Thursday, April 27, 2017

கல்வியும் பாடமும்

அக்கவுண்ட்ஸ்- பெயரைக்கேட்டாலே தெரிக்க வைத்த பாடம். வேறு வழியில்லாமல் இளநிலை, முது நிலை பாடங்களில் படித்து தேர்ச்சி பெறவேண்டிய சூழலில் வேறு வழியில்லாமல் படித்தது. C, C++, Java என்று மோட்டு வளையைப் பார்த்து கனவு கண்டுகொண்டிருந்த போது, விதி Tallyஐ- வேண்டா வெறுப்பாக படித்து புலமை பெற்று பிழைப்பு நடத்த வேண்டிய சூழலை உருவாக்கியது. இப்போது வேறு ஒரு முயற்சிக்காக மீண்டும் பொருளாதாரக் கணக்கியலைப் படிக்க வேண்டிய சூழல். ஒன்றிரண்டு பாடங்கள் முடித்த பின் நிகழ்காலத்தைக் கடந்த காலத்துடன் ஒப்பிட்டு பார்க்கிறேன். நானறிந்த சில B.Com படித்த நண்பர்கள் தனியாக தொழில் தொடங்கி நடத்துகிறார்கள். ஆனால் அவர்கள் தொழிலைவிட்டு வெளியேற எண்ணிக்கொண்டு சில காரணங்களைச் சொன்னார்கள். அந்தக்காரங்களுக்கான விடை அவர்கள் கற்ற கல்வியிலேயே இருந்திருக்கிறது. ஆனால் அவர்கள் அவற்றை உணர்ந்து படித்திருப்பார்களா என்று கேள்வி எழுகிறது.


ஒருவர் தன் துறையின் எதிர்காலத்தைக் கணித்து முடிவுகளெடுக்க தவறியவர். இன்னொருவர் அடிப்படைக் கணக்குகளைக்கூடச் சரிவர செய்யாதவர்.


தொழில் செய்பவர்களுக்கு முக்கியமான தேவை, Market Sense. அதாவது சந்தை அறிவு, கூடவே தனது தொழிலை சந்தைக்குத் தகுந்தாற்போல் தகவமைத்துக் கொள்வது. இதைச் சுட்டிக்காட்ட பயன்படுவதே கணக்குகளின் மூலம் கிடைக்கும் நிலைகாட்டிகள்(Indicators). அதாவது லாபம், நட்டம், இயங்கு செலவுகள், சந்தை செல்லும் போக்கு போன்றவை. மோசமான சூழலில் இவை ஒன்றைச் சொல்லும், அதாவது தொழிலை விட்டு வெளியேறும் தருணம். இதைக் கணிக்க முடியாமல்தான் இவர்கள் சுழலுக்குள் மாட்டிக்கொண்டு அல்லல் படுகிறார்கள்.


ஆக கல்வியில் குறையில்லை, பாடங்களைக் கற்றுக்கொள்ளாதவர்களின் குறையே தோல்விக்குக் காரணம் என்று சொல்லலாம்.

Monday, April 24, 2017

மொழிப்போராட்டமும் புளியம்பட்டியும்

இன்று மத்திய நடுவன் அரசின் இந்தித் திணிப்பு நடவடிக்கைகளுக்காக பல்வேறு இயக்கங்கள் மூலம் எதிர்ப்பைத் தெரிவித்தும், தொடர்ந்து தமிழில் பேசவும், எழுதவும் முயற்சியெடுக்கும் காலத்தில், நமக்கு முந்தைய தலைமுறை, அதாவது இந்தி எதிர்ப்பு போராட்டம் நடந்த 1965களின் தலைமுறையின் அனுபவத்தை, குறிப்பாக புன்செய்ப் புளியம்பட்டியில் மொழிப்போராட்டத்தின் வீச்சு, போராட்ட வடிவங்களைத் தெரிந்து கொள்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தேன். சென்ற ஆண்டு(2016) இறுதியில் ஊருக்குச் சென்றிருந்தபோது சில முக்கியமான மொழி ஆர்வலர்கள் என்று அறியப்படுகிற மதிப்பிற்குரியவர்களிடம் உரையாட வாய்ப்புக் கிடைத்தது. ஒருவர் பள்ளித் தலைமை ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர்.

அந்தக் காலத்திலேயே "மறைமலை அடிகள் மன்றம்" என்ற இயக்கத்தை ஆரம்பித்து தமிழ் வளர்ச்சிப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். அதில் எனது தந்தையும் இடம்பெற்றிருந்ததால் மறைமலையடிகள் மன்றம் தொடர்பான ஏடுகள் சிலவற்றை சிறுவயதில் பார்த்திருந்தேன்.  பெரும்பான்மையான மன்ற உறுப்பினர்கள் ஆசிரியர்கள் மற்றும் அரசுத்துறையில் பணியாற்றியவர்கள். இந்தி எதிர்ப்புப் போராட்டம் தீவிரமடைந்த காலத்தில் புளியம்பட்டியிலும் எதிர்ப்பைத் தெரிவித்து போராட எண்ணம் எழுந்திருக்கிறது. அதே கால கட்டத்தில் காவல் துறை அடக்குமுறையும் பலமாக இருந்திருக்கிறது. போராட்டக்காரர்கள் என்று அறியப்படுபவர்களை உளவுத் தகவல்கள் மூலம் கைது செய்து சிறையில் அடைக்கும் நிகழ்வுகள் வெகுவாக நடந்துவந்திருக்கிறது. அன்றைய ராஜாஜியின் அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது.

கைது நடவடிக்கைகள் பற்றிய செய்தி புளியம்பட்டியில் காட்டுத்தீயாக பரவியிருக்கிறது. அரசுப்பணியில் இருந்தததால் தமிழார்வலர்கள் பணிப்பாதுகாப்பைக் கருதி போராட்டத்தில் நேரடியாக ஈடுபட்டு சிறை சென்று பணியை இழந்து குடும்பங்களை தவிக்கவிட்டுவிடுவோம் என்று சிறிது தயக்கம் காட்டியுள்ளனர். சில கருத்து வேறுபாடுகள் தமிழார்வலர்களுக்குள் எழுந்திருக்கிறது. ஒரு சிலர் போரட்டம் மூலம் எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும் என்றும், ஒரு சிலர் தற்காலிகமாக போராட்டத்தை நிறுத்திக் கொள்ளவும் விரும்பியிருக்கின்றனர்.

அந்த சமையத்தில், காவல் துறை மறைமலை அடிகள் மன்றத்தைப் பற்றி தெரிந்துகொண்டு நடவடிக்கை எடுக்கத் தொடங்கியிருப்பதாக உறுப்பினர்களுக்கு செய்தி வருகிறது. மன்ற உறுப்பினர்கள் சிலர் தலை மறைவாகின்றனர். காவல் துறையின் நடவடிக்கைகளிலிருந்து தப்பித்துக்கொள்ள மறைமலை அடிகள் மன்றம் தொடர்பான ஆவணங்கள் மறைக்கப்படுகிறது. இருந்தும் காவல் துறையிலிருந்து மன்ற உறுப்பினர்கள் சிலருக்கு நேரில் விசாரணைக்கு வருமாறு அழக்கப்பட்டிருன்கின்றனர். விசாரணைக்குச் சென்றவர்களிடம் அரசுப்பணி இழப்பு, கைது நடவடிக்கைகள் என்று அச்சுறுத்தப்பட்டு போராட்டத்தில் ஈடுபடுவதில்லை என்று கடிதம் எழுதி வாங்கி அனுப்பப்பட்டிருக்கிறார்கள். மன்றத்தின் நடவடிக்கைகள் அதன்பிறகு வெகுவாக குறைந்திருக்கிறது.

அதே சமையத்தில் திராவிட முன்னேற்றகழகத்தினர் தமிழ்நாடெங்கும் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். புளியம்பட்டியைப் பொறுத்த அளவில் பெரியவர் திரு பு.ஆ. சாமிநாதன், திரு பு.கா. ஆறுமுகம் போன்றவர்கள் போராட்ட முனைப்பில் ஈடுபட்டிருந்தனர். அந்தசமயத்தில் நடந்த போராட்டமொன்றில் கலந்து கொண்டு சிறை சென்றவர் நகர்மன்ற முன்னாள் தலைவர் திரு அக்பர் அவர்கள். போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றதால் மொழிப்போராட்ட தியாகியாக அறியப்பட்ட அவருக்கு கழகத்தில் முக்கியப்பொறுப்புகள் வழங்கப்பட்டது.

தமிழகமெங்கும் மாணவர் போராட்டம் இந்தித் திணிப்பிற்கு எதிராக வலுவடைந்து  பொள்ளாச்சியில் இராணுவத்தினரின் துப்பாக்கிச் சூடு, பலர் கொத்தாக கைது செய்ப்பட்டு தாக்கப்பட்ட சம்பவங்களின் பின்னும், சத்தியமங்கலத்தில் நடந்த போராட்டத்தில் திரு முத்து உயிர்த்தியாகம் செய்தார். பெரும் எழுச்சியடைந்த போராட்டம் மத்திய அரசை கலக்கியது. தலைவணங்காத தமிழகத்தின் தன்மானம் கண்டு மத்திய அரசு தன் இந்தித் திணிப்பு நடவடிக்கைகளை நிறுத்திவைத்தது. அதன் பின் நடந்த தேர்தலில் முதன் முதலாக திமுக பெரும்பான்மை பெற்று ஆட்சியமைத்தது வரலாறு.