Saturday, January 7, 2017

Above and Beyond

1947ல் ஐநாவில் இஸ்ரேலை தனிநாடாக ஏற்றுக்கொண்ட பின், இங்கிலாந்துப் படைகள் பாலஸ்தீனத்திலிருந்து வெளியேருவதற்காக ஐந்து(எகிப்து, ஈராக், ஜோர்டான், சிரியா, லெபனான்) அரபு நாடுகள் காத்திருக்கின்றன. பாலஸ்தீனம் உடைவதை விரும்பாத அரபு நாடுகள் இஸ்ரேலை அங்கீகரிக்காமல் அதன்மீது வலிந்த போரைத் தொடுத்து தடுத்து நிறுத்த திட்டமிடுகின்றன. உருவாகப்போகும் போரில் இன்னும் உருவாகாத இஸ்ரேல் தோற்றுவிடுவது நிதர்சனம் என்று கருதி எந்த நாடும் அவர்களுக்கு வெளிப்படையாக உதவவில்லை. அமெரிக்காவில் குடிபெயர்ந்த சில யூதர்களின் உதவியுடன் இரண்டாம் உலகப்போருக்குப் பின் அமெரிக்காவில் எஞ்சிய காயலான்கடைக்குப் போகப்போகும் இரண்டு பழைய சிறிய விமானங்களை முதலில் வாங்குகின்றனர். அமெரிக்கப் விமானப் படைகளில் பணியாற்றிய யூதர்கள் உதவியுடன் அந்த விமானங்கள் செக்கோஸ்லோவியாவை அடைகின்றது. மேலும் சில விமானங்களை வாங்கி ஒரு விமான நிறுவனமாக உருவாக்கி விமானங்களையும் ஆயுதங்களையும் அமெரிக்காவிலிருந்து கடத்தி இஸ்ரேலுக்குக் கொண்டு செல்கின்றனனர். எகிப்தின் படைகள் இஸ்ரேலை நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் எதிர்பாராத விமானத் தாக்குதலில் எகிப்தின் பீரங்கிப்படையை திணரடிக்கின்றனர். இஸ்ரேலிடம் பெரும் விமானப் படை இருப்பதாக எண்ணி எகிப்து பின் வாங்குகிறது. அதே போல ஈராக் படைகளும். 

ஒருகட்டத்தில் கெய்ரோ விமான நிலையத்தின் மீது பறந்த இஸ்ரேலிய விமானத்திடம் தன்னை அடையாளம் காட்டச்சொன்ன கட்டளைக்கு தமது விமானத்தின் பெயரைச் சொன்னதும், தங்கள் நாட்டு விமானம் என்று எண்ணி தரையிரங்க விளக்குகளை எரியவிட்டது கெய்ரோ விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு நிலையம். மேலிருந்து கெய்ரோ நகரை அடையாளம் கண்டுகொண்ட விமானிகள் பெரும் குண்டுகளை நகரத்தின் மீது வீசிச் செல்கின்றனர். பெரும் இழப்பிற்குள்ளான எகிப்து திகிலடைந்து பின் வாங்குகிறது.

தங்களிடம் நூற்றுக்கும் மேற்பட்ட விமான படையணிகள் இருப்பது போல், விமானத்தில் 101 என்று எழுதி எதிரியை ஏமாற்றி பயம் கொள்ள வைத்தது கவனிக்கத்தக்க போர்த் தந்திரம். உலகின் பல பகுதிகளிலிருந்து தன்னார்வலர்களாகவோ, ஊதியத்திற்கோ அமர்த்தப்பட்ட விமானிகளைக் கொண்டும், பழைய விமானங்களைக் கொண்டும் தன்னை எதிர்த்த 5 பெரும் நாடுகளுடன் சண்டையிட்டு வென்று, இஸ்ரேல் தனி நாடாக உருவெடுக்கும் நிகழ்வுகளைச் சொல்கிறது இந்த ஆவணப்படம்.

தோல்வியடைந்து விடுவார்கள் என்று அனைவரும் எண்ணிய நிலையில், வாழ்வுக்கும் சாவுக்குமான தெரிவில், சாவை அடைந்தாவது வாழ்ந்து விடவேண்டும் என்று எண்ணிய இஸ்ரேலியர்கள் அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தி தங்களுக்கான நாட்டை உருவாக்கிக் கொள்கின்றனர். அவர்களுக்குள் காட்டிக் கொடுக்கவும், கைகழுவி விடவும் எந்த துரோகிகளும் இல்லாமல் போனது ஆச்சர்யமான உண்மை.

இஸ்ரேல் - சரியா தவறா என்பதைத் தாண்டி, அவர்களிடம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது.

No comments:

Post a Comment