Wednesday, December 21, 2016

சதுரங்கவேட்டை

பள்ளிக்கூடத்தில் புத்தகத்தில் தமிழக வரலாறு படித்த போதெல்லாம் தமிழ் மன்னர்கள் ஒற்றுமையில்லாமல் தங்களுக்குள் சண்டையிட்டுக்கொண்டு ஒருவரை ஒருவர் அழித்தும், காட்டிக் கொடுத்தும் அந்நியரிடம் நாட்டை இழந்தார்கள், அடைமைப்பாட்டார்கள் என்பதுதான் பாடமாகச் சொல்லப்பட்டது.

இப்போதும் அந்த வரலாற்றுப் பாடங்கள் அப்படியே நமது நிகழ்கால அரசியலுக்குப் பொருந்தும். திமுக ஆட்சியில் ஊழல் வழக்குகளில் மாட்டிக்கொண்டு காங்கிரசின் கைப்பாவையாகி ஈழ விவகாரத்தில் துரோகமிழைத்து, தமிழர்களின் நலனை காவு கொடுத்தது. இப்போது அதிமுக பாஜகாவிடம் மாட்டிக் கொண்டு அலறுகிறது. இதற்காக நாம் கொடுக்கப்போகும் விலையென்ன என்று போகப்போகத்தான் தெரியும்.

தமிழகம் போன்ற தன்னாட்சி அதிகார வேட்கை கொண்ட மக்களை ஆளும் கட்சிகள் ஒருபோதும் காங்கிரஸ், பாஜக போன்ற ஒற்றை அதிகார மையத்திற்கு அடிபணியக்கூடாது. இந்திய அளவில் மாநிலக்கட்சிகளுடன் கூட்டணியமைத்து மத்தியில் அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும். அதற்கு தமிழகம் தாண்டி அரசியல் செல்வாக்கைச் செலுத்தும் வல்லமை வேண்டும். அவர்களை ஒன்றிணைக்கும் புள்ளிகளை அடையாளம் கண்டு அதன்மீது அரசியலைக் கட்டமைக்க வேண்டும்.

இவை எதுவும் முடியாதென்றால், மாட்டிக்கொள்ளாமல் ஊழல் செய்யவாவது தெரிந்திருக்க வேண்டும்.

அதுவும் முடியாதென்றால், ஓரமாக ஒதுங்கிவிட்டு புதியவர்களுக்கு வழியைவிட்டுவிடலாம்.

Monday, December 19, 2016

அன்பின் ஊற்றே...

சரியாக நான்கு வருடங்களுக்கு முன், நடந்து சென்றுகொண்டிருந்த என் தந்தை, சாலையில் இரு சக்கர வாகனத்தால் மோதித் தள்ளப்பட்டு தரையில் வீழ்ந்தார். பெருங்காயமேதும் இல்லாமல் ஆட்டோவில் வீட்டிற்கு கொண்டுவந்து சேர்க்கப்பட்டார். மாலை தலை சுற்றல், வாந்தியுடன் வலிப்பு ஏற்பட்டு உள்ளூர் மருத்துவர் அறிவுரைப்படி கோவை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தலையின் பின் பக்கம் அடிபட்டதால் மூளைக்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் ரத்தக்குழாயில் அடைப்பேற்பட்டு பக்கவாதம் ஏற்பட்டு சிகிச்சை பெற்றார். சிறிது நினைவு, பேச்சு, நடையை இழந்திருந்தார். ஒன்றைரை மாதகாலம் தீவிர சிகிச்சைக்குப்பின் வீடுதிரும்பியும், உடற்பயிற்சி(Physio Therapy) மூலம் ஓரளவு நடக்கவும், பேசவும் முடிந்தது. அப்போது சென்னையில் வேலையில் இருந்ததால் ஒன்றரை மாத காலமும் விடுப்பெடுத்து அவருடனே இருக்க முடிந்தது. சில குறிப்பிட்ட நிகழ்வுகள் நினைவில் இல்லையென்றா ஓரளவு தேறியிருந்தார்.

ஏறக்குறைய ஓராண்டிற்குப் பிறகு மீண்டும் வீட்டில் சோபாவில் இருந்து வழுக்கி விழுந்து மீண்டும் வலிப்பு ஏற்பட்டு கோவையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது சிக்காகோவில் இருந்ததால், கோவையில் நெருங்கிய மருத்துவர் அறிவுருந்த்தலின் பின்பே எனக்கு தகவல் சொல்லப்பட்டு, அன்றே குடும்பத்துடன் கோவை புறப்பட்டுச் சென்றோம். இந்த முறை ரத்தக் கொதிப்பு வலிப்புக்குக் காரணமாகச் சொல்லப்பட்டது. பின்பு நுரையீரல் தொற்று காரணமாக நலம்பெறுதலில் தாமதமானது. இருபது நாட்களுக்குப் பின் செயற்கை சுவாசம் இன்றி சுவாசிக்கவும், சாதரண உணவு எடுத்துக் கொள்ளவும் தொடங்கிய பின், மீண்டும் உடற்பயிற்சி செய்ய மருத்துவர் படுக்கையில் இருந்தபடியே முயற்சி செய்யும் போது, சோபாவில் இருந்து விழுந்ததில் இடுப்பு எழும்பு முறிவு ஏற்பட்டதைக் கண்டறிந்து ஒரு அறுவை சிகிச்சை செய்தனர். அந்த நிலையில் மயக்க மருந்து கொடுத்து சிகிச்சை செய்வது ஆபத்தென்றாலும் வேறு வழியின்றி அறுவை சிகிச்சை செய்யப்பட்டு மீண்டு வந்தார்

சிகிச்சைக்குப் பின் பெரும்பாலும் நடையில்லாமல் படுக்கையிலேயே இருந்தார். அப்போது மிகவும் கடுமையான செயல்திட்ட மேலாண்மை செய்து கொண்டிருந்த வேளையில், சம்பளத்துடன் விடுப்பளித்தும், ஆறுதலாகவும் தேற்றிய Client பேட்டி மற்றும் ஸ்டீவ் அன்பு மற்றும் உறுதுணையாக இருந்த காக்னிசண்ட் நிறுவனத்தின் பரிவினாலும்  ஒரு மாதம் அருகிலுருந்து தந்தையைக் கவனிக்க முடிந்தது. என் மகளின் மீது பேரன்பு கொண்ட அவரை மீட்டுவந்து அவளிடம் காட்டியபின்பே மகனாக, தந்தையாக நிம்மதியடைந்தேன்.

அதன் பின் இரண்டு ஆண்டுகள் கழித்து சென்ற மாதம் ஊருக்குச் செல்வது மட்டுமே காரணமாகக் கொண்டு ஒரு பயணம். ஏதோ ஒன்று என்னை ஊரை நோக்கி ஈர்த்ததை இப்போது உணர்கிறேன். அது எம்மை உருவாக்கிய அந்தச் சிற்பியின் ஆணை போலும். அவரின் வாழ்வின் இறுதித் தருணங்களின் பக்கங்களின் என்னை இடம்பெறச் செய்ய அவர் கொடுத்த வாய்ப்பென்றே கருதுகிறேன்இந்தமுறை அவர் வேண்டிய இறைவனடி சேர எந்தத் தடையுமிருந்திருக்கவில்லை.

அன்பின் ஊற்றே,

இனியொரு பிறவியிலும் உமக்கு மகனாக, உமக்கு அடங்கிய மகனாக இருக்க வேண்டும் என்று வேண்டுகிறேன்

எதிலெல்லாம் என்னை அறிவாளியாகக் கருதிக்கொண்டேனோ அதிலெல்லாம் இன்று என் மகன் என்னை முட்டாளாக்கிக் கொண்டிருக்கும்போதே, அறிவார்ந்த, அனுபவம் நிறைந்த உங்கள் சமரசங்களைப் புரிந்து கொள்கிறேன். இன்னலுறும்போது துணை நின்ற தூணை இழந்து நிற்கிறேன். சாய்ந்து நிற்க தூணில்லாமல் நானே மற்றவர்க்கு தூணாக மாறும் காலமாற்றத்தைப் பழகட்டும் என்று விட்டு விட்டீரோ?

இந்த உலகில் நில்லாமை நிலையான பின்பு, உங்களின் நீட்சியாக கொஞ்ச நாள் நிலைத்திருப்பதே எனக்குக் கிடைத்த பெரும் பேறாக் கருதிகிறேன். இயற்கையுடன் ஒன்றாகிவிட்ட நீங்கள் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கையில் விடைபெறுதல் ஏது?...