Sunday, July 19, 2015

மனிதர்கள்... தெய்வங்கள்

சமீபத்தில் நான் பங்கெடுத்துக்கொண்ட இளம் தலைமுறையினருடனான கலந்துரையாடலில் ஒன்றை புரிந்துகொள்ள முடிந்தது. நமது வாழ்க்கை மற்றும் கல்விமுறை மிகவும் புத்திசாலித்தனமான ஏமாளிகளை உருவாக்கியுள்ளது. மிகச்சிறந்த படிப்பாளிகூட தனக்கு தேவையான பொருளைத்தேடுவதில் சமூகத்தின்பால் எந்த அக்கறையும் காட்டாத ஒரு மூர்கத்தனமான வெறியும் ஒற்றை நோக்கை கொண்டதுமான வழிகளையே தேர்ந்தெடுக்கின்றனர். 

இன்றைய தேவையெல்லாம் தனக்கானது மட்டுமானது என்ற அளவுடன் முடிந்துகொள்கிறது. தனது அடுத்த தலைமுறை பற்றிய சிந்தனை அல்லது அக்கறை கூட இல்லாமல் வாழ்ந்து முடித்துவிட துடிக்கிறது. சமீத்திய தலைக்கவச அரசாணை குறித்த விவாதம் பெரும் அயர்வை ஏற்ப்படுத்திவிட்டது. ஒரு சில மெச்ச படித்தவர்கள் இந்த ஆணைக்கு எதிராக செய்யும் வாதம் முட்டாள்தனமானது மட்டுமல்ல அவர்கள் ஒரு சமூகச்சிந்தனையற்ற காலிகளாக உருவெடுத்து நிற்ப்பது கவலையளிக்கிறது. "எப்படி முடிவெட்டிக்கொண்டு தலைக்கவசம் அணிந்து வாகனம் ஓட்டுவது?", "அரசு சரியான சாலைகளை போட்ட பின் தலைக்கவசத்தை கட்டாயமாக்கட்டும்" என்பது போன்ற கருத்துக்கள் நம்மை நாமே மீளாய்வு செய்யவேண்டிய கட்டத்தில் இருக்கிறோம் என்பதை இடித்துச் சொல்கிறது.

இதைவிடவும் விரக்தியேற்படுத்துவது இளம் மருத்துவ மாணவர்கள் குழுக்களுடன் உரையாடுவது. பெரும்பாலானவர்கள் பொருளாதாரம் சார்ந்த வாழ்க்கை நிலையை குறிக்கோளாகக்கொண்டு இந்த தொழிலை தேர்ந்தெடுத்திருப்பது வேதனையளிக்கிறது. ஓரளவு மதிப்பெண் எடுத்த மாணவர்கள் ஐடி துறையில் கை நிறைய பொருளீட்டும்போது, நல்ல மதிப்பெண் பெற்று நுழைவுத்தேர்வுகளில் தங்கள் அறிவுத்திறமையை நிறுவிப்பெற்ற மருத்துவப்படிப்பு அவர்களை விட அதிகமாக பொருளீட்ட உதவ வேண்டும் என்று மனம்போன போக்கில் மருத்துவ சேவையை ஒரு கொள்ளைத் தொழிலாக பார்க்க தொடங்கியுள்ளனர். திறமையானவர்கள் அதிக பொருளீட்டவேண்டுமென்றால் யார் சமூக அக்கறையுடன் சேவை செய்வது? இலவச மருத்துவம் வேண்டுமென்றால் அரசு மருத்துவமனையை அணுகவேண்டும் என்ற எதிர்வாதம், ஒன்றை புரிந்துகொள்ள உதவுகிறது. இன்றைய கல்வி/வாழ்க்கை முறை ஒவ்வொரு வீட்டிலும் புத்திசாலி கொள்ளைக்காரர்களை உருவாக்குகிறது. 

ஒரு காலத்தில் கல்வியில்லாததால் சமூகத்தில் கொள்ளை, கொலைகள் மற்றும் குற்றங்கள் அதிகமாக நடக்கிறது என்ற பார்வைமாறி எங்கெல்லாம் அதிகம் படித்தவர் இருக்கிறாரோ அங்கெ கொள்ளை, கொலை குற்றங்கள் அதிகமாக நடக்கும், அனைத்தும் சட்டபூர்வமாக. 

இந்தியாவில் 1870ல் ஒரு அமெரிக்க பாதிரி குடும்பத்தில் ஏழு சகோதர்களுடன் பிறந்தவர் இதா ஸ்கட்டர் என்ற பெண்மணி. இவரது தந்தை கிருத்துவ அறத்தை பரப்ப இந்தியாவில் தங்கி சேவை செய்து வந்தார். தன் குடும்பத்தில் தன் ஏழு சகோதரர்களும் பாதிரிகளாக மாறி கிருத்துவ அறத்தின் மூலம் மக்களுக்கு சேவை செய்தபோதும், தான் ஒருபோதும் பாதிரியாக சேவை செய்யப்போவதில்லையென்றும், தான் அமெரிக்காவில் குடியேறி வாழப்போவதாகவும் தன் விருப்பத்தை வெளிப்படுத்திக்கொண்டிருந்தார். அதன்படியே மெஸ்ஸசஸட் பல்கலைகழக்கத்தில் இளநிலைப்படிப்பை முடித்து தன் பெற்றோரை பார்ப்பதற்க்கு 1890ல் இந்தியா வருகை தருகிறார். அப்போது தனது தந்தை பங்கெடுத்துவரும் மருத்துவ சிகிச்சை முகாம்களை ஏதேச்சையாக பார்வையிடுகிறார். அப்போது ஒரு சில கற்ப்பினிகள் குழந்தை பெற்றெடுக்கும் தருவாயில் காத்திருக்கிறார்கள். அவர்கள் உறவினர்கள் தங்கள் மகள் ஒரு பெண் மருத்துவரால் மட்டுமே சிகிச்சை அளிக்கப்படவேண்டும் என்ற பிடிவாதத்துடன் இருக்கிறார்கள்.இவர்களை ஆச்சர்யத்துடன் பார்த்துக்கொண்டிருந்த இதாவிற்க்கு இந்தியாவில் பெண் மருத்துவர்கள் கிடையாது என்ற நிலையை புரிந்துகொண்ட போது அங்கிருந்த மூன்று கற்ப்பினிப்பெண்கள் உயிரிழந்தனர். இதனால் மிகவும் கவலையடைந்த இதா பெண் மருத்துவர்கள் இந்த சமுதாயத்திற்கு தேவை என்பதை புரிந்து மீண்டும் அமெரிக்காவின் கார்னெல் மெலன் பல்கலைக்கழகத்தில் மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பிக்கிறார். பெண்களை மருத்துவப்படிப்பில் ஏற்றுக்கொண்ட முதல் மாணவர் குழுவில் பயின்று மீண்டும் இந்தியா திரும்புகிறார். ஒரு சிறிய அறையில் தன் தந்தை ஏற்ப்பாட்டின்படி பெண்களுக்கு மருத்துவம் செய்கிறார். ஏறக்குறை இரண்டு ஆண்டுகளில் 5000 பேருக்கு மருத்துவம் செய்கிறார். கூடவே தனக்கு உதவியாக இருக்க செவிலிப்பயிற்சி கொடுத்து பல செவிலியர்களையும் உருவாக்குகிறார். பின்நாளில் பெண்களுக்கென பிரத்தியேகமாக மருத்துவம் சொல்லிக்கொடுக்கும் கல்லூரியை உருவாக்குகிறார். தற்போது ஆண்களும் பெண்களும் மருத்துவம் படிக்கும் தலைசிறந்த வேலூர் CMC மருத்துவக்கல்லூரி தொடங்கப்பட்ட வரலாறு இதுவே.

இந்த உலகில் பிறந்த ஒவ்வொரு உயிருக்கும் இந்த மனித சமுதாயத்திற்க்கு ஆற்றிட ஒரு சிறந்த கடமை இருக்கிறது. அது நிச்சையமாக பொருளீட்டி ஆடம்பரமாக வாழ்ந்து மடிவது இல்லை.

No comments:

Post a Comment