Tuesday, March 24, 2015

இணையத்தில் தமிழில் எழுத வேண்டுமா?

பல நண்பர்கள் தாங்கள் தமிழில் கருத்துக்களை பகிர விரும்புவதாகவும்   ஆனால் எப்படி அதை செய்வது என்பது தெரியவில்லை என்று தெரிவிக்கின்றனர். அவர்களின் அந்த சிக்கலை தீர்க்கவே இந்த பதிவு.

நீங்கள் விண்டோஸ் நிறுவியுள்ள கணினி பயன்படுத்தினால் கீழ்க்கண்ட முறைகளில் ஒன்றின் மூலம் நீங்கள் தமிழில் தட்டச்சு எளிதாக செய்யலாம். முக்கியமாக உங்களுக்கு தமிழ்  தட்டச்சு தெரிந்திருக்க வேண்டியதில்லை. என்பது சிறப்பு. ஆம்..வியப்பாக உள்ளதா...மேலே படியுங்கள்.

எளிதாக ஆங்கில எழுத்துக்களை பயன்படுத்தி தமிழில் தட்டச்சு செய்யலாம்

ஆங்கில எழுத்துக்களைக்கொண்டு தட்டச்சு செய்யும்போது இந்த செயலிகள் தமிழில் திருத்திக்கொள்ளும் (!). உதாரணத்திற்கு வணக்கம் என்று தட்டச்சு செய்ய, vaNakkam (பெரிய ண வுக்கு Capital N, "ள்" ற்க்கு L, "ழ" விற்க்கு za) என்று தட்டச்சு செய்து இடைவெளி கொடுக்கும்போது செயலி தமிழில் திருத்திக்கொள்ளும்.


1. தமிழ் பத்திரிக்கை தளங்களை பயன்படுத்தி தமிழில் தட்டச்சு செய்யலாம் - விகடன்.காம் ( http://www.vikatan.com/news/article.php?module=news&aid=40602)  தளத்திற்க்கு சென்று ஏதாவது ஒரு செய்தியையோ கட்டுரையையோ சொடுக்கி அந்த பக்கத்தின் கீழ் கருத்து பதியும் பகுதிக்கு செல்லவும். அங்கு உள்ள எழுது பெட்டியில் (Comment box) தட்டச்சு செய்து அதை படியெடுத்து(Copy) முகநூல் அல்லது நீங்கள் பதிய விரும்பும் தளத்தில் ஒட்டவும் (Paste).2. அஞ்சல் பாங்கு உலவி தமிழ் தட்டச்சு பலகையை பயன்படுத்தி தமிழில் தட்டச்சு செய்ய http://tamilkeyboard.com/#tam,Keyboard_ekwunitamil தளத்திற்க்கு சென்று எழுது பெட்டியில் மேற்க்குறிப்பிட்ட முறையில் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய, செயலி தமிழில் திருத்திக்கொள்ளும்.3. அஞ்சல் பாங்கு தட்டச்சு பலகையை உங்கள் கணினியில் நிறவி இணைய இணைப்பு இல்லாமலே கணினியில் பதிந்து கொள்ளலாம். இந்த சுட்டியை www.keyman.com/tamil  சொடுக்கி அஞ்சல் பாங்கு தட்டச்சு பலகையை தரவி்றக்கம் செயது கணினியில் நிறுகிக்கொள்ளவும்.

அ. தரவிறக்கம் செய்த கோப்பின் மீது வலச்சொடுக்கி "Run as Administrator"  சொடுக்கவும்.


ஆ. பின்னர் வரும் திரையில் "I agree to license terms" ஐ தெரிவு செய்து "Install Keyman Desktop" என்ற விசையை அழுத்தவும்.


இ. கணினி மீளுயிர்ப்பெற்று வந்த பிறகு தொடக்க விசையை அழுத்தி பார்தீர்களானால்  தெரியும். ஈ. அதை அழுத்தும்போது, கீ மேன் செயலி செயல்பட்டு கீழ்பட்டையில் வலதுபுரம் விசைப்பலகை தெரிவு செய்ய வாய்பளிக்கும் உ. அந்த வாய்புகளில் அஞ்சல் பாங்கை தெரிவு செய்துவிட்டு நீங்கள் முகநூலிலோ அல்லது வேறொரு தளத்திலோ மேற்ச்சொன்ன முறையில் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யும்போது அது தமிழில் தட்டச்சாகும்.


ஊ. மீண்டும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய கீழ்ப்பட்டையில் தெரியும் கீமேன் விசைப்பலகையை சொடுக்கி  "US" ஐ தெரிவு செய்து ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து கொள்ளலாம்.ஆண்டிராயிட் மற்றும் ஆப்பிள் செல்லிடப்பேசியிலும் தமிழில் எளிதாக தட்டச்சு செய்யலாம். அடுத்த பதிவில் அதை முழுவதும் விவரிக்கிறேன். உங்கள் கேள்விகள் மற்றும் சந்தேகங்களை கருத்துக்களாக பதியுங்கள், முடிந்த அளவு பதிலளிக்கிறேன்.


Sunday, March 22, 2015

மோடி அரசின் நில அபகரிப்பு திட்டம்

பொருளாதார அபிவிருத்தியை நோக்காகக்கொண்டு நிலம் கையப்படுத்தல் சட்டம் 2013 ல் காங்கிரஸ் அரசால் கொண்டுவரப்பட்டது. பின் 2014ல் சில திருத்தங்களை கொண்டுவந்தது. ஆனால் அந்த திருத்தங்கள் நிறைவேற்றாமல் காங்கிரஸ் அரசு வெளியேறியது. பின்னர் பதவியேற்ற மோடியின் சர்க்கார் மேலும் சில திருத்தங்களுடன் இந்த சட்டத்தை மார்ச் மாதம் 2015ல் நிறைவேற்றியது. இந்த சட்டம் ஏன் பலதரப்பட்ட மக்களால் எதிர்க்கப்படுகிறது என்பதற்க்கு அந்த சட்ட திருத்தத்தின் சில முக்கியமானவற்றை தெரிந்துகொள்தல் அவசியம். 

2013 ஆண்டு இயற்றப்பட்ட நிலம் கையகப்படுத்தல் தொடர்பான சட்டத்தின்படி தனியார்- பொதுத்துறை நிறுவனக்கள் கூட்டு திட்டத்திற்க்கு நில உரிமையாளர்களில் 70%சத விகிதத்தினர் சம்மதம்  தேவை. தனியார் திட்டங்களுக்கு 80%வித நில உரிமையாளர்கள் சம்மதம் தேவை.  ஆனால் மோடி அரசு கீழ்கண்ட ஐந்து பிரிவுகளுக்கும் மேல் சொன்ன நில உரிமையாளர் சம்மதம் தேவை என்ற விதியிலிருந்து விலக்களித்துள்ளது.

         1. பாதுகாப்பு (defense)
         2. கிராமப்புர கட்டமைப்பு
         3. குறைந்த விலை வீடு கட்டும் திட்டம்
         4. தொழிற்ச்சாலைகள்
         5. கட்டமைப்பு திட்டங்கள் ( தனியார் பொதுத்துறை கூட்டு முன்னெடுப்புகள்)

மேற்க்குறிப்பிட்ட பிரிவுகள் மேலோட்டமாக பார்க்கும்போது மிக நல்ல பயன்பாடாக தெரியலாம். ஆனால் பிரிவு 3, 4 மற்றும் 5, நிலத்தை நம்பி விவசாயம் செய்து பிழைக்கும் ஒரு குடும்ப்பத்தை எந்த சட்டச்சிக்களுமில்லாமல் நடு தெருவுக்கு கொண்டுவந்து விடும். இது விவசாயிக்கு மட்டுமல்ல, யாருடைய நிலத்தையும் மேற்ச்சொன்ன ஒருபிரிவின் கீழ் பெரும் முதலாளிகள் எளிதாக கையகப்படுத்திவிடலாம். உதாரணமாக ஒரு நான்கு பேரைக்கொண்ட குடும்பம் விவசாயமோ அல்லது ஏதாவது ஒரு தொழிலை நிலத்தை நம்பி பிழைத்துக்கொண்டிருக்கும்போது, புதிய தொழிற்ச்சாலை, சாலை வசதி அல்லது நெடுஞ்சாலைத்துறை கிடங்கு என ஏதாவது ஒரு பிரிவில் அவரின் சம்மதம் இல்லாமலே கையப்படுத்திக்கொள்ளலாம். அதற்க்கீடக சந்தை விலையில் இருந்து மூன்று மடங்கு முதல் நான்கு மடங்கு பணம் தருவர். ஆனால் அந்த பணத்தைக்கொண்டு அவரால் வேறொரு நிலமோ அல்லது தொழிலோ நிச்சயம் செய்யமுடியாது. காரணம் சந்தை விலை என்பது அரசு நிர்ணயிக்கும் விலை. எந்த நில பரிவர்த்தனைகளும் இந்த மதிப்பீட்டில் நடைபெறுவதில்லை. எனவே வேறொரு நிலத்தை அவரால் நிச்சயம் அந்த தொகையைக்கொண்டு வாங்க முடியாது. பிழைப்புக்காக அவர் நகரத்தை நோக்கி கூழித்தொழிலாளியாகச்செல்ல இந்த திட்டம் வழிவகுக்கும். ஒரு தற்ச்சார்பு கொண்ட விவசாயி தொழிலாளியாக நகரத்தை நோக்கி தள்ளப்படுவார்.

முன்னைய 2013 சட்டத்தில் ஒரு நிலம் கையகப்படுத்தப்படும்போது அது அந்த சமூகத்தில் ஏற்ப்படும் பாதிப்புகளை ஆரய்ந்து அறிக்கையளித்தபின் முடிவுசெய்யப்படும் என்ற விதியிலிருந்து மேற்க்கண்ட ஐந்து பிரிவுகளில் தொடங்கப்படும் திட்டங்களுக்கு விலக்கு அளித்துள்ளது 2015 சட்ட திருத்தம்.

மேலும் 2013 ஆண்டு சட்டத்தில் விவசாய நிலங்களை கையகப்படுத்துவதில் சில கட்டுப்படுகளை கொண்டிருந்தது. ஆனால் மோடி அரசு கொண்டுவந்துள்ள சட்டத்திருத்தம் அந்த கட்டுப்பாடுகளை நீக்கியுள்ளது. உதாரணம்: விவசாய நிலத்தின் அதிக பட்ச கையப்படுத்தும் அளவு மாநில அரசின் விதிப்படி நிர்ணயிக்கப்படும். ஆனால் 2015 ஆண்டு திருத்தம் இந்த விதையை தளர்த்தியுள்ளது.

2013 ஆண்டு சட்சத்தின்படிநிலம் கையகப்படுத்தபட்ட பின் குறிப்பிட்ட காலத்திற்க்குள் திட்டம் நிறைவேற்றப்படாமல் இருந்தால், நில உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும். மோடி அரசின் சட்டத்திருத்தம் இந்த விதியை நீக்கிவிட்டது. அதாவது ஒரு திட்டம் தொடங்குவோம் என்று தனியார் முதலாளிகள் நிலத்தை உரிமையாளரிடமிருந்து கையகப்படுத்திவிட்டு ஒரு ஐந்து ஆண்டு கழித்து நல்ல விலைக்கு வேறொருவருக்கு விற்றுவிட்டு போக வழியேற்ப்படுத்திக்கொடுத்துள்ளது.

2013ம் ஆண்டு சட்டத்தின்படி தனியார் மருத்துவமனைகளுக்கும் தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் நிலம் கையப்படுத்துதலில் எந்த விதிவிலக்கும் சலுகையும் வழங்கவில்லை. ஆனால் 2015 ஆம் ஆண்டு திருத்தம் இந்த இரு தனியார் தொழில்களையும் சட்டதிருத்தத்தின் மூலம் அனைத்து விதிவிலக்குகளும் சலுகைகளும் வழங்கியுள்ளது.

2013 ஆம் ஆண்டு சட்டத்தின்படி நிலம் கையகப்படுத்தலின்போது தவறிழைக்கப்பட்டால் அந்த துறையின் தலைமை  அரசு அதிகாரி பொறுப்பாக்கப்படுவார். 2015 ஆம் ஆண்டு சட்டத்திருத்தத்தின்படி அரசு அனுமதித்தால்தான் அதிகாரியை பொறுப்பாக்க முடியும். இதன் மூலம் அதிகாரிகளை வைத்து தனியார் முதலாளிகளுக்கு சாதகம் செய்துவிட்டு பின் பிடிபட்டால் அவரையும் தப்பிக்க வைக்க அரசால் முடியும்.

இந்த திருத்தங்கள் நிச்சயம் பொதுமக்கள் நலன் கொண்டு உருவாக்கப்பட்டவையல்ல என்பது புரிந்திருக்கும். இது போன்ற ஒரு சட்டத்திருத்தத்திற்க்கு முந்திக்கொண்டு ஆதரவளித்த அதிமுக அரசும் மக்களுக்கு பெருந்துரோகம் இழைத்துவிட்டது. பாதிக்கப்படும் மக்கள் ஒன்றினைந்து போராடாவிட்டால் இந்த சட்டம் விவசாயிகளையும், ஏழைக்குடும்பங்களையும், சிறுதொழில் புரிவோரையும் நடுத்தெருவுக்கு கொண்டுவந்துவிடும்.

மோடி அரசு கொண்டுவந்துள்ள சட்ட நிலம் கையப்படுத்தும் சட்டம் என்பதைவிட நில அபகரிப்பு திட்டமென்றே சொல்லவேண்டும். இத்திட்டத்தால் பெரும் முதலாளிகள் பயன்பெருவதுதான் நிதர்சனம். Saturday, March 21, 2015

வி ஆர் டி - (முதலாளித்துவத்தின்) எழுச்சியும் வீழ்ச்சியும்

கொங்கு மண்டலத்தின் ஒரு மிகப்பெரும் வணிகம் மற்றும் தொழில் குடும்பத்தின் பின் புலத்தில் உருவான பருத்தி நூற்ப்பாலை -சத்தியமங்கலமத்திலிருந்து கோவை செல்லும் நெடுஞ்சாலையில் உள்ள புஞ்சை புளியம்பட்டியில் அமைந்துள்ள வி ஆர் டி எனப்படு வி ஆர் டெக்ஸ்டைல்ஸ் (பி) லிட்.

சிறுமுகையில் தொழிற்ச்சாலை கொண்டிருந்த சவுத் இண்டியா விஸ்கோஸ் எனப்படும் ரெயான் நூல் ஆலையை நிறுவிய வெங்கடசாமி நாயுடு என்ற மிகப்பெரிய தொழிலதிபரின் வாரிசான வி. ரங்கசாமி நாயுடுவால் அவர்களால் 19 செப்டம்பர் 1956 அன்று நிறுவப்பட்டது. பின் நாளில் அவரின் பேரனான வி. ராதாகிருஸ்னன் அவர்களின் கட்டுப்பாட்டில் இந்த நிறுவனம் வந்தது. 1960 முதல் 2000 வரை இந்த ஆலை இந்தப்பகுதியில் மிகப்பெரும் வேலை வாய்ப்பை வழங்கும் நிறுவனமாக இருந்தது. இந்த ஆலையில் நிறந்தர தொழிலாளியாக இருந்து பணிமூப்படைந்தவர்கள் நிறையபேர். 2000த்தில் ஸ்பின்னிங் மாஸ்டர் எனப்படும் பணியில் இருப்பவர்கள் முப்பதாயிரத்திற்க்கு குறையாமல் சம்பளம் வாங்கிக்கொண்டிருந்தனர். ஏறக்குறைய புளியம்பட்டி மற்றும் சுற்றுப்புறங்களில் பெரும்பாலான நடுத்தரக்குடும்பங்கள் இந்த நூற்ப்பாலையை நம்பி பிழைத்துகொண்டிருந்தன. ஒரு கட்டத்தில் இந்திய அளவில் பருத்தி நூல் உற்ப்பத்தியில் ஏழாவது இடத்தில் இந்த நூற்ப்பலை இருந்தது. பருத்திக்கான சந்தையை நன்றாகப்பயன்படுத்திய நிர்வாகம், தொழிலார்களுக்கு போனஸ் ஊதிய உயர்வு என்று ஓரளவுக்கு நன்றாகவே தொழிலாளர்களை கவனித்து லாபமும் ஈட்டி வந்தது. இந்த நிறுவனத்தின் துணை நிறுவனமாக லட்சுமி கணேசா டெக்ஸ்டைல் என்னும் நிறுவனம் புளியம்பட்டிக்கு அருகிலேயே அமைந்திருந்தது. நிர்வாகத்திற்க்காகவும் வரி காரணங்களுக்காகவும் தனியான ஆலையாக இருந்தபோதும் தொழிலார்கள் தேவைக்கேற்ப்ப ஒரு ஆலையிலிருந்து மற்றொன்றிற்க்கு பகிர்ந்து கொள்ளப்பட்டனர்.

பின்னர் குடும்ப சிக்கல் மற்றும் நிர்வாகக் குளருபடிகளால் முதலில் லட்சுமி கணேசா டெக்ஸ்டைல் நிறுவனம் மூடப்பட்டது. ஆனால் அன்றைய கால கட்டத்தில் ஆலைக்காக உழைத்த பல்வேறு ஊழியர்களுக்கு சரியான பணி இழப்பீடு மற்றும் அரசு நிர்ணயித்துள்ள விதிகளின்படியான நிவாரணம் ஏதும் வழங்கப்படாமல் ஆலையின் ஒவ்வொரு செங்கல்லும் விற்க்கப்பட்டது.

இதே போன்று சிறுமுகையில் இயங்கிவந்த ரெயான் ஆலையான சவுத் இண்டியா விஷ்கோஸ் நிறுவனமும் தொழிலாளர்களுக்கு நிவரணம் வழங்காமல்  1997 ல் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அதே முறையில் தற்ப்போது வி ஆர் டி ஆலையும் மூடப்படவுள்ளது. அங்கு பணியாற்றிய தொழிலாளிகள் கூறுகையில், நிர்வாகச்சீர்கேடே ஆலையின் இந்த நிலைமைக்கு காரணம் எனவும், ஆலை நல்ல லாபத்தில் இயங்கிக்கொண்டிருந்தது எனவும் முதலாளிகளின் குடும்பச்சிக்கல் காரணமாக ஆலையின் பங்குகள் பிரிக்கப்பட்டு ஆலையின் கடன் என்றுமில்லாத அளவுக்கு அதிகமாகிக் கிடக்கிறது என்றும் கூறுகின்றனர். வேலை செய்துவந்த பல ஊழியர்களுக்கு நான்கு மாதத்திற்க்கும் மேல் ஊதியம் வழங்கப்படாமல் இருப்பதாகவும், ஆலைக்கு வரவேண்டிய தொகைகள் கடன்கொடுத்தவர்கள் கைக்கு நேராகச்சென்று விடுவதாகவும் கூறுகின்றனர். தொழிலாளர் பாதுகாப்புப்சட்டத்தின்படி இது போன்ற சூழலில் தொழிலாளர்களுக்கு சேரவேண்டிய ஊதியமும் இழப்ப்பீடும் கொடுத்த பிறகே ஆலையின் சொத்துக்கள் கடன் மற்றும் வர்த்தக வரவு செலவுகளுக்கு  செலவிட முடியும். ஆனால் இந்த விதி முறைகள் பெரும்பாலான நிறுவனங்கள் நடைமுறைப்படுத்துவதில்லையென்றாலும் தன்னுடைய லாபத்திற்க்காக இரவு பகல் பார்க்காமல் உழைத்த தொழிலாளிகளுக்கு அவர்களுக்குறிய ஊதியமும் பங்கும் கொடுக்க ஆவன செய்ய வேண்டியது மனசாட்சியுள்ள முதலாளியின் கடமை. அது அவர் குடும்பப் பாரம்பரியத்தைன்பறைசாற்றும் செயலும் கூட.

இதே சம காலத்தில் இந்த நிறுவனத்தின் நிர்வாகத்திற்க்கு தொடர்புடைய மற்ற நிறுவனங்கள் நல்ல லாபத்தில் இயங்கிக்கொண்டிருக்கின்றன என்ற செய்தியும் நமக்கு கிடைக்கிறது.

லம்போதரா டெக்ஸ்டைல்ஸ் லிட்- கோவை 

நிர்வாகிகள்:

சந்தோஷ் ராதாகிருஸ்ணான் - ஆண்டு ஊதியம் - 7.8 கோடி
விமலா ராதாகிருஸ்ணன்
பாஸ்கோ ஜுலியா - ஆண்டு ஊதியம் 8.4 கோடி

ஸ்ரைக் ரைட் இண்டெக்ரேடெட் சர்வீசஸ் லிமிடெட் - கோவை 

நிர்வாகிகள்:

போஸ்கோ ஜுலியா 
விமலா ராதாகிருஷ்ணன்
ரமேஷ் செனாய் கல்யான்புர்

கோடிகளை லாபமாக அள்ளிச்செல்லும் முதலாளிகள் இக்கட்டான காலகட்டங்களில் நட்டத்தை தொழிலாளியின் தலையில் கட்டிவிட்டு கடந்து சென்றுவிடுவது வாடிக்கையாகிவிட்டது. இந்தப்பிரச்சினையில் தற்ப்போது தொழிலாளிகளுக்காக குரல் கொடுக்க கம்யூனிஸ்டு கட்சி்யைச்சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் திரு. சுந்தரம் அவர்கள் களமிரங்கியுள்ளார். அவரின் முயற்ச்சியின் பலனாக பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு நிவாரணம் கிடைக்கு்ம் என்று தொழிலாளர்கள் ஏக்கத்துடன் காத்திருக்கிறார்கள். அவர்களுக்கு நீதி கிடைக்குமா அல்லது ஏமாற்றம்தான் மிஞ்சுமா என்று காலம்தான் பதில் சொல்லும்.

Wednesday, March 4, 2015

நாட்டின் நிதித்திட்டம் வெளியிடப்பட்டது - உங்கள் குடும்ப நிதி திட்டம்?

ஒவ்வொரு குடும்பமும் நிதித்திட்டத்தை வகுத்துக்கொள்வது இன்றைய காலத்தில் மிகவும் முக்கியமானது. பெற்றோர்கள் நிதிச்சுமையை தாங்கிக்கொண்டிருந்த காலத்தில் இளைஞர்கள்(பொதுப்பால்) இதைப்பற்றியெல்லாம் கவலையடையாமல் தன்போக்கிற்க்கு செலவுசெய்து வாழ்க்கையை கொண்டாடியிருப்பர். பிறகு கல்யாணம் குழந்தை என்றுவந்த பிறகு காசாளுமை தெரியாமல் கடனில் தவிப்பர். அவர்களுக்கும், காசாளுமை மற்றவருக்கும் பயணளிக்கும் என்ற நோக்கோடு இந்த பதிவு.
1. எவ்வளவு சிறிய/பெரிய வருமானம் கொண்ட குடும்பமானாலும் அன்றாட வரவு செலவுகளை ஒரு நோட்டுப்புத்தகத்தில் எழுதத்தொடங்குங்கள். இதன் விளைவை ஒருமாதம் கழித்தி இங்கு வந்து கருத்துப்பதியுங்கள்.

2. அத்தியாவசிய தேவை தவிர மற்ற செலவுகளை தள்ளிப்போட்டுக்கொண்டே இருங்கள். எப்போழுது அது அத்தியவசியமாகிறதோ அப்பொழுது அந்த செலவு பற்றி முடிவெடுத்துக்கொள்ளுங்கள். எது அத்தியவசியம் எது அனாவசியம் என்பதில் தெளிவிருத்தல் மிகவும் முக்கியம்.

3. பெரிய செலவுகளான வீடு மற்றும் மகிழுந்து போன்றவற்றை கடைக்காரர் அல்லது பிரொமொட்டர் கூறியவுடன் அந்த இடத்திலேயே முடிவெடுத்து விடாதீர்கள். எவ்வளவு பெரிய சலுகை, நிர்பந்தம் கொடுத்தாலும் வீட்டில் பேசிவிட்டு முடிவெடுத்து நாளையோ அல்லது அடுத்தவாரமோ வருகிறோம் என்று சொல்லி வீட்டில் அமர்ந்து ஆலோசித்து முடிவெடுங்கள்.

4. குறைந்தது 20% உங்கள் நிகர வருமானம் -வருமானம் ஈட்டும் வகையில்(வட்டியுடன் கூடிய வைப்பு) வைத்துக்கொள்ளுங்கள். அதாவது உங்கள் நிகர வருமானத்தில் 20% தவிர்த்து மீதமுள்ளவற்றையே உங்கள் கையிருப்பு எனக்கருதி மாதச்செலவுகளை திட்டமிடுங்கள். கூடுதல் வருமானங்களில் (போனஸ், பரிசுகள்) 60% சேமிப்பிற்க்குச்செல்லுமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.

5. கடன் வாங்குவது - தீதில்லை. ஆனால் அது உங்களின் வைப்புத்தொகைக்கு கிடைக்கும் வட்டியைவிட ஒன்றறைமடங்கிற்க்கு கூடுதலாக இருந்தால், தவிர்த்துவிடுங்கள். - இது நிறுவனங்களுக்கு பொருந்தாது.

6. மிதிவண்டியில்லையென்றால், இந்த ஆண்டு ஒன்றை வாங்கிவிடுங்கள். இரண்டு அல்லது மூன்று கி மி தொலைவுக்கு குறைவான தனிப்பயணங்களை மிதிவண்டியில் மேற்க்கொள்ளுங்கள்.

7. வங்கி அட்டை(டெபிட் கார்டில்) செலவு செய்பவர்கள் முடிந்தவரை காசைக்கொண்டு ஓரிரண்டு மாதங்களுக்கு செலவு செய்து பாருங்கள். செலவு குறையவில்லையென்றால் அட்டையை தொடருங்கள்.

8. கடனட்டை பரிவர்த்தனையை தாராளமாக கையாளவேண்டாம். அது உங்கள் டெபிட் கார்டைப்போலவே கையாளுங்கள்.

9. ஒவ்வொரு ஆண்டும் அவரவர் திறணுக்கேற்ப்ப ஏதவது ஒரு சொத்தோ அல்லது முதலீடோ செய்வதை குறிக்கோளாய்கொள்ளுங்கள்.

10. காசிற்க்கு மதிப்பு கொடுங்கள். அது உங்கள் உழைப்பின் அடையாளம். அதை நீங்கள் விரும்பாவிட்டாலும் அல்லது அதை மதிக்காவிட்டாலும் அது எங்கு மதிப்பிருக்கிறதோ அங்கு தானாக போய்க்கொள்ளும் - தண்ணீரைப்போல.

Sunday, March 1, 2015

மதுமயமாக்கலும் மதுமயக்கமும்

ஏற்கனவே இதே தலைப்பில் ஒரு நிலையை பதிவுசெய்திருந்த்தேன். அந்த நிலைக்கு அருகில்கூட தான் வந்த தடம் தெரியாது சென்ற பல நண்பர்கள் நேரடி உரையாடல்களில் அவர்களும் மதுமயமாக்கலை எதிர்ப்பதாகவும் அதை மது அருந்தும் தாங்கள் எப்படி வெளிப்படையாக எதிர்க்கமுடியும் என்று கேள்வி எழுப்பினர். நியாயம்தான்.. ஆனால் அந்த கேள்விக்கான பதிலை உங்களிடம் கேட்பதற்க்குப்பின் ஒரு உளவியல் நோக்கமுள்ளது. அது இந்த இனத்தையும் பண்பாட்டையும் சீரழத்து நமது அடையாளங்களை அழித்து நம்மை தனித்தன்மையில்லாதவராய் மாற்றுவது.
நாம் மதுவை ஒழிக்கச்சொல்லி போராடவோ எதிர்ப்பு தெரிவித்தோ கருத்து வெளியிடவில்லை. மாறாக மதுவை அனைவரின் கையிலும் எந்த கூச்சமும் இல்லாமல் கொண்டு சேர்ப்பதை எதிர்ப்பது நமது கடமை. "அப்படியென்றால் பெண்கள், ஏழைகள் மதுக்குடிப்பதை எதிர்க்கிறாயா?" என்று கேட்டிர்களானால், அது எமது நோக்கமல்ல. மதுப்பழக்கம் சிலருக்கு விருந்து(எப்போதாவது) சிலருக்கு மருந்து(மனதில் இறுக்கம் குறைக்க) சிலருக்கு உணவு(அன்றாடம் குடித்தல்). இதில் முதல் இரண்டு வகையினர் மது அடிமை கிடையாது. மூன்றாவது வகை மது அடிமை. முதல் இரண்டு வகையிலிருப்பவர்கள் எப்போதுவேண்டுமானாலும் மூன்றாவது வகைக்கு மாறாலாம். அது அவரின் மனச்சூழலை பொருத்தது. பெரும்பாலும் இவர்கள் மதுவினால் ஏற்ப்படும் சுய மற்றும் சமூகப்பாதிப்புகளை புரிந்து வைத்திருப்பார்கள். இவர்களால் மது இல்லாமல் சாதாரண வாழ்க்கை வாழமுடியும். ஆனால் இந்த மூன்றாவது வகையினரை மதுப்பழக்கத்திலிருந்து மீட்டெடுப்பது மிகவும் சிக்கலானது. அது பல எதிவிளைவுகளைக்கொடுக்கக் கூடியது.
நீங்கள் ஒரு விசயத்தை மறைத்து அந்த விசயம் பற்றி விவாதிக்காமல் போவதால் இரண்டு விளைவுகள் ஏற்ப்படும். ஒன்று உங்களுக்கு தெரியாத விசயங்கள் தெரியாமலேயே போய்விடும். இரண்டு, அந்த விசயத்தைப்பற்றிய உங்கள் எண்ணம் உங்களுக்கே தெரியாமல் உங்களுக்கும் உங்களைச்சுற்றியிருப்பவர்களுக்கும் ஏதாவது பாதிப்பை ஏற்ப்படுத்திக்கொண்டிருக்கும். ஆதாலால் முடிந்த அளவுக்கு எந்த விடயம் உங்களை உருத்துகிறதோ அதை நம்பிக்கையுடைய நண்பர் அல்லது வாழ்க்கைத்துணையுடன் பகிர்ந்து தீர்வுகண்டுகொள்வது நல்லது. அந்த வகையிலேயே மதுவைப்பற்றிய நமது எண்ணங்களை தெளிவுபடுத்திக்கொள்வது ஒரு நல்ல விளைவை சமுதாயத்திற்க்கு ஏற்ப்படுத்தும் என்று நம்பலாம். சரி இதை எந்த பக்கச்சார்பும் இல்லாமல் அணுக சமுதாயத்திற்க்கு இன்று ஏற்ப்பட்டுள்ள சிக்கலை புரிந்துகொள்ள வேண்டும். கீழ்காணும் செய்திகள் நீங்கள் தற்ப்போது அதிகம் கேள்விப்படுபவையாக இருக்கும்,
1. குடித்துவிட்டு வண்டி ஓட்டு சாலைவிபத்தில் இளைஞர்கள் மரணம்.
2. பள்ளி மாணவர்கள் மது அருந்தி தெருவில் மயக்கமடைந்த நிலையில் கிடந்தனர்.
3. கல்லூரிப்பெண்கள் கையில் மதுப்புழக்கம் அதிகரிப்பு.
4. குடிபோதையில் பெண் கற்ப்பழிப்பு.
5. குடிபோதையில் கொலை.
மேல்குறிப்பிட்ட செய்திகள் சில தனிமனித உரிமை சார்ந்தது. மற்றது சமுதாயத்தை பாதிக்கும் செய்திகள். இதில் சமுதாயம் சார்ந்த விளைவுகளுக்கு எதிவினையாற்றுவது நல்ல சமுதாயத்தில் வாழ விரும்புபகர்கள் கடமை. நமது சட்டங்கள் அதற்க்கு ஓரளவு வழிவகுத்து கொடுத்துள்ளது. மேலும் அதை வலுப்படுத்தவும் நிறைவேற்றவும் அரசை நிர்பந்திக்க நமக்கு உரிமை இருக்கிறது. கீழ்காணும் சில உடனடி விளைவுதரக்கூடியவை.
1. பதினெட்டு வயதுக்கு குறந்தவருக்கு மது விற்ப்பது வாங்குவது தண்டனைக்குறிய குற்றம்.
2. மது குறித்த பாதிப்பை மது வாங்குபவருக்கு தெளிவாக தெரியும்படி குறிக்கவேண்டும்.
3. கற்பமாகியிருக்கும் பெண்கள் அல்லது கற்ப்பம் தரிக்க தயாராகிக்கொண்டிருக்கும் பெண்களுக்கு மது குழந்தைபிறப்பில் சிக்கல் உண்டாக்கும் என்பது மருத்துவர்களால் அறிவுருத்தப்படவேண்டும்.
4. மது அருந்தி வாகனம் ஓட்டுவது ஓட்டுனர் உரிமத்தையும் பறிக்கவும், சிறை தண்ணடனைக்குறிய குற்றமாகும்.
5. மது பழக்கத்திலிருந்து விடுபடுவதற்க்கும் மறுவாழ்விற்க்கும் அரசு அனைத்து வாய்ப்புகளையும் ஏற்ப்படுத்திக்கொடுக்கவேண்டும்.
6. மதுப்பழக்கத்தால் ஒருவர் தண்டனை பெற்றால் அதை பதிவு செய்தும், வேலைவாய்ப்பு மற்றும் அரசு உதவி பெறும்போது அந்த தகவலை அடிப்படியாகக்கொண்டு முடிவுகள் எடுக்கப்படவேண்டும்.
7. மதுக்கடைகள் பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள், வழிபாட்டுத்தளங்கள் அருகில் அமைப்பது அனுமதிக்கப்படக்கூடாது.
மது விற்ப்பது அரசின் கொள்கைமுடி அதை நீதிமன்றங்கள் கேட்க முடியாது என்ற ஒரு வரி, மேலுள்ள அனைத்து விதிகளுகும் விலக்காகாது. அரசு தவறு செய்யும்போது நீதிமன்றங்கள் தலையிடமுடியும். ஏனென்றால் நீதிமன்றங்கள் மக்களை அநீதியிலிருந்து காப்பற்றுவதற்க்காக அமைக்கப்பட்டவை. மதுவிற்று வரும் வருமானத்தில் அரசு தனது நலத்திட்டங்களுக்கு செலவளிப்பது கொள்கையாக இருக்கலாம். ஆனால் வீதிக்கு வீதி மதுக்கடைகளைத்திறப்பதும், பள்ளி மானவர்களுக்கு மதுகிடைக்கச்செய்வதும், மது அருந்தி வாகனம் ஓட்டுவோரை தண்டணையிலிருந்து தப்பச்செய்வதும் எந்த வகையிலும் சட்டத்திற்க்குட்படாது. ஒரு அரசு மக்களின் நலத்தைப்பேனுவதை முதற்க்கடமையாகக்கொண்டு செயல்படவேண்டுமேன்பது சாசன விதி. அந்த விதி மீறப்படும்போது நிச்சயம் நீதிமன்றம் தலையிட்டு தீர்வுதருவது அதன் கடமை.
மதுவை எதிர்த்து வீதியில் போராடும் தலைவர்கள் நீதிமன்றத்தில் தீர்வு தேடுவதும், மதுமயமாக்களை எதிர்ப்பதற்க்கு மது அருந்தாமல் இருப்பது தகுதி என்று தனக்குத்தானே தடையேற்ப்பத்திக்கொண்டிருப்பவர்கள் வெளிப்படையாக மதுமயமாக்களை எதிர்க்க முன்வருவதும் இன்றைய தேவை.
நாளை உங்கள் பிள்ளைகளின் கையில் மது எளிதாகச்சேரமல் தடுப்பதற்க்கும், மதுவினால் அடுத்த தலைமுறை மீட்கமுடியாத சிக்கலுக்குள் விழாமல் தடுப்பதற்க்கும் ஒவ்வொரு பெற்றோரும் குரல் கொடுக்கவேண்டும். உங்கள் பிள்ளைகளுக்கு உயர்ந்த கல்வி குடுப்பதும், நல்ல வாழ்க்கைத்துணையமைத்துக்கொடுப்பதும் அவர்களை மகிழ்ச்சியாக வாழவைக்க உதவாது. மாறாக ஒரு சிறந்த சமூக கட்டமைப்பை அவர்களுக்கு ஏற்ப்படுத்திக்கொடுப்பதே பெற்றோறாக நாம் நம் பிள்ளைகளுக்கு செய்யிம் மிகப்பெரிய உதவியாய் இருக்கும்.
பெண்களும் ஆண்களும் இணைந்து எப்படி மதுமயமாக்களை எதிர்த்து மதுக்கைடையை நொறுக்கினார்களோ, அதுபோல் எங்கெல்லாம் விதிகளிமீறி மதுக்கடைகள் இருக்கிறதோ அங்கெல்லாம் மக்கள் களத்திலிறங்கி போராடவேண்டும்.
மது வீட்டுக்கு, நாட்டுக்கு, உயிருக்கு கேடு. அந்தகேட்டை ஒரு அரசு செய்வது நாட்டுக்கு செய்யும் கேடாகும். அதை கேட்பது நீதிமன்றத்தின் கடமையாகும்.