Thursday, August 9, 2018

ஏற்றமும் இறக்கமும்..

இப்போது நாம் வாழும் காலம்தான் எத்தனை இன்பமயமானது. பசியினால் இறப்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் என்றாலும் அவர்கள் நாம் பார்க்கும் தொலைவில் இல்லையே என்பது எவ்வளவு நிம்மதியான காலகட்டம். அன்றாடத்தேவைகளுக்கு நாம் எப்போது கவலையடைந்தோம்? நம்மைச் சுற்றி 90 களில் பிறந்தவர்களுக்குப் பசி என்றால் என்னவென்று தெரியுமா? தொழிற் புரட்சி, உலகமயமாக்களுக்கு முன் எவ்வளவு வேலையில்லா திண்டாட்டம்? வேலை தேடும் ஒரு வழி வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்வது. ஒவ்வொரு படிப்பிற்குப் பின்னும் அங்கு சென்று பதிவைப் புதுப்பிக்க வேண்டும். அதில் கூட பதிவு வரிசையின் படி தான் வேலை கிடைக்கும். காலை 7 மணிக்கு மாவட்டத் தலை நகரில் உள்ள வேலை வாய்ப்பு அலுவலகத்தின் கதவுகள் முன் கூட்டம் வரிசையில் நிற்கும். 10 மணிக்கு வரும் அலுவலர் கதவைத் திறந்து காத்திருப்போரை மைதானத்தில் வரிசையில் அமரச்செய்வார். பிறகு அனைவரிடமும் வேலைவாய்ப்புக் கோரி படிவமொன்ற பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். அப்போது ஐயம் கேட்போருக்கு விழும் வசை கேட்க முடியாது.. முதல் கேள்வி என்ன படித்திருக்கிறாய்? என்று... பிறகு அவர் படித்த படிப்பை வைத்தே திட்டுவார் அலுலக உதவியாளர் முதல் அலுவலர் வரை. 4 மணி வரைதான் விண்ணப்பங்கள் வாங்குவார்கள் அதனால் உணவு எதுவும் இல்லாமல் வரிசையில் நின்று காத்திருந்து பசியுடன் பதிவு செய்து வீடு வந்தால்.. வேலை எப்ப கிடைக்கும் என்ற கேள்வி? பத்து வருடத்திற்கு முன் பதிந்தவர்களுக்குத்தான் இப்போது வேலை என்று சொன்னால் அவர்கள் கவலை இன்னும் அதிகமாகிவிடும் என்பதால், இன்னும் ஒன்று அல்லது இரண்டு ஆண்டில் கிடைத்துவிடும் என்றார்கள் என்று சமாதனப் படுத்திக் கொண்டு உள்ளூர் மில்களிலும், பனியன் கம்பெனிகளிலும் படித்த படிப்பிற்கு வேலை தேடவேண்டியது. இது 80 களில் பிறந்தவர்கள் வாழ்கை.. 

அதற்கு முன் கல்வி அனைவரையும் அந்த அளவு எட்டாததனால் கூலி வேலை, விவசாயம், நெசவு, வியாபாரம் என்று எதாவது ஒன்றைத் தொழிலாகக் கொண்டு வாழ்க்கையை ஓட்டியிருப்பார்கள்... இந்தத் தொழில்கள் மூன்று வேலை உணவிற்கெல்லாம் எந்த உத்தரவாதவும் கிடையாது.. அதனால் பசி அவர்களுக்குப் பழகியிருக்கும்.. இப்பொது நாம் எடைகுறைக்க 24 மணி நேரப் பட்டிணி கிடக்கிறதைப் போல அல்ல அந்தப் பசி..

உலகத்தில் பொருளாதாரமும் வேலைவாய்ப்பும் எப்போதும் ஒரே போலவா இருந்திருக்கிறது? இல்லை... அதற்கு சாட்சியங்களே உலகப் போர்கள்... பொருளாதாரம் எப்போதும் ஒரே போல் இருந்ததில்லை. அது ஏற்ற இறக்கங்களை குறிப்பிட்ட கால இடை வெளியில் சந்தித்துக் கொண்டுதான் வந்திருக்கிறது. ஏனென்றால் இந்தப் பொருளாதாரம் வளங்களை அடிப்படையாகக் கொண்டது. ஒரு புறம் இயற்கை வளங்களை மனிதனின் தேவைகளுக்கான வடிவங்களில் உருவாக்குது, இன்னொரு புறம் இந்த வளங்களை மனிதனின் தேவைக்கு உருவாக்கும் மனித, இயந்திர, தொழில் நுட்ப வளங்களை உருவாக்குவது என்பதான வகையிலேயே பொருளாதாரம் கட்டியமைக்கப்படுகிறது. உணவுத்தேவையை நிறைவு செய்யக் கிடைக்கப்பெற்ற வாய்ப்பே விவசாயத் தொழில். இதில் நிலத்தையும் நீரையும் உணவுப் பயிர்கள் விளைவிக்கத் தெரிந்த தொழிலே விவசாயம். அதில் மனித உழைப்பின் வரம்புகளைத் தாண்ட எந்திரங்களின் தேவை இயந்திர உற்பத்தித் தொழில் வாய்ப்பை உருவாக்கியது. உணவுப் பொருட்களை ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்ல, உணவைப் பதப்படுத்த, உணவை எளிதில் உண்ண முன்சமைத்த உணவுகளை உருவாக்க, இப்படித் தொழில்களில் உருவாக்கியவர்களின் செல்வங்களைச் சேமிக்க வங்கிகள், இந்த வங்கிகளின் செயல்பாடுகளை இயந்திரமயமாக்க என்று எல்லாத் தொழில்களுமே மனிதர்களின் தேவைகளை ஆதாரமாகக் கொண்டுள்ளது. நாம் ஒவ்வொருவர் செய்யும் வேலையும் இன்னொரு மனிதனின் தேவையை ஏதாவது ஒருவகையில் பூர்த்தி செய்வதாக இருக்கிறது. இது ஒரு சுழற்சியில் இயங்குகிறது. வாங்கும் திறன் உள்ளவனின் காசு இன்னொருவனுக்கு வாங்கும் திறனைக் கொடுக்கிறது.

இந்தப் பொருளாதாரச் சுழற்சி எங்காவது தேக்கம் அடைந்து அறுபட்டுப் போனால், அங்கே அப்போது பொருளாதார வீழ்ச்சி நிகழ்கிறது. அப்போது மீண்டும் பசி, பஞ்சம், பட்டினி மீண்டும் தலை விரித்தாடுகிறது. அதனைத் தொடர்ந்து போர்கள் நிகழ்கிறது. ஆக நூறு ஆண்டுகளுக்குள் ஒன்று அல்லது இரண்டு பொருளாதாரத் தேக்க நிலையை உலகம் சந்தித்து வந்திருக்கிறது. ஆனால் அதை உணர்ந்து நாம் நம் வாழ்கையை அமைத்துக் கொள்கிறோமா என்றால்.. இல்லை என்றே பதில் கிடைக்கும்.. ஆம்.. இதுதான் மனித மனம்...

அப்படி ஒரு பொருளாதாரத் தேக்க நிலையின் போது அமெரிக்காவில் நிலவிய சூழலைப் படம் பிடித்துக் காட்டியிருக்கிறார் ஜான் ஸ்டீன்பெக் தனது "Grapes of Wrath" என்னும் புதினத்தில். 1939ல் வெளியான இந்தப் புதினம் அவருக்குப் புலிட்சர் விருதையும், பின்னாளில் நொபெல் விருதையும் வாங்கித் தந்தது. இந்தப் புதினத் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் அமெரிக்க அரசின் அரிய படைப்புகளைப் பாதுகாக்கும் பெட்டகத்தில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.

ஒக்லகோமா மாகாணத்தில் கதை தொடங்குகிறது. சிறையிலிருந்து வரும் நாயகன் தந்து கிராமம் காலியாக இருப்பதை காண்கிறான். வரும் வழியில் ஒருவனைச் சந்திக்கிறான். அவன் ஒரு மதபோதகனாக இருந்தபோது கதாநாயகனுக்கு மதச்சடங்கு செய்தவன் என்பதை உணர்கிறான். அவன் தற்போது மதநம்பிக்கையை விட்டுவிட்டதால் தாம் மதபோதகனில்லை என்கிறான். பின் இருவரும் கதாநாயகனான ஜானின் வீட்டை நோக்கிச் செல்கிகறார்கள். செல்லும் வழியில் வீடுகள் காலியாக இருக்கிறது. வீட்டிலுள்ள அனைவரும், அண்டை வீட்டாரும், ஏன் மொத்த ஊரும் வேறு இடத்தில் தஞ்சம் புகுந்திருப்பதை அறிகிறான். இரவில் அந்த வீட்டில் ஒழிந்திருக்கும் ஒருவன் ஊரில் நிகழ்ந்ததைச் சொல்கிறான். விவசாய நிலங்கள் அனைத்தும் கம்பெனிகளுக்கு அரசாங்கம் விற்று விட்டது. அதனால் அவர்கள் மக்களை காலி செய்யச் சொல்லி விட்டு இயந்திரங்களைக் கொண்டு விவசாயப்பணி செய்யப்போவதாகச் சொல்கிறான். தனது வீட்டை நோக்கி நடக்கையில் இன்னொரு இடத்தில் வீட்டைக் காலி செய்ய மறுத்து நிற்கும் வீட்டுக்காரர்களைத் தாண்டி அந்த ஊரைச் சேர்ந்த ஒரு இளைஞனே இயந்திரம் கொண்டு அந்த வீட்டைத் தரைமட்டமாக்கிச் செல்கிறான். வறட்சி நிலவும் அந்த நாளில், தன் குடும்பத்திற்கு இந்த வேலையைச் செய்துதான் பசி தீர்க்க வேண்டும் என்றும், இந்த வேலையைத் தான் செய்யவில்லையென்றால் அவர்கள் வேறொருவரை வைத்து செய்வார்கள், ஆனால் வீடுகளை இடிப்பதையும், நிலங்களைக் கையகப்படுத்துவதையும் யாரும் தடுக்க முடியாது என்று தர்க்கம் கூறிவிட்டு இடத்து நகர்வான்.

தலைமுறை தலைமுறையாக தங்கள் நிலத்தில் விவசாயம் செய்து வந்தவர்கள் ஒரு சில நாட்களில் நிலம் வீடு என எதுவும் தங்களுடைய உடமை இல்லை என்று ஏற்றுக்கொள்ள முடியாமல் வெளிக்காட்டும் உணர்வுகள் நமக்குப் புதிதில்லைதான். ஆனால் இவை பல ஆண்டுகளுக்கு முன்னரே அமெரிக்காவில் நடந்திருக்கிறது என்பதுதான் கவனிக்க வேண்டிய செய்தி. 

ஒரு வழியாக வீட்டை அடைந்த போது கதாநாயகனின் மொத்த குடும்பமும் ஒரு பழைய வாகனத்தில் மூட்டை முடிச்சுகளைக் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். மூன்று நான்கு தலைமுறை ஆட்கள் ஒரு வீட்டில் வசித்து வந்திருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் 1000 மைல் தொலைவிற்கு அப்பால் இருக்கும் கலிபோர்னியா சென்று ஏதாவது வேலை செய்து பிழைத்துக் கொள்ளலாம் என்று புறப்படுகின்றனர். அந்த வீட்டின் மூத்த முதியவர், இது தான் பிறந்து வளர்ந்த இடம், தன்னால் இதைவிட்டு வெளியேற முடியாது என்று அந்த மண்ணைக் கையில் எடுத்துக் கொண்டு பிரண்டு அழுகிறார். அவரைச் சமாதானம் செய்து வண்டியில் ஏற்ற முடியாது என்று தெரிந்து குடும்பத்தினர் கொஞ்சம் மதுபானம் கொடுத்து போதையேறிய பின் வண்டியில் ஏற்றிப் புறப்படுகிறார்கள். அவர்களுடனேயே அந்த முன்னாள் மத போதகரான கேசியும் நண்பனாகப் பயணிக்கிறான்.

அவர்கள் செல்லும் வழியில் ஒரு இடத்தில் குடும்பத்தினருக்கு ஒரு ரொட்டியை வாங்க முனைகிறார் ஜானின் தந்தை. அந்த ரொட்டி 25 செண்ட் என்பதால், அதை 15 செண்டுக்கான அளவு வெட்டித் தருமாறு கேட்கிறார். தாம் இன்னும் குடும்பத்தடன் 1000 மயில்கள் கடந்து செல்ல வேண்டியிருப்பதால் தன்னால் இவ்வளவுதான் கொடுக்க முடியும் என்கிறார். இந்த இடத்தில் இந்தியல் பேரம் பேசி வாங்கியிருப்பார்கள் என்பது வேறு கதை.

கடைக்காரம்மா தன்னால் அப்படிக் கொடுக்க முடியாது என்று சொல்லும்போது, அந்தப் பெண்மணியின் கணவர் உள்ளே இருந்து அதட்டலாக அந்த ரொட்டியை அவர்களுக்குக் கொடுக்கச் 15 செண்டுக்கே கொடுக்கச் சொல்கிறார். பசியறிந்தவர் போலும். அதே நேரத்தில் அந்தக் குடும்பத்தின் சிறுவர்கள் இருவர் அவருடன் கடைக்கு வந்து அவர்களுக்குப் பிடித்த மிட்டாயொன்றையே பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த மிட்டாய் ஒன்று 15 செண்ட். அந்தக் குழந்தைகள் தாத்தாவிடம் கேட்டபோது, பெரியவர் அந்த மிட்டாயின் விலையைக் கேட்கிறார். சூழலைப் புரிந்து கொண்டு குழந்தைகளையே பார்த்த கடைக்காரம்மா இரண்டு மிட்டாய் 10 செண்ட் என்று சொல்லி விற்கிறார். அவரைப் பார்த்து கடைக்காரார் புன் முறுவல் பூக்கிறார்.

இந்த நிகழ்வைப் பார்த்து அங்கு காப்பி அருந்திக் கொண்டிருந்த இரு லாரி ஓட்டுனார்கள், அந்த மிட்டாய் ஒன்றின் விலை 15 செண்ட் நீ குழந்தைகளுக்காக இரண்டு மிட்டாய் 10 செண்டிற்கு கொடுத்தாய் என்று சொல்லிவிட்டு தாங்கள் சாப்பிட்ட உணவிற்கான தொகையைக் கேட்டு அவள் கையில் காசைக் கொடுத்து வெளியேறுகிறார்கள். அவர் உண்ட உணவின் தொகையை விட சற்று அதிகமாகக் கொடுத்து நகர்ந்த போது அந்தப் பெண்மணி அவர்களை அழைத்து மீதித் தொகையைக் கொடுக்க முனைகிறாள். அப்போது அவர்கள் அதை அவளையே வைத்துக் கொள்ளச் சொல்லி நகர்கிறார்கள். படம் முழுக்க சமூகச் சூழலையும் மனிதர்களின் மனங்களையும் அவ்வளவு அற்புதமாகச் சொல்லி காட்சிகளை நகர்த்துகிறார் ஜான் ஸ்டீன்பர்க்.

இந்தப் புதினம் முதலாளித்துவத்தின் கோர முகத்தையும், அங்கே தொழிலாளர் ஒற்றுமையின் தேவை பற்றியும் அதன் அமெரிக்க வடிவம் என்ன என்பதைப் பற்றியும் தெளிவாகச் சொல்லிச் செல்கிறார். இது பொதுவுடைமைத் தத்துவத்திற்கு ஆதரவான புத்தகம் என்று எதிர்ப்புக் கிழம்பியது என்ற செய்தியையும் படிக்க முடிகிறது.

நாளை நாம் செய்து கொண்டிருக்கும் தொழில் இல்லையென்றானால்? நமக்கு வாழுமிடத்தில் உரிமையில்லையென்றானால்? எப்படி அந்தச் சூழலை எதிர்கொள்ளப்போகிறோம்? இது நடக்காது என்பதில்லை, மாறும் இந்த உலகில் எதுவும் நிறந்தரம் இல்லை. அப்படியொரு சூழல் வந்தால் நமக்கு நாம் சேர்த்த செல்வம் துணை நிற்கப்போவதில்லை. நல்ல நண்பர்களும் உறவுகளுமே துணையாக இருப்பார்கள். அந்த உறவுகளைச் சேர்த்து வைத்திருக்கிறோமோ என்று பார்த்துக் கொள்வது நல்லதல்லவா?

Tuesday, August 7, 2018

தெற்கத்தியச் சூரியன் மறைந்தது

கடந்த சில நாட்களாக உடல் நிலை குன்றி ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திராவிட முன்னேற்றக்கழகத் தலைவர் கலைஞர் அவர்களின் உடல் நிலை மோசமடைந்து இன்று மாலை 6:10 மணியளவில் மறைந்தார் என்ற செய்தி தொலைக்காட்சிகளின் வழியே தெரிய வந்தது. அவரின் மறைவு உள்ளபடியே துயரத்தை ஏற்படுத்தியது.

அவர் அரசியல் மீதான விமர்சனங்கள் பல இருந்தாலும், அவர் காலத்தில் பல நல்ல திட்டங்கள் மக்களை பயனடையச் செய்தது என்பதை மறுக்க முடியாது. கலைஞர் காப்பீட்டுத் திட்டம், உழவர் சந்தை, பொதுப் போக்குவரத்திற்கு சிற்றுந்து அனுமதி என்பன வெகு சமீபத்திய திட்டங்கள். இட ஒதுக்கீடு, மகளிர் சுய உதவிக் குழு போன்ற திட்டங்கள் மக்களால் பெரிதும் வரவேற்கப்பட்டவை.

அவரின் இழப்பால் வாடும் திமுகழகத்தினரின் துயரத்தில் பங்கெடுத்துக் கொள்கிறேன்.

8:00 PM: அதே நேரத்தில், திரு எடப்பாடி பழநிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு கலைஞருக்கு அண்ணா சமாதி அருகே புதைக்க இடம் கொடுக்க இயலவில்லை என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளது. இன்று மெரினாவில் புதிய நினைவிடங்கள் எழுப்பக்கூடாது என்ற பொது நல வழக்குத் தொடர்ந்திருந்தவர் தனது வழக்கை திரும்பப் பெற்றுக் கொண்டிருந்ததால், உயர் நீதிமன்றம் வழக்கைத் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.

8:20 PM: மெரினாவில் இடம் தரவில்லையென்றால் போராடப்போவதாக திமுகவினர் கோசம் போடும் காட்சிகளை செய்தி ஊடகமான நியூஸ் 7 ஒளிபரப்புகிறது.

8:21 PM : கலைஞரின் உடல் அஞ்சலிக்காக கோபால புரம் இல்லத்தில் காலை 4 மணிவரை வைக்கப்படும் என்று அன்பழகன் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

8:30 PM: திமுகவினர் கலைஞருக்கு மெரினாவில் இடம் கொடுக்க வேண்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். காவேரி மருத்துவமனை முன்பு வைக்கப்பட்டிருந்து தடுப்புகளை வீசியெறிந்து கலவரத்தில் ஈடுபட்டனர்.

8:35 PM: திமுக தலைவரின் மகனும் திமுகவின் செயல் தலைவருமான திரு ஸ்டாலின் அவர்கள் மீண்டும் தமிழக அரசிடம் மெரினாவில் இடம் வேண்டி கோரிக்கை விடபோவதாக செய்திகள் வருகிறது.

8:37 PM : மெரினாவில் அண்ணா சமாதிக்கு அருகில் இடம் வேண்டி நீதிமன்றத்தை நாட இருப்பதாக திமுக தெரிவித்துள்ளது.

8:40 PM: காவல் துறையினர் திமுகவினரைக் கலைக்க சிறு தடியடி நடத்தினர். இருந்தும் திமுகவினர் கோசமிட்டவன்னம் உள்ளனர்.

9:01 PM: திமுக தலைவர் கலைஞரின் உடல் கோபால புரம் இல்லத்திற்கு ஆம்புலன்சில் எடுத்துச் செல்லப்படுகிறது.

10:29 PM: திமுக தலைவர் கலைஞரின் உடல் கோபாலபுரம் இல்லத்தில் இறக்கப்படுகிறது. மெரினாவில் இடம் வேண்டும் என்ற கோசத்துடன், டாக்டர் கலைஞர் வாழ்க என்ற கோசமும் விண்ணைப் பிளக்கிறது.

ஆகஸ்டு 8 2018

2:02 AM: கலைஞரின் உடல் அவரது மகள் கனிமொழி இல்லமான சி ஐ டி காலனிக்குக் கொண்டுவரப்பட்டது.

இன்றைய முரசொலி கலைஞரின் பார்வைக்கு அவர் படுத்திருக்கு பேழையுள் வைக்கப்பட்டுள்ளது.

5:21 AM : கலைஞரின் உடல் ஆம்புலன்சு மூலம் சி ஐ டி காலனியிலிருந்து ராஜாஜி மண்டபத்திற்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்த கொண்டுவரப் படுகிறது. கலைஞரின் உடல் அவர் நிறுவிய பெரியார் மற்றும் அண்ணா சிலைகளைக் கடந்து ஒரு பிரியா விடை கொடுத்துச் செல்கிறது...

11:30 AM: கலைஞரின் உடலை மெரினாவில் அடக்கம் செய்ய உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிடுகிறது.

4:00 PM : கலைஞரின் இறுதி ஊர்வலம் மெரினாவை நோக்கி தொடங்கியது.

7:00 PM:  கலைஞரின் உடல் இராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

மெரினாவில் கலைஞரை நல்லடக்கம் செய்வதில் நடந்த அரசியல் மற்றும் நீதிமன்ற நிககழுகள் வரலாற்றில் இடம்பெறும்...


1. தமிழக அரசு காந்தி மண்டபத்திற்கு அருகில் இடம் ஒதுக்கில் வெளியிட்ட அறிக்கை.2. கலைஞரின் இறுதி ஓய்விடம் குறித்த வரைபடம். (https://twitter.com/imranhindu)

3. தமிழ் நாடு அரசு மெரினாவில் இடம் அளிக்க மறுப்புத் தெரிவித்து செய்த வாதம் (https://twitter.com/imranhindu)


Thursday, August 2, 2018

டென்னன்ட் மலையேற்றம்

இந்தவாரம் மேகமலையில் (Smoky mountain) உள்ள டென்னண்ட் உச்சியைத் தொட மலையேற்றத்தை சார்லட் புறச் சாகசக் குழுவினர் (Charlotte outdoor adventure club) ஏற்பாடு செய்திருந்ததை நண்பர் மணி கண்டுபிடித்து பதிவு செய்துகொண்டார். அவர்கள் மூன்றரை மணி நேர தொலைவில் உள்ள மலையை அடைய அருகில் உள்ள பெல்மாண்ட் என்ற இடத்தில் கூடி தனித்தனியாக வாகனங்களில் செல்லாமல் சில வாகனங்களில் கூட்டாகச் செல்லத் திட்டமிட்டிருந்தனர். அதன்படி பெல்மாண்ட்டில் ஞாயிறு காலை எட்டு மணிக்கு சந்திப்பதாக இருந்தது.

இதற்கிடையில் குழுவில் உள்ள சிலர் மலையேற்றம் தொடர்பான வனப்பாதுகாப்பு அலுவலகத்தின் அறிவிப்பை அதன் இணையதளத்தில் படித்துவிட்டு, குழுவில் அதிருப்தியைத் தெரிவித்திருந்தனர். வனத்திற்குள் பத்துப் பேருக்கு மேலான குழுவிற்கு அனுமதியில்லை என்ற அறிவிப்புதான் அது. அந்த அறிவிப்பின் நோக்கம் அதிகமான அளவில் மக்கள் வனப்பகுதியில் நடந்தால் அங்குள்ள தாவரங்கள் மற்றும் விலங்குகளுக்கு இடையூறு ஏற்படும், அதனால் அதைத் தவிற்பதே.

ஆனால் அடிக்கடி அந்த மலையேறுபவர்களுக்குத் தெரியும் அங்கு சில நூறு பேர்களாவது இந்தக் கோடையில் மலையேறுவார்கள் என்று. பொதுவாக அமெரிக்கர்கள் சட்டதிட்டங்களை மதிப்பவர்கள். ஒரு சிலர் சட்டத்தை மீறி மலையேற்றம் திட்டமிடப்பட்டிருப்பதால், தாங்கள் மலையேற்ற நிகழ்விலிருந்து விலகிக்கொள்வதாக அறிவித்து விலகிக்கொண்டனர்.

நாமும் சட்டத்தை மதிப்பவர்களாதலால், அந்தக் குழுவுடன் இணைந்து பத்திற்கும் மேலானவர்களாக பயணித்து சட்டமீறலைச் செய்ய வேண்டாம் என்பதால், மணியும் நானும் தனிக்குழுவாக பயணிப்பது என்று முடிவானது. அதன்படி, குழுவின் மலையேறும் வழிகாட்டுதலை மட்டும் எடுத்துக்கொண்டு இருவரும் நீய்லச்சிமையத் தடம் (Blueridge Parkway) வழியே சென்று பிறகு கருங்குங்கலிக் குமிழ்ச் சாலை (Black Baksan Knowb Road) இல் உள்ள மலையேற்றத் தொடக்கப்புள்ளியை அடைந்தோம்.

முன்பே மலையேற்றத்திற்குத் தேவையான கருவிகளைத் தயார் செய்து கொண்டோம். அதன்படி மலையேற்றத்திற்குத் தேவையான கைக்குச்சிகள், காயம்பட்டால் உதவ சில மருந்துப் பட்டைகள், வலி நிவாரணக் களிம்புகள், முக்கியமாக கரடித் தாக்குதலில் இருந்து தப்பித்துக்கொள்ள கரடி விரட்டி, பயணத்தைப் பதிவு செய்ய படப்பதிவுக் கருவிகள் மற்றும் சிற்றுண்டியை எடுத்துக் கொண்டோம். கைக்குச்சி மிகவும் பயணுள்ளதாக இருந்தது.

குழுவின் வழிகாட்டும் குறிப்புகளின் படி டென்னண்ட் உச்சியை இரண்டரை மயில் மலையேற்றத்திற்குப் பின் அடைந்தோம். அது 6040 அடி உயரத்தில் இருக்கும் மலை உச்சி. கெய்ரால்ட் ஸ்டோனி டென்னன்ட் என்ற மலையேற்ற ஆர்வலரின் பெயரில் அழைக்கப்படுகிறது. அவரது நினைவாக 1964 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட நினைவுச் சின்னம் இன்னும் இருக்கிறது.

tennet

அந்த மலை உச்சியில் நின்று மேகமலைத் தொடரை பார்ப்பது மிக்க அழகாக இருந்தது. மேகங்கள் நம்மைத் தொட்டுச் செல்வதும், குளிர் காற்று நம்மை அணைத்துச் செல்வதும் அற்புதமான அனுபவம். அங்கு நண்பர் மணியின் புகைப்படமெடுக்கும் திறத்தில் நமக்குச் சில நல்ல புகைப்படங்கள் கிடைத்தது.
அங்கிருந்து அரை மைல் தொலைவில் நீல பெர்ரி பறிப்பதுதான் மலையேற்றத்தின் நோக்கம். அதன்படி மேலும் அரை மைல் நடக்கத் தொடங்கினோம். அங்கொரு வெட்ட வெளியில் ஒரு சோடிகள் கூடாரம் அமைத்து தங்க ஏற்பாடுகள் செய்துகொண்டிருந்தார்கள். அவர்களிடம் பேசியதில், முந்தைய இரவு  அவர்கள் அருகில் வேறு ஒரு இடத்தில் தங்கியிருந்ததாகவும், இரவில் அவர்கள் உடமைகள் வைத்திருந்த பையை கரடியோ அல்லது வேறு ஏதோவொன்று எடுத்துவந்து பொருட்களைச் சிதரடித்து சென்றுவிட்டதாகத் தெரிவித்தனர். முக்கியமான பொருட்களை கண்டெடுத்துவிட்டதாகவும் அருகிலுள்ள புதருக்குள் கரடிகள் இருக்கலாம் என்று நமக்கு எச்சரிக்கை செய்தனர்.

அவர்களைக் கடந்து சென்று நீல பெர்ரிக்களைப் பறித்து ருசித்து மகிழ்ந்தோம். மீண்டும் கீழே வர இப்போது வேறு இலகுவான பாதையை வழிகாட்டியில் குறிப்பிட்டிருந்தார்கள். அதன்படி நடக்கத்தொடங்கையில் அந்தப் பாதை வெறும் கற்கலால் நிறம்பியிருந்தது. அது ஏதோ ஒரு ஓடை உருவாக்கிய வழி போல இருந்தது. அதில் சிறிது தூரம் நடந்தபின், சிற்றுண்டி உண்ண அமைவான இடமொன்று தென்பட்டது. அங்கு சிற்றுண்டியை முடித்துவிட்டு தொடர்ந்து நடந்து வண்டிகளை நிறுத்தியிருந்த இடத்தை அடைந்தோம். இலகுவான பாதை இது என்பதால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலர் இந்தப் பாதை வழி நடந்து வந்துகொண்டிருந்தனர்.
நாங்கள் மலையேறிய பாதை சில இடங்களில் குறுகலாகவும், சில இடங்களில் தீடீர் பள்ளங்கள், அடர்த்தியான புதரில் சிறு பாதைகள், சில இடங்களில் சிறு பாம்புகள், பாறைகள் என்று சற்றுக் கடினமான பாதையாக இருந்தது. இவைகளைக் கடந்து மலையுச்சியை அடைந்து அங்கு இயற்கைக் காட்சிகளைக் கண்டு மகிழ்ந்தது இன்னும் பல நாட்கள் நினைவைப் பசுமையாக வைத்திருக்கும்.