Monday, November 28, 2016

பிடல் - 1

தற்கால அரசியலை புரிந்து கொள்ள, கடந்த கால வரலாற்றை சிறிது திரும்பிப் பார்ப்பது உதவியாய் இருக்கும். ஐரோப்பாவிலிருந்து கிருஸ்டோபர் கொலம்பஸ் 1492ல் அமெரிக்கக் கண்டத்தை அடைந்த பொழுதிலிருந்து தொடங்குகிறது அந்த அரசியல் வரலாறு. வணிக மற்றும் மதப் பரவலாக்கத்திற்காகவே ஆரம்ப கால கடலோடிகளின் புதிய நாடு கண்டுபிடிப்பின் நோக்கமாக இருந்திருக்கிறது. இத்தாலியரான கொலம்பஸின் அமெரிக்கக் கண்டுபிடிப்பிற்குப் பிறகு ஐரோப்பாவிலிருந்து அமெரிக்காவிற்கான கடல் பயணம், நாடு பிடித்தல், வணிகம் போன்ற நடவடிக்கைகள் அதிகமானது.இங்கிலாந்து, ஸ்பெயின், பிரெஞ்சு, போர்ச்சுகீசியர்கள் அதிக அளவில் அமெரிக்காவில் காலணி(குடியேற்றம்) அமைத்து அமெரிக்க மண்ணில் காலூண்றத்தொடங்கினர். வட அமெரிக்கா பெரும்பாலும் ஆங்கிலேயர்களால் ஆக்கிரமிக்கப்பட்டது. தென்னமெரிக்கா ஸ்பெயின், போர்ச்சுகீசயர்கள், பிரெஞ்சுக்காரர்களால் ஆக்கிரமிக்கப்பட்டது. பின்பு காலணி அமைத்தவர்கள் தங்கள் தாய்நாட்டிலிருந்து பிடியை விலக்கி சொந்தமாக தனி நாடாக உருவெடுத்து தங்கள் சுதந்திரத்தை அறிவித்துக் கொண்டனர். அமெரிக்காவின் அருகில் இருந்த ஸ்பெயினின் ஆட்சிக்குட்பட்ட கியூபாவில் அமைதியில்லாமல் அரசியல் குழப்பம் நிலவியதால் அமெரிக்க தலையிட்டு ஆட்சியதிகாரத்தை மறுசீரமைக்க கேட்டது. ஸ்பெயினும் இதோ செய்து விடுகிறோம், இதோ செய்து விடுகிறோம் என்று காலம் கடத்தியதே தவிர, செயலில் இறங்கவில்லை. அதே நேரத்தில் ஹவனா துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த அமெரிக்கக் கப்பல் மர்மமான முறையில் மூழ்கியதால் கோபமடைந்த அமெரிக்கா ஸ்பெயினுடன் போரில் இறங்கியது. போரில் வென்ற அமெரிக்கா 1898ல் கியூபா, போர்டோ ரிகோ, குவாம், பிலிப்பைன்ஸ் தீவுகளை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது. கியூபாவை அமெரிக்கா ஒரு சர்கரை உற்பத்தித் தொழிற்சாலையாகவே பார்த்தது. கியூபாவின் மீதான அமெரிக்காவின் அக்கரை அதன் வணிக நலன்கள் சார்ந்ததாகவே இருந்தது.

மஞ்சள் காய்ச்சல் என்னும் கொள்ளை நோய் கியூபாவில் பரவ அது அங்கு அமர்த்தப்பட்டிருந்த அமெரிக்கப்படைகளை கடுமையாக தாக்கி பெரும் உயிரிழப்பை ஏற்படுத்தியது. அதன் விளைவாக சிறிய கறுப்பின படைக்குழுவை மட்டும் நிறுத்திவிட்ட மற்றவர்களை திரும்ப அழைத்துக் கொண்டது. கறுப்பினத்தவருக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருப்பதால் கொள்ளை நோயை சமாளித்து அங்கு பாதுகாப்புப் பணியில் இருப்பார்கள் என்ற அடிப்படையில் அப்படிச் செய்தது அமெரிக்கா. பிறகு 1902ல் கியூபா அமெரிக்காவிடமிருந்து விடுதலை அடைந்தது.

அமெரிக்கா விடுதலை அளித்திருந்தாலும், அடுத்த இருபது ஆண்டுகள் தொடர்ந்து கியூபாவின் உள்விவாகரங்களில் தலையிட்டு ராணுவ மற்றும் அரசியல் நடவடிக்கைகள் மூலம் தன் அதிகாரத்தை நுழைத்து வந்தது. அமெரிக்கா தன் விசுவாசியான அதிபர்களை நாடாளவிட்டு அதன் மூலம் கியூபாவின் விவசாய விளைபொருட்கள், நிலம் மற்றும் வளங்களை கொள்ளையடித்துக் கொண்டிருந்தது.

1958ல் பிடல் காஸ்ற்றோவின் முன்னெடுப்பில் உருவான புரட்சியால் அதிபர் பாடிஸ்டாவுடனான ஆயுதப் போரில் வெற்றி பெற்று பிடல் நாட்டைக் கைப்பற்றினார். பாடிஸ்டாவின் அரசிற்கு ஆயுதம் விற்றுவந்த அமெரிக்க தனது முடிவை மாற்றிக்கொண்டது பாடிஸ்டாவின் தோல்விக்கு முக்கியமான காரணம் எனவும் சொல்லப்படுகிறது.


(தொடரும்)


Tuesday, November 15, 2016

ஊர் சேர்ந்தாகிவிட்டது

வானூர்தி மயக்கம்(ஜெட் லேக்) தெளிந்து பின்னிரவில் எழுதுகிறேன். மும்பை, சென்னை, கோவை பிறகு புளியம்பட்டி என எங்கும் மோடியின் வித்தை பல்லிளிக்கிறது. கோவையிலிருந்து வரும் 45 கிமீ நெடுஞ்சாலைப் பயணத்தில் வழியிலிருக்கும் ஒவ்வொரு தானியங்கி காசுவழங்கி எந்திரங்கள், வங்கிக் கிளைகள் அனைத்தும் மக்கள் வரிசை, மக்களிடம் வாழ்க்கைப் போராட்டத்தைவிட இதை ஒரு மன தைரியத்துடனேயே அனுகுகிறார்கள். பார்ப்பவர் அனைவரிடமும் வருத்தமும், குழப்பமும் நிலவுகிறது.
உள்ளூர்க்காரர்கள் பெரும்பணக்காரர்கள் விழி பிதிங்கி நிற்பதை ரசிக்கிறார்கள், வரவேற்கிறார்கள். தங்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கலைவிட ஏதோ கள்ளப்பணத்தை அழிக்க மோடி பெரும் முயற்சி எடுத்துள்ளதாக கருதுகிறார்கள், அகமகிழ்கிறார்கள்.
சன் மற்றும் இதர செய்தித் தொலைக்காட்சிகளே தொடர்ந்து மக்கள் சிக்கலை மோடிக்கு எதிராக செய்தியாக வைக்கின்றன. உண்மையான செய்தி மற்றும் சிக்கலின் விளைவு, எப்படி பெருமுதலாளிகள் குறிப்பாக வடவிம்திய முதலாளிகள் பயனடையப்போகிறார்கள் என்று முதன்மைத் தொலைக்காட்சி நேரத்தில் பேசுவதாய்த் தெரியவில்லை.
வானூர்தி நிலையத்தில் காவலர்கள் வெளிநாட்டு காசு மாற்றும் நிறுவன ஊழியர்களிடம் லேசாகக் கேட்டுப்பார்க்கிறார்கள், 500 க்கும் 1000க்கு சில்லரை கிடைக்குமா என்று. உள்ளிருக்கும் தானியங்கி காசுவழங்கிகள் பெரும்பாலும் கூடமில்லாமல் இருக்கிறது. சென்னையில் வானூர்தி நிலையத்திற்குள் தேனீர் மற்றும் வடையை வண்டியில் விற்கும் ஒரு நபர் 500, 1000 த்தை வாங்கிக் கொள்கிறார். வானூர்தி நிறுவன ஊழியர்கள் மற்றும் காவலர்களே அவரது வாடிக்கையாளர். எப்படி காசை மாற்றுகிறார் என்றெல்லாம் தெரியாது, ஆனால் செல்வாக்கானவர்போலவே இருக்கிறார்.
அருகிலிருக்கும் கிராமத்தில் செயல்படும் தனியார் வங்கிக் கிளை மேலாளலருடன் பேசுகயில், பணப்பட்டுவாடா மைய அரசின் ஒருமுகமாக்கப்பட்ட இணையத்தில் பதியப்படுவதாகவும், ஒரு நபரின் தனி அடையாளத்தை வைத்து எத்தனை பணமெடுக்கிறார், போடுகிறார் என்பதை எளிதாக வங்கி வேறுபாடு கண்டுகொள்ள முடியும் என்று கூறினார். மேலும் வங்கிக் கிளைகள் வழக்கமாக பெரும் பணத்தைக் கையாளும் நூற்ப்பாலை மற்றும் இதர அதிமதிப்புக் கொண்ட வாடிக்கையாளருக்கு பணத்தட்டுப்பாடு இல்லாமல் பார்த்துக்கொள்வதாகவும், ஒவ்வொரு நாளும் அடுத்த நாளின் பணத்தேவையை முன்கூட்டியே ஊகித்து சொல்லிவிடுவதாகவும், அதைப்பொறுத்தே அடுத்த நாள் அவர்களுக்கு காசு வழங்கப்படுகிறதாகவும் சொன்னார். நண்பர்கள் திருமண ஏற்பாடுகளிலும், புதியவீடு கட்டுவதிலும் இருப்பதால் பணச்சிக்கல் அவர்களை வைதைக்கிறது. கட்டுமான நிறுவனம் காசாக மட்டுமே கேட்கிறது. இத்தனைக்கும் முதலாளி பிஜெபியில் பொறுப்பில் இருப்பவர்.
வங்கிகள் விரைவில் மூடப்பட்டுவிடுகிறது. ஊழியர்களின் களைப்பைப் பார்க்க முடிகிறது. ஊருக்குச் செல்வதால் அண்டைவீட்டு ஆந்திர நண்பர்கள் சிலர் கொண்டுவந்திருக்கும் 500, 1000ம் தாள்களை மாற்றி வரக்கேட்டுள்ளுனர். மோடி வித்தையிலிருந்து எப்படி தப்பித்து மாற்றலாம் என்று யோசித்துக் கொண்டுள்ளேன்..... வெயிட்... மொத்தத் தொகையே 20000க்கும் குறைவுதான்.

Thursday, November 10, 2016

செல்லாக்காசு

500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுக்களை செல்லாததென அறிவித்தது பொதுப்படையாக வரவேற்கப்பட வேண்டியது. ஆனால் அதன் சாதக பாதகங்களை அளவிட்டால் இது குளோபலைசேசன் என்ற உலகமயமாக்கல் போல், இந்தியமயமாக்கல் குறிப்பாக வட இந்திய வர்த்தக நிறுவனங்கள் தமிழகத்தில் காலூன்ற வழியேற்படுத்தும் அதன் பின், உலக நிறுவனங்கள் அவர்களுடன் கைகோர்த்து இது வரை உடைக்க முடியாத உள்ளூர் சந்தையை உடைத்து தங்கள் வணிக வலையை விரித்து இலாபமீட்டமுடியும்.
உதாரணத்திற்கு, வால்மார்ட். தமிழக அரசு ஒரு வகையில் அந்நிய சில்லரை வணிகக் கடைகளுக்கு தடை விதித்திருந்தாலும், அவர்கள் குறிப்பிட்ட அளவு இலாபத்தை மற்ற மாநிலங்களில் கூட அடையாமல் கைவிட்டுவிட்டு சென்றனர். அப்போது அவர்கள் கூட்டு வைத்தது ஏர்ட்டெல் மிட்டலுடன். தோல்விக்கு முக்கியக்காரணம் உள்ளூர் சிறு வணிகர்கள் மற்றும் வாடிக்கையாளர் உறவு மற்றும் வணிகக் கலாச்சாரம்.
இப்போது சரவணா ஸ்டோர்சையும், சென்னை சில்க்ஸ், சரவணபவன் போன்ற உள்ளூர் நிறுவனங்களை எடுத்துக்கொள்வோம். அவர்கள் வணிகம் முற்றிலும் வங்கிப் பரிவர்த்தனை மற்றும் சரியான கணக்குகளின்படி இயங்குவதில்லை என்பது அந்த வணிகத்தை அறிந்தவர்களுக்குத் தெரியும். அரசுக்குக் கணக்குக் காட்டுவதைவிட பல மடங்கு அவர்களின் வர்த்தகம் இருக்கும். காரணம் பெரும்பாலன விற்பனை காசாக கையாளப்படுகிறது. இந்த நிறுவனங்கள் எப்போதும் பெரும் தொகையை காசாக வைத்திருக்கும். ஊழியர்களுககு சம்பளம் முதல், உள்ளூர் உற்பத்தியாளர்களிடம் கொள்முதல் என்று அனைத்துமே காசாகத்தான் கையாளப்படுகிறது. மோடியின் இந்த உத்தரவால் இவர்களுக்குப் பெரும் அடி விழுந்திருக்கும். இதிலிருந்து மீண்டுவர வெகு நாட்களாகும்.
இந்தச் சந்தர்ப்பம், வட நாட்டு மார்வாடிகள், வியாபாரிகளுக்குப் பெரும் வாய்ப்பாக அமையும். புதிய முதலீடுகளை அவர்கள் வெள்ளைப்பணமாகவே கொண்டுவந்து முதலீடு செய்ய வாய்ப்பு அதிகம். அப்படி நேருகையில் ரிலையன்ஸ் டிரெண்ட், பிக் பஜார் போன்ற நிறுவனங்களும், வால்மார்ட் போன்ற வெளிநாட்டு நிறுவங்களும் தங்கள் கடைகளைத் திறக்க வழியேற்ப்படும். குறைந்த காலத்தில் உள்ளூர் வியாபரிகளின் சவாலில்லாமல் சந்தையைப் பிடித்து நிலைகொண்டுவிடுவர்.
நலிவடைந்த உள்ளூர் நிறுவனங்கள் பழைய நிலைக்கு வருவதற்குள் அவர்களின் சந்தை கைமாறியிருக்கும். முடிவில் சந்தை உள்ளூர்க்காரர்களிடம் இருந்து வெளி மாநிலத்தவரிடம் சேர்ந்திருக்கும்.
இதற்கு முக்கியமான காரணம் உள்ளூர் வணிகர்கள் தங்களை இந்தச் சவாலுக்கு தயார்படுத்திக் கொள்ளாதது. பெரு நிறுவனங்ள் பங்குகள் மூலம் கருப்பை வெள்ளையாக்கி ஒழுங்குபடுத்தப்பட்ட நிறுவங்னங்கள் மூலமாக சந்தையைக் கைப்பற்றுவர். அவர்கள் ஒன்றும் வரியை முழுவதுமாக கட்டிவிடப்போவதில்லை. அதற்கும் ஓட்டைகளை வைத்தே இந்த சிஸ்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
ஆக.. செல்லாக்காசனது உள்ளூர் வணிகர்களே.

சொர்கமே என்றாலும்

மூன்றாண்டுகளுக்குப் பின் தாயகம் நோக்கிப் பயணம். பெரிதாக எந்த திட்டமிடலும் இல்லை. தொலைவும் காலமும் ஊர்மீதும், உறவுகள் மீதும் அன்பை அதிகப்படுத்தியுள்ளது. தீர்க்கப்பட வேண்டிய விடுப்புகள் கண்முன்னே நின்றதும் எதேச்சையாக அமைந்த பயணம். நான்கு வாரங்கள், பிள்ளைகளை பிரிந்திருப்பது கவலையென்றாலும் சிறு பிரிவுகள் உறவுகளை பலமாக்கும் என்ற நம்பிக்கையில் பயணத்தை தொடர்கிறேன்.

சென்றமுறை ஊர் சென்றது தந்தையாரின் உடல்நலச் சீர்க்கீட்டால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது அவசர அழைப்பாகச் சென்றது. மருதமலை முருகன் அருளால் மீண்டு வந்துவிடடார். ஆனால் மருந்துகளால், படுக்கையிலேயே வாழ்கிறார். இப்போது பார்த்தால் மகிழ்ச்சியடைவார், ஆனால் பெயரன் பேத்தியைத் தேடும் கண்களுக்கு என்னிடம் பதிலில்லை.

நான்கு நாட்கள் நண்பன் ஹரியுடன்  தில்லி, ஆக்ரா, ராஜஸ்தான் சுற்ற திட்டம். பயணம், விடுதி அனைத்தும் திட்டமிடப்பட்டுவிட்டது . தில்லியில் பாராளுமன்றத்தைப் பார்வையிட எண்ணமெழுந்தபின் அனுமதி பற்றி தேடியபோது, பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் அனுமதி பெற்றுத்தரவேண்டும் என்று தெரிய வந்தது. நண்பர் அப்துல்லாவிடம் உதவி கேட்டுள்ளேன். அனுமதி கிடைக்குமா என்று தெரியாது ஆனால் ஆவலாக உள்ளேன்.

முகநூலில் பயணம் குறித்த குறிப்பிற்கு நண்பர் முருகானந்தம் தாராபுரம் வர அழைத்துள்ளார். சந்திக்க ஆவல். அப்துல்லா சென்னை வந்தால் சந்திக்க விருப்பம் தெரிவித்துள்ளார். அவரையும் சந்திக்க வேண்டும். முன்பொருமுறை உரையாடுகையில் பிரியாணி விருந்தோம்பல் குறித்து தெரிவித்ததால், அதைக்குறித்து பதிலளித்திருக்கிறேன். நல்ல நண்பர்.

கல்லூரி நண்பர்களை சந்திக்கும் திட்டத்தை நண்பன்  ராமகிருஸ்ணனிடம் தெரிவித்துள்ளேன். கூர்க் பயணம் அவர்களுடன் செல்லாத் திட்டம். இல்லையென்றால் நண்பர்களை அவர்களின் ஊரிலேயே சந்திக்கத் திட்டம். 98க்குப் பிறகு கல்லூரி  நண்பர்களைச் சந்திப்பது உற்சாகமாக இருக்கிறது.

பாரதியார் பல்கலை நண்பர்களை சந்திக்க வேண்டும். திட்டமேதுமில்லை, ஊர் சென்றதும் தொலைபேசி சந்திப்புக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

பேரூர், கோவை அருங்காட்சியகம், கீழடி, மதுரை, கண்ணகி கோவில், கர்நாடகாக் கலைக் கோவில்களையும், ஊட்டி ரயில் பயணத்தையும் திட்டமிட்டுள்ளேன்.

முக்கியமாக ஊர் வரலாற்றை ஆவணப்படுத்த எண்ணியுள்ளேன். அடுத்த தலைமுறைக்கு ஊரின் சுவடுகள் தெரிய உதவும். பெரும் நிகழ்வுகள் எதுவும் இல்லையென்றாலும் ஊர் தன்னை எப்படி வளர்த்துக்கொண்டுள்ளது, என்னென்ன மாற்றங்களையெல்லாம் கண்டுள்ளது என்று காலத்தின் சாட்சியாக வாழும் மனிதர்களின் அனுபவங்கள் வழியாகப் பதிவது சரியாக இருக்கும் என்றே நினைக்கிறேன்.

Wednesday, November 9, 2016

டிரம்ப் எனும் குழப்பம்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு பதிவு. இனி  தொடர்ந்து எழுத எண்ணம். 

பெரும் எதிர்பார்ப்பிற்குப் பின் அமெரிக்கத் தேர்தல் முடிவுகள் அமெரிக்க வாழ் இந்தியர்களிடையே ஏற்படுத்தியுள்ளது. டெமோக்ரட்டுகளாக தங்களை உணரும் இவர்கள் ரிபுபலிக்கன்களின் கொள்கைகளுக்கு எதிராகவும், தங்கள் சார்ந்த கட்சி உலக அமைதிக்கு படுபடுவதாகவும் நம்புகிறார்கள். இதில் எனக்கு மற்றுக்  கருத்துண்டு. பொதுவாக அமெரிக்க சமூகம் முதலாளித்துவ சிந்தனை  கொண்டது.அதாவது தனி மனித உழைப்பை வைத்து பொருளாதாரத்தை கடடமைப்பதை விட மனித உழைப்பு மிகுந்த நாடுகளில் முதலீடு செய்து இலாபம் ஈட்டுவது. உள்நாட்டில் தங்களுக்கு சேவை செய்ய ஒரு மக்கள்  கூட்டம்  இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் அதிகம்.

ஆசிய  நாட்டு மக்களின், குறிப்பாக இந்தியர்களின் உழைப்பு அமெரிக்க வேலை வாய்ப்பை அதிகம் எடுத்துக்கொள்வதாகக் கருதுகிறார்கள். ஒருவகையில் உண்மை என்றாலும் அந்த உழைப்பு அமெரிக்காவிற்குத் தேவை. அதனால் டிரம்ப் சொன்னதுபோல் அந்த வேலை வாய்ப்புகளை எப்படி அமெரிக்கர்களுக்கு அளிக்கப்போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

அதே போல் ஆவணப்படுத்தப்படாத ஸ்பானிஸ் பேசும்  தென்னமெரிக்கர்களை  டிரம்ப் வெளியேற்றப்போவதாக தனது பரப்புரையில் அறிவித்திருந்தார். ஆனால், அவர்கள் தான் கிழ்மட்ட வேலைகளான வீட்டு வேலைகள், கட்டட வேலைகள், சாலையமைப்பது, புல்வெளியைப் பராமரிப்பது போன்ற வேலைகளை செய்கின்றனர். அவர்களில்லாமல் இந்த வேலைகளை யார் செய்வார்? இந்த வேலைகளை செய்வதற்காகவல்லவோ  அவர்களை ஆவணமில்லாமல்   வாழ அனுமதித்து  அவர்களின் உழைப்பை சுரண்டிக்கொண்டுள்ளனர்.

மொத்தத்தில் டிரம்ப்பின் வேற்றி,  தெளிவில்லாத எதிர்காலத்தையும், நிறைவேறாத கனவுகளை அமெரிக்கர்களிடையேயே ஏற்படுத்தியுள்ளது. சந்தை தேர்தல் முடிவை வரவேற்கவில்லை. அடுத்த சில நாட்களுக்கு இதே நிலைதான் தொடரும் என்று நினைக்கிறேன்.

முகநூலில்  பகிர்ந்த கருத்துக்கள் ....


டிரம்பின் வெற்றியால் அமெரிக்காவை நம்பியிரும் கணினித்துறையினர் வேலை வாய்ப்பை இழப்பர் என்று இன்பமும், கவலையும் அடையும் நண்பர்களுக்கு..
இந்தியர்கள் கணினித்துறையில் சிறந்த அடிமைகள்.. அவர்களை மிஞ்சும் அடிமைகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. கணினி நிறுவனங்கள் கடைந்தெடுத்த கில்லாடிகள். டிரம்பின் நடவடிக்கைகளைச் சமாளிக்க சட்ட மற்றும் அரசியல் நகர்வுகள் ஏற்கனவே ஆரம்பித்துவிட்டது. ஆகவே...
கவலையடைபவர்கள் நிறுத்திக்கொள்ளுங்கள்....
See More
LikeShow more reactions
Comment


வெற்றி பெற்றது டிரம்பல்ல, ஜூலியன் அசாஞ்சே என்ற கைதி...
இம்பெர்மேசன் ஈஸ் வெப்பன்..


டிரம்பின் வெற்றியால் அமெரிக்காவை நம்பியிரும் கணினித்துறையினர் வேலை வாய்ப்பை இழப்பர் என்று இன்பமும், கவலையும் அடையும் நண்பர்களுக்கு..
இந்தியர்கள் கணினித்துறையில் சிறந்த அடிமைகள்.. அவர்களை மிஞ்சும் அடிமைகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. கணினி நிறுவனங்கள் கடைந்தெடுத்த கில்லாடிகள். டிரம்பின் நடவடிக்கைகளைச் சமாளிக்க சட்ட மற்றும் அரசியல் நகர்வுகள் ஏற்கனவே ஆரம்பித்துவிட்டது. ஆகவே...
கவலையடைபவர்கள் நிறுத்திக்கொள்ளுங்கள்.
இன்பமடைவர்கள் இப்படியே எப்போதும் இன்பமாக இருக்க இறைவன் உங்களுக்கு வாய்ப்பளிக்கட்டும்... டும்.. டும்..

Me: Trump won the Election.
Son: Rolling his eyes and said, "No"
Daughter: "No.. I want Hillary to Win", then after two seconds she glanced me top to bottom and threw this to me, "Did you vote for Trump?" as if my vote gave Trump victory...
இன்னுமா இந்த உலகம் நம்மல நம்புது..


தேர்தல் முடிவுகளுக்கு இடையில் அமேசானின் விளம்பரம் ஒன்று,
தேர்தல் முடிவுகளைக் கவனிக்கும் இளைஞர் ஒருவர் அமேசானின் எக்கோவிடம் "அலெக்சா, கனடாவுக்கு ஒருவழிப்பயணச் சீடொன்றுக்கு கட்டணம் எத்தனையென்று கயாக்கிடம் கேட்டுச்சொல்." என்று உரையாடுகிறார்.

#JustAsk when you need to get away from it all. Get information, music, weather and more with the all-new Echo Dot, only $49.99.
M.YOUTUBE.COM
குடியரசுத் தலைவர் டிரம்பு - விளைவாக
1. சந்தை சிறிது காலம் கீழ் நோக்கிச் செல்லும். முக்கிய நாடுகளுக்கிடையிலான வர்த்தக ஒப்பந்தங்களில் தெளிவான அறிவிப்பு வெளிவரும்வரை.
2. ஒபாமா கேர் ஒழிக்கப்பட்டுவிடும். காப்பீடில்லாமல் கைவிடப்படுவோர் எண்ணிக்கை உயரும்.
3. உள்ளூர் வேலை வாய்ப்புகளுகு முக்கியத்துவம் கொடுக்கப்படும். இது செலவு மிகுந்த முன்னெடுப்பு. விலைவாசி உயரும். பணவீக்கம் அதிகமாகும்.
4. தொழிற்சாலைகள் சில அமெரிக்காவிற்கு நகர முற்படும், சட்டம் மட்டும் இயங்கு செலவினங்களால் தோல்வியில் முடியும்.
5. சீனாவிற்கு மாற்றாக இன்னொரு அமெரிக்கா சார்ந்த உற்பத்தி தொழிற்சாலை உருவாக வாய்ப்பு.
6. ரசியா, இரான் உள்ளிட்ட நாடுகளுடன் சுமுக உறவு ஏற்பட வாய்ப்பு.
7. மத்திய கிழக்கு நாடுகளில் பதட்டம், குறிப்பாக வளைகுடா நாடுகளை அமெரிக்க கைவிடும் அபாயம் அல்லது புதிய வணிக ஒப்பந்தங்களை ஏற்படுத்தும் இதன் விளைவாக அந்த நாடுகள் அமெரிக்க நிறுவனங்களில் செய்துள்ள முதலீடு, வைப்பு போன்றவை விலக்க வழிகள் ஏற்படும்.
8. சீனாவின் எதிர்வினை அமெரிக்கப் பொருளாதாரத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும்.
9. நேடோ மற்றும் இதர ஐரோப்பிய நாடுகளுடனான உறவுகளில் விரிசல் ஏற்படும்.
10. உடனடியான போர் எதுவும் இருக்காது ஆனால் பொருளாதார நெருக்கடி போருக்கு கொண்டு போய் நிறுத்தும்.
11. ஆப்ரிக்கா மற்றும் தென் சீனக் கடலில் ஆதிக்கப் போட்டி முன்னெப்போதும் இல்லாததை விட அதிகமாக இருக்கும்.
12. இந்தியாவிற்கு ஒருபக்கம் ஐடி வருமானத்தில் பாதிப்பு என்றாலும் இன்னொருபுறம் இரஸ்யா மற்றும் இரானுடனான உறவை இன்னும் வெளிப்படையாக வைத்துக்கொள்ளும்.
13. அமெரிக்காவில் வேலைகாக வழங்கப்படும் விசாவில் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்படலாம்.
14. ஆவணப்படுத்தபடாத அமெரிக்க வாழ் தென்னமெரிக்கர்களுக்கு நெருக்கடி ஏற்படும். குற்றங்கள் அதிகரிக்க வாய்ப்பு ஏற்படும்.
15. வட்டி விகிதம் அதிகரிக்கும் வாய்ப்பு.
16 அதிக அச்சுறுத்தல், அதிக பாதுகாப்புச் செலவில் முடியும்.
இவையணைத்தும் டிரம்பின் தேர்தல் பரப்புரையை வைத்து மதிப்பிடப்பட்டது. ஒரு வேளை வெள்ளை மாளிகைக்கு வந்தபின் சூழலை அறிந்து பெரிதாக எந்த ஆணியையும் பிடுங்காமல், கார்ப்பரேட்டுகளுக்கு நலன் பயக்கும் ஓரிரு ஆணிகளை மட்டும் பிடுங்கி காலத்தை ஓட்டினால் உலகத்தில் இன்றுள்ள நிலை தொடர வாய்ப்பு.

ஜெய் டோனல்டானந்தா..
அன்றே சொன்னார் அண்ணா...
Like
Comment


எதிர்வரும்  இந்தியப் பயணம் குறித்த குறிப்புகளை எழுத ஆவல். குறிப்பாக பயணம் மற்றும் ஊர் வரலாற்றை ஆவணப்படுத்த பெரியவர்களை சந்தித்து அவர்கள் கருத்துக்களை பதிவு செய்ய திட்டமிட்டுள்ளேன்.