Sunday, December 14, 2014

என்னாடுடைய இயற்க்கையே போற்றி - 6


(என்னாடுடைய இயற்க்கையே போற்றி. இயற்க்கை வேளான் ஆசான் ஐய்யா நம்மழ்வாரின் கட்டுரைத்தொடர் - விகடன் பிரசுர வெளியீடு)


ஒரு ஏக்கர் நிலம்... அரை கிலோ மண்... துல்லியப் பரிசோதனை?

யற்கையைப் புரிந்துகொள்வதில் அடிப்படையிலேயே தவறு நடக்கும்பட்சத்தில், அதற்காகத் தீட்டப்படும் திட்டங்களிலும் கண்டிப்பாகத் தவறுகள் இருக்கத்தான் செய்யும். அந்த மாதிரியான தவறான திட்டங்களில் ஒன்றுதான் மண் பரிசோதனைத் திட்டம். 

‘உழவுத் தொழிலில் விஞ்ஞானத்தைப் புகுத்துகிறோம்’ என்ற பெயரில், ஏகப்பட்ட மண் பரிசோதனைக் கூடங்கள் நிறுவப்பட்டுள்ளன. மண்ணைப் பரிசோதனை செய்து, அதில் உள்ள தனிமங்களின் அளவுகளைச் சுட்டிக்காட்டி, பயிர்களுக்குக் குறிப்பிட்ட தனிமங்களைக் குறிப்பிட்ட விகிதத்தில் இடவேண்டும் என்று பரிந்துரையும் செய்கிறார்கள்.

முழுமையாக இயற்கை வழியில் உழவுத் தொழில் செய்து, அதில் உயர் விளைச்சலை எடுக்க முடியும் என்பது தற்போது நிரூபிக்கப்பட்டுவிட்ட விஷயம். இயற்கை வழியில் பயிர் செய்பவர்கள், மண்ணை சோதிப்பதும் இல்லை; சோதனை அடிப்படையில் இடுபொருட்களைக் கொட்டுவதும் இல்லை. அவர்கள், மண்ணில் உள்ள நுண்ணுயிர்களுக்கும் பேருயிர்களுக்கும் தீனி கொடுப்பதை மட்டும்தான் செய்கிறார்கள்.

ரசாயன விஞ்ஞானிகள் அதிகம் பரிந்துரை செய்வது, தழைச்சத்து (நைட்ரஜன்) உரத்தைத்தான். ஆனால், இந்த நைட்ரஜன் வாயு, அண்டவெளியிலும் மண்ணிலும் சேர்த்து 78% உள்ளது. தாவர, விலங்குக் கழிவுகளை மட்டும் நிலத்தில் சேர்த்தால் போதும். அதிலுள்ள நுண்ணுயிர்கள் காற்றில் உள்ள நைட்ரஜனை வேரிலோ அல்லது வேருக்குப் பக்கத்திலோ சேர்த்துவிடும் என்பது இயற்கை விவசாயிகளுக்கு நன்றாகவே தெரியும். 

ஒரு ஏக்கர் நிலத்தில் 18 சென்டிமீட்டர் ஆழத்துக்கு உழும்போது கிட்டத்தட்ட ஒன்பது லட்சம் கிலோ மண் புரட்டப்படுகிறது. ஆனால், மண்ணியல் நிபுணர்களோ தோட்டத்தில் அரைக் கிலோ மண்ணை ஆய்வுக்கூடத்துக்கு எடுத்துச் சென்று, அதில் ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி மண்ணைத் தண்ணீரில் கரைத்து சோதனை செய்து, துல்லியமாக ஒரு முடிவைச் சொல்கிறார்கள்.

‘இது எப்படி ஒரு ஏக்கர் நிலத்துக்கும் பொருந்தும்?’ என்று கேட்டால், ‘பொருந்தும்’ என்பது மட்டுமே பதிலாக இருக்கிறது!

உலகில் எதுவுமே துல்லியமானதாக இல்லாதபோது, மண் பரிசோதனை மட்டும் எப்படி துல்லியமாக இருக்கும். எத்தனை தடவை சோதனை செய்தாலும், எதையும் துல்லியமாகக் கண்டுபிடிக்க முடியாது என்பதுதான் உண்மை. 

‘ஒரு செடியில், ஒரு தனிமம் நிறைய சேமிக்கப்படலாம். ஆனால், மண்ணில் இருப்பது அறியப்படாமல் இருக்கலாம். காரணம், மிகச் சிறு அளவில் மண்ணில் உள்ள தனிமங்கள் சோதனையாளர் ஆய்வுக்குள் அடங்குவதில்லை’ என்று, மண் ஆய்வாளர் ஒருவர் கூறியிருக்கிறார்.

ஆய்வாளர்களின் கூற்றுப்படி, ஆறு அங்குல ஆழத்தில் இருந்துதான் தாவர வளர்ச்சிக்குத் தேவையான தாதுக்கள் கிடைக்கின்றன என்றால், ஆழமாக வேர்விட்டு ஓங்கி வளரும் தாவரங்களுக்கு எங்கிருந்து இந்தத் தாது உப்புகள் கிடைத்திருக்கும்? 

நிலத்தில் 100 அடிக்குக் கீழே உள்ள தண்ணீர்கூட, சில சமயங்களில் ‘தந்துகி’கள் (capillary) வழியாக மேல் நோக்கி வருகின்றன. அப்படி வரும் தண்ணீர், தாது உப்புக்களையும் கரைத்துக்கொண்டு வருகிறது. அதன் மூலமாகத்தான் மரங்களுக்குத் தேவையான சத்துகள் கிடைக்கின்றன. அதனால்தான் காடுகளில் உள்ள மரங்கள் செழித்து வளர்ந்து நிற்கின்றன. அதனால்தான் மேல் மண்ணைச் சோதிப்பவர்களின் ஆய்வில் தாது உப்புக்கள் புலப்படுவதில்லை.

ஃபிஜி தீவில் கரும்புத் தோட்டத்தில் கங்காணியாக வேலை பார்த்த வேளாண் பட்டதாரியான ‘நார்மன் கார்யூ’, ‘மண்ணில் தாவர, விலங்குக் கழிவுகள் மட்கிய நிலையில் இருந்தால், மண்ணின் மேற்பரப்பில் ‘வெடியம்’ உட்பட எல்லாத் தாது உப்புக்களும் வந்து விடுகின்றன’ என்று சொல்லி இருக்கிறார்.

ரசாயன விவசாயியான ‘எட்வர்டு ஃபால்க்னர்’ எழுதிய ‘மண்ணில் புத்துயிர்ப்பு’ எனும் நூலில், ‘ரசாயனத்தை நிறுத்திவிட்டு, நிலத்தில் கழிவுகளை மட்டுமே போடத் தொடங்கி, நான்கு ஆண்டுகளில் பெரிய அளவில் விளைச்சல் கிடைக்கவில்லை. ஐந்தாவது ஆண்டில் ஒரு ஏக்கரில் 21 டன் தக்காளிப் பழம் விளைந்தது. அந்த நான்கு வருடங்களில் ரசாயன உப்புக்களைக் கொட்டி நான் விளைச்சல் எடுத்திருக்க முடியும். ஆனால், கெடுக்கப்பட்ட நிலம் மீண்டும் தன்னைப் புதுப்பித்துக்கொள்ள முடியும்! என்பதை நிரூபிக்க முடியாமல் போயிருக்கும்’ என்று தன் அனுபவத்தைச் சொல்லி இருக்கிறார். 

அமெரிக்க வேளாண் துறை, 1948-ம் ஆண்டு வெளியிட்ட ஆண்டு மலரில் வெளியிட்டிருந்த சில விஷயங்கள் உங்கள் பார்வைக்கு:

அயோடின் பற்றாக்குறையால் கழுத்துப் பகுதியில் கழலை வருவது யாவரும் அறிந்ததே. மணற்பாங்கான நிலங்களில் அயோடின் பற்றாக்குறை காணப்படுகிறது. களி நிலங்களில் அயோடின் பற்றாக்குறை காணப்படவில்லை. அமில நிலங்களில் செடிக்கு அயோடின் எளிதாகக் கிடைத்துவிடுகிறது. உவர் நிலங்களில் அவ்வளவு எளிதாகச் செடிகளால் அதை எடுக்க முடிவதில்லை. 

தாவர மட்கு அதிகம் உள்ள இடங்களில் அயோடின் பற்றாக்குறை இல்லை.

சுண்ணாம்பு இடப்பட்ட நிலத்தில் காப்பர் சல்பேட் இடுவதால் காப்பரின் அளவு உயரவில்லை. இதிலிருந்து, உவர் நிலங்களில் செடிகளுக்குக் கிட்டும் வடிவத்தில் அது இல்லாமல் இருக்கலாம் எனத் தெரிய வருகிறது.

மண்ணில் உள்ள மாங்கனீசுக்கும் செடியில் உள்ள மாங்கனீசுக்கும் சம்பந்தமே இல்லை. மண்ணில், கிட்டும் நிலையில் (Available Form) மாங்கனீசு இல்லாமல் இருக்கலாம். குறிப்பாக, களர் நிலத்தில் இது மிகவும் பொருந்தும்.

அமில நிலமானாலும் உவர் நிலமானாலும் மண்ணில் இருப்பதைப் பொருத்தே செடியிலும் ‘மாலிப்டினம்’ காணப்படுகிறது. களர் நிலத்தில் உள்ள செடி, அதிகமான மாலிப்டினத்தை எடுத்துக் கொள்கிறது. சில செடி இனங்கள், கூடுதலாகவும் எடுத்துக் கொள்கின்றன. அமெரிக்காவில் மாடுகளில் மாலிப்டினம் நஞ்சு கலந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 

தாவர, விலங்குக் கழிவுகளை நிலத்தில் இடும்போது இயற்கையிலேயே அமிலங்கள் சுரக்கின்றன. இப்படிச் சுரக்கின்ற அமிலங்களால் செம்பு, அயோடின், மாங்கனீசு போன்ற தனிமங்கள் செடிக்குக் கிடைக்கின்றன. மாடுகளில் காணப்படும் மாலிப்டினம் நஞ்சும் மறைகிறது.

No comments:

Post a Comment