Thursday, August 9, 2018

ஏற்றமும் இறக்கமும்..

இப்போது நாம் வாழும் காலம்தான் எத்தனை இன்பமயமானது. பசியினால் இறப்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் என்றாலும் அவர்கள் நாம் பார்க்கும் தொலைவில் இல்லையே என்பது எவ்வளவு நிம்மதியான காலகட்டம். அன்றாடத்தேவைகளுக்கு நாம் எப்போது கவலையடைந்தோம்? நம்மைச் சுற்றி 90 களில் பிறந்தவர்களுக்குப் பசி என்றால் என்னவென்று தெரியுமா? தொழிற் புரட்சி, உலகமயமாக்களுக்கு முன் எவ்வளவு வேலையில்லா திண்டாட்டம்? வேலை தேடும் ஒரு வழி வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்வது. ஒவ்வொரு படிப்பிற்குப் பின்னும் அங்கு சென்று பதிவைப் புதுப்பிக்க வேண்டும். அதில் கூட பதிவு வரிசையின் படி தான் வேலை கிடைக்கும். காலை 7 மணிக்கு மாவட்டத் தலை நகரில் உள்ள வேலை வாய்ப்பு அலுவலகத்தின் கதவுகள் முன் கூட்டம் வரிசையில் நிற்கும். 10 மணிக்கு வரும் அலுவலர் கதவைத் திறந்து காத்திருப்போரை மைதானத்தில் வரிசையில் அமரச்செய்வார். பிறகு அனைவரிடமும் வேலைவாய்ப்புக் கோரி படிவமொன்ற பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். அப்போது ஐயம் கேட்போருக்கு விழும் வசை கேட்க முடியாது.. முதல் கேள்வி என்ன படித்திருக்கிறாய்? என்று... பிறகு அவர் படித்த படிப்பை வைத்தே திட்டுவார் அலுலக உதவியாளர் முதல் அலுவலர் வரை. 4 மணி வரைதான் விண்ணப்பங்கள் வாங்குவார்கள் அதனால் உணவு எதுவும் இல்லாமல் வரிசையில் நின்று காத்திருந்து பசியுடன் பதிவு செய்து வீடு வந்தால்.. வேலை எப்ப கிடைக்கும் என்ற கேள்வி? பத்து வருடத்திற்கு முன் பதிந்தவர்களுக்குத்தான் இப்போது வேலை என்று சொன்னால் அவர்கள் கவலை இன்னும் அதிகமாகிவிடும் என்பதால், இன்னும் ஒன்று அல்லது இரண்டு ஆண்டில் கிடைத்துவிடும் என்றார்கள் என்று சமாதனப் படுத்திக் கொண்டு உள்ளூர் மில்களிலும், பனியன் கம்பெனிகளிலும் படித்த படிப்பிற்கு வேலை தேடவேண்டியது. இது 80 களில் பிறந்தவர்கள் வாழ்கை.. 

அதற்கு முன் கல்வி அனைவரையும் அந்த அளவு எட்டாததனால் கூலி வேலை, விவசாயம், நெசவு, வியாபாரம் என்று எதாவது ஒன்றைத் தொழிலாகக் கொண்டு வாழ்க்கையை ஓட்டியிருப்பார்கள்... இந்தத் தொழில்கள் மூன்று வேலை உணவிற்கெல்லாம் எந்த உத்தரவாதவும் கிடையாது.. அதனால் பசி அவர்களுக்குப் பழகியிருக்கும்.. இப்பொது நாம் எடைகுறைக்க 24 மணி நேரப் பட்டிணி கிடக்கிறதைப் போல அல்ல அந்தப் பசி..

உலகத்தில் பொருளாதாரமும் வேலைவாய்ப்பும் எப்போதும் ஒரே போலவா இருந்திருக்கிறது? இல்லை... அதற்கு சாட்சியங்களே உலகப் போர்கள்... பொருளாதாரம் எப்போதும் ஒரே போல் இருந்ததில்லை. அது ஏற்ற இறக்கங்களை குறிப்பிட்ட கால இடை வெளியில் சந்தித்துக் கொண்டுதான் வந்திருக்கிறது. ஏனென்றால் இந்தப் பொருளாதாரம் வளங்களை அடிப்படையாகக் கொண்டது. ஒரு புறம் இயற்கை வளங்களை மனிதனின் தேவைகளுக்கான வடிவங்களில் உருவாக்குது, இன்னொரு புறம் இந்த வளங்களை மனிதனின் தேவைக்கு உருவாக்கும் மனித, இயந்திர, தொழில் நுட்ப வளங்களை உருவாக்குவது என்பதான வகையிலேயே பொருளாதாரம் கட்டியமைக்கப்படுகிறது. உணவுத்தேவையை நிறைவு செய்யக் கிடைக்கப்பெற்ற வாய்ப்பே விவசாயத் தொழில். இதில் நிலத்தையும் நீரையும் உணவுப் பயிர்கள் விளைவிக்கத் தெரிந்த தொழிலே விவசாயம். அதில் மனித உழைப்பின் வரம்புகளைத் தாண்ட எந்திரங்களின் தேவை இயந்திர உற்பத்தித் தொழில் வாய்ப்பை உருவாக்கியது. உணவுப் பொருட்களை ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்ல, உணவைப் பதப்படுத்த, உணவை எளிதில் உண்ண முன்சமைத்த உணவுகளை உருவாக்க, இப்படித் தொழில்களில் உருவாக்கியவர்களின் செல்வங்களைச் சேமிக்க வங்கிகள், இந்த வங்கிகளின் செயல்பாடுகளை இயந்திரமயமாக்க என்று எல்லாத் தொழில்களுமே மனிதர்களின் தேவைகளை ஆதாரமாகக் கொண்டுள்ளது. நாம் ஒவ்வொருவர் செய்யும் வேலையும் இன்னொரு மனிதனின் தேவையை ஏதாவது ஒருவகையில் பூர்த்தி செய்வதாக இருக்கிறது. இது ஒரு சுழற்சியில் இயங்குகிறது. வாங்கும் திறன் உள்ளவனின் காசு இன்னொருவனுக்கு வாங்கும் திறனைக் கொடுக்கிறது.

இந்தப் பொருளாதாரச் சுழற்சி எங்காவது தேக்கம் அடைந்து அறுபட்டுப் போனால், அங்கே அப்போது பொருளாதார வீழ்ச்சி நிகழ்கிறது. அப்போது மீண்டும் பசி, பஞ்சம், பட்டினி மீண்டும் தலை விரித்தாடுகிறது. அதனைத் தொடர்ந்து போர்கள் நிகழ்கிறது. ஆக நூறு ஆண்டுகளுக்குள் ஒன்று அல்லது இரண்டு பொருளாதாரத் தேக்க நிலையை உலகம் சந்தித்து வந்திருக்கிறது. ஆனால் அதை உணர்ந்து நாம் நம் வாழ்கையை அமைத்துக் கொள்கிறோமா என்றால்.. இல்லை என்றே பதில் கிடைக்கும்.. ஆம்.. இதுதான் மனித மனம்...

அப்படி ஒரு பொருளாதாரத் தேக்க நிலையின் போது அமெரிக்காவில் நிலவிய சூழலைப் படம் பிடித்துக் காட்டியிருக்கிறார் ஜான் ஸ்டீன்பெக் தனது "Grapes of Wrath" என்னும் புதினத்தில். 1939ல் வெளியான இந்தப் புதினம் அவருக்குப் புலிட்சர் விருதையும், பின்னாளில் நொபெல் விருதையும் வாங்கித் தந்தது. இந்தப் புதினத் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் அமெரிக்க அரசின் அரிய படைப்புகளைப் பாதுகாக்கும் பெட்டகத்தில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.

ஒக்லகோமா மாகாணத்தில் கதை தொடங்குகிறது. சிறையிலிருந்து வரும் நாயகன் தந்து கிராமம் காலியாக இருப்பதை காண்கிறான். வரும் வழியில் ஒருவனைச் சந்திக்கிறான். அவன் ஒரு மதபோதகனாக இருந்தபோது கதாநாயகனுக்கு மதச்சடங்கு செய்தவன் என்பதை உணர்கிறான். அவன் தற்போது மதநம்பிக்கையை விட்டுவிட்டதால் தாம் மதபோதகனில்லை என்கிறான். பின் இருவரும் கதாநாயகனான ஜானின் வீட்டை நோக்கிச் செல்கிகறார்கள். செல்லும் வழியில் வீடுகள் காலியாக இருக்கிறது. வீட்டிலுள்ள அனைவரும், அண்டை வீட்டாரும், ஏன் மொத்த ஊரும் வேறு இடத்தில் தஞ்சம் புகுந்திருப்பதை அறிகிறான். இரவில் அந்த வீட்டில் ஒழிந்திருக்கும் ஒருவன் ஊரில் நிகழ்ந்ததைச் சொல்கிறான். விவசாய நிலங்கள் அனைத்தும் கம்பெனிகளுக்கு அரசாங்கம் விற்று விட்டது. அதனால் அவர்கள் மக்களை காலி செய்யச் சொல்லி விட்டு இயந்திரங்களைக் கொண்டு விவசாயப்பணி செய்யப்போவதாகச் சொல்கிறான். தனது வீட்டை நோக்கி நடக்கையில் இன்னொரு இடத்தில் வீட்டைக் காலி செய்ய மறுத்து நிற்கும் வீட்டுக்காரர்களைத் தாண்டி அந்த ஊரைச் சேர்ந்த ஒரு இளைஞனே இயந்திரம் கொண்டு அந்த வீட்டைத் தரைமட்டமாக்கிச் செல்கிறான். வறட்சி நிலவும் அந்த நாளில், தன் குடும்பத்திற்கு இந்த வேலையைச் செய்துதான் பசி தீர்க்க வேண்டும் என்றும், இந்த வேலையைத் தான் செய்யவில்லையென்றால் அவர்கள் வேறொருவரை வைத்து செய்வார்கள், ஆனால் வீடுகளை இடிப்பதையும், நிலங்களைக் கையகப்படுத்துவதையும் யாரும் தடுக்க முடியாது என்று தர்க்கம் கூறிவிட்டு இடத்து நகர்வான்.

தலைமுறை தலைமுறையாக தங்கள் நிலத்தில் விவசாயம் செய்து வந்தவர்கள் ஒரு சில நாட்களில் நிலம் வீடு என எதுவும் தங்களுடைய உடமை இல்லை என்று ஏற்றுக்கொள்ள முடியாமல் வெளிக்காட்டும் உணர்வுகள் நமக்குப் புதிதில்லைதான். ஆனால் இவை பல ஆண்டுகளுக்கு முன்னரே அமெரிக்காவில் நடந்திருக்கிறது என்பதுதான் கவனிக்க வேண்டிய செய்தி. 

ஒரு வழியாக வீட்டை அடைந்த போது கதாநாயகனின் மொத்த குடும்பமும் ஒரு பழைய வாகனத்தில் மூட்டை முடிச்சுகளைக் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். மூன்று நான்கு தலைமுறை ஆட்கள் ஒரு வீட்டில் வசித்து வந்திருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் 1000 மைல் தொலைவிற்கு அப்பால் இருக்கும் கலிபோர்னியா சென்று ஏதாவது வேலை செய்து பிழைத்துக் கொள்ளலாம் என்று புறப்படுகின்றனர். அந்த வீட்டின் மூத்த முதியவர், இது தான் பிறந்து வளர்ந்த இடம், தன்னால் இதைவிட்டு வெளியேற முடியாது என்று அந்த மண்ணைக் கையில் எடுத்துக் கொண்டு பிரண்டு அழுகிறார். அவரைச் சமாதானம் செய்து வண்டியில் ஏற்ற முடியாது என்று தெரிந்து குடும்பத்தினர் கொஞ்சம் மதுபானம் கொடுத்து போதையேறிய பின் வண்டியில் ஏற்றிப் புறப்படுகிறார்கள். அவர்களுடனேயே அந்த முன்னாள் மத போதகரான கேசியும் நண்பனாகப் பயணிக்கிறான்.

அவர்கள் செல்லும் வழியில் ஒரு இடத்தில் குடும்பத்தினருக்கு ஒரு ரொட்டியை வாங்க முனைகிறார் ஜானின் தந்தை. அந்த ரொட்டி 25 செண்ட் என்பதால், அதை 15 செண்டுக்கான அளவு வெட்டித் தருமாறு கேட்கிறார். தாம் இன்னும் குடும்பத்தடன் 1000 மயில்கள் கடந்து செல்ல வேண்டியிருப்பதால் தன்னால் இவ்வளவுதான் கொடுக்க முடியும் என்கிறார். இந்த இடத்தில் இந்தியல் பேரம் பேசி வாங்கியிருப்பார்கள் என்பது வேறு கதை.

கடைக்காரம்மா தன்னால் அப்படிக் கொடுக்க முடியாது என்று சொல்லும்போது, அந்தப் பெண்மணியின் கணவர் உள்ளே இருந்து அதட்டலாக அந்த ரொட்டியை அவர்களுக்குக் கொடுக்கச் 15 செண்டுக்கே கொடுக்கச் சொல்கிறார். பசியறிந்தவர் போலும். அதே நேரத்தில் அந்தக் குடும்பத்தின் சிறுவர்கள் இருவர் அவருடன் கடைக்கு வந்து அவர்களுக்குப் பிடித்த மிட்டாயொன்றையே பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த மிட்டாய் ஒன்று 15 செண்ட். அந்தக் குழந்தைகள் தாத்தாவிடம் கேட்டபோது, பெரியவர் அந்த மிட்டாயின் விலையைக் கேட்கிறார். சூழலைப் புரிந்து கொண்டு குழந்தைகளையே பார்த்த கடைக்காரம்மா இரண்டு மிட்டாய் 10 செண்ட் என்று சொல்லி விற்கிறார். அவரைப் பார்த்து கடைக்காரார் புன் முறுவல் பூக்கிறார்.

இந்த நிகழ்வைப் பார்த்து அங்கு காப்பி அருந்திக் கொண்டிருந்த இரு லாரி ஓட்டுனார்கள், அந்த மிட்டாய் ஒன்றின் விலை 15 செண்ட் நீ குழந்தைகளுக்காக இரண்டு மிட்டாய் 10 செண்டிற்கு கொடுத்தாய் என்று சொல்லிவிட்டு தாங்கள் சாப்பிட்ட உணவிற்கான தொகையைக் கேட்டு அவள் கையில் காசைக் கொடுத்து வெளியேறுகிறார்கள். அவர் உண்ட உணவின் தொகையை விட சற்று அதிகமாகக் கொடுத்து நகர்ந்த போது அந்தப் பெண்மணி அவர்களை அழைத்து மீதித் தொகையைக் கொடுக்க முனைகிறாள். அப்போது அவர்கள் அதை அவளையே வைத்துக் கொள்ளச் சொல்லி நகர்கிறார்கள். படம் முழுக்க சமூகச் சூழலையும் மனிதர்களின் மனங்களையும் அவ்வளவு அற்புதமாகச் சொல்லி காட்சிகளை நகர்த்துகிறார் ஜான் ஸ்டீன்பர்க்.

இந்தப் புதினம் முதலாளித்துவத்தின் கோர முகத்தையும், அங்கே தொழிலாளர் ஒற்றுமையின் தேவை பற்றியும் அதன் அமெரிக்க வடிவம் என்ன என்பதைப் பற்றியும் தெளிவாகச் சொல்லிச் செல்கிறார். இது பொதுவுடைமைத் தத்துவத்திற்கு ஆதரவான புத்தகம் என்று எதிர்ப்புக் கிழம்பியது என்ற செய்தியையும் படிக்க முடிகிறது.

நாளை நாம் செய்து கொண்டிருக்கும் தொழில் இல்லையென்றானால்? நமக்கு வாழுமிடத்தில் உரிமையில்லையென்றானால்? எப்படி அந்தச் சூழலை எதிர்கொள்ளப்போகிறோம்? இது நடக்காது என்பதில்லை, மாறும் இந்த உலகில் எதுவும் நிறந்தரம் இல்லை. அப்படியொரு சூழல் வந்தால் நமக்கு நாம் சேர்த்த செல்வம் துணை நிற்கப்போவதில்லை. நல்ல நண்பர்களும் உறவுகளுமே துணையாக இருப்பார்கள். அந்த உறவுகளைச் சேர்த்து வைத்திருக்கிறோமோ என்று பார்த்துக் கொள்வது நல்லதல்லவா?

No comments:

Post a Comment