Friday, October 26, 2018

திராவிட தோசை


ஒரு காலத்தில் அரிசி சோறு, இட்டிலியெல்லாம் பண்டிகைக்காலங்களில் மட்டுமே உண்டவர்கள் நமக்கு முன் உள்ள தலை முறையினர். எல்லோராலும் அரிசி வாங்கிப் பொங்க முடியாத வறுமை இருந்த காலமது.

ராகி, கம்பு, சோளம்தான் மூன்று வேளை உணவு. கேஸ் அடுப்பு, பிரிட்ஜ் இல்லாத அந்தக் காலத்தில் விறகடுப்பும், உணவைப் பதப்படுத்த தண்ணீர் மட்டும் கிடைத்த காலம் அது. விறகிற்கு அருகிலுள்ள காட்டில் கிடைக்கும் மரக்குச்சிகளைச் சேகரித்து அடுப்பெரித்த காலமும் உண்டு. ஏன் அடுப்பில் கூட பல வகையுண்டு. கல் அடுப்பு, மண் அடுப்பு, மண்ணெண்னை அடுப்பு, இரும்பு அடுப்பு என்று. மரமறுக்கும் கடையில் மரத்தூள் வாங்கி வந்து அதை நிறப்பி எரிக்கும் அடுப்பும் உண்டு. மண்ணெண்ணை அடுப்பு அப்போதைய காலத்தில் பொருளாதார வலிமை மிகுந்தவர்களுக்குக் கிடைத்த வரம். பிறகு ரேசன் கடைகளில் மண்ணெண்ணை மலிவு விலைக்குக் வழங்கப்பட்டபின் பரவலாக மண்ணெண்ணை அடுப்பு புழங்கப்பட்டது. அந்த கால கட்டத்திலும் மண்ணெண்ணை அடுப்பில் தீப்பற்றி எரிந்த மருமகள்கள் செய்திகளும் உண்டு.

மூன்று வேளையும் அடுப்பெரித்து உணவைச் சூடாக உண்பது மேல்தட்டு மக்களின் பொருளாதார பலத்தைக் காட்டும். பெரும்பாலன வீடுகளில் ஒரு வேளை பொங்கி இரண்டு நாட்கள் வைத்து உண்ணும் வழக்கம் அதிகம். முதல் நாள் எஞ்சியது இரண்டாம் நாள் தண்ணீரில் ஊறவைத்து பழைய சோறாகக் கிடைக்கும். 

இட்டிலி மாவைச் செய்ய அதற்கான தனியான அரிசி உண்டு. ரேசனில் வழங்கப்படும் அரிசி இட்டிலி மாவிற்கு மிக உகந்ததாக இருக்கும். அதனாலேயே அது ஓட்டல் கடைகளுக்கு கள்ளத்தனமாக விற்கபடுவதுண்டு. இட்டிலி உண்பதற்கு ஒரு வகையான சுவையான உணவென்றாலும் அதைத் தயாரிக்கச் செய்யும் வேலைகள் இல்லத்தரசிகளை உற்சாகமிழக்கச் செய்யும். இன்று போல் அந்தக் காலத்தில் மின்னாட்டுக்கல் இல்லை. கையில் ஆட்டுக்கல்லைச் சுற்றித் தான் மாவாட்ட வேண்டும். அரிசி, உளுந்து, வெந்தையம் என்று தனித்தனியாக ஆட்டுக்கல்லில் ஆட்டி எடுத்து பாத்திரத்தில் எடுத்து வைக்க மூன்று மணி நேரத்திற்கு மேலாகிவிடும். ஞாயிறு தூர்தர்சனில் தமிழ்ப்படம் போடுவதற்கு முன் மாவாட்டிவிட வேண்டுமென்பது அம்மக்களின், அக்காள் தங்கைகளின் நோக்கமாக இருக்கும்.

அப்படி ஆட்டியெடுத்த மாவை உடனே இட்டிலி ஊற்ற பயன்படுத்த முடியாது. அது புளித்துப் பொங்கிய பின்பே இட்டிலி ஊற்றத்தகுதியானதாகிறது. அதே மாவைக்கொண்டு தோசை ஊற்றலாம். ஆனால் தோசை ஊற்ற அனைவரும் உண்டு முடிக்கும் வரை அடுப்பின் அருகில் இருந்து தோசை சூடாக எடுத்துக் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். இட்டிலை அப்படியில்லை.. இட்டிலி பாத்திரத்தில் பத்து பதினைந்து இட்டிலிகளை ஊற்றி வைத்து விட்டு வேறு வேலைகளைச் செய்யலாம். பிறகு இட்டிலிகள் வெந்தபின் இட்டிலியை அடுப்பில் இருந்து எடுத்தால் போதும்.

அதுவும் தோசையை மெலிதாக ஊற்றுவது என்பது அதிக தோசைகளைச் சுடவேண்டிய தேவையை ஏற்படுத்துகிறது. இது இல்லத்தரசிகளுக்கு அதிக வேலைப் பலுவைத் தரும். அதனால் இரண்டு மெலிதான தோசைகளைச் சமைக்கு ஒரு பருமணான தோசையைச் சுட்டு வேலையை முடிக்கப் பார்ப்பார்கள். பெரும்பாலான நடுத்தர வர்க குடும்பங்களில் சமையலைத் தீர்மானிப்பது பெண்கள்தான். என்னதான் ஆண்கள் சாதித் திமிரை வெளியில் காட்டிக் கொண்டிருந்தாலும் வீட்டில் பெண்ணே சமையலை கையாள்வது. அவர்களை தினமும் தோசை வேண்டும் அதுவும் மெலிதான தோசை வேண்டும் என்றெல்லாம் எந்த ஆணும் கட்டாயப்படுத்த முடியாது. அப்படிக் கட்டாயப்படுத்தினால் பிறகு உண்ண உணவே கிடைக்காமல் போக வாய்ப்புள்ளது. அதனால்தான் உப்புமாவை விமர்சித்து நகைச்சுவை வளர்ந்து வந்தது. அது ஆண்களின் ஆற்றமையின் வெளிப்பாடு.

ஆனால் உயர்தட்டு மக்களிடையே இதே நிலைதானா என்றால்..இல்லை. ஒன்று சமையல் காரர் மூலம் சமையல் நடக்கும். அப்படியில்லாமல் தினமும் மெலிதான தோசை சுடப்படுகிறதென்றால் அங்கொரு பெண் அடிமையாக இருக்கிறாள் என்று பொருள்.

மற்றபடி சாதிக்குத் தகுந்தாற்போல் தோசை பருமன் மாறும் என்பது பகுத்தறிவில்லாத கூற்று. வர்க பேதத்தை சாதி பேதமாக மாற்றியது திராவிட அரசியலின் தந்திரோபாயம். ஆனால் அதை அவர்கள் தோசைக்கூற்றில் நிறுவ முயன்று கருகிய தோசையாக நிற்கிறார்கள்.

Saturday, October 20, 2018

சைக்கிள்

பிறந்த நாள் முதல் நமக்குள் நடக்கும் ஒவ்வொரு படி நிலை வளர்ச்சியும் மனிதனின் பண்நெடுங்கால பரிணாம வளர்ச்சியின் ஒரு பாஸ்ட் பார்வாட் அல்லவா. பிறழ்தல், தவழ்தல், நடத்தல் என்று எதுவுமே ஒன்றரையாண்டுகளுல் நடந்து முடிந்துவிடவில்லை. ஒவ்வொரு படி நிலையையும் பல நுறு ஆண்டுகள் கடந்த மனித இனம் எட்டியிருக்கிறது. மனித இனத்தின் வாழ்வியல் சூழலுக்கு ஏற்ப அதன் உடலமைப்பு தகவமைத்துக்கொள்கிறது. பறக்கும் தேவையிருப்பின் இறகுகள் முளைத்திருக்கும்.

எனக்கு நினைவு தெரிந்த நாட்களில் முக்கியமான பருவம், சுயமாக சைக்கிள் ஓட்டுவது. இரண்டாவது படிக்கும்போது என்று நினைக்கிறேன், சைக்கிள் ஓட்ட வேண்டும் என்ற ஆவல் எங்கிருந்தோ தொத்திக் கொண்டது. அந்த வயதிற்கான உயரத்திற்கு அப்பாவின் சைக்கிளை ஸ்டாண்டு போட்டு நிறுத்தியபின் முக்கோனச் சட்டத்திற்குள் காலை விட்டு பெடலைச் சுற்றிப்பழகிக் கொள்வதுதான் ஆகச்சிறந்த சைக்கிள் அனுபவம். அதிலும் இரவில் பின் சக்கரத்துடன் இணைந்து சுற்றும் டைனமோவின் உதவியுடன் ஒளிவிளக்கை இயக்கி வண்டியை ஓட்டுவது அவ்வளவு அலாதியானது. டைனமோவை இயக்க ஏதுவாக பின் சக்கர டயரின் வரி வரியான அமைப்பு எதற்கு என்ற கேள்விகள் எதுவும் அப்போது எழவில்லை.

Image result for india old cycles with dynamo

பிறகு முருகன் சைக்கிள் கடையில் சிறுவர்களின் உயரத்திற்கு ஏற்ப வகை வகையான சைக்கிள்களை வரிசையாக நிறுத்தி வைத்திருப்பார்கள். பள்ளிக்கூடம் செல்லும் ஒவ்வொரு நாளும் அந்த சைக்கிள்களைப் ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டே செல்வதுண்டு. அதை வாடகைக்கு எடுத்து ஓட்ட தெரிந்த ஒரு நபருடன் செல்ல வேண்டும். சைக்கிளே ஓட்டத் தெரியாதவனுக்கு சைக்கிளை எப்படி வீட்டுவரை கொண்டு வந்து பின்பு ஓட்டுவது என்ற பல கேள்கவிகளுக்குப் பின் அந்த முயற்சி தள்ளிப் போடப்பட்டு வந்தது.

ஒரு மணி நேரத்திற்கு ஒரு ரூபாய் வாடகைக்கு அந்த சைக்கிள்களை எடுத்து ஓட்டலாம். சனி மற்றும் ஞாயிறுகளில் நமக்குப் பிடித்த நல்ல சைக்கிள்கள் மற்றவர்களுக்கும் பிடிக்குமென்பதால் அவை நமக்குக் கிடைக்காது. பழைய கவர்ச்சியில்லாத சைக்கிள்களே கிடைக்கும். பல நாள் தயக்கித்திற்குப் பிறகு ஒரு சைக்கிளை ஒரு ரூபாய் கொடுத்து பெயர், முகவரி கொடுத்து எடுத்தாகிவிட்டது. கடை முன்னாலேயே சைக்கிளை ஓட்ட முயற்சி செய்து கீழே போட்டு ஓட்டத் தெரியாது என்று கடைக்காரர் தெரிந்து கொண்டால் சைக்கிளைத் தரமாட்டார். ஆகவே சைக்கிளை எதிரே உள்ள காய்கறி மார்க்கெட் வழியே தள்ளிக் கொண்டு வந்து சைக்கிள் கடை கண்ணில் மறைந்த பின் நண்பனின் உதவியுடன் சைக்கிளில் ஏறி அமர்ந்தாகிவிட்டது. ஹேண்டில் பாரைப் பிடித்துப் பழகுவதே ஒரு கலை. அதற்குப்பின் பெடலை மிதித்து வண்டியை இயக்குவது இன்னொரு நுட்பம். இரண்டையும் இணக்கமாகச் செய்தபின் எதிரே ஆள் வந்தாலோ, குறுக்கு வண்டியேதும் வந்தாலோ பிரேக்கைப் பிடித்து வண்டியை விழாமல் நிறுத்துவது மிகவும் சிக்கலான நுட்பம். இந்தப் படிநிலைகளைக் கடந்து சைக்கிளை யாருடைய துணையுமில்லாமல் தனியாக இயக்குவதற்குள் பல முறை கீழே விழுந்து கை, கால், பல் என பல இடங்களில் நினைவுச் சின்னங்களைப் பெற்றிருப்போம்.


ஒரு வழியாக சின்ன சைக்கிளை தனியாக இயக்குமளவிற்கு பயிற்சி பெற்றாகிவிட்டது. அடுத்தது? பெரிய சைக்கிளில் தனியாக குடங்கு பெடல் அடிப்பது. அதற்கு அப்பாவிற்கு தெரியாமல் சைக்கிளை எடுத்து இயக்கும் துணிவும், கீழே விழுந்தால் உடலுக்குக் காயங்கள்  ஏற்பட்டாலும் சைக்கிளுக்கு எந்த பாதிப்பு மில்லாமல் வீடு கொண்டு வந்து சேர்க்கும் சாமர்த்தியமும் வேண்டும். ஸ்டாண்டு போட்டு நின்று கொண்டிருக்கும் சைக்கிளை ஓட்டுவதற்கும் சக்கரம் தரையில் பட்டு ஓடும்படி ஓட்டுவதற்கும் பெரும் வித்தியாசம் உண்டு. முன்னதில் மனம் மட்டுமே நகரும், தரையும் சைக்கிளும் அங்கேயே நின்றிருக்கும். பின்னதில் தரையும் சைக்கிளும் இணைந்து நகரும். அதை நமது மூளை உள்வாங்கிக் கொண்டு எந்தப் பக்கமும் சாய்ந்து விழாமல் ஒரு காலை முக்கோணச் சட்டத்திற்குள் விட்டு பெடலை மிதித்து ஓட்ட வேண்டும். நிறுத்தும் போது முக்கோணச் சட்டத்திற்குள் இருந்தவாரு இரண்டு கால்களையும் தரையில் வைத்து ஓடி பிரேக்கைப் பிடித்து நிறுத்த வேண்டும். மீண்டும் வண்டியை ஓட்ட சற்று உயரமான கற்களோ, படிக்கட்டுகளோ உள்ள வீட்டைத் தேர்ந்தெடுத்து அதில் நின்று கொண்டு வண்டியை உந்தி பெடலை மிதிக்க வேண்டும். சில நேரங்களில் பின்னிருந்து தள்ள நண்பன் இருந்தால் சைக்கிளைக் கிளப்புவது எளிதாக இருக்கும்.

அக்காவிற்கு அவள் பள்ளி ஊருக்கு வெளியே இருந்ததால் அவள் உயர் நிலைப் பள்ளி சென்றவுடனே சைக்கிள் கிடைத்து விட்டது. அது பெண்களுக்கான சைக்கிள். அப்பாவும் அவ்வப்போது அதை ஓட்டுவார். பிறகு கூச்சமெல்லாம் விட்டுவிட்டு நானும் சில நாட்கள் ஓட்டினேன். அவ்வப்போது அதில் சண்டையும் வரும். நான் உள்ளூரில் நடந்து செல்லும் தொலைவில் பள்ளிக்குச் சென்றதால் சைக்கிள் கிடைக்கவில்லை. நடந்துதான் பள்ளிக்குச் செல்ல வேண்டும்.

Related image

வெகு காலத்திற்குப் பின் அப்பா ஒரு சைக்கிள் வாங்கித் தந்தார். அது ஒரு நெருங்கிய உறவினர் பயன்படுத்திய சைக்கிள். பஜாஜ் கம்பெனி சைக்கிள். நான் பஜாஜ் கம்பெனி சைக்கிள் தயாரிக்கிறது என்று அப்போதுதான் தெரிந்து கொண்டேன். பரவலா ஹீரோ, ஹெர்குலிஸ் சைக்கிள்களே புழக்கத்தில் இருந்தது. நண்பர்கள் புதிய பையன்களுக்கே உருவான சைக்கிள்களை ஓட்டிக் கொண்டிருந்த போது எனக்கு பழைய பஜாஜ் சைக்கிள் கிடைத்தது மகிழ்சியாகத்தான் இருந்தது. நானாவது பழைய சைக்கிளில் வருகிறேன் பின்னால் ஒருவர் சைக்கிளில்லாமல் நடந்து வருகிறார் என்ற கவுண்டமணியன்னனின் நகைச்சுவை போல மகிழ்ச்சியாக ஏற்றுக்கொண்டேன்.

பிறகு தூக்கநாயக்கன் பாளையத்தில் பாலிடெக்னிக் சேர்ந்த பின் கொஞ்ச காலம் தினமும் பேருந்தில் சென்று வந்து கொண்டிருந்ததேன். பேருந்துப் பயணம் ஒரு நாளின் அதிக நேரத்தை எடுத்துக் கொண்டதால், ஊருக்குள் ஒரு தனியறை எடுத்து நானும் நண்பனும் தங்கி கல்லூரிக்குச் சென்று வந்தோம். கல்லூரி ஊரிலிருந்து காட்டிற்குள் இரண்டு மைல் தொலைவில் இருந்தது. சத்தி - அத்தாணி ரோட்டில் தூக்க நாயக்கன் பாளையத்தில் இரு தார் சாலை பிரிந்து கல்லூரி வழியாக மீண்டும் பங்களாப்புதூர் அருகே அதே ரோட்டில் வந்து சேரும். நேரத்திற்குச் சென்றால் வழக்கமாகச் செல்லும் 3பி, 3சி பேருந்தில் கல்லூரிக்குச் சென்று விடலாம். ஆனால் தனிவீட்டில் தங்கியிருந்த காலத்தில் வசந்தி மெஸ்ஸில் காலை உணவு முடித்துவிட்டு செல்கையில் பேருந்தை கோட்டைவிட்டிருப்போம். அதுவும் போக பேருந்து நிறுத்தம் சற்று தொலைவில் இருந்தது. சைக்கிள் கொண்டுவருவதற்கு முன் குறுக்கு வழியொன்று இருந்தது. அது ஒரு சுடுகாட்டின் வழியாக கல்லூரியை அடையும் வழி. தனியாகச் செல்வது சற்று அச்சமூட்டுவதாகத்தானிருக்கும். ஏனென்றால் யாருமில்லாத கருவேலங்காட்டில் ஒத்தையடிப் பாதையில் கொஞ்ச தூரம் நடந்த பின் சுடுகாட்டைக் கடந்த பின்னரே தார்ச் சாலை வரும். தார்ச்சாலையை அடையுமிடத்தில் சில குடிசைகள் இருக்கும். அந்தப் பகுதியில் கள்ளச்சாராயம் காச்சப்படுவதாக சில நாட்களுப்பின் நண்பர்கள் சொல்லித் தெரிந்தது. கல்லூரியை அடைவதைவிட சற்று பயத்தைத் தந்தது. 

ஆழ்ந்த சிந்தனைக்குப் பின் ஊரிலிருந்து சைக்கிளைக் கொண்டுவந்து அதை தினமும் கல்லூரிக்குச் செல்ல பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்யப்பட்டது. புளியம்பட்டியிலிருந்து சத்தி வழியாக தூக்க நாயக்கன் பாளையத்திற்கு 38 கிலோ மீட்டர் தூரத்தைக் கடந்து தனியாக சைக்கிளை ஓட்டி வந்து சேர்ந்தேன். பிறகு நண்பனும் கூடவே அறையில் தங்கியிருந்ததால் இருவரும் சைக்கிளில் கல்லூரி பயணம் செய்து வந்தோம். கல்லூரிக்காலம் முடிந்த பின் அந்த சைக்கிளை முருகன் சைக்கிள் ஸ்டோரிலேயே அப்பா விற்று விட்டார்.

சைக்கிளில் பயணித்த காலங்கள் பல நினைவுகளை வடித்துச் சென்றிருக்கிறது. வெவ்வேறு காலங்களில் சைக்கிள் ஒரு உற்ற நண்பனைப் போலவே உடன் வந்திருக்கிறது. அதை வெறும் இன்னொரு இயந்திரமாக கருதிவிட்டுச் சென்று விட முடியவில்லை. நண்பரில்லாதவனுக்கும் சைக்கிள் ஒரு பெரும் துணையாக நிச்சயம் இருந்திருக்கும்.. அது காலத்தால் அழிக்க முடியாத நினைவுகளை சேமித்து வைத்திருக்கும். வழியில் பார்க்கும் ஏதாவது ஒரு சைக்கிள் நம் பழைய நினைவுகளைக் கிளறிக்கொண்டு வந்து விடும். அவை ஆட்களை மட்டும் கடத்துவதில்லை. ஆட்களோடு சேர்ந்து அவர்கள் வாழ்கையையும் காலத்தோடு கடத்துகிறது. சைக்கிள் இல்லாதவன் வாழ்கையின் மிக முக்கியமான அனுவபவத்தை இழந்திருப்பான் என்று நிச்சயமாகச் சொல்லலாம். 

Saturday, October 6, 2018

96

கருப்பு வெள்ளை டிவிதான் வீட்டில். யாகி யுடா ஆண்டனா மூலம் கொடைக்கானலுக்கும் சென்னைக்கும் குறிவைத்து தூர்தர்சனை உறிஞ்சிக்கொண்ட காலம்.
திரையரங்குக்குச் சென்று படம் பார்ப்பது குற்றமாக இருந்தது. சினிப்படப்பாடல் புத்தகங்கள் வைத்திருப்பது கடுங்குற்றம். ராஜா சவுண்டு சர்வீசில் TDK 60, 90 கேசட்டுகள் வாங்கிக் கொடுத்து பாடல்களைத் தேர்வு செய்து கொடுத்தால் பதிவு செய்து கொடுப்பார்கள், ரூ 20க்கு. ஏ ஆர் ரகுமான் பாடல்களை Sony Walkmanல் கேட்கும் போது மட்டுமே இசை நுணுக்கங்களை உணர முடியும் என்று அறிந்து கொண்ட காலம்.
பஜாஜ் சைக்கிள் அண்ணன் Kannan Ganesan இடமிருந்து தம்பிக்கு வந்து சேர்ந்தது. KMK அது பேருந்து இல்லை, பெருந்தேர். அந்த நடத்துனர் படிப்பு முடிந்தும் ஓரிரு வருடங்கள் கழித்து அதே பேருந்தில் காலை நேரத்தில் பயணத்த போது வழக்கமாக ரெகுலர் பயணிகளுக்குக் கொடுக்கும் கன்செசன் டிக்கட் கொடுத்துச் சென்றார். அப்படியொரு உறவு.
செண்பகப்புதூர் சாலையின் இருபுறமும் பசுமை நிறைந்த சோலை. அது பேருந்துக்குள்ளும் பசுமையைக் கொண்டு சேர்த்து பயணத்தை இனிமையாக்கிய ஊர்.
அப்போதுதான் புதிதாக பண்ணாரியம்மன் பொறியியல் கல்லூரி உருவாகிக் கொண்டிருந்தது.
போஸ்டு கார்டுகள் மூலம் கடிதப் பரிமாற்றம் இருந்தது. பேணா நண்பர்கள் இருந்தார்கள். நூலகம் ஈர்த்தாலும் நூலகர் தெரிக்க விட்டார். அடுக்கிலுள்ள புத்தகங்களை எடுக்க அனுமதிக்க மாட்டார்.
எல்லோருக்குள்ளும் ஒரு விஜை சேதுபதி இருந்திருப்பான். என்ன.. திரிசா இல்லையென்றால் திவ்யா என்று கால ஓட்டத்தில் கரைந்திருப்பார்கள். அதனால்தான் 96 இனிமையானது.