மூன்றாண்டுகளுக்குப் பின் தாயகம் நோக்கிப் பயணம். பெரிதாக எந்த திட்டமிடலும் இல்லை. தொலைவும் காலமும் ஊர்மீதும், உறவுகள் மீதும் அன்பை அதிகப்படுத்தியுள்ளது. தீர்க்கப்பட வேண்டிய விடுப்புகள் கண்முன்னே நின்றதும் எதேச்சையாக அமைந்த பயணம். நான்கு வாரங்கள், பிள்ளைகளை பிரிந்திருப்பது கவலையென்றாலும் சிறு பிரிவுகள் உறவுகளை பலமாக்கும் என்ற நம்பிக்கையில் பயணத்தை தொடர்கிறேன்.
சென்றமுறை ஊர் சென்றது தந்தையாரின் உடல்நலச் சீர்க்கீட்டால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது அவசர அழைப்பாகச் சென்றது. மருதமலை முருகன் அருளால் மீண்டு வந்துவிடடார். ஆனால் மருந்துகளால், படுக்கையிலேயே வாழ்கிறார். இப்போது பார்த்தால் மகிழ்ச்சியடைவார், ஆனால் பெயரன் பேத்தியைத் தேடும் கண்களுக்கு என்னிடம் பதிலில்லை.
நான்கு நாட்கள் நண்பன் ஹரியுடன் தில்லி, ஆக்ரா, ராஜஸ்தான் சுற்ற திட்டம். பயணம், விடுதி அனைத்தும் திட்டமிடப்பட்டுவிட்டது . தில்லியில் பாராளுமன்றத்தைப் பார்வையிட எண்ணமெழுந்தபின் அனுமதி பற்றி தேடியபோது, பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் அனுமதி பெற்றுத்தரவேண்டும் என்று தெரிய வந்தது. நண்பர் அப்துல்லாவிடம் உதவி கேட்டுள்ளேன். அனுமதி கிடைக்குமா என்று தெரியாது ஆனால் ஆவலாக உள்ளேன்.
முகநூலில் பயணம் குறித்த குறிப்பிற்கு நண்பர் முருகானந்தம் தாராபுரம் வர அழைத்துள்ளார். சந்திக்க ஆவல். அப்துல்லா சென்னை வந்தால் சந்திக்க விருப்பம் தெரிவித்துள்ளார். அவரையும் சந்திக்க வேண்டும். முன்பொருமுறை உரையாடுகையில் பிரியாணி விருந்தோம்பல் குறித்து தெரிவித்ததால், அதைக்குறித்து பதிலளித்திருக்கிறேன். நல்ல நண்பர்.
கல்லூரி நண்பர்களை சந்திக்கும் திட்டத்தை நண்பன் ராமகிருஸ்ணனிடம் தெரிவித்துள்ளேன். கூர்க் பயணம் அவர்களுடன் செல்லாத் திட்டம். இல்லையென்றால் நண்பர்களை அவர்களின் ஊரிலேயே சந்திக்கத் திட்டம். 98க்குப் பிறகு கல்லூரி நண்பர்களைச் சந்திப்பது உற்சாகமாக இருக்கிறது.
பாரதியார் பல்கலை நண்பர்களை சந்திக்க வேண்டும். திட்டமேதுமில்லை, ஊர் சென்றதும் தொலைபேசி சந்திப்புக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
பேரூர், கோவை அருங்காட்சியகம், கீழடி, மதுரை, கண்ணகி கோவில், கர்நாடகாக் கலைக் கோவில்களையும், ஊட்டி ரயில் பயணத்தையும் திட்டமிட்டுள்ளேன்.
முக்கியமாக ஊர் வரலாற்றை ஆவணப்படுத்த எண்ணியுள்ளேன். அடுத்த தலைமுறைக்கு ஊரின் சுவடுகள் தெரிய உதவும். பெரும் நிகழ்வுகள் எதுவும் இல்லையென்றாலும் ஊர் தன்னை எப்படி வளர்த்துக்கொண்டுள்ளது, என்னென்ன மாற்றங்களையெல்லாம் கண்டுள்ளது என்று காலத்தின் சாட்சியாக வாழும் மனிதர்களின் அனுபவங்கள் வழியாகப் பதிவது சரியாக இருக்கும் என்றே நினைக்கிறேன்.
முக்கியமாக ஊர் வரலாற்றை ஆவணப்படுத்த எண்ணியுள்ளேன். அடுத்த தலைமுறைக்கு ஊரின் சுவடுகள் தெரிய உதவும். பெரும் நிகழ்வுகள் எதுவும் இல்லையென்றாலும் ஊர் தன்னை எப்படி வளர்த்துக்கொண்டுள்ளது, என்னென்ன மாற்றங்களையெல்லாம் கண்டுள்ளது என்று காலத்தின் சாட்சியாக வாழும் மனிதர்களின் அனுபவங்கள் வழியாகப் பதிவது சரியாக இருக்கும் என்றே நினைக்கிறேன்.
No comments:
Post a Comment