Thursday, July 9, 2015

வட்டமடிக்கும் இந்தியா!

இந்தியா வளர்கிறது, உலக வங்கி இந்தியாவின் வளர்ச்சியில் நம்பிக்கை கொண்டுள்ளது என்று நம்பும் என் சகோதரர்களே, இந்த வரலாற்றைக் கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள்.

முகலாய மன்னர்களின் ஆட்சியின் கீழ் இந்தியா இருந்த போது கிழக்கிந்திய கம்பெனி(இங்கிலாந்து கம்பெனி என்றாலும் இந்தியப் பெயர் இருந்தால் நாம் ஏமாந்து விடுவோமல்லவா?. Unilever எப்படி Hindustan Unileverஆக நம்முடன் புழங்குகிறதோ அதேபோல) நம்முடன் வாணிபம் செய்ய காலூன்றியது. பிரெஞ்சுக்காரர்களும் அதே நோக்கில் இன்னொரு புறம் காலூன்றினார்கள். நமது மன்னர்களுக்குள் இருக்கும் பகையை அவர்கள் பயன்படுத்திக்கொண்டார்கள். ஹைதர் அலிக்கு பிரெஞ்சு கம்பெனியும் ஆர்காடு நவாப்பிர்க்கு இங்கிலாந்து கம்பெனியும் அவர்களுக்கிடையில் நடந்த போரில் உதவி செய்தன. ஆர்க்காட்டை தலை நகராகக் கொண்ட நவாப், ஹைதர் அலி உடனான போரில் ஏற்ப்பட்ட பொருட்செலவிற்க்கு கிழக்கிந்திய கம்பெனி 25% வட்டிக்கு கடன் கொடுத்தனர். பின்னாளில் இந்த கடனுக்கு வட்டி கட்ட முடியாததால் நவாப் அவருக்கு கீழிருக்கும் பாளையங்களில் வரி வசூலித்துக்கொள்ளும் உரிமையை கிழக்கிந்திய கம்பெனிக்கு அளித்தார். இது தான் முதன் முதலில் ஆங்கிலேயர்களின் ஆட்சிக்கு வழி வகுத்த நிகழ்வு. பின்னாளில் அவர்கள் ஒரு அரசை அமைக்க இது வழி வகுத்தது. அவ்வாறு வரி வசூல் செய்யச் சென்ற போது "யாரோ வாங்கிய கடனுக்கு நாங்கள் ஏன் வரி கட்ட வேண்டுமென்று" எதிர்த்தவர் தான் வீர பாண்டிய கட்டபொம்மன். இதில் சுவரஸ்யமான தகவல் (1)அவ்ரங்க சிப்பின் மிகப்பெரும் பொற்க்கலஞ்சியக் கப்பலை கடலில் கொள்ளையடித்து அவரின் பொருளாதார வளத்தை அழித்தது "எவரி" என்ற இங்கிலாந்து கடற்க்கொள்ளையனே.(2) இன்றும் இங்கிலாந்துக்கு உதவிய நவாப்களுக்கு வரியில்லாத பென்சன் நமது அரசால் வழங்கப்படுகிறது. அவர்கள் பிள்ளைகளுக்கு இங்கிலாந்தில் படிக்கவும் வசிக்கவும் உரிமை ஏற்ப்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. இவை அத்தனையும் நம் அரசியல் சாசனத்தின் மூலம் வழி செய்யப்பட்டவை.

அன்றைய கிழக்கிந்திய கம்பெனி இன்றைய உலக வங்கி மற்றும் ஐ எம் எப் ஆக உருவெடுத்திருக்கிறது. அவர்கள் ஒரு நாட்டின் வளர்ச்சித்திட்டங்களுக்கு கொடுக்கும் கடன்களுக்கு வட்டியுடன் சில நிபந்தனைகளும் விதிப்பார்கள். அந்த நிபந்தனைகள் தான் நமது அரசுகள் கொண்டுவரத் துடிக்கும் நில அபகரிப்பு சட்டம், இலவச மின்சார நிறுத்தம், பன்னாட்டு கம்பெனிகளுக்கு வரி விலக்கு, பல்லாண்டு ஒப்பந்தங்கள், அபாயகரமான தொழிற்ச்சாலைகளை இந்தியாவில் உருவாக்கிக் கொள்ளும் அனுமதிகள், இவற்றை எளிதாக்கும் சட்டங்களை உருவாக்குதல் அல்லது திருத்துதல் (இழப்பு ஏற்பட்டால் அவர்களுக்கு பாதிப்பு ஏற்ப்படாத வண்ணம் எழுதப்படும்).

வெள்ளைக்காரன் பொய் சொல்லமாட்டன், வெள்ளையர்கள் சரக்கு உயர்ந்த சரக்கு என்று நம்மை தொடர்ந்து நம்ப வைப்பதன் மூலம் அவர்களின் சரக்குகளுக்கு தொடர்ந்து சந்தையை விளம்பரங்கள் மூலம் தயார்படுத்திக்கொள்கிறார்கள்.

உலகப்பொருளாதார பார்வையில்லாத நம்மிடம் ஏதாவது ஒரு புள்ளி விபரத்தை காண்பித்து வளருகிறோம் என்ற மாயையில் தொடர்ந்து நம்மை வைத்திருப்பது அவர்களின் முதலுக்கு லாபம். கிராமங்கள் மற்றும் உள்நாட்டு வளங்களை மதிக்காமல் வெளியில் கையேந்திக்கொண்டிருக்கும் வரை நாம் இந்த அடிமை வட்டத்திலிருந்து மீளப்போவதில்லை. இன்றைய நவாப்கள்  -அம்பானி, அதானி, மிட்டல்கள் என்பதை நாம் புரிந்துகொள்ளுவதும் அவசியம்.

இப்போது உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள், நமது நாடு எதை நோக்கி செல்கிறது, என்ன வளர்ச்சியடைகிறது என்று.


No comments:

Post a Comment