Wednesday, July 18, 2018

அரசனும் தெய்வமுமாகிய

எண்தடச் சாலை குறித்து விமர்சனம், எதிர் கருத்து தெரிவித்தால் கைது செய்யும் திரு எடப்பாடியாரின் மனதை புண்படுத்தி நாம் சிறை செல்ல விரும்பவில்லை. ஆகவே எண்தடச் சாலை பொது மக்கள் சொர்க்கத்தில் சேர்க்கும் சாலை, இந்த சாலையில் பயணம் செய்பவர்கள் வீட்டில் செல்வம் கொளிக்கும், தீராத வியாதிகள் தீரும், மணமாகதவர்கள் விரைவில் மணமாவார்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் விரைவில் குழந்தை வரம் பெறுவார்கள், தீராத சொத்துப் பிரச்சினைகள் தீரும். பழனியில் இருக்கும் சாமியின் மறு உருவமே நம் பழநிச்சாமி, அவர் தமிழக மக்களின் நலனைத் தவிர வேறெந்த எண்ணமும் ஒரு கனமும் கொண்டிருந்ததில்லை. மத்தியில் ஆளும் திரு. மோடி அவர்களின் அருளாலும், திரு பழநிச் சாமியின் அருளாலும் தமிழகம் முன்பை விட சுபிட்சமாக இருக்கிறது.

எண்தடச் சாலைக்கெதிராக சூழல் பாதுகாப்பு அமைப்புகளின் குரல்கள், மலைகளை வெட்டி கனிமங்களை கொள்ளையடிக்கும் திட்டம் என்ற கருத்துக்களைத் தாண்டி அந்தப் பகுதியில் வாழும் மக்களின் எண்ணங்களுக்கு எதிராக நிலங்களைக் கையகப்படுத்திவருவது செய்தியாகிறது.
எண்தடச் சாலை என்று சொன்னாலே கைது செய்து சிறையில் அடைக்கும் காவல் துறை இந்தக் கைதுகள் மூலம் ஒரு உலக சாதனையைச் செய்யவிருக்கிறது.

18/07/2018 - நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளார் சீமான் மற்றும் கட்சியினர், விவசாய சங்கத்தினர் 22 பேர்  மக்களைச் சந்தித்து கருத்துக் கேட்டதற்காகக் கைது

17/07/2018 - CPI - ML உறுப்பினர்கள் எட்டுவழிச் சாலை வேண்டாம் என புத்தகம் வெளியிட்டதனால் கைது.

12/07/2018 - சேலத்தில், பசுமை வழிச் சாலைத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்ட இளைஞர் பெருமன்றத்தினர் 11 பேரை காவலாளர்கள் குண்டு கட்டாக தூக்கி சென்று கைது செய்தனர்.

07/07/2018 - எட்டு வழிச்சாலைக்கு எதிராக விவசாயிகளை போராட தூண்டியதாக சிபிஎம் முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி உட்பட 14 பேர் அரூரில் கைது செய்யப்பட்டார்கள்.

04/07/2018 - எட்டு வழிச்சாலைக்கு எதிராக சமூக வலைத்தளத்தில் கருத்துத் தெரிவித்த ஆம் ஆத்மி கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் வசீகரன் கைது.

03/07/2018 - 8 வழி சாலைத் திட்டத்தால் பாதிக்கப்படும் பூமாங்காடு பகுதியை சேர்ந்த தமிழ்செல்வி (வயது 27), விஜயலட்சுமி (32), கவுசல்யா (20), சந்திரா (30), தாரகேஸ்வரி (38), லட்சுமி (30), செல்வி (32), கோகிலா (32) ஆகிய 8 பெண்கள் மற்றும் விவசாயிகள் சின்னப்பன் (50), ராமசாமி (45), காமராஜ் (39), வரதராஜ் (35), குணசேகரன் (55), கிருஷ்ணராஜ் (20), ரமேஷ் (34), ஆறுமுகம் (72) ஆகிய 16 பேரை போலீசார் கைது செய்து, மல்லூரில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். அவர்கள் மீது அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்தல் உள்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

27/06/2018 - 8 வழிச் சாலைக்கு எதிராகப் போராடிய விவசாயிகளுடன் கலந்து கொண்டு போராடியதால் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டில்லி பாபு கைது.

26/06/2018 - சேலம் டு சென்னை, எட்டு வழி பசுமைச் சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மற்றும் பாதிக்கப்பட்ட 5 மாவட்ட விவசாயிகள், தம் வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்றி இன்று எதிர்ப்பு தெரிவித்தனர். இதைப் படம்பிடித்த கேரள செய்தியாளர்களை போலீஸார் கைதுசெய்தனர்.

19/06/2018 - இயற்கை பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த வளர்மதி எட்டு வழிச் சாலைக்கு எதிராகக் கருத்துத் தெரிவித்ததற்கு கைது.

18/06/2018 - இயற்கை ஆர்வலர் பியூஸ் மானஸ் எட்டு வழிச் சாலைக்கு எதிராகக் கருத்து தெரிவித்தமைக்கு கைது.

இரவு 8 வழி பசுமைச் சாலைத் திட்டத்துக்காக நில அளவை செய்யப்பட்டது. தங்கள் நிலங்களில் படுத்துக்கொண்டு நில அளவை செய்ய அனுமதிக்காமல்  எதிர்ப்புத் தெரிவித்த விவசாயிகள் 11 பேர் கைது செய்து வீராணம் காவல் நிலையத்தில் அடைத்து வைத்திருந்து மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டார்கள்.

17/06/2018 - நடிகர் மன்சூர் அலிகான் எட்டுவழிச் சாலைக்கெதிராகக் கருத்துத் தெரிவித்தமைக்காக் கைது.

09/06/2018 - எட்டு வழிச் சாலைக்கு நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக அளவைக் கல் நடுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்த பொதுமக்கள் கூட்டத்தை முன் நின்று நடத்தியதாக கூறி குப்பனூரை சேர்ந்த முத்துக்குமார், நாராயணன், ராஜாகவுண்டர், கந்தசாமி, ரவிச்சந்திரன், பழனியப்பன் ஆகிய 6 பேரை அதிகாலை வீடு புகுந்து அம்மாபேட்டை போலீசார் இழுத்து சென்றனர்.

பூலாவாரி சித்தேரியை சேர்ந்த ரவி என்பவரை கொண்டாலம் பட்டி போலீசார் வீடு புகுந்து இழுத்து சென்றனர்.

இப்படி திட்டம் அறிவித்த நாளிலிருந்து எதிர்ப்புத் தெரிவித்தவர்களை எல்லாம் கைது செய்து சிறையில் அடைத்து விட்டு அவர்களுக்கு புது வாழ்வளித்து அவர்களின் நிலங்களை கையகப்படுத்தி அதில் எட்டு வழிச் சாலை போட்டு, சாலை போடுவதற்கு ஒப்பந்தக் காரர்களிடம் கமிசன் பெற்று, பின்  அந்தச் சாலையை தனியாருக்குக் கொடுத்து அவர்கள் சுங்கம் வசூலித்து வளம்பெறவும், அந்தச் சுங்க டெண்டர் மற்றும் மாதவருமானத்தில் பங்கு பெற்று தாங்கள் வளம்பெறவும், சாலை போடும் போது தகர்க்கப்படும் மலைகளின் கனிமங்களை விற்று வளம்பெறவும் வழிவகை செய்யும் சுவாமியை மக்கள் மனதார பாராட்டி இரு கரம் கூப்பி வணங்க வேண்டும். வணங்குவதோடு மட்டுமல்லாமல், வருடா வருடம் பழநிச் சாமிக்கு மாலையணிந்து பாதயாத்திரை செல்லவேண்டும்.
"அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்" என்ற பழமொழிக்கு அரசனும், தெய்வுமுமாகி உயிர்கொடுத்த பழநிச்சாமி "பல்"லாண்டு வாழ்க...வாழ்க..

No comments:

Post a Comment