Monday, December 4, 2017

பட்டான்


பள்ளிப் பாட புத்தகங்களைத் தூக்குப் பையில் போட்டுக்கொண்டு போவது அப்போதெல்லாம் அதியசமில்லை. தூக்குப்பையின் தூக்கு தோழிலிருந்து அவ்வப்போது தலைக்குச் செல்லும். தலைக்குச் செல்லும் தூக்கினால் புத்தப்பை பின்னுக்குச் சென்று புட்டத்தைத் தட்டிக் கொண்டு வரும்.

தூக்குப்பையா... அது என்ன வித்தியாசமான பை என்று கேட்கும் நவீன நாகரீக வாசகர்களுக்கு.... அது ஒன்று வித்தியாசமானதல்ல... சாதரண துணிப்பையுடன் நீண்ட துணிப்பட்டையை பையின் இரு புறமும் வைத்துத் தைத்திருப்பார்கள். இன்னும் எளிதாகச் சொல்ல வேண்டுமானால், பழைய விசு படத்தில் அவர் அணிந்து வரும் பை, பழைய பத்திரைக்கையாளர்கள் தோழில் ஒரு "ஜோல்னா" பையைத் தொங்க விட்டு வருவார்களே, அதுதான்.

அந்தத் தூக்குப்பை அதிகபட்சம் ஒரு நாளில், இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பள்ளிக்குச் சென்று வர அரை மணிநேரம் சுமக்க வேண்டியிருந்தது. அதுவே அன்றைய காலத்தில் ஆகப்பெரிய சுமையாக இருந்தது. அந்தச் சுமையின் வலியைக் கேள்வி கேட்டது, இன்னொருவரின் சுமை.

தெருக்களில் கொட்டப்பட்டிருக்கும் குப்பைகளில் உள்ள காகிதங்களைத் தேடியெடுத்து அவற்றை பத்திரப்படுத்திச் சேர்த்துச் சேர்த்து தன் தலையில் ஒரு காகிதக் குவியலைப் பையில் கட்டிச் சுமந்து கொண்டிருந்தார், பட்டான். ஆம், அவரை அப்படித்தான் அழைத்தனர். காகிதங்களை ஏன் அவர் அப்படிச் சேகரிக்கிறார் என்று அப்போது கேட்கத் தோன்றவில்லை. ஊருக்குள் சுற்றும் மனநிலை சரியில்லாதவர்களில் ஒருவர் என்று நினைத்தே ஒவ்வொருவரும் அவரைக் கடந்து சென்றிருப்பர். ஆனால் அவரின் கதை அவ்வளவு எளிதில் கடந்து விடக்கூடியதில்லை.

ஊராட்சியில் துப்புறவுப் பணியாளராகப் பணியாற்றிய அவருக்குச் சொந்தமாக ஒரு நிலம் இருந்ததாகவும், அந்த நிலத்திற்கு பட்டா அவர் பெயரில் வழங்கப் பட்டிருந்ததாகவும் அவர் கதை தொடங்கியது. அந்தப் பட்டா எப்படியோ அவரை விட்டுத் தொலைந்து போகிறது. அதைத் தொலைத்த அவர் வீட்டில் தொடங்கிய தேடல் ஊரெல்லாம் தொடர்ந்து கொண்டே இருந்திருக்கிறது. ஒரு வருடமா இரண்டு வருடமா என்ற கணக்கெல்லாம் இல்லை. நான் பார்த்த வரையில், எனது பள்ளிக்காலம் முடிந்து கல்லூரிக்காலம் வரை அவர் தனது பட்டாவைத் தேடிக்கொண்டே இருந்ததாக நினைவு.

அவர் தனக்குள்ளே ஒரு உரையாடலை நிகழ்த்திக்கொண்டே வீதிகளில் பறந்து கிடக்கும் காகிதங்களை தேடியெடுத்துச் சேர்த்து வைத்துக் கொண்டே இருந்தார். வழியில் தான் பேச நினைக்கும் மனிதர்கள் முன் நின்று மெல்லிய குரலில் தொடர்ச்சியாக எதையோ பேசுவார். அவரைப் பற்றித் தெரிந்தவர்கள், வெறும் "சரி சரி" என்று கேட்டு அவரின் சுமையைக் குறைக்க தன்னாலானதைச் செய்தார்கள்.

ஊராட்சியில் இருந்த மனிதநேயம் மிக்க அதிகாரிகள், அவரது வாரிசு ஒருவருக்கு அவரின் வேலையைக் கொடுத்து அவரது குடும்பத்திற்கான உணவை உறுதி செய்திருந்தனர்.

ஒரு சிலர்  அவரைக் கண்டால், "அதோ பட்டா அங்கே கிடக்கிறது, இங்கே கிடக்கிறது" என்று வீதியில் கிடக்கும் காகிதங்களைக் கைகாட்டி வேடிக்கை நிகழ்த்துவர். பட்டானும் அது தன் பட்டாவென நினைத்து ஓடி எடுத்துப் பார்த்து தனது பெட்டகத்தில் சேர்த்துக் கொள்வார். ஆனால் அவர் பட்டா கடைசி வரை அவருக்குக் கிடைத்ததாகத் தெரியவில்லை...

ஒரு மனிதனை பித்தனாக மாற்றும் அந்தக் காகிதம் வெறும் பட்டாவா? 

ஏன் தொலைந்து போன பட்டாவிற்கு மாற்றாக நகலோ அல்லது வேறொ ஒன்றையோ அவரால் பெற முடியவில்லை? 

அரசு வேலையை விட்டுவிட்டுத் தேடுமளவிற்கு அந்தச் சொத்தின் விலை அவ்வளவு உயர்ந்ததா?

இவை எதற்கும் யாரிடமும் பதிலில்லை.