Thursday, September 17, 2015

மொழி உரிமை மாநாடு 2015

தாய்மொழியில் பேசி, படித்து வாழ வழியேர்ப்படுத்திய நம் முன்னோர்கள், 1965 மொழியுரிமைப் போராட்டத்தில் தங்கள் உயிரைத் தியாகம் செய்து இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் தமிழகத்திற்கென சில விலக்குகளை பெற்றுக்கொடுத்தனர். தமிழத்தை பொறுத்தவரை தமிழ் ஆட்சி மொழியாகவும் அலுவல் மொழியாகவும் இருக்கிறது. ஆங்கிலம் இரண்டாம் மொழியாக விளங்குகிறது. மூன்றாவது மொழியாக எந்த மொழியையும் விரும்புபவர் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம் என்ற வகையில் நமக்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது. 

இந்த மொழிக்கொள்கையால் ஏனைய மாநிலங்களை விட தமிழத்தில் ஆங்கிலம் தெரிந்தவர்கள் அதிகமாக இருக்கின்றனர். இது நமக்கு கணினித்தொழில் நுட்பத்துறையில் பல்வேறு வாய்ப்புகளை வழங்கியது. நம்மை ஆண்ட திராவிடக் கட்சிகளுக்கு நம் மொழியுரிமையை மீட்டுத் தந்ததில் பெரும் பங்கு இருக்கிறது. ஆனால் 1965க்குப் பிறகு மொழியுரிமைச் செயல்பாடுகள் சுனக்கம்கொண்டன. இயக்கங்கள் இந்த விடயத்தில் தன்னிறைவடைந்ததாக எண்ணிக்கொண்டனவோ என்னவோ. ஆனால் மத்தியில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தொடர்ந்து இந்தியை ஒட்டுமொத்த இந்தியாவின் ஆட்சி மொழியாக மாற்ற பல்வேறு முயற்ச்சிகளை செய்து வருகின்றனர். இந்த முயற்சி, இப்போது பெரும்பான்மை அரசு அமைத்திருக்கும் பாரதிய ஜனதா கட்சியின் மூலம் பன்மடங்கு வீரியம் பெற்று விட்டது. வெளியுறவுத்துறை அமைச்சர் அம்மையார் சுஸ்மா சுவராஜ் இந்தியை ஐ நா வில் ஆட்சி மொழியாகச் செய்ய முயற்ச்சி எடுப்பதாக அறிவித்துள்ளார். பல்வேறு தனித்தன்மை வாய்ந்த மொழிகளைக் கொண்டுள்ள ஒரு நாட்டில் எப்படி ஒரு மொழியை அந்த நாட்டின் அடையாளமாக காண்பிக்க முயல்கிறார்கள் என்பதே நமது கேள்வி. இந்தியாவின் எல்லா மொழிகளுக்கும் சம உரிமையும் மரியாதையும் வேண்டும் இந்தத் தருணத்தில் இந்தியை ஒட்டுமொத்த இந்தியாவின் மொழியாக அறிவிப்பது ஏனைய மொழிபேசுபவரின் அடையாளங்களை அழிப்பதாகும்.

தமிழர்களைப் பொறுத்த அளவில் அவர்கள் பண்பாடு, மொழி, தேசியம் எதுவும் இந்தியையும், வட இந்தியாவையும் சார்ந்ததல்ல. சொல்லப்போனால் தமிழகம் இந்தியாவின் நிலப்பரப்பில் இணைந்திருக்கும் ஒரு தனிச்சிறப்பு கொண்ட மாநிலம். தமிழர்களின் வரலாறு, இலக்கியம், பண்பாடு எதுவும் இந்திக்கோ, வட இந்தியாவிற்கோ தொடர்பில்லாதது. அப்படியிருக்கையில் எப்படி இந்தி தமிழரின் ஆட்சிமொழியாகவும், அலுவல் மொழியாகவும், அடையாளமாகவும் இருக்க முடியும்?. இந்தியோ, வேறு எந்த மொழியோ தேவையான போது அதைத் தேவைப்படுவோர் கற்றுக்கொள்வதுதான் இயல்பு. அதைவிடுத்து இந்தியை இந்திக்கு சற்றும் தொடர்பில்லாத தமிழர்கள் மேல் திணிப்பது, தமிழர்கள் மீண்டும் தங்கள் உரிமைக்கான குரலை உயர்த்த வேண்டிய தேவையை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசுப் பணிகளில் தேர்வுகள் இந்தியிலும், மத்திய அரசு சார் நிறுவனங்களில் விண்ணப்பங்கள், அறிவுப்பகள் இந்தியில் எழுதப்படும்போது, அதன் தேவை சற்றும் இல்லாத தமிழர்களுக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. பல்வேறு மொழிகளை தாய்மொழியாகக்கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தை மாதிரியாகக் கொண்ட ஒரு மொழிக் கட்டமைப்பை இந்தியா உருவாக்கிக்கொண்டு மொழிகளுக்கிடையேயான சிக்கலை தீர்க்க முனையவேண்டும் என்ற நோக்கில் வரும் செப் 19 மற்றும் 20 ஆம் தேதிகளில் மொழியுரிமை மாநாடு சென்னையில் நடக்கவிருக்கிறது.

இன்றைய காலகட்டத்தில் இந்த மாநாடு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த மாநாடு எழுப்பும் குரல் மொழியுரிமைப் போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த பேருதவியாக இருக்கும். தமிழத்தின் பல்வேறு தமிழார்வ அமைப்புகளும் தலைவர்களும் கலந்துகொள்ளும் இந்த மாநாடு நமது வாழ்நாளில் ஒரு மிகச் சிறப்பு மிக்க நிகழ்வாக இருக்கும். முடிந்த வரையில் தமிழால் வாழும் நண்பர்களும், தமிழை இன்னும் பல்லாண்டு வாழவைக்கும் எண்ணம் கொண்ட் நெஞ்சங்களும் கலந்து கொள்ள வேண்டும்.

நிகழ்ச்சி நிரல்:

செப் 19 : காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை,
                 சென்னை மியூசுஜ் அகாடமி அருகில் உள்ள கவிக்கோ அரங்கில்
                 கலந்துரையாடல்கள் இடம்பெற உள்ளன.

                இதில் மொழியுரிமைக்கான தீர்மானம் உருவாக்கப்படும்.
           
                தமிழ் உரிமைக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் திரு கி.த. பச்சையப்பன்
                தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர், திரு. பெ. மணியரசன்,
                தமிழ் மொழியுரிமைக் கூட்டியக்க நெரியாளுகைக் குழுத்தலைவர் திரு பா. செயப்பிரகாசம் மற்றும்,
                எழுகதிர் ஆசிரியர் திரு. அருகோ ஆகியோர்

                மாநாட்டுத் தொடக்கச் சிறப்புறைகளை ஆற்ற உள்ளனர். 

செப் 20: மேற்கு மாம்பலத்தில் உள்ள சந்திர சேகர் திருமண மண்டபத்தில்

மாலை 2 மணி முதல் 3 மணிவரை : மொழியுரிமைத் தியாகிகள் நினைவேந்தல்

மாலை 3 மணி முதல் 5 மணிவரை :  மொழியுரிமைக்கான சென்னை பறைசாற்றத்தை வெளியிட்டு உரையாற்றூவோர்,

              திரு மணி மணிவண்ணன்- மொழியுரிமை முன்னெடுப்பு - தமிழ்நாடு, 
              பேரா. ஜோகா சிங், பஞ்சாப், 
              திரு தீபக் பவார் - மகாரஸ்டிரம், 
              பேரா. கர்கா சாட்டர்ஜி, மேற்கு வங்கம், 
              திரு. சாகேத் சாரு - கோசாலி/ஒடிசா, 
              திரு ஆனந்த்.ஜி- பனவாசி பலகா, கர்நாடகம், 
              பேரா. பி. பவித்திரன் - மலையாள ஜக்கியவேதி, கேரளம்,
              திரு வளர்மதி - தமிழ்நாடு, 
              திரு சேகர் கொட்டு - ஆந்திர பிரதேசம்,


 மாலை  5 மணி முதல் 9 மணி வரை : சிறப்புரைகள்

               தலைமை திரு. சாந்தலிங்க மருதாசல அடிகளார், பேருர் ஆதினம், கோவை,
              வரவேற்புரை தோழர் பாவேந்தன், தமிழ்தேச நடுவம்,
              அறிமுகவுரை திரு. ஆழி செந்தில்நாதன்,

நமது மொழி, நமது அதிகாரம், மாநாட்டுச் சிறப்புறைகள்

             தலைமை  திரு. பழ. நெடுமாறன், தலைவர், தமிழர் தேசிய முன்னணி,
            திரு. தொல். திருமாவளவன், தலைவர், விடுதலை சிறுத்தைகள் கட்சி,
            திரு. எம்.எச். ஜவாகிருல்லா, மூத்த தலைவர், மனிதநேய மக்கள் கட்சி,
           தோழர் சி.மகேந்திரன், தேசியக் குழு உறுப்பினர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி,
           திரு. தி. வேல்முருகன், நிறுவனர் - தலைவர், தமிழக வாழ்வுரிமைக் கட்சி,
           திரு சீமான், தலைமை ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி,
           திரு சுப. உதயகுமாரன்ஒருங்கிணைப்பாளர், பச்சைத் தமிழகம்,

இன்னும் பல முக்கிய ஆளுமைகள் கலந்து கொள்கிறார்கள்.                 

No comments:

Post a Comment