தற்கால அரசியலை புரிந்து கொள்ள, கடந்த கால வரலாற்றை சிறிது திரும்பிப் பார்ப்பது உதவியாய் இருக்கும். ஐரோப்பாவிலிருந்து கிருஸ்டோபர் கொலம்பஸ் 1492ல் அமெரிக்கக் கண்டத்தை அடைந்த பொழுதிலிருந்து தொடங்குகிறது அந்த அரசியல் வரலாறு. வணிக மற்றும் மதப் பரவலாக்கத்திற்காகவே ஆரம்ப கால கடலோடிகளின் புதிய நாடு கண்டுபிடிப்பின் நோக்கமாக இருந்திருக்கிறது. இத்தாலியரான கொலம்பஸின் அமெரிக்கக் கண்டுபிடிப்பிற்குப் பிறகு ஐரோப்பாவிலிருந்து அமெரிக்காவிற்கான கடல் பயணம், நாடு பிடித்தல், வணிகம் போன்ற நடவடிக்கைகள் அதிகமானது.
இங்கிலாந்து, ஸ்பெயின், பிரெஞ்சு, போர்ச்சுகீசியர்கள் அதிக அளவில் அமெரிக்காவில் காலணி(குடியேற்றம்) அமைத்து அமெரிக்க மண்ணில் காலூண்றத்தொடங்கினர். வட அமெரிக்கா பெரும்பாலும் ஆங்கிலேயர்களால் ஆக்கிரமிக்கப்பட்டது. தென்னமெரிக்கா ஸ்பெயின், போர்ச்சுகீசயர்கள், பிரெஞ்சுக்காரர்களால் ஆக்கிரமிக்கப்பட்டது. பின்பு காலணி அமைத்தவர்கள் தங்கள் தாய்நாட்டிலிருந்து பிடியை விலக்கி சொந்தமாக தனி நாடாக உருவெடுத்து தங்கள் சுதந்திரத்தை அறிவித்துக் கொண்டனர்.
அமெரிக்காவின் அருகில் இருந்த ஸ்பெயினின் ஆட்சிக்குட்பட்ட கியூபாவில் அமைதியில்லாமல் அரசியல் குழப்பம் நிலவியதால் அமெரிக்க தலையிட்டு ஆட்சியதிகாரத்தை மறுசீரமைக்க கேட்டது. ஸ்பெயினும் இதோ செய்து விடுகிறோம், இதோ செய்து விடுகிறோம் என்று காலம் கடத்தியதே தவிர, செயலில் இறங்கவில்லை. அதே நேரத்தில் ஹவனா துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த அமெரிக்கக் கப்பல் மர்மமான முறையில் மூழ்கியதால் கோபமடைந்த அமெரிக்கா ஸ்பெயினுடன் போரில் இறங்கியது. போரில் வென்ற அமெரிக்கா 1898ல் கியூபா, போர்டோ ரிகோ, குவாம், பிலிப்பைன்ஸ் தீவுகளை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது. கியூபாவை அமெரிக்கா ஒரு சர்கரை உற்பத்தித் தொழிற்சாலையாகவே பார்த்தது. கியூபாவின் மீதான அமெரிக்காவின் அக்கரை அதன் வணிக நலன்கள் சார்ந்ததாகவே இருந்தது.
மஞ்சள் காய்ச்சல் என்னும் கொள்ளை நோய் கியூபாவில் பரவ அது அங்கு அமர்த்தப்பட்டிருந்த அமெரிக்கப்படைகளை கடுமையாக தாக்கி பெரும் உயிரிழப்பை ஏற்படுத்தியது. அதன் விளைவாக சிறிய கறுப்பின படைக்குழுவை மட்டும் நிறுத்திவிட்ட மற்றவர்களை திரும்ப அழைத்துக் கொண்டது. கறுப்பினத்தவருக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருப்பதால் கொள்ளை நோயை சமாளித்து அங்கு பாதுகாப்புப் பணியில் இருப்பார்கள் என்ற அடிப்படையில் அப்படிச் செய்தது அமெரிக்கா. பிறகு 1902ல் கியூபா அமெரிக்காவிடமிருந்து விடுதலை அடைந்தது.
அமெரிக்கா விடுதலை அளித்திருந்தாலும், அடுத்த இருபது ஆண்டுகள் தொடர்ந்து கியூபாவின் உள்விவாகரங்களில் தலையிட்டு ராணுவ மற்றும் அரசியல் நடவடிக்கைகள் மூலம் தன் அதிகாரத்தை நுழைத்து வந்தது. அமெரிக்கா தன் விசுவாசியான அதிபர்களை நாடாளவிட்டு அதன் மூலம் கியூபாவின் விவசாய விளைபொருட்கள், நிலம் மற்றும் வளங்களை கொள்ளையடித்துக் கொண்டிருந்தது.
1958ல் பிடல் காஸ்ற்றோவின் முன்னெடுப்பில் உருவான புரட்சியால் அதிபர் பாடிஸ்டாவுடனான ஆயுதப் போரில் வெற்றி பெற்று பிடல் நாட்டைக் கைப்பற்றினார். பாடிஸ்டாவின் அரசிற்கு ஆயுதம் விற்றுவந்த அமெரிக்க தனது முடிவை மாற்றிக்கொண்டது பாடிஸ்டாவின் தோல்விக்கு முக்கியமான காரணம் எனவும் சொல்லப்படுகிறது.
(தொடரும்)