Saturday, October 20, 2018

சைக்கிள்

பிறந்த நாள் முதல் நமக்குள் நடக்கும் ஒவ்வொரு படி நிலை வளர்ச்சியும் மனிதனின் பண்நெடுங்கால பரிணாம வளர்ச்சியின் ஒரு பாஸ்ட் பார்வாட் அல்லவா. பிறழ்தல், தவழ்தல், நடத்தல் என்று எதுவுமே ஒன்றரையாண்டுகளுல் நடந்து முடிந்துவிடவில்லை. ஒவ்வொரு படி நிலையையும் பல நுறு ஆண்டுகள் கடந்த மனித இனம் எட்டியிருக்கிறது. மனித இனத்தின் வாழ்வியல் சூழலுக்கு ஏற்ப அதன் உடலமைப்பு தகவமைத்துக்கொள்கிறது. பறக்கும் தேவையிருப்பின் இறகுகள் முளைத்திருக்கும்.

எனக்கு நினைவு தெரிந்த நாட்களில் முக்கியமான பருவம், சுயமாக சைக்கிள் ஓட்டுவது. இரண்டாவது படிக்கும்போது என்று நினைக்கிறேன், சைக்கிள் ஓட்ட வேண்டும் என்ற ஆவல் எங்கிருந்தோ தொத்திக் கொண்டது. அந்த வயதிற்கான உயரத்திற்கு அப்பாவின் சைக்கிளை ஸ்டாண்டு போட்டு நிறுத்தியபின் முக்கோனச் சட்டத்திற்குள் காலை விட்டு பெடலைச் சுற்றிப்பழகிக் கொள்வதுதான் ஆகச்சிறந்த சைக்கிள் அனுபவம். அதிலும் இரவில் பின் சக்கரத்துடன் இணைந்து சுற்றும் டைனமோவின் உதவியுடன் ஒளிவிளக்கை இயக்கி வண்டியை ஓட்டுவது அவ்வளவு அலாதியானது. டைனமோவை இயக்க ஏதுவாக பின் சக்கர டயரின் வரி வரியான அமைப்பு எதற்கு என்ற கேள்விகள் எதுவும் அப்போது எழவில்லை.

Image result for india old cycles with dynamo

பிறகு முருகன் சைக்கிள் கடையில் சிறுவர்களின் உயரத்திற்கு ஏற்ப வகை வகையான சைக்கிள்களை வரிசையாக நிறுத்தி வைத்திருப்பார்கள். பள்ளிக்கூடம் செல்லும் ஒவ்வொரு நாளும் அந்த சைக்கிள்களைப் ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டே செல்வதுண்டு. அதை வாடகைக்கு எடுத்து ஓட்ட தெரிந்த ஒரு நபருடன் செல்ல வேண்டும். சைக்கிளே ஓட்டத் தெரியாதவனுக்கு சைக்கிளை எப்படி வீட்டுவரை கொண்டு வந்து பின்பு ஓட்டுவது என்ற பல கேள்கவிகளுக்குப் பின் அந்த முயற்சி தள்ளிப் போடப்பட்டு வந்தது.

ஒரு மணி நேரத்திற்கு ஒரு ரூபாய் வாடகைக்கு அந்த சைக்கிள்களை எடுத்து ஓட்டலாம். சனி மற்றும் ஞாயிறுகளில் நமக்குப் பிடித்த நல்ல சைக்கிள்கள் மற்றவர்களுக்கும் பிடிக்குமென்பதால் அவை நமக்குக் கிடைக்காது. பழைய கவர்ச்சியில்லாத சைக்கிள்களே கிடைக்கும். பல நாள் தயக்கித்திற்குப் பிறகு ஒரு சைக்கிளை ஒரு ரூபாய் கொடுத்து பெயர், முகவரி கொடுத்து எடுத்தாகிவிட்டது. கடை முன்னாலேயே சைக்கிளை ஓட்ட முயற்சி செய்து கீழே போட்டு ஓட்டத் தெரியாது என்று கடைக்காரர் தெரிந்து கொண்டால் சைக்கிளைத் தரமாட்டார். ஆகவே சைக்கிளை எதிரே உள்ள காய்கறி மார்க்கெட் வழியே தள்ளிக் கொண்டு வந்து சைக்கிள் கடை கண்ணில் மறைந்த பின் நண்பனின் உதவியுடன் சைக்கிளில் ஏறி அமர்ந்தாகிவிட்டது. ஹேண்டில் பாரைப் பிடித்துப் பழகுவதே ஒரு கலை. அதற்குப்பின் பெடலை மிதித்து வண்டியை இயக்குவது இன்னொரு நுட்பம். இரண்டையும் இணக்கமாகச் செய்தபின் எதிரே ஆள் வந்தாலோ, குறுக்கு வண்டியேதும் வந்தாலோ பிரேக்கைப் பிடித்து வண்டியை விழாமல் நிறுத்துவது மிகவும் சிக்கலான நுட்பம். இந்தப் படிநிலைகளைக் கடந்து சைக்கிளை யாருடைய துணையுமில்லாமல் தனியாக இயக்குவதற்குள் பல முறை கீழே விழுந்து கை, கால், பல் என பல இடங்களில் நினைவுச் சின்னங்களைப் பெற்றிருப்போம்.


ஒரு வழியாக சின்ன சைக்கிளை தனியாக இயக்குமளவிற்கு பயிற்சி பெற்றாகிவிட்டது. அடுத்தது? பெரிய சைக்கிளில் தனியாக குடங்கு பெடல் அடிப்பது. அதற்கு அப்பாவிற்கு தெரியாமல் சைக்கிளை எடுத்து இயக்கும் துணிவும், கீழே விழுந்தால் உடலுக்குக் காயங்கள்  ஏற்பட்டாலும் சைக்கிளுக்கு எந்த பாதிப்பு மில்லாமல் வீடு கொண்டு வந்து சேர்க்கும் சாமர்த்தியமும் வேண்டும். ஸ்டாண்டு போட்டு நின்று கொண்டிருக்கும் சைக்கிளை ஓட்டுவதற்கும் சக்கரம் தரையில் பட்டு ஓடும்படி ஓட்டுவதற்கும் பெரும் வித்தியாசம் உண்டு. முன்னதில் மனம் மட்டுமே நகரும், தரையும் சைக்கிளும் அங்கேயே நின்றிருக்கும். பின்னதில் தரையும் சைக்கிளும் இணைந்து நகரும். அதை நமது மூளை உள்வாங்கிக் கொண்டு எந்தப் பக்கமும் சாய்ந்து விழாமல் ஒரு காலை முக்கோணச் சட்டத்திற்குள் விட்டு பெடலை மிதித்து ஓட்ட வேண்டும். நிறுத்தும் போது முக்கோணச் சட்டத்திற்குள் இருந்தவாரு இரண்டு கால்களையும் தரையில் வைத்து ஓடி பிரேக்கைப் பிடித்து நிறுத்த வேண்டும். மீண்டும் வண்டியை ஓட்ட சற்று உயரமான கற்களோ, படிக்கட்டுகளோ உள்ள வீட்டைத் தேர்ந்தெடுத்து அதில் நின்று கொண்டு வண்டியை உந்தி பெடலை மிதிக்க வேண்டும். சில நேரங்களில் பின்னிருந்து தள்ள நண்பன் இருந்தால் சைக்கிளைக் கிளப்புவது எளிதாக இருக்கும்.

அக்காவிற்கு அவள் பள்ளி ஊருக்கு வெளியே இருந்ததால் அவள் உயர் நிலைப் பள்ளி சென்றவுடனே சைக்கிள் கிடைத்து விட்டது. அது பெண்களுக்கான சைக்கிள். அப்பாவும் அவ்வப்போது அதை ஓட்டுவார். பிறகு கூச்சமெல்லாம் விட்டுவிட்டு நானும் சில நாட்கள் ஓட்டினேன். அவ்வப்போது அதில் சண்டையும் வரும். நான் உள்ளூரில் நடந்து செல்லும் தொலைவில் பள்ளிக்குச் சென்றதால் சைக்கிள் கிடைக்கவில்லை. நடந்துதான் பள்ளிக்குச் செல்ல வேண்டும்.

Related image

வெகு காலத்திற்குப் பின் அப்பா ஒரு சைக்கிள் வாங்கித் தந்தார். அது ஒரு நெருங்கிய உறவினர் பயன்படுத்திய சைக்கிள். பஜாஜ் கம்பெனி சைக்கிள். நான் பஜாஜ் கம்பெனி சைக்கிள் தயாரிக்கிறது என்று அப்போதுதான் தெரிந்து கொண்டேன். பரவலா ஹீரோ, ஹெர்குலிஸ் சைக்கிள்களே புழக்கத்தில் இருந்தது. நண்பர்கள் புதிய பையன்களுக்கே உருவான சைக்கிள்களை ஓட்டிக் கொண்டிருந்த போது எனக்கு பழைய பஜாஜ் சைக்கிள் கிடைத்தது மகிழ்சியாகத்தான் இருந்தது. நானாவது பழைய சைக்கிளில் வருகிறேன் பின்னால் ஒருவர் சைக்கிளில்லாமல் நடந்து வருகிறார் என்ற கவுண்டமணியன்னனின் நகைச்சுவை போல மகிழ்ச்சியாக ஏற்றுக்கொண்டேன்.

பிறகு தூக்கநாயக்கன் பாளையத்தில் பாலிடெக்னிக் சேர்ந்த பின் கொஞ்ச காலம் தினமும் பேருந்தில் சென்று வந்து கொண்டிருந்ததேன். பேருந்துப் பயணம் ஒரு நாளின் அதிக நேரத்தை எடுத்துக் கொண்டதால், ஊருக்குள் ஒரு தனியறை எடுத்து நானும் நண்பனும் தங்கி கல்லூரிக்குச் சென்று வந்தோம். கல்லூரி ஊரிலிருந்து காட்டிற்குள் இரண்டு மைல் தொலைவில் இருந்தது. சத்தி - அத்தாணி ரோட்டில் தூக்க நாயக்கன் பாளையத்தில் இரு தார் சாலை பிரிந்து கல்லூரி வழியாக மீண்டும் பங்களாப்புதூர் அருகே அதே ரோட்டில் வந்து சேரும். நேரத்திற்குச் சென்றால் வழக்கமாகச் செல்லும் 3பி, 3சி பேருந்தில் கல்லூரிக்குச் சென்று விடலாம். ஆனால் தனிவீட்டில் தங்கியிருந்த காலத்தில் வசந்தி மெஸ்ஸில் காலை உணவு முடித்துவிட்டு செல்கையில் பேருந்தை கோட்டைவிட்டிருப்போம். அதுவும் போக பேருந்து நிறுத்தம் சற்று தொலைவில் இருந்தது. சைக்கிள் கொண்டுவருவதற்கு முன் குறுக்கு வழியொன்று இருந்தது. அது ஒரு சுடுகாட்டின் வழியாக கல்லூரியை அடையும் வழி. தனியாகச் செல்வது சற்று அச்சமூட்டுவதாகத்தானிருக்கும். ஏனென்றால் யாருமில்லாத கருவேலங்காட்டில் ஒத்தையடிப் பாதையில் கொஞ்ச தூரம் நடந்த பின் சுடுகாட்டைக் கடந்த பின்னரே தார்ச் சாலை வரும். தார்ச்சாலையை அடையுமிடத்தில் சில குடிசைகள் இருக்கும். அந்தப் பகுதியில் கள்ளச்சாராயம் காச்சப்படுவதாக சில நாட்களுப்பின் நண்பர்கள் சொல்லித் தெரிந்தது. கல்லூரியை அடைவதைவிட சற்று பயத்தைத் தந்தது. 

ஆழ்ந்த சிந்தனைக்குப் பின் ஊரிலிருந்து சைக்கிளைக் கொண்டுவந்து அதை தினமும் கல்லூரிக்குச் செல்ல பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்யப்பட்டது. புளியம்பட்டியிலிருந்து சத்தி வழியாக தூக்க நாயக்கன் பாளையத்திற்கு 38 கிலோ மீட்டர் தூரத்தைக் கடந்து தனியாக சைக்கிளை ஓட்டி வந்து சேர்ந்தேன். பிறகு நண்பனும் கூடவே அறையில் தங்கியிருந்ததால் இருவரும் சைக்கிளில் கல்லூரி பயணம் செய்து வந்தோம். கல்லூரிக்காலம் முடிந்த பின் அந்த சைக்கிளை முருகன் சைக்கிள் ஸ்டோரிலேயே அப்பா விற்று விட்டார்.

சைக்கிளில் பயணித்த காலங்கள் பல நினைவுகளை வடித்துச் சென்றிருக்கிறது. வெவ்வேறு காலங்களில் சைக்கிள் ஒரு உற்ற நண்பனைப் போலவே உடன் வந்திருக்கிறது. அதை வெறும் இன்னொரு இயந்திரமாக கருதிவிட்டுச் சென்று விட முடியவில்லை. நண்பரில்லாதவனுக்கும் சைக்கிள் ஒரு பெரும் துணையாக நிச்சயம் இருந்திருக்கும்.. அது காலத்தால் அழிக்க முடியாத நினைவுகளை சேமித்து வைத்திருக்கும். வழியில் பார்க்கும் ஏதாவது ஒரு சைக்கிள் நம் பழைய நினைவுகளைக் கிளறிக்கொண்டு வந்து விடும். அவை ஆட்களை மட்டும் கடத்துவதில்லை. ஆட்களோடு சேர்ந்து அவர்கள் வாழ்கையையும் காலத்தோடு கடத்துகிறது. சைக்கிள் இல்லாதவன் வாழ்கையின் மிக முக்கியமான அனுவபவத்தை இழந்திருப்பான் என்று நிச்சயமாகச் சொல்லலாம். 

No comments:

Post a Comment