Tuesday, February 10, 2015

தமிழகத்தின் வசந்தம்

ஆம் ஆத்மி கட்சி டெல்லியில் ஒரு மாற்று அரசியலை முன்வைக்கும் முயற்ச்சியின் முதல்படியில் வெற்றிகண்டுள்ளது. இன்றைய நடுத்தரவர்க்கமும், நல்லதொரு எதிர்காலத்தை விரும்பும் இளைஞர் படையின் நம்பிக்கையைப்பெற்று அரியனை ஏறுகிறார் அரவிந்த். படோபம் இல்லாத, சாதரண மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதை நோக்கமாக கொண்டும் அதிகாரவர்க்கத்தின் அரசியலை உடைத்து மக்களுக்கான அதிகாரத்தை உறுதிசெய்யும் அரசை நிறுவப்போவதாக கொள்கை அறிவிப்பும், ஏறக்குறைய அதில் ஓரளவு நடைமுறைப்படுத்தியும் காட்டிவிட்டார் கடந்த முறை நடத்திய 49 நாள் ஆட்சியில். அரசியலும் பொருளாதாரம் ஒரு குறிப்பிட்ட குழுவிடம் சிக்குவதை மக்கள் இன்றைய நிலையில் விரும்புவதில்லை.

ஒரு கட்சியின் தலைவர் தன்னை அரசனாக நினைத்துக்கொண்டு போனால் போகட்டும் என்று சில சலுகைகளை மக்களுக்கு கொடுத்துவிட்டு பெரும் பங்கை தானும் தனது கூட்டாளிகளும் அள்ளுத்தின்னும் அரசியலிலிருந்து, வெகு மக்கள் கூட்டம் தனக்கும் தனது நாட்டுக்கும் வேண்டியதை நெடுநோக்குடன் ஒரு மனிதரை தெரிவு செய்து அரியனையில் தனது சேவகனாக நியமித்துக்கொண்டு ஆட்சிசெய்யும் அரசியல் பரவவேண்டும், வளர வேண்டும். அதன் முன்முயற்ச்சி டில்லி செய்து விட்டது. சரி.. எல்லா கருத்தியலிலும் முற்ப்போக்குகொண்ட தமிழகத்தில் இந்த மாதிரியான வசந்தம் எப்போது வரும் என்றால்... இப்போதைக்கு வரப்போவதில்லை என்றே சொல்ல வேண்டும்.

தமிழகம் போன்ற சுயாட்சி விருப்புகொண்ட மக்களுக்கு அரசியல் பார்வையில் நேடு நோக்கு இருந்ததில்லை. தமிழகத்தை பொருத்த அளவில் தேர்தல் கால பிரச்சினைகளின் முக்கியத்துவமும் மற்ற காலங்களில் உள்ள பிரச்சினைகளின் முக்கியத்துவமும் வேறானவை.

தமிழக மக்கள் எப்பொழுதுமே முன்னைய அரசின் ஆளுமையை பொருத்தே ஒவ்வொரு தேர்தலிலும் வாக்களிக்கிறார்கள். அதாவது அவர்களுக்கு எது முதல் பிரச்சினை எது இரண்டாம் பிரச்சினை என்று தீர்மானிப்பது கூட கட்சித்தலைவர்கள்தான்.

எப்போதுமே பிரச்சினையாயுள்ள மது மயமாக்கம், சாதி பேதம், பொருளாதார ஏற்றத்தாழ்வு, நாட்டின் வளங்களை தனி மனிதர்கள் கொள்ளையடிப்பது, கல்விக்கொள்ளை, கிராமப்புற தன்னிறைவு, விவசாய நிலங்கள் குறைந்துகொண்டே போவது, நிலத்தடி நீர் குறைந்துவருவது, மின் பற்றாக்குறை, அரசு துறையில் நிலவும் ஊழல் மற்றும் தொழில் வளர்ச்சி இவை எதுவுமே தெர்தல் வெற்றியை தமிழகத்தைபொருத்த அளவில் தீர்மானிப்பதில்லை.

தேர்தல் காலங்களில் கொடுக்கப்படும் இலவசங்கள் குறித்த வாக்குறுதிகள், ஒருதலைவர் இன்னொருவர் மேல் சுமத்தும் பழி, சாதி சார்பு, ஓட்டுக்கு கொடுக்கப்படும் காசு இவையே தேர்தலில் வெற்றியை தீர்மானிக்கின்றன. ஒருவர்மீது ஒருவர் கூறும் குற்றச்சாட்டே தெர்தல் அறிக்கை.

மின் பற்றாக்குறை, மதுமயமாக்கம் குறித்து ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்திக்கொள்வதுதான் தேர்தல் பிரச்சாரம். யாரும் மின் பற்றாக்குறையை போக்க என்ன திட்டம் வைத்திருக்கிறார்கள், எப்படி செயல் படுத்தப்போகிறார்கள் என்பதுபற்றி எதுவும் பேசுவதில்லை. காரணம் மக்கள் அதைப்பற்றி கவலைப்படுபவர்கள் அல்ல என்பதை தெரிந்து வைத்திருக்கிறார்கள் தலைவர்கள்.

இன்று சகாயம் தோண்டும் நாட்டின் வளங்களை கொள்ளையின் அளவு தமிழகத்தின் இரண்டு ஐந்தாண்டுத்திட்டங்கள் செயல்படுத்த தேவையான நிதியின் அளவு கொண்டது - மது வருவாய் முற்றிலும் இல்லாமல். அரசு அலுவலகங்களில் சுருட்டப்படும் லஞ்சம் மற்றும் கமிசன் தொகை ஒவ்வொரு மாணவனுக்கும் இலவசமாக பொறியியல் கல்வியை கொடுக்க தேவையான அளவு உள்ளது. அரசின் திட்டங்களில் நடக்கும் முறைகேடுகளில் கொள்ளையடிக்கப்படும் தொகை ஆண்டுக்கொரு மின்னுற்ப்பத்தி நிலையமும், ஆண்டுதோரும் ஆறு குளங்களை தூர்வாரி பராமரிக்கும் செலவுக்கு தேவையான நிதியின் அளவைக்கொண்டது.

ஆயிரம் ஆண்டு வரலாறுகொண்ட சமுதாயம் தன்னை வளப்படுத்திக்கொள்ள சரியான தலைமையையும் அரசியலையும் தெரிந்தெடுக்கும் காலத்தில் இந்தியாவின் இன்றைய பின்தங்கிய மாநிலங்கள் வளர்ச்சிப்பாதையில் பல மைல் தூரம் சென்றிருக்கும். நமது சிறப்பெல்லாம் வரலாறில் கல்வெட்டாகவும், பேஸ்புக் போஸ்டாகவுமே இருக்கும்.