தமிழக அரசியல் கட்சிகளின் அறிக்கைகள் மற்றும் செயல்பாடுகள், நமக்கு தேர்தல் என்பது ஒரு விழாவோ என்று எண்ணத் தோன்றும் அளவுக்கு இருக்கின்றன. ஆடி மாதம் சென்னை சில்க்ஸிலும், போத்தீஸிலும் வழங்கப்படும் கவர்ச்சிகரமான தள்ளுபடி மற்றும் ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்பது போல் விளம்பரம் செய்து கொண்டிருக்கிறார்கள். ஒரு வேளை, மக்களும் தேர்தல் வந்தால் தங்களுக்கு ஏதாவது சலுகை கிடைக்கும் என்ற மன நிலை வந்துவிட்டதோ என்று கூட எண்ணத் தோன்றுகின்றது. இது நமது நாட்டை எங்கே கொண்டு சேர்க்கப்போகிறது?. தேர்தலுக்கு முன் இருக்கும் ஆரவாரம், பதவியில் அமர்ந்த அடுத்த விநாடியே, மயான அமைதியை உள்வாங்கிக் கொள்கிறது. மக்களுக்கும் தீபாவளிக்கு அடுத்த நாள் போல் குப்பைகளை அள்ளிப்போட்டுக் கொண்டு அவர் அவர் வேலைகளை பார்க்கச் சென்று விடுகின்றனர்.
இந்த தேர்தல்களும் அறிக்கைகளும் அரசியல் கட்சிகளால் கேளிக்க்கூத்தக்கப் பட்டுவிட்டது. இன்னும் ஒரு படி மேலே போய் மக்களை ஒரு வாடிக்கையாளராகவே மாற்றி விட்டார்கள். இங்கு எந்த கட்சியும் கொள்கைகளை முன் வைத்து ஓட்டு கேட்பதில்லை. "கொள்கைகள் இருந்தால் தான் அதை வைத்து ஓட்டுக் கேட்பார்களே" என்ற உங்கள் குரல் கேட்கிறது. நம்மை விட்டால். இந்த நாட்டை திருத்த யார் இருக்கிறார்கள்?(!) ஆகவே கொஞ்சம் நாமும் இந்த கட்சிகள் என்ன செய்வது சரியாக இருக்கும் என்று பார்போம்.
நாடு சுதந்திரம் அடைந்த பிறகு காங்கிரஸ்தான் நாடுதழுவிய பெரும் அரசியல் இயக்கம். குடியரசான நாடு தேர்தலை சந்திக்கும்போது இன்று இருக்கும் அளவிற்கு அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை அதிகம் இல்லை, போட்டி இல்லை. இருந்தும் அன்றைய தலைவர்களுக்கு நாடு எதிர் கொண்டுள்ள சவால்கள் மற்றும் தொலை நோக்குப் பார்வை மூலம் நாடு எப்படி இருக்க வேண்டும் என்று எண்ணி அதற்கான திட்டங்களை முன் வைத்து தேர்தலை சந்தித்து செயல் பட்டார்கள். வறுமை ஒழிப்பு, எல்லோர்கும் கல்வி, தொழில் வளர்ச்சியை பெருக்குதல், குடிமக்களின் பாதுகாப்பு மற்றும் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வது போன்ற திட்டங்களை முன்வைத்து செயல் பட்டார்கள்.
பின் தமிழத்தில் முன்னோடியாக திராவிட இயக்கம் சுய மரியாதை, பெண் விடுதலை, சாதி ஒழிப்பு, சமூக நீதி, கட்டாயக் கல்வி, அனைவருக்கும் வேலை வாய்ப்பு என்ற முற்ப்போக்கான கொள்கைகளை முன் வைத்து மக்களை ஒரு பெரும் மாற்றத்திற்கு தயார் படுத்தினர். மக்கள் ஒரு பெரும் சமூக மாற்றத்தை எதிர் கொண்டனர். ஏனைய மாநிலங்களை விட முற்ப்போக்கான சிந்தனைகளுடன் மனித நாகரீகத்தின் அடுத்த கட்டத்திற்கு தமிழகம், பெருந்தலைவர் காமராஜர், தந்தை பெரியார் மற்றும் அறிஞர் அண்ணாவல் எடுத்துச் செல்லப்பட்டது. பிறகு வந்த கலைஞரும், எம் ஜி ஆரும் அவ்வாறான மிகப் பெரும் சமூக மாற்றங்களைச் செய்யாவிட்டாலும் ஆட்சியமைப்பை செம்மைப் படுத்தி மக்களின் மேலதிகத் தேவைகளை அரசுகள் பூர்த்தி செய்யும் வகையில் ஆட்சி செய்தனர். அந்த கால கட்டங்களில் பெரும் சமூக முன்னேற்ற நகர்வுக்கு வாய்ப்பில்லாமல், அதற்கு முன் இருந்த தலைவர்கள் மிகப்பெரும் மாற்றத்தை செய்து விட்டு போயிருக்கலாம் என்பதை நாம் காரணமாக எடுத்துக்கொண்டு, எம் ஜி ஆரையும், கலைஞரையும் உள்ளபடியே ஏற்றுக்கொள்வோம்.
ஆனால் 1990 களுக்குப் பின் ஆட்சிசெய்த திராவிடக் கட்சிகள் அடுத்த கட்ட முற்போக்கு கொள்கைகளை முன் வைத்திருக்க வேண்டும். ஏன் 1990 என்கிறீர்களா? இந்த கால கட்டத்தில் தான் இந்தியாவின் பொருளாதார சூழல் மாறுகிறது. தாராள மயமாக்கல், மற்றும் கூட்டணி ஆட்சிகள் நாட்டில் பெரும் தாக்கதை ஏற்படுத்திகின்றன. நமது அரசியல் கட்சிகள் இந்த மாற்றங்களை மக்களின் நலனுக்கான தொலை நோக்கு கொள்கை வடிவமைப்புக்காக உள்வாங்கிக் கொள்ளாமல், தமது சுயநல குறுகிய நோக்கு திட்டங்களுக்காக சிந்திக்கக் தொடங்கியது. பொருளாதார தாராள மயத்தின் மூலம் வகுக்கப்படும் திட்டங்களில் எப்படி கொள்ளையடிப்பது, தனியார் மயத்தின் மூலம் எப்படி அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் நாட்டின் வளங்களை கொள்ளையடிப்பது, கூட்டணியில் எந்த துறை பணம் கொழிக்கும் துறையோ அதை எப்படி பேரம் பேசி வாங்குவது, அதற்க்குப் பின், எப்படி தங்கள் குடும்பம் மற்றும் உறவுகளைக் கொண்டு தங்கள் தனிப் பொருளாதார சாம்ராஜ்யத்தை கட்டியமைப்பது என்பது போன்ற திட்டமிடல்களில் மக்களை மறந்தே போயினர்.
மக்களின் கோபம் ஆட்சி மாற்றத்தை ஏற்ப்படுத்தியதும், ஆட்சிக்கு வந்தவர் முன்னவர் செய்த ஊழல்களை வெளிக்கொண்டுவந்த வழக்குகள் தொடுத்து தான் நேர்மையாளர் என்ற தோற்றத்தை ஏற்படுத்தினார். ஓராண்டுக்குப் பிறகு வந்தவரும் அனுபவத்தினால், மாட்டிக்கொள்ளாமல் ஊழல் செய்யக் கற்றுக்கொண்டு, மக்கள் செல்வத்தை சுரண்ட ஆரம்பித்தார். அவ்வப்போது எழும் மக்கள் குரலுக்காக அங்கொன்றும் இங்கொன்றும் கவர்ச்சித் திட்டங்களை அறிவித்துக் கொண்டிருந்தனர். ஒரு கட்டத்தில் வேலை வாய்ப்பு பெரும் பிரச்சினையாக வளர்ந்த போது அரசு அனைவருக்கும் வேலை வழங்க முடியாது, அதனால் தனியார் வேலைவாய்ப்புகள் உருவாக வேண்டும் என்பதை உணர்ந்து ஆலைகள் நிறுவ, சலுகைகள் அளித்தனர், பின் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் மூலம் வெளி நாட்டு முதலீடுகளின் மூலம் நிறுவனங்கள் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டனர். இந்த நிறுவனங்களுக்கு தேவையான கல்வித் திறனை அரசு மட்டுமே வழங்க முடியாது என்று கருதி, தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு கட்டற்ற அனுமதி வழங்கினர். தனியார் பள்ளிகள் ஒரு புறம் இந்த வாய்ப்புகளை தங்களுக்கானதாக மாற்றி தங்களை வளர்த்துக்கொண்டனர்.
இப்போது 2015, இருபத்தைந்தாண்டுகள் கடந்தும், அரசியல் கட்சிகள் அடுத்த கட்ட தொலை நோக்கு கொள்கைகளை வகுத்துக் கொள்ள வில்லை. மாறாக ஆட்சிக் காலமான ஐந்தாண்டுகள் போய், தேர்தல் காலமான இரண்டு மாதத்திற்க்கு மட்டும் திட்டங்கள் தீட்டும் நிலமை வந்து விட்டது. இவர்கள் ஆட்சி செய்த 50 காலமாக இருக்கும் பிரச்சினைகளுக்கு இவர்களால் தீர்வு காண முடியாத போது , அது அவர்களின் தோல்வியாகத்தான் பார்க்கப்படுகிறது.
- சாதிப் பாகுபாடு.
- அழிந்து வரும் விவசாயம் போன்ற தற்ச்சார்பு தொழில்கள்.
- நிர்வாகச் சீர்கேடு
- எங்கும் பரவி இருக்கும் ஊழல்.
- அழிந்து வரும் கிராமங்கள்.
- அழிந்து வரும் இயற்கை வளங்கள்.
- குறைந்து வரும் நீர் வளம்.
- அறிவியல்த் தேவை.
- கல்வி மற்றும் சுகாதாரத் தரம்.
போன்ற இன்றைய காலத் தேவைகளை கணக்கில் கொண்டு தொலை நோக்கு கொள்கைகளையோ, திட்டங்களையோ எந்த அரசியல் கட்சியும் முன்வைக்கவில்லை. மாறாக இவர்கள் கொள்கைகள் வெறும் இலவசங்களாகவும், தள்ளுபடிகளாகவும், விரைவில் நீர்த்துப்போகும் திட்டங்களாகவுமே இருக்கிறது. இதைச் சொல்வதால் கட்சி சார்பு அறிவு சீவிகள் தங்கள் துறுப்பிடித்த வாளை எடுத்துக் கொண்டுவந்து, நிதித் திட்டத்தைப் பார், கோனார் நோட்சைப் பார் என்று தங்கள் மேதாவித்தனைத்தை மேடையேற்ற வருவார்கள். வரட்டும்... அவர்களைப் பொறுத்தவரை மக்கள் தேவை முழுமையடைந்து விட்டதாக எண்ணிக்கொண்டு இருக்க நம்மால் முடிவதில்லை, ஒரு வேளை உண்ணும் உணவு செரிக்காததால் கூட நாம் இப்படி சிந்திக்கலாம்!
இன்னும் ஒரு படி மேலே போய், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் போக்குவரத்து வாகனங்கள் மேம்படுத்தப்படும், மின் தடை இருக்காது, அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடுக்கத் தேவையில்லை என்று நிர்வாகம் தொடர்பான வாக்குறுதிகளைக் கொடுக்கின்றனர். நமக்கு அரசியல் கட்சிகல் இது போன்ற வாக்குறுதிகளைக் கொடுக்கும் போது கேட்கத் தோன்றுவது, "இவை எல்லாம் அதிகாரிகளின் வேலை. அரசியல் கட்சிகள் எந்த எதிர்பார்ப்புமில்லாமலே இந்த நிர்வாக மேலாண்மையை ஆட்சிக்கு வந்தது செய்யவேண்டும், இதைச் செய்வேன் என்று சொல்வதற்கு எதற்கு அரசியல் கட்சி, நல்ல அதிகாரிகளே போதுமே" என்று சொல்லத் தோணுகிறது.
இன்னும் ஒரு படி மேலே போய், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் போக்குவரத்து வாகனங்கள் மேம்படுத்தப்படும், மின் தடை இருக்காது, அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடுக்கத் தேவையில்லை என்று நிர்வாகம் தொடர்பான வாக்குறுதிகளைக் கொடுக்கின்றனர். நமக்கு அரசியல் கட்சிகல் இது போன்ற வாக்குறுதிகளைக் கொடுக்கும் போது கேட்கத் தோன்றுவது, "இவை எல்லாம் அதிகாரிகளின் வேலை. அரசியல் கட்சிகள் எந்த எதிர்பார்ப்புமில்லாமலே இந்த நிர்வாக மேலாண்மையை ஆட்சிக்கு வந்தது செய்யவேண்டும், இதைச் செய்வேன் என்று சொல்வதற்கு எதற்கு அரசியல் கட்சி, நல்ல அதிகாரிகளே போதுமே" என்று சொல்லத் தோணுகிறது.
தேர்தலை சந்திக்க வரும் கட்சிகள் தங்கள் கொள்கைகளை முன்னிருத்தி ஓட்டு கேட்க வேண்டும். துணிக்கடைகளைப் போல் ஆப்பர்களை முன்னிருத்தியல்ல. அடுத்த தலைமுறைச் சமூகத்தை வழி நடத்தத் தேவையான காரணிகளை உள்வாங்கிக் கொள்ளாமல், ஆட்சி நடத்தும் அதிகாரத்தை மட்டும் நோக்கி ஓடுவதால்தான் சமுதாயச் சிக்கல்கள் பிரச்சினைகளாக உருவெடுக்கின்றன. பிரச்சினைகள் போராட்டங்களாகவும், போராட்டங்கள் புரட்சியாகவும் மாறுகிறது. மக்களை புரட்சி செய்ய விட்டுவிட்டு, தாங்கள் ஆட்சி அதிகாரம் செழுத்துவதில் கவனமாக இருந்தால் , ஆட்சி செய்த இயக்கங்களின் தேவை இல்லாமல் போய், காலப்போக்கில் அழிந்து போகும் நிலைக்குத் தள்ளப்படும். அவ்வாறான ஒரு காலகட்டத்தை நோக்கியே நம் நாட்டு அரசியல் போய்க்கொண்டிருப்பது ஏன் நம் கண்களுக்கு மட்டும் தெரிந்து தொலைக்கிறதோ....
No comments:
Post a Comment