத்திருப்பது போல் இருந்தது. பக்கத்தில் சென்று பார்த்தபோது, இரண்டு காகித சுருள்களும் அதில் சாண்டாவுக்கு சுவாதியும், காவியாவும் எழுதிய பரிசு விருப்பம் இருந்தது. ஒன்றில் "எப்போதும் சிரிக்கும் கதிரேசன்", இன்னோன்றில் "பெரிய பாப்பா பொம்மை" என்று எழுதி இருந்தது. என்னால் அந்த கணத்தில் கண்ணில் பெருக்கிட்ட நீரை தடுக்கமுடியவில்லை.

சாண்டா அவர்கள் கேட்பதை நிச்சயம் கொடுத்து விடுவார். நான் எழுதாமல் கேட்கும் என் காவியாவை எனக்கே திருப்பித்தரும் சாண்டாவை  நான் தேடிக்கொண்டிருக்கிறேன்......



(* பின் குறிப்பு : இந்த கதையில் வரும் சம்பவங்களும், கதாபாத்திரங்களும் கற்பனையே, யாரையும் குறிப்பிடுவன அல்ல)

Sunday, December 21, 2014

என்னாடுடைய இயற்க்கையே போற்றி - 7

(என்னாடுடைய இயற்க்கையே போற்றி. இயற்க்கை வேளான் ஆசான் ஐய்யா நம்மழ்வாரின் கட்டுரைத்தொடர் - விகடன் பிரசுர வெளியீடு)

பயிர்ப் பாதுகாப்புக்கு எது தேவை?

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் பேருந்து நிலையத்தில் 2004-ம் ஆண்டு நடந்த ஒரு கூட்டத்தில் பேசிவிட்டு, மேடையிலிருந்து இறங்கினேன். என்னை எதிர்கொண்ட வேளாண் துறை அதிகாரி ஒருவர், ஒரு நூலை என் கையில் கொடுத்தார். 

'ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் காட்டன் ஃபார்மர்ஸ்' (Friends of cotton Farmers) என்பது அந்த நூலின் தலைப்பு. அதன் பொருள்... பருத்தி விவசாயிகளின் நண்பர்கள். ‘நூலைப் படித்துப் பார்த்துவிட்டுப் பேசுங்கள்’ என்று அந்த அதிகாரி சொன்னார். 

அவர் வேறு யாருமல்ல... இன்று இயற்கை ஆர்வலர்கள் அனைவரும் அறிந்திருக்கும் இயற்கை உயிரியல் நிபுணர் நீ.செல்வம்தான்.

அவரும் இன்னும் இரண்டு விஞ்ஞானிகளும் இணைந்து எழுதிய நூல் அது. நூல் முழுவதும் இரை மீது தாவும் நன்மை செய்யும் பூச்சிகளின் வண்ணப்படங்கள் நிரம்பி வழிந்தன. தமிழகம் மற்றும் ஆந்திர மாநில வேளாண் துறை ஆணையர்கள் அந்த நூலுக்கு வாழ்த்துரை வழங்கி இருந்தார்கள். 

‘இந்தியாவின் மொத்த சாகுபடிப் பரப்பில் 5 முதல் 10% வரை பருத்தி பயிரிடப்படுகிறது. ஆனால், ஒட்டுமொத்தப் பயிர்களுக்கும் பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லியில் 55% பருத்தியில்தான் தெளிக்கப்படுகிறது. இப்படி உழவர்கள் தாறுமாறாக நஞ்சைத் தெளிப்பதால் நிலம், நீர், காற்று மாசுபடுவது மட்டுமல்லாமல், உயிரினப் பன்மயமும் அழிகிறது’ என்ற விஷயம்தான் அந்த நூலில் விரிவாகச் சொல்லப்பட்டு இருக்கிறது.

ஐக்கிய நாடுகள் சபையின் உணவுஉழவுத் துறை அதிகாரியாக இருந்த, டாக்டர். பழனிச்சாமி பச்சாக் கவுண்டர், அந்த நூலுக்காக எழுதியிருந்த அணிந்துரையில், ‘பருத்தி பயிராகும் நிலத்தில் 150 வகையான உயிரினங்கள் வாழ்கின்றன. அவற்றில் 10 வகைப்பட்ட உயிர்கள் மட்டுமே செடியின் பாகங்களைச் சிதைக்கின்றன. 100 வகைப்பட்ட உயிரினங்கள் நன்மை பயக்கின்றன. எஞ்சிய 40 உயிரினங்கள் நன்மையோ தீமையோ செய்வதில்லை. ‘ரசாயனப் பூச்சிக்கொல்லிகள் இல்லாமல் பருத்தியைப் பயிர் செய்ய முடியாது’ என்று சொல்பவர்கள், ‘உயிர்ச்சூழல்’ இயல்பு அறியாதவர்களாக இருப்பார்கள் அல்லது வேறு ஏதோ காரணத்தினால் இப்படிச் சொல்கிறார்கள்’ என்று சூடாகக் குறிப்பிட்டு இருந்தார்.

அந்த நூலை முழுவதும் படித்து முடித்தவுடனேயே எனக்கு செல்வத்தின் மீது பற்றும் நெருக்கமும் ஏற்பட்டன. ‘பூச்சிகளைக் கொல்வது மட்டுமேதான் ‘பயிர் பாதுகாப்பு’ என்று பார்ப்பது அபத்தமானது’ என்ற உண்மையை செல்வம் அடிக்கடி சொல்வார்.

இன்னொரு சமயம் கொடைக்கானலில் நடந்த ஒரு கருத்தரங்கில், தோட்டக்கலை உதவி அதிகாரி ஒருவர், தோட்டக்கலைப் பயிர்களுக்கு பூச்சிக்கொல்லி தெளிப்பது பற்றி பேசிக்கொண்டு இருந்தார். அதில் பங்கேற்ற வெளிநாட்டுக்காரர் ஒருவர் எழுந்து, "பூச்சிகளைக் கொல்லாவிட்டால் என்ன?" என்று கேட்டார். 

"பூச்சிகள், இலைகளைத் தின்றுவிடும். பிறகு, செடி செத்துவிடும்" என்று பதில் சொன்னார் அந்த அதிகாரி.

உடனே, அந்த அதிகாரியை அழைத்துக்கொண்டு ஒரு தோட்டத்துக்குள் புகுந்தார், அந்த வெளிநாட்டுக்காரர். நாங்களும் பின்தொடர்ந்தோம். அங்கு ஒரு தேக்கு மரத்தை அவர் சுட்டிக்காட்டி, "இதன் இலைகளில் புழு ஓட்டை போட்டு இருக்கிறது. அதனால், இந்தத் தேக்கு மரம் செத்துப் போகுமா?" என்று வெளிநாட்டுக்காரர் கேட்டார். முகம் சிறுத்துப்போன அந்த அதிகாரி, "இந்த மரம் சாகாது..." என்று தயங்கித் தயங்கிச் சொன்னார்.

இயற்கை விவசாயிகள் பலரும்கூட, செடியைத் தின்னும் பூச்சிகளை, தங்களுடைய உணவாக்கிக்கொள்ளும் தட்டான், சிலந்தி ஆகியவை மட்டுமே நன்மை செய்யும் பூச்சிகள் என்று எண்ணுகிறார்கள். ஆனால், இயற்கை விவசாய ஆசான் ‘மசானபு ஃபுகோகா’ எல்லாப் பூச்சிகளையுமே நண்பர்களாகத்தான் பார்த்தார். ஆக, தாவரங்களைத் தின்னும் பூச்சிகள் நமது நிலத்தில் வாழ்வது இன்றியமையாதது ஆகிறது. 

அப்படியானால் பயிர்ப் பாதுகாப்பு என்பது என்ன?

செடியின் இயல்பை உழவர் அறிந்திருப்பது மிகவும் முக்கியம். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் செடி தனது பகைவர்களிடம் இருந்து தன்னைக் காத்துக்கொள்ள போராடிக் கொண்டுதான் இருக்கிறது. வேகமாக வீசும் காற்றால் கிளை முறியும்போது முறிந்த இடத்தில் ஒருவித மெழுகு சுரந்து பூச்சிகளோ, கிருமிகளோ உட்புகாமல் தடுத்துக்கொள்கிறது. அதேபோல, இலையைப் பூச்சிக் கடிக்கும்போது இலையில் ஒருவிதத் திரவம் சுரந்து பூச்சிக்குப் பசி எடுப்பதைத் தடுக்கிறது. 

ஒரு செடியைத் தாக்கி நோய் பரப்பும் பூச்சி, பக்கத்தில் உள்ள வேறொரு வகைச் செடிக்கும் அந்த நோயைக் கொண்டுபோய் சேர்க்கிறது. உதாரணமாக, தக்காளி, மிளகாய், கத்திரி... போன்ற பயிர்களை ‘சிற்றிலை நோய்’ தாக்குகிறது. இது, வைரஸ் மூலம் பரவுகிறது. 

தக்காளி பயிர் செய்யும்போது ஊடுபயிராக மிளகாய், கத்திரி... போன்றவற்றை ஊடுபயிராக பயிரிட்டால் தக்காளியில் உள்ள சிற்றிலை நோய் ஊடுபயிர்களையும் தாக்கும். இந்த வகை பயிர்களை நாம் அடையாளம் கண்டுவைத்துக் கொண்டு அவற்றை ஒரே பருவத்தில் ஒன்றாகப் பயிர் செய்வதைத் தவிர்க்கலாம். அதே சமயம், ஒரு செடியில் தாக்கிய நோய், தன்னைத் தாக்காமல் எதிர்த்து நிற்கும் செடிகளை அடையாளம் கண்டு ஒன்றாகப் பயிர் செய்யலாம்.

ஒவ்வொரு தாவரமும், தன்னுள் நடக்கும் வளர்சிதை மாற்றத்தை தானே கண்காணித்துக் கொள்கிறது. மண் கெட்டிப்பட்டுப் போனால், அதில் நுண்ணூட்டப் பற்றாக்குறை ஏற்படுகிறது. அந்த மண்ணில் வளரும் செடி, பூச்சித்தாக்குதலுக்கு உள்ளாகிறது. தாவர வளர்ச்சிக்குத் தண்ணீர் அடிப்படை தேவை. தண்ணீர்ப் பற்றாக்குறை தாவரத்தின் வளர்ச்சியை பாதிப்பதைப்போல தண்ணீர் மிகுதியும் அதனை பாதிக்கும்.

அமில நிலத்தில் வாழப் பழகியச் செடிகள்... களர் நிலத்திலும், களர் நிலத்தில் வாழப் பழகியச் செடிகள்... அமில நிலத்திலும் சரியாக வளராமல் வாடிப்போகின்றன. 

தொடர்ந்து எரு இடுவதும், மூடாக்கு இடுவதும் மண்ணின் நீர்பிடிப்புத் திறனையும் நீர் வடிதிறனையும் உயர்த்துவதோடு, மண்ணின் கார அமிலத்தன்மையையும் சமன்படுத்துகிறது. 

அநேக வகையான பூச்சிகள், மனிதர்களுக்கு நேரடியாகப் பயன்தராமல் இருக்கலாம். ஆனால், அவை மறைமுகமாகப் பயன் தரக்கூடும். அதுபோலான பூச்சிகளை வரவேற்பதற்காக சிறு பூக்கள் மலரக்கூடிய செடிகளை ஓரப் பயிர்களாகவும் ஊடுபயிர்களாகவும் செய்ய வேண்டும். முள்ளங்கி மற்றும் கடுகு குடும்பத்தைச் சேர்ந்த செடிகள் இதற்கு மிகவும் பொருத்தமானவை. நிலத்துக்கு இடப்படும் மூடாக்குகூட அறுவடைக்குப் பிறகு, பூச்சிகள் மறைந்து வாழ்வதற்குப் பயன்படும். பூச்சிகள், பயிர்களை அழிப்பது நமக்குத் துயரமான விஷயம்தான். அதற்காக உடனே நஞ்சைக் கையில் எடுப்பது, இயற்கையைப் புரிந்துகொள்ளாமல் செய்யும் தவறாகும்!



Sunday, December 14, 2014

என்னாடுடைய இயற்க்கையே போற்றி - 6


(என்னாடுடைய இயற்க்கையே போற்றி. இயற்க்கை வேளான் ஆசான் ஐய்யா நம்மழ்வாரின் கட்டுரைத்தொடர் - விகடன் பிரசுர வெளியீடு)


ஒரு ஏக்கர் நிலம்... அரை கிலோ மண்... துல்லியப் பரிசோதனை?

யற்கையைப் புரிந்துகொள்வதில் அடிப்படையிலேயே தவறு நடக்கும்பட்சத்தில், அதற்காகத் தீட்டப்படும் திட்டங்களிலும் கண்டிப்பாகத் தவறுகள் இருக்கத்தான் செய்யும். அந்த மாதிரியான தவறான திட்டங்களில் ஒன்றுதான் மண் பரிசோதனைத் திட்டம். 

‘உழவுத் தொழிலில் விஞ்ஞானத்தைப் புகுத்துகிறோம்’ என்ற பெயரில், ஏகப்பட்ட மண் பரிசோதனைக் கூடங்கள் நிறுவப்பட்டுள்ளன. மண்ணைப் பரிசோதனை செய்து, அதில் உள்ள தனிமங்களின் அளவுகளைச் சுட்டிக்காட்டி, பயிர்களுக்குக் குறிப்பிட்ட தனிமங்களைக் குறிப்பிட்ட விகிதத்தில் இடவேண்டும் என்று பரிந்துரையும் செய்கிறார்கள்.

முழுமையாக இயற்கை வழியில் உழவுத் தொழில் செய்து, அதில் உயர் விளைச்சலை எடுக்க முடியும் என்பது தற்போது நிரூபிக்கப்பட்டுவிட்ட விஷயம். இயற்கை வழியில் பயிர் செய்பவர்கள், மண்ணை சோதிப்பதும் இல்லை; சோதனை அடிப்படையில் இடுபொருட்களைக் கொட்டுவதும் இல்லை. அவர்கள், மண்ணில் உள்ள நுண்ணுயிர்களுக்கும் பேருயிர்களுக்கும் தீனி கொடுப்பதை மட்டும்தான் செய்கிறார்கள்.

ரசாயன விஞ்ஞானிகள் அதிகம் பரிந்துரை செய்வது, தழைச்சத்து (நைட்ரஜன்) உரத்தைத்தான். ஆனால், இந்த நைட்ரஜன் வாயு, அண்டவெளியிலும் மண்ணிலும் சேர்த்து 78% உள்ளது. தாவர, விலங்குக் கழிவுகளை மட்டும் நிலத்தில் சேர்த்தால் போதும். அதிலுள்ள நுண்ணுயிர்கள் காற்றில் உள்ள நைட்ரஜனை வேரிலோ அல்லது வேருக்குப் பக்கத்திலோ சேர்த்துவிடும் என்பது இயற்கை விவசாயிகளுக்கு நன்றாகவே தெரியும். 

ஒரு ஏக்கர் நிலத்தில் 18 சென்டிமீட்டர் ஆழத்துக்கு உழும்போது கிட்டத்தட்ட ஒன்பது லட்சம் கிலோ மண் புரட்டப்படுகிறது. ஆனால், மண்ணியல் நிபுணர்களோ தோட்டத்தில் அரைக் கிலோ மண்ணை ஆய்வுக்கூடத்துக்கு எடுத்துச் சென்று, அதில் ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி மண்ணைத் தண்ணீரில் கரைத்து சோதனை செய்து, துல்லியமாக ஒரு முடிவைச் சொல்கிறார்கள்.

‘இது எப்படி ஒரு ஏக்கர் நிலத்துக்கும் பொருந்தும்?’ என்று கேட்டால், ‘பொருந்தும்’ என்பது மட்டுமே பதிலாக இருக்கிறது!

உலகில் எதுவுமே துல்லியமானதாக இல்லாதபோது, மண் பரிசோதனை மட்டும் எப்படி துல்லியமாக இருக்கும். எத்தனை தடவை சோதனை செய்தாலும், எதையும் துல்லியமாகக் கண்டுபிடிக்க முடியாது என்பதுதான் உண்மை. 

‘ஒரு செடியில், ஒரு தனிமம் நிறைய சேமிக்கப்படலாம். ஆனால், மண்ணில் இருப்பது அறியப்படாமல் இருக்கலாம். காரணம், மிகச் சிறு அளவில் மண்ணில் உள்ள தனிமங்கள் சோதனையாளர் ஆய்வுக்குள் அடங்குவதில்லை’ என்று, மண் ஆய்வாளர் ஒருவர் கூறியிருக்கிறார்.

ஆய்வாளர்களின் கூற்றுப்படி, ஆறு அங்குல ஆழத்தில் இருந்துதான் தாவர வளர்ச்சிக்குத் தேவையான தாதுக்கள் கிடைக்கின்றன என்றால், ஆழமாக வேர்விட்டு ஓங்கி வளரும் தாவரங்களுக்கு எங்கிருந்து இந்தத் தாது உப்புகள் கிடைத்திருக்கும்? 

நிலத்தில் 100 அடிக்குக் கீழே உள்ள தண்ணீர்கூட, சில சமயங்களில் ‘தந்துகி’கள் (capillary) வழியாக மேல் நோக்கி வருகின்றன. அப்படி வரும் தண்ணீர், தாது உப்புக்களையும் கரைத்துக்கொண்டு வருகிறது. அதன் மூலமாகத்தான் மரங்களுக்குத் தேவையான சத்துகள் கிடைக்கின்றன. அதனால்தான் காடுகளில் உள்ள மரங்கள் செழித்து வளர்ந்து நிற்கின்றன. அதனால்தான் மேல் மண்ணைச் சோதிப்பவர்களின் ஆய்வில் தாது உப்புக்கள் புலப்படுவதில்லை.

ஃபிஜி தீவில் கரும்புத் தோட்டத்தில் கங்காணியாக வேலை பார்த்த வேளாண் பட்டதாரியான ‘நார்மன் கார்யூ’, ‘மண்ணில் தாவர, விலங்குக் கழிவுகள் மட்கிய நிலையில் இருந்தால், மண்ணின் மேற்பரப்பில் ‘வெடியம்’ உட்பட எல்லாத் தாது உப்புக்களும் வந்து விடுகின்றன’ என்று சொல்லி இருக்கிறார்.

ரசாயன விவசாயியான ‘எட்வர்டு ஃபால்க்னர்’ எழுதிய ‘மண்ணில் புத்துயிர்ப்பு’ எனும் நூலில், ‘ரசாயனத்தை நிறுத்திவிட்டு, நிலத்தில் கழிவுகளை மட்டுமே போடத் தொடங்கி, நான்கு ஆண்டுகளில் பெரிய அளவில் விளைச்சல் கிடைக்கவில்லை. ஐந்தாவது ஆண்டில் ஒரு ஏக்கரில் 21 டன் தக்காளிப் பழம் விளைந்தது. அந்த நான்கு வருடங்களில் ரசாயன உப்புக்களைக் கொட்டி நான் விளைச்சல் எடுத்திருக்க முடியும். ஆனால், கெடுக்கப்பட்ட நிலம் மீண்டும் தன்னைப் புதுப்பித்துக்கொள்ள முடியும்! என்பதை நிரூபிக்க முடியாமல் போயிருக்கும்’ என்று தன் அனுபவத்தைச் சொல்லி இருக்கிறார். 

அமெரிக்க வேளாண் துறை, 1948-ம் ஆண்டு வெளியிட்ட ஆண்டு மலரில் வெளியிட்டிருந்த சில விஷயங்கள் உங்கள் பார்வைக்கு:

அயோடின் பற்றாக்குறையால் கழுத்துப் பகுதியில் கழலை வருவது யாவரும் அறிந்ததே. மணற்பாங்கான நிலங்களில் அயோடின் பற்றாக்குறை காணப்படுகிறது. களி நிலங்களில் அயோடின் பற்றாக்குறை காணப்படவில்லை. அமில நிலங்களில் செடிக்கு அயோடின் எளிதாகக் கிடைத்துவிடுகிறது. உவர் நிலங்களில் அவ்வளவு எளிதாகச் செடிகளால் அதை எடுக்க முடிவதில்லை. 

தாவர மட்கு அதிகம் உள்ள இடங்களில் அயோடின் பற்றாக்குறை இல்லை.

சுண்ணாம்பு இடப்பட்ட நிலத்தில் காப்பர் சல்பேட் இடுவதால் காப்பரின் அளவு உயரவில்லை. இதிலிருந்து, உவர் நிலங்களில் செடிகளுக்குக் கிட்டும் வடிவத்தில் அது இல்லாமல் இருக்கலாம் எனத் தெரிய வருகிறது.

மண்ணில் உள்ள மாங்கனீசுக்கும் செடியில் உள்ள மாங்கனீசுக்கும் சம்பந்தமே இல்லை. மண்ணில், கிட்டும் நிலையில் (Available Form) மாங்கனீசு இல்லாமல் இருக்கலாம். குறிப்பாக, களர் நிலத்தில் இது மிகவும் பொருந்தும்.

அமில நிலமானாலும் உவர் நிலமானாலும் மண்ணில் இருப்பதைப் பொருத்தே செடியிலும் ‘மாலிப்டினம்’ காணப்படுகிறது. களர் நிலத்தில் உள்ள செடி, அதிகமான மாலிப்டினத்தை எடுத்துக் கொள்கிறது. சில செடி இனங்கள், கூடுதலாகவும் எடுத்துக் கொள்கின்றன. அமெரிக்காவில் மாடுகளில் மாலிப்டினம் நஞ்சு கலந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 

தாவர, விலங்குக் கழிவுகளை நிலத்தில் இடும்போது இயற்கையிலேயே அமிலங்கள் சுரக்கின்றன. இப்படிச் சுரக்கின்ற அமிலங்களால் செம்பு, அயோடின், மாங்கனீசு போன்ற தனிமங்கள் செடிக்குக் கிடைக்கின்றன. மாடுகளில் காணப்படும் மாலிப்டினம் நஞ்சும் மறைகிறது.

Sunday, December 7, 2014

கொள்ளை லாபம் தரும் தொழில்

        மனிதனின் ஆசையும் வாழ்க்கைமுறையும் எப்படியாவது பணம் சம்பாதித்து சமுதாயத்தில் மற்றவர் மதிக்கும் இடத்தில் இருக்கவேண்டும் என்ற நோக்கோடு கொள்கை கோட்பாடுகள் ஏதுமற்ற முறையில் பொருளீட்ட துணிந்து விட்டான். விவசாய நிலங்களை கூறு போட்டு இலவச தங்க நாணையங்கள் கொடுத்து கொள்ளை லாபம் பார்க்கும் நிலத்தரகர்களும், அவர்களைப்போன்றோரை சமுதயாத்தில் பெரியமனிதர்கள் என்று மதிக்கும் இன்றய காலநிலையில் ஊருக்கே சோறுபோடும் விவசாயமும் விவசாயியும் ஏழனமாக பார்க்கபடுகிறான்.

      நம் மேல் நாட்டு மோகமும் அறிவியல் என்ற பெயரில் எதை கொடுத்தாலும் சிந்திக்காமல் நம்பிவிடும் ஏமாளிகளை உருவாக்கிவைத்திருக்கும் இந்த சமூக கட்டமைப்பிற்க்கு அவ்வப்போது அதன் முகத்தை கண்ணாடிகொண்டு காட்டிவருகிறார்கள். அய்யா நம்மள்வார் இயற்க்கை வேளான்முறையில் செலவுகளை குறைத்து நல்ல சத்துள்ள உணவுப்பொருட்களை உருவாக்கும் முறைகளை பரப்புரைசெய்தும், வானகம் என்ற சோதனை பண்ணை மூலம் நீரூபித்து. காண்பித்துள்ளார். அது போலவே புதுச்சேரியில் இருக்கும் ஆரோவில் என்ற இடத்தில் இயற்க்கை சார்ந்த முறையில் கிருஸ்ணா என்ற விற்ப்பன்னர் செய்துகாட்டும் இந்த ஒளிப்பதிவு நிச்சயம் பார்க்கவேண்டிய ஒன்று. எதையுமே வெள்ளைக்காரர் சொன்னால்தான் கேட்பேன் என அடம்புடிக்கும் நம்மவர்களுக்கு இந்த காணொளியை காண்பியுங்கள்.

ஆரோவில் பற்றிய தகவலுக்கு : http://www.auroville.org/


என்னாடுடைய இயற்க்கையே போற்றி - 5


(என்னாடுடைய இயற்க்கையே போற்றி. இயற்க்கை வேளான் ஆசான் ஐய்யா நம்மழ்வாரின் கட்டுரைத்தொடர் - விகடன் பிரசுர வெளியீடு)

இயற்கையாகவே வளர்வதுதான் நோய் எதிர்ப்புச் சக்தி!

பிடித்துக் கொல்... பிடுங்கி அழி...' (Catch and kill, Pull and destroy) - நான் வேளாண் கல்லூரியில் படித்த சமயத்தில், எங்கள் பேராசிரியர்கள் இந்த வசனத்தை எங்களிடம் அடிக்கடி சொல்வார்கள். அதாவது, பூச்சியாக இருந்தால் பிடித்துக் கொன்றுவிட வேண்டும். நோய் வந்தால் செடியைப் பிடுங்கி அழித்துவிட வேண்டும். 

இது அவர்களின் சொந்தக் கருத்தல்ல... ஆங்கிலேயர்கள் நம் நாட்டை ஆண்ட காலத்தில், அவர்களுடைய விஞ்ஞானிகள் இங்கே பதியம் போட்டுச் சென்றவற்றில் இதுவும் ஒன்று. அவை, நமது விஞ்ஞானிகளின் மூளைகளை இன்னமும் ஆக்கிரமித்துக்கொண்டு இருக்கின்றன என்பது தான் வேதனை! 

பொதுவாக மிளகாய், தட்டை, தக்காளி, துவரை... போன்ற செடிகளை வைரஸ் தாக்குவது உண்டு. அப்படித் தாக்கப்பட்ட செடியின் இலைகள், சிறுத்து ரோசாப் பூ போல அடுக்கடுக்காக காட்சி அளிக்கும். இதனை 'சிற்றிலை நோய்' என்றும் சொல்வர். உயிருள்ள நிலையிலும், உயிரற்ற நிலையிலும் வாழும் திறன் வைரஸுக்கு இருப்பதால், அது தாக்கியச் செடியைக் காப்பாற்று வதற்கு வழி இல்லை. அதனால்தான் நோய் தாக்கியச் செடிகளை அகற்றி, வேலிக்கு வெளியில் போட்டு மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைக்கச் சொல்கிறார்கள். அப்படிச் செய்யாவிட்டால், மற்ற செடிகளுக்கும் நோய் தொற்றிவிடும் என்றும் பயமுறுத்துவார்கள். ஆனால், இயற்கை வழி விவசாயிகள் இதை ஒப்புக்கொள்வதில்லை. மனிதர்களானாலும் சரி, தாவரங்களானாலும் சரி, அவர்களைப் பொருத்தவரையில் நோய் தொற்று என்பதே கற்பனையான விஷயம்தான்.

என்ன அதிர்ச்சியாக உள்ளதா? ஆனால், அதுதான் உண்மை!

ஒரு முறை இயற்கை மருத்துவர் வெள்ளிமலையுடன் பேசிக்கொண்டு இருந்தேன். அப்போது, ‘நோயுற்றவர்கள், தண்ணீர் குடிக்க வேண்டுமா..? வெந்நீர் குடிக்க வேண்டுமா?' என்று என்னிடம் கேள்வி எழுப்பினார். நான், ‘நோயுற்றவர்களுக்கு சுட வைத்து ஆற வைத்தத் தண்ணீரைத்தான் குடிக்கத் தருகிறார்கள்’ என்றேன்.

மீண்டும் அவர், ‘தண்ணீரைச் சுட வைக்கும்போது என்ன நடக்கிறது?’ என்றார். ‘தண்ணீரில் உள்ள கண்ணுக்குத் தெரியாத கிருமிகள் இறந்துபோகின்றன’ என்றேன்.

அவர் விடவில்லை. ‘செத்துப்போன கிருமிகள் அப்போது தண்ணீரில்தானே இருக்கும்... அப்படியானால், கிருமிகள் உள்ள தண்ணீரைக் குடிப்பது நல்லதா? கிருமிகளின் பிணங்கள் உள்ள தண்ணீரைக் குடிப்பது நல்லதா?’’ என்றார். 

என்னால் பதில் சொல்ல முடியவில்லை. தொடர்ந்து விளக்கிய வெள்ளிமலை, ‘அம்மை அல்லது காலராவுக்காக தடுப்பூசிகள் போடப்படும்போது, நோயை உண்டு பண்ணக்கூடிய கிருமிதான் சிறிய அளவில் உடலுக்குள் செலுத்தப்படுகிறது. அந்தக் கிருமி உடலுக்குள் புகுந்ததும் பெருகி, அங்கே ஏற்கெனவே இருக்கும் நோய்க்குக் காரணமானக் கிருமிகளுடன் போரிட்டு, அவற்றை வெளியே அனுப்புகின்றன. இதேபோலதான் தண்ணீரிலும். கிருமிகள் உள்ள தண்ணீரைப் பருகும்போது உடலில் எதிர்ப்புச் சக்தி வளருகிறது. கிருமியைக் கொன்ற பிறகு எதிர்ப்பாற்றல் வளராது அல்லவா?’ என்றார்.

தொடு மருத்துவத்தைக் கையில் எடுத்து இருக்கும் இன்னொரு மருத்துவர், முற்போக்கு எழுத்தாளர் உமர் ஃபாரூக். அவருடைய புத்தகத்தில் இருந்து வரலாற்றுக் குறிப்புகள் சிலவற்றைப் பார்ப்போம். 

டாக்டர். ஆண்டனி பீச்சாம், மிக நுண்ணிய உயிர்கள் மனித உடலில் இருப்பதை, ஓர் ஆய்வின்போது கண்டுபிடித்தார். அவற்றுக்கு 'மைக்ரோ சைமாஸ்' என்று பெயரிட்டார். இதையடுத்து, 1864\ம் ஆண்டு லூயி பாஸ்டர் என்பவர், ‘ஒவ்வொரு கிருமியும் ஒவ்வொரு நோயை ஏற்படுத்தும் சக்தி படைத்தது. இவை காற்று, நீர் போன்றவை மூலமாக உடலினுள் நுழைகின்றன’ என்று அறிவித்தார். ஆனால், முதலில் கிருமிகளைக் கண்டுபிடித்த ஆண்டனி பீச்சாம், இதை முற்றிலுமாக மறுத்தார். 'ஒரு மாமிசத் துண்டை காற்றுப் புகாத கண்ணாடிப் பெட்டியில் வைத்தால், பல மணி நேரங்கள் கழித்து அது அழுகி நோயுற்று கிருமிகளுடன் காணப்படுகிறது. காற்றின் வழியே கிருமிகள் வருகின்றன என்றால், காற்றே புகாத இந்தப் பெட்டிக்குள் எப்படி கிருமிகள் வந்தன' என சவால் விடுத்தார் பீச்சாம்.

'உடலில் தேங்கி இருக்கும் கழிவுப்பொருட்களில் இருந்துதான் கிருமிகள் உருவாகின்றன. இவை, கழிவுகளை உணவாக உட்கொண்டு உடலுக்கு நன்மை செய்கின்றன. ஒரு கட்டத்தில் கழிவுகள் தீர்ந்தால், கிருமிகள் தானே அழிந்துவிடுகின்றன' என்று சில டாக்டர்கள் விளக்கம் அளித்தார்கள். 

டாக்டர் ரேடர்மண்ட் விஸ்கான், அம்மைக் கிருமிகளை அதிகளவில் ஊசி மூலம் ஏற்றிக்கொண்ட போதும், அவர் உடலில் எந்தவிதத் தீய விளைவும் ஏற்படவில்லை. 1892-ம் ஆண்டு டாக்டர் பெட்டின் காப்பர் என்பவர், கிருமிகளை தன் உணவில் கலந்து உட்கொண்டபோதும் ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை. லூயி பாஸ்டர் மரணப் படுக்கையில் இருந்தபோது, ‘உடல்தான் எல்லாமே. கிருமிகள் ஒன்றுமில்லை' என்று தன்னுடைய முந்தைய ஆய்வுகளுக்கு எதிரான கருத்தை அவரே வெளியிட்டார். 

அந்த மாதிரியான சமயத்தில்தான், சாமுவேல் ஹானிமன் என்பவர், ‘கிருமிகளால் நோய்கள் வருவதில்லை’ என்று சொல்லி, ஹோமியோபதி மருத்துவத்தை உலகுக்கு அறிமுகப்படுத்தினார். ஆனாலும், ‘கிருமிகளால்தான் நோய் வருகிறது’ என்று பயமுறுத்தி, இன்னமும் காலாவதியாகிப்போன கோடிக்கணக்கில் மதிப்புள்ள ரசாயன நச்சு வில்லைகளை (மாத்திரைகளை) விற்றுக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

வேளாண்மைக் கல்லூரியில் படித்து, விவசாயிகளுக்குத் தவறான ஆலோசனையை வழங்கிவந்து, பின் இயற்கை விவசாயத்துக்கு மாறியவர் எட்வர்டு எச்.ஃபால்ட்னர். பல ஆண்டுகளாக இயற்கை வேளாண்மை செய்துவரும் இவர், ‘மண் புனரமைப்பு’ என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். அதில், ஃபால்ட்னரின் தோட்டத்து வழியாகச் சென்ற விவசாயி ஒருவருக்கும் ஃபால்ட்னருக்கும் இடையே நடந்த உரையாடல் இப்படி எழுதப்பட்டு இருக்கிறது. 

விவசாயி: மற்றவர்கள், பீன்ஸ் செடியில் பூச்சிகளை ஒழிக்க நஞ்சுகளைத் தெளிக்கிறார்களே, நீ ஏன் தெளிக்கவில்லை? 

ஃபால்ட்னர்: என்னுடையச் செடிகளில் பாதிப்பு இல்லை. 

விவசாயி: வண்டு, உன்னுடையத் தோட்டத்துக்கு மட்டும் வரவில்லையா? 

ஃபால்ட்னர்: வண்டு வருகிறது. என்னுடையச் செடியை உண்பதற்கு வண்டுக்கு பிரியம் இல்லை. அதனால் திரும்பிப் போய்விடுகிறது.

இதற்கு என்ன காரணம் என்று இருவரும் ஆராய்ந்தபோது, 'இயற்கை வழி சாகுபடி மூலம் நிலத்தில் தாது உப்புக்கள் அதிகரிப்பதால், பூச்சிகளுக்குப் பிடிக்கவில்லை. ஆனால், தழைச் சத்துக்காக, ரசாயன உப்புக்களைக் கொட்டும்போது தாது உப்புக்கள் குறைவதால், பூச்சிகள் விரும்பி உண்கின்றன' என்று கண்டுபிடித்திருக்கிறார்கள்.

இன்று 'வானகம்' இயற்கை வேளாண் பண்ணையிலும் இதேபோன்று ஒரு நிகழ்வை பார்க்கிறோம். மேட்டுப் பாத்திகளில் நிறைய மூடாக்குகளை இட்டு கத்திரி மற்றும் மற்ற செடிகளையும் கலப்பாக பயிரிட்டோம். அவற்றில் ஒரு கத்திரிச் செடியில் 'சிற்றிலை நோய்' வந்தது. அதனைப் பிடுங்கினால், மற்றச் செடிகளுக்கு நோய் எதிர்ப்பாற்றல் வராமல் போய்விடுமென்று, பிடுங்காமல் அப்படியே விட்டுவிட்டோம். 

எதிர்பார்த்தது போலவே நடந்தது. பக்கத்துச் செடிகளுக்கு நோய் தொற்றவில்லை. இன்னும் கண்காணித்துக்கொண்டு இருக்கிறோம். இதேபோல்தான் துவரையிலும். இந்த நிலங்களை இயற்கை வழிக்கு மாற்றி ஓராண்டுகூட ஆகவில்லை. மேட்டுப்பாத்தி, கழிவுகள், மூடாக்கு, இயற்கை இடுபொருட்கள், பல்வகைச் சூழல் என அனைத்தும் சேர்ந்து செடிகள் அனைத்தும் ஆரோக்கியமாக இருக்கின்றன.