Friday, August 28, 2015

பட்டேல்கள் சொல்லும் சேதி

இப்போது நடந்துவரும் பட்டேல்களின் இதர பிற்படுத்தப்பட்டவர் இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு கேட்டு போராட்டம் சமூகநீதியை மீளாய்வுக்குட்படுத்தும் நிலை என்ற வட்டத்தைத் தாண்டி அது நவீன உலக ஒழுங்கையும், மாறிவரும் பொருளாதார சூழலையும் சார்ந்து நிற்கும் நிலைக்குச் சென்றுவிட்டது. வைரம், ஆடை உற்பத்தி, மளிகை மற்றும் இன்னபிற வர்த்தகத்தில் ஈடுபட்டுவந்த பட்டேல்கள் இன்று வியாபாரம் நலிவடைந்த பின் பிழைப்பிற்கு அரசு வேலைகளையும், தனியார் துறையில் வேலை வாய்ப்பளிக்கும் கல்வியையும் தேடவேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். இது நாடுகடைப்பிடித்துவரும் பொருளாதாரக் கொள்கையின் விளைவின் ஆரம்பப் புள்ளியே. இது போன்ற சூழல் மற்ற நாடுகளிலும் வந்தது. ஆனால் அங்கு வந்த பாதிப்புகள் அரசை நோக்கி இட ஒதுக்கீடு கேட்காமல் அரசை வேறு வகையான நிர்ப்பந்தங்களுக்கு உட்படுத்தின. அமெரிக்கா போன்ற நாடுகள் உள்நாட்டு வேலைவாய்ப்பை அதிகரிக்க வெளிநாட்டிலிருந்து வேலைக்கு வரும் அந்நியர்கள் மீதான கட்டுப்பாடாகவும், அமெரிக்க உற்பத்திச் சந்தைக்கு முக்கியத்துவமும், சந்தையை ஊக்குவிக்க பல்வேறு வரிச்சலுகைகளையும் நோக்கித் திருப்பியது. இது அமெரிக்காவின் மிக நுண்ணிய வர்க்க வித்தியாசத்திற்கு உகந்த செயல்பாடாக இருந்தது. 


ஆனால் இந்தியா போன்ற நீண்ட வர்க்க இடைவெளி உள்ள நாட்டில் ஒருகாலத்தில் முதலாளிகளாக இருந்தவர்களை இன்று ஒரு வேலையாளுக்கான சலுகைகளை தேடி ஓட நிர்ப்பந்திக்கிறது. இட ஒதுக்கீடு மூலம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் தனது இருப்பை தக்கவைத்துக் கொள்ள செலுத்துகிறது. 

மனிதரை மனிதன் சார்ந்து இருந்த சமூக பொருளாதார சூழல், இயந்திரம் சார்ந்த உறப்பத்தியை நோக்கிச் சென்றதன் விழைவுகள் தான் இப்போது நாம் பார்ப்பது. இந்தச் சிக்கலுக்கு இட ஒதுக்கீடு ஒரு தற்காலிக தீர்வாகத்தான் இருக்க முடியும் அல்லது காலப் போக்கில் ஒரு தீர்வாக இருக்க முடியாது என்ற புரிதலையும் நமக்கு ஏற்படுத்தலாம். பன்னாட்டு வணிக நிறுவனங்கள் இன்னும் முழுமையாகக் காலடி எடுத்து வைக்காத நிலையிலேயே உள்ளூர் வணிகர்கள் உலக சந்தை மாற்றத்தினால் பாதிக்கப் படும்போது, பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் கிளைகளை இந்திய நகரமெங்கும் விரித்த பிறகு ஏறக்குறைய எல்லலா உள்ளூர் வணிகர்களும் வேலைக்காரர்களாகவும், பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தரகர்களாகவும் மாறும் சூழல் ஏற்படும். இயந்திரமயமான சூழலில் வேலைக்கு ஆட்களை எடுக்கும் தேவையும் குறைந்து போகும். அதுபோன்ற ஒரு சூழலில் மக்கள், அரசை இது போன்ற பல நெருக்குதல்களுக்கு உட்படுத்துவார்கள். 

அடுத்த நிலையாக நாடு உலக அரசியல் பொருளாதாரத்தில் எந்த ஆளுமையும் செய்யாத ஒரு நிலையில் இருந்தால், தன் வளங்களை இழந்தது போக, தன் மக்களை பஞ்சத்திற்கும் பட்டினிக்கும் பலி கொடுப்பதைத் தவிர வேறெந்த வழியுமில்லாமல் தனித்து விடப்படும். ஒரு வேளை சென்னைக்கும், பெங்களூருக்கும் வேலை தேட தேவையான கல்விக்குக் கேட்கும் இட ஒதுக்கீட்டை, கலிபோர்னியாவிற்க்கும், நியூயார்க்கிற்க்கும் வேலைதேடும் தளத்தில் இடஒதுக்கீடு கேட்டு போராடும் நிலை வரலாம். அந்தப் போராட்டத்தில் சாதி பேதம் ஏதும் இருக்காது என்றும் நம்பலாம். 

இது போன்ற சிக்கலுக்கு, எல்லாத் தரப்பு மக்களையும் அடக்கிய அரசியல் பொருளாதார கட்டமைப்பை நாடு உருவாக்கிக்கொள்ள வேண்டும். சொல்லப்போனால் இது ஒரு சுயசார்புக் கொள்கையை நோக்கி நகரும் வட்டைப்பாதையே. பொருளாதாரத்தை ஒரு குறிப்பிட்ட மக்களிடம் மட்டுமே கொண்டு சேர்க்கும் கொள்கைகள் மாறி அது சமுதாயத்தின் பல்வேறுபட்ட மக்களின் தொழில்கள் ஒன்றையொன்று சார்ந்திருக்கும் நிலையை நோக்கிய ஒன்றாகவும் இருக்கலாம்.தேவைக்கேற்ற உற்பத்தி, பொருளுக்கேற்ற மதிப்பு, உழைப்புக்கேற்ற ஊதியம் என்பது எந்தவித நிபந்தனைகளுக்கும் உட்படாமல் இருக்கும் காலமாக அது இருக்கலாம்.

No comments:

Post a Comment