மனித சமூகத்திற்கு மட்டுமே சிந்திக்கவும், சிரிக்கவும் தெரியும் என்று எவரோ கண்டுபிடித்துச் சொன்னதை இன்னமும் ஆச்சர்யத்துடனும், கர்வத்துடனும் கேட்டு வளர்ந்த நமக்கு, இந்த அறிவு எல்லையைத் தாண்டியுள்ள, இயற்கை உலகம் புலப்படுகிறது. சமீபத்திய உயிரியல் ஆராய்ச்சி முடிவுகள் சொல்லும் செய்திகள் நம் கர்வத்தின் மீது கல்லெரிகிறது. அதிலிருந்து ஒன்றைப் புரிந்துகொள்ள முடிகிறது, அறிவியல் விசாலமடைய அடைய, மனிதன் ஒரு மிகப் பெரிய முட்டாள் என்பதைத் தெரிந்து கொண்டே போகிறோம். ஆம், மனிதனை விட பல மடங்கு புத்திசாலிகளான உயிரினங்களின் உலகம் இது.
நிலத்தை உழுது, விதை விதைத்து, நீரிட்டு, உரமிட்டு, களையெடுத்து உற்பத்தி செய்யும் வேளாண் முறை ஏதோ மனிதன் தன் உழைப்பாலும் அறிவாலும் இயற்கையை பயன்படுத்தி உணவு உற்பத்தி செய்கிறான் என்று வியந்து கொண்டிருக்கிறோம். ஆனால் அது உண்மையல்ல. மனித குலத்தின் உண்ணதமான தொழிலே இப்படியானால், செயற்கையாகச் செய்யும் எண்ணற்ற மனிதனுக்கு மட்டுமே பயன்படக்கூடிய பொருட்களின் உற்பத்தியை என்ன சொல்ல?
ஒரு விதை மரமாக வளர்வதும் அது எப்படித் தன் சக மரங்களுடன் சமூகமாக வாழ்கிறது என்பது பற்றிய சமீபத்திய ஆராய்சி முடிவுகள் ஆச்சர்யமூட்டுகின்றன. நாம் நினைப்பது போல் மரங்களின் வாழ்கை மண்ணுக்கு மேலே மட்டுமல்ல. மண்ணுக்கு அடியில் வேர்களின் மூலம் பரிமாரிக்கொள்ளும் தகவல்களும், உணர்ச்சிகளும் நாம் கற்பனையில் நினைத்துப் பார்த்திருக்க முடியாதது. தனக்குத் தேவையான உணவை மண்ணிலிருந்து எடுத்துக்கொள்வதோடல்லாமல், சக மரங்களோடும் பகிர்ந்து கொள்கிறது, அதுவும் வேர்கள் மூலமாகவே. ஒரு மரம் தன்னிடம் இருக்கும் அதிகப்படியான சக்தியை தன் சகோதரனுக்கோ, சகோதரிக்கோ பகிர்ந்து கொடுக்கிறது. என்ன ஆச்சர்ய மாக இருக்கிறதா? ஆம், மரங்களுக்கிடையில் உறவுகள் இருக்கிறது.
தன்னுடன் வளரும் மரங்களில் எது தன் சகோதரி அல்லது தன் சகோதரன் என்று அடையாளம் கண்டு கொண்டு, அவற்றுடன் வேர் பரவும் நிலம், மற்றும் மண்ணிலிருந்து கிடைக்கும் சக்திகளையும் பரிமாரிக்கொள்கிறது. ஒரு மரமோ அல்லது செடியோ பூச்சியால் தாக்கப் படும்போது, தன்னைக் காத்துக்கொள்ள முதலில் ஒரு வித வேதிப் பொருளைச் சுரக்கும். இது அந்த பூச்சிக்கு சகிக்க முடியாத உணர்வை ஏற்ப்படுத்தும், சிறிது நேரத்தில் அந்த பூச்சி விலகிச்சென்று விடும். அதையும் மீறி ஒரு பூச்சியோ, புழுவோ தாக்கும்போது, ஒரு வித வாசனையை வெளிவிடும். இந்த வாசனை காற்றில் கலந்து வேறொரு பறவைக்கோ அல்லது பூச்சிக்கோ அழைப்பை ஏற்படுத்தும். இந்த அழைப்பில் வரும் பறவை அந்த செடியிலோ அல்லது மரத்திலோ அமரும்போது அது செடியைத் தாக்கிய பூச்சியை உணவாகக் கொள்ளும். இது ஒரு வகையில் அவசரகால அழைப்பைப் போன்றதே.
சரி எப்படி ஒவ்வொருவிதமான தாக்கும் பூச்சிக்கும் அதை உணவாக உண்ணும் இன்னோரு பூச்சியையோ, பறவையையோ அழைப்பது என்று மரத்திற்கு தெரியும்?. இன்னும் இது கண்டு பிடிக்கப்படவில்லை யென்றாலும் செடிகளுக்கும் மரங்களுக்கும் அந்த நுண்ணுணர்வு இருக்கிறது என்பது மட்டும் நிரூபிக்கப் பட்டுள்ளது. மரங்களும் செடிகளும் மண்ணுக்குள்ளும் வெளியிலும் தங்களைச் சுற்றியுள்ள சூழலை உணர்ந்து கொள்ளும் தன்மையுடையவை. தாவரங்கள் பனிக் காலங்களில் சூரிய ஒளியிலிருந்து ஸ்டார்ச் தயாரிக்க முடியாது என்பதாலும், இலைகள் மூலம் பனியின் தாக்கம் அதிகம் இருக்கும் என்பதாலும் இலைகளை உதிர்த்து விடுவது நாம் அறிந்த இலையுதிர் காலம்.
ஒரு செடி இருக்கும் இடத்தில் திடீரென்று வரட்சி ஏற்படும்போது, அந்த வரட்சியை தன்னால் முடிந்த அளவிற்கு தாங்கிக் கொள்ள தன்னை தகவமைத்துக் கொள்கிறது, வேர்கள் தண்ணீரைத் தேடி நிலத்தில் பரவுகிறது. அதே போல், சில படரும் கொடிகள் எப்படி அருகிலுள்ள மரத்தை அடையாளம் கண்டுகொள்கிறது?.. ஆச்சர்யம்.. அந்த கொடி வளரும் ஒவ்வொரு மில்லி மீட்டரிலும் தன்னைச் சுற்றி இருக்கு இடத்தை தடவிச் சுற்றிக் கொண்டே இருக்கும். எப்போது அதற்கு ஒரு அசையா மரம் தட்டுப் படுகிறதோ அதைப் பிடித்துக் கொண்டு தன் வாழ்வைக் காப்பாற்றிக் கொள்ளும்.
இயற்கையிடமிருந்து கற்றுக்கொள்ள இன்னும் நமக்கு ஏராளம் இருக்கிறது. எல்லாம் நமக்குத் தெரியும் என்று நினைக்கும் நொடியில் நாம் நமது அறிவு வாசலை மூடி, அழிவு வாசலைத் திறந்து கொள்கிறோம்.