Saturday, October 3, 2015

நம் சூழலில் ஏன் புதிய கண்டு பிடிப்புகள் நிகழ்வதில்லை?

"ஏன் இந்தியாவில் குறிப்பிடத்தக்க அளவிற்கு அறிவியல் கண்டு பிடிப்புகள் நிகழவில்லை." என்ற கேள்வி அவ்வப்போது எழும். ஆனால் அதற்கான விடைதேடல் பெரும்பாலும் முடிவு பெறுவதே இல்லை. காரணம், எங்கு அதை தொடங்குவது என்பதில் இருக்கும் சிக்கல். சமீபத்தில் நண்பர்களுடன் உரையாடுகையில் இது குறித்த விவாதம் ஒன்று வந்தது. அப்போது பொதுவாக நாம் ஒரு கருத்தையோ அல்லது எண்ணத்தையோ அவ்வளவு எளிதில் வெளிச் சொல்வதில்லை. அதற்கான பல காரணங்கள், அதில் சில, "நமக்கு எதுக்கு வம்பு", "நம் கருத்து தவறாக இருந்தால், கேலி செய்யப்படுவோம் என்ற எண்ணம்", "இதைப் பற்றி கருத்துச் சொல்லுமளவிற்கு எனக்கு அறிவில்லை", முக்கியமாக "கருத்தைச் சொல்வதால் மட்டும் என்ன நடந்து விடப்போகிறது" போன்ற எண்ணங்கள். இது போன்ற இந்தியச் சூழலும், கடந்த 8 ஆண்டுகளுக்கம் மேலான எனது அமெரிக்க வாழ்கையில் நான் உணர்ந்து கொண்டவையுமே இந்த கட்டுரை.

பொதுவாக மேற்கத்திய நாடுகளில் உள்ள மனிதர்களுக்கும், மனிதர்களின் கருத்துக்களுக்கும் கொடுக்கப்படும் மரியாதை என்னை வியக்க வைக்கிறது. ஒவ்வொரு சமுதாய அங்கத்தினருக்கும் கருத்துச் சொல்ல உரிமையும், ஊக்குவிப்பும் இயல்பாக வழங்கப்படுகிறது. உதாரணமாக, அலுவலகங்களில் ஒரு பிரச்சினை குறித்து விவாதிக்கும்போது, பணிப் பொறுப்பு தாண்டி, யாரும் உபயோகமான கருத்துச் சொல்லலாம். அந்த கருத்து விவாதிக்கப்படும் பொருளில் தாக்கத்தை ஏற்படுத்தப்படும் போது, கருத்துச் சொன்னவரை ஊக்குவித்து அவரிடம் மேலும் விளக்கங்கள் கேட்டுப் பெற்றுக்கொள்வர். பின் அந்த கருத்தோ அல்லது எண்ணமோ செயல்வடிவம் பெற்று வெற்றியைத் தரும்போது கருத்தை வழங்கியவர் பாராட்டப்ப்டுவார் அல்லது அதற்கான சன்மானம் கிடைக்கப் பெறுவர்.

இது போன்ற ஒரு சூழலை நாம் இந்தியாவில் எளிதில் பார்க்க முடியாது. ஒரு நிறுவனத்தின் பொறுப்பு அடுக்கில் கீழுள்ளவர், பொது அரங்கில் தன் மேலதிகாரியைத் தாண்டி கருத்துச் சொல்ல முடியாது. அப்படியே கருத்துச் சொன்னாலும் அவர் அந்த இடத்திலேயே அவமதிக்கப்படுவார் அல்லது எச்சரிக்கை விடுக்கப்பட்டு வெளியேற்றப்படுவார். இது போன்ற சூழலால், அதிகாரம் இருந்தால் மட்டுமே கருத்துச் சொல்ல முடியும் என்ற ஒரு நிலை இருக்கிறது. எப்படி இந்தச் சூழல் உருவாகியிருக்கும் என்று ஆராயும் போது சில உண்மைகள் நமக்கு விளங்கும். 

பெரும்பாலான உயர் பதவியில் இருப்பவர்கள், அரசு அலுவலகமானாலும் தனியார் நிறுனங்களானாலும் அவர்கள் அனுபவத்தின் பேரில் தான் அந்த பதவியில் இருப்பார்கள். திறமையும் அறிவும் உள்ள மூத்த அதிகாரிகள் பெரும்பாலும் தனக்கு கீழுள்ளவர்களை ஊக்குவிப்பவர்களாகவே இருப்பர். ஆனால் வெறும் பணி மூப்பு அடிப்படையில் உயர்பதவி அடைந்தவர், அநியாயமாக தனக்கு கீழுள்ளவர் தனது அடிமை என்னும் மன நிலையிலேயே நடந்து கொள்கின்றனர். அதற்கு பல காரணங்கள் இருப்பினும், பெரும்பான்மை காரணம் தன்னுடைய தகுதிக் குறைபாடு வெளிப்பட்டுவிடக்கூடாதெனவும், தன் அதிகாரம் பலமிழந்து விடக்கூடாது என்பதும் தான். இவர்கள் ஒரு போதும் புது சிந்தனையை, புதிய அறிவை ஏற்றுக்கொள்வதில்லை. மாறாக அதுபோன்ற ஒரு வஸ்து உருவாகிவிடாத ஒரு சூழலை உருவாக்கி விடுகின்றனர். இது ஒரு வகையென்றால், பிறப்பால் தான் உயர்ந்த இனம், ஏனையோர் அறிவிலும் அதிகாரத்திலும் தன்னைவிட கீழேயே இருக்க வேண்டும் என்று நினைப்பவர் இன்னொரு வகை. முன்னவர்களிடமாவது அவர்களின் இயலாமையை நினைத்து இரக்கப்படலாம், பின்னையவர்கள் கிடைக்கும் அனைத்து வாய்ப்புகளையும் அவர்களுக்குள் பகிர்ந்து கீழுள்ள வேறோருவருக்கு எதனையும் கிடைக்காமல் செய்துவிடுவர், இவர்களிடம் இரக்கப்பட ஏதுமில்லை. இவர்கள் புதிய சிந்தனையை முன்னவர்போல் குண்டுக்கட்டாக நிராகரிக்க மாட்டார்கள். மாறாக சிந்தனை வட்டத்திற்கு வெளியே இருந்து, இல்லாத ஒன்றை இருப்பதுபோல் அடித்துச் சொல்லி, கருத்து தவறு என்று உருவகப்படுத்திவிடுவர். விவரம் தெரியாதவர் அதை நம்பி தன் கருத்தை மாற்றிக்கொண்டு அமைதியாக இருந்துவிடுவர். ஆனால் அவர் சொன்ன புதிய கருத்தை அந்த உயர்சாதி மேலதிகாரி, பூ வைத்து, பொட்டு வைத்து தன் மேலதிகாரிக்கு விற்றுவிட்டு பலனை அனுபவித்திருப்பார். இவர்களின் அறிவுத்திருட்டிலிருந்து தப்பிப்பதற்கு கற்றுக்கொள்ளும் வித்தைகளில் புதிய சிந்தனைகளில் செலவளிக்கும் நேரம் பாதி கடந்திருக்கும்.

மேற்ச்சொன்ன கூற்று ஒரு புறம் இருக்க, நமக்குள்ளான தேடல் நம்மிடமிருந்து தொடங்க வேண்டும் என்பதால், நாம் நமது ஆய்வை வீட்டிலிருந்தும் ஆரம்பப்பள்ளியிலுருந்தும் தொடங்க வேண்டும். இரண்டு மூன்று வயதுவரை குழந்தைகள் அவர்கள் எண்ணம்போல் சிந்திக்கவும் செயல்படவும் உரிமை இருக்கிறது. குழந்தை எப்போது பேச ஆரம்பிக்கிறதோ, அப்போதிருந்து அதன் மீது கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. ஓரளவிற்கு இது குழந்தையை சமூக ஒழுங்கில் வளர்த்தெடுக்கும் முறையாக இருந்தாலும், இது குழந்தைகளின் சிந்திக்கும் திறனை கட்டுப்படுத்தும். உதாரணங்களாக, "பெரியவர்களை எதிர்த்து பேசக்கூடாது!", "சாமியைக் கேள்வி கேட்கக் கூடாது", "அவர்களுடன் பேசக்கூடாது" என்பது போன்ற கட்டுப்பாடுகள். இது தொடர்ந்து பள்ளியில் "முதலில் நான் சொல்வதைக் கேள்", "அது பாடத்திட்டத்திட்டத்திற்கு அப்பாற்பட்ட கேள்வி", "உன் வயசுக்கு இது போன்ற கேள்விகளெல்லாம் கேட்கக் கூடாது" என்று கேள்வி கேட்கும் குழந்தைகளின் ஆர்வத்தை மட்டுப்படுத்தும் பள்ளியின் செயல்பாடுகள்.

கல்லூரிகள் பெரும்பாலும் பாடதிட்டத்தை தவிர்த்து ஒரு இம்மியளவுகூட சிந்தனையை உருவாக்குவதில்லை. சில நேரங்களில் பாடத்திட்டத்தில் கூட வரையறை வைத்துக் கொண்டு அதைத்தாண்டி மாணவர்கள் சிந்திப்பதை ஊக்குவிப்பதில்லை. ஒரு மாணவன் சுதந்திரமாக கேள்விகளை முன் வைத்து பதில் பெற முடியாத சூழல் பல கல்லூரிகளில் இருக்கிறது. உடையிலிருந்து உணவு வரை எல்லாவற்றிலும் கட்டுப்பாடு வைத்திருக்கும் இவர்கள் மாணவர்கள் சிந்திப்பதிலும் கட்டுப்பாடுகளை வைத்திருக்கின்றனர் என்பது விந்தையல்ல.

நான் இங்கு ஒரு பெரும் வங்கியின் மிகப்பெரும் மென்பொருள் திட்டத்தில் பங்கெடுத்திருந்த போது, திட்ட மேலாளராக இன்னொரு போட்டி நிறுவனத்திலிருந்து ஒருவரைக் கொண்டு வந்திருந்தனர். போட்டி நிறுவனமாக இருந்தாலும் அமெரிக்கரான அவருடன் எனது உறவு ஆரோக்கியமாகவே இருந்தது. அவருடைய இலக்கு முழு செயல் திட்டத்தையும் அவருடைய நிறுவனம் எடுத்து நடத்துவது. எனக்கோ பெரும் போராட்டத்திற்குப் பிறகு ஒன்று இரண்டாகச் சேர்த்து ஒரு பெரிய குழுவை உருவாக்கி வைத்திருந்தேன். பொதுவாக இதுபோன்ற சூழலில் பாதுகாப்புணர்வும், அச்சமும் தவறுகளுக்கு வழி வகுத்து விடும் என்பதால் நான் அந்த மேலாளரிடம் நட்பாகவே இருந்து வந்தேன். ஒரு கட்டத்தில் அவரின் முயற்சி வெற்றியளிக்காத போதும், அவரும் பணியிலிருந்து விரைவில் விடுவிக்கப்படுவோம் என்றுனுணர்ந்து மனம் திறந்து என்னிடம் பேசினார். அப்போது அவர் குறிப்பிட்டது "எப்போதும் கட்டளைகளை வாங்கிக் கொண்டு ஒரு அடியாள் போல வேலை செய்பவரை இங்கு யாரும் விரும்புவதில்லை. மாறாக தனது சிந்தனையாலும், உழைப்பாலும் இருப்பதைவிட எப்படி அதிகமான மதிப்பை நாம் நம் வேலையில் ஏற்படுத்தி, அதனால் நமது வாடிக்கையாளருக்கு பயனை ஏற்படுத்த முடியும் என்பதே இப்போதைய தேவை. அதை நீ நன்கு தெரிந்து வைத்திருக்கிறாய். தொடர்ந்து தொடர்பில் இரு" என்பதாக இருந்தது அந்த உரையாடல்.

என்னைப் பொறுத்தவரை, எல்லா மனிதர்களும் இயல்பில் சிறந்தவர்கள்தான். அவர்களிடம் பயத்தை விலக்கி நம்பிக்கையை ஏற்படுத்தி விட்டால் அவர்கள் சிந்திப்பதும், சிந்தனையை வெளிப்படுத்துவதும் இயல்பாய் வளர்ந்துவிடும். அதுபோன்ற ஒரு சூழலில் அவர்களை ஒரு போட்டியாளராக கருதாமல், அவரைச் சக மனிதராய் பாவித்து, எப்படி அவரின் சிந்தனை, நாட்டினுடையதோ அல்லது நிறுவனத்தினுடைய நோக்கத்திற்குப் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்று பார்க்கவேண்டும். இங்கு வயதோ, அனுபவமோ, தகுதியோ முக்கியமல்ல. கேட்கும் பொறுமையும் கேட்பவர்மேல் நம்பிக்கையுமே வேண்டும். அவரின் கருத்து உடனடியாக ஒரு பெரும் அறிவுப் புதையலை கண்டுபிடிக்காவிட்டாலும், அறிவுப் புதையலைத் திறக்கும் சாவியாக அது இருக்கலாம். ஒருவரின் கருத்து சரியோ, தவறோ, தனக்கான கடமையும், தன்னுடைய பங்களிப்புமாக தன் சிந்தனையையும் அறிவையும் பங்களிக்க வாய்ப்பளிப்பதே ஆரோக்கியமான அறிவுவளர்ச்சிக்கான சூழல். அதை ஏற்படுத்த கொஞ்சம் விசாலமான மனதும் வினோதங்களை ரசிக்கும் குணமும் வேண்டும். அது இல்லையென்றால், வளர்த்துக்கொள்ளலாம், இன்னும் காலமிருக்கிறது என்றே நினைக்கிறேன்.


2 comments:

  1. Please give merit its due. (wherever it is, whether it is in admission or in job). Then invention will happen.

    ReplyDelete
  2. சிறப்பு சிந்தனை அல்லது சிறந்த சிந்தனை என போடவா?

    ReplyDelete