கடந்த சனியன்று (நவ 17 2018) அமெரிக்கத் தமிழ் கல்விக்கழகம் அதன் பாடத் திட்டத்தின் வழி இயங்கும் கரோலினா மாகாணங்களில் சார்லட் மற்றும் சுற்றுப்புறத்தில் அமைந்த தமிழ்ப் பள்ளிகளின் ஆசிரியர்களுக்குப் பயிற்சி வகுப்பொன்றை நடத்தியது. இதில் முனைவர் திரு வாசு அரங்கநாதன் அவர்கள் ஆசிரியர்களுக்குப் பயிற்சியை வழங்கினார். முதலில் பயிற்சி பற்றியும் அதில் வழங்கப்பட்ட தகவல்களையும் பிறகு அது தொடர்பான என் தனிப்பட்ட கருத்துக்களையும் படிப்பவர்கள் பயன் கருதி எழுதியிருக்கிறேன். அன்னப்பறவை போல் எது உங்களுக்குத் தேவையோ அதை எடுத்துக் கொள்ளுங்கள். மாற்றுக் கருத்திருந்தால் அதை கருத்தாகப் பதிவிடுங்கள் உரையாடுவோம்.
பயிற்சியின் நோக்கம், ஆசிரியர்கள் கல்விக் கழகத்தின் பாடநூல் மற்றும் பாடத்திட்டத்தினை எப்படி அணுகுவது, பாடங்களை நடத்தும் போது எதிர்கொள்ளும் நடைமுறைச் சிக்கல்களுக்கு ஐயாவின் தீர்வு மற்றும் ஆலோசனைகள், பிறகு கற்பித்தலில் மாணவர்களுக்கு, குறிப்பாக தமிழை இரண்டாம் மொழியாகக் கற்கும் அமெரிக்கத் தமிழ் மாணவர்களுக்குத் தமிழ் கற்றலை எவ்வாறு இனிய அனுபவமாகச் செய்திட முடியும் என்பது பற்றியும் விளக்கமளித்தார் முனைவர் ஐயா அவர்கள்.
குறிப்பாக தமிழின் உயிரெழுத்துகள் மற்றும் மெய்யெழுத்துகள் இணைந்து உருவாகும் ஒலி எப்படி மனித நாவின் இயல்பில் அமைந்தது என்பது பற்றிய விளக்கம் வியப்பளித்தது. வல்லினம்,மெல்லினம் என்ற காரணப் பெயரின் காரணம் அறிந்த பின் தமிழ் மொழி எப்படி ஒரு இயற்கையான தொன் மொழியாக இருக்கிறது என்பதற்குச் சிறய உதாரணமாக உணர்ந்தேன்.
ஐயாவின் முயற்சியில் உருவான இந்த தளத்தில் முக்கியமான சில கணினி செயலிகள் துணைகொண்டு தமிழ் கற்கும் வழிமுறைகளை விவரித்தார். இது ஆங்கில வழியில் தமிழ் கற்க மிகவும் உதவியாக இருக்கும் என நினைக்கிறேன். குறிப்பாகத் தமிழ்வழி உரையாடல்களை குழந்தைகள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
பயிற்சியில் வின்சுடன் சேலம், கிரீன்சு பாரோ, சார்லட் வடக்கு, தெற்கு பகுதிகளில் அமைந்த பள்ளியின் ஆசிரியர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றார்கள்.
சில கேள்விகள் மற்றும் அதற்கு பதில்கள் (இவை என்னறிவின் புரிதல்கள்)
பதில்: அமெரிக்கா வாழ் தமிழர் குழந்தைகள் பெரும்பாலும் பெற்றோரின் கட்டாயத்தாலேயே தமிழ் கற்கப் பள்ளிக்கூடம் வருகின்றனர். ஆகையால் பள்ளிகளைப் போல் மதிப்பெண் பெற்றால்தான் கல்வியில் முன்னேறமுடியும் என்ற கட்டாயம் அவர்களுக்கு இல்லை, அதனால் தமிழ் கற்பதில் ஆர்வம் காட்டுவதில்லை. ஆனால் தமிழைத் தொடர்ந்து கற்று புலமை பெருவதன் மூலம் இளநிலைப் பட்டப்படிப்பில் அவர்கள் வேறு மொழி கற்கவேண்டிய பாடத்தை தவிர்த்து விடலாம். அதாவது ஜெர்மனோ, பிரெஞ்சோ அவர்கள் கற்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. அந்த பாடத்திற்கான கட்டணமும் மிச்சப்படும். உதாரணம், 34 கிரிடிட் கொண்ட இளநிலைப் பட்டப்படிப்பில் 3 அல்லது 4 கிரிடிட் வேறு மொழி கற்கும் பாடத்திற்கானது. தமிழ்ப் பள்ளியில் தொடர்ந்து தமிழ் கற்றுவருவதுடன் அவர்கள் பள்ளியில் 10ஆம் வகுப்பு படிக்கும் காலத்தில் தமிழ்ப் புலமைக்கான முத்திரை பெற்றுவிட்டார்களானால், இந்த முத்திரையைக் கொண்டு கல்லூரியில் வேறு மொழி கற்கும் பாடத்தை தவிர்த்துவிடலாம். இதற்கு https://sealofbiliteracy.org/ என்னும் இணையதளம் உதவும்.
2. ல, ள வைப் பயன்படுத்தும் இலக்கணம் என்ன?
தமிழில் சொற்கள் ல, ள மற்றும ந, ண வால் இயற்கையாகவே அமைந்தவை. அதற்குத் தனி இலக்கணமெல்லாம் இல்லை. அன்னம், அண்ணா, அன்னை, விளக்கு, விலக்கு போன்றவை எடுத்துக்காட்டும். தமிழில் ள, ண போன்ற எழுத்துக்களில் சொற்கள் தொடங்காது.
3. நான்காம் நிலையில் உள்ள இலக்கணம் கடுமையாக உள்ளதே?
ஆம், நான்காம் நிலையில் உள்ள இலக்கணம் கடுமையாத்தானிருக்கிறது. அதை எளிமையாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
4. ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிப்பதுபோல் பெற்றோருக்கும் பயிற்சி அளிக்க வேண்டும்?
(நகைச்சுவையாக) பயிற்சிக்குப் பயிற்சி நூல் போடலாம். வீட்டுப் பாடத்தை எப்படி எழுதக் கற்றுக்கொடுப்பது என்பதற்கு ஒரு பயிற்சி கொடுக்கலாம்.. இது போன்ற முயற்சிகள் முடிவில்லாதது.
தமிழ்ப் பள்ளியில் கற்றுக் கொடுக்கப்படும் பாடங்களின் அடிப்படைப் புரிதல் பெற்றோருக்கு விளக்கப்படவேண்டும்.
5. சில நேரங்களில் பெரியவர்கள் தமிழ் கற்க ஆர்வமாக தமிழ்ப் பள்ளிகளில் கேட்கிறார்கள்? அவர்களுக்கு உங்களின் ஆலோசனை என்ன?
தான் எழுதிய புத்தகத்தைப் பரிந்துரைத்தார்.
6. ஏன் தமிழில் எல்லா ஒலிகளுக்கும் எழுத்துக்கள் இல்லை?
[என் கருத்து] மொழி உருவானது அதைப் பேசும் மக்களினால். தமிழ் மொழி அதைப் பேசும் மக்களிடம் புழங்கிய ஒலிகளுக்கான எழுத்துக்களைக் நிறையவே கொண்டுள்ளது. இன்றைய உலகமயமாக்கலுக்குப் பின் அறிவியல் மற்றும் பிற மொழிச் சொற்களைத் தமிழ்ப் "படுத்த" வேண்டிய நிலை உள்ளது. மொழி தொடர்ந்து உயிர்பெற்றிருக்க அது காலத்திற்கேற்ப தன்னை வடிவமைத்துக் கொள்வது முக்கியமாகும். அதற்காக எந்த ஒரு மொழியும் இன்னொரு மொழியைத் தழுவ வேண்டிய தேவையில்லை. உதாரணமாக தமிழில் உள்ள 'ழ' ஒலி ஆங்கிலத்தில் இல்லை. அதற்காக அவர்கள் தமிழின் 'ழ' வை ஆங்கில எழுத்துக்களுடன் சேர்த்துக் கொள்வதில்லை. அதுபோலவே வட மொழி எழுத்துக்களும். அந்த வடமொழி எழுத்துக் கொண்ட சொற்கள் தமிழில்லை என்பதை முதலில் அறிக. Jalapeno வை எப்படி அலபீனோ என்று படிக்கிறீர்களோ அதே போலத்தான் தமிழ் மொழிக்கும். மொழியை வளர்க்கும் அதே நேரத்தில் அது சிதைந்து விடாமலும் பார்த்துக் கொள்வது நமது கடமை.
7. ஏன் பாடப் புத்தகத்தில் ஆகாயம், வானம் என்ற இரு சொற்கள் ஒரு ஆங்கிலச் சொல்லுக்கு பயன்படுத்தப்பட்டிருக்கிறது? இது குழப்பமளிக்கிறது?
அது சரிசெய்யப்படும்.
என் கருத்து: தமிழில் அருஞ்சொற் பொருள் என்றொன்று படித்திருப்போம். ஆங்கிலத்தில் Vocabulary. ஒரு பொருளைப் பல்வேறு பெயர்களில் அழைக்கும் மொழி வளமை. குழந்தைகளுக்கு இரு சொற்களைக் கற்றுக் கொடுக்கும் வாய்ப்பை இது தருகிறது. தேர்வில் வானம், ஆகாயம் இதில் எந்த ஒன்றைப் பதிலாகத் தந்தாலும் அவர்களுக்கு முழு மதிப்பெண் வழங்கிடலாம்.
மேற்குறிப்பிட்டவை பயிற்சியில் கேட்கப்பட்ட கேள்விகளில் மிகச்சில. நினைவு கூறும்போது மேலும் கேள்வி பதில்களைச் சேர்க்கிறேன்.
ஆசிரியர் பயிற்சியில் பயன்படுத்தப்பட்ட மின்னேட்டுத் தொகுப்பை (presentation) அனுப்பவதாகச் சொன்னார்கள். இன்னும் வரவில்லை..
ஆசிரியர்களுக்கு என் பரிந்துரைகள்
- எழுத்துச் சீர்திருத்தம் பற்றிய நூல்
- எழுத்துச் சீர்திருத்தம் தொடர்பான விமர்சனம்.
- சொல் மற்றும் சொல்லாய்வு முகநூல் குழு. இங்கு ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொல் மற்றும் புதிய சொல்லாக்க முயற்சிகள் நடைபெறுகிறது.
- சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப்பேரகராதி.
- தமிழ் இணையக் கல்விக்கழகம்.
No comments:
Post a Comment