Thursday, November 10, 2016

செல்லாக்காசு

500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுக்களை செல்லாததென அறிவித்தது பொதுப்படையாக வரவேற்கப்பட வேண்டியது. ஆனால் அதன் சாதக பாதகங்களை அளவிட்டால் இது குளோபலைசேசன் என்ற உலகமயமாக்கல் போல், இந்தியமயமாக்கல் குறிப்பாக வட இந்திய வர்த்தக நிறுவனங்கள் தமிழகத்தில் காலூன்ற வழியேற்படுத்தும் அதன் பின், உலக நிறுவனங்கள் அவர்களுடன் கைகோர்த்து இது வரை உடைக்க முடியாத உள்ளூர் சந்தையை உடைத்து தங்கள் வணிக வலையை விரித்து இலாபமீட்டமுடியும்.
உதாரணத்திற்கு, வால்மார்ட். தமிழக அரசு ஒரு வகையில் அந்நிய சில்லரை வணிகக் கடைகளுக்கு தடை விதித்திருந்தாலும், அவர்கள் குறிப்பிட்ட அளவு இலாபத்தை மற்ற மாநிலங்களில் கூட அடையாமல் கைவிட்டுவிட்டு சென்றனர். அப்போது அவர்கள் கூட்டு வைத்தது ஏர்ட்டெல் மிட்டலுடன். தோல்விக்கு முக்கியக்காரணம் உள்ளூர் சிறு வணிகர்கள் மற்றும் வாடிக்கையாளர் உறவு மற்றும் வணிகக் கலாச்சாரம்.
இப்போது சரவணா ஸ்டோர்சையும், சென்னை சில்க்ஸ், சரவணபவன் போன்ற உள்ளூர் நிறுவனங்களை எடுத்துக்கொள்வோம். அவர்கள் வணிகம் முற்றிலும் வங்கிப் பரிவர்த்தனை மற்றும் சரியான கணக்குகளின்படி இயங்குவதில்லை என்பது அந்த வணிகத்தை அறிந்தவர்களுக்குத் தெரியும். அரசுக்குக் கணக்குக் காட்டுவதைவிட பல மடங்கு அவர்களின் வர்த்தகம் இருக்கும். காரணம் பெரும்பாலன விற்பனை காசாக கையாளப்படுகிறது. இந்த நிறுவனங்கள் எப்போதும் பெரும் தொகையை காசாக வைத்திருக்கும். ஊழியர்களுககு சம்பளம் முதல், உள்ளூர் உற்பத்தியாளர்களிடம் கொள்முதல் என்று அனைத்துமே காசாகத்தான் கையாளப்படுகிறது. மோடியின் இந்த உத்தரவால் இவர்களுக்குப் பெரும் அடி விழுந்திருக்கும். இதிலிருந்து மீண்டுவர வெகு நாட்களாகும்.
இந்தச் சந்தர்ப்பம், வட நாட்டு மார்வாடிகள், வியாபாரிகளுக்குப் பெரும் வாய்ப்பாக அமையும். புதிய முதலீடுகளை அவர்கள் வெள்ளைப்பணமாகவே கொண்டுவந்து முதலீடு செய்ய வாய்ப்பு அதிகம். அப்படி நேருகையில் ரிலையன்ஸ் டிரெண்ட், பிக் பஜார் போன்ற நிறுவனங்களும், வால்மார்ட் போன்ற வெளிநாட்டு நிறுவங்களும் தங்கள் கடைகளைத் திறக்க வழியேற்ப்படும். குறைந்த காலத்தில் உள்ளூர் வியாபரிகளின் சவாலில்லாமல் சந்தையைப் பிடித்து நிலைகொண்டுவிடுவர்.
நலிவடைந்த உள்ளூர் நிறுவனங்கள் பழைய நிலைக்கு வருவதற்குள் அவர்களின் சந்தை கைமாறியிருக்கும். முடிவில் சந்தை உள்ளூர்க்காரர்களிடம் இருந்து வெளி மாநிலத்தவரிடம் சேர்ந்திருக்கும்.
இதற்கு முக்கியமான காரணம் உள்ளூர் வணிகர்கள் தங்களை இந்தச் சவாலுக்கு தயார்படுத்திக் கொள்ளாதது. பெரு நிறுவனங்ள் பங்குகள் மூலம் கருப்பை வெள்ளையாக்கி ஒழுங்குபடுத்தப்பட்ட நிறுவங்னங்கள் மூலமாக சந்தையைக் கைப்பற்றுவர். அவர்கள் ஒன்றும் வரியை முழுவதுமாக கட்டிவிடப்போவதில்லை. அதற்கும் ஓட்டைகளை வைத்தே இந்த சிஸ்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
ஆக.. செல்லாக்காசனது உள்ளூர் வணிகர்களே.

No comments:

Post a Comment