Monday, September 21, 2015

உயிர் வாழ்தல்

'அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது' என்ற வரிகள் எவ்வளவு ஆழமானது என்பது எல்லோராலும் புரிந்து கொள்ளப்படுவதில்லை. பலருக்கு இந்த உலகில் மனித இனத்தின் பங்கு, அது எவ்வாறு இந்த பூமிப்பந்தில் உள்ள உயிர்ச்சூழலில் செயல்படுகிறது என்று சிந்திக்குமளவிற்க்கெல்லாம் நேரமோ அல்லது சிந்தனையோட்டமோ இருப்பதில்லை. இயற்கையின் மாபெரும் கட்டமைப்பில் ஒவ்வொரு படைப்பும் ஏதோ ஒரு காரணத்திற்காக உருவாக்கப்பட்டிருக்கிறது. ஒரு மனிதன் கருவில் உருவாகும் போது நேரும் விந்தைகள் நம் அறிவுக்கு எட்டாதவை. அந்த விந்தையில் உருவாகும் உயிர், ஓர் அற்ப்புதமான படைப்பு. மனிதன் வடிக்கும் சிலைகளும், ஓவியங்களும் நாம் எண்ணி வியக்கும் அளவிற்க்கு அதன் பின் உள்ள உழைப்பு காரணமாக இருக்கிறது. ஒரு சிலைக்கே இவ்வளவு அபாரமான உழைப்பு வேண்டுமெனில், விந்துவிலிருந்து உருவாகும் உயிர், முழு உடலைப்பெற்று உலகில் தன் பயணத்தை நடத்தும் ஒவ்வொரு வினாடியும் அதிசயமானது. ஒரு குழந்தை தன்னை முழு மனிதனாக மாற்றிக்கொள்ள எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் எண்ணற்ற அணுக்களின் செயல்பாடும், அவற்றை இயக்கும் நோக்கமும் நம்மால் உணர்ந்து கொள்ள முடியாதவை.

நமது அறிவுக்கு எட்டியவரை குழந்தை பிறக்கிறது, தவழ்கிறது, நடக்கிறது, பேசுகிறது, ஓடுகிறது.. அவ்வளவுதான்.. ஆனால் இந்த செயல்பாடுகளுக்குள் இருக்கும் நிகழ்வுகள் நம் கண்களால் காணமுடியாது. அந்த நிகழ்வுகளை நம்மால் ஒரு கார் இயங்குவது போல் எளிதில் விளக்கிவிட முடியாது. அதைத் தெரிந்து கொள்ளவே நமக்கு இன்னும் ஆயிரம் ஆண்டுகள் வேண்டும். ஒரு சிறு கண் சிமிட்டலுக்குப் பின் ஆயிரமாயிரம் தகவல் பரிமாற்றம் மூளையிலிருந்து உடலின் பல்வேறு பாகங்களில் நடக்கிறது. இவை எதனின் மீதும் நம்மால் நாம் விரும்பியபடி ஒரு மாற்றத்தை ஏற்ப்படுத்தி விட முடியாது. உடலுறுப்புக்களை அசைப்பது மட்டுமே நம்மால் செய்யக்கூடிய செயல். அதன் பின் இயங்கு ரத்த ஓட்டம், சதை சுருங்கி விரிதல், எலும்பு நகர்வு எதையுமே நம்மால் ஊகித்து கட்டுப்ப்டுத்த முடியாது. நமது அறிவியலும் அந்த அளவிற்கு இன்னும் வளரவில்லை. நீங்கள் ஒருவேளை தற்கால மருத்துவ அறிவியலைக் கொண்டு, ஏன் இதையெல்லாம் செய்து கொண்டுதானிருக்கிறார்கள் என்றால், உங்களுக்கு இயற்கையின் உருவம் இன்னும் அகப்படவில்லை என்றே சொல்லவேண்டும். இங்கு நாம் பேசுவது அந்த இயக்கங்களுக்கான மூலத்தைப்பற்றி. 

இவ்வளவு விந்தைகளைக் கொண்ட உயிர் படைப்பான நாம் அதிகம் கவனம் செலுத்துவதெல்லாம், செயற்க்கையாக மனித சமுதாயம் வகுத்துக்கொண்ட நடைமுறைகளையும், விதிகளையும், மதிப்பீடுகளைப்பற்றியுமே. இவை மனித சமுதாயக்கூட்டத்தில் ஒரு ஒழுங்குடன் வாழ்வதற்க்கு ஏற்ப்படுத்திக்கொண்ட கட்டமைப்புகள். இவை மீறப்படும்போது அதற்க்கான விளைவுகளை நாம் சிறிதாகவோ, பெரிதாகவோ அனுபவிக்கக்கூடம். ஆனால் இந்த விளைவுகள் நாம் ஒப்புக்கொண்ட இந்த சமுதாய நடைமுறையின் ஒரு பகுதியே. இதற்க்கும் நம் உயிர் மூலத்திற்க்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. நம் அறிவுக்கு எட்டியவரையில் நாம் எடுக்கும் முடிவுகளைப் பொறுத்து விளைவுகள் இருக்கும். அந்த விளைவுகளை தாங்குமளவிற்கு மனம் பக்குவமடையவில்லையென்றால், நமக்கு முடிவெடுக்கும் பயிற்சி தேவை என்பதோடு கடந்து விடவெண்டும். இந்த மனித வாழ்கையில் நிகழும் ஒவ்வொரு நிகழ்விற்கும் நம் செயல்களும், முடிவுகளும் அடிப்படையாக இருக்கின்றன. இவற்றை தவறு, சரி என்ற வகைப்படுத்தும் காரணிகள் கூட அந்த மனிதனின் புறச்சூழல் சார்ந்தது. ஒரு முடிவை ஆராய்ந்து எடுத்தபின் அதில் வரும் விளைவுகள் நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அதன் தாக்கம் நம்மீது இருக்கும். ஆனால் அது ஒரு போதும் உயிர் சார்ந்தது கிடையாது. இந்த உலகில் நாம் தேடிக்கொண்ட அறிவு சார்ந்தது. 

சமீபத்தில் நாம் பார்த்த அரசு அதிகாரிகளின் தன்னுயிர் மாய்த்தல் நிகழ்வுகள் ஒரு பக்கம் துயரத்தை ஏற்படுத்தினாலும், இன்னொருபக்கம் அந்த முடிவுகளுக்குப் பின் உள்ள சூழலை நாம் புறந்தள்ளிவிடக்கூடாது. ஒரு மனிதன் தன் உயிரை மாய்த்துக்கொள்ளும் முடிவை எடுப்பது சாதாரணமானதல்ல. அப்படி ஒரு முடிவை எடுக்கும் மன நிலை எப்படிப்பட்டதாக இருக்கும்? அது போன்றதொரு முடிவை எடுக்காமல் தவிர்த்திருக்க முடியுமா? அவருக்கு வேறு ஏதும் வாய்ப்புகள் இருந்திருக்குமா? எதை எதிர்பார்த்து அவர்கள் தங்களை மாய்த்துக்கொண்டார்களோ, அவை அவர்கள் இறந்த பின் நிறைவேறிவிட்டதா? இந்த கேள்விகளுக்கு விடைகான, நம் மனதை நாம் உருவாக்கிக்கொண்ட புறச்சூழலில் இருந்து விடுவித்து, வாழ்தல் என்ற அடிப்படை நோக்கை மட்டும் கொண்டு சிந்திக்கவேண்டும். 

ஒரு அரசு அதிகாரி தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்கிறார்? காரணம், அவரது மேலதிகாரியின் துன்புறுத்தலாலோ அல்லது அந்த அதிகாரி உருவாக்கிக் கொண்ட சுய மதிப்பீடுகளுக்கு ஆபத்து ஏற்படும்போது, உயிர் வாழ்தலை நிராகரிக்கிறார். இந்தச் சூழலில் அவர் வாழ்வை தொடர்வதற்க்கான காரணிகள் எவையாக இருக்கக்கூடும்? தன்னால் முழு ஈடுபாட்டுடணும் சுதந்திரத்துடனும் பணியாற்ற முடியாதபோது, அந்த பணியை துறந்துவிடலாம், அல்லது தன் புறச்சூழலை மாற்ற முயற்ச்சிக்கலாம். தன் புறச்சூழல்களான தனது பணி, மேலதிகாரி, துறை எதையும் மாற்ற முடியாதபோது அதைவிட்டு விலகிவிடலாம். விலகினாலும் ஏதோ ஒருவகையில் அழுத்தம் தொடருமென்றால், அந்த அழுத்தத்திற்கான காரணங்களுடன் சமரசம் செய்துகொள்ளலாம். 

இவற்றைச் செய்வதானால் சமுதாயத்தில் நாம் நம் மீது உருவாக்கிக்கொண்ட மதிப்பீட்டை உடைத்துவிடுவோம், அது எதிர்மறை விளைவை உண்டாக்கும் என்ற எதார்த்தம் இருந்தாலும், இந்த பூமிப்பந்தில் நம்மைச்சுற்றி இருக்கும் பத்துப்பேர்களின் அறிவில் நம்மைப் பற்றிய மதிப்பீட்டிற்கு நாம் கொடுக்கும் முக்கியத்துவத்தை குறைத்துவிடவேண்டியது தான். அந்த மதிப்பீட்டைக் காக்க இயற்கையின் அற்புதப் படைப்பை அழிக்க எடுக்கும் முயற்ச்சிக்குப் பதிலாக, சில சமரசங்களுடன் உயிர்களை புரிந்து கொள்வதிலும், அவற்றின் வாழ்விற்கு உதவுவதிலும், எந்த மதிப்பீடுகளும் இல்லாமல் முயலலாம். அவ்வாறான ஒரு தருணத்தில் அங்கு வாழ்வது ஒரு உயிர் அல்ல, ஓர் அற்புதம். அந்த உயிர் யாருக்கும் சொந்தமானதல்லாமல், இயற்கையுடன் இணைந்து கொள்கிறது. அங்கு வாழ்தல் மட்டுமே இருக்கிறது, இறப்பதற்க்கு வழிதேடும் மனிதர்கள் வாழ்வதற்கான காரணங்கள் பல உண்டு என்பதைப் புரிந்து கொள்ளும்போது, நம் வாழ்க்கைப் பயணம் இனிதாகிறது. வாழ்தல் உயிர்களுக்கானது...

No comments:

Post a Comment