கோடையின் வெப்பம் கொப்பளித்துக்கொண்டிருக்கும் நாட்களில் தண்ணீரையும் நிழலையும் தேடியலையும் மனிதனுக்குச் சட்டென மேகமூட்டத்தால் வானம் இருட்டி இடி மின்னலுடன் மழைத்துளி மண்ணில் படும்போது, அது ஏதோ ஒரு புத்துணர்வை, பேரானந்தத்தை, பெரு மகிழ்சிப்பிரவாகத்தை மனதில் ஏற்படுத்தும் தருணத்தில் மனித மனத்தில் கவலைகள் இருந்துகொள்ள இடமேது மில்லை. அங்கு வெறும் கொண்டாட்டமும் புத்தெழுச்சியுமே. மனிதனை விட மண்ணும் மரமும் கொள்ளும் உவகை உணர்வுள்ள உயிர்களுக்கே தெரியும் அற்புதமான காட்சி. மண்ணில் மரணித்துக்கொண்டிருக்கும் ஒவ்வொரு உயிருக்கும் ஆகாயத்திலிருந்து அனுப்பப்படும் உயிர்த்துளி ஒவ்வொரு மழைத்துளியும்.
பிழைக்கமுடியாமல் இலைகளை உதிர்த்துவிட்டு நீரைத்தேடி வேர்களை வெகு தூரம் பரவவிட்டு வாழ்வின் கடைசி நாளை எதிர்கொண்டிருக்கும் மரமும், செடியும் அந்த மழைத்துளி பட்டவுடன் கண் விழித்துக்கொண்டு இத்தனை நாளும் மரணம் என்ற கனவை கண்டுகொண்டிருந்தோம், அது கனவு.. அது கனவு ... என்று சொல்லிக்கொண்டே தன்மேல் விழும் ஒவ்வொரு மழைத்துளியிலும் மரணம் என்ற கனவை கழுவிக்கொண்டு ஊரே அதிரும்படி கொண்டாடும் மரங்களின் மகிழ்ச்சிக்குரல் யாருக்கும் கேட்பதில்லை. கவலை வேண்டாம், வந்து விட்டாள்.. இதோ இங்கே வந்து விட்டாள்.. இன்னும் சற்று நேரத்தில் உங்களை வந்து சேர்ந்து விடுவாள் அவள்.. என்று தம்பட்டம் அடித்துக்கொண்டே ஒரு அரசியல் தலைவரின் வருகையைத் தெரிவிக்கும் அறிவிப்பாளனை போல் இடி - மழையை அறிவித்துக்கொண்டே வருகிறது. திடீரென வரும் விருந்தாளியை கவனிக்க அங்குமிங்கும் ஓடி பலகாரமும் கலரும் வாங்கிவந்து கவனிக்கும் பாசக்கார வெள்ளந்தியாய் எறும்புகளும், பறவைகளும், தவளைகளும் மழையை வரவேற்க அங்குமிங்கும் ஓடித்திரிகின்றன. மேகமூட்டத்தால் இருட்டிவிட்டதால் வழிதெரியாமல் தவிப்பாள் என்று மழைக்கு வழிகாட்ட அவ்வப்போது மின்னல் ஒளி விளக்கேற்றுகிறது வானம்.
வாடியே கிடந்த கோவைக் கொடி சட்டென்று சிலிர்த்து சாய்ந்திருந்த வேலி மரத்தைத் தழுவித்தழுவி தன்னிருப்பை உணர்த்திக்கொண்டிருந்தது. இந்த மழையாள் வரவில்லையென்றால் வெகுகாலம் உன்னை தாங்கி நின்ற என்னை நீ அலட்சியம் செய்துகொண்டே இருந்திருப்பாயல்லவா?.. என்று ஊடல் மொழியுடன் கொடியை தடவிக்கொண்டது வேலி மரம்.
ஒன்றாய் இரண்டாய் பலவாய் இறங்கிய ஒவ்வொரு மழைத்துளியும் ஒன்றாய் இணைந்து ஒரு குட்டி ஆறாக பிரவாகமெடுத்து மரங்களின் வேர்களை நனைத்தும், சாலைகளைக் கழுவியும் பள்ளங்களை நிறவியும் கட்டிவைத்துள்ள ஆட்டின் கால்களை வருடியும் தவழ்ந்து வேலியின் ஓரம் வெட்டிவைத்திருந்த சிறு வாய்க்காலை அடைந்ததது. அதைப்போலவே அந்த இடத்தை சுற்றியுள்ள நிலத்தைக் கடந்து பல குட்டி ஆறுகள் ஒன்று சேர்ந்து அந்தக் கால்வாயை நிரப்பிவிட்டது.
இத்தனை நாளும் இருந்த இடம் தெரியாமல் இருந்த தவளைகள், வெளியூரிலிருந்து நீண்ட நாள் கழித்துத் திரும்ப வந்திருக்கும் கணவனை கொண்டாடும் பெண்டாட்டியைப்போல அக்கம் பக்கமெல்லாம் சத்தம் போட்டு தன்னைப் பார்க்கவே இந்த மழை வந்தது என்று தம்பட்டமடித்துகொண்டே இருந்தது. மேலிருந்து விழும் ஒவ்வொரு மழைத்துளியையும், கல்யாணவீட்டில் தன் மேல் தெளிக்கப்படும் பன்னீரைப்போல் குனிந்து குனிந்து வாங்கிக்கொண்டது அந்தச் சிட்டுக்குருவி. சிறகுகளெல்லாம் நனைந்திருந்த போதும் நடுங்கிக்கொண்டே வந்திருக்கும் விருந்தாளி மனங்கோணாமல் வரவேற்றுக்கொண்டே இருந்தது.
எப்போதும் மௌனமாகவே இருந்த அந்த வாகை மரமும் அரச மரமும் கொட்டும் மழையில் தங்களுக்குள்ளான உரையாடலை உரக்க நடத்துகின்றன. வாகை மரம் எதையோ சொல்ல, அரசமரம் இல்லை இல்லை என்று அவ்வப்போது தலையசைத்தும், சில சமயம் இசைந்து மேலும் கீழும் கிளைகளை அசைத்து மழைக்கு நடுவே பிரசங்கம் நடத்திக்கொண்டிருந்தன. அவ்வப்போது அந்த வழியே வந்த காற்று எல்லோரிடமும் சொல்லிவிட்டு கடந்து விட முற்படும்போது மரங்கள் கிளைகளையும் கொம்புகளையும் வைத்து காற்றை தங்கள் கொண்டாட்டத்தில் தொடர்ந்து இருக்குமாறு இழுத்துக்கொண்டே இருந்தது.
நேரம் செல்லச்செல்ல மழை வேகம் பெருகிக்கொண்டே இருந்தது. துணையுடன் புணர்ச்சியின் உச்சத்திலிருக்கும்போது விலகிட எண்ணமில்லாமல் மயங்கிவிட்ட உயிர்களைப்போல் மரங்களும், பரவைகளும், விலங்குகளும் மயங்கி மழையை அனுபவித்துக்கொண்டிருந்தன.
சிறுவர்கள் சிறிது நேரம் காகிதக்கப்பல் விட்டும், தேங்கி நின்ற தண்ணீரில் துள்ளி துள்ளிக்குதித்தும் களைத்துப்போய் தாழ்வாரத்தின் விளிம்பில் குத்தவைத்து கைகளால் கால்களை இருக்க கட்டிக்கொண்டு மழையை விழுங்கிக்கொண்டிருந்தனர்.
வந்த கொஞ்ச நேரத்திற்குள்லெல்லாம் காய்ந்து கருப்பு படிந்திருந்த அந்த நில மெங்கும் பச்சை வண்ணம் மிளிர்ந்தது. எங்கு தான் இத்தனை நாள் அந்த வண்ணம் ஒழிந்திருந்ததோ. ஒரு வேளை மரங்களும் கிளைகளும் கொடிகளும் வெம்மை தாழாமல் கருப்பு களிம்பு பூசிக்கொண்டதோ, இருக்கும்.. இருக்கும்.. அதனால்தான் மழை வந்து கழுவியதும் அந்தக் களிம்பு கரைந்து பச்சை நிறம் தெரிகிறது.
கொட்டும் மழையில் யாருமே தங்களை ஏழைகளாகவும், தங்கள் கடன்களை நினைத்தும் கவலை கொண்டிருக்கவில்லை. சாகத்துணிந்தவனின் மனதில் கூட.... இனி கவலையில்லை,, எப்படியாவது தாங்கிக்கொண்டு உழுதுவிட்டால் அடுத்த மழைவரை பிழைத்துக்கொள்ளலாம் என்று நம்பிக்கை பிறந்தது. மழையையே பார்த்துக்கொண்டிருந்த பெருசுகள் " நாலு மாசத்துக்கு தாட்டும்.." என்றவாறு நம்பிக்கை கொடுத்துக்கொண்டிருந்தனர். குட்டை நிரம்பிவிட்டதாக எங்கிருந்தோ ஓடிவந்தவன் எப்படி உழவுக்கும் விதைப்பிற்கும் ஆள் பிடிப்பது என்ற அடுத்த கவலையில் சுரத்தில்லாமல் சொல்லி நின்றான்....
பொழுது விழுந்தும் பொழிந்து கொண்டிருந்த மழை, நேரம் செல்ல செல்ல ஒவ்வொருவராய் விலகி உறைவிடத்தில் பதுங்கிக்கொள்ள கவனிக்க ஆளில்லாமல் தனிமையை உணர்ந்து கொஞ்சம் கொஞ்சமாய் குறைந்து நின்றபோது நடு இரவே இருக்கும். மாரியம்மனுக்குப் பூ சா(த்தி)ட்டியும், அக்கினிக் குண்டம் வளர்த்தும் வரவேற்ற மனிதர்கள் யாரும் இப்போது மழைக்குக் குடை பிடிக்கவில்லை....துளிர்த்த ஒவ்வொரு செடியும் கிளையும் உயிர் கொடுத்த மழையின் பெயரை முதலெழுத்தாய்க்கொண்டிருக்கும்...