Tuesday, November 15, 2016

ஊர் சேர்ந்தாகிவிட்டது

வானூர்தி மயக்கம்(ஜெட் லேக்) தெளிந்து பின்னிரவில் எழுதுகிறேன். மும்பை, சென்னை, கோவை பிறகு புளியம்பட்டி என எங்கும் மோடியின் வித்தை பல்லிளிக்கிறது. கோவையிலிருந்து வரும் 45 கிமீ நெடுஞ்சாலைப் பயணத்தில் வழியிலிருக்கும் ஒவ்வொரு தானியங்கி காசுவழங்கி எந்திரங்கள், வங்கிக் கிளைகள் அனைத்தும் மக்கள் வரிசை, மக்களிடம் வாழ்க்கைப் போராட்டத்தைவிட இதை ஒரு மன தைரியத்துடனேயே அனுகுகிறார்கள். பார்ப்பவர் அனைவரிடமும் வருத்தமும், குழப்பமும் நிலவுகிறது.
உள்ளூர்க்காரர்கள் பெரும்பணக்காரர்கள் விழி பிதிங்கி நிற்பதை ரசிக்கிறார்கள், வரவேற்கிறார்கள். தங்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கலைவிட ஏதோ கள்ளப்பணத்தை அழிக்க மோடி பெரும் முயற்சி எடுத்துள்ளதாக கருதுகிறார்கள், அகமகிழ்கிறார்கள்.
சன் மற்றும் இதர செய்தித் தொலைக்காட்சிகளே தொடர்ந்து மக்கள் சிக்கலை மோடிக்கு எதிராக செய்தியாக வைக்கின்றன. உண்மையான செய்தி மற்றும் சிக்கலின் விளைவு, எப்படி பெருமுதலாளிகள் குறிப்பாக வடவிம்திய முதலாளிகள் பயனடையப்போகிறார்கள் என்று முதன்மைத் தொலைக்காட்சி நேரத்தில் பேசுவதாய்த் தெரியவில்லை.
வானூர்தி நிலையத்தில் காவலர்கள் வெளிநாட்டு காசு மாற்றும் நிறுவன ஊழியர்களிடம் லேசாகக் கேட்டுப்பார்க்கிறார்கள், 500 க்கும் 1000க்கு சில்லரை கிடைக்குமா என்று. உள்ளிருக்கும் தானியங்கி காசுவழங்கிகள் பெரும்பாலும் கூடமில்லாமல் இருக்கிறது. சென்னையில் வானூர்தி நிலையத்திற்குள் தேனீர் மற்றும் வடையை வண்டியில் விற்கும் ஒரு நபர் 500, 1000 த்தை வாங்கிக் கொள்கிறார். வானூர்தி நிறுவன ஊழியர்கள் மற்றும் காவலர்களே அவரது வாடிக்கையாளர். எப்படி காசை மாற்றுகிறார் என்றெல்லாம் தெரியாது, ஆனால் செல்வாக்கானவர்போலவே இருக்கிறார்.
அருகிலிருக்கும் கிராமத்தில் செயல்படும் தனியார் வங்கிக் கிளை மேலாளலருடன் பேசுகயில், பணப்பட்டுவாடா மைய அரசின் ஒருமுகமாக்கப்பட்ட இணையத்தில் பதியப்படுவதாகவும், ஒரு நபரின் தனி அடையாளத்தை வைத்து எத்தனை பணமெடுக்கிறார், போடுகிறார் என்பதை எளிதாக வங்கி வேறுபாடு கண்டுகொள்ள முடியும் என்று கூறினார். மேலும் வங்கிக் கிளைகள் வழக்கமாக பெரும் பணத்தைக் கையாளும் நூற்ப்பாலை மற்றும் இதர அதிமதிப்புக் கொண்ட வாடிக்கையாளருக்கு பணத்தட்டுப்பாடு இல்லாமல் பார்த்துக்கொள்வதாகவும், ஒவ்வொரு நாளும் அடுத்த நாளின் பணத்தேவையை முன்கூட்டியே ஊகித்து சொல்லிவிடுவதாகவும், அதைப்பொறுத்தே அடுத்த நாள் அவர்களுக்கு காசு வழங்கப்படுகிறதாகவும் சொன்னார். நண்பர்கள் திருமண ஏற்பாடுகளிலும், புதியவீடு கட்டுவதிலும் இருப்பதால் பணச்சிக்கல் அவர்களை வைதைக்கிறது. கட்டுமான நிறுவனம் காசாக மட்டுமே கேட்கிறது. இத்தனைக்கும் முதலாளி பிஜெபியில் பொறுப்பில் இருப்பவர்.
வங்கிகள் விரைவில் மூடப்பட்டுவிடுகிறது. ஊழியர்களின் களைப்பைப் பார்க்க முடிகிறது. ஊருக்குச் செல்வதால் அண்டைவீட்டு ஆந்திர நண்பர்கள் சிலர் கொண்டுவந்திருக்கும் 500, 1000ம் தாள்களை மாற்றி வரக்கேட்டுள்ளுனர். மோடி வித்தையிலிருந்து எப்படி தப்பித்து மாற்றலாம் என்று யோசித்துக் கொண்டுள்ளேன்..... வெயிட்... மொத்தத் தொகையே 20000க்கும் குறைவுதான்.

No comments:

Post a Comment