Tuesday, August 5, 2008

மீண்டும் பள்ளிக்கு

எத்தனை ஆண்டுகள் ஆனாலும் பள்ளி வாழ்கை என்பது எல்லோர் மனதுக்குள்ளும் பசுமையாக ஏதாவது ஒரு ஓரத்தில் அசை போடப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது. சேரன் தங்கர் பச்சான் ஏற்க்கனவே மேய்ந்த புல் தான் என்றாலும் சற்று தனிப்புல் மேய்ந்து நம்ம ஆசைய தீத்துகலான்னு குலதெய்வம் கருப்பராயன் கிட்ட சீட்டெழுதி போட்டு சம்மதம் வாங்கி ஆரம்பிக்கரேங்க. யாரவது இந்த சொறிப்பய மாதிரி மிரட்டல் பின்னூட்டம் போட்டால் அதுக்கு கருப்பராயன் தான் பதில் சொல்லுவான்.

கருப்பராயன் துணை

கதையின் ஆரம்பத்தை தொட குறைந்தது இருபதாவது நூற்றாண்டு வரையாவது செல்லவேண்டும். 1989 இன் நடுப்பகுதியில் புளியம்பட்டிக்குள் பெண்கள் மேல் நிலைப்பள்ளியும், இன்ன பிற மெட்ரிகுலேசன் பள்ளிகளும் வராத காலம். கோ.வே.கா மேல் நிலை பள்ளியை ஆண்களும் பெண்களும் பிரித்துக் கொண்ட காலம் அது. (கோ வே காளியப்பன் என்ற வள்ளல் அளித்த பல ஏக்கர் நிலம் மற்றும் பல உதவிகளினால் உருவானதுதான் அந்த பள்ளி. அவர் மட்டும் தனியாக ஒரு பள்ளி ஆரம்பித்திருந்தால் இன்று நானெல்லாம் ப்லாக் எழுதிக்கொண்டிருக்க மாட்டேன், எங்காவது ஒரு பனியன் கம்பெனியில் கட்டிங் மாஸ்டராகியிருப்பேன்.)


கதை சொல்லும் நானே கதையின் நாயகன் கந்தன் ஆனேன். அதுவரைக்கும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஐந்தாவது வரை படித்து விட்டு எப்போது இந்த வெள்ளைச்சட்டையும் காக்கி கால் சட்டையும் போடுவோம் என்ற ஆர்வத்துடன் அலைந்த பலரில் நானும் ஒருவன். அதுவும் ஒரு உயர் நிலை பள்ளியில் சேருவதென்பது ஏதோ கேம்ப்ரிட்ஜில் சேருவது போன்ற எண்ணத்தில் தான் காலரை தூக்கி கொண்டு சுத்தினோம். ஊ ஓ தொடக்கப் பள்ளியில் டி சி எனப்படும் பள்ளி மாற்று சான்றிதழ் வாங்கிக் கொண்டு முருகன் காலண்ட்ர் பார்த்து அம்மா சொன்ன ஒரு நல்ல தேதியில் பள்ளியில் சேர்க்க முடிவாகியது.

இந்த முறை முழு ஆண்டு விடுமுறை முடிவது என்பது எனக்கும் என் நண்பர்களுக்கும் துக்கத்தை தர வில்லை. மாறாக ஆர்வத்தை தந்தது. வெய்யிலில் கிரிகெட் விளையாடி விளையாடி கரிக்கட்டை ஆனது தான் மிச்சம். தினமும் காலை ஏழு மணியிலிருந்து சாப்பிடாமல் ஆறு ஏழு மேச் விளையாடியதெல்லாம் நினைத்தால் இப்போதும் அந்த காலத்துக்கு செல்ல ஞாபகப் பசியெடுக்கிறது.

மேட்ச் ஆரம்பிக்கும் முன் எப்படியும் ஒரு மூன்று நான்கு பேர் எங்கள் டீமுக்கு கேப்டனாக இருப்பார்கள். கேப்டன், அஸிஸ்டன்ட் கேப்டன், பவ்லிங்க் கேப்டன் அப்படி இப்படின்னு ஏதாவது ஒரு பேர்ல கேப்டன்களாகி டாஸ் ஸ்பின் பண்ணும் போது எவன் கேட்டது விழுகுதோ அவனே உண்மையான கேப்டனாகி விடுவான். அதுவும் எங்கள் டீம் ஒரு அற்புதமான டீம். அந்த கிரவுண்டுல அன்னைக்கு மொத்தமா ஒரு பத்துபேர் ஒரே டீமா இருக்கறதால எங்களை விட்டா அங்க மேச் விளையாடரதுக்கு, மத்த ஏரியா பசங்களுக்கு வேறு வழியில்லை. அதனால் நாங்கள் பண்ணும் சலம்பல்கள் எல்லாத்தையும் தாயுள்ளம் கொண்டு ஏற்றுக்கொள்வார்கள்.பூவாக இருந்தாலும் தலையாக இருந்தாலும் நாங்கள் தான் முதல் பேட்டிங். எங்கள் டீமின் கேப்டன்கள் டாஸ் ஸ்பின் பண்ண காசை மேலே எரிந்ததும் தலை பூ இரண்டையும் கேட்டுவிடுவார்கள். எதிர் அணியுன் கேப்டன் வாய் திறப்பதற்க்குள் எங்கள் டீமின் ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் களத்தில் க்ரீசை சரி செய்து கொண்டிருப்பார்கள்.

வேறு வழியில்லாமல் எதிரணியினர் பந்து வீச பந்தை எடுக்க போவர். எங்கள் டீமின் கேப்டன் ஒரு அரசியல்வாதிக்கான தகுதியுடன் அன்றே திகழ்ந்தார். அன்றைய மேட்ச்சுக்கான விதிகளை இரண்டு டீம் கேப்டன்களும் தீர்மானித்த பின் ஆட்டம் தொடங்கும். அம்பயர் ஆக நிற்க தமிழில் உள்ள அனைத்து கெட்டவார்த்தைகளும் கற்றுத் தேர்ந்த இரண்டு பேர் எங்கள் டீமில் உண்டு.ஆள் பற்றாக்குறை காரணமாக, பொதுவாக பேட்டிங் செய்யும் டீமிலிருந்து தான் அம்பயர் மற்றும் ஸ்கோரர்கள் இருப்பார்கள்.

ஸ்கோரர் அம்பயரின் பார்வையை சரியாக புரிந்து கொண்டு சச்சின் ரன்களையும் எங்களுக்காக சேர்த்துக் கொள்வான். எதிர்த்து கேள்வி கேட்கும் எதிரணியின் அறிவு ஜீவிகளுக்கு அம்பயர்தான் தனக்கு தெரிந்த மொழியில் பதில் சொல்வார். அதனால் யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள். அப்படி இப்படி என்று எங்கள் முழு திறமையையும் காட்டி எடுத்த இருபது முப்பது ரன்களுக்குள் எதிர் டீமை ஆல் அவுட் செய்ய வேண்டும் என்ற மிகப் பெரிய சவால் கடைசியாக பேட்டிங் பிடித்து முதல் ஓவர் வீச வரும் என்னைப் போன்ற பவுலர்களின் கையில் கொடுத்து விட்டு கேப்டன் அவராலான உதவிகளை செய்ய ஆரம்பிப்பார். எப்படியும் ஓவருக்கு ஐந்து பந்துகள் மட்டும் வீச ஏற்கனவே முடிவு செய்யப்பட்டிருக்கும். அதற்குள் விக்கெட் விழுந்தால் அடுத்த ஓவர் சண்டை போடமலே கேப்டன் கொடுத்து விடுவார். இல்லையென்றால் பல உத்திகளில் சண்டை போட்டு பந்தை பிடுங்கிக் கொண்டு முதல் பந்தை வீசி ஓவரை தனதாக்கி கொள்ளும் சாமர்த்தியமும் ஒரு பவுலரை பவுலர் என்று தீர்மாணிக்கும்.

எப்படியும் எதிர் அணி ஜெயித்து விடும் என்ற சூழ்நிலையில் எங்கள் கேப்டன் ஸ்கோரில் தவறு உள்ளது என்று ஐந்து ரன்கள் குறைத்து விடுவான். எதிர் அணியினர் சம்மதிக்க வில்லையென்றால் மேட்ச்சை புறக்கணித்துவிட்டு வெளியேற பவுண்டரியில் இருக்கும் எங்கள் அணியினர் தயாராக இருப்பார்கள். இதை புரிந்து கொண்டு தாங்கள் மாங்கு மாங்கு என்று வீசிய பத்து ஓவர்களுக்காகவாவது எங்களை பந்து வீச வைக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்துடன் நாங்கள் சொல்லும் ஸ்கோர் கரெக்சன் மற்றும் அவுட் களை எதிர் அணியினர் ஏற்றுக்கொள்வார்கள். இத்தனையையும் தாண்டி எதிரணியினர் வெற்றி பெற்றுவிட்டால் அவர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றம் காத்துக் கொண்டிருக்கும். தோல்வி பெற்ற கேப்டன் என கையெழுத்து போடுவது எங்கள் டீமின் 16வது பிளேயர் கேப்டனின் 2வது படிக்கும் தம்பி. இத்தனையையும் தாங்கிக் கொண்டு அடுத்த மேச் விளையாட தேதி கேட்கும் எதிர் அணியிடம், நன்றாக விளையாடியவர்கள் பெயரை குறிப்பிட்டு அவர்கள் அடுத்த மேட்சுக்கு வரக்கூடாது என்று நிபந்தனை விதித்து களைவோம். அதையும் சம்மதித்து வரும் அவர்களின் கிரிக்கெட் ஆர்வத்துக்கு நாங்கள் தலை வணங்குவோம்.

முழு ஆண்டுத் விடுமுறையை இப்படியே கழித்து ஒரு வழியாக ஆறாவதில் சேர்வதற்க்கான தேதி வந்தது.........

(தொடரும்)