Sunday, May 17, 2009

முடிவின் தொடக்கம்

எல்லோராலும் எதிர்பார்த்ததாக தேர்தல் முடிவுகள் இல்லாவிடினும், கொடுத்தவர் எதிர்பார்த்த முடிவுவாகவே இருக்கிறது. எத்தனை ஊடகங்கள், எத்தனை ஆர்வளர்கள், எத்தனை பரப்புரைகள்?... எல்லாம் மண்ணாய் போனது பணத்தாலே. ஒட்டு மொத்தமாக இந்த தேர்தலை பணம் மட்டும் வென்று விட்டது என்று சொல்லி இந்த தேர்தல் முடிவுகளை ஒதுக்கிவிட முடியாது. அது ஆளுங்கட்சி பெற்ற வெற்றிகளுக்கு வேண்டுமானால் காரணமாக இருக்கலாம். ஆனால் எதிர்கட்சிகள் பெற்ற தோல்விக்கு நிச்சயம் அது மட்டும் காரணமல்ல.
சந்தர்பவாத அரசியல், அரசியல் வியாபரமயமாகிப்போனமை, கொள்கை இல்லாக் கூட்டணி மற்றும் தலைவர்களின் மேல் மக்கள் கொண்ட நம்பிக்கை போன்றவை மறுக்க முடியாத காரணிகள்.

பணம் கொடுத்து வாக்குப் பெற்று வெற்றிகளை குவிக்க முடியும் என்று தமிழகம் ஒரு தவறான முன்னுதாரணத்தை காட்டி நின்றும், எதிர்காலத்தில் சன நாயகத்தின் மீதான நம்பிக்கையும் அதைக்கொண்டு பின்னப்பட்ட அரசியலமைப்பும் அதை தாங்கி நிற்கின்ற அடிப்படை கோட்பாடுகளும் அதன் நம்பிக்கைத்தன்மையை கேள்விக்குறியாக்கிவிடும் என்பதில் ஐயம் இல்லை.

அதே நேரம் பணத்துக்கு வாக்களிக்கும் வாக்காளன் தான் அதைச் செய்யாமல் தவிர்த்த வாக்காளனுடைய தலைவிதியையும் தீர்மானிப்பவன் என்றால் அதற்க்கு வாய்ப்பளிக்கும் அரசியலமைப்பை, சிறுபான்மை சிந்தித்து வாக்களிப்பவர்களின் கோபம், அதன் விழைவால் உருவாகப்போகும் அணுகுமுறையும் சிதைக்கும் வாய்ப்புகள் அதிகம்.

"உங்களைத்தான் நம்பியிருக்கிறோம் எங்களுக்கு ஒரு விடிவு தாருங்கள்" என்று அழுத ஓரு இனத்தின் அங்கத்திற்க்கு இன்னொரு அங்கம் செவிசாய்க்காத போது, நிச்சயம் அவர்கள் உதாசினப் படுத்தப் பட்டார்கள் அல்லது அவர்களின் குரல் இன்னும் இந்த பாமர மக்களிடம் போய்ச்சேர வில்லையோ என்ற கருத்தோட்டங்களை ஏற்படுத்துகிறது. இதில் உண்மை இரண்டாவது காரணமாக இருக்குமானால், அது சரி செய்யப்படலாம். ஆனால் அது முதல் காரணமாக இருப்பின் அந்த இனம் அதன் அழிவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது என்பது உறுதி.

அவர்ளுக்கான விடிவை அவர்களே தேடிக்கொள்வார்கள், அல்லது காலம் அவர்களுக்கு அதை கொடுக்கும். அந்த நேரத்தில், அழிவின் தொடக்கத்தை அந்த இனத்தின் இன்னொரு அங்கம் அடைந்திருக்கும். கலாச்சாரம், பண்பு, மொழி என அனைத்திலும் கலப்பை ஏற்படுத்தி தன் இனத்தை தானே அழித்து மாயையான தேசிய கோட்பாடுகளை தலைமேல் தூக்கிவைத்து தன் அடையாளத்தை இழந்து நிற்க்கும் இன்றைய தமிழக தமிழர்களின் நிலைக்கு அவர்களின் தலைவிதியைவிட தலைவர்களே முதல் காரணம்.

காகம் கூட தன் உறவு இறந்தால் கூடி அழும், ஆனால் இந்த இனம் மட்டும் தன் அங்கத்தையே தின்று பசிதீர்க்கும் குணம் கொண்டது என்பது மறுக்க முடியாத சோகம்.

1 comment: