ராஜீவ் கொலையை சரி/ தவறு என்று ஒற்றைச் சொல்லில் கடந்துவிடுவதில் எனக்கு உடன்பாடில்லை. அவர் இந்தியாவிற்கு நல்ல தலைவராக இருந்திருக்கலாம், இன்றைய இந்திய அரசியலின் நிலையை மாற்றியிருக்கலாம். தனிப்பட்ட முறையில் சக மனிதனாக அவரை நினைவு கூறுவதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை.
சரி... இப்போது காங்கிரசுக்காரர்கள் மற்றும் அவர்கள் கூட்டணிக்காரர்கள் சொல்வது போல், ராஜீவ் கொலைக்காக பிரபாகரனை சோனியாவின் வழிகாட்டலில் முடித்துக் கட்டினார்கள், அதனால் பிரபாகரனின் தவறான முடிவுகளே காரணம் என்பதை ஏற்றுக்கொள்வோமானால்,
அமைதி காக்கச் சென்ற இந்தியப் படை தமிழ் மக்களின் மீதான அடக்குமுறையையும், வன்முறையையும் ஏவிவிட்டது யார்? ராஜீவின் ஆணையால் இந்திய ராணுவத்தால் கொல்லப்பட்ட தமிழர்களின் குடும்பங்களில் சோனியாவைப் போல கணவன்மார்களையும், சகோதரிகளையும் இழந்தவர்களுக்கு இருந்த பழிதீர்க்கும் ராஜீவின் முடிவும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியதில்லையா?
அமைதிப் பேச்சு வார்த்தைகாலத்தில் இந்தியாவின் அரசியல் தந்திரங்களை, பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட ஆண்டன் பால சிங்கம் எழுதிய "போரும் சமாதானமும்" என்ற புத்தகம் விரிவாக விவரிக்கிறது. ராஜீவிற்கும், பிரபாகரனுக்குமான மோதலில் தனி மனிதர்களின் ஈகோவே முன் நிற்கிறது. ராஜீவ் இலங்கையும் இந்தியாவின் ஒரு மாநிலமாக நினைத்து பிரபாகரனை தன் அதிகாரத்தில் கட்டுப்படுத்த முயற்சித்தார். போராளிகளின் தலைவரை இந்தியாவில் வைத்து இரண்டு மூன்று நாட்கள் உணவில்லாமல் அடைத்து வைத்து, அவமானப்படுத்தப்பட்டு, மிரட்டல்கள் மூலம் அடிபணிய வைக்க முயற்சி செய்யப்பட்டது. ஒரு புறம் பிரபாகரனை அடைத்து வைத்துவிட்டு இன்னோரு புறம் எதிர் குழுக்களை வளர்த்துவிடவும், இன்னோரு இந்திய அடிமையை வட மாகாணத்தின் முதல்வராக்க இந்தியா நடவடிக்கை எடுத்து வந்தது. அதாவது இனச்சிக்கலை தனது அதிகாரத்தின் மூலம் உதாசினப்படுத்தி தமிழ் மக்களின் விருப்பத்திற்கு எதிராக நடந்து கொண்டது.
இந்த நிலையில்தான் தமிழீழத் தாயக லட்சியத்திற்கு எதிராக இந்தியாவுடன் கைகோர்த்து போராளிகளுக்கும் மக்களுக்கும் எதிராக செயல்பட்ட ஆயுதக் குழுக்கள் குழுக்கள் புலிகளால் கொன்றொழிக்கப்பட்டனர். இதன் நியாய தர்மங்கள் தமிழ்நாட்டிலும், இந்தியாவிலும் இல்லை, தமிழீழ போராட்டக் களத்தில் இருந்தது.
இந்திய ராணுவத்திற்கு எதிரான போரில் புலிகளுக்கு ஆயுதம் வழங்கியது சிங்கள அரசு. இந்தியாவின் பழிவாங்களில் ஒரு நியாயம் இருக்குமானால், ஆயுதம் வழங்கிய இலங்கை அரசிற்கு என்ன செய்தது?.. ஐநாவில் ஆதரவு, பல்லாயிரங்கோடி உதவி. இன்றுவரை எந்தச் சிங்களனாவது இந்தியாவையும், கலைஞரையும் நன்றிமறவாமல் நினைத்திருகிறானானா?
அந்தகாலகட்டத்தில் இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்டதாலோ என்னொவோ எம் ஜி ஆருக்கு புலிகளின் மீதான அனுதாபம் பெரும் ஆதரவாக இருந்தது. அவரின் புலிச் சார்பு தமிழக அரசியலைத் தாண்டியது.
அதே நேரத்தில் கலைஞரின் போராளிகளுக்கான ஆதரவு அரசியல் நெடுநோக்கு எதுவுமில்லாமல், பேட்டை ரவுடிபோல் எதிரிக்கு எதிரி தமக்கும் எதிரி என்பது போல் குழப்பமான சூழ்ச்சியான முடிவுகளையே எடுத்து வந்தார். குறிப்பாக எம் ஜி ஆருக்கு எதிரான அரசியல் நகர்வுகளையே செய்து வந்தார். அதனை மீறியும் அவ்வப்போது நடந்த ஆதரவு நடவடிக்கைகள் கலைஞரைச் சுற்றியிருந்த தலைவர்களின் அழுத்தங்களாக இருந்திருக்காலாம் என்பது பின்னாளில் நடந்த நிகழ்வுகளைப் பார்த்து உணர்ந்து கொள்ளலாம்.
போர்களத்தின் நியாய தர்மங்கள் அரசியல் களத்தின் நியாங்களிலிருந்து வேறுபட்டது. அரசியலில் தோல்வியும் வெற்றியும் இடமாறிக்கொண்டே இருப்பவை. ஆனால் போரில் ஒரு தொல்வி அடுத்த வெற்றியை இல்லாமல் செய்துவிடும். இங்கு தோட்டாவிற்கு தோட்டா, எரிகுண்டுக்கு எரிகுண்டே பதில். ஆயுதத்தை வைத்துக்கொண்டு அதிகாரத்தை நிறுவ இன்னொரு ஆயுதம் தரித்த போராளிகளுடனான மொதலில், இழப்புகள் இருபுறமும் இருக்கும் என்பது எதார்த்தம். அவரவர்க்கான நியாயங்கள் அவர்களிடம் இருக்கத்தான் செய்கிறது. இதில் களத்தில் இல்லாமல் போராட்டக்காரர்களின் கால்களை வாரிவிட்ட துரோகிகள் எதிரிகளைவிடவும் ஆபத்தானவர்கள். எதிரிகளைக் கூட யுத்த தர்மத்தின்படி அவனின் நியாயங்களுடன் ஏற்றுக்கொண்டு மதிக்கலாம். ஆனால் துரோகிகளை ஒருபோதும் மறக்கவும் மன்னித்தலும் ஆகாது.