மிக மோசமான விமான சேவையின் பட்டியலில் ஏர் இந்தியா மூன்றாமிடத்தில் இருப்பதாக செய்திகள் வருகிறது. யார் இந்தப் பட்டியலை உருவாக்குகிறார்கள், எதற்காக உருவாக்குகிறார்கள் என்பதைத் தெரிந்து கொண்டால் அதற்குப் பின் உள்ள அரசியல் தெரியும்.
நெடுந்தூரப் பயணங்களுக்கு எமிரேட்ஸ், ஜெட், லுப்தான்சா, யுனைட்டெட், அமெரிக்கன் ஏர்லைன்ஸ், பிரிட்டிஸ் ஏர்வேஸ், கெதெ பசிபிக், எதியாட், கதார் ஏர்லைன்ஸ் போன்ற விமான சேவைகளைப் பயன்படுத்தியுள்ளேன். சமீபத்தில் ஏர் இந்தியா சேவையை பயன்படுத்தும் வாய்ப்பு கிடைத்தது. இதற்கு முன் ஒருதடவை ஏர் இந்தியா சேவையைப் பயன்படுத்தியுள்ளேன். இருப்பினும் இந்த முறை ஒரு பெரும் வித்தியாசத்தைக் கண்டேன். ஏர் இந்தியா விமானங்கள் மற்ற விமானங்களை விட அதிக இடவசதி(Leg room) கொண்டது. நெடுந்தூரப் பயணத்திற்கு இது மிகவும் தேவையானது. லுப்தான்சா, யுனைடெட் விமானங்களில் கூட முட்டி முன் சீட்டில் முட்டிக் கொண்டு 13 மணி நேரப் பயணத்தில் சிரமப் பட்டிருக்கிறேன். அந்த சிரமம் ஏர் இந்தியாவில் இல்லை.
அடுத்தது உணவு. ஏர் இந்தியா உணவு வகைகள் இந்தியர்களுக்கு ஏற்றதாகவும், குறுகிய தூரப்பயணங்களுக்கு கூட உணவை தனியாக விற்காமல் இலவசமாக அளிக்கிறார்கள்.
சிப்பந்திகளின் சேவையும் பாராட்டும்படியே இருக்கிறது.
இதையெல்லாவற்றையும் விட, இட ஒதுக்கீடு ஏர் இந்திய நிறுவனத்தில் பின் பற்றப்படுகிறது. ஆதலால் எங்கள் கருப்பினத்தவரையும் அமெரிக்க அலுவலகங்களில் காணலாம்.
என்ன ஒரே ஒரு உறுத்தல், விமானியின் ஒவ்வொரு அறிவிப்பிற்குப் பின்னும் "ஜெய் ஹிந்த்" என்று முடிக்கும் போது தூக்கம் கலைந்துவிடுகிறது. சில சமயம் எங்கே அருகிலிருக்கும் தேச பக்தன் எழுந்து வணக்கம் வைக்கவில்லையென்று சாத்திவிடுவானோ என்ற பயம்வேறு அப்பிக்கொள்ளுகிறது.
மற்றபடி, ஏர் இந்தியா சேவை பாராட்டும்படியாகவே உள்ளது.
No comments:
Post a Comment