Wednesday, September 2, 2015

காட்சிப் பிழை

எங்கோ ஒரு புள்ளியில் தொடங்கி ஓட ஆரம்பித்து இன்று நாம் நிற்க்குமிடத்தில் நின்று திரும்பிப் பார்க்கும்போது கால் தடத்தின் தொடக்கம் நம் கண்களுக்கு தெரியவில்லை. நாம் சிறுவர்களாக இருந்த போது நம்மிடம் இருந்த நேரமும் மகிழ்ச்சியும் இப்போது நம்மிடம் இல்லை. அதைத் தேடி அலைந்து முடிவில் சிறுவர்களாகவே மாறிவிட வேண்டும் என்ற ஆசை வந்து சேர்ந்து ஒட்டிக்கொண்டது. காலம் நம்மிடம் மாற்றத்தை திணித்துக்கொண்டே இருக்கிறது - நாம்விரும்பாவிட்டாலும். என்றுமே நேற்றைப் போல இன்றும், இன்றைப் போல நாளையும் இருக்கப்போவதில்லை. வருடத்திற்கு இரண்டு பண்டிகைகள் புதுத்துணி கொண்டுவந்து சேர்க்கும். ஆனால் ஆடைகள் எப்போதுமே ஒரு பற்றாக்குறையை உணர்த்தியதில்லை. எனக்கு மட்டுமல்ல எம் பெற்றோருக்குமே. எமது பெற்றோர் ஒரு போதும் பத்து மணி நேரத்திற்கு மேல் பொருளீட்ட கடமையாற்றிக் கொண்டிருக்கவில்லை. ஓட்டு வீடுதான் ஆனால் ஒருபோதும் புழுக்கத்தையும் வெறுமையையும் உணர்ந்ததில்லை. எளிய உணவுதான், ஆனால் ஆத்ம திருப்தி கொடுத்தது. கேளிக்கைகள் அதிகமில்லை, இருந்தும் நண்பர் பட்டாளம் குதூகலத்தைத் தந்தது. 

தொன்னூறுகளில் பதினைந்தாயிரத்திற்கு மேல் சம்பளம் வாங்கும் அதிகாரியை அதிகம் பார்க்க முடியாது. ஆசிரியர்கள் மட்டுமே இந்தச் சமூக கூட்டத்தில் அதிகம் சம்பாதிப்பவர்கள். அவர்களே சமூகத்திற்கு சீட்டுச் சேர்ப்பது, அவசரத்திற்கு வட்டிக்குக் காசு கொடுத்து உதவுவது போன்ற சமூக பொருளாதாரச் சுமைகளை குறைக்கும் சேவையை செய்து வந்தனர். இரண்டாயிரம் சம்பளம் வாங்குவது சராசரி வேலைக்குச் செல்லும் எவருக்கும் கை வந்தது. அன்றைய விலைவாசியும் ஓரளவு சம்பளத்திற்கு ஈடு கொடுக்குமளவிற்கு இருந்தது. சில சாமர்த்திய குடும்பத்தலைவிகள் அதிலும் சேமித்து குடும்பத்திற்குச் சொத்து சேர்த்தனர். எட்டு ரூபாயில் கோயம்புத்தூர் போய்விடலாம், 4 ரூபாயில் திருப்பூர் போய்விடலாம். 

கல்விக்கென தனி செலவேதும் இல்லை. அதிக பட்சம் கணித டியூசனுக்கு மாதம் முப்பது ரூபாய் கொடுக்கவேண்டியிருக்கும். மற்றபடி அரசுப் பள்ளியில் அனைத்துக் கல்வியும் கிடைத்தது. இங்கு 'அனைத்து' என்பது பாடப்புத்தகத்தில் இருக்கும் கல்வியைத்தாண்டி, சமூகக் கல்வி, பொருளாதாரத்தின் பல்வேறு நிலைகளில் இருந்து வரும் சக மனிதர்களின் வாழ்க்கை, கைத்தொழில் (பள்ளியில் ஒரு பாடம்) என்ற அனைத்தும். ஒரு சமூகத்தின் அத்தனை வகைமனிதர்களுடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது. தோல்விகள், அவமானங்கள் எப்போதும் மன விரக்தியை ஏற்படுத்தியதில்லை,காரணம் அவை பழக்கப்பட்டு விடும். சைக்கிள் மட்டுமே தனி நபர் வாகனம் என்பதால் கூடுதல் செலவில்லை என்பது கூடுதல் லாபம். 

இன்றோ மாதம் ஐம்பதாயிரத்திலிருந்து எண்பதாயிரம் ரூபாய் வரை சம்பளம். வீட்டு வாடகை அல்லது வீட்டுக் கடன் தவணை 15 ஆயிரத்திலிருந்து 20 ஆயிரம் வரை. குழந்தைகள் பள்ளிக்கு ஐந்தாயிரம் முதல் எட்டாயிரம் வரை. வீட்டுச்செலவு இருபதாயிரம், மின்சாரக் கட்டணம் நாலாயிரம், வாகனச் செலவு மூன்றாயிரம் என்று கணக்கு எழுதி கடைசியில் மீதம் என்று ஏதும் இருப்பதில்லை. ஆனால் வேலை நேரம் 10 முதல் 15 மணி நேரங்கள், அக்கம் பக்கம் பழகாத அடுக்குமாடி குடியிருப்பு வாழ்க்கை, நாளும் கூடிக்கொண்டே போகும் வேலைச் சுமை, வேலை நிலைத்தன்மையின்மை, உடல் நலத்தின் மீது கூட அக்கறையின்மை. 

காலத்திற்கு ஏற்ப புதிய நோய்களும், அந்த நோய்களுக்குச் சிகிச்சை மற்றும் மருந்துகள் என்று எண்ணிப்பார்க்கவே முடியாத சிக்கல்கள் மற்றும் செலவுகள். குடும்பங்களிலும் உறவுகளுக்கிடையிலான நெருக்கம் குறைந்து கொண்டேவருகிறது. 

ஒரு புறம் பொருளாதார வளர்ச்சி, தனிமனித ஊதியம் உயர்ந்துள்ளது, வாங்கும் திறன் அதிகமடைந்துள்ளது என்றுபொருளாதார வியாக்கானம், மறு புறம் மனிதனின் உழைப்பையும் நேரத்தையும் உறிஞ்சிக்கொண்டாலும் பெரிதாகசேமிப்போ குடும்பங்களுடன் நேரம் கழிக்கும் வாய்ப்போ பெரிதாக இல்லாதிருப்பது பெரும் சோகம். அன்று கிராமத்தில் ஐந்தாயிரம் ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தவரின் வாழ்க்கையை இன்று ஐம்பதாயிரம் வாங்குபவரால் வாழமுடியாது. பின் இந்தப் பொருளாதார முன்னேற்றம் என்ற மாயை நமக்கு எதைத் தந்திருக்கிறது? உண்மையிலேயே இது முன்னேற்றமா?. எதுவாக இருந்தாலும் நாம் பின்னோக்கிச் செல்லமுடியாத ஒரு காட்சிப் பிழையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பது மட்டும் நிதர்சனம். சக மனிதர்களிடம் அன்பையும், பண்புள்ள குழந்தைகளையும் வளர்த்தெடுப்பதைத் தவிர இந்தச் சமூகத்தில் நாம் சேர்க்கப்போகும் செல்வமும், இன்பமும் வேறெதுவும் இல்லை.

2 comments:

  1. மிகவும் தெளிவான எழுத்து. நீ சொன்னதும் மிக உண்மை.

    ReplyDelete