ஒவ்வொரு குடும்பமும் நிதித்திட்டத்தை வகுத்துக்கொள்வது இன்றைய காலத்தில் மிகவும் முக்கியமானது. பெற்றோர்கள் நிதிச்சுமையை தாங்கிக்கொண்டிருந்த காலத்தில் இளைஞர்கள்(பொதுப்பால்) இதைப்பற்றியெல்லாம் கவலையடையாமல் தன்போக்கிற்க்கு செலவுசெய்து வாழ்க்கையை கொண்டாடியிருப்பர். பிறகு கல்யாணம் குழந்தை என்றுவந்த பிறகு காசாளுமை தெரியாமல் கடனில் தவிப்பர். அவர்களுக்கும், காசாளுமை மற்றவருக்கும் பயணளிக்கும் என்ற நோக்கோடு இந்த பதிவு.
1. எவ்வளவு சிறிய/பெரிய வருமானம் கொண்ட குடும்பமானாலும் அன்றாட வரவு செலவுகளை ஒரு நோட்டுப்புத்தகத்தில் எழுதத்தொடங்குங்கள். இதன் விளைவை ஒருமாதம் கழித்தி இங்கு வந்து கருத்துப்பதியுங்கள்.
2. அத்தியாவசிய தேவை தவிர மற்ற செலவுகளை தள்ளிப்போட்டுக்கொண்டே இருங்கள். எப்போழுது அது அத்தியவசியமாகிறதோ அப்பொழுது அந்த செலவு பற்றி முடிவெடுத்துக்கொள்ளுங்கள். எது அத்தியவசியம் எது அனாவசியம் என்பதில் தெளிவிருத்தல் மிகவும் முக்கியம்.
3. பெரிய செலவுகளான வீடு மற்றும் மகிழுந்து போன்றவற்றை கடைக்காரர் அல்லது பிரொமொட்டர் கூறியவுடன் அந்த இடத்திலேயே முடிவெடுத்து விடாதீர்கள். எவ்வளவு பெரிய சலுகை, நிர்பந்தம் கொடுத்தாலும் வீட்டில் பேசிவிட்டு முடிவெடுத்து நாளையோ அல்லது அடுத்தவாரமோ வருகிறோம் என்று சொல்லி வீட்டில் அமர்ந்து ஆலோசித்து முடிவெடுங்கள்.
4. குறைந்தது 20% உங்கள் நிகர வருமானம் -வருமானம் ஈட்டும் வகையில்(வட்டியுடன் கூடிய வைப்பு) வைத்துக்கொள்ளுங்கள். அதாவது உங்கள் நிகர வருமானத்தில் 20% தவிர்த்து மீதமுள்ளவற்றையே உங்கள் கையிருப்பு எனக்கருதி மாதச்செலவுகளை திட்டமிடுங்கள். கூடுதல் வருமானங்களில் (போனஸ், பரிசுகள்) 60% சேமிப்பிற்க்குச்செல்லுமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.
5. கடன் வாங்குவது - தீதில்லை. ஆனால் அது உங்களின் வைப்புத்தொகைக்கு கிடைக்கும் வட்டியைவிட ஒன்றறைமடங்கிற்க்கு கூடுதலாக இருந்தால், தவிர்த்துவிடுங்கள். - இது நிறுவனங்களுக்கு பொருந்தாது.
6. மிதிவண்டியில்லையென்றால், இந்த ஆண்டு ஒன்றை வாங்கிவிடுங்கள். இரண்டு அல்லது மூன்று கி மி தொலைவுக்கு குறைவான தனிப்பயணங்களை மிதிவண்டியில் மேற்க்கொள்ளுங்கள்.
7. வங்கி அட்டை(டெபிட் கார்டில்) செலவு செய்பவர்கள் முடிந்தவரை காசைக்கொண்டு ஓரிரண்டு மாதங்களுக்கு செலவு செய்து பாருங்கள். செலவு குறையவில்லையென்றால் அட்டையை தொடருங்கள்.
8. கடனட்டை பரிவர்த்தனையை தாராளமாக கையாளவேண்டாம். அது உங்கள் டெபிட் கார்டைப்போலவே கையாளுங்கள்.
9. ஒவ்வொரு ஆண்டும் அவரவர் திறணுக்கேற்ப்ப ஏதவது ஒரு சொத்தோ அல்லது முதலீடோ செய்வதை குறிக்கோளாய்கொள்ளுங்கள்.
10. காசிற்க்கு மதிப்பு கொடுங்கள். அது உங்கள் உழைப்பின் அடையாளம். அதை நீங்கள் விரும்பாவிட்டாலும் அல்லது அதை மதிக்காவிட்டாலும் அது எங்கு மதிப்பிருக்கிறதோ அங்கு தானாக போய்க்கொள்ளும் - தண்ணீரைப்போல.
No comments:
Post a Comment